களப்பிரா் காலத்தில் எழுந்த ஐந்திணை எழுபது மூவாதியாரால் பாடப்பட்டது. குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற வரிசை முறையில் கட்டமைக்கப்பட்ட இந்த நூலில் திணையிலக்கியத்திற்கு உரிய முதல், கரு, உரிப்பொருட்களின் பொருத்தப்பாடுகள் சங்ககாலச் சமூகஅமைப்போடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முல்லைத் திணையில் இரண்டு பாடல்களும் நெய்தலில் இரண்டு பாடல்களும் அழிந்துபட்ட நிலையில் எஞ்சிய அறுபத்து ஆறு பாடல்களிலும், திணைசார் வாழ்விடங்களும் உயிரினப்பதிவுகளும் இயற்கையோடு இணைந்த காட்சிப்படுத்தலில் இடம் பெற்றுள்ளன. இந்நூல் பல்லுயிரினத்தின் பதிவுகளை வெளிப்படுத்தும் நோக்கோடு பாடப்பட்டுள்ளமையை இந்த ஆய்வுரை இனங்காணுகின்றது.
பல்லுயிரினப் பெருக்கமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 11 இடத்தைப் பெற்றுள்ளது என்பர். இந்தியாவின் யூனியன் பிரதேசங்களான அந்தமான் நிக்கோபர் தீவுகள், இலட்சத்தீவுகள் உயிரினங்களின் மையப்பகுதியாகும். பல்லுயிரினத்தின் உருவாக்கமும் வளர்ச்சியும் காடுகள், மலைகள், கடற்கரைகள், ஏரிகள், குளங்கள் என்னும் வாழிடங்களில்தான். திணயிலக்கியம் பிரித்துப் பேசும் நிலவியல் கூறுகளும் அறிஞர்கள் கூறும் பல்லுயிரினத்தின் வாழிடமும் ஒன்றாகும். “உயிரின பல்வகைமை என்பது உலகில் நிலம் மற்றும் நீர்சூழ்நிலை மண்டலங்களில் வாழ்கின்ற பல்வேறு தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகளைக் குறிப்பதாகும்” (1) என்ற கூற்று இதனை உறுதி செய்கின்றது. ஐந்திணை எழுபது அகஇலக்கியம் சுட்டியுள்ள கருப்பொருள் கோட்பாட்டு விதிகளின் படி அந்தந்த திணைசார் உயிரினங்களின் செயல்பாடுகளைப் பதிவு செய்துள்ளதமை, அக்காலத்தின் உயிரினப் பெருக்கத்தின் வெளிப்படையாகும். “மலை, சிறுபுதர், காடு, புல்வெளி, பறவை, மீனினம், கடல், விலங்கு, ஓடை, பூச்சி - இவற்றில் எதுவொன்றை தொந்தரவு செய்தாலும் இன்னொன்று சரிந்துவிடும்படி பிணைக்கப்பட்டுள்ள பல்லுயிரிய வலைப் பின்னலை நாம் புரிந்துகொள்ள வேண்டிய காலம் இது. தவறினால், ஒரு கணப்பொழுது கூட சகித்துக் கொள்ள முடியாத வாழ்க்கையை
அது நமக்குப் பரிசாகத் தரும்” (2) என்ற சூழல் ஆர்வலர்களின் கருத்துகளை முன்வைத்து ஐந்திணை எழுபதின் பாடு பொருண்மையை மூவாதியார் கட்டமைத்துள்ளார் என்பது ஆய்வின் முக்கிய கருத்தாக்கமாகும்.
மலையும் மலை சார்ந்த இடமும் என்ற நிலவியல் பின்புலம் கொண்ட குறிஞ்சியில் வாழும் விலங்கினங்களின் பதிவுகளை மூவாதியார் தேர்ந்த உயிரியல் வல்லுநர் போல அதன் செய்கைகளோடு காட்சிப்படுத்தியுள்ளார்.
