ஔவையார் பாடிய அதியமானின் கொடை
முனைவர் சி.சேதுராமன்
தமிழாய்வுத் துறைத்தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்னாட்சி), புதுக்கோட்டை.
வண்ண முகிலென வாரி வழங்கும் வள்ளற் பெருமக்களைப் பெற்று வளர்த்த பெருமை உடையது தமிழகம். கடையெழு வள்ளல்களைக் கொடையாகப் பெற்றது அது. பாரி, ஓரி, காரி, அதியன், பேகன், ஆய், நள்ளி என்ற எழு வள்ளல்களுள் தலை சிறந்து விளங்குபவன் அதியமான். கடைச்சங்கக் காலத்திலும், கடைச்சங்கம் மருவிய காலத்திலும் வாழ்ந்த காரணத்தாலேயே அவ்வள்ளல்கள் கடையெழு வள்ளல்கள் என அழைக்கப்படுகின்றனர். (1) அதியமான் ஒப்பாரும் மிக்காரும் இல்லாப் பெரும் கொடைஞன். அவனுடைய கொடைச் சிறப்பை ஔவையார் பாடியுள்ள விதம் விதந்து போற்றுதற்குரியதாக புறநானூற்றில் அமைந்துள்ளது.
வள்ளல் தன்மை
பழுமரம் நாடும் பறவைகளென இரவலரும், புலவரும், விறலியரும் அதியமானை நாடிச் சென்றனர். தந்தையை ஒப்பத் தம்மை நாடுபவரின் மனம் மகிழுமாறு பரிசில் வழங்கிச் சிறப்பிப்பான் அதியன். நெடுமானஞ்சியின் அருள் தன்மையினை,
‘‘யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருளறிவாரா ஆயினும் தந்தையர்க்கு
அருள் வந்தனவால்’’(2)
எனப் புகழ்கிறார் ஔவையார். பரிசிலருக்கு இனியனாக விளங்கும் அதியமானின் தன்மையை,
‘‘ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்ததுறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும! (3)
என்கிறார். ஈண்டு ஊரிலுள்ள சிறுவர்கள் பரிசிலராகவும், நீராட்டப்படும் யானை படியும் தன்மை அதியமானுக்கும் உவமையாக்கப்படுகிறது.
விருந்தோம்பல் பண்பு
வந்தாரை விரும்பி வரறே்கும் பண்பினன் அதியமான். புலவர் பாடுதற்குரியவை காதலும் வீரமும் என்பது அறிஞர் கருத்து. காதல் கற்போடு சேர்ந்தே சிறப்புறும். கற்போட சேராக் காதல் சிறிதும் மதிக்கப்படுவதில்லை. அங்ஙனமே வீரமும் கொடையோடு சேர்ந்தே சிறப்புறுவதாகும். கொடையோடு சேராத வீரத்தைப் புலவர் மதித்தலுமில்லை, பாடுவதில்லை.(4) அதியமான் நெடுமானஞ்சி வீரம் கொடைகளில் சிறந்து விளங்கினான்.
‘‘சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை’’(5)
என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு இலக்கணமாகத் திகழ்ந்தான். இதனை,
‘‘... ... ... சில்வளை விறலி
செல்வையாயின் சேணோன் அல்லன்
முனைசுட வெழுந்த மங்குல் மாப்புகை
மலைசூழ் மஞ்சின் மழகளிறு அணியும்
பகைப்புலத் தோனே பல்வேல் அஞ்சி
பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை
மெழுகுமெல் லடையிற் கொழுநிணம் பொருப்ப
வறத்தற் காலை யாயினும்
புரத்தல் வல்லன்’’(6)
என ஔவை விறலியை அதியமானிடம் ஆற்றுப்படுத்திக் கூறுவதிலிருந்து அறியலாம். இதில் அதியமானின் வள்ளற் பண்பும், வறட்சிக் காலத்தும் புரக்கும் விருந்தோம்பல் பண்பும் வெளிப்பட்டு நிற்பதனை அறியலாம்.
பரிசில் வேண்டுவோர் ஒரு நாள் இருநாளல்ல, பலநாள் வந்தாலும் அவர்கள் முதன்முறை வந்தபோது இருந்த விருப்பத்தோடு வந்தவர்களை மகிழ்விப்பான் என்பதை,
‘‘ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன்’’(7)
என்பர். இதன் மூலம் ‘பழகப் பழகப் பாலும் புளிக்கும்’ என்னும் மனநிலை அதியமானிடம் இல்லை என்பதை உணரலாம். வறியோர்க்கு வரையாது வழங்கும் வள்ளற் பெருந்தகை அதியமான்,
‘‘ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்’’(8)
என்னும் பொன்மொழிக்கேற்ப வாழ்ந்தான் என்பதை,
‘‘... ... ... என்றும்,
உண்டாயின் பதம் கொடுத்து,
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்’’ (9)
என ஔவையார் வறிஞர்களின் தலைவனாகிய அதியமானின் விருந்தோம்பல் பண்பினைக் கூறுகிறார். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் அதியமானின் பண்பை இதிலிருந்து உணரலாம்.
ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்தது
அதியமான் தனக்னெ வாழாதான். அரிதிற் பெற்ற பொருளாயினும் பிறர்க்குக் கொடுக்கும் இயல்பினன். நெடுங்காலம் வாழச் செய்யும் நெல்லிக்கனியை அரிதின் முயன்று பெற்றுத் தான் உண்ணாது ஔவைக்கீந்து மகிழ்ந்தவன். இவனது உயரிய உள்ளத்தை ஔவையார், ‘தீங்கனியை சாதல் நீங்க எமக்கீந்தனையே!’ எனப் பாடியதோடு நில்லாது,
‘‘பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே’’(10)
என வாழ்த்தினார். கொடுப்பதில் மற்றையவரிலும் மேம்பட்டு நிற்கும் நிலையே கொடை வீரமாகும் (11). அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்து கொடை வீரனாகத் திகழ்ந்தான்.
ஏழு வள்ளல்களின் சிறப்பை வியந்தோதும் நத்தத்தனார் அதியமானின் சிறப்பை,
‘‘... ... ... மால்வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்து விளைதீம்கனி ஔவைக்கீந்த
உரவுச் சினம்கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக் கடல்தானை அதிகனும்’’ (12)
என நவில்வர். நீலமணி மிடற்று ஒருவன் போல வாழ்க என இறைவனோடு ஒப்புமைப்படுத்தி வாழ்த்தப்படும் சிறப்புக்கு என்றென்றும் உரியவனாகிறான்.
‘‘... வலம்படுவாய் வாளுக்கும் களம்படக் கடந்த தடக்கைக்கும் போரடு திருவிற்கும் புறம்பே நின்றது நெல்லிக்கனி, போரை வென்று கொண்டு வந்த பொருளன்று அது. போரை மறந்து, பேரூக்கம் கொண்டு அரியவிடங்களில் எல்லாம் சென்று அரும்பாடுபட்டுக் கொண்டு வரவேண்டும். சாதல் நீங்க ஈய வேண்டிய கனியை நிலையை இதற்காகத்தானே இப்பாடலை இவ்வாறமைக்கிறார் ஔயைார்! அறியேன்! என்று மு.கோவிந்தசாமி அவர்கள் குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது. (13)
இரவலர் போற்றும் பாங்கு
பெருஞ்சேரல் இரும்பொறையுடன் பொருத போரில் இரும்பொறையின் வேல் அதியமானின் மார்பை ஊடுருவியது. பெருங்கொடையாளன் வீழ்ந்ததைக் கண்ட இன்னுயிர் நண்பரான ஔவையார்,
‘‘சிறியகட் பெறினே எமக்கீய மன்னே!
பெரியகட் பெறினே
யாம்பாடத் தனான் மகிழ்ந்துண்ணு மன்னே!
சிறுசோற்றானும் நனிபல கலத்தன் மன்னே!
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே!
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயு மன்னே!
அம்பொடு வேல்நுடை வழியெலாந் தானிற்கு மன்னே!
நரந்தம் நாறுந் தன்கையாற்
புலவுநாறு என்றலைத் தைவருமன்னே!’’
எனக் கையற்றார். அதியமான் மார்பகத்துத் தைத்த வேல் அவனை மாத்திரம் தைத்ததன்று,
‘‘அருந்தலை யிரும்பாணர் அகன் மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவைசோர
அஞ்சொல் நுண்டேர்ச்சிப் புலவர்நாவிற்
சென்று வீழ்ந்தன்றவன்
அருநிறத் தியங்கிய வேலே’’ (14)
எனப் பாடுவார் ஆசிரியர். எம்மிறைவன் எவ்விடத்துள்ளான் கொல்லோ! என இறந்த அதியமானை நினைந்து நினைந்து நெஞ்சம் நெக்குருகிக் கண்ணீர் சிந்தப் புலம்புகிறார். தலைாய நட்பிற்கும் கொடைக்கும் இலக்கணமான அதியமானின் பிரிவு ஔவையாருக்குப் பேரிழப்பாகியது. அதியமான், இரப்போர்க்கு இல்லை என்று கூறாது உண்டியும் உறையுளும் கொடுத்த மாண்பினனாக விளங்கினான்.
அடிக்குறிப்புகள்
1. 14-வது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, தொகுதி1, ப., 269.
2. புறம்., பா.எ., 92
3. புறம்., பா.எ., 94
4. ஆ. பூவராகம்பிள்ளை, புலவர் பெருமை, ப., 24
5. திருக்குறள்- 230
6. புறம்., பா.எ., 103
7. புறம்., பா.எ., 101
8. கலி., பா.எ., 133
9. புறம்., பா.எ., 95
10. புறம்.,பா.எ.,91
11. வீ. மீனாட்சி, இலக்கிய வாழ்வு, ப., 23
12. சிறுபாணாற்றுப்படை, 99-103-வது வரிகள்
13. கோவிந்தசாமி மு., ஔவையாரும் நக்கீரரும், ப., 30.
14. புறம். பா.எ.,235
துணைநூற்பட்டியல்
1. கோவிந்தசாமி, மு. ஔவையாரும் நக்கீரரும், தேன்மொழிப் பதிப்பகம், சென்னை, 1980.
2. மீனாட்சி, வி., இலக்கிய வாழ்வு, வர்தா பதிப்புக் கழகம், சென்னை – 5, 1967.
3. 14-வது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, தொகுதி-1, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், 1982.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.