ஐங்குறுநூற்றில் குறிஞ்சி நிலக் காட்சிகள்
முனைவர் பா. ஈஸ்வரன்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (ஆங்கிலத்துறை),
கலிசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணன்கோவில்.
முன்னுரை
குறிஞ்சித் திணையைப் பாடுவதிலும் புனைவதிலும் வல்லமையும் சிறப்பும் பெற்றவர் என்பதில் கபிலருக்கு நிகர் வேறு எப்புலவருமில்லை எனலாம். இவர் மலைநாட்டு அரசருக்கு நண்பராகவும், மலைநாட்டில் சிறிது காலம் தங்கி வாழ்ந்தவருமாதலால் குறிஞ்சி நிலத்தின் வளத்தினைச் செறிவுடன் வருணித்துள்ளார். இவ்வருணனைகளைப் படிக்கும் பொழுது குறிஞ்சி நிலமும், குறிஞ்சி நிலத்தின் வளமும் மனக்கண்முன் தோன்றிக் காட்சியளிக்கும். அந்தளவிற்கு ஐங்குறுநூற்றில் குறிஞ்சி நிலமானது சிறந்த காட்சிப் புனைவுகளுடன் காணப்படுகின்றது. மலையும் மலை சார்ந்த நிலப்பகுதியும் குறிஞ்சி என்று அழைக்கப்படும். ஐங்குறுநூற்றுக் குறிஞ்சித் திணையில் மலை பற்றிய வருணனைக்காட்சிகள் பெரும்பான்மையாக இடம் பெற்றுள்ளன. பெரும்பான்மையாக மலை பற்றிய காட்சிகள் இடம் பெற்றாலும், அடிவரையறையின் காரணமாக சுருங்கிய அடிகளில் வருணனைகள் இடம் பெற்றுள்ளன. சுருங்கிய அடிகளில் வருணனைகள் அமைந்தாலும், வருணனைகள் பொருளாழத்துடன் விரிவுபெறுவதற்கு இடம் தருகின்றன. ஆகையால், இக்கட்டுரையானது குறிஞ்சி நிலம் பற்றிய காட்சிகள் குறித்து விரிவாக ஆய்வதாக அமைகின்றது.
குறிஞ்சி நிலம்
குறிஞ்சி நிலமானது, 1. மலை, 2. வரை, 3. வெற்பு, 4. குன்று, 5. குன்றம், 6. சிலம்பு, 7. கல், 8. சாரல், 9. அடுக்கம், 10. அடுக்கல், 11. கவாஅன், 12. வியலறை, 13. காடு, 14. செறு, 15. பாலை, 16. புன்புலம், 17. சோலை என்னும் பதினேழு சொல்லாட்சிகளில் பொருட்கூறுகளோடு கபிலரால் வருணிக்கப்பெற்றுள்ளது. இப்புள்ளிவிவரங்களை ஆய்விற்குச் சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது.
மலை
குறிஞ்சி நிலம் என்றாலே மலையும் மலை சார்ந்த பகுதிகளும்தான் கண்முன் காட்சியளிக்கும். அந்த வகையில், குறிஞ்சி நிலமானது ‘மலை’ என்னும் பெயரில், ‘நெடு’மலை என்னும் அடைகளுடன் ஐங்.குறி. 202:1-4; ஐங்.குறி. 228:1-2 இவ்விரண்டு பாடல்களில் வருணிக்கப்பட்டுள்ளன. ‘ஓங்கு’ மலை, என்னும் அடைபெற்று ஐங்.குறி. 205:3 இவ்வொரு பாடலில் மட்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை இங்குச் சுட்டத்தக்கது. ‘மா’மலை, என்னும் அடைகளுடன் ஐங்.குறி. 224:1-4; ஐங்.குறி. 292:1-2 ஆகிய இவ்விரண்டு பாடல்களில் வருணனைக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ‘நம்’ மலை, என்னும் அடைபெற்று ஐங்.குறி. 226:1-3 என்னும் இவ்வொரு பாடலில் மட்டும் வருணனைக்காட்சி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘சேய்’மலை, என்னும் அடையுடன் ஐங்.குறி. 242:4-5 இவ்வொரு பாடலில் மட்டும் வருணிக்கப்பெற்றுள்ளது. ‘சூர்’மலை, என்ற அடைபெற்று ஐங்.குறி. 249:1-4 இவ்வொரு பாடலில் மட்டும் வருணனைப் புனைவுபெற்றுள்ளது என்பது இங்குச் சுட்டத்தக்க செய்தியாகும். ‘வள’மலை, என்ற அடைபெற்று ஐங்.குறி. 268:1-4 என்னும் இவ்வொரு பாடலில் மட்டும் வருணனைக்காட்சி புனையப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ‘நல்’மலை என்னும் அடைகளுடன் ஐங்.குறி. 219:1-3; 268:1-4; 273:1-3; 276:5-6; 286:1-3 ஆகிய இவ்வைந்து பாடல்களில் வருணனைக்காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆக, மொத்தம் ‘மலை’ வருணனையானது நெடு, ஓங்கு, மா, நம், சேய், சூர், வள, நல் என்னும் எட்டு அடைகளுடன் பதினான்கு (14) பாடல்களில் இடம் பெற்றுள்ளன என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட செய்தியாகும். இம்மலைக் காட்சிகளில் மலையின் நீளம், உயரம், அகலம், உரிமை, தூரம், அச்சம், வளம், பண்பு, நிறம் ஆகிய வருணனைக்கூறுகள் காணப்படுகின்றன. மலையை வெறுமனே அழகாக வருணிப்பது அல்லது புனைந்துரைப்பது கபிலரின் நோக்கமல்ல. மலையின் வளத்தினையும், சிறப்பினையும், எழிலையும் காட்சிப்படுத்த வேண்டும். இக்காட்சிகளின் வாயிலாக, அம்மலையிலுள்ள உயிரினங்களும் இன்புற்றிருத்தலை வெளிப்படுத்தவேண்டும் என்ற நோக்கம் கபிலருக்கு இருக்கின்றது. ஆதலால், இவ்வருணனைக் கூறுகளைக் கபிலர் மிக நுண்ணிய நுட்பத்துடன் காட்சிப்புனைவிற்குத் துணையாகக் கைக்கொண்டுள்ளார் என்பதனை அறிய முடிகின்றது.
