Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

'தண்டலையார் சதகம்’ வெளிப்படுத்தும் அறக்கருத்துகள்

நாகரத்னம் சுதர்ஷினி
மொழிகள் துறை, சமூகவிஞ்ஞானங்கள் மற்றும் மொழிகள் பீடம்,
சபரகமுவ பல்கலைக்கழகம், இலங்கை.


ஆய்வுச்சுருக்கம்

தமிழ் மொழியில் தோன்றிய இலக்கியங்களை, அவை தோன்றிய காலத்தின் அடிப்படையில் வகைப்படுத்தும் போக்கு சங்ககாலம் முதற்கொண்டேக் காணப்படுகிறது. காலத்தினை மையம் கொண்டு இலக்கியங்கள் வகைப்படுத்தப்பட்டாலும் எக்காலத்துக்குரிய இலக்கியம் என்ற போதிலும் அவை, மானுடம் சிதையாது காலந்தோறும் பின்பற்றப்பட வேண்டிய, நன்னெறிகளாகிய அறம் பற்றிய சிந்தனைகளை வலியுறுத்துவதைக் காணலாம். இவ்வடிப்படையில் சதகம் எனும் சிற்றிலக்கிய வகை நாயக்கர் காலத்தில் தோன்றிய தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகக் காணப்படுகிறது. இது மனித வாழ்க்கைக்குத் தேவையான அறக்கருத்துகளை எடுத்துக்கூறுவதுடன் அது தோன்றிய காலப்பின்னணியில் இருந்த தனிமனிதன், குடும்பம், சமுதாயம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும், நம்பிக்கைகளையும் உள்ளடக்கமாகக் கொண்டு அவற்றின் வழி அறம் போதிக்கும் இலக்கியமாகக் காணப்படுகின்றது. இவ்வகையில் மக்களின் வாழ்வில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் பழமொழிகளைக் கொண்டு படைக்கப்பெற்றுள்ள பழமொழி விளக்கம் எனும் திருத்தண்டலைச் சதகம் எத்தகைய அறக்கருத்துகளை வெளிப்படுத்துகிறது என்பதை அதன் உள்ளடக்கத்தின் வழி ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

அறிமுகம்

மனிதனாகப் பிறந்தவன் தனக்கென வகுத்துக் கொண்ட ஒழுக்கநெறிகளே அறம் எனப்படுகின்றது. இது மனிதனை நல்வழிப்படுத்துவதாகக் காணப்படுகின்றது. தனி மனிதனும், அவன் சார்ந்த சமுதாயமும் சிறப்பு பெற்றிட இவ்வறம் வழிவகுக்கின்றது.

‘சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு’ (திருக்குறள் : 31)

வள்ளுவரின் மேற்கூறப்பட்ட குறட்பா, அறமானது சிறப்பைத் தரும்; செல்வத்தைத் தரும்; அதனால் அறத்தை விட உயிருக்கு ஆக்கம் தருவது வேறு யாதுமில்லை என்று அறத்தின் சிறப்பை எடுத்துரைக்கிறது. இவ்வகையில் பார்க்கும் போது, அறம் என்பது மனிதனுக்கு இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தை தரக்கூடியதாகக் காணப்படுவதால் தமிழிலக்கியங்கள் இலக்கியச்சுவையுடன் கூடிய வகையில் அறம் போதிக்கும் பண்புடையவையாக அறத்தினை பாடுபொருளாகக் கொண்டு படைக்கப்பட்டன. இதன் விளைவாகவே தமிழில் அறநூல்கள் காலந்தோறும் முகில்த்தன எனலாம். மனிதனை உள்ளத்தாலும், உடலாலும் மேன்மையடையச் செய்வது இவ்விலக்கியங்களின் நோக்கமாக இருந்தது. தமிழிலக்கிய வரலாற்றில் அறநெறிக்காலம் எனப்போற்றப்படும் சங்கமருவிய காலத்தில் பெருவாரியாக அறம் போதிக்கும் இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. இதன் விளைவாக ‘அறம்’ பிற்கால இலக்கியங்களிலும் வெகுவாக பேசப்படத் தொடங்கியது.


அகம் அல்லது புறம் பற்றிய பாடுபொருளைக் கொண்டு நூறு செய்யுள்களில் பாடப்படும் இலக்கியமே சதக இலக்கியம் எனப்பட்ட போதிலும் காலப்போக்கில் பக்தி, நீதி, வாழ்வியல் சார்ந்த பாடுபொருள்களையும் கொண்டு சதக இலக்கியங்கள் இயற்றப்பட்ட நிலையில் கற்றோர், கல்லாதவர் வாழ்க்கையில் காலந்தோறும் கையாளப்பட்டு வரும் நூறு பழமொழிகளைக் கொண்டு படிக்காசுப் புலவரால் இயற்றப்பட்ட தண்டலையார் சதகம், மக்களுக்கு நன்னெறிகளை போதிக்கும் அறக்கருத்துகளை பழமொழிகளின் வழியாக வெளிப்படுத்தும் நீதிச்சதகமாகக் காணப்படுகிறது.

