அற இலக்கியங்களில் கல்வி
முனைவர் து. இந்திரா
கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை,
ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி - 8.
முன்னுரை
காலமும் இலக்கியமும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதவை ஆகும். அதனாலேயே இலக்கியத்தைக் காலத்தின் கண்ணாடி என்றனர். இலக்கியம் என்பது ஒரு நுண் கலை. அவை கருத்திற்கு மட்டுமே புலனாகக் கூடிய கலை. இலக்கியம் தமிழகம் சங்க காலம் முதற் கொண்டே கல்வியின் அவசியத்தை உணர்ந்துள்ளது. தமிழக வரலாற்றில் இருண்ட காலமாகக் கருதப்பட்ட அதே சங்க மருவிய காலத்தில் தான் கல்வி என்னும் அறிவொளியின் அவசியத்தை உணர்த்த அற இலக்கியங்கள் முனைந்து செயல்பட்டன. அகப்புறச் சிந்தனைகளில் மாற்றம் காண முனைந்தாலும் மனித அக இருள் அகற்ற உதவும் கல்விச் சிந்தனை மேலோங்கி இருந்த காலம் அறநெறிக் காலமே. இக்காலத்தில் படைக்கப்பட்ட திருக்குறள் முதற் கொண்டே அற இலக்கியங்கள்தான் கல்வியின் முக்கியத்துவத்தை மனித குலம் உணரப் பெரிதும் வலியுறுத்தின. அதனடிப்படையில் நாலடியார், பழமொழி, திரிகடுகம் ஆகிய நூல்களில் கல்வி குறித்த சிந்தனைகளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கல்வி
பழந்தமிழரின் கல்வி வெறும் மொழிக் கல்வியாகவும், இலக்கியக் கல்வியாகவும் அமையவில்லை என்பதனைக் கலை அறிவியல் பற்றிய பல குறிப்புகள் அவர் படைப்பிலக்கியத்தில் அமைந்துள்ளதை கொண்டு அறியலாம்.
கல்வி வாய் மூலமாகக் கற்பிக்கப்பட்டதால் மன உறுதி வலியுறுத்தப்பட்டது. அக்காலத்தில் கற்றவர்களுக்கு மிகுந்த மதிப்பு இருந்தமையை அற இலக்கியப் பாடல்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. கல்வியினை இரு கண்களாகப் போற்றுதல் வேண்டும். அறிவுடையோர் ஆளுவோராலும் மக்களாலும் பெரிதும் போற்றப்படுவர். அறிவில் சிறந்தவர்களைச் சமுதாய மதிப்போடும் அவர்களுக்குத் தேவையான பொருள்களைக் கொடுத்தும் பெருமைப்படுத்தும். கல்லாதவர்களுக்கு சமூக மதிப்பு வழங்கப்படவில்லை. நாலடியார், பழமொழி, திரிகடுகம் ஆகிய நூல்களில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசுகின்றன.
அறம்
மனிதனுடைய நடத்தையின் நன்மை, தீமைகளை ஆய்வதே அறம். அறம் என்பது சமுதாயத்தில் வாழும் மனிதர்களின் நடத்தையைப் பற்றி ஆராயும் கலை என வரையறுத்துக் கூறலாம்.
அழியாத செல்வம்
கேடில் விழுச் செல்வம் கல்வியாகும். வைத்த இடத்தில் இருந்து பிறரால் கொள்ளப்படாதது கல்வியாகும். கல்வி அழியாத செல்வம் ஆகும். கல்வியைத் தவிர மற்ற அனைத்துச் செல்வங்களும் அழியக் கூடியது. ஒருவர் தன் மக்கட்குத் தேடி வைக்கத் தக்க அழியாத செல்வம் கலவியேயாகும். “ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி, ஞானமே முக்கியம். என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக் கொள். நீ அதை மேன்மைப்படுத்து அது உன்னை மேன்மைப்படுத்தும். நீ அதைத் தழுவிக் கொண்டால் அது உன்னை கனம் பண்ணும்” (1) என விவிலியமும் ஞான மார்க்கத்தைப் பற்றி போதிக்கின்றது. அழியாத செல்வம் கல்வி என்பதை நாலடியார் கூறுகிறது.
