Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

குற்றாலக் குறவஞ்சியில் குறவர் வாழ்வியல்

மு. கயல்விழி
உதவிப்பேராசிரியர், தமிழ்த் துறை,
பச்சையப்பன் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரம்.


முன்னுரை

தமிழ் மொழியானது வளமையான பழம் மொழியாகும். இது இயல், இசை, நாடகம் என்று மூன்று இயலாகப் பிரிக்கப்பட்டிருந்தது. எனவே இது முத்தமிழ் என்று அழைக்கப்பட்டது. மூன்று துறைக்கும் தமிழர் முக்கியத்துவம் நல்கினாலும் இயல்துறை மட்டுமே முன்னிலை பெற்றது. கவி புனையும் ஆற்றல் பலருக்கு வாய்த்ததால் இத்துறை முன்னிலை பெறமுடிந்தது. இசைத்துறைக்கு இசை நுட்பங்களும், நாடகவியலுக்கு நாடக பாவங்களும் இன்றியமையாததென்பதால் இவை அத்துணை சிறப்பு பெற முடியவில்லை. இசையும், நாடகமும் நெருங்கிய தொடர்பு கொண்டன என்பதுடன் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாதவை. இத்துறையில் பாண்டியத்துவம் பெற்றவர்களால் மட்டுமே இத்துறை சார்ந்த படைப்புகளை உருவாக்க முடிந்தது. இசையோடு புலவர்கள் கவிதை புனைந்தாலும் அவர்களால் இசைநூல்களை படைக்க இயலவில்லை. நல்ல இசையுடன், பாவங்களும், நடிப்பும் சேரும்பொழுது அது நல்லதொரு நாடக நூலாய் உருவாகின்றது. பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத அக்காலத்தில் இயல் மற்றும் இசையை விட நாடகங்களே அனைவரையும் கவர்ந்தன. குறிப்பாக பாமரமக்களின் கண்ணையும், கருத்தையும் நாடகங்கள் ஒருங்கே கொள்ளை கொண்டன. எனவேதான் நாடகங்களையும், கூத்தையும் பாமரர் கொண்டாடி மகிழ்ந்தனர். இவ்வகையான இசை நயமிக்க நாடக நூல்களே குறவஞ்சி நூல்களாகும். இவை குறம், குறவஞ்சி என்று அழைக்கப்பட்டன. மேலும் குறவஞ்சி நாடகம் என்று இது அழைக்கப்பட்டதன் மூலம் இதிலுள்ள நாடகவியல்பு எளிதில் புலனாகும்.

இடைக்காலத்தில் கீழ்த்தட்டு மக்களாய் கருதப்பட்ட குறவர்களைப் பற்றி படைக்கப்பட்ட குறவஞ்சி நூல்கள் மற்ற இலக்கியங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டுத் திகழ்கின்றன. இந் நூல்களின் கதை மாந்தர்களான குறவர்கள் பழம் பெருமைமிக்க குடியில் தோன்றியவர்கள். அவர்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணலாம். வேடர், வேட்டுவர், குறவர் என்று சங்ககால இலக்கியங்களால் இவர்கள் சிறப்பிக்கப்பட்டவர்கள். இந்த குறவரின் வாழ்வியல் நிலையை சிறப்பிக்கும் குறவஞ்சி நூல்களில் சிறந்தது குற்றாலக் குறவஞ்சியாகும். இது குற்றால மலையில் வாழ்ந்த குறவர்களின் வாழ்வியலை எடுத்துரைப்பதாகும். இந் நூல் குறவஞ்சி நாடகமாய் பல காலம் நடிக்கப்பட்ட சிறப்புடையது. பழமையும். பெருமையுமிக்க குறிஞ்சி நில மாந்தர்களான குறவரின் வாழ்வியலை குற்றாலக் குறவஞ்சி விரிவாகப் பேசுகின்றது. அவற்றை ஈண்டு ஆய்வோம்.


குறவஞ்சி இலக்கியம்

சிற்றிலக்கிய வகையில் சிறப்பு வாய்ந்தது குறவஞ்சி. இது 16, 17ஆம் நூற்றாண்டளவில் தோன்றி சிறப்பிடம் பெற்றது. இவற்றைப் பற்றிய செய்திகள் தொல்காப்பியர் காலம் தொட்டு காணப்படுகின்றன. குறவஞ்சி நூல்களில் வரும் குறி சொல்லும் நிகழ்வுகள் சங்க காலத்தில் சிறப்புற்றுத் திகழ்ந்தன. சான்றாக தலைவனும், தலைவியும் காதல் கொள்கின்றனர். தலைவன் தலைவியைப் பிரிந்து செல்கின்றான். தலைவனை நினைத்து தலைவி மனம் வருந்தி உடல் மெலிகின்றாள். இதனால் வருந்திய நற்றாயும், செவிலித்தாயும் அவள் மெலிவிற்கான காரணத்தைக் கண்டறிய முயன்றனர். எனவே அவர்கள் கட்டு, கழங்கு, வெறியாடல் போன்றவற்றை நிகழ்த்தி தெய்வத்தின் மூலம் தலைவியின் மெலிவுக்கான காரணத்தை கண்டறிந்து தீர்க்க முயன்றனர். இந்நிகழ்வே குறவஞ்சி இலக்கியத்துக்கு அடிப்படையாகும். இந்நிகழ்வை உறுதிபடுத்திய தொல்காப்பியரும்

“கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும்
ஒட்டிய திறத்தால் செய்திக் கண்ணும்” (தொல்-பொரு-கள:25.112-113)

