வேளங்கள்
மு. கயல்விழி
உதவிப்பேராசிரியர், தமிழ்த் துறை,
பச்சையப்பன் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரம்.
முன்னுரை
பெண்கள் ஒரு நாட்டின் கண்களைப் போன்றவர்கள். அவர்கள் மானிட சமுதாயத்தைத் தாங்கும் தூண்களாகவும், மனித வாழ்வு என்ற விருட்சத்தின் வேர்களாகவும் திகழ்கின்றனர். பெண்களை எப்பொழுதும் ஆணினின்று பிரித்துப் பார்க்கவியலாது. இதையே இறைவனின் அர்த்தநாரீஸ்வரத் தத்துவம் உணர்த்தும். அவள் தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக பல்விதமாகப் பரிணமித்து ஆணின் வாழ்க்கையில் பங்கேற்கின்றாள். எல்லா நாடுகளும்; பெண்களைப் போற்றியதை விட நம் முன்னோர்கள் பல படி அதிகம் போற்றிவந்தனர்.
பூமியை, நதிகளை, நிலவை, மரங்களைப் பெண்களாக உருவகப்படுத்திப் போற்றியது இக்கருத்தை உணர்த்தும். பெண்களுக்கு அரசியல் அதிகாரம் அளித்தும், குடும்பப் பொறுப்புகளை நல்கியும், கற்றறிந்த கவிஞர்களாக்கியும் அழகு பார்த்தனர் நம் முன்னோர். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளது போன்று பெண்களை உயர்த்திய நம் முன்னோர்கள் அவர்களுக்குச் சொல்லவியலாத அநீதியும் இழைத்ததை வரலாறு சுட்டிக்காட்டும்.
உலக நாடுகளில் பெண்களைப் போகப் பொருளாகவும் சிற்றின்பத்திற்கான கருவியாகவும் பயன்படுத்தி வந்ததற்கு நம்நாடும் விலக்கன்று. சுயநலத்தால் உந்தப்பட்டுத் தம் நாட்டுப் பெண்களைப் போற்றிப் பாதுகாத்த தமிழ் மன்னர்கள் அதற்கு முற்றிலும் மாறாய் அயல்நாட்டுப் பெண்களுக்குக் கொடுமைகளையும், அநீதியையும் ஒருங்கே இழைத்தனர். கொண்டி மகளிர், உரிமை மகளிர் என்று அவர்களுக்குப் பெயர்கள் சூட்டி தம் காமஇச்சைகளைத் தீர்த்துக் கொண்ட அவலத்தைக் காண்கின்றோம்.
இம்மன்னர்கள் அப்பெண்களைப் பள்ளியறைப் பாவைகளாகவும், வேலைக்காரிகளாகவும், ஏவல் மகளிராகவும் பயன்படுத்தி, அவர்கள் தங்குவதற்கு வேளங்களை உருவாக்கி, அவற்றிற்குப் பெயர்கள் சூட்டி மகிழ்ந்தனர். வேலியேப் பயிரை மேய்வது போன்று, நாட்டில் அநீதிகளைக் களைய வேண்டிய அரசர்களே அநீதி இழைத்தனர். வேளங்கள் நம் முன்னோர் பெண்களுக்கு இழைத்த அநீதியின் அடையாளங்களாகும்.
இவை பழந்தமிழ் சமுதாயத்தின் பெருமைகளுக்குக் களங்கமாகவும், கரும்புள்ளியாகவும் இன்றளவும் திகழ்ந்து வருகின்றன.
கொண்டி மகளிர்
பண்டைய தமிழகத்தில் பெண்ணடிமைத்தனம் என்பது எப்பொழுதும் இருந்த ஒன்று. இக்கொடுமையின் வித்து சங்க காலத்திலேயே இடப்பட்டுவிட்டது. பெண் அடிமைகள் சங்ககாலத்திலும் இருந்தனர். அவர்கள் “கொண்டி மகளிர்” என்று அழைக்கப்பட்டனர். தொல்காப்பியர் இத்தகையப் பெண் அடிமைகளை “ஓஅடியோர்”, என்று அழைக்கின்றார். இதற்கு உரை எழுதிய இளம்பூரணர் “ஓஅடித் தொழிற் செய்வோர்”என்று பொருள் தருகின்றார்.