பசுமைமிக்க மலையானது உணவு தானியங்கள் விளைந்திருக்கும் வளம் மிகுந்த புலமாகக் காட்சியளிக்கின்றது. இக்காட்சியை,
“தாஅய் இழந்த தழுவரிக் குருளையொடு
வளமலைச் சிறுதினை உணீஇ கானவர்
வரைஓங்கு உயர்சிமைக் கேழல் உறங்கும்
நல்மலை” (1)
எனும் பாடலடிகளில் காணமுடிகின்றது. பகல் பொழுதில் தாயை இழந்த பன்றிக்குட்டியும், தந்தைப் பன்றியும் சிறுதினையை உண்டு, அம்மலை உச்சியில் உறங்குகின்றது. அந்தளவிற்குச் சிறுதினைகள் அதிகளவில் விளைந்திருக்கின்ற வளமுடைய நல்ல மலையாக மலை விளங்குகின்றதை மேற்காணும் வருணனைக்காட்சி எடுத்துரைக்கின்றது.
சிறுதினைகள் மிகுந்து விளைந்த வளமுடைய பெரிய மலைநாட்டில், மழைப்பொழிவு வேண்டி மயில்கள் ஆடவும், பெரிய வண்டினம் ஒலிக்கவும் மழை பெய்திருக்கின்றது. இதனை,
“மயில்கள் ஆல பெருந்தேன் இமிர
தண்மழை தழீஇய மாமலை நாட!” (2)
எனும் பாடலில் காணமுடிகின்றது. மழை வளத்தினையுடைய பெரிய மலைநாட்டில் உயிரினங்கள் இன்பமுற்றிருந்தன என்பதும், மேற்கூறிய உயிரினங்கள் ஆடவும், ஒலிக்கவும் மழை பெய்யும் என்ற செய்தியை இப்பாடலின் மூலம் பெற முடிகின்றது.
வரை
குறிஞ்சி நிலமானது ‘வரை’ என்னும் சொல்லாட்சியில், வரை என்னும் பெயரிலேயே ஐங்.குறி.223:1-5; 253:1-2; 279:1-3 இம்மூன்று பாடல்களில் வருணனைக்காட்சியாக அமைந்துள்ளது. ‘மால்’வரை என்னும் அடையுடன் ஐங்.குறி. 208:1-5; ஐங்.குறி.289:1-4 இவ்விரண்டு பாடல்களில் வருணிக்கப்பட்டுள்ளன. ‘பெரு’வரை என்ற அடைபெற்று ஐங்.குறி.217:1-3; 220:1-3; 258:1-3 இம்மூன்று பாடல்களில் வருணனைக்காட்சி இடம் பெற்றுள்ளன. ‘அரு’வரை என்ற அடைபெற்று ஐங்.குறி. 223:1-3; 247:1-4; 272:1-3 என்னும் இம்மூன்று பாடல்களில் வருணனைக்காட்சி புனையப்பெற்றுள்ளன. ‘உயர்’வரை என்ற அடையுடன் ஐங்.குறி. 237:1-4 என்னும், இவ்வொரு பாடலில் மட்டும் வருணனைக்காட்சி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ‘மணி’வரை என்ற அடையுடன் ஐங்.குறி.250:1-4 என்னும் இவ்வொரு பாடலில் மட்டும் வருணனைக்காட்சியாக அமைந்துள்ளமை சுட்டத்தக்கதாகும். ‘நெடு’வரை என்ற அடை பெற்று ஐங்.குறி.251:3-4; 270:1-5; 287:1-2 இம்மூன்று பாடல்களில் வருணனை இடம் பெற்றுள்ளன. ஆகையால், குறிஞ்சி நிலமான ‘வரை’ வருணனையானது வரை, மால், பெரு, அரு, உயர், மணி, நெடு என்னும் அடைகளுடன் மொத்தம் பதினாறு (16) பாடல்களில் காணப்படுகின்றன. இந்த அடைச்சொற்களின் மூலம் வரையின் நீளம், அகலம், உயரம், நிறம் அல்லது வண்ணம், அரிய வளம் ஆகிய வருணனைக் கூறுகள் இடம் பெற்றுள்ளன.
