ஔவையாரின் புறப்பாடல்களில் இலக்கியக் கூறுகள்
முனைவர் சி. சேதுராமன்
தமிழாய்வுத் துறைத்தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்னாட்சி), புதுக்கோட்டை.
சங்கப் புலவர்களுள் பெண்பாற் கவிஞர்கள் ஐம்பதின்மர். அவர்களுள் ஒருவரான ஔவையார் பாடியன 59 பாடல்கள். புறநானூற்றில் ஔவையார் மிகுதியாகப் பாடியிருப்பினும் அதியமானைப் பற்றிப் பாடியன இருபத்திரண்டு பாடல்கள். இலக்கியச் சிறப்பால் ஏனைய பெண்பாற் புலவர்களினின்றும் சிறந்து விளங்கும் ஔவையார் உணர்ச்சி, உவமை, கற்பனை உள்ளிட்ட வெளியீட்டு உத்திகளைப் பயன்படுத்தி அதியமானைப் பற்றிய சிறப்புகளை எடுத்துரைக்கின்ற பாங்கு சிறப்பிற்குரியது.
உணர்ச்சி
உணர்ச்சியின் வெளிப்பாடே கவிதை. எனவே கவிதைக்கு உணர்ச்சி இன்றியமையாத உறுப்பாகும். சிறந்த இலக்கியத்தில் அதுவே பயனாகவும், ஏனையவற்றில் அது இடைப்பட்ட ஒன்றாகவும் இருக்கும். வேறு பயனை விளைக்க இவ்வுணர்ச்சிகளே கருவியாக்கப்படுவதும் உண்டு. சாதாரண இலக்கியங்களில் என்று வின்செஸ்டர் கூறுவர் (1).
தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் அக, புறப்பொருள்களுக்குரிய உணர்ச்சிகளை விளக்கிப் போவர். இவ்விரண்டிற்குமுரிய மெய்ப்பாடு எட்டு என்றும், இவ்வெட்டு மெய்ப்பாடுகளும் 32 உணர்ச்சிகளால் தோன்றும் என்றும் மொழிவர்.
“பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்
கண்ணிய புறனே நானான்கு என்ப” (2)
என்பது தொல்காப்பிய நூற்பா. உள்ளுணர்வுகளால் 32 அனுபவங்களின் அடிப்படையில் எழும் 32 உணர்ச்சிகளும், நான்கு நான்காகத் தொகுத்துக் காணின் எட்டுவகை மெய்ப்பாட்டிற்குக் காரணமாக அமையும் என்பது இந்நூற்பாவின் பொருள். மேலும்,
“நகையே, அழுகை, இளிவரல், மருட்கை
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகையென்று
அப்பா லெட்டே மெய்ப்பா டென்ப’’ (3)
என்று மெய்ப்பாட்டினை எண்வகைப் படுத்துவர். இவை இலக்கியத்திற்கு இன்றியமையாதவை. எனவே மெய்ப்பாடுகளே உணர்ச்சிகளாகும்.
கவிதை நல்கும் உள்ளுணர்வு மறைமுகமானது. இந்த உள்ளுணர்வினால் உடலின்கண் தோன்றும் மாற்றங்களைவிட அக்கவிதையினின்றும் பெறும் உணர்ச்சியினால் ஏற்படும் உடல் மாற்றங்கள் மிகுதியானவை என்று வில்லியம் கே. விம்சாட், களீன்த் புரூக்ஸ் ஆகியோர் குறிப்பிடுவர். (4)
ஔவையார் அதியமானைப் பாடிய பாடல்களில் இவ்வுணர்ச்சிகள் சிறப்பிடம் பெறுகின்றன. பாடல்களின் வடிவத்திலும், அதன் பொருளிலும் உணர்ச்சி புரையோடிக் கிடக்கக் காணலாம்.
வடிவ உணர்ச்சி
பாடலின் தோற்றம், ஓசை, நடை இவற்றில் உணர்ச்சி அடங்கிக் கிடக்குமாயின் அது வடிவ உணர்ச்சி எனப்படுகிறது. ஔவையார் தன்னுடன் நீண்ட காலம் தங்க வேண்டும் எனக் கருதி அதியமான் பரிசில் நீட்டித்தான். இதனை உணராத ஔவையார் வெகுண்டு,
“வாயிலோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்கு மொழிவித்தித் தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க் கடையா வாயிலோயே!