சங்கம் மருவிய கால நூலான நாலடியார், இவர்களை “ஓதொழுத்தைமார்”என்று அழைத்து இவர்கள் இருப்பை உறுதி செய்தது. பழைய உரையாசிரியர்கள் இத்தகையப் பெண்களை, “தோற்றார் பால் பிடித்து வந்த மகளிர்” என்று மேலும் விளக்குகின்றனர்.
இவ்வாறு சங்க காலத்தில் தோற்ற நாடுகளிலிருந்து பிடித்து வரப்பெற்ற பெண் அடிமைகள் அரசனின் காமக்கிழத்திகளாகவும், ஏவல் மகளிராகவும், செவிலித்தாய்களாகவும் பணிபுரிந்து வந்தனர். சான்றாக, தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் போரில் பிடித்து வரப்பட்ட பெண்கள் மதுரையில் வாழ்ந்து வந்ததைக் குறிக்கலாம்.
“நெஞ்சில் நடுக்கூறூஉக் கொண்டி மகளிர்”
(மதுரை.583)
அதே போன்று சோழன் கரிகாலனால் பிடித்து வரப் பெற்ற பெண்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்து வந்தனர்.
“கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி”
(பட்டி.246)
போரில் பிடித்து வரப்பெற்ற அரசு மகளிர் பணிப்பெண்களாகப் பணியாற்றிய செய்தியைப் பட்டினப்பாலைக்கு உரை வகுத்த நச்சினார்க்கினியார் கீழ்கண்டவாறு விளக்கமளிக்கின்றார்.
“மகளிர் பலரும் நீருண்ணும் துறையிலேச் சென்று மூழ்கி மெழுகும், மெழுக்கத்தினையும் அவர்கள் அந்திக் காலத்தே கொளுத்தின அவியது, விளக்கத்தினையும் உடைய பூக்களைச் சூட்டின. கறியினையுடைய அம்பலம் கந்து தெய்வம் உறையும் தறிவம் பலர் சேர்க்கும் பொதியில் புதியவர்கள் பலரும் ஏறித் தொழுதற்குத் தங்கும் பொதியில் பொதியிலை மெழுகி விளக்கும் இட்டிருக்கவம்ப மகளிர் வைத்தார். இதனால் தமக்கும் புகழ் உளதாம் என்று கருதி”
சங்கம் மருவிய காலத்திலும் பெண்ணடிமைத்தனம் இருந்ததை மணிமேகலை உறுதி செய்யும்;
“வண்டிற்றுறக்கும் கொண்டி மகளிர்”
(மணி.18:109)
இவற்றால் சங்ககாலத் தமிழ் மன்னர்கள் தம் எதிரிகளைத் தோற்கடித்து, அவர்களின் மகளிரைச் சிறைப்பிடித்து வந்ததை இலக்கியங்கள் உறுதி செய்யும். ஆனால், இது மேல்நாடுகளைப் போன்றல்லாமல் அளவோடு காணப்பட்டது.
வேளங்கள் / உரிமை மகளிர்
வேளங்கள் என்பவை பெண்அடிமைத்தனத்தின் அடையாளங்களாகும். இவை தமிழ்ச் சமுதாயத்தின் புண்மையாகும். ஒவ்வொரு தமிழனும் எண்ணி வெட்கித் தலைகுனியச் செய்யும் அவமானத்தின் சின்னங்களாகும். இடைக்காலத் தமிழ் மன்னர்களான சோழர்களும், பாண்டியர்களும் போர்களின் பொழுது தான் வென்ற நாடுகளிலிருந்து பொன்னையும், பொருளையும் கொண்டு வருவதுடன் அந்நாட்டு அரசு மகளிரையும், இளம் பெண்களையும் கவர்ந்து வருவதைப் பெருமையாகக் கருதினர். இவ்வாறு பிடித்து வரப்பெற்ற பெண்களுக்குத் தனிக்குடியிருப்புகளை உருவாக்கி, தம் பாதுகாப்பில் வைத்திருந்தனர். அப்பெண்கள் “உரிமை மகளிர்” என்று அழைக்கப்பட்டனர். எனவே, அன்னியர் எவரும் இம்மகளிரை அணுகுவது இயலாததாயிற்று. இப்பெண்டிர் வசித்த இருப்பிடங்கள் யாவும் “வேளங்கள்” என்று அழைக்கப்பட்டன.
