கணிதத்தின் மகுடம் கணக்கதிகாரம்
முனைவர் மு. ரேவதி
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,
நியூ சித்தாபுதூர், கோயம்புத்தூர்.
முன்னுரை
கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மையான இடம் உண்டு. பண்டைய தமிழ் இலக்கியங்கள் அக்காலப் புலவர்களின் கணித அறிவினைப் பறைசாற்றுகின்றன. கணிதம் ஒரு கலை என்பதினை ‘கணக்கதிகாரம்’ என்ற நூலால் அறியலாம். கொறுக்கையூர் காரி நாயனார் என்ற புலவரால் கணக்கதிகாரம் என்னும் கணித நூல் 15-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இவர் காவிரி பாயும் சோழ நாட்டு மன்னர் வழி வந்தவர் என்றும், இவரின் தந்தை பெயர் புத்தன் என்றும் நூலின் சிறப்புப் பாயிரம் கூறுகிறது. இந்நூலில் காணப்படும் வியப்பான கணித முறைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கணக்கதிகாரம்
இந்நூல் காரிநாயனாரின் கற்பனைத் திறனையும், கவிதை நயத்தையும், கணிதத்தில் இவர் பெற்றுள்ள புலமையையும் காட்டுகிறது. இந்நூல் முழுவதும் பக்க எண்கள் உட்பட, அனைத்துக் கணிதப் புதிர்களும், கணிதச் சூத்திரங்களும் தமிழ் எண் உருவங்களைப் பயன்படுத்தியே எழுதப்பட்டுள்ளன. இந்நூல் ஆறு பிரிவுகளில் 60 வெண்பாக்களும் 45 புதிர்களையும் கொண்டது.
நிலம் வழி - 23 பாக்கள்
பொன்வழி - 20 பாக்கள்
நெல்வழி - 6 பாக்கள்
அரிசி வழி - 2 பாக்கள்
கால் வழி - 3 பாக்கள்
கல் வழி - 1 பா
பொதுவழி - 5 பாக்கள்
என்ற ஆறு வழி கணக்குகளையும் புலவர் 60 செய்யுட்களால் உணர்த்தி உள்ளார் என்பதனை;
“ஆதி நிலம் பொன் நெல் அரிசி அகலிடத்து
நீதி தரும் கால்கல்லே நேரிழையாய் ஓதி
உறுவதுவா கச்சமைத்தேன் ஒன்றொழியா வண்ணம்
அறுபதுகா தைக்கே அடைத்து” (க.அ 7ப.எ. 26)
என்ற பாடலால் அறியலாம். ஆறு வழி கணக்கு மட்டுமின்றி வேறு பல கணக்குகளையும் புறச் சூத்திரம் வழி விளக்கியுள்ளார். இக்கணக்குகள் கற்பவர்களுக்குத் திகைப்பையும், வியப்பையும், நகைப்பையும், நயப்பிணையும் உருவாக்க வல்லது எனில் அது மிகையாகாது.
உள்ளடக்கம்
வெண்பாக்கள் வாயிலாகப் பண்டைய கால நீட்டல், முகத்தல், நிறுத்தல் அளவைகள், தமிழ் முழு எண்களின் பெயர்கள், தமிழ் பின்ன எண்களின் பெயர்கள், உலோகக்கலவை முறைகள், நாழிகை விவரங்கள், சமுத்திரங்களின் அளவுகள், விவசாயம், அறுவடை, கூலி வழங்கும் முறை, வயல்வெளிகளை அளக்கும் முறை, வட்டத்தின் சுற்றளவு, பரப்பளவு காணும் முறை, மிக நுண்ணிய அளவு முதல் மிகப்பெரிய அளவு வரையிலும் கணக்கிடும் முறை, பூமி சூரியனைச் சுற்றும் காலம், நிலவு சூரியனைச் சுற்றும் காலம், நிலவு பூமியைச் சுற்றும் காலம், பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் முறை, பூசணிக்காயை உடைக்காமலே அதன் உள்ளிருக்கும் விதையின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளும் முறை, ஒரு படி நெல்லில் எத்தனை நெல் இருக்கும், மாய சதுரக் கணக்குகள், எப்படி கூட்டினாலும் ஒரே விடை, வினா விடை கணக்குகள் என்று பலவற்றை ஆசிரியர் விளக்கியுள்ளார். அவற்றுள் ஒரு சில சான்றுகளை பின்வருமாறு காணலாம்.