கடுமான் தோன்றல் நெடுமானஞ்சி
தன் அறியலன்கொல்? என்னறியலன்கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமுமன்றே, அதனால்,
காவினெம் கலனே, சுருக்கினெம் கலப்பை
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத் தற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!” (5)
என உணர்ச்சி ததும்பப் பாடினார். வாயிலோயே வாயிலோயே என்ற அடுக்குமொழி தொடங்கி எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே என முடிப்பது வரை ஔவையாரின் மனவோட்டம் படிப்பவரிடையே நிழற்படமாகிறது.
கருத்து உணர்ச்சி
அஞ்சி பகைவரை அடும் ஆற்றலன். அதியனின் கண் சிவந்திருத்லைக் காட்டி வீரம், சினம் என்னும் உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்துவர். இதனை ஔவையார்,
“வரிவயம் பொருத வயக்களிறு போல
இன்னும் மாறாது சினனே, அன்னோ!
உய்ந்தனர் அல்லர், இவனுடற்றியோரே
செறுவர் நோக்கியகண், தன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பானாவே” (6)
எனப் பாடுகிறார்.
கவிஞர்கள் வண்ணங்களை ஆளுவதன் வாயிலாகவே சில கருத்துக்களை வெளிப்படுத்துவர் என்ற டாக்டர் க.சே. சுப்பிரமணியன் (7) அவர்களின் கருத்தும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும். களிறு எவ்வாறு தன் சினத்தினை அடக்கினும் அதனை மறவாது போற்றுமோ, அதுபோல அதியமானும் பகைவர் மாட்டுக் கொண்ட சினம் மாறாதவன். மனிதனின் இன்னல்கள் தன் இன் மழலைச் செல்வத்தினைப் பார்த்தும் கூட சிவந்த கண் மாறாது பழைய சின நிலையில் இருந்தான் என ஔவையார் பாடியது அவன் வீரமே மேலோங்கியது என்பதனைப் புலப்படுத்துவதாகும். இப்பாடல் ஔவையின் புலமை நலத்தை வெளிப்படுத்துவதோடு அதியமானின் உள்ளக் கருத்தினையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது.
கையறுநிலை
சங்க இலக்கிய பாடல்களில் தன்னுணர்ச்சிப் பாடல்கள் மலிந்தது புறநானூறு. புறநானூற்றின் பாடல்கள் தனிப்பட்டோரின் சொந்த உணர்வுகளை வெளிப்படுத்தி அகப்பாடல்களின்றும் ஏனைய புறப்பாடல்களினின்றும் வேறுபடுகின்றன. குறிப்பிட்ட நிகழ்ச்சிகளின் அடிப்படையில் புலவருக்கு எழுந்த தனிப்பட்ட எண்ணங்களைக் காட்டும் பாடல்கள் இவை என்று செண்பகம் ராமசாமி (8) கூறுகிறார். புலவர்கள் தங்கள் வாழ்வில் கண், கேட்டு உணர்ந்த உணர்வுகளை வடித்தனவே சங்கப் பாடல்கள்.
அதிலும் தன்னைப் புரந்த மன்னர்கள் இறந்தபோழுது உணர்ச்சி ததும்ப, கையற்ற நிலையில் பாடிய பாடல்கள் கையறுநிலைப் பாடல்களாயின. துன்ப உணர்வே இலக்கியப் படைப்புக்கான உந்துதல்களில் (Impluses) சற்று வலிமை வாய்ந்ததாகவும் உளது என்பர் (9) தொல்காப்பியர்,
“கழிந்தோர் தேஎத்துக் கழிபடர் உறீஇ
ஒழிந்தோர் புலம்பிய கையறுநிலையும்’’ (10)
எனக் கையறு நிலைக்கு இலக்கணம் வகுப்பர். இத்துன்பவியல் பாடல்களில் புலவர்கள் நட்புக் கொண்ட அரசனின் பிரிவாற்றாமல் கண்ணீரோடு புலம்பும் புலம்பலைக் காண இயலும்.
பெருஞ்சேரல் இரும்பொறையின் வேலால் அதியமான் இறந்தான். அவனது இறப்பால் பெருந்துயருற்று ஔவையார்,
“சிறியகட் பெறினே எமக்கீய மன்னே!
பெரியகட் பெறினே
யாம்பாடத் தனான் மகிழ்ந்துண்ணு மன்னே!
சிறுசோற்றானும் நனிபல கலத்தன் மன்னே!
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே!
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயு மன்னே!
அம்பொடு வேல்நுடை வழியெலாந் தானிற்கு மன்னே!
நரந்தம் நாறுந் தன்கையாற்
புலவுநாறு என்றலைத் தைவருமன்னே!’’