முதலாம் இராஜேந்திர சோழன் ஒன்பது லட்சம் போர் வீரர்களுடன் சென்று சாளுக்கிய நாட்டைத் தோற்கடித்து, பல்லாயிரக்கணக்கான இளம்பெண்களை அடிமைகளாகப் பிடித்து வந்தான் என்று சாளுக்கியரின் ஹோட்டூர் கல்வெட்டு உரைப்பது இச்செய்தியை உறுதி செய்யும் (சோழர்களின் அரசியல் கலாச்சார வரலாறு, ப:236) இக்கல்வெட்டுச் செய்தியை சோழர்களுடைய மெய்க்கீர்திகளும், இலக்கியங்களும் உறுதி செய்யும்.
“பாண்டியன் முடிதலைக் கொண்டு அமர்முடித்து
அவன் மடக்கொடியை வேளமேற்றி”
என்ற மூன்றாம் குலோத்துங்கனின் மெய்கீர்த்தி, அவன் பாண்டிய நாட்டு அரசு மகளிரைக் கவர்ந்து வந்து தன் காமக்கிழத்திகளாக்கிய செய்தியைப் பெருமையுடன் உரைப்பதைக் காணலாம்.
“அடர்புரி விளங்கரியு
அரிவையர் குழாத்தோடு மகப்படபிடித்து”
“தேவியர் குழாமும் பாவையரீட்டமு
மினையன பிறவு முனைவயிற் கொண்டு”
போன்ற வரிகளும் இதையேப் புலப்படுத்தும்.
“விண்ணோடு காத்து முசுகுந்தன் மிண்டநாள்
மண்ணோடு கண்ட மடந்தையரும்” (இராஜராச.70)
“சாயஅர மகளிர் தத்தம் திருமார்பில்
கோயிலுரிமைக் குழாம் நெருங்கி” (இராஜராச.79)
என்ற இராஜராசன் சோழனுலாவும்
“மீன்ம்புகு கொடி மீனவர்
விழிஅம்பு உகஒழக்
கானம்புக வேளம் புகு
மடவீர் கடை திறமின்” (கலிங்க.40)
என்று ஜெயங்கொண்டாரும் இக்கருத்தை உறுதி செய்கின்றனர். இவற்றால் பிறநாட்டுப் பெண்களைக் கவர்ந்து வருதலை சோழ மன்னர்கள் பெருமையுடன் கருதினர் என்பது புலனாகின்றது.
பழிக்குப்பழியாக அதே போன்றதொரு செயலை 200 ஆண்டுகள் கழித்து பாண்டிய மன்னர்களும் சோழநாட்டின் மீது செய்து முடித்தனர்.
சோழமன்னர்கள் இவ்வாறு கவர்ந்து வந்த பெண்களைத் தஞ்சையிலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும் குடியமர்த்தினர். சோழர்களால் தோற்கடிக்கப்பட்டு, பல நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட அழகியர் இவ்வுளவகத்தில் வசித்து வந்தனர். இடைக்காலத்தில் தஞ்சையிலும், கங்கை கொண்டசோழபுரத்திலும் ஏராளமான வேளங்கள் காணப்பட்டன.