“மன்றப் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டு, உவந்து, மந்தி முலை வருட, கன்று அமர்ந்து,
ஆமா சுரக்கும் அணி மலை நாடனை
யாமாப் பிரிவது இலம்”
(ஐந்திணை எழுபது,குறிஞ்சி.4)
பலா மரங்கள் சூழ்ந்த மலைநாடு மந்திகளின் வாழ்விடமாகவும், மலையடிவாரத்தின் புல்வெளிகள், பசுக்களின் மேய்ச்சல் பகுதிகளாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உயிரினங்களின் உணவுக்கான சார்புநிலை மிக நுட்பமாக உரைக்கப்பட்டுள்ளது. குரங்கு, உணவிற்காக பசுவினைச் சார்நது பால் அருந்தியமை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. “சூழலியலில் (Ecology) ஒவ்வொரு உயிரின வகையும் மற்றொன்றுடன் பின்னிப் பிணைந்துள்ளன. எனவே, ஓர் உயிரினம் அழிக்கப்பட்டால், அதன் விளைவு சங்கிலித் தொடராக மற்றொன்றைத் தாக்கும். நீலகிரியில் உள்ள இருவாச்சி பறவை (Hornbill) அழிந்தால், அத்துடன் தொடர்புள்ள 10 வகை மரங்களும் அழிந்துவிடும். இதற்குக் காரணம் இருவாச்சி உட்கொண்டு வெளியேற்றும் தாவர விதைகளே உயிர்ப்புத்தன்மை மிக்கதாக உள்ளன. இப்படித்தான் காட்டில் அந்த மரங்கள் செழித்துப் பெருகுகின்றன” (2) என்று இன்றைய நிலைப்பாட்டுடன் அறிஞர் கூறியுள்ள கருத்தாக்கமும் ஒவ்வொரு உயிரினமும் மற்றொரு உயிரினத்துடன் உணவுக்கான சங்கிலித்தொடர்பு கொண்டிருத்தலையும் இலக்கியம் பேசுகின்றது.
“கேழல் உழுத கரி புனக் கொல்லையுள்,
வாழை முது காய் கடுவன் புதைத்து அயரும்
தாழ் அருவி நாடன் தெளி கொடுத்தான், என் தோழி
நேர்வளை நெஞ்சு ஊன்று கோல்”
(ஐந்திணை எழுபது,குறிஞ்சி.11)
பன்றியின் உணவுக்காக தினைப்புன அழிவு, ஆண்குரங்கு கைப்பற்றிய வாழைக்குலை போன்ற மலைநாட்டு விளைபொருட்களும் அங்கு வாழும் உயிரினங்களின் உணவு ஆதாரமும் சுட்டப்பட்டுள்ளது.
“வார் குரல் ஏனல் வளை வாய்க் கிளி கவரும்”
(ஐந்திணை எழுபது, குறிஞ்சி 13)
“பெருங் கை இருங் களிறு ஐவனம் மாந்தி,
கருங் கால் மராம் பொழில் பாசடைத் துஞ்சும்,
சுரும்பு இமிர் சோலை, மலை நாடன் கேண்மை
பொருந்தினார்க்கு ஏமாப்பு உடைத்து”
(ஐந்திணை எழுபது, குறிஞ்சி.12)
கிளிகளின் உணவாக தினையும், யானைகளின் உணவாக மலைநெல்லும் கூறப்பட்டுள்ளது. பூக்களை நாடும் வண்டுகளின் இணைவு இயல்பாகப் பேசப்பட்டுள்ளது.இவ்வாறு குறிஞ்சிக்கான பல்லுயிரினப் பெருக்கத்தினை அதனதன் சூழலியல் நுண்வுணர்வோடு மூவாதியார் பதிவு செய்துள்ளார்.
நெய்தல் நிலத்தில் கடற்கரையில் வாழும் உயிரினமும், கடற்கரையின் அருகில் வாழும் உயிரினங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
“தெண் நீர் இருங் கழி, வேண்டும் இரை மாந்தி,
பெண்ணைமேல் சேக்கும் வணர் வாய்ப் புணர் அன்றில்!”
(ஐந்திணை எழுபது,நெய்தல், 64)
“சிறு மீன் கவுள் கொண்ட செந் தூவி நாராய்!
இறு மென் குரல நின் பிள்ளைகட்கே ஆகி”
(ஐந்திணை எழுபது,நெய்தல், 68)
மீனை உண்டு வாழும் அன்றில் பறவைகள். அன்றிலின் வாழிடமாக பனைமரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நாரைகள் மீனை உண்டு வாழும் செழுமையான வாழ்க்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாரைகளால் அதிகமான மீன்கள் இரையாதலை பாடல் விளக்கியுள்ளது.
பாலைநிலத்தில் உணவு ஆதாரம் அறுபட்ட விலங்கின் நிலையும் பாடப்பட்டுள்ளது.