அருந்தலை யிரும்பாணர் அகன் மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவைசோர
அஞ்சொல் நுண்டேர்ச்சிப் புலவர்நாவிற்
சென்று வீழ்ந்தன்றவன்
அருநிறத் தியங்கிய வேலே
ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ?” (11)
என இரங்குவர். அதியமான் தன்னை ஓம்பியமையும், இரவலரைப் புரந்தமையும் நினைத்து வருந்துவதோடு ஈவாரின்றி உயிர்கள் மாய்ந்து போகும் என நெஞ்சம் நெக்குருகிப் பாடுகிறார். இப்பாடலில் அவல உணர்ச்சியானது இடையீடின்றித் தொடர்ந்து அமைந்துள்ளது. ஒரு பாட்டு அல்லது இலக்கியத்தில் உணர்ச்சி இடையீடின்றித் தொடர்ந்து வரின் அஃது அதன் இலக்கிய மதிப்பை மிகுவிப்பதாகும் என்ற டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தி கருத்தும் பொருந்தி வருகின்றது. (12)
அதியமானின் உடல் மாயினும் அவன் புகழ் மாயாது என்னும் கருத்துப்பட,
“... ... ... பசுங்கதிர்த்
திங்களன்ன வெண்குடை
ஒன் ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே!’’ (13)
எனப் பாடுகிறார் ஔவையார். புரந்து வாழ்தலைக் கண்டு மகிழ்ந்த உள்ளம் அவன் எரிதலைக் கண்டு கண்ணீர் விடுத்துக் கதறுகிறது. அது மட்டுமன்றி, இனிமேல்,
“இல்லாகியரோ, காலை மாலை!
அல்லாகியர் யான் வாழும் நாளே!” (14)
என அவலத்தின் உச்சநிலைக்கே சென்று நெஞ்சம் விம்முகிறார். ஔவையாரின் நட்பு நெஞ்சம் மட்டுமன்றி நம் நெஞ்சமும் அவலத்தால் அல்லல் படுவதை உணரமுடிகிறது.
அவலச்சுவை ததும்பும் இப்பாடல்களில் காப்பியரின் அழுகை மெய்ப்பாடு பயின்று வந்துள்ளது. இது இளிவும் அசைவும் பற்றி வந்ததும் தன்கண் தோன்றிய துயரால் வந்ததுமாகிய அழுகையாகும்.
அணிநலன்
கவிதையை அணி செய்வது அணிகள். கவிதை சிறக்க உவமை, உருவகம் போன்ற அணிகள் ஒளி காட்டுகின்றன. அணிகளுக்கெல்லாம் தாயாக விளங்குவது உவமையணி. சொல்லப்புகும் கருத்துக்கள் அணிகளால் வலிபெறும் என்பர். இவை வெறும் அலங்காரமாக மட்டும் ஆளப்படாது. சில நோக்க நிறைவேற்றத்திற்காகவும் விளைவு கருதியும் பயன் தந்தும் கையாளப்படும்போது உத்திநிலை பெறுவதாகக் கொள்ளலாம் என்பர் ச.வே.சு. (15)
உவமைச் சிறப்பு
தொல்காப்பியனார் உவமையை,
“வினை, பயன், மெய், யுரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமத் தோற்றம்’’ (16)
என நான்காகப் பகுக்கின்றார். கவிதையில் உவமையாக வரும்பொருள் சிறப்புடையதாகவும் உயர்ந்த கருத்தைத் தருவதாகவும் இருக்க வேண்டும் என்பதை,
“உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை’’ (17)
என்ற நூற்பாவால் உணர்த்துகிறார் காப்பியர். இதனையே ஜான்சன், சிறந்த உவமை பொருளின் தன்மையை விளக்குவதோடு அதனைச் சிறப்பிக்கவும் வேண்டும் (18) என்பர்.
தான் கூற வந்த ஒன்றிற்கு விளக்கம் தரவேண்டியும் அப்பொருளினுள்ளே அமைந்து கிடக்கும் ஓரியல்பையோ, பல இயல்புகளையோ எடுத்துக் காட்ட வேண்டியும் கவிஞன் உவமையைக் கையாளுகிறான். கவிஞன் தன் உள்ளத் தெழுந்த இதய உணர்வின் ஊற்றுக்களை எழுச்சிகள் நிறைந்த இன்ப துன்ப உந்துதல்களைச் சிதைவின்றித் தன் உள்ளத்தெழுந்தவாறே உலகிற்கு உணர்த்த உதவவுன உவமைகளே ஆகும் (19) என்பர்.