“இசைந்த பழமொழி விளக்கம் இயம்பத்தானே”

“விளங்கு பழமொழி விளக்கம் அறிந்துபாட” (தண்.சத. கடவுள் வாழ்த்து)

என்ற செய்யுள்கள் தண்டலையார் சதகம் பழமொழிகளின் வழி கருத்துகளை வெளிப்படுத்துவதை விளக்குகின்றன. பழமொழிகள், சொல்ல வேண்டிய விடயத்தை மிகச்சுருக்கமாக, கேட்போருக்கு நன்கு புரியும் வகையிலும், சொற்சுருககத்துடனும் பொருட்செறிவுடனும் வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு வடிவமாகும். இக்காரணத்தினாலேயே இலக்கியங்களில் மட்டுமின்றி, மனிதர்களின் அன்றாட வாழ்க்கையிலும் இவை அதிகம் எடுத்தாளப்படுகின்றன எனலாம்.

இவ்வடிப்படையில், கடவுளைப் போற்றுவதாக மட்டும் அமையாது மனித வாழ்க்கைக்குத் தேவையான அறக்கருத்துகளையும் போதிக்கின்ற, தண்டலையார் சதகம் வெளிப்படுத்தும் தனிமனிதன், சமுதாயம் சார்ந்த அறக்கருத்துகளைக் காண்போம்.

‘கொல்லன் தெருவில் ஊசி விற்றார் போல’ என்ற பழமொழி இலக்கியத்தின் முதற் பழமொழியாக அவையடக்கத்திற் கையாளப்பட்டிருப்பது கொல்லன் தெருவில் ஊசிக்கு மதிப்பில்லாதது போல கற்றோர் மத்தியில் தன்னூலுக்கு மதிப்பின்றி போய்விடக்கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதோடு, கொல்லர் தெருவில் ஊசி போல, இலக்கியங்களிலும், அன்றாட வாழ்க்கையிலும் அதிகமாகக் கையாளப்படும் பழமொழி எனும் வடிவத்தினையும், அதிகம் உபயோகிக்கப்படும் பழமொழிகளையும் தான் கையாளுவதாகக் கூறுவதாகவும் பொருள் கொள்ளலாம். இவ்வாறாகப் பழமொழிகளின் வழி போதிக்கப்படும் அறம் சார்ந்த கருத்துகளை வருமாறு பகுத்தாராயலாம்.

துறவறமும் இல்லறமும்

‘துறவறமே பெரிதாகும் துறவிக்கு வேந்தனொரு துரும்பு தானே’ (35) என்ற பழமொழியின் வழி துறவிகளின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. துறவிகள் உலகத்தோடு கலந்திருந்தாலும் பற்றற்றவர்களாக இருத்தல் வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. ‘மேனவிலும் சுகம்படுக்கை மெத்தையறி யாதெனவே விளம்பினாரே’ (75) அதாவது உயர்வாகக் கூறப்படும் பஞ்சணை இன்பத்தை பஞ்சணை அறியாது என்பது போல உலக வாழ்வில் ஈடுபட்டாளும் துறவிகள் அதன் மீது பற்றற்றவர்களாக இருத்தல் வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

இல்லறம், துறவறம் பற்றிப் பேசும் போது துறவு மேற்கொண்டு இல்லறம் நோக்கிய சௌபரி முனிவரின் செயலை முன்னிறுத்தி வள்ளுவன் இல்லாளோடு கூடி சிறந்து வாழ்ந்த இல்லறமே பெரிது. ஏனெனில் அது துறவியையும் கவர்ந்தது என்று இல்லறத்தின் பெருமை தனை எடுத்துரைத்து இல்வாழ்பவர்களின் வாழ்வின் சிறப்பைக் கூறுவதோடு பழிப்பின்றேல் துறவறம் சிறந்தது, என்ற கருத்தையும் வெளிப்படுத்துகிறது இந்நூல்.

ஆடவருக்கான அறம்

இல்லறத்தில் ஈடுபடும் ஆண்கள் பரத்தையரை நாடுவது இல்லறத்தை இல்லாது செய்யும். மைதீட்டிய கண்களையுடைய பொதுமகளிரை சார்நதவர்களுக்கு இம்மையில் பிணியும், வறுமையும் ஏற்படுவதோடு, மறுமையில் நன்மையில்லாது போகும் என்று கூறப்பட்டுள்ளது.