நிலவளம் அறிதல்
“உற்ற சீர் பூமி அதனில் ஒளி பவளம்
கொற்றவேற் கண்ணாய் குவளை யெழும் மந்தை
இடைநிலத்து வேல் துராய் என்றிவைகள் ஆகும்
கடை நிலத்து வெண்மை உவர் காண்” (க.அ 2 ப.எ. 30)
வெற்றி பொருந்திய வேலை போன்ற கண்களை உடையவளே!
உத்தம நிலம் குவளை, சடை, காந்தை, காவேடு, காவேளை, பவளக்கொடி, புல், சேற்றுப்பயிர் என்ற ஏழும்,
மத்திம நிலம் செருப்படி, துராய், கண்டங்கத்திரி, வெல், அறுகு, சாமை, கேழ்வரகு என்ற ஏழும்,
அதம நிலம் ஓடு, தலை, பொரி, விரை, துடப்பம், உவரெழும் வெண்மை நிலம் பருத்திக்குமாம்
ஆகியவை விளைவதன் மூலம் நிலத்தின் வளத்தினை அறிந்து கொள்ளலாம் என்கின்றார்.
வெண்கலமும் பித்தளையும் செய்யும் முறை
8 பலம் செம்பில் 2 பலம் ஈயம் உருக்கினால் அது வெண்கலம் என்றும் ஏழரை பலம் செம்பில் மூன்று பலம் துத்தம் இட்டு உருக்கினால் அது பித்தளை என்றும் கூறியுள்ளார். (க.அ 11ப.எ. 33)
32 குன்றிமணி - ஒரு வராகனெடை
10 வராகனெடை - ஒரு பலம்
8 பலம் - ஒரு சேர்
என்று பண்டைய நிறுத்தல் அளவைகள் கூறுகின்றன. ஒரு பலம் 40.8 கிராம் அளவு இருக்கலாம் என்பர்.
உலகத்தின் அளவு
“சுளகே ருலக நடுத் தோன்றிய மாமேரும்
சிலைகொளத் தேங்குவிதம் எண்ணில் இயல்தேரும்
ஆறாறும் ஆயிரமி யோசனை மூக்குத் தெற்கு
நூறாது காதம் நுவல்” (க.அ 13 ப.எ.34)
மகாமேருவுக்கு நான்கு திக்கும் நான்கு கோணமும் எட்டுத்திக்கும் ஆறாயிரம் யோசனை. ஆதலால் ஆறாயிரத்துக்கும் ஆறுக்கும் மாற (6000-6-31061000). இவ்வாறே நான்கு திக்கிற்கும் முப்பதாறாயிரத்திற்கும் நான்குக்கும் மாற நூற்று நாற்பத்து நான்காயிரம் (100404000) யோசனை உயரமாக உலகம் இருக்கும் என்று முந்தைய நூல்கள் கூறுவதாகக் கூறியுள்ளார்.
12 முழம் - 1 சிறு கோல்
500 சிறு கோல் - 1 கூப்பிடு தூரம்
4 கூப்பிடு தூரம் - 1 காதம்
4 காதம் - 1 யோசனை
என்று பண்டைய நீட்டலளவை கூறுகின்றது.
பலாச்சுளைக் கணக்கு
“பலவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாம் சுளை” (க.அ 41ப.எ.57 )
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணிக்கையை ஆறால் பெருக்கி வரும் விடையை ஐந்தால் வகுக்க கிடைக்கும் ஈவானது பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையாகும்.