ஔவையார் அதியமானின் வீரம், கொடை, பகைவரை எதிர்க்கும் தன்மை, அதியனின் பண்பு உள்ளிட்ட பலவற்றை உவமை வாயிலாக விளக்கிச் செல்கிறார்.
அதியனின் தோள்வலி
அதியன் பெருவலி படைத்தவன். இவன் வலிமை, நாள் ஒன்றுக்கு எட்டுத் தேர் செய்யும் தச்சனொருவன் ஒரு திங்கள் முயன்று தேரின் காலொன்று மட்டும் செய்தால் அக்கால் எத்தகு வலிமை பெறுமோ அத்தகு வலிமை படைத்தவன் அதியன் என்பதனை ஔவையார்,
“எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்தகால் அன்னோனே!” (20)
என்பர் மேலும்,
“முழவுத் தோள் என்னையை” (21)
என்று அதியமானின் தோள் வலிமை கூறிப் பெருமிதம் கொள்வர்.
படை வலிமை
துணைவலியும் தூக்கிச் செயல் என்ற வள்ளுவரின் கூற்றொப்ப அதியமான் தன் வலி மட்டுமன்றி படைவலிமையும் கொண்டவன். இதனை,
“எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளரும் உளரே” (22)
என மொழிவர். ‘பாம்பினைக் கண்டு படை நடுங்கும்’ என்பது பழமொழி. அப்பாம்பு எறிகின்ற தோலைக் கண்டு சினந்தால் எவ்வாறிருக்குமோ அத்தகு சினமிகு படைஞர்களைக் கொண்டவன் என அதியமானின் படை மறவரின் வன்மையினைக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
கொடை
கொடை வீரமாவது கொடுப்பதில் மற்றையவாரிலும் மேம்பட்டு நிற்கும் வள்ளண்மையாகும். தனக்குச் சாவாத் தன்மை தரும் நெல்லிக் கனியை அளித்த அஞ்சியை,
“பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே” (23)
என ஔவையார், சிவபெருமானைப் போல நிலைபெற்று வாழ வாழத்துகிறார். அரசனை இறைவனோடு ஒப்ப உரைக்கும் தன்மை பூவை நிலை எனப் புறப்பொருள் வெண்பாமாலையும் கூறும். இறைவன் நஞ்சினைத் தானுண்டு அமுதினை விண்ணோர்க்கு வழங்கியது போல அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்து சிறப்புற்றான்.
களிறு
களிறு உடலாலும் உள்ளத்தாலும் பெரியது. ஆதலால் அக்களிற்றினை அதியமானோடு ஒப்புமைப்படுத்திக் காண்கிறார் ஆசிரியர்.
“நீர்த்ததுறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும! எமக்கே மற்றதன்
துன்னருங் கடாஅம் போ
இன்னாய், பெரும, நின் ஒன்னா தோர்க்கே!” (24)
என அதியமானின் ஈரத்தையும் வீரத்தையும் ஒருங்கே போற்றிப் புகழ்கின்றார். யானையின் மதம் சினம் மிகுந்தது ஆதலால் யானையின் மதத்தை அதியனின் வீரத்தோடு தொடர்புறுத்துவர்.
அதியன் காலந் தாழ்த்தினாலும் பரிசில் உறுதியாகக் கொடுப்பான். இதனை,
“... ... ... யானைதன்
கோட்டிடை வைத்த கவளம்போல” (25)
என்பர் யானைதன் கோட்டிடை வைத்த கவளம் அதன் வாயில் செல்லுதல் தவறாது போல அவன் கொடைப் பொருளும் தவறாது எனும் பொருள்படக் கூறுகிறார் ஆசிரியர்.
பகைவரை எதிர்க்கும் தன்மை
அதியன் படைவல்லான். வீரம் செறிந்தவன். அவன் இளைவயவனாயினும் இடத்தாலும் மெய்வலியாலும் வினைவலியாலும் பெரியனாதலின் அவனைப் பகைவர் வெல்லுதரிது. வலியும் பருத்த உடலையும் கொண்ட யானையினைத் தன் காலளவுத தண்ணீரிலேயே முதலையானது இழுத்து வெற்றி கொள்ளும். அதியன் பெருவலி படைத்த முதலையை ஒத்தவன் என்பதனை ஔவையார்,
“ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தாள்படு சின்னீர் களிறட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐ” (26)
என்பர். அதியன் கடையெழு வள்ளல்களில் ஒருவனாயினும் வீரத்தில் பெருநில மன்னனாகவேத் தோற்றம் தருகிறான்.