என்று குறிப்பிடுகின்றார். பிற்காலத்தில் குறவஞ்சிக்கு சிறப்பான இலக்கணம் வகுத்த வீரமாமுனிவர் தம் சதுரகராதியில் “ஆசிரியப்பா, வெண்பா, தரவு, கொச்சம், கலித்துறை, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், போன்ற இயற்றமிழ் செய்யுளுடன் சிந்து, கீர்த்தனை, கண்ணிகள் போன்ற இசைப்பாடல்களுடன் வருவது” என்று கூறிச்செல்கின்றார் (சதுரகராதி. ப:338). எனவே சொல்லழகும், பொருளழகும், ஓசைநயமும், எதுகை, மோனை போன்ற தொடையும், வனப்பும் கலந்து உலக வழக்காக வருவது குறவஞ்சியாகும். இவ்வாறு பன்னெடுங்காலம் கூறப்பட்ட குறி நிகழ்வுகள் நன்கு இலக்கிய வடிவம் பெற்று 16ஆம் நூற்றாண்டளவில் குறவஞ்சி நூலாக உருப்பெற்றது. குறம் என்ற இலக்கிய வடிவில் தலைவிக்கு குறத்தி குறி கூறும் நிகழ்ச்சி மட்டும் இடம் பெறும். குறவஞ்சி என்பது மேற்சொன்னவற்றுடன் இன்னபிற நிகழ்வுகளும் இடம் பெறும். பல குறவஞ்சி நூல்கள் தமிழில் தோன்றினாலும் குற்றாலக் குறவஞ்சிக்கு அவை ஈடாகவில்லை. அது பலகாலம் நாடகமாக நடிக்கப் பெற்ற சிறப்பு வாய்ந்தது.

குற்றாலக் குறவஞ்சியின் நிகழ்விடம்

குற்றாலக் குறவஞ்சியின் நிகழ்விடம் குற்றால மலையாகும். இது பாண்டிய நாட்டிலுள்ள பாடல் பெற்ற தலமாகும். இது இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசிக்கு அடுத்துள்ளது. திருக்குற்றாலம் பாண்டிய நாட்டிலுள்ள சிறப்பு பெற்ற 14 தலங்களில் ஒன்றாகும். இது நிலவளமும், நீர்வளமும் ஒருங்கே கொண்டது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் திருக்குற்றால நாதனாவான். இம்மலையில் தோன்றும் அருவிகள் மிகவும் சிறப்புமிக்கவையாகும். இவை சிவமது கங்கை, செண்பகத் தடாகம், பொங்குமாக் கடல், வடஅருவி, சித்ராநதி போன்றவையாகும். இவற்றை பஞ்சதீர்த்தம் என்றழைப்பர். குற்றாலநகருக்கு 21 பெயர்கள் வழங்கி சிறப்பிக்கப் படுகின்றது. குற்றால நகரைச் சிறப்பிக்க வந்த ஞானசம்மந்தப் பெருமான்

“போதும் பொன்னும் உந்தி அருவி புடைசூழக்
கூதல் மாரிதுண் துளி தூங்கும் குற்றாலம்” (திருக்குற்றாலப் பதிகம்.8)

என்று புகழ்வதை எண்ணிப் பார்க்கலாம். குற்றலாமலை பலவகை மூலிகைகள் நிறைந்த பகுதியென்பதால் மிகவும் சிறப்பு பெறுகின்றது.


குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர்

இவ்வழகு நூலின் ஆசிரியர் திரிகூடராசப்பக் கவிராயராவார். இவர் தென்காசியை அடுத்த மேலகரம் என்ற ஊரினர். சைவ வேளாள மரபினர். கவிநலமும், இலக்கியத் திறனும் ஒருங்கே கொண்டவர். மடக்கு, திரிபு, சிலேடை போன்ற சொல்லணிகளும், உவமை முதலிய பொருளடைகளும் கொண்டு கவிபுனைவதில் வல்லவர். குற்றாலநாதர் மீது நீங்காத பக்தி கொண்டவர். இவர் குற்றாலநாதர் மீது 14 நூல்கள் பாடிய போதிலும் குற்றாலக் குறவஞ்சி நூலே யாவற்றிலும் மேம்பட்டதாகத் திகழ்கின்றது. இவரின் கவித் திறனையறிந்த மதுரைநாயக மன்னர் முத்து விஜயசொக்கநாத நாயகர் இவருக்கு “குற்றாலநாத வித்துவான்” என்ற பட்டம் வழங்கியதுடன், நிலங்களை மானியமாய் வழங்கியும் சிறப்பித்தான். அந்நிலம் இன்றும் “குறவஞ்சிமேடு” என்று அழைக்கப்பட்டு வருகின்றது. இவர் வடகரை நாட்டின் அரசரான சின்னணஞ்சாத் தேவரின் அவைக்களப் புலவராகவும் திகழ்ந்தார். தன்னைப் புரந்த வள்ளல்கள் எல்லோரையும் தன்நூலில் பாராட்டுவதின் மூலம் நன்றி மறவாப் பெருந்தகையாளராய்த் திகழ்ந்தார். இவர் குற்றாலக் குறவஞ்சி நூலை கி.பி.1711ஆம் ஆண்டில் இயற்றியதாக ஆய்வாளர்கள் கணிப்பர்.

குறவர்களின் தோற்ற நலன்

குறவர் பழம் தமிழ்க்குடியினர் ஆவர். இவர்கள் குறிஞ்சி நிலத்தினர். கரடு முரடான மலைப்பகுதியைச் சார்ந்தவர்கள். ஆண்மகன் குறவன் என்றும், பெண்மகள் குறத்தி என்றும் அழைக்கப்பட்டனர். சங்க இலக்கியங்கள் இவர்களை வேடர் என்றும் வேட்டுவர் என்றும் அழைத்தன. ஆண்மகன் வேட்டையாடுதலையும், பெண்மகள் குறி சொல்லுதலையும் தொழிலாகக் கொண்டிருந்தனர். ஆண்களுக்கு பலவிதமான பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. அவை எளிமையானவை, இனிமையானவை, காரணப் பெயர்களாக அமைந்தவை. சிங்கன், நூவன், கவண்டன், மல்லன், ஏகன், நாகன், எலியன், புலியன், நல்ல சிங்கன் போன்றவை அப்பெயர்களாகும். குறவர்கள் வேறு குலத்தில் பெண் கொடுக்கவும் மாட்டார்கள், பெண் எடுக்கவும் மாட்டார்கள். மேலும் அவர்கள் ஒருமுறை நட்பு கொண்டால் எக்காரணம் கொண்டும் இடையில் முறித்துக் கொள்ளாப் பண்பாளர்களாகத் திகழ்ந்தனர்.