வெற்பு
குறிஞ்சி நிலத்தினைச் சுட்டக்கூடிய மற்றொரு சொல்லாட்சியான வெற்பானது, பலாப்பழம், பெருந்தேன், தெளிந்த அருவி நீர், மலையினது வண்ணமான நீலமணி நிறம் ஆகிய வருணனைக் கூறுகளைக் கொண்டு உயர்ந்து காணப்படுவதாக ஐங்.குறி. 214:1-3; 224:1-3; 231:1-4 ஆகிய மூன்று பாடல்களில் வருணனைக்காட்சி அமைந்துள்ளன. இதனை,
“சாரல் பலவின் கொழுந்துணர் நறும்பழம்
இருங்கல் விடர்அளை வீழ்ந்தென வெற்பில்
பெருந்தேன் இறாஅல் சிதறும்” (3)
என்னும் பாடலடிகளும்,
“… … … … … நம்மலை
மணிநிறம் கொண்ட மாமலை வெற்பில்
துணிநீர் அருவி நம்மோடு ஆடல்” (4)
என்னும் பாடலடிகளும் எடுத்துரைக்கின்றன. குறிஞ்சி நிலமாகிய வெற்பில் (பக்கமலை), கொத்துக்களாகப் பழுத்து நிற்கும் பலா மரங்கள் காணப்படுகின்றன. மலைப் பாறைகளிலுள்ள பொந்துகளில் மிகுந்த தேனையுடைய பெரிய தேன்கூடுகள் கட்டப்பட்டு்ள்ளன. நீலமணியின் நிறத்தினையுடைய பக்கமலையில் அருவியின் நீரானது தெளிந்து காணப்படுகின்றது. இப்பாடல்களிலிருந்து வெற்பாகிய பக்கமலையானது, வளமுடைய நிலமாகக் காட்சியளிப்பதைக் காணமுடிகின்றது. இங்குக் குறிஞ்சி நிலமாகிய ‘வெற்பு’ வருணனையில் வெற்பு, மாமலை, ஓங்கல் என்னும் அடைகள் காணப்படுகின்றன. இப்பாடல்களில், வெற்பாகிய மலையின் இயற்கை வளம், மலையின் அகலம், உயரம் ஆகிய வருணனைக் கூறுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
குன்று
‘குன்று’ என்னும் சொல்லாட்சியில் குறிஞ்சி நிலமானது, ‘குன்று’ என்னும் பெயரிலேயே ஐங்.குறி.239:1-3; 295:3-6 இவ்விரண்டு பாடல்களில் வருணனைக்காட்சியாக அமைந்துள்ளன. ‘மணிநெடுங்’குன்று என்னும் அடையுடன் ஐங்.குறி.207:1-4; ஐங்.குறி.209:1-5 இவ்விரண்டு பாடல்களில் வருணிக்கப்பட்டுள்ளன. ‘குன்றம்’ என்ற பெயரில், ‘பூக்கெழு’ குன்றம் என்ற அடையுடன் ஐங்.குறி.210:1-5 என்னும், இவ்வொரு பாடலில் மட்டும் வருணனைக்காட்சி அமைந்துள்ளது சுட்டத்தக்கதாகும். ‘நெடுந்தகை’ குன்றம் என்னும் அடையுடன் ஐங்.குறி.244:1-4 இவ்வொரு பாடலில் மட்டும் வருணனைக்காட்சி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ‘புல்லென்’ குன்றம் என்னும் அடையுடன் ஐங்.குறி.244:1-4 இவ்வொரு பாடலில் மட்டும் வருணனைக்காட்சி அமைந்துள்ளது எடுத்துரைக்கத்தக்கது. இதன் மூலம், குறிஞ்சி நிலமான குன்று மற்றும் குன்றம் வருணனையானது குன்று, மணிநெடு, பூக்கெழு, நெடுந்தகை, புல்லென் என்னும் அடைகளுடன் மொத்தம் ஏழு பாடல்களில் இடம் பெற்றுள்ளன. மேலும், குன்று, குன்றம் என்ற சொல்லாட்சிகளில் மலையினது இயற்கை வளம், நிறம், நீளம் ஆகியவை வருணனைக் கூறுகளாக அமைந்துள்ளதனையும் காணலாம்.
