நறுந்தொகையில் கற்றல் கற்பித்தல்
முனைவர் ஏ. கோதண்டராமன்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (சுழல் - II),
மீனம்பாக்கம், சென்னை - 600 061.
முன்னுரை
கி. பி. 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதிவீரராம பாண்டியரால் இயற்றப்பெற்ற நூல் நறுந்தொகை ஆகும். நல்ல அறக்கருத்துகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் நறுந்தொகை எனப் பெயர் பெற்றது. இந்நூலின் தொடக்கத்தில் ‘வெற்றி வேற்கை வீரராமன்’ எனக் கூறப்பட்டிருப்பதால் இந்நூலினை ‘வெற்றி வேற்கை’ என்று கூறுவதும் உண்டு. வாழ்க்கைக்குத் தேவையான பல அறக்கருத்துகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. 82 பாடல்கள் இந்நூலுள் இடம் பெற்றுள்ளன. அத்தகைய நூலில் மனிதனை நெறிப்படுத்துகின்ற கல்விச் சிந்தனைகள் குறித்த செய்திகள் ஏராளமாகக் காணக்கிடக்கின்றன.
ஒரு மனிதனுடைய கல்வி அவனது பிறப்பில் தொடங்கி, வாழ்வு முழுவதும் தொடர வேண்டும். கல்வி மிகப் பயனுள்ளதாக இருக்க வேண்டுமெனில், பிறப்புக்கு முன்பே அதைத் தொடங்க வேண்டும். அதாவது, தாயே இக்கல்வியை இரு வழிகளில் பின்பற்ற வேண்டும். முதலாவது தன் முன்னேற்றத்துக்கென தான் கற்பது; இரண்டாவது, உருவெடுத்துக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தைக்கெனக் கற்பது. கற்றலும் கற்பித்தலும் பல்வேறு காரணிகளை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும். கல்வி என்பது அறிவு சார்ந்தது அல்லது வளர்ச்சி சார்ந்தது என்ற இரு வேறுவிதப் பார்வைகள் இருந்தன. இவ்விரு கொள்கைகளைப் பிரித்துப் பார்க்காமல் ஒன்றிணைத்துப் பார்த்தோமேயானால் கற்றல் முறையில் பல்வேறு வாய்ப்புகள் இருப்பதை உணரலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாகவேக் கற்றுக்கொள்ளும் திறன் உள்ளது. எனவே ஒரு ஆசிரியரின் பங்கு அவற்றை நெறிப்படுத்துவதே ஆகும். அவ்வகையான கற்றல் கற்பித்தல் குறித்து நறுந்தொகையில் ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
கல்வியின் சிறப்பு
தமிழில் அற நூல்கள் அனைத்தும் கல்வியின் பெருமை பற்றிப் பேசுகின்றன. உலகத்தில் நாம் தோன்றிய பின்பு நம்மைச் சார்ந்த பொருள்களில் ஒன்றையேனும் நம்மால் எடுத்துச் செல்ல இயலாது. “பிறக்கும் போது கொண்டு வந்ததில்லை, இறக்கும் போது கொண்டு போவதில்லை” என்பார் பட்டினத்தார். ஒன்றே ஒன்று நம்மையறியாதே நம்மிடம் ஒட்டிக்கொள்கிறது. பல பிறவிகளிலும் நம்மோடு இணைந்து வந்து கொண்டே இருக்கிறது. அது கல்வி என்னும் நுண்பொருள்தான் என்பார் வள்ளுவர்.
”ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து” (1)
ஒருவனைச் செல்வ நிலையில் உயர்த்துவதற்கென்று தற்காலத்தில் பல கல்வி நிலையங்கள் செயல்படுவதால் மாணவர்கள் இயல்பாகவே பண்பு நெறிகளில் பிறழ்ந்து விடுகின்றனர். பண்பு நெறிகளில் பிறழும் மாணவர்கள் அறநூல்கள் சொல்லும் அடக்கத்தை நினைத்துப் பார்ப்பது கூடக் கிடையாது. அவ்வாறன்றி ஒருவனுடைய உயர்வு நிலைக்குக் கல்வியே மிக அவசியம் என்பதை மறத்தல் கூடாது. கல்வியின் மேன்மையைக் கூறுமிடத்துத் திருத்தக்க தேவர்,
”கைப்பொருள் கொடுத்து நூல்கற்றல்
கற்பின் கண்ணுமாகும்
மெய்ப்பொருள் வினைக்கு நெஞ்சில்
மெலிவிற்கோர் கணையாகும்” (2)
என்ற பாடலில் உணர்த்துகிறார்.