குறத்தியரின் அழகுச் சிறப்பு

குறத்தியர் தோற்றப் பொலிவு மிக்கவர். அழகுப் பதுமைகளாகத் திகழ்ந்தவர்கள். குறத்தியரின் அழகு நலனை குற்றாலக் குறவஞ்சி சிறப்புடன் படம் பிடித்துக் காட்டுகின்றது. அவர்கள் ஊர்கள் தோறும் அலைந்து தரிவதால் நிறம் கருத்தவர்கள். அவர்கள் வில்போன்ற நெற்றியில் கஸ்தூரிப் பொட்டு வைத்தும், கூந்தலுக்கு வெட்சிப்பூவைச் சூடியும், கண்களுக்கு அஞ்சன மை தீட்டியும், கைகளில் மந்திரக் கோல் ஏந்தியும், அக்கத்தில் கூடையை இடுக்கிக்கொண்டும், மார்பில் குன்றிமணி, பாசிமணி, வக்காமணி போன்ற மணிகளை அணிந்து கொண்டும், நெற்றியில் திருநீறு பூசியும், காலகளில், சதங்கை அணிந்தும், காதுகளில் காதணிகள் அணிந்தும், நாசியில் முத்து புல்லாக்கு பொருந்தியும் எழிலுடன் காணப்பட்டனர்.

“குலமணிப் பாசியும் குன்றியும் புனைந்து
சலவைசேர் மருங்கிற் சாத்திய கூடையும்
வலதுகைப் பிடித்த மாத்திரைக் கோலும்
மொழிக்கொரு பசப்பும் முலைக்கொரு குலுக்கும்
விழிக்கொரு சிமிட்டும் வெளிக்கொரு பகட்டுமாய்” (குற்றா குற.20.1-5)

மேலும் குறத்தியர் எப்பொழுதும் வெண்மையான ஆடைகளையே அணிவர். அவர்களது கொங்கைகள் சொக்கட்டான் காய் போன்றும், இடை கொடிபோன்றும், பற்கள் முல்லை அரும்புகள் போன்றும், கண்கள் குவளை மலர்கள் போன்றும் காணப்பட்டன. அவர்களது கூந்தல் எப்பொழுதும் மணமிக்கதாகத் திகழ்ந்தது. அழகுக்கு பெயர் பெற்ற கொல்லிப் பாவையை விட குறத்தியர் பேரழகுடன் காட்சியளித்தனர். அவர்கள் இசைக் கலையில் வல்லவர்களாகவும் திகழ்ந்தனர். கோடி, முரளி, வராளி, பைரவி போன்ற இராகங்களில் பாடல் பாட வல்லவர்கள்.


குறத்தியரின் தொழில்

குறத்தியர் குறி சொல்லும் தொழிலை நன்கு கற்றவர்கள். அது அவர்களுக்கு குலத்தொழில். அவர்கள் மிகுந்த மன தைரிய முடையவர்கள். பல ஊர்கள், பலநாடுகளுக்குத் தனியேச் சென்று குறி சொல்லி பாராட்டும் பரிசிலும் பெற்றுத் திரும்பியவர்கள். பன்மொழிகள் நன்கு கற்றவர்கள் என்பதுடன் மிகுந்த நாவன்மை யுடையவர்கள். ஆரியம், குச்சலம், கொங்கணம், கன்னடம், தெலுங்கு, மளையாளம், கொங்கு, நாடு, மக்கம், மாரடம், இந்துஸ்தான், வங்காளம், சீனா, இலங்கை முதலிய நாடுகளுக்குச் சென்று வெற்றியுடன் குறி சொல்லித் திரும்பியவர்கள். குறத்தியர் தன் மந்திரக்கோல் கொண்டு பில்லி சூனியங்களை அடக்குவதில் வல்லவர்களாகத் திகழ்ந்தனர்.

ஆண்களுக்கு வலதுகையையும், பெண்களுக்கு இடது கையும் பார்த்து குறிசொல்லுவர். அவர்கள் ஜக்கம்மா தேவியையும், குறளிப் பேயையும் வசப்படுத்திக் குறி கணிப்பர். அவர்கள் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் குறியின் மூலம் கணித்துச் சொல்லும் ஆற்றல் கொண்டவர்கள். மனக்குறி, உடற்குறி, கைக்குறி, விழிக்குறி, சொற்குறி போன்ற பலவகையான குறிகளை சொல்வதில் வல்லவர்களாகவும் திகழ்ந்தனர்.

“மன்னவர் தமக்கு வலதுகை நோக்கி
இன்னகை மடவார்க் கிடதுகை பார்த்துக்
காலமுன் போங்குறி கைப்பல னாங்குறி
மேல்இனி வருங்குறி வேண்டுவோர் மனக்குறி
மெய்க்குறி கைக்குறி விழிக்குறி மொழிக்குறி” (குற்றா குற:35)