“கான்றுபடு கனை எரிபோலத்
தோன்றவும் வல்லன் தான் தோன்றும் காலே” (27)
என அதியமான் பகைவரை எதிர்க்கும் தன்மையினைச் சுட்டுகிறார் ஔவையார்.
அடங்குதலும் சினமும் தன்னிரு குணங்களாகக் கொண்டவன் அதியன். இதனால் அவனை நெருப்போடு தொடர்புறுத்துகிறார் ஆசிரியர். அவன் அடக்கத்தினைக் கூறும் போது இல்லிடைச் சொருகிய ஞெலிக்கோல் போல என்கிறார். நீரு பூத்த நெருப்பு எவ்வாறு அடங்கிக் கிடக்குமோ அத்தகு அடக்கமுடையோன் அதியமான். நீரு பூத்த நெருப்பினைக் கடையும் போது வெளிப்படும் தீயை ஒத்த சினத்தவன் என அவன் அடக்கத்திற்கும், சினத்திற்கும் தீக்கோலை உவமை கூறும் நலம் பாராட்டற்குரியது.
பண்பு
ஒரு கருத்தை விளக்கப் பல உவமைகளை அடுக்கி ஆளும் தன்மை ஔவையார் பாடல்களில் ஒளிரும். பொதுவகையில் ஒன்றுபோலக் காணப்படினும் அடிப்படையில் சில பண்பு வேறுபாடு கருதி இவ்வுண்மைகளைப் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ‘அதியமான் எதிரே பகைவர் எவரும் நிற்க இயலாது’ என்னும் கருத்தை விளக்க,
“மறப்புலி உடலின் மான்கண முளவோ?
இருளு முண்டோ ஞாயிறு சினவின்?
விரிமணல் ஞெமரக் கல்பக நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?’’(28)
என ஒரு தன்மையாகப் பல உவமைகள் ஒரே பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆழ்ந்து நோக்கின் இவ்வுவமைகள் முறையே அதியமானின் உடல் வலிமை, புகழ் வலிமை, மனவலிமை என்ற பண்புகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருப்பது உணரத்தக்கது. பிற புலவர்கள் அகப்பொருள் பாடல்களில் மிகுதியான உவமைகளைக் கையாண்டிருப்பினும், புறப்பொருள் பாடல்களில் மிகுதியான உவமைகளைக் கையாண்டுள்ள சிறப்பு ஔவையாரைச் சாருவதாய் உள்ளது (29) என்ற கருத்தும் மிகவும் பொருந்தி வருகின்றது.
வருணனை
இலக்கியத்திற்கு வருணனை இன்றியமையாதது. இவ்வருணனையை டாக்டர் ச.வே.சு. பட்டியல் என்று குறிப்பிடுவார். தமிழில் இப்பட்டியலை, விரிவருணனையுடைய நெடும்பாடல் உறுப்பாகவும் கூடக் கருத இயல்வதைக் குறிஞ்சிப் பாட்டின் மலர்ப்பட்டியல் காட்டுகிறது. இதைக் கவிதை உத்தியாகக் கருதல் சாலும் என அவர் வருணனையைப் பற்றிக் கூறுகிறார். (30)
உவமையாகவோ, எடுததுக்காட்டாகவோ வராது வருணனையாக அமையும் பகுதிகளும் சில பல குறிப்புகளை வழங்கலாம். ஒரு பொருளைக் கவிஞன் வருணனையில் கையாளும்போது அதன் வருணனையமைப்பு நிலையோ, பயிற்சியோ, பயிலும் சூழலோ அதற்கு இத்தகு குறிப்பொன்றை ஏற்றிச் சுவைக்க இடமளிக்கின்றது எனலாம்.
ஔவையார் நுட்பமாகப் பொருளை அமைத்தற்குரிய தலையாயக் கருவியாக வருணனையைக் கையாண்டுள்ளார். வியனகரை வருணிக்கும் ஔவையார் அந்நகர் படிப்பவர் நெஞ்சில் வரை படமாகப் படும்படி அமைக்கிறார்.