சிலம்பு
குறிஞ்சி நிலமானது ‘சிலம்பு’ என்னும் சொல்லாட்சியில், ‘சிலம்பு’ என்னும் பெயரிலேயே ஐங்.குறி.278:1-3; 293:1-2 இவ்விரண்டு பாடல்களில் வருணனைக் காட்சிகளாக இடம் பெற்றுள்ளன. இப்பாடல்களில், இயற்கைக்காட்சிகள் வருணிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. ‘வயலைஅம்’சிலம்பு என்னும் அடையுடன் ஐங்.குறி.211:1-3 இவ்வொரு பாடலில் மட்டும் வருணனைக்காட்சி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘நறுந்தண்’சிலம்பு என்ற அடையுடன் ஐங்.குறி.226:1-4 இப்பாடலில் மட்டும் வருணனை அமைந்துள்ளது எடுத்துரைக்கத்தக்கது. ‘தண்பெருஞ்’சிலம்பு என்னும் அடையுடன் ஐங்.குறி.238:1-4 இவ்வொரு பாடலில் மட்டும் வருணனைக்காட்சி இடம் பெற்றுள்ளது சுட்டத்தக்கது. ‘கறிவளர்’ சிலம்பு என்னும் அடையுடன் ஐங்.குறி. 243:1-4 இந்தப் பாடலில் மட்டும் வருணனைக்காட்சி அமைந்துள்ளது சிந்தனைக்குரியது. ‘தேம்கமழ்’ சிலம்பு என்னும் அடையுடன் ஐங்.குறி.253:1-2 இவ்வொரு பாடலில் மட்டும் வருணனைக்காட்சி இடம் பெற்றுள்ளது சிறப்பிற்குரியது. ‘கேழல் உழுத’ சிலம்பு என்னும் அடையுடன் ஐங்.குறி.244:1-4 இப்பாடலில் மட்டும் வருணனை அமைந்துள்ளது எடுத்துரைக்கத்தக்கது. குறிஞ்சி நிலமாகிய சிலம்பானது, சிலம்பு, வயலைஅம், நறுந்தண், தண்பெரு, கறிவளர், தேம்கமழ், கேழல் உழுத என்னும் வெவ்வேறு அடைகளுடன் மொத்தம் எட்டுப் பாடல்களில் வருணனை பெற்றுள்ளது. இவ்வாறு, சிலம்பிற்கு வெவ்வேறு அடைகள் கொடுக்கப்பெற்று வருணித்திருப்பதன் காரணம் என்னவெனில், இச்சிலம்பில் வயலைக்கொடி, மிளகுக்கொடி, காந்தள் செடி, மூங்கில் மற்றும் குளிர்ச்சித் தன்மை, தேன், தேன்வளம் மிகுந்திருந்தல், பன்றி உழுதிருத்தல் ஆகிய இயற்கைக் காட்சி மிகுந்து காணப்படுகின்றது என்பதனைக் காட்சிப்படுத்துவதற்காகவேயாகும்.
கல்
குறிஞ்சித்திணையில் ‘கல்’ என்னும் சொல்லாட்சியானது, ‘கல்’முகை ‘கல்’என்னும் பெயரிலேயே ஐங்.குறி.246:1-5 என்னும் இவ்வொரு பாடலில் மட்டும் வருணனைக்காட்சியாக அமைந்துள்ளது. ‘இருங்’கல் என்னும் அடையுடன் ஐங்.குறி. 214:1-3; ஐங்.குறி.219:1-3 இவ்விரண்டு பாடல்களில் வருணிக்கப்பட்டுள்ளன. ‘பெருங்’கால் என்னும் அடையுடன் ஐங்.குறி.218:3-5; ஐங்.குறி.300:1-2 இவ்விரண்டு பாடல்களில் வருணனை அமைந்துள்ளன. ‘வன்’கல் என்னும் அடையுடன் ஐங்.குறி. 261:1-2 இவ்வொரு பாடலில் மட்டும் வருணனை இடம் பெற்றுள்ளது, ‘துறு’கல் என்னும் அடையுடன் ஐங்.குறி.210:1-5; 239:1-3; 262:1-3; 277:1-3; 291:1-4 இவ்வைந்து பாடல்களில் வருணனை அமைந்துள்ளன. இதன் மூலம் கல்லானது, கல், இருங், பெருங், வன், துறு என்னும் அடைகளுடன் வருணிக்கப்பட்டுள்ளன. இங்கு, ‘கல்’லின் கருமை, அகலம், வலிமை, வடிவம் ஆகிய கூறுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
சாரல்
குறிஞ்சி நிலத்தினைச் சுட்டக்கூடிய‘ சாரல்’ என்னும் சொல்லாட்சியானது ஐங்.குறி. 201:1-4; 213:1-5; 214:1-3; 282:1-3 என்னும் நான்கு பாடல்களில் காணப்படுகின்றன. இச்சாரலில் வேங்கை மரங்கள் பொன் போன்ற பூக்களையும், நீலமணி போன்ற அரும்புகளையும் உடையதாகக் காட்சியளிக்கின்றன. இக்காட்சியை,
“அன்னாய் வாழி!வேண்டு அன்னை! என்னை
தானும் மலைந்தான் எமக்கும் தழைஆயின
பொன்வீ மணிஅரும் பினவே
என்ன மரங்கொல் அவர்சார லவ்வே!” (5)