குறத்தியர் வீடு வீடாகச் சென்று குறி சொல்வர். அப்பொழுது குறிகேட்கும் வீட்டினர் குறி நிகழ்வு செய்ய சில முன்னேற்பாடுகளைச் செய்வர். அதன் பின்னரே குறத்தி குறி சொல்லத் தொடங்குவாள். குறி பார்க்கும் வீட்டினர் முதலில் வீட்டை மெழுகிக் கோலமிடுவர். மஞ்சள் தூளைக் கொண்டு பிள்ளையார் பிடித்து வைப்பர். தட்டில் மா, பலா, வாழை போன்ற முக்கனிகளை வைப்பர். தேங்காயை உடைத்தும், அருகம்புல்லை கட்டியும் பூஜைக்கு தயார் செய்வர். படையலுக்காக அப்பம், கடலை, சர்க்கரை. எள்ளுருண்டை, பொறி போன்ற பட்சணங்களைப் படைப்பர். நிறை நாழியில் நெல்லளந்து வைத்து முதலில் தெய்வ வழிபாடு நிகழ்த்துவர். குறத்தியும் கடவுளை வழிபட்ட பின்னர் குறிசொல்லத் தொடங்குவாள். அவர்கள் குறி சொல்லும் பொழுது நற்குறி, தீக்குறி நோக்குவர். நற்குறி தோன்றினால் மட்டும் குறி சொல்லுவர். பெதும்பைப் பருவப்பெண் பேச்சும், மேற்கு திசையில் ஆந்தையின் கீச்சுக் குரலும், தும்பல் ஒலியும், காக்கை இடது பக்கம் பறந்து போதலும், பல்லியின் பலபல வென்ற ஓசையும் நற்குறியின் அடையாளங்களாகத் திகழ்ந்தன. சிறப்பாக குறி சொல்லி முடித்தப் பின் குறத்தியர் பலவிதமான பரிசில்களைப் பெற்றனர். அவர்களுக்கு முத்திரை மோதிரமும், பொன் வளையலும், பொற் கரணமும், பொன் நெளியும், கடகக் காப்பும், பொன் மாலையும், மாணிக்க மாலையும் பரிசிலாக வழங்கப்பட்டன. இது தவிர வயிற்றுக்கு கஞ்சியும், வெற்றிலையும், வெட்டுப்பாக்கும், சீனதேசத்துப் புகையிலையும் அன்புப் பரிசாக உடன் வழங்கபட்டன.

குறத்தியரின் பயணங்களும்,பரிசில்களும்

குறத்தியர் குறி சொல்லுதலை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் சென்று வெற்றியுடன் முடித்துத் திரும்பியவர்கள். அவர்கள் சென்றவிடங்களிலெல்லாம் வெற்றிக்கொடி நாட்டினர். பல நாடுகளுக்கு செல்வதினால் பன்மொழிகளை நன்கு கற்றிருந்தனர். தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சீர்காழி, சிதம்பரம், கும்பகோணம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், ஸ்ரீவில்லிப்புத்தூர், பாபநாசம். கருவூர், செஞ்சி, தஞ்சை, திருச்சி போன்றவிடங்களுக்கும் இந்தியாவில் பிறபகுதிகளான திருக்காளத்தி, கோல்கொண்டா, ஸ்ரீசைலம், திருவனந்தபுரம், பூரி ஜெகன்நாதம், திருகோகர்ணம், காசி, குருஷேத்திரம், கேதாரம், கொச்சி போன்ற தலங்களுக்கும் சென்று வெற்றியுடன் குறி சொல்லி பரிசிலுடன் திரும்பினர். குறத்தியர் சிறப்பாக குறி சொன்னதன் விளைவாய் பலவித அணிகள் பல நாடுகளில் பரிசிலாகப் பெற்றனர். அவை சேர நாட்டிலிருந்து சிலம்பும், கலிங்க நாட்டிலிருந்து முறுக்குத் தண்டையும், பாண்டிய நாட்டின் மதுரையிலிருந்து பாடகமும், திருநெல் வேலியிலிருந்து சல்லாத்துணியும், சோழநாட்டின் தஞ்சாவூரிலிருந்து அரைஞாண்கொடியும், காயல் பட்டினத்திலிருந்து முத்துமணியும், குட்டநாட்டு காயங்குளத்திலிருந்து கழுத்துச்சரடும், வங்காள தேசத்திலிருந்து கொப்பணியும், புன்னைக் காயலிலிருந்து முத்துச்சரடும், ஆழ்வார் திருநகரியிலிருந்து சூளாமணியும் பரிசில்களாகப் பெற்றனர்.


குறவரின் வீரமிகு தோற்றம்

குறவர்கள் வீரம் மிகுந்தவர்கள். அச்சம் என்பதை என்னவென்றே அறியாதவர்கள். காடு, மேடுகளெல்லாம் சுற்றித் திரிந்தவர்கள். கொடிய விலங்குகள் உள்ள அடர்ந்த வனங்களில் கிஞ்சித்தும் அச்சமின்றி சென்று வேட்டையாடுபவர்கள். அவர்களைக் கண்டு கொடிய விலங்குகளான சிங்கம், புலி, கரடி போன்றவை அஞ்சியோடின. அவர்கள் நல்ல கட்டான உடல் தோற்றத்தையும், மனவலிமையும் ஒருங்கேக் கொண்டவர்கள். கொக்கினின்று எடுத்த முத்தலான மாலையைக் கழுத்தில் அணிந்தும், தலையில் தான் வேட்டையாடிய கொக்கின் இறகைச் சூடியும், புலியின் தோலை இடுப்பில் அணிந்தும், சிவந்த கண்களுடனும், முறுக்கு மீசையுடனும், அம்பறாத்தூணியை தோளில் மாட்டிக் கொண்டும், கழுத்தில் பறவை பிடிக்கும் வலையுடனும் குறவர் காணப்பட்டனர்.

“வக்காவின் மணிபூண்டு கொக்கிறகு
சிகைமுடித்து வரித்தோற் கச்சை
தொக்காக வரிந்திறக்கித் தொடர்புலியைக்
கண்டுறுக்கித் தூணி தூக்கிக்
கைக்கான ஆயுதங்கள் கொண்டுசில்லிக்
கோலெடுத்துக் கண்ணி சேர்த்துத்" (குற்றா குற.சிங்கன் தோற்றம்.02.1-6)

அவர்கள் வளைத்தடி என்ற ஆயுதத்தையும், பறவை பிடிக்கும் கண்ணியையும், கூர்மையான ஈட்டியையும் கையில் வைத்துக் கொண்டு வேட்டைக்குச் சென்றனர்.

