Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

பட்டுக்கோட்டை வலியுறுத்தும் பெண்ணுரிமைகள்

முனைவர். சி. சேதுராமன்


தான் வாழ்ந்த காலத்திற்கு மட்டுமல்லாது எல்லாக் காலத்திற்கும் உரியவனாக ஓங்கி நிற்கும் கவிஞன்தான் தலைசிறந்த கவிஞன். அத்தகைய தகுதிகளுள்ள தலைசிறந்த கவிஞர்கள் வரிசையில் பொதுவுடைமை இயக்கத்தின் போர்வாளாகப் போற்றப்படுகின்றவர் பட்டுக்கோட்டைக் கலியாணசுந்தரனார் ஆவார். பாரதிதாசன் வழியில் நின்று பாடல்களைப் பாடியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவ்விருபெரும் கவிஞர்கள் விட்டுச் சென்றவைகளை எல்லாம் மக்கள் கவிஞர் தொட்டு முடித்தார்.

திரைத்துறையின் மூலம் தமது கருத்துக்களை மக்கள் கவிஞர் முலாம் பூசாமல் கூறினார். பட்டுக்கோட்டையாரின் பாடல்களை, "திரையிசையின் திருக்குறள்" என்பார் கவிஞர் முத்துலிங்கன். (என் பாடல்கள் சில பார்வைகள், பக்;87). குறைந்த வயதில் நிறைந்த அனுபவ அறிவு பெற்ற பொதுவுடைமைச் சிந்தனையாளராக மக்கள் உரிமைக்குக் குரல் கொடுக்கும் மக்கள் கவிஞராக விளங்குகிறார் பட்டுக்கோட்டை. மனித உரிமைகள் பறி போவதைக் கண்டு பரிதவிக்காது, அதற்காக மக்களை ஒன்று திரட்டி உரிமைகளை மீட்டெடுக்கப் போராடியவர் பட்டுக்கோட்டையார் எனலாம். பெண்கள் அடிமைகள் இல்லை என்று கூறி, அவர்களுக்கும் உரிமைகள் உண்டு என உணர்த்துகிறார்.மக்கள் கவிஞர் குறிப்பிடும் பெண்ணுரிமைகள்

பெண்மையால் மட்டுமே மனித வாழ்வு செம்மையடைகிறது. மனித குல வாழ்விற்கு உயர்வு தரும் அப்பெண்மையைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இதனை நன்கு உணர்ந்திருந்த பட்டுக்கோட்டையார், "பெண்மையில்லாத வாழ்வில் செம்மையில்லை-அதைப் பேணி வளர்க்காமல் நன்மையில்லை" (பட்டுக்கோட்டையார் பாடல்கள் ப.,172)என்று கூறுகிறார்.

பெண்மையைப் போற்றுக என்கிறார். இது, "தையலை உயர்வு செய்'' எனும் பாரதி கூற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கதாகும்.

பெண்களை இச்சமூகம் மென்மையானவர்கள் என்று கருதி வருகின்றது. மேலும் பெண்களால் எதுவும் செய்ய இயலாது எனச் சிலர் கருதுகின்றனர். பெண்கள் மென்மையானர்வர்கள் என்று கூறி பெண்களுக்கரிய வாய்ப்பினை இன்று மறுக்கின்றனர். இங்ஙனம் செய்தல் கூடாது; அவர்களால் எதுவும் செய்ய இயலும். அவர்களுக்கு உரிய வாய்ப்பினைக் கொடுத்தல் வேண்டும் என்பதை மக்கள் கவிஞர்,

"கோழைக்கும் வீரத்தைக் கொடுப்பவள் மங்கை
கொய்யாக் கனியாய் இருப்பவள் மங்கை
மன்னனைச் சகுந்தலை போல் மதிக்கவும் முடியும்
மணிமேகலை போல் வெறுக்கவும் முடியும்" (ப.கோ. பாடல்கள், ப.,195)

- என்று தெளிவுறுத்துகிறார். இப்பாடலின் மூலம் பெண்கள் சமூகத்தில் உரிய விதத்தில் மதிக்கப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்துகிறார். பட்டுக்கோட்டையார் தமது பாடல்களில் பின்வரும் பெண் உரிமைகள் குறித்துத் தெளிவாக எடுத்துரைக்கிறார். அவையாவன,

1, ஆண்-பெண் சமத்துவ உரிமை
2. குடும்பத்தில் சமத்துவ உரிமை
3. திருமணம் செய்து கொள்ளும் உரிமை
4. மறுமணம் செய்து கொள்ளும் உரிமை