பலாப்பழத்தில் உள்ள முட்களின் எண்ணிக்கை = 100
இதை 100 x 6 = 600
600 ஐ 5 ஆல் வகுக்க 100 x 5 = 500 , 20 x 5 = 100
ஆக 100 ஐயும் 20 ஐயும் கூட்ட 120 ஈவாக வரும்.
இதுவே சுளைகளின் எண்ணிக்கையாகும்.
இதே போன்று ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று ஆறு ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.
பலகாரம் தின்ற நாள் கணக்கு
ஒரு பட்டணத்தில் இருந்த ஒரு செட்டியார் வீட்டிற்கு அவருடைய மருமக பிள்ளை விருந்தாளியாக வந்து சேர்ந்தார். அவருக்கு நாள்தோறும் பலகாரம் செய்ய முடியாமல் ஒரே நாளில் தானே முப்பது சாண் நீளத்தில், 30 சாண் உயரத்தில், முப்பது சாண் அகலத்தில் ஒரு பலகாரம் செய்து அதை நாளும் ஒரு சாண் நீளம், ஒரு சாண் அகலம், ஒரு சாண் உயரம் என அரிந்து விருந்திட்டார். அதை எத்தனை நாளைக்கு விருந்திட்டார்? (க.அ 61ப.எ.67)
புதிர் விளக்கம்
பலகாரத்தின் மொத்த கன அளவில் 30x30x30 = 2700 கன அலகுகள்
தினம் விருந்திட்ட பலகாரத்தின் கன அளவு = 1x1x1=1 கன அலகு
ஒரு வருடத்திற்கு விருந்திட்ட பலகாரத்தின் கன அளவு = 360 x 1= 360
(காரிநாயனார் ஒரு வருடம் = 360 நாட்கள் என கணக்கிட்டுள்ளார்.)
அப்படியானால் மொத்த பலகாரத்தை விருந்திட்ட ஆண்டுகள் = 2700/360 = 75 ஆண்டுகள் .
வண்டுகள் கணக்கு
நீர்வளம் பொருந்திய ஒரு தடாகத்தில் தாமரைப் பூக்கள் மலர்ந்து இருந்தன. அம்மலர்களில் வண்டுகள் சில வந்திறங்கி பூவுக்கு ஒன்றாக உட்கார்ந்தன. ஒரு வண்டுக்கு பூ கிடைக்கவில்லை. ஆகவே வந்த வண்டுகள் எல்லாம் எழுந்து பூ ஒன்றுக்கு இரண்டு வண்டுகளாக இறங்கின. இப்பொழுது ஒரு பூ எஞ்சியது ஆயின் வந்த வண்டுகள் எத்தனை? மலர்ந்த மலர்கள் எத்தனை? (க.அ 65 ப.எ.69)
வந்த வண்டுகள் 4, மலர்ந்த மலர்கள் 3.
முடிவுரை
பண்டையகாலத் தமிழர்கள் கணிதத்தில் புலமை பெற்று விளங்கினார்கள் என்பதற்கு காரிநாயனாரின் இந்நூல் சிறந்த சான்றாகும். அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு பல புதிர்களை உருவாக்கி கணித அறிவினை மேலும் வளர்த்துள்ளார். இன்றைய நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் பல அறிவியல் நுணுக்கங்களை இன்று நாம் அறிந்து கொள்கிறோம். எந்த ஒரு தொழில்நுட்ப உதவியும் இன்றி உலகத்தையும் சமுத்திரத்தையும் இந்நூலின் ஆசிரியர் கணக்கிட்டுள்ளது வியப்புக்குரிய ஒன்றாகும்.
துணை நின்ற நூல்
1. கணக்கதிகாரம் - கொறுக்கையூர் காரி நாயனார், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை - 01.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.