“அறவை நெஞ்சத்து ஆயர், வளரும்
மறவை நெஞ்சத்து தாய்இ லாளர்,
அரும்பலர் செருந்தி நெடுங்கான் மலர்கமழ்
விழவணி வியன்களம் அன்ன முற்றத்து,
ஆர்வலர் குறுகின் அல்லது காவலர்
கனவிலும் குறுகாக் கடியுடை வியன்நகர்” (31)
என அதியனின் அரண்மனை முற்றத்தையும், நகரினையும் வருணிக்கும் திறம் போற்றற்குரியது. இரவலர்க்கு உதவும் வள்ளற் பண்பினையும் பனுவலிழையென உணர்த்தப்படுகின்றது. அதியனின் தோற்றப் பொலிவினை,
“கையது வேலே காலன புனைகழல்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசிவெண் தோட்டு,
வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇ’’ (32)
என வருணிக்கிறார். மேலும் அதியனிடம் பரிசு பெறச் செல்லும் விறலியை,
“ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்
தூம்பு அகச்சிறு முழாத் தூங்கத் தூக்கிக்
கவிழ்ந்த மண்டை மலக்குநர் யார்? எவை
சுரன் முதல் இருந்த சில்வளை விறலி!”(33)
என விறலியின் தோற்றத்தையும் அவள் தங்கியிருந்த பாங்கினையும், ‘யாரே எமக்கு உதவ வல்லார்?’ என்ற அவளது உளப் பேராட்டத்தையும் வருணனையின் மூலம் விளக்கி இருப்பது ஔவையின் கவித்திறனுக்குச் சான்றாக அமைந்துள்ளது எனலாம்.
மன்னனின் மறத்தன்மை முதலானவை நேரடியாக உணர்த்தப்படாது, வேல், களிறு, குதிரை முதலியன பற்றிய வருணனை வழி குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளமை ஔவையாரது புறப்பொருள் வெளிப்பாட்டு முறையை உணர்த்துவதாயுள்ளது.
“போர்க்கு உரைஇப் புகன்று கழித்தவாள்,
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்,
ஊனுற மூழ்கி உருவிழந் தனவே’’ (34)
எனவரும் புறப்பாடலில் இத்தன்மையைக் காணலாம். இப்பாடலில் வாளின் தன்மையைக் கூறியவழி அதியமானின் வெற்றிச் சிறப்பும் வலிமையும் உணர்த்தப்பட்டுள்ளது.
சொல்லாட்சி
ஒரு பாடலில் உணர்ச்சிக்கும், பொருளுக்கும் பொருத்தமான இலக்கியச் சொற்களை முறையாக அமைக்கும்போது, அப்பாடல் நமக்கு உணர்ச்சியையும் இன்பத்தையும் ஊட்டுகிறது. சொற்கள் பல்வகையினவாகையால் அவற்றின் தேர்ந்த ஆட்சியிலும் பல உத்திகள் பொருந்துகின்றன என்பர் அறிஞர் ச.வே.சு. (இளங்கோவின் இலக்கிய உத்திகள், ப., 182) மேலும் கவிதையில் பயிலும் சொற்கள் வழக்கில் உள்ளனவாக இருத்தல் வேண்டும் என்ற கருத்துக்களுக்கேற்ப ஔவையாரின் பாடல்களில் அரிய சொற்களும் தெளிந்த சொற்களும் இடம் பெற்றுள்ளன.
“யாழொடும் கொள்ள, பொழுதொடும் புணரா
பொருள் அறிவாரா ஆயினும் தந்தையர்க்கு
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை” (35)
என்ற பாடலில் தேர்ந்த – அதிலும் தெளிந்த சொற்கள் அமைந்துள் இன்புறுத்துகின்றன. ‘அருள்வந்தனவால் புதல்வர்தம் மழலை’ என்ற சொற்களிலே புதல்வரைப் பெறுதலின் உயர்வையும், தந்தையர் அதனாற் பெறும் பேரின்பத்தையும் நுட்பமாக இவர் உரைக்கின்றார்.
“குழலினிது யாழினிது என்ப தம்மக்கள்
மழலைச் சொற்கேளா தவர்” (36)
என்ற வள்ளுவரின் வாக்கிற்கு நேரொத்த செழுமையினை உடையது இதுவாகும்.
‘பொருளறிவாரா’ என்ற சொற்றொடரில் உள்ள உள நூலாராய்ச்சி நுட்பத்தை டாக்கடர் மு.வ. பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார்.
