சங்கத் துறைமுகம் - முசிறி
மு. கயல்விழி
உதவிப்பேராசிரியர், தமிழ்த் துறை,
பச்சையப்பன் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரம்.
முன்னுரை
வணிகம் என்பது பொருளியல் சார்ந்த நடவடிக்கையாகும். அது இறக்குமதி, ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டது. மனிதன் தோன்றிய காலத்திலே வணிக நடவடிக்கைகள் தொடங்கி விட்டது. தன்னிடம் உபரியாக இருந்த பொருட்களைப் பிறருக்கு ஈந்தும், தனக்குத் தேவையானவற்றைப் பிறரிடமிருந்து பெற்றும் தன்னையறியாமல் பொருளாதார உத்தியை அவன் கையாண்டான். இதற்காக ஆரம்பத்தில் பண்டமாற்று முறை (Barter System) கையாளப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அதில் பலவிதக் குறைகள் காணப்பட்டதால் அம்முறை வழக்கொழிந்தது. அதன் பின் நாணய முறை (Coin System) வழக்கிற்கு வந்தது. எந்த நாட்டில் வணிக நடவடிக்கைகள் சிறக்கின்றதோ அந்நாடே செல்வ வளத்தில் செழிக்கும். இதற்குச் சான்றாக மேலை நாடுகளைச் சொல்லலாம். உள்நாட்டு வணிகம் சிறந்தது என்றாலும், வெளிநாட்டு வணிகத்தைப் போன்று அது அத்துணை லாபகரமானது அன்று. இதனை நன்கு உணர்ந்த அறிவார்ந்த நம் முன்னோர்கள் அயல் நாட்டு வணிகத்திற்குக் குறிப்பாகக் கடல் வணிகத்திற்கு அதிமுக்கியத்துவம் நல்கி வணிக வளம் செழிக்கப் பாடுபட்டனர்.
ஒரு நாட்டில் கடல் வணிகம் அதன் துறைமுகங்களைப் பொருத்தே அமையும். சாதகமான காற்று, இயற்கையானத் துறைமுகங்கள், பாதுகாப்பான வணிகநிலை, ஆதரவான அரசுகள், தேவையான கச்சாப்பொருள்கள், நெகிழ்வான வரிவிதிப்பு முறை போன்றவை வணிகத்திற்குச் சாதகமான அம்சங்களாகும். அவற்றில் மிகவும் இன்றியமையாதது இயற்கையான துறைமுகங்களேயாகும். தமிழ்நாட்டில் இவ்வாறான இயற்கை துறைமுகங்கள் மிகவும் குறைவு. இருந்த போதிலும் பழந்தமிழ் சேரநாட்டில் உள்ள துறைமுகங்கள் தம் வணிகத்தினால் சிறப்பிடம் பெற்றன. முசிறி, தொண்டி போன்ற சிறந்த துறைமுகங்களின் புகழ் உலகம் முழுவதும் பரவிக் கிடந்தது. சேர நாட்டில் கிடைத்த வாசனைப் பொருட்களான மிளகு (Pepper) போன்றவையே அவர்களின் உலகளாவிய வணிகத்திற்குத் தூண்டுகோலாய் அமைந்தது. சேரநாட்டு துறைமுகங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது முசிறித் துறைமுகமாகும். இதைச் சங்க இலக்கியங்கள் மிகவும் பாராட்டுகின்றன. அவற்றை இங்கு நன்கு ஆராய்வோம்.
முசிறித் துறைமுகத்தின் அமைவிடம்
முசிறித் துறைமுகம் மேலைக் கடல் என்றழைக்கப்படும் அரபிக்கடலின் ஓரத்தில் அமைந்துள்ளது. இதைக் கேரளக் கடற்கரை, மலபார் கடற்கரை என்றெல்லாம் அழைப்பர். முசிறித் துறைமுகம் இயற்கையாய் அமைந்த துறைமுகமாகும். இது இன்றைய கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் கொடுங்கல்லூர் (Cranganoor) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற கொச்சி துறைமுகத்துக்கு மிக அருகில் இது அமைந்துள்ளது. இது பெரியாறு அல்லது பேரியாறு என்று அழைக்கப்படும் சுள்ளி ஆற்றங்கரையின் கழிமுகப் பகுதியின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. சங்கக் காலத்தில் இதனருகில் சேரர்களின் தலைநகரான வஞ்சி மாநகர் அமைந்திருந்தது. தொண்டி, பூம்புகார் போன்ற பிற பட்டிணங்களுடன் இந்நகர் நெருக்கமான வணிகத்தொடர்பு கொண்டிருந்தது.