குறவரின் வேட்டைத் தொழில்

குறவர் வேட்டையாடுதலில் நிபுணர்கள். வேட்டையின் நுட்பங்களை நன்கறிந்தவர்கள். வேட்டை அவர்களின் குலத் தொழிலாகும். அவர்கள் விளை நிலங்களிலும், நீர்நிலைகளிலும் கண்ணி வைத்துப் பறவைகளைப் பிடித்தனர். அவர்கள் நாய்போல் பறவையின் தடங்கண்டும், பூனைப் போல் பதுங்கியும், நரிபோல் ஒடுங்கியும், பேய்போல் தொடர்ந்தும், சிங்கம்போல் பாய்ந்தும் பறவைகளைத் துல்லியமாக வேட்டையாடிப் பிடித்தனர். இவர்கள் மனிதர்களின் தலைமுடியைக் கத்தரித்து கண்ணிகளாகத் திரித்து பொறிவைத்து பறவைகளை பிடித்தனர். வேட்டையின் போது தோலினால் செய்த முழவு என்ற கருவியை முழக்கினர். பறவைகளை அழைக்க அப்பறவைகள் போன்றே ஒலி எழுப்பினர். சிலர் மரத்தின் மீதேறி பறவைகளைக் கண்காணித்தனர்.

அவர்கள் சதா வகைக் கண்ணியை பயன்படுத்தி ஊர்க் குருவிகளையும், உள்ளான்களையும், வலியான்களையும் பிடித்தனர். முக்கூடு என்ற கண்ணியை பயன்படுத்தி கருங் குருவிகளையும், கானாங்கோழிகளையும் பிடித்தனர். பெரிய கண்களையுடைய கண்ணிகளை கீழே நெருக்கி வைத்து காக்கைகளைப் (நீர் கோழிகளை) பிடித்தனர். அதே கண்ணிகளை கீழே கவிழ்த்து வைத்து பதியச் செய்து வக்காய் பறவைகளைப் பிடித்தனர். அக் கண்ணியை வளைத்து சுருக்கி நன்றாய் மூடிபோட்டு பதியச் செய்து உள்ளான்களைப் பிடித்தனர்.

“கலந்த கண்ணியை நெருக்கிக் குத்தினாற் காக்கை
யும்படுமே குளுவா-காக்கை யும்படுமே
மலர்ந்த கண்ணியைக் கவிழ்த்துக் குத்தினால் வக்கா
வும்படுமே குளுவா வக்கா வும்படுமே
உலைந்த கண்ணியை இறுக்கிக் குத்தினால் உள்ளா
னும்படுமே குளுவா-உள்ளா னும்படுமே" (குற்றா குற-கண்ணி வகை.16.1-6)

அவர்கள் சித்ராநதி பாயும் கோயில் காடுகளிலும், குற்றாலக் காடுகளிலும், சோலை வனங்களிலும், அங்குள்ள பல்வகை நீர்நிலைகளிலும் வேட்டையாடினர். வெற்றிகரமாக வேட்டையாடிய பின்னர் புட்டியில் அடைத்த சாராயத்தையும், தென்னங்கள்ளையும், குடுவையில் அடைத்த பனங்கள்ளையும் குடித்து மகிழ்ந்தனர். குறவர் இனத்தில் ஆண், பெண் இருபாலருமே மது அருந்துதல் வழக்கு. குறவர் வேட்டைத் தொழிலில் வல்லவர்களாகத் திகழ்ந்தபோதிலும் அதிலும் சில ஏமாற்றங்களைச் சந்தித்தனர். பறவைகள் வாகாய் அவர்களை ஏமாற்றின. பறவைகள் சில நேரங்களில் கூட்டமாகப் பறந்து வந்து குறவர் வைத்த கண்ணிகளில் உட்கார்ந்து அவர்கள் வைத்த இரையை உண்ணும். பினனர் அவை கூட்டாய் கண்ணிகளைத் தட்டிவிட்டு பறந்தோடிவிடும். சிலசமயம் கண்ணிகளில் ஆயிரம் காகங்கள் அகப்படும். அவை ஒடுங்கிக் கிடப்பது போன்று நடித்துக் கண்ணியை குறவர் கழட்டியவுடன் மொத்தமாக ஏமாற்றிவிட்டு பறந்தோடும். குறவர்கள் இவ்வாறு பல ஏமாற்றங்களைச் சந்தித்தாலும் பொதுவில் அவர்கள் பறவை வேட்டையில் சிறப்புடன் செயல்பட்டு வெற்றி கண்டனர். இது தவிர காடுகளில் உறையும் பலவிதமான கொடிய விலங்குகளையும் வேட்டையாடி வாழ்ந்தனர்.


குறவரின் வேட்டைச் சிறப்புகள்

குறவர் தம் தொழிலான வேட்டைத் தொழிலை உயர்வாகவும் உயிர்போன்றும் மதித்தனர். ஆனால் அக்காலத்தில் இத்தொழில் சிறுமைபடுத்தப்பட்டது. எனவே குறவர் தம் தொழிலை சிறப்புடன் உயர்த்திக் கூறினர். தாம் செய்யும் தொழில் உயர்வானது என்றும், தெய்வங்களே இவ் வேட்டைத் தொழிலை மேற்கொண்டிருந்தன என்றும் சான்று பகர்கின்றனர். தன் கூற்றுக்கு புராண இதிகாசக் கதைகளைச் சான்றாக காட்டினர்.

திருமால் காக்கையை வேட்டையாடினார். சிவபெருமானும் கொக்கை வேட்டையாடி அதன் இறகைத் தலையில் சூடிக் கொண்டார். தெய்வங்களே பறவையை வேட்டையாடியதால் தான் வேட்டையாடுதல் கேவலமன்று என்கின்றனர்.

விநாயகப் பெருமான் பெருச்சாளியைப் பிடித்தார், முருகக்கடவுள் மயிலைப்பிடித்து வாகனமாக்கினார். சிவன் அன்னப் பறவையை பிடித்து பிரம்மனுக்கு வாகனமாக்கினார். திருமால் செம்பருந்தை பிடித்து அதை வாகனமாக்கினார். இவ்வாறு தெய்வங்களே பறவைகளைப் பிடித்து வாகனங்களாக்கியதால் தான் பறவைகளை பிடித்தல் சிறுமையன்று என்று வாதிட்டனர்.