என்பனவாகும்.1. ஆண், பெண் சமத்துவ உரிமை (Equality between men & women)

இச்சமூகத்தில் ஆண் - பெண் என்ற வேறுபாடு காலங்காலமாகக் காணப்படுகிறது. பெண்களுக்கு ஆண்களுக்குக் கிடைப்பதைப் போன்று எந்த உரிமைகளும் சுலபத்தில் கிடைத்து விடுவதில்லை. ஏனெனில் பெண்களுக்குச் சில நிபந்தனைகளுக்குட்பட்டே உரிமைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. பெண்ணின் நடத்தை குறித்த சமூகப் பார்வையே அவளுடைய உரிமைகளை நிர்ணயிக்கிறது. "பெண்கள் மீது மரவுநீதியாக உருவாக்கப்பட்டிருக்கும் முன் தீர்மானக் கருத்துக்களை, உயர்வு, தாழ்வு கற்பிக்கும் கற்பிதங்களைப் போக்கப் பன்னாட்டு அரசுகள் முயல வேண்டும்" என 1979-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டு வரப்பட்ட பெண்கள் மீதான அனைத்து வகைப் பாகுபாட்டிற்கெதிரான உடன்படிக்கையின் ஐந்தாவது பிரிவு எடுத்துரைக்கிறது.

அவ்வுடன்படிக்கையின் ஒன்றாவது பிரிவு, பாலியல் அடிப்படையில் மனித உரிமைகளை அடிப்படைச் சுதந்திரங்களைப் பெண்கள் அனுபவிப்பதிலிருந்து பாகுபடுத்தவோ, ஒடுக்கவே கூடாது என்று மொழிகிறது. மேலும் அதன் இரண்டாவது பிரிவானது, ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் தங்கள் அரசியல் சாசனங்களில் ஆண், பெண் என இரக்கின்ற பெண்கள் உரிமைகளுக்கெதிரான சட்டங்களை அகற்ற வேண்டும். என்ற ஒரு நபராலோ, நிறுவனத்தாலோ பெண்கள் பாகுபடுத்தப்படுவாராயின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற சட்டங்கள், பழக்க வழக்கங்கள், ஒழங்குகள், பெண்கள் மீதான பாகுபடுத்தலுக்குத் துணை போகுமானால் அச்சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என தெளிவுறுத்துகிறது. இதனை மக்கள் கவிஞர்,"ஆணுக்குப் பெண்கள் அடிமைகள் என்று
யாரோ எழுதி வைச்சாங்க - அதை
யாரோ எழுதி வைச்சாங்க- அதை
அமுக்கிப் பிடிச்சுக்கிட்டு விடமாட்டேன்னு
ஆண்கள் ஒசந்துகிட்டாங்க-பெண்கள்
ஆமைபோல ஒடுங்கிப் போனாங்க" (ப.கோ.பா, ப., 187)

- என எடுத்துரைத்து ஆண், பெண் எனப் பாகுபாடு பாராது அனைத்து உரிமைகளையும் பெண்களுக்கு வழங்க வேண்டும். அவர்களை அடிமைப்படுத்துதல் மனித உரிமை மீறலாகும் எனத் தெளிவுறுத்துகிறார். பெண்ணடிமை என்பது எழுதப்பட்ட வேதமாகவே கடைபிடிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, பெண்கள் வேறுவழியின்றி இதற்கு அடிமையாதல் கூடாது என்ற விழிப்புணர்வையும் மக்கள் கவிஞர் மொழிகிறார்.

பல்வேறு அரசாங்கங்கள் கடந்த சில ஆண்டுகளாக முனனேற்றமான சட்டங்களையும் சர்வதேச உடன்படிக்கைகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ள போதிலும் பல இலட்சக்கணனான பெண்கள் தொடர்ந்து ஆண்களின் கைகளில் வன்முறைகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். இல்லங்கள் அலுவலகங்கள், அகதிகள் மகாம்கள், உள்ளிட்டவற்றில் பெரும்பாலும் கண்களில் கசிந்தும் விழிகளுடனேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்களது மெளனம் காரணமாக இக்கொடுமைகள் வெளி உலகிற்குத் தெரிவதில்லை. சில சந்தர்ப்ப சூழல்களினால் அவர்கள் வாய்விட்டு அழும்போது மட்டும் அவர்களது கண்ணீர்க் கதைகள் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்திகளாக வெளிவருகின்றன.