ஔவையார் இங்கு மழலை மொழியைப் பொருளற்ற சொற்கள் என்று வருவனவே என உணர்ந்தமையும், குழந்தை கருதிய பொருளைப் பெற்றோர் அறிய முடியவில்லை எனக் கூற முன் வந்தமையும் காண்க. ‘பொருளில்லாதென’ என்னாமல், ‘பொருளறிவாரா’ என்ற அவருடைய கருத்து உள நூலாராய்ச்சியாளர்க்கு உவகை ஊட்டுவதாகும். (37)
ஓசை நயம்
கவிதைக்குச் சிறப்பு நல்கும் ஒரு கூறு ஓசை நயம் ஆகும். கவிதையில் அமைந்து கிடக்கும் உணர்ச்சியை வெளிப்படுத்துங் கருவியே ஓசை நயம். கவிதையில் பொங்கி வழியும் உணர்ச்சிக்கேற்ப அதில் அமையும் ஒலிநயம் வேறுபடுகின்றது. (38). ஓசை நயமே கவிதைக்குச் சிறப்பளிக்கிறது. ஓசையேப் பொருளை அறிவிக்கிறது. பொருள் என்றவுடன் சொற்களின் பொருளை நினைத்துக் கொண்டு அதனை எவ்வாறு ஓசை அறிவிக்க முடியும் என்று இடர்ப்படலாகாது. இங்கே பொருள் என்பது உணர்ச்சியாகிய அனுபவத்தையே குறிக்கிறது. (39)
சொற்கள் செய்ய இயலாத சிலவற்றை ஓசை நயம் செய்கிறது. கவிதையின் தலையாய உணர்ச்சி எதுவாக உள்ளதோ அதற்கேற்ப ஓசை நயம் அமைய வேண்டும் (40) என்பர். ஔவையார் அதியமானைப் பற்றிப் பாடிய பாடல்களிலும் ஓசை நயமிக்க பாடல்கள் அமைந்துள்ளன.
“முனைத் தெவ்வர் முரணிவியப்
பொரக் குறுகியநுதி மருப்பின் நின்
இனக்களிறு செலக் கடண்டவர்
மதிற் கதவம் எழுச் செல்லவும்
பிணன் அழுங்கக் களன் உழக்கிச்
செலவு அசைஇய மறுக் குளம்பின்நின்
இன நன்மாச் செலக் கண்டவர்
கவை முள்ளின் புடை யடைப்பவும்
மார்புறச் சேர்ந்து ஒல்காத்
தோல் செறிப்பின் நின்வேல் கண்டவர்
தோல் கழியொடு பிடி செறிப்பவும்
வாள் வாய்த்த வடுப்பரந்த நின்
மற மைந்தர் மைந்து கண்டவர்
புண்படு குருதி அம்பு ஒடுக்கவும்
நீயே ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென,
உறுமுறை மரபின் புறம்நின்று உய்க்கும்
சுற்றத்து அனையை ஆகலின் போற்றார்
இரங்க விளிவது கொல்லோ வரம்பணைந்து
இறங்குகதிர் அலம்வரு கழனிப்
பெரும்புனல் படப்பை, அவர் அகன்றலை நாடே!” (41)
என்ற பாடலில் வரும் ஓசை நயம் கவிதையின் அழகுக்கு அழகு சேர்க்கின்றது எனலாம்.
பிற கூறுகள்
கருத்தின் ஒரு பகுதியை மட்டும் விளக்கி எஞ்சியதைத் தாமாகவே உணரும்படி செய்யும் தன்மையும் ஔவையாரின் பாடல்களில் மிகுதியாகக் காணப்படுகிறது. இத்தன்மை தொல்காப்பியத்தில் தொகுநிலைக் கிளவி எனக் குறிக்கப்படுகிறது.
“பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொரு தெண்கண் கேட்பின்
அதுபோ ரென்னு மென்னையு முளனே!” (42)
எனும் பாடலில் ‘போருக்குஅஞ்சாத நெஞ்சினர்’ என்பது எச்சப் பொருளாக உணர்த்தப்பட்டுள்ளமை இதற்குக் காட்டாகும்.
தொடர்நிலையில் சிறு சிறு தொடர்களாய் அமைந்தமை ஔவையாரின் நடைச்சிறப்பாய் உள்ளது. இவரது பாடல்களில் காணப்படும் தனிச்சிறப்பு எனவும் இதனைக் கூறலாம்.
“உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்
மடவர் மகிழ்துணை நெடுமானஞ்சி” (43)
“போற்றுமின், மறவீர்! சாற்றுதும், நும்மை
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்” (44)
இப்பாடல்களில் சிறு சிறு தொடர்களைக் கொண்டு அதியனின் ்கொடைத் தன்மையையும் போர்புரியும் ஆற்றலையும் விளக்கியுள்ளமையைக் காணலாம். பழிப்பது போலப் புகழும் தன்மையினையும் இவரது பாடல்களில் காணலாம்.
“பழிப்பது போலும் பான்மையின் மேன்மை
புலப்பட மொழிவது புகழாப் புகழ்ச்சி” (45)
எனத் தண்டியாசிரியர் இதனைப் பற்றிக் கூறுவார்.