“முன்னாட் படுத்த பரும்பெருச் சாளியை
மூத்த நயினார் மொடுவாய்க் கொடுபோனார்
பின்னான தம்பியார் ஆடும் மயிலையும்
பிள்ளைக் குறும்பாற் பிடித்துக் கொண் டேகினார்
பன்னரும் அன்னத்தை நன்னகர் ஈசர்
பரிகலம் ஈர்ந்திடும் பார்ப்பானுக் கீந்தனர்" (குற்றா குற-கண்ணி கொண்டுவரல்.14.1-6)

குறத்தி வள்ளியை மணந்த முருகன் வேட்டைக்குச் சென்று கொக்கை வேட்டையாடி அதை சட்டியில் வைத்து குழம்பாக்கி உண்டான். அதை வேத பிராமணர்களும், சைவ முனிவர்களும் ஏற்று உண்டு சுவைத்தனர். எனவே தான் உணவுக்காக வேட்டையாடுதல் உயர்வானதே என்று பெருமையுடன் பகர்கின்றனர்.எனவே குறவர்கள் அக்காலத்தில் தம் தொழிலான வேட்டைத் தொழிலை உயர்வானதாகக் கருதி வாழ்ந்தனர் என்பது புலனாகின்றது.

குறவரின் தனித்திறன்கள்

குறவர் பலவிதமான தனித்திறன்கள் கொண்டவர்கள். பிற இனத்தவர் அறியாத வித்தைகளை நன்கறிந்திருந்தனர். இவர்கள் பெண்களை வசியம் செய்யும் வசியமருந்து செய்யும் முறையை அறிந்திருந்தனர். இம்மருந்தை ஆண்மகன் உண்டால் மரத்தால் செய்த பாவையும் அவனைப் பின் தொடர்ந்து வரும். அவர்கள் வெறுப்பு மருந்தும் அறிந்திருந்தனர். இம்மருந்தை உண்ட பாசமிகு தம்பதியர் வெறுப்பு கொண்டு பிரிந்து விடுவர். பருவ வயது வந்தும் மார்புகள் பெருக்காத பெண்டிருக்கு மார்புகள் பெருகச் செய்யும் மருந்தும், பருத்த மார்புடைய பெண்டிரின் மார்புகளை சுருங்கச் செய்யும் மோகினிப் பேய் மந்திரத்தையும் இவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

“வாடை மருந்துப் பொடியும் அம்மியூர்
மரப்பாவை பின்தொடர மாயப் பொடியும்
கூடியிருக்க மருந்தும் இருபொழுதும்
கூடியிருப் பார்களைக் கலைக்க மருந்தும்
காடுகட்டக் கினிக்கட்டு குறளி வித்தை
கண்கட்டு வித்தைகளும் காட்டித் தருவேன்" (குற்றா குற்.36.1-6)

இது தவிர வேட்டையாடும் பொழுது காட்டைவிட்டு பறவைகளும், விலங்களும் ஓடாதிருக்க வசிய மருந்தும், நெருப்பினைச் சுடாமல் குளிரச் செய்யும் மருந்தும், பார்ப்பவர் தான் விரும்பிய தோற்றத்தை நல்கும் கண்கட்டு வித்தையும் அறிந்திருந்தனர். பெரிய மலையையும் நீராகக் கரைந்து வழிந்தோடச் செய்யும் மருந்தும் அவர்கள் வசமிருந்தது. அஞ்சன மைபோட்டு பெண்களை வசியமாக்கும் மந்திரமும், எவர் கண்ணுக்கும் தெரியாமல் எங்கு வேண்டுமானும் சென்று வரும் மந்திரமும், வான் வழியே பறந்து செல்லும் சித்து வித்தைகளும் அவர்களுக்கு அத்துபடி. அவர்கள் வேசியரை வசப்படுத்தும் சூளை என்ற மருந்தும், பிறரை பேசாமல் கட்டுவிக்கும் வாடைப் பொடியினையும் வைத்திருந்தனர். இவ்வாறு பலவகை மந்திர தந்திரங்களை அவர்கள் நன்கறிந்தாலும் அவற்றை நன்மைக்காகப் பயன்படுத்தினரேயன்றி தீயவழியில் யாண்டும் பயன்படுத்தியிலர்.


குறவரின் இறைவழிபாடு

குறவர்கள் தெய்வப்பற்று மிக்கவர்கள். எப்பொழுதும் இறைவனைத் தொழ மறவாதவர்கள். குற்றாலத்தில் உள்ள திருக்குற்றாலநாதரை வழிபடு தெய்வமாகக் கொண்டவர்கள். இது தவிர பல தெய்வங்களை பக்தியுடன் வணங்கினர். அவர்கள் திருச்செந்தூர் முருகனையும், மேலவாயில் ஐயனாரையும், திருக்குற்றாலப் பிள்ளையாரையும், கரிமலை தேவக்கன்னியையும், ஆரியங்காவு சாஸ்தாவையும், சொரிமுத்துக்கடவுளையும், குளத்தூர் வீரனையும், மகாகாளியம்மனையும், குற்றாலக் காவல்தெய்வத்தையும், வைரவப்பெருமானையும், கருப்புசாமியையும், முருகக் கடவுளையும், வன்னியராயனையும், பன்றிமாடனையும், எக்காலதேவியையும், துர்கையம்மனையும், பிடாரியையும், ஜக்கம்மாவையும் வழிபட்டு வந்தனர்.