பெண்களுக்கெதிரான பாகுபாடுகளை ஒழிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் இப்பொழுது 179 நாடுகளால் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள போதிலும் அதிகரித்த இராணுவ மயமாக்கல், புதிய தாராள பொருளாதாரக் கொள்கைகளின் ஆதிக்கம் எழுச்சி பெற்று வரும் அடிப்படைவாதஇயக்கங்கள் போன்றவை உட்பட பல்வேறு உலகப் போக்குகள் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கு முட்டுக்கட்டையான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளன.ஆண், பெண், என்ற பால் வன்முறைப் பிரச்சினைகள் மிக மோசமாக அதிகரித்து வருவது குறித்து விளங்கிக் கொள்வதற்கென ஐக்கிய நாடுகள் முகவர் நிலையம் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து வெளியிடப்பட்ட புள்ளி விபரங்கள் அதிர்ச்சி தருவனவாக இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக உலகெங்கும் 7 இலட்சத்திலிருந்து 40 இலட்சம் வரையிலான பெண்கள் பணம் கொடுத்து வாங்கப்படுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களில் 120,000க்கும் மேல் 500,000 வரையிலான ஐரோப்பிய நாடுகளில் மட்டும் விற்கப்படுகிறார்கள். அதிகமான பெண்கள் விபசார விடுதிகளை நடத்துவோராலும் தரகர்களாலும் வாடிக்கையாளர்களாலும் மட்டுமின்றி இந்தப் பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கபட்டட காவல் துறையினராலும் அடித்துத் துன்புறுத்தப்படுகிறார்கள். ((மனித உரிமைக் கண்காணி ஜனவரி2006 இதழ், பக்;8) தேசிய பெண்கள் ஆணையம் இந்தியா முழுவதும் 28 லட்சம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் ஈடுபடும் பெண்களில் 2.4 சதவீதம் பேர் 15-35 வயதுக்கு இடைப்பட்டவர்கள். 43 சதவீதம் பேர் சிறுமிகள். பெரும்பாலும் பின்தங்கிய பகுதியில்தான் பாலியல் தொழில் அதிகம் நடக்கிறது.வறுமையும் ஏழ்மையும் தான் அப்பாவிப் பெண்களை இத்தொழிலுக்கு இட்டுச் செலலும் முக்கியக் காரணிகளாக உள்ளன. பின்தங்கிய வேலைவாய்ப்பற்றப் பகுதியில்தான் பெண்களுக்கு உதிராகப் பிற அநீதிகளும் அதிகம் அரங்கேறுகின்றன. பெண்களுக்கெதிரான அநீதிக்குப் பாலினப் பாகுபாடும் முக்கியக் காரணமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது. (5.10.2009 தினமணிச் செய்தி) இச்சூழல் மாற வேண்டும். பாலின வேறுபாடு பாராது அனைத்துத் துறைகளிலும் ஆண், பெண் இருவருக்கும் அதிகார உரிமைகள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதனை மக்கள் கவிஞர்.

"இகத்திலிருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம்
அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம்" (ப.கோ.பா. ப., 150)

என்று கூறுகிறார். இப்பாடலில் உலகத்தில் உள்ளவை அனைத்திலும் ஆண்,பெண் இருவருக்கும் சம உரிமை உள்ளதை கவிஞர் சுட்டிக்காட்டி இருப்பது நோக்கத்தக்கது. மேலும், பாலின வேறுபாடு காரணமாக பெண்களை இழிவுபடுத்தும் நிலை களையப்பட வேண்டும் என்பதை,

"ஆளப்பிறந்தது பெண்ணரசு அது
வாழ நினைத்துக் கொண்டாடுவோம்" (ப.கோ.பா. ப., 102)

என்றும்,

"பெண்மையில்லாத வாழ்வில் செம்மையில்லை-அதைப்
பேணி வளர்க்காமல் நன்மையில்லை" (கே.ஜீவபாரதி(தொகு, ஆ. ப.கோ.பாடல்கள், பக்., 172,173)

-எனவும் சுட்டுகிறார் பட்டுக்கோட்டையார். உண்பது, உடுத்துவது, சமைப்பது, குழந்தைகளைக் கவனிப்பது உள்ளிட்டவை மட்டுமே பெண்களுக்கு உரியதல்ல. நாட்டை ஆள்வதற்கும் பெண்மைக்கு உரிமை உண்டு என இப்பாடலில் வலியுறுத்திக் கூறுகிறார். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகிதம் என்று கூறப்படும் நிலையில் பட்டுக்கோட்டையார் அனைத்திலும் 50 சதவிகிதம் எனக் கூறியிருப்பது நோக்கத்தக்கதாக அமைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான அநீதியைத் தடுக்க வேண்டுமெனில் பெண்கள் என்பவர்கள் சமுதாயத்தில் மதிக்கப்படக் கூடியவர்கள் என்ற மனநிலையை அனைவருடைய மத்தியிலும் உருவாக்க முயலவேண்டும். அப்போதுதான் பெண்களுக்கெதிரான குற்றங்களைக் குறைக்கலாம்.2. குடும்பத்தில் சமத்துவ உரிமை