தஞ்சையின் வேளங்கள்
சோழரின் தலைநகர் தஞ்சையில் கீழ்கண்ட வேளங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
1. அபிமான பூஷணத் தெரிந்த வேளம்
2. அருள்மொழித்தேவர் தெரிந்த திருபரிகாரத்ததார் வேளம்
3. இராசராசத் தெரிந்த பாண்டித் திருமஞ்சனத்து வேளம்
4. உத்தம சீலியார் வேளம்
5. உய்ய கொண்டான் தெரிந்த திருமஞ்சனத்து வேளம்
6. பஞ்சவன் மாதேவியார் வேளம்
கங்கை கொண்ட சோழபுர வேளங்கள்
சோழரின் இரண்டாம் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தில்
1. கீழை வேளம்
2. திரிபுவன மகாதேவியார் வேளம்
3. பழைய வேளம்
4. சத்ரு பயங்கர தெரிந்த வேளம்
5. மேலை வேளம்
6. பெரிய வேளம்
7. இலங்கேஸ்வர குல காலத் தெரிஞ்ச திருமஞ்சனத்தார் வேளம்
8. சிவபாத சேகர தெரிஞ்ச வேளம்
போன்ற வேளங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
சோழநாட்டின் பல்வகை வேளங்கள்
வேளங்கள் பல வகைப்பட்டன. அவை அங்கு வசித்த மகளிரின் நிலைக்கேற்ப மாறுபட்டன. கீழைச் சாளுக்கிய நாட்டிலிருந்து கொண்டு வரப்பெற்ற பெண்டிர் இருந்த வேளம் கீழை வேளம் என்றும். மேலைச் சாளுக்கிய நாட்டிலிருந்து கொண்டு வரப்பெற்ற பெண்கள் இருந்த வேளம் சத்ரு பயங்கர வேளம் என்றும், இலங்கையிலிருந்து கொண்டு வரப்பெற்ற பெண்கள் இருந்த வேளம் இலங்கேஷ்வர குலக்கால வேளம் என்றும், பாண்டிய நாட்டிலிருந்து கொண்டு வரப்பெற்ற பெண்கள் இருந்த வேளம் பாண்டி திருமஞ்சனத்து வேளம் என்றும் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன.
இவ்வாறு கொண்டு வரப்பெற்ற பெண்கள் சிலரைப் பணிப்பெண்களாகவும், சிலரை ஏவல் மகளிராக்கியும் சோழ மன்னர்கள், அவர்களைக் கேவலப்படுத்தி சிறுமையிழைத்தனர். பணிப்பெண்களாக வாழ்ந்த அரசு மகளிர் வாழ்ந்த பகுதிகளுக்கு திருவந்திக் காப்பு வேளம், திரு மஞ்சனத்து வேளம் போன்ற பெயர்கள் சூட்டப்பட்டன.
எவ்வளவு பெண்கள் இவ்வாறு வேளங்களில் வாழ்ந்தனர் என்று துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால் இராசேந்திர சோழன் காலத்தில் சோழர்களின் அரண்மனை உணவுக் கூடத்தில் மட்டும் சுமார் 3000 பெண்கள் முறை போட்டுப் பணியாற்றினர் என்பதிலிருந்து, அவ்வாறு கொண்டு வரப்பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் என்பதை ஊகித்தறியலாம்.
இவ்வேளங்கள் சோழ மன்னர்களின் நேரடிக் கண்காணிப்பிலிருந்ததோடு இதற்கு மிகுந்த கட்டுக்காவலும் போடப்பட்டிருந்தது. இவற்றால் அன்னிய ஆடவர் எவரும் இப்பகுதியில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு பண்டைய தமிழ் மன்னர்கள் எதிரிநாட்டுப் பெண்களைப் பிடித்து வருவதைப் பெருமையாகக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்குப் பல்வகை அநீதிகளை இழைத்தனர். எதிரி நாட்டினர் மீது தாங்கள் கொண்ட கோபத்தையும், பழி உணர்ச்சியையும் தீர்க்கும் வடிகாலாகவே இவ்வேளங்களை அவர்கள் கருதினர் என்று கொள்ள வேண்டியுள்ளது.
முடிவுரை
ஒரு சமுதாயம் சிறப்பானதாகக் கருதப்பட வேண்டுமென்றால், அதில் பெண்களுக்கு உயர்வான இடம் வழங்கப்பட வேண்டும். சங்க காலத்தில் ஒளவையார், காக்கைப்பாடினியார்,நச்செள்ளையார் போன்றோரும், சோழர் காலத்தில் செம்பியன் மாதேவி, குந்தவை பிராட்டியார், வானவன்மாதேவி போன்ற பெண்டிரும், பாண்டியர் காலத்தில் மங்கையர்க்கரசி போன்றோரும் சிறப்புடன் போற்றப்பட்டனர். இவற்றால் தமிழ்ச் சமுதாயம் சீரிய சமுதாயம் என்று பலர் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆனால், அதே சமுதாயத்தில்தான் பெண்ணடிமைத்தனம், ஜாதிமுறை, குழந்தைகள் மணம், கைம்பெண் கொடுமை, பல தார மணம், தீண்டாமைக் கொடுமை போன்ற சிறுமைகளும் அரங்கேறியுள்ளன என்பதை அவர்கள் மறந்தனர். இவ்வநீதிகளும், தீமைகளும் இலை மறைவு காய் மறைவாக நடக்காமல், அரசின் அனுமதியுடன் வெளிப்படையாகவே நடந்தன. தமிழ் மன்னர்களும் இதற்குப் பூரண அனுமதியளித்தனர். எனவே, இவை தமிழ்ச் சமுதாயத்தின் பெருமைகளைக் குலைக்கும் புண்மையாகத்தான் கருத வேண்டும்.