முசிறித் துறைமுகத்தின் பழமை
முசிறித் துறைமுகம் இந்தியாவின் பழமையான துறைமுகமாகும். இதன் புகழ் இந்தியா மட்டுமல்லாமல் மேல்நாடுகளிலும் பரவியிருந்தது. பழம் சிறப்புமிக்க இராமாயணத்தில் வால்மீகி இதை “மிரிசிபதனம்” என்ற பெயரில் அழைக்கின்றார். மௌரியர் காலத்தின் சாணக்கியர் இதைச் “சௌர்ணெயம்” என்று அழைத்தார். யவனர்கள் இதை “முசிறிஸ்” என்று அழைத்தனர். முதன் முதலாக இந்தியாவிற்குக் கடல்வழிக் கண்டுபிடித்த ஹிப்பாலாஸ் (Hippalus) என்ற மாலுமி கி.பி 40 இல் அலெக்சாண்டிரியா நகரத்திலிருந்து செங்கடல் வழியாக முசிறித் துறைமுகத்தைத்தான் முதல் முதலாய் அடைந்தான். எகிப்து நாட்டைச் சார்ந்த தாலமி என்ற பயணி இத்துறைமுகத்தைக் கண்டு “முசிறிஸ்” என்று பெயரிட்டுச் செல்கின்றார். பெரிப்புளுஸ் என்ற கிரேக்க நாட்டு ஆய்வாளர் தன் “செங்கடல் செலவு” (Periplus of the Erythrean Sea) என்ற நூலில் இந்நகரை “முசிறிஸ்” என்று அழைத்து இதைக் “கேரளபுத்திராஸ்” (Cerobothra:) ஆண்டதாகவும் கூறுகின்றார் (Neelakanta Sastri.P:57). இங்கு அரேபியக், கிரேக்க வணிகக் கப்பல்கள் ஏராளமாகக் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். பிளினி என்ற பயணி தன் இயற்கை வரலாறு (Naturalis Historia) என்ற புவிநூலில் இத்துறைமுகத்தைக் குறிப்பிடுவதுடன், இங்கு அதிகப்படியான கடற்கொள்ளையர்கள் தொல்லை இருப்பதாகவும் எழுதியுள்ளார் (Neelakanta Sastri.P:53). முசிறித் துறைமுகத்தின் மிளகு ஏற்றுமதியை இவ்வெளிநாட்டுப் பயணிகள் சாலவும் பாராட்டியுள்ளனர்.
முசிறித் துறைமுகத்தின் சிறப்பு
முசிறித் துறைமுகம் கி.பி.முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டில் மிகப்பெரிய நகராய்த் திகழ்ந்தது. அது நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்டிருந்தது. இதன் தெருக்கள் கிழக்கு மேற்காயும், வடக்கு தெற்காயும் அமைக்கப்பட்டிருந்தன. இத்தெருக்களில் வீடுகள் வரிசையாய்க் காணப்பட்டன. முசிறியின் கடற்கரையெங்கும் பழந்தமிழ்க் குடிகளான பரதவரின் குடிசைகள் செறிந்து காணப்பட்டன. முசிறியின் ஒரு பகுதி “பந்தர்” என்றும் மற்றொரு பகுதி “கொடுமணம்” என்றும் அழைக்கப்பட்டது. பந்தரில் மிகப் பெரிய முத்துச்சந்தை காணப்பட்டது. கொடுமணத்தில் பொன் அணிகள் கொண்ட சந்தையும் காணப்பட்டது.
“கொடுமணம் பட்ட வினைமா ணருங்கலம்
பந்தர்ப் பெயரிய பலர்புகழ் முத்தம்”
(பதிற்-74:5-6)
“கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலோடு
பந்தர்ப் பெயரிய பேர் இசை மூதூர்”
(பதிற்-67:1-2)
பந்தர் என்பது அரபு மொழிச் சொல்லாகும். இதன் பொருள் கடைவீதி என்பதாகும். எனவே இங்கு அரபுநாட்டு வணிகர்கள் வணிகம் புரிந்தனர் என்பதைப் பெறலாம். இத்துறைமுகத்தில் பவழம், கண்ணாடி, செம்பு, தகரம், ஈயம், லினன், மது வகைகள் போன்ற பொருட்கள் மேல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. மிளகு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது.