என்னும் பாடலடிகளில் காணமுடிகின்றன. இப்பாடலின் மூலம், பொன் போன்ற பூக்களையும் மணி போன்ற அம்புகளையும் உடைய மரம் வேங்கை என்பது பெறப்படுகின்றது. குறிஞ்சி நிலத்திற்கேயுரிய ‘அறத்தொடு நிற்றல்’ செய்தியும் காணப்படுகின்றது. குறிஞ்சி நிலத்தில் வேங்கை மரம் பூக்கின்ற காலத்தில் பெண்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கும் வழக்கம் இருந்ததையும் அறிய முடிகின்றது. குறிஞ்சி நிலத்தில் பழுத்துத் தானாகக் கீழே விழுகின்ற பலா மரங்களும், தேன் கூடுகளும் காணப்படுகின்றன. இதனை,
“சாரல் பலவின் கொழுந்துணர் நறும்பழம்
இருங்கல் விடர்அளை வீழ்ந்தென வெற்பில்
பெருந்தேன் இறாஅல் சிதறும்” (6)
எனும் பாடலின் மூலமாக அறிய முடிகின்றது. இப்பாடலின் வாயிலாகக் குறிஞ்சி நிலமானது பலா பழுத்து வீழ்வதும், தேன் சிந்துவதும் ஆகிய இயற்கை எழில் மிக்க பகுதி என்பதும் பெறப்படுகின்றது. இவை மட்டுமல்லாமல், பெரிய கதிர்களையுடைய தினையும், இத்தினையை உண்டு சிறுகிளியும் பசியாறிக் கொள்கின்ற இடமாகவும், தனித்த யானைகள் திரியும் புலமாகவும் சாரல் காணப்படுகின்றது. இக்காட்சியினை,
“சாரல் புறத்த பெருங்குரல் சிறுதினைப்
பேர்அமர் மழைக்கண் கொடிச்சி கடியவும்
சோலைச் சிறுகிளி உன்னும் நாட!
ஆர்இருள் பெருகின வாரல்
கோட்டுமா வழங்கும் காட்டக நெறியே” (7)
என்னும் பாடல் எடுத்துரைக்கின்றது. இப்பாடலில், குறிஞ்சி நிலத்தின் உணவுதானியமான தினையும், இந்நில விலங்கான யானையும், பறவையான கிளியும் வருணனைக்காட்சியாக அமைந்துள்ளதைக் காணமுடிகின்றது. மேலும், இங்குக் குறிஞ்சிக்குரிய ‘இரவுக்குறி’யும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சாரலானது மொத்தத்தில் தேனும் தினையும் பூக்களும் குறைவின்றிக் கிடைக்கின்ற புலம் என்பதை அறியமுடிகின்றது. இப்புலமானது பறவைகளுக்கு உணவு கொடுக்கக் கூடியதும், கொடிய விலங்குகள் நடமாடக்கூடியது என்பதும் பெறப்படுகின்றது.
குறிஞ்சி நிலமானது இயற்கை வளமிக்க செழுமை வாய்ந்த பகுதி என்பது உண்மைதான். பசுமையான புலமாக இருப்பினும், கோடைக்காலங்களில் சாரலானது (மலை அல்லது மலைப்பக்கமானது) பாலை நிலமாகக் காட்சியளிக்கின்றது. இதனை,
“நறுவடி மாஅத்து மூக்குஇறுபு உதிர்ந்த
ஈர்ந்தண் பெருவடு பாலையில் குறவர்
உறைவீழ் ஆலியின் தொகுக்கும் சாரல்” (8)
என்னும் பாடலின் மூலம் அறிய முடிகின்றது. மரத்தின் வடு கீழே விழும் அளவிற்குக் குறிஞ்சியின் வளம் குன்றினாலும், இப்புலத்தில் ஆலங்கட்டி மழை பெய்திருக்கின்றதையும் அறியமுடிகின்றது. இப்பாடலைக் குறிஞ்சி திரிந்த பாலைக்குச் சான்றாகக் கூறுவர். குறிஞ்சி நிலமும், முல்லை நிலமும் தன்னுடைய வளம் கெட்டுப் பாலை நிலமாகக் காட்சியளிக்கும் என்பதனை,
“முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல் பழிந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவம் கொள்ளும்” (9)
இச்சிலப்பதிகாரக் கானல் வரிப் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன.
அடுக்கம்
‘அடுக்கம்’ என்ற சொல்லாட்சியில் குறிஞ்சி நிலமானது’ ஐங்.குறி.247:1-3 என்னும் இவ்வொரு பாடலில் மட்டும் வருணனைக்காட்சியாக அமைந்துள்ளது. ‘அடுக்கல்’ என்னும் பெயரில் ஐங்.குறி.296:1-2 என்னும் இப்பாடலில் மட்டும் வருணனை புனையபட்டுள்ளது. ‘அடுக்கத்து’ என்னும் பெயரில் ஐங்.குறி.220:1-3; 261:1-2; 262:1-3 ஆகிய இம்மூன்று பாடல்களில் வருணனைக்காட்சி அமைந்துள்ளது. ‘அடுக்கம்’ என்ற பக்கமலை வருணனையில் அருவி, மூங்கில் (கழை), தினை அல்லது ஏனல், பன்றி, மயில் அல்லது மஞ்ஞை, பேராந்தை (குடிஞை), மந்தி (பெண்குரங்கு), கடுவன் (ஆண்குரங்கு), புலி ஆகியவை வருணனைக் கூறுகளாகக் காணப்படுகின்றன.