கல்வி ஒன்றே உலகத்தில் நிலைத்த பெருமையைத் தருவது. செல்வம் நிலையில்லாதது. அது கள்வரால் கொண்டு செல்லப்படும்; வெள்ளத்தில் அழிந்து விடும்; வேந்தன் சீறின் கவர்ந்து கொள்வான்; எடுக்க எடுக்கக் குறையும். ஆனால் கல்விக்கு இத்தகைய ஆபத்துகள் இல்லை. அது மனிதனின் மூளையில் இருப்பது. கொடுக்க கொடுக்க வளருமேத் தவிர, குறையாது. அதுதான் உண்மைப் பொருள்; நுண்பொருள். “அறிவுடையார் எல்லாம் உடையார்” என்பார் வள்ளுவர். அவ்வாறிருக்கப் புறப்பொருட்களைத் தேடி அலைவானேன் என்பதை,
”வெள்ளத்தால் அழியாது வெந்தழலால்
வேகாது வேந்தராலும்
கொள்ளத்தான் இயலாது கொடுத்தாலும்
நிறைவொழியக் குறைபடாது
கள்வர்க்கோ பயமில்லை காவலுக்கோ
மிக எளிது கல்வி என்னும்
உள்ளத்தே பொருளிருக்க உலகெங்கும்
பொருள்தேடி அலைவதென்னே?” (3)
எனக் கல்வியின் சிறப்பைப் பற்றிக் கூறக்கூடிய மிகச்சிறந்த பாடல், இதைத்தவிர வேறு இருக்க முடியாது. இத்தகைய சிறப்புமிக்க கல்வியை நமக்குக் கற்றுக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள், தன் மாணவனை ஒரு மருத்துவனாகவும், பொறியாளனாகவும், வழக்கறிஞனாகவும் மாற்றக்கூடிய வல்லமை உடையவர்கள். ஆசிரியர்ப்பணி என்பது மிகச் சவாலாகக் கருதப்படும் காலக்கட்டத்தில் நாம் இருக்கின்றோம். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அஞ்சியிருந்த காலம் மறைந்து, இன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அஞ்சும்படியாக மாறி வருகிறது.
மொழிக்கு உறுப்பாகும் எழுத்துகளைக் கற்றுக்கொடுத்து மொழியில் புலமைபெற உதவிய ஆசிரியன் இறைவனாவான் என்பதை,
”எழுத்தறி வித்தவனிறைவ னாகும்”
(வெற்றி. 1)
என்னும் அடியின் மூலம் ஆசிரியர்கள் மீது சமுதாயம் வைத்திருந்த நன்மதிப்பை அறிந்து கொள்ள முடிகிறது. ஆசிரியர்களை மரியாதையாகவும் முன்மாதிரியாகவும் பார்த்த சமுதாயத்தின் பார்வை இன்று மாறிவிட்டதைப் பார்க்க முடிகிறது. ஆசிரியரின் ஒவ்வொரு கண்டிப்பும் தன்னுடைய வளர்ச்சிக்காக என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளும் பக்குவம் பெற வேண்டும்.
கற்பித்தல் முறை
ஆசிரியரின் திறன் என்பது மாணவருக்குக் கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்துவதே ஆகும். புயல் வேகத்தில் கற்பிக்காமல், செயல்வழியேப் புரியும்படி செய்து காட்ட வேண்டும்.
நல்லவர்கள் இருக்கும் சபையில் நல்ல சொல்லையும் பொருளையும் தம் அச்சத்தின் காரணமாக அவர்கள் மனம் ஏற்கும்படி சொல்ல முடியாதவர்கள் பல நூல்களைக் கற்றவர் என்றாலும், உலகத்திற்குப் பயனற்றவரே என்பதை,
”பல்லவை கற்றும் பயம் இலரே நல்அவையுள்
நன்கு செலச்சொல்லா தார்” (4)
என்றும்,
”எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்
கண் என்பவாழும் உயிர்க்கு” (5)
என்றும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
சிறப்பாகக் கல்வியறிவு பெற்று உயர்நிலை அடைந்தோம் என்று கூறிக் கொள்வது; அக்கல்வியால் பெற்ற கருத்துகளைக் குற்றமின்றித் தெளிவாகப் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதில் இருக்கிறது என்பதனை,
”கல்விக் கழகு கசடற மொழிதல்” (வெற்றி. 2)
என்று குறிப்பிடுகிறது.