“இன் இசை புணரி இரங்கும் பௌவத்து
நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர்
கமழுந் தாழைக் கானல்இம் பெருந்துறை”
(பதிற்-55:3-5)
யவனர்கள் கப்பல்களில் ஏராளமான பொன்னைக் கொண்டுவந்து அளித்து விட்டு மிளகைப் பெற்றுச்சென்றனர். இச்செய்தியைத் தாயங்கண்ணார் என்ற புலவர் பெருமான்,
“சுள்ளி அம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி ஆர்ப்புஎழ வளைஇ”
(அகம்:149:8-11)
என்று புகழ்வதைக் காணலாம். முசிறித் துறைமுகத்தின் வணிகச் சிறப்பை பிற சங்கப் பாடல்களும் உறுதிப்படுத்துகின்றன.
“முதுநீர் முன்துறை முசிறி முற்றி”
(அகம்:57:15)
“முழங்குகடல் முழவின் முசிறி அன்ன”
(புறம்:343:10)
ஆரம்பத்தில் மிகவும் ஆழமுடன் வசதியாகக் காணப்பட்ட முசிறித் துறைமுகம் காலப்போக்கில் பெரியாறு அடித்துக் கொண்டு வந்து சேர்ந்த மணல் பெருக்கினால் ஆழம் குன்றியது. எனவே வணிகக் கப்பல்கள் இத்துறைமுகத்தை நெருங்க இயலாததாயிற்று. எனவே கப்பல்களைத் தொலைவில் நிறுத்திவிட்டுப் படகுகள் மூலம் பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்தனர். இச்செய்தியை நக்கீரர் பெருமான்,
“மனை குவைஇய கறி மூடையால்
கலி சும்மைய கரை கலக்குறுந்து
கலம் தந்த பொற் பரிசம்
கழி தோணியான் கரை சேர்க்குந்து
... ... ... ... ... ... ... ... ... ... ...
முழங்குகடல் முழவின் முசிறி அன்ன”
(புறம்:343:3-10)
என்ற பாடலில் புலப்படுத்துகின்றார். முசிறித் துறைமுகத்தில் யவனரின் வணிகம் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது. அவர்கள் தம் வணிகத்துக்குப் பேராதரவு நல்கிய ரோமாபுரிப் பேரரசர் அகஸ்டஸ் சீசருக்கு (Augustus Ceasar.27BC-14AD) இதன் துறைமுகத்தில் கோயில் (Templuem Auguste) ஒன்றைக் கட்டி அவரைப் பெருமைப்படுத்தினர் (Sir Martimer Wheeler.P:121). ஆனால் சேரநாட்டின் மீது படையெடுத்த பாண்டிய மன்னன் தலையானங்கானது செறுவென்ற நெடுஞ்செழியன், சேரன் மன்னன் குட்டுவன் சேரலைத் தோற்கடித்து இத்துறைமுகத்தைச் சூறையாடியதுடன், அங்கிருந்த யவனர் கோயிலையும் பாழ்படுத்தி, அதன் சிலையையும் கவர்ந்து சென்றான். இச்செய்தியை,
“வளங்கெழு முசிறி ஆர்ப்புஎழ வளைஇ
அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்”
(அகம்:149:11-13)
மற்றும்,
“கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
முதுநீர் முன்துறை முசிறி முற்றி
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்”
(அகம்:57:14-16)
போன்ற பாடல்கள் புலப்படுத்தும். கடல் வளம் செழித்த முசிறியின் மக்கள் பிற்காலத்திலும் “முசிறியார்” என்றும் சிறப்புடன் அழைக்கப் பட்டனர். தற்போது கிடைத்த தொல்லியல் சான்றுகள் மூலம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டளவில் இங்குச் சமணச் சமயம் செழித்திருந்ததை உணர்த்துவதுடன் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் உணர்த்திய சமணம் சார்ந்த செய்திகளை இது உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது (Tamil Brahmi scripts found at Pattinam in Kerala, The Hindu, Chennai:14.03.2011).