அடுக்கமானது குறிஞ்சித்திணையில் மொத்தம் ஆறு பாடல்களில் வருணனையாக்கம் பெற்றுள்ளது.
கவாஅன்
குறிஞ்சி நில மலைச்சாரல் அல்லது பக்கமலையானது ‘கவாஅன்’ என்ற சொல்லாட்சியில் ஐங்.குறி.299:1-5 இப்பாடலில் மட்டும் இடம்பெற்றுள்ளது. இப்பக்கமலையிலுள்ள சுனை, குவளை மலர், குறிஞ்சி நில மக்களான கொடிச்சியும் வருணிக்கப்பட்டுள்ளன. இதனை,
“குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன்
பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்
அம்சில் ஓதி அசைடைக் கொடிச்சி
கண்போல் மலர்தலும் அரிது இவள்
தன்போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே” (10)
எனும் பாடல் விளக்குகின்றது. இவ்வருணனையில், பசுமை, பூத்த பகுவாய், கொடிச்சியின் கூந்தல், அசைந்த நடை, கண், சாயல் என்னும் அடைகள் வருணனைக் கூறுகளாக இடம் பெற்றுள்ளன. பக்கமலையில் பசுமையான நீர்த்தாரவரங்கள் வளர்ந்துள்ள சுனையும், இப்பசுமையான சுனையில் குவளை மலர் மலர்ந்தும் காணப்படுகின்றது.
வியலறை
அகன்ற மலைப்பக்கமான ‘வியல்அறை’ என்பது, ‘வியல்அறை’ என்னும் சொல்லாட்சியிலேயே ஐங்.குறி.275:1-3; 276:1-3 இவ்விரு பாடல்களில் இடம் பெற்றுள்ளன. இவ்விரண்டு பாடல்களிலும் ஆண் குரங்கின் செயல்பாடுகள் அடைகளாக அமைந்துள்ளன. ‘இருங்கல்’ வியல்அறை என்னும் அடையுடன் ஐங்.குறி. 219:1-3 இவ்வொரு பாடலில் மட்டும் வருணிக்கப்பட்டுள்ளது.
காடு
குறிஞ்சி நில வருணனையில் ‘காடு’ என்ற சொல்லாட்சியானது ‘காடு’ என்ற பெயரில் ஐங்.குறி. 282:1-5 என்னும் இவ்வொரு பாடலிலும், ‘கானம்’ என்ற பெயரில் ஐங்.குறி. 216:1-4, 250:2-3 இவ்விரண்டு பாடல்களிலும், ‘கானகம்’ என்னும் பெயரில் ஐங்.குறி.217:1-3, 253:1-3 இவ்விரண்டு பாடல்களிலும், ‘கட்சி’ என்னும் பெயரில் ஐங்.குறி.250:2-3 இவ்வொரு பாடலிலும் காணப்படுகின்றது. மொத்தம் ஐந்து பாடல்களில், ஆறு இடங்களில் காடானது இடம் பெற்றாலும், இவ்வைந்து பாடல்களில் இடம் பெறுகின்ற காடானது குறிஞ்சி நிலத்தைக் குறிப்பனவாகவே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இக்காட்டில் புலி, மடப்பிடி, பலவின் பழம், மயில், வள்ளிக்கொடி, வேங்கை மரத்தின் பொன் போன்ற மலர், மான் கூட்டம், சந்தன மரத்தின் புகை, தேன், சிறுகிளி, கோட்டுமா (யானை) ஆகியவை வருணனைக் கூறுகளாக அமைந்துள்ளன. இக்கூறுகள் குறிஞ்சி நிலத்திற்குரியன என்பது மேற்காணும் பாடல்களின் மூலம் தெளிவாகின்றன. ஆகையால், குறிஞ்சி நிலத்தைக் கபிலர் ‘காடு’ என்ற சொல்லாட்சியிலும் வருணித்துள்ளதை அறிய முடிகின்றது.
மருதநிலச்செறு குறிஞ்சியில் உவமையாதல்
நெல் விளைந்த வயலானது, பன்றி உழுததால் சோர்வடைந்த அல்லது தலைசாய்ந்த பஞ்சாய்க்கோரைக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வருணனைக் காட்சியை,
“கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை
விளைந்த செறுவின் தோன்றும்” (11)
எனும் பாடல் புலனாக்குகின்றது. வயலானது ‘விளைந்த’ செறு என்னும் அடையுடன் வருணிக்கப்பட்டுள்ளதை மேலேயுள்ள பாடல் எடுத்துரைக்கின்றதைக் காணலாம். இங்கு விளைந்த நெற்கதிரின் தன்மையைக் கூறுவது என்பது, பஞ்சாய்க்கோரையின் வளத்தினைச்சுட்டும் ஆசிரியரின் நோக்கம் எனலாம். குறிஞ்சி நிலத்தை ஐங்.குறி.269:1-2 வருணிக்கும் கபிலருக்கு, மருதநிலக் காட்சியும் ஓர் உத்தியாகப் பயன்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.