"ஆண்-பெண் சமத்துவம் நிகழ வேண்டிய முதலிடம் குடும்பமே; அது பொய்யாது நிகழ்ந்தால் புவியெல்லாம் மகிழ்வே" என்றார் இங்கர்சால். 1979-ஆம் ஆண்டு ஐ.நா.பொதுப்பேரவை இயற்றியுள்ள, பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாகுபாடுகளை நீக்குவதற்கான ஒப்பந்தத்திலும் இதேபோன்று (Convention on the Elimination of all forms of Discrimationagainst Women) குடும்பத்தில சமத்துவம் நிகழவே பெரிதும் வலியுறுத்தப்பட்டிருப்பது ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கது. மனித குல முன்னேற்றத்திற்கு ஆண்-பெண் கூட்டுறவில் சிறக்கும் இல்லற வாழ்வும், அதன் ஏற்பாடாக விளங்கும் குடும்பமும்தான் உறுதியான அடிப்படை என்பதையே ஐ.நா. வலியுறுத்துகிறது. திருமண வாழ்க்கையில் இணையும் ஆணும், பெண்ணும் ஒருவர் மற்றவருக்காக வாழும் உயர் பண்பைப் பெற்றிருக்க வேண்டும் என இங்கர்சால் வலியுறுத்துகிறார் (இராஜ. முத்திருளாண்டி, இலக்கியத்தில் மனித உரிமைகள், ப., 96) 'குடும்பத்தலைவர்' என்பது ஆணுக்கு மட்டும் எப்போதும் உரித்தானதெனக் கொள்வது இகழ்வானதொரு உணர்ச்சி (infamous feeling) என்று அறிஞர் இங்கர்சால் குறிப்பிடுவது உன்னற்பாலதாகும்.

குடும்பமே சமுதாயத்தின் இயற்கையான அடிப்படையான அலகு ஆகும். சமுதாயத்திடமிருந்தும், அரசிடமிருந்தும் பாதுகாப்புப் பெறும் உரிமை குடும்பத்திற்குண்டு என அகில உலக மனித உரிமைப் பிரகடனத்தின் 16-வது பிரிவு எடுத்துரைக்கிறது. மனித இனத்தின் சரிபாதியாய் உள்ள பெண்களின் செயல்பாட்டை முடக்கவே 'குடும்பம்' எனும் நிறுவனம் செயல்படுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் பள்ளிக்கூடம் தனது குடும்பம் தான். இந்தப் பள்ளிக்கூடத்தில் விடைபெறும் நாள் கிடையாது. மனிதனின் வாழ்நாள் முழுவதும் பாடங்களும், படிப்பினைகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்தக் குடும்பம் என்னும் பள்ளியில் கற்பிக்கப்படும் பாடங்களை இடைக்காலத்தில் நாம் நுழைந்து திரும்பும் பள்ளியோ, கல்லூரியோ மாற்றுவதில்லை. மாற்றும் விதமாய் நம் கல்வித்திட்டங்களும் அமையவில்லை. மேலும்பள்ளிகளில் அல்லது கல்லூரிகளில் படிக்கப்படும் பாடங்களுக்கு, இந்தக் குடும்பப் பள்ளிகளிலிருந்து நாம் பெறும் பாடங்களை மாற்றும் சக்தி கிடையாது. காரணம் நம் பாடத்திட்டங்கள் வாசித்து மனப்பாடம் செய்த அதைத் திரும்பி ஒப்புவித்துத் தேர்வு பெறும் முறையில் அமைந்துள்ளன. இத்தகைய கருத்துக்கள் ஒரு வேளை நம் அறிவை வந்தடையலாமே தவிர மனதை வந்தடைவதிலலை. அறிவைச் சென்றடையும் பாடங்களைவிட, மனதைச் சென்றடையும் பாடங்களே மனிதவாழ்க்கையை மாற்றவல்லவை. உதாரணமாக நமது குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படும் பாடப் புத்தகங்களில் காணப்படும் குடும்பங்களின் நிலை எவ்வாறு உள்ளது? அம்மா சமைப்பாள், அப்பா நாளிதழ் படிப்பார், தம்பி விளையாடுவான், அக்கா வீட்டுச் சூழலைப் பார்ப்பாள். இவ்வாறாகவே குடும்பத்தைப் பற்றிய கருத்து நம் குழந்தைகளின் மனதில் விதைக்கப்படுகிறது. நமது பங்கேற்புடைய குடும்பமும் இத்தகைய அமைப்பு முறையிலேயே காணப்படுகிறது. தாய்க்கும் குடும்பத்திலுள்ள பிற உறுப்பினர்களான கணவன், குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் இடையிலான உறவு அன்பு, பாசம் என்ற தளைகள் மூலம் கட்டப்பட்டவைகளாக உள்ளன. இத்தகைய உறவு குடும்பம் நிலைத்து நிற்கவும் தொடர்ந்து இயங்கவும் உறுதுணையாக அமைகின்றன.