சிறந்த அழகு
கல்வியானது ஒரு மனிதனுக்கு சமூகத்தில் அவன் வாழும் காலத்திலும் அதற்கு பின்பு அவனுக்கு புகழ் சேர்க்கக் கூடியதாக விளங்குகிறது. ஒரு மனிதனுக்கு அழகு என்பது ஆண்களினுடைய மயிர் முடியின் அழகும். மடிக்கப்பட்ட ஆடையினது கரையினழகும் பெண்கள் பூசிக் கொள்ளும் மஞ்சளின் அழகும் உண்மையான அழகு தருவன அல்ல. மன நன்மையும் நடுவு நிலைமையுமாகிய குணங்களோடுங் கூடிய கல்வியின் அழகே சிறந்த அழகாகும் என்பதை நாலடியார்
“குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு” (2)
புற அழகுகள் எலலாம் அழகு அல்ல. மக்கட்குக் கல்வி அழகே உயர்ந்த அழகாகும்.
அறியாமையைத் தீர்க்கும் மருந்து
கல்வி நல்வாழ்க்கையாகிய இம்மைப் பயனை விளைவிக்கும் பிறர்க்குக் கற்பித்தலால் குறைவுபடுதல் இல்லை. தம்மை அறிவாலும், புகழாலும் விளங்கச் செய்யும் கல்வி ஒரு போதும் கெடுதல் இல்லை. ஆதலால் கல்வி அறியாமை என்னும் நோயினைத் தீர்க்கும் சிறந்த மருந்தாகும் என்பதனை நாலடியார்.
“இம்மைப்பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றாய்
எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து” (3)
என மயக்கம் தீர்க்கும் மருந்தாகக் கல்வி கூறப்படுகிறது.
காலத்தால் அழியாத கல்விச் செல்வம்
சேர்த்து வைத்த கல்வி அறிவை யாரும் திருடிக் கொண்டு போய்விட முடியாது. பிறர்க்கு வழங்குவதாலும் கல்விச் செல்வம் குறையாது வளரவே செய்யும். தனக்குப் பின் தன் சந்ததிக்கு மிச்சம் என ஒருவன் விட்டுச் செல்வது கல்வி அதனால் நாலடியார்,
“எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சை மற்றல்ல பிற” (4)
இளமையில் கற்க
இளமைப் பருவம் முதற்கொண்டே கற்றல் வேண்டும். இளமையில் கற்று முதுமையில் அதன் பயனைப் பெறவேண்டும்.
பழமொழி இலக்கியத்தில் கல்வியைப் பயில்வதற்கும் ஏற்ற இளமைக் காலத்தை வரையறுத்த போக்குக் காணப்படுகிறது. இக்காலக்கட்டமே எவ்வித புறத்தாக்கத்திற்கும் ஆட்படாத பருவம். பொறுப்புகளின் சுமை ஏறாத இளமைக்காலம் கழிந்தால் எந்தச் செயலையும் நிறைவேற்றவும் நடைமுறைப்படுத்தவும் இயலாது. இக்கருத்தை வலியுறுத்தவே.
“ஆற்றும் இளமைக் கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்
சுரம் போக்கி உலகு கொண்டார் இல்லையே யில்லை
மரம் போக்கிக் கூலி கொண்டார்” (5)
என்ற பழமொழியினைத் தேர்ந்தெடுத்துள்ளார். படகில் பயணம் மேற்கொள்பவர் பயணம் செய்வதற்குப் படகின் கூலியை முன்னதாகக் கொடுத்து ஆற்றைக் கடப்பர். அது போன்று எதிர் காலத்தைச் செம்மையாகக் கடப்பதற்கு இளம் வயதில் கல்வியைக் கற்றுத் தேர்வது வாழ்க்கைப் பயணத்தைக் கடக்க ஏதுவாகும் என்னும் கருத்து வலியுறுத்தப்படுகிறது.
கல்விக்கு எல்லை இல்லை
படிக்குந் தோறும் அறியாதவனாக நினைத்து ஒவ்வொருவனும் கற்க வேண்டும். ஒவ்வொரு நாளும் உலகம் பல அதிசயங்களை நிகழ்த்துகிறது. விரைந்து செல்லும் உலகிற்கு ஏற்ப ஒருவன் கற்று உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
“உற்றொன்று சிந்தித்து உழன்று ஒன்று அறியுமேங்
கற்றறொறுந்தான் கல்லாதவாறு” (6)
என்னும் பழமொழி பேசுகிறது. கல்விக் கற்றுச் சிறந்த அறிஞனாகத் திகழ்பவர்கள் எக்காலத்திலும் மனத்தளர்வின்றித் தாம் இதற்கு முன்பு கற்க முடியாத காலத்தைக் கழித்தற்கு வருந்தி, தினம் தினம் உதயமாகும் புதிய மெய்மைகளை அறிந்து கொள்ள எதிர்நோக்கி இருத்தலும் வேண்டும் என்னும் பொருள்பட அமைந்துள்ளது.