குறவர்களின் காதல் வாழ்க்கை

குறவர் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை நிலையைப் பின்பற்றினர். ஆணும் பெண்ணும் காதல் கொண்டு ஒன்று கலந்து இல்வாழ்க்கை நடத்தினர். இவர்களின் காதல் எளிமையானது, அன்பானது, உண்மையானது. குறவர் காதலித்து மணம் செய்தும், உறவினில் மணமுடித்தும் இல்வாழ்க்கை நடத்தினர். குறவனும், குறத்தியும் பணி நிமித்தமாய் பலவிடங்களுக்கும், பல ஊர்களுக்கும் சென்றதால் அவர்கள் ஓரிடத்தில் தங்கி நிலையாய் வாழ்க்கை நடத்த இயலவில்லை. ஆனால் இந்தப் பிரிவு அவர்கள் அன்பைக் கூட்டியதேயொழிய குறைக்கவில்லை. ஊடுதலும், கூடுதலும் அவர்களுக்கு வழக்கமான ஒன்று. குறவன் குறத்தி மீது உயிரையே வைத்திருந்தான். குறத்தி பொருளீட்டவும், குறிசொல்லவும் வெளியிடங்களுக்கு அடிக்கடி சென்றதால் பிரிவாற்றாமை குறவனை வாட்டியது. பார்க்கும் வடிவம்யாவும் அவள் வடிவமாகவே தோன்றியது. எனவே தன் அன்புக் காதலியைத் தேடி நாடு நகரெங்கும் அலைந்து திரிந்தான்.

தான் அவளுடன் வாழ்ந்த நாட்களை எண்ணி எண்ணி ஏங்கினான்;. தான் அவளுடன் காதல் கொண்ட நாட்கள், சேர்ந்திருந்த தருணங்களை நினைத்துப் பார்த்து மகிழ்ந்தான். மீண்டும் பழைய நாட்கள் திரும்பவேண்டும் என்று ஆசைப்பட்டான். மான் போன்ற அவள் விழிகளும், கஸ்தூரிப் பொட்டுடைய அவள் நெற்றியும், அழகுக் காதுகளும், பொன் அணிகலன்களோடு அழகு தேவதையாகத் திகழ்ந்த சிங்கியை மீண்டும் பார்க்க முடியவில்லையே என்று வருந்தினான். தன் ஆசை சிங்கியின் அழகு மார்பில் சாய்ந்தும். ஆசை முத்தங்கள் அளித்தும் அவளின் கச்சாகவாவது இருக்கும் பேறு தனக்கு கிடைக்கவில்லையே என்று ஏங்கினான். இளம்பிறைப் போன்ற நெற்றியுடைய தன் ஆசைக் காதலியான சிங்கியின் மடியின் மேல் ஏறியும், தோளின் மேல் சாய்ந்தும் அவள் பேசும் கிளிமொழிகளைக் கேட்டின்புற தான் கிளியாகப் பிறக்காமல் போனதற்கு வேதனைப்பட்டான்.

“துள்ளிமடி மேலிருந்து தோளின்மேல் ஏறி அவள்
கிள்ளைமொழி கேட்கவொரு கிள்ளையா னேனில்லையே” (குற்றா குற-சிங்கியை நினைத்தல்.17.3-4)

சிங்கனுக்கு சிங்கியை காணாததால் காதல் போதை தலைக்கேறியது. பார்க்கும் பறவைகள் யாவும் அவளையே நினைவுபடுத்தின. புறாவின் குரல் கலவிக் காலத்தில் சிங்கி எழுப்பும் குரல் போன்றும், மயிலின் சாயல் சிங்கியின் நடையாகவும், சகோரப் பறவைகள் அவளின் கொங்கைகளாகவும், செங்கழுநீர் மலர்கள் அவளின் கண்களாகவும் அவனுக்கு காட்சியளித்தன. தன்னுடைய கட்டி திரவியமான அவளை அடையமுடியாததால் தான் ஒரு பாவி என்று வேதனைப்பட்டான்.

சிங்கியின் மீதான ஏக்கம் காமப்பேயாக அவனைப் பிடித்தாட்டியது. வேட்டைத் தொழிலையும் சரியாக செய்யாததால் பறவைகள் யாவும் பறந்தோடின. தன் தோழனான நூவனிடம் தான் இனி சிங்கியை காணாமல் உயர் வாழவியலாது என்று உரைத்தான். எனவே தன் வேட்டைத் தொழிலை விடுத்து பல ஊர்கள் சிங்கியைத் தேடி அலைந்தான். அவளைத் தேடித் தவித்த அவன் இறுதியாய் சிங்கியை குற்றால நகரின் கடைவீதியில் கண்டதும் காதல் கரைபுரண்டோட தன்னிலை மறந்து நின்றான். தன் காதலி கிடைத்ததினால் தன் காதல் வெற்றியடைந்தது என்று களிப்படைந்தான். அவர்கள் இருவரும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர் கூடிக் கொண்டாடிக் களித்தனர். இவ்வாறு குறவரின் காதல் வாழ்வு இயற்கையோடு இயைந்து நீடித்து உறுதியாய் நிலைத்தது.


பேச்சு வழக்கின் சிறப்பு

குறவர்கள் எளிமையான பேச்சு வழக்கு கொண்டவர்கள். அவர்கள் பேச்சு வழக்கை கவிஞர் அழகுடன் தன் நூலில் வெளிப்படுத்துகின்றார். அக்காலத்து அடித்தட்டு மக்களின் பேச்சு மொழியாக அது திகழ்ந்தது. அக்கால வட்டார வழக்கு எப்படி இருந்தது என்பதை இந்நூல் கொண்டு எளிதில் அறிய முடிகின்றது. சிங்கன் பேசும் பேச்சின் ஊடாக அது வெளிப்பட்டு நிற்கின்றது.

“ஆலாவும் கொக்கும் அருகே வருகுது
ஆசாரக் கள்ளர்போல் நாரை திரியுது” (குற்றா குற.99.5)

“பறவைகள் எல்லாம் பரந்தேறி மேயுது” (குற்றா குற.95.2)

“தரிகொண்டு தில்லை நரிகொண்டு போச்சு” (குற்றா குற.95.3)

“ஏறாத மீன்களும் ஏறிவருகுது” (குற்றா குற.99.3)

“அதுக்கு கிடந்து கொதிக்குதென் பேய்மனம்” (குற்றா குற.114.4)

“எத்திசைப்பட்ட குருகும் வருகுது” (குற்றா குற.99.3)

“தேசத்துக் கொக்கெல்லாம் கண்ணிக்குள்ளே வந்து
சிக்குது பார்கறி தக்குது பார்” (குற்றா குற.99.4)

“ஆயிரங் கொக்குக்குக் கண்ணியை வைத்துநான்
அப்பாலே போயொரு மிப்பா லிருக்கையில்” (குற்றா குற.105.4)

தன்னுடைய நூல் இயற்கையான நாடகக் காட்சி போன்று அமைய வேண்டும் என்ற நோக்கில் குறவர் பேச்சு வழக்கை கவிஞர் சிங்கன் மேலேற்றிக் கூறியது சிறப்புக்குரியது.