மேலும் குடும்பத்தில் ஆண், பெண் என்றும் கணவன் அனைத்து உரிமைகளையும் உடையவன், மனைவியானவள் அவனுக்குக் கீழ் அடங்கிப் போக வேண்டும் என்று கருதுவது குடும்ப வன்முறையைத் தூண்டும், உரிமையை மீறும் செயலாகும். 'ஓருயிர் ஈருடல்' ஆகியது உண்மை எனில் 'நானே தலைவன்' என ஆண் எண்ணுவது அகந்தையே தவிர, மலரும் அன்பின் வெளிப்பாடாக அது மணக்காது. ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும், 'அன்பு தவழ்கின்ற' மகிழ்ச்சி வாழ்க்கை அவனுக்கு இல்லாவிடில் வாழ்க்கை பொருளற்றதாக ஆகிவிடும். குடும்பத்தில் உருவாகும் மகிழ்ச்சிதான் செல்வம்; அதுவே உயிர். குடும்பம் என்ற அமைப்பில் ஆண-பெண் சமத்துவம் உறுதி பெற்றால்தான் அங்கிருந்து மகிழ்வு பெருக்கெடுக்கும். அடிப்படைச் சமுதாய அமைப்பான குடும்பம் நன்றானால், உலகம் நன்றாகும் என்று இங்கர்சால் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கதாகும். குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் சம உரிமை உடையவர்கள். ஒருவரை ஒருவர் மதித்து நடந்து கொள்ளல் வேண்டும். குழந்தை பெறுவது முதல் குடும்பத்தின் வரவு செலவுத் திட்டம் வரை இருவரும் சேர்ந்தே திட்டமிடுதல் வேண்டும். இதனை,

"பொறப்பு வளர்ப்புச் சட்டம்!
நாம-சேர்ந்து போட்டுக்கணும்"
"பொழப்பு இருப்பு நோட்டம்
அதையும் சேர்த்துப் போட்டுக்கணும்
அட வரவு செலவுத் திட்டம்
ஒண்ணா சேர்ந்து போட்டுக்கணும்"

- என்று கூறுகின்றார். குடும்பத்தில் வன்முறை இல்லாது அதனைக் குடியரசு போன்று நடத்துதல் வேண்டும் என்கிறார் கவிஞர். குடும்பத்தில் ஆண், பெண் இருவரும் சம உரிமையுடன் வாழ்தல் வேண்டும் என்று குடும்ப வன்முறைச் சட்டம் அவர் வாழ்ந்த காலத்தில் வரும் முன்னதாகவே அதனை உணர்ந்து கவிஞர் பெண்களுக்குரிய உரிமையை நிலைநாட்டுகிறார்.

குழந்தை பெறுவது பெண்களின் தார்மீகப் பொறுப்பு என்றும் குழந்தைகளை வளர்ப்பதும், அவளது கடமை என்றும் பெண்ணைக் கட்டாயப் படுத்தும் கொடுமை இன்று சமுதாயத்தில் நிகழ்கிறது. மக்கள் தொகை அதிகரிப்பதற்குப் பெண்ணே பிரதான குற்றவாளியாக்கப்பட்டு குடும்பநலத் திட்டங்களும் அவளையே குறிவைக்கின்றன. குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைகளில் 96 சதவிகிதம் பெண்களே செய்து கொள்கின்றனர். இத்தகைய பொறுப்புகளை ஆணும், பெண்ணும் சமமாகப் பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும். (மைதிலி சிவராமன், பெண்ணுரிமைகள் சில பார்வைகள், பக்;58) என்ற கருத்தினையும் பட்டுக்கோட்டையாரின் இப்பாடல்வரிகள் எடுத்தியம்புகின்றன. குடும்பநலத் திட்டத்தைச் செயற்படுத்துவதிலும் பெண்களுக்குச் சுய முடிவெடுக்கும் உரிமை உண்டு என்பதையும் கலியாணசுந்தரனார் இதன்வழி எடுத்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கர்சாலின் கருத்தானது பட்டுக்கோட்டையாரின் கருத்துடன் ஒத்திருப்பது ஒப்பிட்டு நோக்குதற்குரியதாகும்.ஆண்கள் செய்யும் அத்தனை கொடுமைகளையும் பொறுத்துக் கொள்வது பெண்களுக்குரிய விதிமுறையல்ல. அவர்கள் செய்வதைப் பெண்களும் திருப்பிச் செய்தால் ஆண்களின் பாடு திண்டாட்டமாகிவிடும். அதனால் ஆண்கள், பெண்களின் உரிமைகளில் தலையிடும் தங்களின் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்; குடும்ப வன்முறையைக் கைவிடல் வேண்டும் என்பதைப் பட்டுக்கோட்டையார்,