குறிஞ்சி திரிந்த பாலை
குறிஞ்சி நிலமானது தன்னுடைய வளம் கெட்டுப் பாலை நிலமாகக் காட்சியளிக்கின்றது. இதனை,
“நறுவடி மாஅத்து மூக்குஇறுபு உதிர்ந்த
ஈர்ந்தண் பெருவடு பாலையில் குறவர்
உறைவீழ் ஆலியின் தொகுக்கும் சாரல்” (12)
என்னும் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன. குறிஞ்சி நிலத்தில் வறட்சி நிலவியதால் குறவர்கள் மாவின் பெரிய பிஞ்சுக்களைத் தற்காலத்திற்கும், வருங்காலத்திற்குமான உணவுத் தேவைக்காகத் தொகுத்துள்ளனர் என்ற செய்தியையும் பெறமுடிகின்றது. இதனால், குறிஞ்சில மக்களான குறவர்கள் எதிர்கால வாழ்வியல் சிந்தனையுடைவர்கள் என்பது புலனாகின்றது. பாலையாக மாறிய காலத்திலும் மழை பெய்திருக்கின்றது. ஆகையால், குறிஞ்சி திரிந்த பாலையில் கொடுமையான வறட்சி நிலவவில்லை என்பது திண்ணம்.
புன்புலம்
புன்புலம் என்பது, “காட்டை அழித்து நிலமாக்கிப் புழுதியுற உழுது பண்படுத்திய புன்செய் நிலம்” (13) என்று அ. மாணிக்கனார் விளக்கம் தருகின்றார்.
குறிஞ்சி நிலமானது, ‘புன்புலம்’ என்னும் சொல்லாட்சியில் ஐங்.குறி.283:1-3 இப்பாடலில் மட்டும் வருணனையாக இடம் பெற்றுள்ளது. குறிஞ்சி நில மக்களான கானவன் நிலத்தை உழுது தினை விளைவித்தமையும், கானவனின் மகள் அத்தினையை உண்ண வரும் சிறுகிளியை விரட்டியமையும் காணப்படுகின்றது. இச்செய்தியின் வாயிலாக விவசாயத்தின் தொடக்கம் குறிஞ்சி நிலத்திலிருந்தேத் தொடங்குகின்றது என்ற கருத்து நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை,
“வண்கண் கானவன் மென்சொல் மடமகள்
புன்புல மயக்கத்து உழுத ஏனல்
பைம்புறச் சிறுகிளி கடியு நாட!” (14)
என்னும் பாடல் மெய்ப்பிக்கின்றது. இப்பாடலில் இடம் பெறும் ‘தினைக்கதிர்’ என்பது தலைவனைச் சுட்டும் உள்ளுறைப்பொருள். ‘சிறுகிளி’ என்பது பரத்தையைக் குறிப்பிடும் உட்பொருள். ‘சிறுகிளியை ஓட்டும் மடமகள்’ என்பது தலைவியைக் குறிக்கும் உள்ளுறைப்பொருள். இச்செய்தியின் மூலம், தலைவனுக்குப் பரத்தமை ஒழுக்கம் உள்ளது என்பது பெறப்படுகின்றது. இவ்வொழுக்கமானது மருத நிலத்திற்குரியதாகும். இதனைத் திணை மயக்கம் என்பர். திணைக்குரிய ஒழுக்கங்கள் மயங்கி வருதலைத் தவிர்க்க முடியாது. ஆனால், நிலங்கள் தனக்குள் மயங்கி வருவதில்லை என்று தொல்காப்பியரும் எடுத்துரைக்கின்றார். இதனை,
“திணை மயக்குருதலும் கடிநிலை இலவே
நிலன் ஒருங்கு மயங்குதல் இன்றென மொழிப
புலன்நன் குணர்ந்த புலமையோரே” (15)
என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குகின்றது.
சோலை
குறிஞ்சி நிலச் சோலையானது, ‘சோலை’ என்னும் சொல்லாட்சியில் ஐங்.குறி. 282:1-3 என்ற இப்பாடலில் மட்டும் வருணனைக்காட்சியாக இடம்பெற்றுள்ளது. ‘பன்மலர் நறுந்தண்’சோலை, என்ற அடையுடன் ஐங்.குறி.244:1-2 என்ற இவ்விரண்டு பாடல்களில் வருணிக்கப் பெற்றுள்ளது. குறிஞ்சிநிலச் சோலை சிறுகிளியும், பலமலர்கள் மலர்ந்தும், குளர்ச்சித் தன்மை உடையதாகவும் வருணனைக்காட்சியாக அமைந்துள்ளன.