‘மையிலே தோய்த்தவிழி வஞ்சியரைச்
சேர்ந்தவர்க்கு மறுமை யில்லை…’ (86)

என்ற செய்யுளடிகள் இதனை வெளிப்படுத்துகின்றன. இல்லறத்தில் ஈடுபடுபவன் ஆற்றலுடன் இருத்தல் வேண்டும், ஏனெனில், ‘இளைத்தவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி….’ (96) ஆவாள். ஆகவே ஆடவன் ஆற்றலுடையவனாக பொருளீட்டக் கூடியவனாக இருத்தல் வேண்டும் எனப்படுகிறது.


பெண்களுக்குப் போதிக்கப்படும் அறம்

கற்பு எனும் அறத்தினை பெண்ணுக்கு போதிக்க இலக்கியங்களில் உலவும் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்து,

‘கொக்கெனவே நினைத்தாயோ கொங்கணவா?’ (06)

என்ற பழமொழியினூடாக பெண்ணுக்கு கற்பெனும் அறம் இன்றியமையாதது, ‘கற்புடைமங் கையர்மகிமை மொழியப் போமோ…..’ (06) அதாவது கற்புடைய பெண்ணின் பெருமை அளவிட முடியாதது, அது வார்த்தைகளால் விபரிக்கப்படமுடியாதது என்று கூறப்பட்டுள்ளது. வாழ்வில் பெண்ணொருத்தியிருந்தால் இனிய பண்பு, பொருள், இசை, நலம் எல்லாம் கிட்டும், அடிமைத்தனம், துன்பம் இராது, ‘அக்காளுண் டாகில்மச்சான் அன்புண் டாமே…’ (62) என்ற பழமொழி வழியாக மேற்கூறப்பட்டவற்றை ஆணின் வாழ்வில் பெற்றுத்தருவது பெண்ணுக்குரிய அறமாகப் போற்றப்படுகிறது.

பிறர் மனைக்குச் செல்பவள், கணவன் உண்பதற்கு முன் உண்பவள், அடக்கமின்றி நடந்து கொள்பவள், வெறுப்பாக உரையாடுபவள், கணவனுக்குத் தெரியாமல் சிறு சேமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவள், குடிகெடுதற்கு வழி செய்யும் பிடாரி போன்றவளாவாள் என்று கூறப்பட்டதன் வழி மேற்கூறப்பட்டவற்றை தவிர்ப்பது பெண்ணுக்குரிய அறமாகின்றது.

மக்கட்பேறு

இல்லறத்தில் கூடி வாழ்வோர் போற்றவேண்டிய இன்னொரு அறமாக இங்கு வலியுறுத்தப்படுவது நல்ல மக்களைப் பெறுதலாகும். நன்மை செய்யக் கூடிய ஒரு பிள்ளையைப் பெறுவது குலத்துக்கும், நாட்டுக்கும் நன்மை பயக்கும், பன்றி பல குட்டிகளை ஈன்றும் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை ஆயினும், யானை ஒரு குட்டியை ஈன்றாலும் அதனால் அதிகப் பயன் கிடைக்கின்றது என்பது ‘பன்றிபல ஈன்றுமென்ன குஞ்சரம்ஒன் றீன்றதனாற் பலனுண் டாமே!’ (07) என்ற பழமொழியின் வழி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு நல்லறிவு கொண்ட பிள்ளை யானைக்குஞ்சரத்திற்கும், நல்லறிவற்றோர் பன்றிக் குட்டிகளுக்கும் ஒப்பிடப்பட்டுள்ளனர்.


பற்றின்றிய நிலை

பேராசை அல்லது அளவு கடந்த ஆசை என்பது தனிமனிதனுக்கும் அவன் சார்ந்த சமுதாயத்துக்கும் பேரிடரை விளைவிக்கக் கூடியது, எனவே பேராசைப் கொள்ளாது வாழவேண்டும் என்ற சிந்தனையை ‘இட்டபடியே அல்லாமல் வேறு ஆசைபட்டால் கிடைத்திடுமோ’ (05) என்ற பழமொழியினூடாக வெளிப்படுத்துவதோடு, சிவன் மண் பிட்டுக்கு மண சுமந்த புராணக் கதையினை அடிப்படையாகக் கொண்டு அது விளக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்ணாசை, கோபம், உலக வாழ்வில் ஏற்பட்ட பிழைகளை திருத்திக் கொண்டு வாழ்ந்தாலும் பற்று எனும் ஒன்று நீங்காமையால் துன்பப்பட நேரிடுவதால் பற்றுதலையும் நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வீரம், செல்வம், கல்வி, அழகு என்பவற்றையுடையோரைப் பார்த்து மனதில் பொறாமை கொள்ளுவது பிள்ளை பெற்றவளைப் பார்த்துப் பெருமூச்சு விடும் தன்மை போன்றது ஆகவே பொறாமை தவிர்க்க வேண்டும் என்பதோடு அவ்வாறு நாம் பொறாமை கொள்வதால் எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பது, ‘எண்ணமெல்லாம் பொய்யாம் மௌனமே மெய்யாம்….’ (19) உலகை ஆள நினைத்தல், பிறர் பொருள் மேல் ஆசை கொள்ளுதல், பிறருக்கு நன்மை செய்யாது இருத்தல், நன்மை செய்யாதோர் என்னதான் செய்தாலும், பேராசை கொண்டாலும் இறைவன் பங்கிட்டளித்து மட்டுமே கிடைக்கும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நிலவுலகில் மடமும் நிலமும் செம்பொன்னும் சேர்ப்பது இறந்த பின் சொர்க்கத்திற்கு நூல் நூற்கும் கருவியை கொண்டு செல்வது போன்ற அறியாமையாகும் என்று கூறி பொருள் மீதான பற்றுதலை துறத்தல் வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

