சிலப்பதிகாரத்தில் சூழலியல் சார் புனைவுகள்
முனைவர் இரா. இலக்குவன்
உதவிப்பேராசிரியர், வெ. ப. சு. தமிழியல் ஆய்வு மையம்,
மதுரைத் திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, திருநெல்வேலி - 627010.

கவிதைக்கு அழகுணர்ச்சி தருவது புனைவுகளாகும். அப்புனைவுகள் கவிஞர்கள் வாழ்வியலும் அழகுணர்ச்சியும் சார்ந்து பிறக்கின்றன. புனைவுகள் என்பன சமூகங்கள் தங்களது நெறிமுறைகளை நிர்ணயித்துக் கொள்வதற்கான வரைவு எல்லைகளாக விளங்குகின்றன. தவிர, அவை மரணம், அழிவு ஆகியவற்றின் வித்துகளை உள்ளடக்கிய காலத்தை வெல்வதற்கான கருவிகள். புனைவுகள் என்பவை காலத்தின் பிடியிலிருந்து விடுபட முயலும் கனவுகள் ஆகும். ஆகவேதான் புனைவுகள், கற்பனையான நம்பிக்கைகள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பர். (1) தமிழ் இலக்கிய மரபில் இயற்கைக் காட்சிகளின் மீது ஏதேனும் பொருள்பட புனைந்து பாடுவது ஒரு மரபாக விளங்கி வந்தது. இயற்கை நிகழ்வுகள் மீது குறிப்பேற்றிப் பாடுவதை ஒரு இலக்கண அணியாகவேக் கொண்டு தமிழ்க் கவிதை மரபு செயல்பட்டது.
சிலம்பில் இளங்கோ அடிகள் ஆறு, மலை, மண், பறவைகள், தாவரங்கள் முதலானவற்றின் மீது தமது கற்பனையை உருவாக்குகிறார். அடிகள் தமது காப்பியத்தின் முடிவையும், பாத்திரங்களின் உணர்வையும் கூட இயற்கை நிகழ்வுகளின் மீது ஏற்றிக் கூறுகிறார். இளங்கோவடிகள் பூமியைப் பற்றிக் காப்பியத்தில் கற்பித்திருப்பதைக் காண்போம்.
மண்ணக மடந்தை
நிலத்தைப் பெண்ணாகக் காண்பது தமிழ்ச்சிந்தனை மரபாகும். வள்ளுவர் நிலத்தை, ‘நிலமெனும் நல்லாள்’ என்பார். இளங்கோவடிகள் நிலத்தைப் பெண்ணாக மட்டும் காட்டாமல், காப்பியத்தின் தலைமாந்தர்களான கோவலனும், கண்ணகியும் அடையப் போகிற துன்பத்திற்காக வருந்துபவளாக, மயங்குபவளாக, அல்லற்பட்டு ஆற்றுபவளாகப் படைக்கிறார். மதுரைப் பயணத்தில் கோவலனும், கண்ணகியும் இரவில் செல்வதாக முடிவெடுத்து, இரவில் பயணத்தைத் தொடர்கின்றனர். செல்வக் குடியிலே பிறந்த கண்ணகி எவ்வித அழகு செய்தலுமற்ற, உடல் வருந்த நடைச் செலவை மேற்கொள்கிறாள்.
“தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும்
சீர்இள வனமுலை சேரா தொழியவும்
தாது சேர் கழுநீர்த் தண்பூம் பிணையல்
போது சேர் பூங்குழல் பொருந்தா தொழியவும்
பைந்தளிர் ஆரமொடு பல்பூங்குமுறி
செந்தளிர் மேனி சேரா தொழியவும்”
(13;19-24)
கண்ணகி நடந்து செல்வதாக இளங்கோ கூறுகிறார். அப்போது பொதியிலில் தோன்றி, மதுரையில் வளர்ந்து புலவர்கள் நாவில் பொருந்திய தென்றலோடு வெள்ளிய நிலவின் கதிர்களும் சொரிந்தன. அதைக் கண்ட நிலமகள் வேனிற்கால நிலவு இவளுக்கு வேண்டியதுதானா? என பெருமூச்செறிந்து அடங்கினாள் என்று அடிகள் கூறுகிறார்.