பழந்தமிழ்ச் சமுதாயம் ஆணாதிக்கச் சமுதாயமாகும். சோழ மன்னர்கள் இதைச் செயலில் காட்ட எதிரி நாட்டுப் பெண்களை அடிமைகளாகப் பிடித்து வந்து தம் பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தினர். மெல்லியல்பினரான பெண்கள் மீது இழைக்கப்பட்ட இவ்வநீதிகள் மன்னிக்கவியலாத மாபெரும் குற்றமாகும். அக்காலத் தமிழ்ச் சமுதாயம் பெண்களைப் போகப் பொருளாகப் பயன்படுத்தியது.போர்க்காலத்தில் பிடிக்கப்படும் அடிமைகளுக்கு எந்த நாட்டிலும் உரிமைகள் வழங்கப்படுவதில்லை. அவர்கள் எல்லாக் காலங்களிலும் மிருகங்களை விடக் கேவலமாக நடத்தப்பட்டனர்.
இதற்குத் தமிழ்ச் சமுதாயமும் விலக்கன்று. பெண்களைப் போற்றிய தமிழ்ச் சமுதாயம், அதே பெண்களுக்கு அநீதியையும் இழைத்ததைக் காணமுடிகின்றது. தமிழ் மன்னர்கள் அயல்நாட்டுப் பெண்களுக்கு இழைத்த அநீதிகள் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை. வேளங்களில் நடந்த அடக்குமுறைகள், அநீதிகள், பாலியல் துன்புறுத்தல்கள், பலாத்காரங்கள் போன்றவை உலகின் வெளிச்சத்துக்கு வரவில்லை. வேளங்களைப் பற்றி வெளி வந்த பதிவுகளெல்லாம் அவ்வரசர்கள் வேளங்களை உரிமையாகக் கொண்டதினால் வெளிப்பட்ட அகமகிழ்வின் வெளிப்பாடான பதிவுகளேயாகும்.
எதிர் காலத்தில் வேளங்களைப் பற்றி முழுமையான சான்றாதாரங்கள் நமக்குக் கிடைக்குமாயின், அவை தமிழ்ச் சமுதாய வரலாற்றை தரம் தாழ்த்துவதுடன், கருப்புப் பக்கங்களாகவும் பதிவு செய்யப்படும் என்பதில் ஐயமில்லை.
பார்வை நூற்பட்டியல்
1. Neelakanta Sastri.K.A, The Cholas, University of Madras, Chennai, (1975)
2.Swaminathan. A, Social and Cultural History of Tamil Nadu, Deepa Publications, Chennai. (1991)
3. Pillai.K.K. A Social History of the Tamils, University of Madras, Chennai. (1969)
4. சதாசிவப் பண்டாரத்தார்.தி.வை, பிற்காலச் சோழர் சரிதம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். (2008)
5. பிள்ளை.கே.கே., சோழர் வரலாறு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை. (1997)
6.பாலசுப்பிரமணியம்.மா, சோழர்களின் அரசியல் கலாச்சார வரலாறு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை. (1979)
7. புலியூர்க் கேசிகன் , சென்னை, கலிங்கத்துப் பரணி, சாரதா பதிப்பகம், சென்னை. (2018)
8.கதிர் முருகு, இராசராச சோழன் உலா, சாரதா பதிப்பகம், சென்னை. (2009)
9.கதிர் முருகு, மதுரைக்காஞ்சி, சாரதா பதிப்பகம், சென்னை. (2013)
10. கதிர் முருகு, பட்டினப்பாலை, சாரதா பதிப்பகம், சென்னை. (2011)
11. புலியூர்க் கேசிகன், மணிமேகலை, சாரதா பதிப்பகம், சென்னை. (2017)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.