‘இல்லது வாராது: நமக்கு உள்ளது போகாது’ (105) நாம் நினைப்பவை எல்லாம் சிறப்பாய் நடந்தேறும் என்று சிற்றறிவுடன் செயற்படாது, அவை இறைவன் மனம் வைத்தால் மட்டுமே நடக்கும் நாம் தலை கீழாய் நிற்பினும் இல்லது வாராது, எனவே புத்தியுடன் முயற்சி செய்தால் போதும். எதன் மீதும் பேராசை கொள்ளவோ அதிக பற்று கொள்ளவோ தேவையில்லை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பிற உயிர்கள் மீது அன்பு காட்டுதல்

‘தன்னுயிர் போல் எந்நாளும் மன்னுயிருக் கிரங்குவதும் தக்க தாமே...” (27) உயிர்களை வதைப்பவர், கொன்றவர், கொன்றதைச் சமைப்பவர், அதனைச் சாப்பிட்டவர் அனைவரும் நரகத்தை அடைவர். எனவே தன்னுயிர் போல மன்னுயிரைக் காத்தல் வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. பிறரைக் கெடுக்க மனதாலும் நினைத்தல் கூடாது அவ்வாறு நினைப்பவரேர் கெட்டொழிந்து போவார் என்று பிற உயிர்கள் மீது அன்பு காட்டுதல் வேண்டும் என்ற அறம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உண்மை பேசுதலின் அவசியம் கூறப்படுதல்

‘மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி வாழ்வானோ?’ (31) பொய் சொல்வோருக்கு உணவு கிடைக்காது, கையிலுள்ள பொருளும் அழிந்துவிடும் என்று பொய் கூறிய தாழை மலரை உதாரணம் கூறி உண்மையின் பெருமை விளக்கப்பட்டுள்ளது.

‘நன்மைசெய்தார் நன்மைபெறுவர் தீமைசெய்தார் தீமை பெறுவர்’ (04) என்ற பழமொழியின் வழி பிறருக்குத் தீமை செய்தல் கூடாது, வன்வினை செய்யக் கூடாது, பொய் சொல்லுதல் கூடாது போன்ற அறம் சார்ந்த கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறல்லாது பொய் பேசியும் பிறரை ஏமாற்றியும் வாழ்பவர்களை நல்ல கள்ளரும், பொல்லாத கள்ளரும் என வருமாறு வகைப்படுத்துகிறது இச்சதக நூல், பொருட்களை திருடிக்கொண்டு செல்லும் கள்ளர் நல்ல கள்ளர்கள் ஆவார்கள் ஆனால், செல்வமுடைய கள்ளருடன் கும்பிடும் கள்ளர், திருநீறு குழைக்கும் கள்ளர், அழுகின்ற கள்ளர், தொழும் கள்ளர், ஒழுக்கத்திலே மறைந்து கொண்டு பிறரை ஏமாற்றும் கள்ளரர் இவர்களே பொல்லாத கள்ளர்கள் எனப்படுவதனூடாக இவற்றை தவிர்க்க வேண்டும் எனப்படுகிறது. இவர்கள் நல்லவர்கள் போல நடித்து பிறரை ஏமாற்றுவதால், இவர்கள் பொல்லாத கள்ளர்கள் எனப்படுகின்றனர். ஆகவே பொய், பிறரை ஏமாற்றுதல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவையாகின்றன.

பழைமை போற்றுதல்

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில்லை என்ற போதும், முன்னர் பொருத்தமாக இருந்த சான்றோர் நெறியைப் பிற்காலத்தில் இகழ்ந்து கூறி பழைமையை விரும்பாதவர் புதிதாக ஒன்றைக் கண்டறியச் சென்று தோற்றுப்போவது தாயைப் பழித்த மகள் அவுசாரியானது போல என்ற பழமொழிக்கு ஒப்பானது என்பது எடுத்துக் கூறப்பட்டு பழைமை போற்றுதல் அறம் எனப்படுகிறது.

நட்பு

நிலைபெற்ற சிறந்த அறிவும் இன்முகமும் உடைய தலைவர்களுடன் நட்பு கொள்வது சிறப்பென வலியுறுத்தப்பட்டுள்ளது. மலை மீது இருப்போரை பன்றி தாக்காது என்பது போல நல்லோருடன் கொள்ளும் நட்பு நற்பலன்களைத் தரக்கூடியது.