குறிஞ்சி நில வருணனையின் நோக்கம்
குறிஞ்சி நில வருணனையானது, குறிஞ்சி நிலம் எவ்வெப்பெயர்களில் இடம்பெற்றுள்ளது என்பதனை வெளிக்கொணர்தல், பல்வேறு பெயர்களில் வருணனையாக்கம் பெற்றுள்ள குறிஞ்சி நிலத்தின் மலையும் மலை சார்ந்த பகுதியினுடைய வளம் எடுத்துரைக்கப்படுதல், மலையினுடைய நிறம், அகலம், நீளம், உயரம் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துதல், இக்காட்சியின் வாயிலாக மலையினுடைய செழுமையைக் காட்டுதல், இச்செழுமையை எடுத்துரைப்பதற்குக் குறிஞ்சி நிலத்தில் மழைபெய்தல், அருவிநீர், மரம், செடி, கொடி, புற்களினுடைய மலர்கள் மலர்ந்திருத்தலைக் காட்சிப்படுத்துதல், மலை வளமிக்கது என்பதைக் காட்டுவதற்கு அங்கு வாழுகின்ற பறவைகள், விலங்குகள் போன்ற உயிரினங்கள் மகிழ்வுடன் இருப்பதைப் சுட்டுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறிஞ்சி நிலக்காட்சி ‘மலை’ என்ற சொல்லாட்சியில் 14 பாடல்களிலும், ‘வரை’ என்னும் பெயரில் 16 பாடல்களிலும், ‘வெற்பு’ என்பதாக 3 பாடல்களிலும், ‘குன்று’ என்னும் சொல்லாட்சியில் 7 பாடல்களிலும், ‘சிலம்பு’ என்ற பெயரில் 8 பாடல்களிலும், ‘கல்’ என்னும் சொல்லாட்சியில் 11 பாடல்களிலும், ‘சாரல்’ என்பதாக 4 பாடல்களிலும், ‘அடுக்கம்’ என்ற சொல்லாட்சியில் 6 பாடல்களிலும், ‘கவாஅன்’ என்பதாக 1 பாடலிலும், ‘வியலறை’ என்ற பெயரில் 3 பாடல்களிலும், ‘காடு’ என்ற சொல்லாட்சியில் 5 பாடல்களிலும், ‘கட்சி’ என்னும் பெயரில் 1 பாடலிலும், ‘செறு’ என்பதாக 1 பாடலிலும், ‘புன்புலம்’ என்ற பெயரில் 1 பாடலிலும், ‘சோலை’ என்னும் சொல்லாட்சியில் 2 பாடல்களிலும் சின்னச்சின்ன அடைகளுடன் மொத்தம் 84 பாடல்களில் இடம்பெற்றுள்ளன என்பது இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்ட செய்திகளாகும்.
குறிப்புகள்
1. சோமசுந்தரனார், பொ.வே., ஐங்குறுநூறு மூலமும் உரையும், ஐங்.குறி. 292:1-2
2. மேலது., ஐங்.குறி. 292:1-2
3. மேலது., ஐங்.குறி. 214:1-3
4. மேலது., ஐங்.குறி. 224:1-3
5. மேலது., ஐங்.குறி. 201:1-4
6. மேலது., ஐங்.குறி. 214:1-3
7. மேலது., ஐங்.குறி. 282:1-3
8. மேலது., ஐங்.குறி. 213:1-3
9. சுப்பிரமணியன், ச.வே., கானல் வரி.11:64-66.
10. சோமசுந்தரனார், பொ.வே., ஐங்குறுநூறு மூலமும் உரையும், ஐங்.குறி. 299:1-2
11. மேலது., ஐங்.குறி. 269:1-2
12. மேலது., ஐங்.குறி. 213:1-3
13. மாணிக்கனார், அ., ஐங்குறுநூறு மூலமும் உரையும், தொகுதி.2. பக்.98.
14. சோமசுந்தரனார், பொ.வே., ஐங்குறுநூறு மூலமும் உரையும். ஐங்.குறி. 283:1-3
15. சுப்பிரமணியன்.ச.வே., தொல்.பொருள்.அகம்.நூற்.12.
துணைநூல் பட்டியல்
1. சோமசுந்தரனார், பொ.வே., ஐங்குறுநூறு மூலமும் உரையும், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், லிமிடெட், 1/140, பிரகாசம் சாலை, சென்னை -1, முதற்பதிப்பு: 1972.
2. மாணிக்கணார், அ., ஐங்குறுநூறு மூலமும் உரையும், முதல் பகுதி, இரண்டாம் பகுதி, வர்த்தமானன் பதிப்பகம், ஏ.ஆர்.ஆர்.காம்ப்ளெக்ஸ், 141, உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை - 600 017, மறுபதிப்பு:2001.
3. தமிழண்ணல், உலகத் தமிழிலக்கிய வரலாறு (தொன்மை முதல் கி.பி.500 வரை) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சி.ஐ.டி.வளாகம், தரமணி, சென்னை - 600 113, முதற்பதிப்பு: 2004.
4. சுப்பிரமணியன். ச.வே., தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு. பாரி முனை, சென்னை 600 108, முதற் பதிப்பு: 1998.
5. சுப்பிரமணியன்.ச.வே., கானல் வரி, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.600 113. முதற்பதிப்பு:2002.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.