முசிறி பாபிரஸ் ஒப்பந்தம்
உலகத்தில் ஏற்பட்ட வணிக ஒப்பந்தங்களில் மிகவும் பழமை வாய்ந்தது முசிறி பாபிரஸ் ஒப்பந்தமாகும். இது பாபிரஸ் தாளில் எழுதப் பட்டுள்ளது. இது முசிறியில் உள்ள தமிழ் வணிகர்களுக்கும், அலேக்சாண்டிரியாவில் உள்ள கிரேக்க வணிகர்களுக்குமிடையே ஏற்பட்டதாகும். இது இன்றைய எகிப்து கெய்ரோவில் உள்ள அருங்காட்சியகத்தில் கையெழுத்து பிரதியாய்க் கிடைக்கப்பெற்று ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கும், கிரேக்கர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடன் சார்ந்த வணிக ஒப்பந்தமாகும். இதன்காலம் கி.பி. 1 ஆம் நூற்றாண்டு என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இவ்வுடன்படிக்கையின் மேற்புறமும் கீழ்ப்புறமும் காணக் கிடைக்கவில்லை. இவ்வொப்பந்தம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. இது முசிறித் துறைமுகத்தில் பொருள் ஏற்றப்பட்டு எகிப்தின் நைல் நதிக்கரையில் உள்ள அலெக்சாண்டிரியா நகரை அடைவது சம்பந்தமான உடன்படிக்கையாகும். பின்பு அங்கிருந்து பொருட்கள் ரோமாபுரிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதில் எகிப்து மற்றும் முசிறி வணிகர்களுக்கிடையே கடன்மாற்று விவரங்கள் குறிப்பிடப் பட்டுள்ளது. எலுமிச்சை, தந்தம், நூலாடை போன்ற பொருட்களை 25 சதவிகிதச் சுங்க வரியுடன் முசிறியினின்று விற்கப்பட்டுள்ளதாகவும் இதில் குறிப்பிடப்பட்டடுள்ளது. மேலும் கீழும் இதன் பகுதி கிடைக்காததால் இதில் கைச்சாத்திட்ட தமிழ், கிரேக்க வணிகர்கள் யார் என்று அறியக்கூடவில்லை. இதன் முன்பக்கத்தில் உடன்படிக்கையுடன் ஒப்புதலும், பின்பக்கத்தில் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களின் எடை அளவும் தரப்பட்டுள்ளது. இது கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளதால் இதில் ஈடுபட்ட தமிழ் வணிகர்களுக்குக் கிரேக்கமொழி நன்றாகத் தெரிந்திருப்பது புலனாகின்றது. இவ்வொப்பந்தத்தில் கப்பல்கள் மூலமாகவும், படகுகள் மூலமாகவும், ஒட்டகங்கள் மூலமாகவும் பொருட்கள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏசுக் கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்க நாட்டுடனான வணிகம் முசிறியில் மிகச்சிறப்பாக நடைபெற்றதை இவ்வொப்பந்தம் உறுதி செய்கின்றது.
முசிறியின் அழிவு
மிகவும் சிறப்புடன் விளங்கிய முசிறித் துறைமுகம் காலப் போக்கில் பெயர் மாற்றங்கள் பெற்றதுடன் தன் செல்வாக்கையும் இழந்தது. நாளாவட்டத்தில் இது “மாக்கோதை”, “மாக்கோதைபட்டிணம்” என்றெல்லாம் அழைக்கப்பட்டது. பெரியாற்றின் ஓயாத வெள்ளப் பெருக்கால் இத்துறைமுகம் பேரழிவைச் சந்தித்தது. தொடர்ந்து சுள்ளியாறு மணலை அடித்துக்கொண்டுவந்து அதன் கழிமுகத்தில் சேர்த்து இத்துறைமுகத்தைத் தூர்ந்துபோகச் செய்தது. இதனால் அயல்நாட்டு வணிகம் குன்றியது. இறுதியாய்க் கி.பி. 1314 இல் ஏற்பட்ட பெருமழையாலும், வெள்ளப்பெருக்காலும் இது முற்றிலும் அழிந்து மண்மேடாய்ப் போனது. இதன் அருகில் “பட்டணம்” என்ற பெயரில் ஒரு சிறு பகுதி மட்டும் செயல்பட்டு வந்து. சீர்மிகு இந்நகரின் பெருமையை வெளிக்கொணரப் பல தொல்லியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் அவற்றில் பெரிய அளவு வெற்றி கிட்டவில்லை. இருந்த போதிலும் 2006-2007 இல் கேரள அரசின் தொல்லியல் துறையினர் கொச்சிக்கு அருகில் உள்ள “பட்டிணம்” என்ற பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்டு பல பழம்பொருட்களைக் கண்டெடுத்தனர். இப்பகுதியே பண்டைய முசிறி என்று அவர்கள் உலகுக்கு வெளிப்படுத்தினர் (Excavation highlights in Malabar Maritime heritage, The Hindu, Chennai: 01.04.2007). அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் முடிவுகள் முசிறித் துறைமுகம் குறித்துச் சங்க இலக்கிய உரைக்கும் சான்றுகளை உறுதிப் படுத்துகின்றன.