"ஆம்பளைக் கூட்டம் ஆடுற ஆட்டம்
அத்தனையும் பார்த்தோம் கேட்டோம்-அதை
ஆரம்பிச்சா தொ¢யும் திண்டாட்டம்" (ப.கோ.பா. பக்; 187)

என எடுத்துரைக்கிறார்.

குடும்பத்தைக் குடியரசு போல் (Republicanism of the family), நடத்துதல் வேண்டும் என்ற இங்கர்சாலின் கருத்திற்கேற்ப, பட்டுக்கோட்டையார்,

"அவரவர் மகைவிகளே அவரவர்களுக்கு மந்திரிகள் அன்பு கொண்டு குடியரசு புரிந்திடணும் ஆவதெல்லாம் பொதுவாய்த்தான் நடந்திடணும்"

- என்று மொழிவது உன்னற்பாலதாகும். கணவன், மனைவி இருவரும் சம உரிமையுடன் அனைத்தையும் பொதுவாகச் செயல்படுத்திக் குடும்பத்தைக் குடியரசு போல நடத்துவதால் குடும்பம் சிறக்கும் எனவும் கவிஞர் வலியுறுத்துகின்றார்.

3. திருமணம் செய்து கொள்ளும் உரிமை

தங்களின் எதிர்கால வாழ்க்கையைத் தக்க திருமணத்தின் வாயிலாக உறுதி செய்யும் உரிமை பெண்களுக்கு உண்டு. பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக, கட்டாயத் திருமணங்கள் நிகழ்த்தப்படக் கூடாது.அகில உலக மனித உரிமைப் பிரகடனத்தின் 16-வது பிரிவு, "மணமக்களின் முழுமையான சுய இசைவோடுதான் திருமண உறவு ஏற்படுத்தப்பட வேண்டும்" என்று தெளிவுறுத்துகிறது. மேலும்,மணம் புரிந்து கொள்வதற்கும் குடும்பம் அமைத்துக் கொள்வதற்குமான உரிமை உரிய வயதடைந்த அனைத்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் உண்டு" எனப் பெண்களுக்குத் திருமணம் செய்து கொள்ளும் உரிமை உண்டு என ஐ.நா.சபையின் அகில உலக மனித உரிமைப் பிரகடனம் பிரிவு 16 எடுத்துரைக்கிறது. இத்திருமணம் செய்துகொள்ளும் உரிமையினை மக்கள் கவிஞர்,

பெண்: "போட்டுக்கிட்டா ரெண்டுபேரும்
சேர்ந்து போட்டுக்கணும்
.......... ............
ஆண்: போட்டுக்கிட்டா - ஆமா
போட்டுக்கிட்டா - தாலி
போட்டுக்கிட்டா ரெண்டுபேரும்
சேர்ந்து போட்டுக்கணும்
பெண்: போட்டுக்கிடும் முன்னே நல்லா
பொண்ணும் புள்ளையும் பாத்துக்கணும்
புடிக்குதான்னு கேட்டுக்கணும்

ஆண்: புரிஞ்சுக்காம ஆரம்பிச்சா
ஆபத்திலே மாட்டிக்கணும்" (ப.கோ.பா. ப., 206) என்று நவில்கிறார். மணமக்களின் முழுமனச் சம்மதத்துடன்தான் திருமணங்கள் நிகழ்த்தப் பெற வேண்டும். அப்போதுதான் இல்லறம் நல்லறமாக இருக்கும். இத்திருமண உரிமை பெண்ணுரிமையாகும். பெற்றோர்கள் விருப்பப்படி, கட்டாயத்தின் பேரிலும் விருப்பமின்றிப் பெண்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. குடும்பத்தில் உள்ள பெரியோர்கள் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதில் விருப்பமா? என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பின்னர்தான் பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்தல் வேண்டும். மணமகனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு உண்டு என்ற திருமணம் செய்து கொள்ளும் உரிமையை இப்பாடல் வழி மக்கள் கவிஞர் எடுத்துரைக்கிறார். இங்கு தாலி என்பது ஆண் - பெண் சமத்துவ உரிமையைக் குறிக்கும் குறியீடாகக் கவிஞரால் கையாளப் பெற்றுள்ளது எனலாம்.4. மறுமணம் செய்து கொள்ளும் உரிமை