‘மனதிலே பகையாகி உதட்டிலே உறவாகி மடிவர் தாமே...’(81) என்பதன் ஊடாக சிறந்த நட்பு என்பது நினைவும், உடலும் ஒன்றுபட்டு வருவது. சான்றோரின் நட்பே இத்தகையது, கீழோர் உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக நட்பு கொள்வர். எனவே இவ்வாறான தூய்மையற்ற நட்பு தவிர்க்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. ‘ வழுவழுத்த உறவதனின்….’ (83) என்ற பாடலடியின் வழி தெளிவற்ற நட்பைக் காட்டிலும் நீங்காத பகை மேலானது எனக்கூறப்பட்டுள்ளது. இவ்வகையில் சான்றோருடன் நட்பு கொள்ளுதல் அறமாகப் பேசப்படுகிறது.

பொறுமை காத்தல்

பொறுமையும் அறிவும் கொண்டோர் வாழும் இடத்தை விளக்கு ஏற்றிச் செல்ல வேண்டும். செருக்கும் ஆணவமும் கொண்டோர் நிலைதடுமாறி அழிவர். ஆதலால் பொறுமை காத்தல் அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருந்தோம்பல்

இப்பண்பு தமிழிலக்கியங்களில் காலந்தோறும் பேசப்பட்டும் பயிலப்பட்டும் வரப்படும் அறமாகும். தண்டலையார் சதகத்திலும் இப்பண்பு இல்லறத்திலுள்ளோர்க்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இல்வாழ்க்கையில் ஈடுபடுவோர் நல்லோர் என விளித்துக் கூறப்பட்டு அவர்கள், விருந்தில்லா(து) உணுஞ்சோறு மருந்து தானே (09), விருந்தினர் இல்லாத சோறு மருந்து போல கசப்பாகிப் போகும் என்று கூறப்படுவதோடு நல்லவற்றை இறைவனுக்குப் படைத்தல் ‘நல்லதுகண் டால்பெரியோர் நாயகனுக் (கு) என்றதனை நல்கு வாரே’ (08) நல்லவற்றை நாயகனுக்கு நல்குவாறே அதாவது இருப்பவற்றில் சிறந்தவற்றை கொடுத்துண்டு வாழ வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. அன்போடு படைக்காத உணவு செவிடன் காதல் ஊதிய சங்கு போல பயனற்றது எனக்கூறப்பட்டுள்ளது.

பொருளீட்டல்

தனிமனிதன் தகுந்த முறையில் பொருள் தேட வேண்டும், அதனை நீதியான முறையில் ஏனையோருக்கு வழங்கவேண்டும். அது மனிதனுக்கு இம்மை மற்றும் மறுமையிலும் நன்மையைப் பெற்றுத்தரும் என்பது,

‘வண்டருமாய் ஒன்றுபத்து விலைகூறி
அநியாய வட்டி வாங்கிக்
கண்டவர்தம் சுடுந்தேட்டுக் கண்ணை அறக்
கெடுக்குமிது கருமந்தானே…’ (102)

தீயவராய் ஒன்றுக்குப் பத்தாக விலை சொல்லி அநியாய வட்டி வாங்கி பொருள் சேர்ப்பவருடைய வாழ்க்கை முழுவதையும் இச்செயல் இல்லாது செய்துவிடும்.


பிறரைத் துன்புறுத்தி, அநியாயம் செய்து பொருள் சேர்த்துத் தானம் வழங்குவது பசுவினை வதைத்து அதன் தோலில் செருப்பு தைத்து பிறருக்கு வழங்குவது போன்ற கொடிய செயலாகும். ஆதலால் பிறருக்குத் தீங்கு விளைவிக்காது பொருளீட்டுதல் வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதுபோன்று அறவழியில் ஈட்டப்படும் பொருள் சான்றோரிடம் சேரின், ஆலமரம் பழுத்தவுடன் அது பறவைகளுக்கு சொல்லியனுப்பவில்லை, எனினும் பறவைகள் வந்து சேருவது போல, உலகில் உள்ள சான்றோரிடம் பொருள் சேர்ந்தால், புலவர், இரவலர் என அனைவுருக்கும் காலம், அருமை அறிந்து கொடுத்து மகிழ்வதால் அவர்களும் தேடி வருவர் என்று நல்வழியில் ஈட்டப்படும் பொருள் நல்லோரிடம் சேர்தலின் மகத்துவம் கூறப்பட்டுள்ளது.