பாடக்கருத்துகளுடன் பொது அறிவுத் தகவல்கள், நடப்பு நிகழ்வுகள், பழங்கால நிகழ்வுகளையும் எடுத்துக்கூற வேண்டும். பாடப்பொருளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விடப் பாடத்திறன்களை மாணவர் பெறும் வண்ணம் கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவரின் தகுதிக்கேற்றவாறு கற்பித்தல் வேண்டும்.
கற்றது கடுகளவு என்பதை உணர்ந்து ஆசிரியர் என்பவர் எப்பொழுதும் கற்றுக் கொள்பவராக இருக்க வேண்டும். அறிவைப் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
கற்றலின் சிறப்பு
இளமையில் கற்கும் கல்விதான் ஒரு மனிதனை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. இளமையில் கற்கின்ற கல்வி அவனது நெஞ்சில் பசுமரத்தாணிபோல் எளிதில் சென்று பதியும். எனவேதான்,
”இளமையில் கல்” (6)
என்று அவ்வையார் பாடியுள்ளார். இளமையில் கற்காமல் மனம்போன போக்கில் வாழ்கிறவர்கள் முதுமையில் துன்பப்பட நேரிடும். எனவே ஒவ்வொருவரும் இளமையில் முயன்று கல்வி கற்றல் வேண்டும்.
கல்வி ஒருவனை அறிவாளி ஆக்குகிறது. அறியாமை எனும் இருளைக் கல்வி எனும் ஒளிதான் போக்குகிறது. அத்தகைய கல்வி கற்றல் நன்மை விளைவிக்கும் செயலாகும். அதனைப் பிச்சையெடுத்தேனும் கற்க வேண்டிய வயதில் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை,
”கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே” (வெற்றி. 35)
என்றும்,
கல்வி அறிவில்லாத ஒருவன் தன்னுடைய குலத்தின் சிறப்பைப் பேசுவது பயனற்றது. அது நெற்கதிரில் விளைந்த பதரைப் போன்று பயனற்றதாகும் என்பதை,
”கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுட் பிறந்த பதராகும்மே” (வெற்றி. 36)
என்ற பாடலடிகளில் கற்றலின் சிறப்பை உணர முடிகிறது.
கல்வியினால் பெறும் கற்றதலாகிய அறிவு அழியாத செல்வம் என நினைத்து அறிவுச் செல்வத்தைப் பெறும் பொருட்டு அதனைக் கைவிட்டுவிடாமல் காத்துக் கொள்ள வேண்டும் என்பதனை,
”ஓதுவது ஒழியேல்” (7)
என்றும், சிறந்த சொல் வளமும் பொருள் வளமும் நிறைந்த நூல்கள் பலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும் என்பதனை,
”நூல்பல கல்” (8)
என்றும் குறிப்பிடுகிறது.
கற்றவரின் சிறப்பு
கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பது ஆன்றோர் வாக்கு. கற்றுணர்ந்த வறியோர்க்குக் கல்வி அழகே அழகாவதன்றி, அவருக்கு உடலில் அணியப்படும் வேறு அணிகலன்கள் தேவையில்லை என்பதனை,
”கற்றோர்க்குக் கல்வி நலனே கலன் அல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம்…” (9)
என்ற பாடலடிகள் உணர்த்துகிறது. மேலும் அறக்கோட்பாடுகளைக் கற்றறிந்த சான்றோர்களைப் பழிச்சொற்களால் பழிக்க வேண்டாம் என்பதை,
”கற்றவரை யொருநாளும் பழிக்க வேண்டாம்” (வெற்றி. 4)
என்ற பாடலடிகள் உணர்த்துகிறது.
எந்தக்குலத்தில் பிறந்தாலும் யாராக இருந்தாலும் கல்வியறிவு பெற்றவர்கள் எந்த இடத்திலும் மதிக்கப்படும் பேறு பெறுவார்கள் என்பதை,
”எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர்” (வெற்றி. 38)
என்னும் பாடலடி உணர்த்துகிறது. இப்பாடல்,
”வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே” (10)
என்ற புறநானூற்றுப் பாடலை நினைவூட்டுகிறது.