கணவன், மனைவி இருவருக்கும் எல்லா விதத்திலும் சமத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற மனித உரிமைகள் அமைப்பின் கோட்பாடுகளுக்கு ஒப்ப, பெண்களுக்கு மறுமணம் செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ள, கணவனைத் தெரிவு செய்ய, தேவையில்லையெனில் நிராகரிக்க, குழந்தைகள் பெறுவதைத் தீர்மானிக்க, குழந்தைகளுக்கு வேண்டிய கல்வியைத் தெரிவு செய்திட, குடும்பப் பெயரைத் தெரிவு செய்ய உரிமையுண்டு என தேசிய இன, மொழி, சமய சிறுபான்மையோர்க்கான ஐக்கிய நாட்டவையின் உரிமைப் பிரகடனம் பிரிவு 16 தெளிவுறுத்துகிறது.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பில் சரத்து (6. 2) இல் இது பற்றி பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி விவாகரத்து செய்து கொண்ட பின், பெண் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டவளாகிறாள். திருமண முறிவு பெற்ற பெண் விரும்பினால் தான் விரும்பும் மற்றொருவனை மறுமணம் செய்து கொள்ளும் உரிமை உண்டு. ஆண்கள் இவ்வுரிமையைத் தங்கு தடையின்றி காலங்காலமாக அனுபவித்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மறுமணம் செய்து கொண்டபின் தன் முதல் கணவன் மூலம் தனக்குப் பிறந்த குழந்தைகளைத் தான் விரும்பினால் வளர்க்கும் உரிமையும் அவளுக்கு உண்டு. இதற்குத் தனது இரண்டாவது கணவன் போதிய பாதுகாப்பு வசதிகளும் செய்து தரவேண்டும். குழந்தைகளை வளர்த்து, கல்வியளித்து, வேலைவாய்ப்புகளைத் பெற்றுத் தரவேண்டியது அவர்களுடைய பொறுப்பாகிறது. இது பிரிவு (16:1) இல் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கக் கூடாது என்பதையும், பெண்களின் திருமண நிகழ்வுகளிலும், குடும்பம் பற்றி விஷயங்களிலும் அவர்களுக்கு சமத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் இப்பிரிவு உள்ளடக்கியுள்ளது. பெண்களுக்குக் கட்டாயத் திருமணத்தை இது மறுத்துரைக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 494-வது பிரிவு மறுமணம் பற்றிக் குறிப்பிடுகிறது. அதன்படி பெண் தன்னுடைய கணவனை, சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏதேனும் காரணத்தால் விவாகரத்து செய்த பின், மறுமணம் செய்து கொள்ளும் உரிமை உண்டு என்றும், அவ்வாறு மறுமணம் செய்து கொண்ட பெண்ணுக்குத் தன் முதல் கணவனால் திருமண முறிவு பின் வழங்கப்பட்டு வந்த ஜீவனாம்சத் தொகை நீதிமன்ற முறைப்படி நிறுத்தப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது. எனவே இவ்விதி இந்துப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் உரிமையைச் செயல்படுத்த பாதுகாப்பும் வழங்கியுள்ளது. இந்தியாவில் விதவைகள் மறுமணத்திற்காகவும் அவர்தம் நல்வாழ்விற்காகவும் பாடுபட்டவர்களுள் ஒருவரான ஈஸ்வர சந்திர வித்யாசாகர் விதவை மறுமணத்தை ஆதரித்து, சங்கம் ஒன்றை அமைத்து அதன் மூலம் தனது கோரிக்கைகளையும் ஏற்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டார். 1856-ஆம் ஆண்டில்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் விதவை மறுமணம் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டது. இதன் மூலம் சமூகத்தில் விதவைகள் பயன்பெற வழி ஏற்பட்டது. அவர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த 'சதி' என்பன போன்ற கொடுமைகளிலிருந்து விடுபட்டனர். 'பெண்கள்' பெண்களாகக் கருதப்பட்டதுடன் மனித இனமாகவும் அவர்கள் கருதப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.மறுமணம் தொடர்பாக உள்ள பிரச்சினையை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். அவையாவன, 1. திருமண உறவு முறியும்போது, 2. கணவன் இறந்த போது என்பனவாகும். இவ்விரு நிலைகளில் இந்து சமயத்தைச் சேர்ந்த மகளிர் கணவன் உயிருடன் இருக்கும் போது உள்ள திருமண உறவு அவன் இறந்த பிறகும் தொடருவதாக கருதுகின்றனர். இதனால் கணவன் இறந்த பிறகு உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. இக்கொடுஞ்செயலை இராசாராம் மோகன்ராய் போன்ற சீர்திருத்தவாதிகள் எதிர்த்தனர். வில்லியம் பெண்டிங் இவ்வழக்கத்தை ஒழிக்க 1829-ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தார். விதவை மறுமணச்சட்டம் வந்த பின்னர் உடன்கட்டை ஏறும் வழக்கம் மறைந்தது. 1856-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதவை மறுமணச் சட்டம், விதவைகளுக்கு மறுமணம் செய்து கொள்ள உரிமை கொடுத்த போதிலும், முதல் கணவரிடம் பெற்ற சொத்துக்களை இழக்க வகை செய்தது. சமுதாய மறுமலர்ச்சி மாநாடு இச்சட்டத்தில் மாறுதல் மேற்கொள்ள விழைந்தது. மும்பையில் மாகாண சமுதாய மறுமலர்ச்சிக்குழு என்ற அமைப்பு 1938-ஆம் ஆண்டில் மறுமணச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வர எண்ணியது. அதனைத் தொடர்ந்து சட்டம் நிறைவேறியது.