“மலயத்து ஓங்கி மதுரையின் வளர்ந்து
புலவர் நாவில் பொருந்திய தென்றலோடு
வேனில் திங்களும் வேண்டுதி என்றே
பார்மகள் அயாஉயிர்த்து அடங்கிய பின்னர்”
(13;25-29)
என்பது பாடல்.
தென்றலோடு நிலவு வீசியும் நிலவுப்பயன் துய்க்க இயலாத, இனி ஒருபோதும் கணவனுடன் கூடியிருக்க முடியாத கண்ணகியின் நிலையை எண்ணி வருந்திய நிலமகள், இந்நிலையில், இவளுக்கு வேனில் திங்கள் வேண்டியதுதானா? என நினைத்து பெருமூச்செறிந்து அடங்குகிறாள். மாதரி இல்லத்தில் கோவலனும், கண்ணகியும் தங்கியிருக்கின்றனர். கண்ணகி உணவு சமைத்துக் கோவலனுக்குப் படைக்கிறாள். இதை விளக்கும் அடிகள்,
“மண்ணக மடந்தை மயங்கு ஒழிப் பனள்போல்
தண்ணீர் தெளித்து தன்கையால் தடவி
குமரி வாழையின் குருத்தகம் விரித்து”
(16;40-43)
என்பார்.
கோவலனுக்கு உணவு படைக்க, குமரி வாழையின் குருத்தகம் விரித்து கண்ணகி தண்ணீரைத் தெளித்து தன் கையாலேயேத் தடவுகிறாள். அவ்வாறு செய்வது, மண்ணக மடந்தையின் மயக்கத்தை ஒழிப்பது போல் உள்ளது என்கிறார் அடிகள். நிலவுப்பயன் துய்க்க இயலாத கண்ணகியை நினைத்து அயாஉயிர்த்து அடங்கிய நிலமகள் இப்போது கண்ணகிக்கும், நேரப்போகிற துன்பத்திற்கும் இடையேயுள்ள காலம் நெருங்கி வருவதைக் கண்டு மயங்கியே விடுகிறாள்.
நிலமகளின் மயக்கத்தைக் கண்ணகியே தண்ணீர் தெளித்துத் தன்கையால் போக்குகிறாள். மேலும் பொற்கொல்லனால் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு ‘கல்லாக்களிமகன்’ ஒருவனால் கோவலன் வெட்டுண்டு வெட்டப்பட்ட இடத்திலிருந்து இரத்தம் கொப்பளித்து வெளியேப் பரவ, நிலமகள் தாங்கொணா துயரமுறுகிறாள்.
“புண் உமிழ் குருதி பொழிந்து உடன் பரப்ப
மண்ணக மடந்தை வான்துயர்கூர”
(16;214-215)
என்பார் அடிகள்.