கற்றவர் கடமை
சொற்களை ஆராய்ந்து அதில் சிறந் நுட்பமான பொருளை மேற்கொள்ளல் பிறர் விரும்பினும் பயனற்றவைகளைச் சொல்லாதிருத்தல் உறுதி பயப்பனவற்றைக் கீழோரிடம் சொல்லாமல் மேலோரிடம் சொல்லுதல் ஆகிய மூன்றும் கற்றாரின் கடமை என்பதனை திரிகடுகம்,
“நுண்மொழி நோக்கிப் பொருள் கொளலும் நூற்கேலா
வெண்மொழி வேண்டினும் சொல்லாமை நன்மொழியைச் சிற்றினம்
அல்லார் கண் சொல்லும் இம்மூன்றும்
கற்றறிந்தார் பூண்ட கடன்” (7)
இங்ஙனம் கற்றறிந்தாரின் கடமையினைக் கூறிய கற்றறிந்த மேதைக்கு தான் உலகில் முதல் இடம் கிடைக்கும் எனவும் உறுதியாய் கூறுகின்றது.
நல் உலகம் அடையாதவர்
கற்றாரைக் கைவிட்டு வாழ்ந்தால் நல்லுலகம் சேரமுடியாது என எச்சரிக்கை செய்கிறது திரிகடுகம். கற்க வேண்டியவற்றைக் கற்று அறிவுடைய சான்றோரை விட்டு நீங்கி வாழ்பவனும், தாம் விரும்பியதை செய்யும் அறிவற்றன், தீமை செய்யும் பேச்சுக்காரன் ஆகிய மூவரும் நல் உலகங்களை சேராதவர்கள்.
முடிவுரை
தமிழகத்தில சங்க காலம் முதற்கொண்டு கல்வி பற்றிய சிந்தனைகள் தமிழ் இலக்கியம் இலக்கணங்களில் இடம் பெற்று வருகின்றன. இருப்பினும் சங்க மருவிய காலத்தில் தமிழகத்தில் கல்வி பற்றியச் சிந்தனைகள் மேலோங்கிக் காணப்பட்டன. கல்வி என்னும் கருவியே மனிதனின் அக இருளை அகற்றி, பேரொளியை ஏற்றும் என்னும் உண்மையை உணர்த்த அறஇலக்கியங்கள் முயன்றன என்பதை அறிய முடிகிறது.
அடிக்குறிப்புகள்
1. விவிலியம் (நீதிமொழிள்,4:5,7,8)
2. தி.சு. பாலசுந்தரம் பிள்ளை, நாலடியார், பா. எண்: 131
3. மேலது, பா. எண். 132
4. மேலது, பா. எண். 134
5. மு. இராசமாணிக்கம் பிள்ளை, பழமொழி நானூறு, பா. எண். 2
6. மேலது, பா. எண்.3
7. புதினெண் கீழ்கணக்கு நூல்கள் திரிகடுகம், பா. எண். 32.
பார்வை நூல்கள்
1. அண்ணாமலை. மு., தமிழ் நாட்டில் கல்வி அன்றும் இன்றும், சரசு பதிப்பகம், 44, இராமலிங்கேஸ்வர் கோயில் தெரு, வன்னியர் தேனாம் பேட்டை, சென்னை - 600 018. (முதற்பதிப்பு: டிசம்பர், 1998)
2. ஆசிரியர் குமு., பதினெண்கீழ்க்கணக்கு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பிரைவேட் லிமிடெட், சென்னை- 600198, (இரண்டாம் பதிப்பு, 1981)
3. இராசமாணிக்கம் பிள்ளை. ம., பழமொழி நானூறு, சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை - 1. (இரண்டாம் பதிப்பு - 1954)
4. பரிசுத்த வேதாகமம், இந்திய வேதாகமச் சங்கம், 206 மகாத்மா காந்தி சாலை, பெங்களூர் - 560001. (இரண்டாம் பதிப்பு - 1930)
5. பாலசுந்தரம் பிள்ளை, தி.சு., நாலடியார், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 1. (முதற் பதிப்பு - 1945)
6. மயிலை முத்து., திருக்குறள், மாணவர் மன்றம், சென்னை. (இரண்டாம் பதிப்பு - 1968)
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.