இவ்விதவையர் மறுமணச் சட்டம் உயிர் வதையால் வாடிய பெண்களுக்கு உயிர் வாழ வழிகோலியது. இது பெண்களின் நிலையை உயர்த்தும் சட்டமாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டம் சமத்துவக் கோட்பாட்டை வலியுறுத்தியது. ஆண்கள் மற்றொரு மணம் புரிய வாய்ப்புள்ளது போன்று பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. பட்டுக்கோட்டையார் கணவன் இறந்தபின் வாடி வருந்திய இளம்பெண்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் எனத் தெளிவுறுத்தினார். பாவேந்தர் இவ்வுரிமையை,

"பேடகன்ற அன்றிலைப்போல் மனைவி செத்தால்
பெருங்கிழவன் காதல் செயப் பெண் கேட்கின்றான்
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ...?"

- என்று வலியுறுத்துகிறார். பாரதிதாசனிடம் பயின்ற பட்டுக்கோட்டையாரும் அவரைப் பின்பற்றி,

"மனைவி இறந்தபின் வயதான தாத்தாவும்
மறுமணம் பண்ணிக்கிட உரிமை யுண்டு இளம்
மங்கையை முடிப்பதுண்டு மண்டைவரண்டு-தன்
கணவனை இழந்தவள் கட்டழகியானாலும்
கடைசியில் சாகமட்டும் உரிமையுண்டு-இதில்
கதைகளும் கட்டிவிடும் ஊர்திரண்டு"

- என்று எடுத்துரைக்கிறார்.ஆணுக்கு உள்ள உணர்வுகளே பெண்ணிற்கும் இருக்கும்; அதனால் பெண்கள் ஆண்களைப் போன்று மறுமணம் செய்து கொள்வதற்கு உரிமை உடையவர்கள் என்று மக்கள் கவிஞர் தெளிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்களுக்குச் சம உரிமை கொடுத்து அவர்களைப் பேண வேண்டும். சமுதாயத்தில் பாலின வேறுபாடு பார்த்தல் கூடாது. குடும்பத்தைக் குடியரசு போன்று நடத்துதல் வேண்டும். ஆண்களுக்கு வழங்கப்படுதல் போன்று பெண்களுக்கும் சம அளவில் அதிகாரப் பகிர்வினை வழங்குவது சமுதாய முன்னேற்றத்திற்கு வழிகோலும்; இளம்விதவைப் பெண்கள் மறுமணம் புரிந்து கொண்டு உரிமையுடன் வாழவேண்டும் எனவும் பட்டுக்கோட்டையார் பெண்களுக்கு உரிய உரிமைகள் குறித்துத் தெளிவுற எடுத்துரைக்கிறார். மக்கள் கவிஞர் கூறும் மகத்தான வழியில்நடந்து பெண்மை நலம் பேணி உரிமைகளைப் பகிர்ந்து கொண்டு உரிமைகளுடன் வாழ்வோம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p27.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License