“முள்ளுடை மூங்கில் பிணங்கிய சூழ் படப்பை,
புள்ளி வெருகு தன் குட்டிக்கு இரை பார்க்கும்”
(ஐந்திணை எழுபது,பாலை, 36)
பாலை நிலம் வளம் குன்றியதால் காட்டுப் பூனை உணவு தேடி அலைந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய சூழல் வல்லுநர்கள் இதுபோன்ற வறட்சியால் குறிப்பிட்ட பறவை மற்றும் விலங்கினங்கள் அழிவதனை சுட்டிக்காட்டுகின்றனர் என்பது கவனப்படுத்த வேண்டியது.
“ஐந்திணைகளில் பதிவு செய்துள்ள நிலைவுயிர், இயங்குயிர் திணையிலக்கியங்கள் நிலைவுயிர்களான தாவரங்களையும் இயங்குயிர்களான விலங்குகளையும் கருப்பொருட்கள் என்று பெயரிட்டு அழைக்கின்றன.
“தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப” (4)
மூவாதியார் ஐந்திணைகளுக்கும் உரிய தாவர விலங்குகளை அந்தந்த நிலவியல் பின்னணியில் பதிவு செய்துள்ளார்.
“அவரை பொருந்திய பைங் குரல் ஏனல்
கவரி மட மா கதூ உம் படர் சாரல்” (ஐந்திணை எழுபது,குறிஞ்சி,1)
அவரையோடு தினை விளையிடங்களில் மான் இன்புற்றிருக்கும் நிகழ்வு கூறப்பட்டுள்ளது.
“காய்ந்தீயல், அன்னை! இவளோ தவறு இலள்;
ஓங்கிய செந் நீர் இழிதரும் கான் யாற்றுள்,
தேம் கலந்து வந்த அருவி குடைந்து ஆட” (ஐந்திணை எழுபது,குறிஞ்சி,7)
மகளிரின் அருவி நீராடல் நிகழ்வு இயற்கையோடு ஒன்றிணைந்த மனிதவாழ்வியலை நமக்கு காட்சிப்படுத்துகின்றன. “மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும், தாவர இனங்களும் இந்தப் பூமியில் வாழ உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமை, உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உலக பல்லுயிர் தினம் மே 22 இல் கொண்டாடப்படுகிறது. உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன” என்ற சூழலியல் ஆர்வலா் கூற்று ஐந்திணைஎழுபதில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தொகுப்புரை
* இயற்கையின் பயன்பாட்டினை நுகருவதற்கு, பல்லுயிரினத்தைப் பாதுகாப்பதும் அதன் வாழிடத்தை உறுதிப்படுத்துவதும் அவசியமாகும் என்பதனை தேர்ந்த சூழல்வல்லுநர் உணருதல் போல மூவாதியார் உணர்ந்து இலக்கியப்படுத்தியுள்ளார்.
* மூவாதியார் இயற்கையின் இன்பஉணர்வினையும் பல்லுயிர்ப்பெருக்கத்தையும் அகப்பொருளில் உள்ளிழைத்துப் பாடியுள்ளார்.
* குறிஞ்சித்திணையின் பல்லுயிர்ப்பெருக்கம் ஏனைய திணைகளை விட வளமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மலைவளத்தை முன்னிறுத்தியே குறிஞ்சித்திணையை முன்வைத்துப் பாடினாரோ என்ற ஐயப்பாடு எழுகின்றது.
சான்றெண் விளக்கம்
1. த. சிவக்குமார், சுற்றுச்சூழல் கல்வி, ப.66
2. ச. முகமது அலி, பல்லுயிரியம் பின்பக்க அட்டைப்படம்.
3. பூவுலகு இதழ்கள், மின்னூல், இரண்டாம் ஆண்டிதழ், 2017
4. தொல். அகத்திணையியல் : 30
துணைநூற்பட்டியல்
1. அ. நடராசபிள்ளை, ஐந்திணை எழுபது,கழக வெளியீடு.
2. தொல்காப்பியம், இளம்பூரணார் உரை, பொருளதிகாரம், கழக வெளியீடு.
3. த. சிவக்குமார்,சி.பெருந்தேவி, சுற்றுச்சூழல் கல்வி, சம்யுக்தா பதிப்பகம், சேலம்.
4. ச. முகமது அலி, பல்லுயிரியம், வாசல் பதிப்பகம். 2010.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.