இவ்வடிப்படையில் தக்க வழியில் பொருளீட்ட வேண்டும் என்பதுவும், அவை பொருத்தமான வழியில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொழில்

மேற்கூறப்பட்டவாறு பொருளீட்டும் பொருட்டு தொழில் செய்யும் போது, இந்தத் தொழிலை செய்யுமாறு யாரேனும் பணித்தால் அதனை செய்யாது, அது பற்றி சிந்திக்காது திருடியும், மறைத்தும், மாறுபாடு செய்வதும் நீரிற்குளிக்கும் பெண்கள் தங்களின் முதுகை தேய்க்கச் சொன்னால், முலை மீது கையிட்ட முறைமை தானே என்ற பழமொழியினூடாக பணித்ததை செவ்வனே செய்து முடிப்பதே தொழில் அறம் என்று விளக்கப்பட்டுள்ளது.

கொடை

பயன் எதிர்பாராத கொடை பற்றிச் சொல்லும் போது, ‘…வான்செய்த நன்றிக்கு வையகம்என் செய்யுமதை மறந்திடாதே….’ (01) வான் செய்த நன்றிக்கு புவி எதுவும் செய்யவில்லை எனினும், அது கொடுக்கத் தவறுவதில்லை என்று பலனெதிர் பாராத கொடை பற்றிக் கூறப்பட்டுள்ளது. கொடை வழங்கும் போது, முகம் மலர்ந்து உபச்சாரம் செய்து இன்சொற்கள் பேசுவது, சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தாற் போல என்று கூறப்பட்டுள்ளது. அதுபோலவே தினையளவு உதவி செய்யினும் நன்மை பெற்றோர் சான்றோராயின் அதனை பனையளவாகக் கொள்வர் என்பதால், செய்யும் உதவியினை அறிந்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, ‘பரத்தையர்க்கே தேடியிட்ட வண்மை….’ (13) என்ற பாடலடியில் பரத்தையருக்கு கொடுக்கும் கொடை காட்டில் எரிக்கும் நிலவு போல பயனற்றது எனப்படுகிறது. ‘…எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார் வாழ்ந்தாலு மென்னுண் டாமே…’ (24) காடெங்கிலும் எட்டி மரம் பழுப்பதாலும், கொடைப் பண்பில்லாதவர்கள் வாழ்வதாலும் எந்த பயனும் இல்லை, மா, பலா, வாழை மரங்கள் பழுப்பதால் பிறர் நன்மை அடைவது போல நல்லோர் தாம் சேர்க்கும் பொருள் அனைத்தையும் இரப்பவருக்கு கொடுத்தே வாழ்வதால் அவர்களால் அனைவரும் பயனடைவர் எனப்படுகிறது. ஈதலுடன் இரக்கமும் இல்லாது இவன் நல்லவன் என்று உலகம் போற்ற வாழாதவன் கழுதைக்குச் சமமாவான் எனப்படுகிறது. யாருக்கு கொடாதவனிடம் காணப்படும் செல்வம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல பயனற்றது எனக் கூறப்பட்டுள்ளது.

மரணம் எப்பொழுது ஏற்படும் என்று நிச்சயமற்ற வாழ்வில் நிச்சயமற்ற பொருளைச் சேர்த்து வைப்பதைவிட அப்பொருளைக் கொடுத்து அறத்தை சேர்த்து வைப்பது அறிவுடைமையாகும் என்று கொடையின் வழி கிட்டும் அறத்தின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. கொடை என்பது கொடுக்கும் அளவைச் சார்ந்தது அல்ல அது கொடுக்கப்படும் நேரத்தைக் கொண்டே அதன் சிறப்பு தீர்மானிக்கப்படும் என்பது,’ மாரிபதின் கலநீரில் கோடைதனில் ஒருகுடநீர் வண்மைதானே.’ (48) என்ற பழமொழியின் வழி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கொடுப்போருக்கு வெண்சோற்று பஞ்சம் ஏற்படுவதில்லை. உழவுத் தொழிலில் கிடைத்த செல்வத்தை தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தனக்கு, அரசனுக்கு என்று பிரித்து கொடுப்பின் அவ்வறத்தின் விளைவால் ஒரு போதும் வறுமை இராது. ஆகவே கொடை மனிதனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தைப் பெற்றுத் தரக்கூடியதாகக் காணப்படுகிறது, கொடுப்பவருக்கு ஒரு போதும் இன்மை ஏற்படாது போன்ற கருத்துகள் கூறப்பட்டு கொடை பற்றிய அறம் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

இரப்போருக்குரிய அறம்

‘இரக்கப் போனாலும் சிறக்கப் போவது கருமம்…..’ (109) இரந்துண்டு வாழ்வது பெரிய பாவம்தான் இருப்பினும், வறுமையால் இரந்து வாழும் நிலை வந்தாலும், சிறக்கப்போவது கருமம் எனப்படுவதோடு, இரக்கப்போவோர் சிறப்புடன் செல்வது தகுதி எனப்படுகிறது.