முடிவுரை

தமிழ் மக்கள் விவசாயக் குடியினர் ஆவர். இவர்கள் கடின உழைப்பாளிகள். காட்டிலும், மேட்டிலும், கழனிகளிலும் உழைத்து உணவை உற்பத்தி செய்யும் வேளாளர்கள். விவசாயப் பணி என்பது உடலுழைப்பை அடிப்படையாகக் கொண்டது. நாளெல்லாம் கடினமாக உழைத்துக் களைத்து வீடு திரும்பும் அவர்களுக்கு பொழுது போக்கு தேவைப்பட்டது. தன் உடல் வலியை மறக்கவும், மன மகிழ்ச்சியடையவும், ஓய்வு நேரத்தை உல்லாசமானதாக மாற்றவும் அவர்கள் பொழுதுபோக்கு அம்சங்களை நாடினர். எனவே அவர்கள் நாடங்களையும், கூத்தையும் நாடி நின்றனர். இவ்வகை உழைக்கும் வர்க்கத்தை இன்புறுத்த வந்த கலைவடிவமே நாடகமாகும். அது இசையுடன் சேர்ந்து வெளிப்படும் பொழுது மட்டற்ற இன்பத்தை பாரப்போர்க்கு வாரி வழங்கின. இவ்வாறு தொன்று தொட்டு தமிழில் நாடகமாக நடிக்கப்படும் இலக்கிய வடிவமே குறவஞ்சி நாடகமாகும். அவ்வகையில் பொது மக்களை மகிழ்விக்க ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாய் குமரகுருபர சுவாமிகள் மீனாட்சியம்மை குறம் என்ற நூலை இயற்றினார். அதனை வழியாகக் கொண்டு பல குறவஞ்சி நூல்கள் தமிழில் தோன்றின. ஆனால் குறவஞ்சி நூல்கள் யாவற்றிலும் சிறந்ததாகக் கருதப்படுவது குற்றாலக் குறவஞ்சியாகும். இது சிறந்த நாடக நூலாக அனைவராலும் போற்றப்பட்டு பலகாலம் நடிக்கப்பட்டது. இந்நூலின் பல்வகை சிறப்புகளான நல்ல கதையமைப்பு, சிறந்த கருத்துக்கோள், அழகு வர்ணனைகள், எளிமை நலம், வார்த்தை ஜாலம் போன்றவற்றுடன் குறவரின் பேச்சு வழக்கும் இந்நூலில் கையாளப்பட்டது இதன் சிறப்பு.

புற்றீசல் போல் ஏராளமான குறவஞ்சி நூல்கள் தோன்றினாலும் அவை யாவும் குற்றாலக் குறவஞ்சிக்கு ஈடாகவில்லை. குறவஞ்சி என்றால் குற்றாலக் குறவஞ்சி என்று சொல்லுமளவுக்கு இந்நூல் சிறப்பிடம் பெறுகின்றது. கவிஞர் தன்காலத்து சிறப்பு நிகழ்வுகளையும், வரலாற்றுச் செய்திகளையும், இயற்கை அமைப்புகளையும் தன்நூலுள் பதிவு செய்துவிட்டு சென்றுள்ளார். குறவர் வாழ்வியல் நிலையை இத்துணை சிறப்புடன் கூறுவதால் கவிஞர் குறவர்களைப் பற்றி நன்கறிந்தவர் என்பதுடன், அவர்களின் இன்ப துன்பங்களில் தோய்ந்தவர் என்பது தெளிவு. பழம் தமிழ்க்குடிகளான குறவர் வாழ்வியலை இத்தனை சிறப்புடன் எடுத்துரைப்பதன் மூலம் இந்நூல் சிற்றிலக்கிய வகையில் மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியத்திலும் தலைசிறந்த இடத்தைப் பெறுகின்றது. மலைகளிலும், காடுகளிலும், நீர் நிலைகளிலும் அலைந்து திரிந்து வேட்டையாடித் தானும் உண்டு பிறருக்கும் அளித்து, அனைத்து மக்களுக்கும் குறி சொல்லி, முக் காலத்தையும் உணர்த்தி, அவர்தம் கவலையைப் போக்கிய பண்டைய தமிழ்க் குடிகளான குறவர்களின் வாழ்வியலை, அவர்கள் பேசிய மொழியின் ஊடாகவே அனைவரும் அறியும்வண்ணம் எளிய நடையில் உரைத்ததன் மூலம் குற்றாலக் குறவஞ்சி நூல் தமிழ்த்தாயின் மணிமகுடமாகத் திகழ்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

பார்வை நூற்பட்டியல்

1. புலியூர் கேசிகன், குற்றாலக் குறவஞ்சி, சாரதா பதிப்பகம், சென்னை. (2009)

2. திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றாலநாத ஸ்வாமி கோயில் வெளியீடு, தென்காசி. (1953)

3. புன்னைவனநாத முதலியார்.பு.சி & இராமசாமிப் பிள்ளை.செ, குற்றாலக் குறவஞ்சி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி. (1950)

4. குற்றாலக் குறவஞ்சி, கலா சேத்திரம் வெளியீடு (உ.வே.சா.நூலகம்), சென்னை. (1945)

5. புலியூர் கேசிகன், தொல்காப்பியம். ஸ்ரீ செண்பகாப் பதிப்பகம், சென்னை. (2010), .

6. இன்னாசி.சு (பதி), சதுரகராதி, சந்தியா பதிப்பகம், சென்னை.(2005)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p248.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License