இவ்வாறு மண்ணின் மீது மானுடக்கவலைகளை, மகிழ்ச்சிகளை ஏற்றிக் கூறியிருப்பது வெறும் கற்பிதம் மட்டுமன்று, தமிழ்ச் சமூக எண்ணத்தின் பிரதிபலிப்பாகும். தமிழ்ப்பண்பாட்டு நம்பிக்கையுமாகும். ‘மண் ஒரு வரையறுக்கப்பட்ட வளம். காடுகள், நீர், காற்று போன்று மண்ணையும் காத்து நிர்வகிக்க வேண்டும். சுற்றுச்சூழலில் அதன் பங்கு உயர்வாக மதிக்கப்பட வேண்டும். நிலத்தில் மேற்பரப்பு தாவரங்களுக்கு உணவளிக்கும் உயிர்க்களமாகவும், விலங்குகளின் இல்லமாகவும் அது திகழ்கிறது. தண்ணீரை வடிகட்டி அதன் தரத்தைக் காக்கிறது. மொத்தத்தில் சூழல் சமன்பாட்டைப் பராமரிக்க அது உதவுகிறது. (2) மனிதர்கள் உயிர் வாழ்வதை முழு அளவில் சாத்தியமாக்கியது மண்ணாகும். எனவேதான், மண் பெண்ணாகவும், தாயாகவும் கீழைத்தேயக் கலாச்சாரங்களால் நோக்கப்பட்டது. தமிழ்ப்பண்பாடு மண்ணக மடந்தைக்கு அறவிழுமியங்களை காப்பாற்றும் பொறுப்பையும் வழங்கியது. அதனடிப்படையில்தான் பூமியில் நீதிக்குப் புறம்பான செயல்களும், முறையற்ற காரியங்களும் நடந்தால் பூமித்தாய் பொறுக்கமாட்டாள் நிலம் இரண்டாகப் பிளக்கும், கோபம் கொள்வாள் என்பன போன்ற நம்பிக்கைகள் தமிழ்ச்சமூகத்தில் எழுந்தன. காட்சிக்காதையில் சேரனைக் கூறும்போது, “மண்களி நெடுவேல் மன்னவன்” (காட்சிக்காதையில் -64) என்பார். அதாவது, மண்மகள் களிப்பெய்தும் அளவுக்கு நல்லாட்சி புரிந்த மன்னவன் என்பது பொருளாகும். இந்தப் பண்பாடு பூமிக்கு வழங்கிய பாத்திரத்தை இளங்கோவடிகள் தமது காப்பியத்தில் எடுத்துக் கொண்டு மண் ஒரு பெண்ணின் அவலத்திற்கு நெட்டுயிர்ப்பதாக, மயங்குவதாக, துயருறுவதாகக் காட்டுகிறார்.
மலர்கள் அழுதல்
வைகையாற்றைக் கடந்து கோவலனும் கண்ணகியும் காவற்காடு சூழ்ந்த அகழியைச் சுற்றி மதுரைக்குச் செல்கின்றனர். அப்போது அகழியில் மலர்ந்துள்ள கரிய, நெடிய குவளை மலரும், தாமரை மலரும் கண்ணகியும் கோவலனும் தனித்தனியே அடையப்போகும் துயரத்தினை ஐயமில்லாமல் அறிந்தவை போல அழுதனவாம். அம்மலர்களைச் சூழ்ந்து வண்டுகள் ரீங்காரிப்பது அழுவது போலவும், காற்றிலே மலர் அசைந்து தேன்சிந்தியதானது அவை உடல் நடுங்கிக் கண்ணீர் சிந்தி அழுதது போல இருந்ததாம்.
“கருநெடுங்குவளையும் ஆம்பலும் கமலமும்
தையலும் கணவனும் தனித்துஉறு துயரம்
ஐயமின்றி அறிந்தன போல
பண்நீர் வண்டு பரிந்தினைந்து ஏங்கிக்
கண்ணீர் கொண்டு கால்உற நடுங்க” (13;184-188)
என்பார் அடிகள்.
பிறருக்காக வருந்துதல் எனும் பண்பு மனிதனுக்கு உரியதாகக் கருதப்படுகிறது.