முடிவுரை
இந்தியாவில் தோன்றிய பழமையான அரசு குலத்தவரில் சேரர்கள் முதன்மையானவர்கள். அவர்களின் சிறப்பிற்கு அவர்கள் மேற்கொண்ட உலகளாவிய கடல் வணிகமே முக்கிய காரணம். வாசனை பொருட்களான மிளகு, பட்டை, இலவங்கம், ஏலம், கிராம்பு, முந்திரி போன்றவற்றின் ஏற்றுமதியால் அவர்களின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. கிரேக்கம், ரோமாபுரி, எகிப்து, சீனா போன்ற அயல் நாட்டு வணிகர்கள் முசிறித் துறைமுகத்தில் ஆர்வத்துடன் வணிகம் புரிந்தனர். அவர்கள் பொன்னை கொட்டிக் கொடுத்துவிட்டு மிளகை அள்ளிச்சென்றனர். மேலும் இதை ஒட்டிய கொடு மணத்திலும், பந்தரிலும் அவர்களின் வணிகம் செழித்தது. இங்கு செயல்பட்ட முத்துத் தொழிலகமும், பொன் ஆபரணத் தொழிலகமும் மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்றன. பண்டைய தமிழர்களின் சிறப்பான தொழில் வளத்திற்கு இவையே சாலச்சிறந்த சான்று. தமிழகத்தில் முதன்முதலாக தொழிற்கூடங்களை அமைத்து செயல்படுத்தியவர்கள் என்ற பெருமையை இவற்றால் சேர மன்னர்கள் பெற்றனர். முசிறியில் ரோமானிய வணிகர்கள் தம் அரசனுக்கு கோயில் கட்டி வழிபட்டதன் மூலம் எந்த அளவிற்கு அவர்கள் வணிகம் இங்கு வேரூன்றிச் செழித்தது என்பதை அறியலாம். சேர மன்னர்களின் வாழ்விற்கும், வளத்திற்கும், செழிப்பிற்கும், சிறப்புக்கும், பெருமைக்கும் இம்முசிறித் துறைமுகமே முக்கிய காரணமாய் அமைந்தது. ஆனால் விதிவசத்தால் இத்துறைமுகத்தை அவர்கள் முறையாகப் பராமரிக்காததால் அது காலப்போக்கில் அழிவினைச் சந்தித்தது. அது யாது என்று அறியக்கூடாத அளவிற்கு மக்கள் மனதினின்று மறைந்து போனது பேரிழப்பாகும். பண்டைய தமிழரின் சிறந்த பொருளியல் அறிவிற்கும், வணிகத் திறனுக்கும், தொழில் சிறப்பிற்கும் சாலச்சிறந்த சான்றாய் சேரரின் முசிறித் துறைமுகம் விளங்கியது என்பதில் ஐயமில்லை.
பார்வை நூற்பட்டியல்
1. பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007),அகனாநூறு, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்.
2. பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007), புறநானூறு, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட் .
3. பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007),பதிற்றுப் பத்து, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்.
4. எளங்குளம் குஞ்ஞன்பிள்ளை, (1970), பண்டைய கேரளம், சென்னை: தமிழ் புத்தகாலயம்.
5. துரைசாமிப்பிள்ளை.ஒளவை,(2002),சேர மன்னர் வரலாறு, சென்னை: வள்ளுவர் பண்ணை.
6. தமிழ் நாட்டு வரலாறு-சங்க காலம், (1983), சென்னை: தமிழ் நாட்டு பாடநூல் நிறுவனம்.
7. பிள்ளை.கே.கே. (2013), தமிழக வரலாறு மக்களும் பண்பாடு, சென்னை: உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்.
8. Logan William, (1887), Malabar Manual, Thiruvananthapuram: Kerala Gazetteers Department.
9. Neelakanta Sastri.K.A. (2001), Foreign Notices of South India, Chennai: University of Madras.
10. Sir Martimer Wheeler. (1954), Rome Beyond Imperial Frontiers, London: G.Bell & Sons Ltd.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.