அறிவுடைய ஒருவனை நாடாளுகின்ற அரசனும் விரும்புவான் என்பதை,
”அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்” (வெற்றி. 39)
என்றும், அச்சத்தை மனதில் கொண்டு அறிவில்லாத புதல்வர்களைப் பெற்றெடுப்பதைவிடக் குலம் தழைப்பதற்கு வாரிசு இல்லாமல் போனாலும், அதனை விடுத்து மகிழ்ச்சியாக இருப்பதே நல்லதாகும் என்பதை,
”அச்சமுள் ளடக்கி அறிவகத் தில்லாக்
கொச்சை மக்களைப் பெறுதலி னக்குடி
எச்சமற் றேமாந் திருக்கை நன்றே” (வெற்றி. 40)
என்றும், கல்வியறிவாலும் குணத்தாலும் சிறந்த சான்றோர்கள் இல்லாத பழமையான நகரத்தில் வாழ்வதைவிடத் தேன் தேடி அலையும் குறவர்கள் வாழும் மலைப்பகுதியில் வாழ்வது நன்மையாகும் என்பதனை,
”சான்றோ ரில்லாத் தொல்பதி யிருத்தலின்
தேன்றேர் குறவர் தேயம் நன்றே” (வெற்றி. 64)
என்ற பாடலடிகள் உணர்த்துகிறது. இதனை ஒத்ததாகவே கற்றலாகிய செயலைச் செய்யாமல் ஒரு நாளும் வாழ வேண்டாம் என்பதை,
”ஓதாம லொருநாளும் இருக்க வேண்டாம்” (11)
என்று குறிப்பிடுகிறது.
முடிவுரை
ஆசிரியரை இறைவனோடு ஒப்பிட்டுக் கூறியிருப்பதன் மூலம் சமுதாயத்தில் ஆசிரியருக்கு இருந்த நன்மதிப்பை அறிந்துகொள்ள முடிகிறது. கற்றுக்கொண்ட கல்விக்குச் சிறப்பு, குற்றம் இல்லாமல் எடுத்துக் கூறுதலாகும் என்பதன் மூலம் கற்பித்தல் முறையை உணர்ந்து கொள்ளலாம்.
பிச்சையெடுத்தேனும் கற்க வேண்டிய வயதில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கற்றலின் சிறப்பைப் பறைசாற்றுகிறது. கல்வியறிவு பெற்றவர்கள் எந்த இடத்திலும் மதிக்கப்படும் பேறு பெறுவார்கள் என்பதன் மூலம் கற்றவரின் சிறப்பை அறிய முடிகிறது.
அடிக்குறிப்புகள்
1. குறள். 398
2. சீவக சிந்தாமணி, பா. எ. 1295
3. விவேக. சிந்.
4. குறள். 728
5. மேலது. 392
6. ஆத்தி. பா. எ. 29
7. மேலது. 11
8. மேலது. 70
9. நீதிநெறி. பா. எ. 13
10. புறம். பா. எ. 183
11. உலக. பா. எ. 99
துணைநூற்பட்டியல்
1. வேங்கடசாமி நாட்டார், ந. மு. (உ. ஆ), நறுந்தொகை, கழக வெளியீடு, சென்னை. (1997)
2. பரிமேலழகர், (உ. ஆ), திருக்குறள், கழக வெளியீடு, சென்னை. (1964)
3. ஒளவை துரைசாமிப்பிள்ளை (தொ. ஆ), சீவகசிந்தாமணி - சுருக்கம், கழக வெளியீடு, சென்னை. (1941)
4. மாணிக்கவாசகன், ஞா, விவேக சிந்தாமணி, உமா பதிப்பகம், சென்னை. (1995)
5. புலவர் குழந்தை, நீதிக்களஞ்சியம், சாரதா பதிப்பகம், சென்னை. (2009)
6. அரசு (தொ. ஆ), நீதி நூல்கள், கங்கை புத்தக நிலையம், சென்னை. (2000)
7. குமரகுருபர், நீதிநெறி விளக்கம், திருப்பனந்தாள் காசி மடம், தருமபுரம். (1960)
8. ஒளவை துரைசாமிப்பிள்ளை (உ. ஆ), புறநானூறு, கழக வெளியீடு, சென்னை. (2007)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.