இறை சிந்தனை

இறைவனுக்கு விளக்கிடுதல் எனும் செயல் பிறவித்துன்பம், பழவினைகள் என்பவற்றை நீக்கவல்லது. அறம் செய்வோரை இறைவன் காப்பார். இறைவனின் அருள் கிடைத்தால் பாவ வினைகளிலிருந்து விடுபட முடியும், அவ்வாறன்றி உள்ளங்காலில் வெள்ளை என்பு தென்பட ஐந்துகாதை தூரம் நடந்தாலும் தன்பாவம் தன்னோடுதான் என்று இறை வழிபாட்டின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. உருத்திராக்கம் அணிவது, கையிலே செபமாலை வைத்திருப்பது பக்தியல்ல, மனதில் தூய்மையாக இருப்பதே சிறந்த பக்தி, அவ்வாறில்லாது மக்களை ஏமாற்றுவோர் உருத்திராக்கப் பூனை போன்றோர் எனக் கூறப்பட்டுள்ளது.

மனைவி, மக்கள், சுற்றம் சூழ வாழ்ந்திருந்தாலும் ‘சிவாயநம’ எனும் ஐந்தெழுத்தை நினைத்தால் முக்தியடையலாம்.

‘மிடியிட்ட வினைதீர்க்கும் தெய்வமிட்டு விடியாமல் வீணர் வாயிற்
படியிட்டு விடிவதுண்டோ அவரருளே கண்ணாகப் பற்று வீரே. (45)

தெய்வம் கொடுத்தும் நீங்காத வறுமை புல்லரின் வாயிலை அடைவதால் நீங்காது, இறைவன் மீதான பக்தியே வறுமையை தரும் ஊழ்வினையை ஒழிக்கவல்லது, ஒரு போதும் இறைவனை நினைத்தறியாதவர்கள் எமன் வந்து அழைக்கும் போது கண்ணீர் விட்டழுதாலும் யாதும் நிகழாது. பிறக்கும் போது எதனையும் கொண்டு வரவில்லை, இறந்த பின்னும் எதனையும் எடுத்துச் செல்லப்போவதில்லை, என்று வெறுமனே உலகெங்கும் சுற்றித் திரிபவர்கள் இறைவனை அடையாது எந்த நலனையும் பெறப் போவதில்லை என்பது, பறக்கும் இயல்புடைய காகம் அது இருக்கும் கொம்பை நிலையாகப் பெறாது என்ற பழமொழியூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாழும் காலம் வரை தீய ஒழுக்கத்துடன் அறிவு கெட்டிருந்து, இறக்கும் போது இறைவனை வணங்குவதால் நன்னெறி கிட்டாது என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இறைவனை வணங்கினால் இம்மையும் மறுமையும் சிறக்கும். ‘திக்கற்றவறுக்கு தெய்வமே துணை..’ என்ற பழமொழியின் வழி இறைவன் துன்பத்தில் இருப்போரையும், தன்னிலை அறியாதோரையும் காப்பாற்றுவார் என்ற கருத்தினை வெளிப்படுத்துகிறது. இவ்வாறாக இறை சிந்தனை சார்ந்த அறம் இந்நூலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி கற்றலின் அவசியம்

கல்வியைத் தெளிவாக கற்றல் அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆகமநூல்களை முறைப்படி பயிலாது, பெரியோர் சொல்வதைக் கேட்ட கேள்வியறிவும் இல்லாது, முன் செய்த நல்வினை, தீவினைகளின் பயன் அறியாது ஆசிரியர் என்று யாருக்கும் உபதேசம் செய்வது குருடனுக்குக் குருடன் கோல் கொடுத்து வழிகாட்டி வரும் கொள்கை என்று விளக்கப்பட்டுள்ளது. ஆதலால் தெளிவாகக் கற்றல் அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளதோடு தெளிவற்ற கல்வியைக் காட்டிலும் கல்லாமை அறம் என்று கூறப்படுகிறது. மேலும் சற்குருவை பழிப்பவர் கெட்டுப் போவார் என்பதால் குருபக்தியின் இன்றியமையாமை வலியுறுத்தப்படுகிறது.

கூடி வாழ்தல்

தமிழரின் வாழ்க்கையோடு இணைத்துக் கூறப்படும் வாழ்வியல் கூறான ‘ஒற்றுமை’ இவ்விலக்கியத்தில், ‘ஊரோட உடனோட நாடோட நடுவோட’ (82) என்ற பழமொழியின் வழி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது போர்க்களத்தில் பல வெற்றிகள் பெற்று வீராதி வீரன் எனப் போற்றப்பட்டாலும் உலகத்தோடு ஒன்றி வாழ்வதே அறம் எனப்படுகிறது.

அடியாரைப் போற்றும் அறம்

அடியார்கள் எந்தக் குலத்தினர் என்று நோக்குவது அறமில்லை. சிவ சின்னங்களை கண்டதுவும் சிறப்பித்து போற்றுவதே அறம். அவ்வாறல்லாது அவர்களை வறியவர், உருவத்திலும், அறிவிலும் சிறியவர் என்று பழித்துக் கூறுவது தீயின் வடிவம் சிறிது என்று முந்தானையில் முடிந்து கொள்வதற்குச் சமமாகும் எனப்படுகிறது.