அப்பண்பை ஆற்றுக்கும், குவளை, ஆம்பல், தாமரை முதலிய சிறு தாவரங்களுக்கும் ஏற்றிக் கூறியிருப்பதன் மூலம் அவற்றின் இருப்பிற்கு சிறப்பு கற்பிக்கப்படுகிறது. இளங்கோவடிகளால் ஏற்றிக் கூறப்படும் இயற்கைப் பொருட்கள் செழிப்புடன் விளங்குகின்றன. கரையோர மரங்களின் பூக்களால் நிறைந்து, நீர்பரப்பு தெரியாமல் பாயும் பூம்புனல் ஆறு, வண்டுகள் மொய்க்கும், தேன்சிந்தும் மலர்கள் ஆகியவையே இளங்கோ காண்பவையாகும். ஆனால் அவற்றை, அதன் வளத்தை அதற்கெதிரான அவலத்திற்கு, அழிவிற்கு வருந்துவதாகக் குறிப்பேற்றிக் கூறியிருப்பது சிறந்த முரணாகும். அடிகள் அவ்வாறு பாடியிருப்பது அவரது அழுத்தமான, வெளிப்படையான சூழலியல் உணர்வையேக் காட்டுகிறது. காப்பியத்தில் அவற்றிற்கு முக்கியமான இடம் அளிப்பதன் மூலம் உயிர் மண்டலச் சூழலில் அவற்றிற்கு இருக்கின்ற முக்கியமானப் பங்கை அடிகள் உணர்த்துகிறார்.
நிலையியல் உயிர்களும் காதல் உணர்வும்
இளங்கோ கானல்வரியிலே நெய்தல் நிலத்தையும், நெய்தல் நிலக் கருப்பொருளையும் சிறப்பாகப் பாடுகிறார். அன்னம், நாரை, அடப்பங்கொடி, நெய்தல் பூ, கடல், மாலை நேரம் ஆகியவற்றை விளித்துக் கவிதைப் பொருள் பேசப்படுகிறது.
கோவலன் அன்னத்தை நோக்கி,
“சேரல்மடவன்னம் சேரல் நடை ஒவ்வாய்
சேரல்மடவன்னம் சேரல் நடை ஒவ்வாய்
ஊர்த்திரை நீர் வேலி உழக்கித் திரிவாள்பின்
சேரல்மடவன்னம் சேரல் நடை ஒவ்வாய்”
(7;23)
என்கிறான். “அன்னமே அவளோடு நடக்காதே. உலகில் உள்ளாரை அழகால் கொன்று திரியும் அவளோடு நடக்காதே” என்று மாதவியைப் பழிக்கும் குறிப்புடன் இப்பாடல் அமைந்துள்ளது.
மாதவி நாரையை நோக்கி, “எம் கானலிடத்து வராதே. என் காதல் நோயை எடுத்துரைக்க மாட்டாத நீ என் கானலிடத்தே வராதே” என்ற பொருள்படப் பாடுகிறாள்.
“அடையல் குருகே அடையல் எம்கானல்
அடையல் குருகே அடையல் எம்கானல்
உடைதிரு நீர்ச் சேர்ப்பற்கு உறுநோய் உரையாய்
அடையல் குருகே அடையல் எம்கானல்”
(7;46)
என்பது பாடல்.
இப்பாடல் போன்றன பின்னாளில் ‘தூது’ எனும் தனி இலக்கிய வகை மலர்தலுக்குரிய தோற்றுவாயாக விளங்கின. தமிழ்க் கவிதை மரபு, இயற்கை சார் உயிரினங்கள், மாந்தர் உணர்வுகளைப் புரிந்து கொள்வன போன்றும், காதல் வளர்வதற்குத் தூது செல்வன போன்றும், எண்ணி இயங்கியதன் மூலம் சக உயிரினங்கள் பற்றிய நினைவு மனிதர்களிடம் உரமிடப்படுகிறது.
“காமம் மிக்க கழிபடர் கிளவி”யாக இளங்கோடிகள் அமைத்திருக்கும் கவிதைகளில், தலைவி பிரிந்து சென்ற தலைவனை எண்ணி, தாமும் அவனும் ஒருங்கிருந்த போது, அருகிருந்த இயற்கைப் பொருட்களை நோக்கி விளித்துத் தனது வேதனையை வெளிப்படுத்துகிறார்.
“தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டகல்க
அம்மென் இணர அரும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டோமால்”
(7;32)
இப்பாடலில் அன்னமும் அடுப்பங்கொடியும் தன் வேதனையை உணர்ந்தவனவாக எண்ணி அவைகளிடம் கூறுகிறாள். அடுத்தப் பாடலில்,
“இன்கள் வாய் நெய்தால் நீ எய்தும் கனவினுள்
வன் கணார் கானல் வரக்கண்டு அறிதியோ”
(7;33)
எனத் தலைவி நெய்தல் பூவை நோக்கி வினவுகிறாள். நெய்தல் பூவை தலைவன் இக்கானலுக்கு வருவதாகக் கனவு கண்டாயா? எனத் தான் தூங்காமையால் காண இயலாக் கனவை நெய்தல் பூ கண்டிருக்கும் எனத் தலைவி நம்பி கேட்கிறாள். இவ்வாறு மனிதனுக்கு மட்டுமே உள்ள உணர்வு நிலைகளைச் சிறு தாவரங்களுக்கும் கற்பிப்பதன் மூலம் இயற்கைச் சூழல் சங்கிலியைக் கட்டமைப்பதில் அவற்றின் பங்கு முக்கியமானது என்ற உள்உணர்வினை அடிகள் ஏற்படுத்துகின்றார் மேலும் அலை வீசும் கடல், குளிர்ந்த சோலை, நீர்த்துறை போன்றவற்றிடம் தலைவி கோபம் கொள்கிறாள். ஏனெனில் அவைகள், பிரிந்து செல்கின்ற தலைவனை தடுக்காத காரணத்தினாலேயாம்.
“ஊர்ந்த வழி சிதைய ஊர்கின்ற ஓதமே!
பூந்தன் பொழிலே!புணர்ந் தாடும் அன்னமே!
ஈர்ந்தண் துறையே இது தகாது என்னீரே!”
என அவற்றின் தகாத செயல் குறித்து தலைவி வருந்துகிறாள். தலைவனது தேர்ச்சக்கரத்தின் தடத்தினை அலைகளால் அழித்து விட்ட கடலிடமும் தலைவி பகை கொள்கிறாள். எனது காதலரின் நெடிய தேர் சென்ற வழி சிதையுமாறு செய்தால் உறவு போலிருந்த நீ, முன்னர் உறவு நிலைக் கெட்டு பகையாகிப் போனாய் என்று கூறுகிறாள். மாலைப் பொழுதை நோக்கியும் ‘என் உயிரை எடுத்துக்கொள்’ என இரந்து பாடுகிறாள்.
“என் ஆவி கொள்வாழி மாலை”
என மாலைப் பொழுதைக் கூறுகிறாள்.
இவ்வாறு கடல், நீர்த்துறை, சோலை ஆகியவற்றுடன் புனைவு நிலை உறவு பூணுவதும், தமது உணர்வுகளை அவற்றின் மீது ஏற்றிக் கூறி கவிதை யாப்பதும் இயற்கைக்கும், மனிதனுக்கும் உயிரோட்டமுள்ள உறவினைக் காட்டுவதாக அமைகிறது. மேலும் மனிதன் இயற்கையை தான் சாராத வேறொன்றாகக் கருதுதல், ஆதிக்கம் செய்ய நினைத்தல் ஆகிய எண்ணங்களைத் தடுப்பனவாகவும் அமைகின்றன.
அடிக்குறிப்புகள்
1. ராபர்டோ டாமாடோ, 1993 ; ‘ஆற்றின் மூன்றாவது கரை’, யுனெஸ்கோ கூரியர். (அக்) ப. 49.
2. சோபிபுக்காரி. 1999 ; ‘வதைப்படுமண்வளம்’, யுனெஸ்கோ கூரியர் (மார்ச்) ப.30.
துணைநூல் பட்டியல்
1. சாமிநாதய்யர், உ. வே. 1950 (ம.ப) ; ‘சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும்’ அடியார்க்கு நல்லாருரையும், சென்னை; கபீர் அச்சுக்கூடம்.
2. யுனெஸ்கோ கூரியர், 1993 (அக்டோபர் மாத இதழ்)
3. யுனெஸ்கோ கூரியர். 1999 (மார்ச் மாத இதழ்)

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.