“இவ்வே பீலியணிந்து மாலை சூட்டி
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ’’(46)
என அதியமானுடைய படைக்கலத்தைப் புகழ்ந்து கூறும் வான் மாங்கலத் துறைப் பாடலில் தொல்காப்பியர் குறிப்பிடும் ‘பழிகரப்பங்கதம்’ (47) எனும் அங்கதக் குறிப்பு விரவிய நகைச்சுவை குழைந்துள்ளது. ‘இவ்வே’, ‘அவ்வே’ என்று தொண்டைமான் வேலையும், அதியமான் வேலையும் ஒப்பிடுகிறார் ஔவையார். புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும் கவிதையில் அமைந்துள்ளது போற்றி உணரத்தக்கதாகும். இவ்விலக்கியக் கூறுகள் அனைத்தும் ஔவையாரின் வெளியீட்டு உத்திகளாக அமைந்திருப்பது நோக்கத்தக்கது.
அடிக்குறிப்புகள்
1. C.T.Winchester, principles of literary Criticism, p., 61
2. தொல்.பொருள்,மெய்., நூற்பா, 1
3. தொல்.பொருள்., மெய்., நூற்பா, 3
4. William K. Wimsatt, Jn.&Cleanth Brooks, Literary Criticism, A Short history, 1967,P.,290
5. புறம்., பா.எ.,206
6. புறம்., ப.எ., 100
7. இளங்கோவின் இலக்கிய உத்திகள், ப., 162
8. கிரேக்க லிரிக் கவிதைகளும் சங்க இலக்கியக் கவிதைகளும் ஒப்பீடு, பக்., 78-79
9. 13-வது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்ற வெளியீடு, ப., 165
10. தொல்.பொருள்.,புறத்., நூற்பா,20
11. புறம். பா.எ.,235
12. இலக்கியத் திறனாய்வியல், ப., 117
13. புறம்., பா.எ., 231
14. புறம்., பா.எ., 232
15. கம்பன் இலக்கிய உத்திகள், ப., 211.
16. தொல்., பொருள்., உவ., நூற்பா, 1
17. தொல்.பொருள்., உவ., நூற்பா, 3
18. அ.ச.ஞானசம்பந்தன், இலக்கியக்கலை, ப., 153
19. இ.சுந்தரமூர்த்தி, திருக்குறள் அணிநலம், சென்னைப் பல்கலைக்கழகம், பக்., 20-21
20. புறம்., பா.எ.,87
21. புறம்., பா.எ., 88
22. புறம்.. பா.எ., 89
23. புறம்.,பா.எ.,91
24. புறம்., பா.எ., 94
25. புறம்., பா.எ., 101
26. புறம்., பா.எ., 107
27. புறம்., பா.எ., 315
28. புறம்., பா.எ., 90
29. 13-வது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற வெளியீடு, ப., 317
30. கம்பன் இலக்கிய உத்திகள், ப., 381
31. புறம்., பா.எ., 390
32. புறம்., பா.எ., 100
33. புறம்., பா.எ., 103
34. புறம்., பா.எ., 97
35. புறம்,. ப.எ., 92
36. குறள் எண், 66
37. மொழிவரலாறு, ப., 202
38. ஆ. கந்தசாமி, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சி ஓர் ஆய்வு, ப., 105
39. அ.ச.ஞானசம்பந்தன், இலக்கியக்கலை, ப., 109
40. அ.ச.ஞானசம்பந்தன், இலக்கியக்கலை, ப., 113
41. புறம்., பா.எ., 98
42. புறம்,, ப.எ., 89
43. புறம்., பா.எ., 315
44. புறம்., பா.எ., 104
45. தண்டியலங்காரம், பொருளணியியல், சூத்திரம், 84
46. புறம்., பா.எ., 95
47. தொல்.,பொருள், செய்.,நூற்பா.,122
துணைநூற்பட்டியல்
1. அ.ச.ஞானசம்பந்தன், இலக்கியக்கலை, கழக வெளியீடு.
2. தண்டியலங்காரம், கழக வெளியீடு.
3. மு. வரதராசனார், மொழிவரலாறு, கழக வெளியீடு, சென்னை, எட்டாம் பதிப்பு, 1985.
4. ச.வே.சுப்பிரமணியன், கம்பன் இலக்கிய உத்திகள், மெய்யம்மைப் பதிப்பகம், சென்னை, 1982.
5. ச.வே. சுப்பிரமணியன், இளங்கோவின் இலக்கிய உத்திகள், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 1984
6. ஆ. கந்தசாமி, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சி ஓர் ஆய்வு, எழில் முருகன் பதிப்பகம், சென்னை, 1954.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.