மானம்

மானமுடன் வாழ்பவரே ஆடவரிட் சிறந்தவர். நாணமும் மானமும் இல்லாதவர் பலரும் பழிக்கும்படி வாழ்வர். திறமையற்ற கூத்தியர் பிறர் தம்மை பழிக்கும் போது எட்டுத்திக்கும் செல்வது போல அவர்கள் வெட்கித் திசை தெரியாது ஓட வேண்டிய நிலை ஏற்படும்.

‘………………...அரைகா சுக்குப்
போனஅபி மானம் ஆயிரம்பொன்
கொடுத்தாலும் பொருந்தி டாதே….’ (90)

அரசியல் அறம்

திரௌபதியின் துயிலை உரியும் போது பொறுமை காத்த பாண்டவரே அரசாண்டனர் என்ற எடுத்துக்காட்டின் வழி பொறுமை காப்பது அரசியல் அறமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நல்லநெறியுடன் ஒழுகி நடுநிலை தவறாது ஆட்சி செய்யும் கொடையாளியான, துணிவுடைய அரசனை தெய்வம் என்பார்கள், தவறான ஆட்சி செய்யும் மூர்க்கமான அரசனும் மந்திரியும் ஆழமான நரகத்தில் வீழ்ந்து அழுந்துவர் என்று கூறி நீதியான ஆட்சியின் அவசியம் கூறப்பட்டுள்ளது. செங்கோலாட்சி புரிவோர்க்கு சுவர்க்கமேயன்றி நரகம் ஒரு போதும் கிட்டாது. கொடுங்கோல்மன் னவனாட்டில் கடும்புலிவாழும் காடு குணமென் பாரே. (55) கொடுங்கோல் ஆட்சி செய்யும் நாட்டைவிட புலி வாழும் காடு நலம் தரும் எனப்படுகிறது. அரசர்க்கெல்லாம் அறிவுரையும், அரசியல் நெறியும் போதிக்கும’ அமைச்சன் இருப்பது அவைக்கு சிறப்பெனக் கூறப்படுகிறது. பகிடியான செயல்களுக்கன்றி பாவினுக்கு, அதாவது தமிழ் கவி பாடுவோரையும், அந்தணரையும் பாதுகாப்பது அறம் என்று வலியுறுத்தப்படுகிறது.

நடுநிலைமை

‘தள்ளிவழக் குரைத்தோரும்…..’ (56) வழக்கிலே நடுநிலை தவறுபவர் கெட்டுப் போவார்கள். தீர்ப்பு வழங்குவோர் அஞ்சாது நெற்றிக்கண் திறப்பினும் நீதி வழுவாது இருத்தல் வேண்டும் எனப்படுகிறது.

போர் அறம்

போருக்குச் செல்லும் போது போர் பற்றியும், போர் ஆயுதங்கள் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருத்தல் வேண்டும், அவ்வாறில்லாது பதினெட்டு போராயுதங்களை வைத்திருப்பவன், குங்குமத்தைச் சுமந்த கழுதைக்குச் சமமாவான். எனவே முறையான போர்ப்பயிற்சியே போர் வீரனுக்குரிய அறமாக வலியுறுத்தப்படுகிறது.

முடிவுரை

மனிதன் தனக்காக வகுத்துக் கொண்ட நன்னெறிகளைப் பழமொழிகளின் துணைகொண்டு வெளிப்படுத்தும் தண்டலையார்சதகம் தனி மனிதனுக்கும், சமுதாயத்திற்க்கும் தேவையான அறங்களை எடுத்துரைக்கிறது. செய்ய வேண்டிவற்றையும், செய்யக்கூடாதவையையும் கூறும் இந்நூல் அறத்தின் வழி செல்வோரைப் புகழ்ந்துரைத்தும், அறத்தை துறந்தோரை இடித்துரைத்தும் பாடுகிறது. அகவாழ்க்கைக்குரிய அறம், புறவாழ்க்கைக்குரிய அறம் என்பவற்றை வலியுறுத்தி மனிதனை நல்வழிப்படுத்தும் அறநூலாக தண்டலையார் சதகம் மிளிர்கிறது.

உசாத்துணை நூல்கள்

1. அரசு., (உ.ஆ), தண்டலையார் சதகம் மூலமும் உரையும், சென்னை: சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தார்

2. சுப்புரெட்டியார். ந., (1988), தமிழ் இலக்கியங்களில் அறம் -நீதி- முறைமை, சென்னை: ஐந்திணைப் பதிப்பகம்

3. பாலசுப்பிரமணியன். சி., (1990), வாழ்வியல் நெறிகள், சென்னை: நறுமலர் பதிப்பகம்

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p260.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்