சமூகவியல் நோக்கில் புறநானூறு - ஓர் ஆய்வு
செ. இராஜலட்சுமி
உதவிப்பேராசிரியர், ரமணாஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிதம்பராபுரம், பந்தல்குடி.
முன்னுரை
தற்கால ஆய்வுகளில் சமூகவியல் ஆய்வு குறிப்பிடத்தக்கதாக இருந்து வருகிறது. சமுதாயம் எனும் கூட்டமைப்பில் நிலவும் சிக்கல்களை ஆராய, அறிவியல் சார்ந்த பல உட்கூறுகளைக் கொண்ட சமூகவியல் ஆய்வேச் சிறந்த ஆய்வாகும். தமிழ் இலக்கியப் பரப்பில் சங்ககாலச் சமுதாயம் என்பது செவ்வியல் சமுதாயமாக ஏற்கப்படுகின்றது. சங்ககால மக்கள் தமக்குரிய சமுதாய அறங்களுடன் வாழ்ந்துள்ளனர். சங்க இலக்கியங்கள் மதிப்பு வாய்ந்த சமுதாய விழுமியங்களையேப் பெரும்பான்மையாகப் பதிவு செய்திருக்கின்றன. அவ்விலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றில் இடம் பெற்றிருக்கும் சமூகவியல் கருத்துகளை, சமூகவியல் நோக்கில் புறநானூறு எனும் தலைப்பில் ஆராய இக்கட்டுரை முனைகிறது.
சங்க மக்களின் வாழ்க்கை நிலை
சங்க கால மக்களின் வாழ்க்கை அகம், புறம் என இருவகைப்பட்டது. அக வாழ்க்கை என்பது ஒத்த தலைவனையும், தலைவியையும் உள்ளடக்கியதாகும். களவு வழி வந்த கற்பு, களவு வழி வாராக் கற்பு என இரு நிலையாக அக வாழ்வு பேசப்படுகின்றது. காதல் தவிர்த்த மற்ற மதிப்புகள் அனைத்தும் புறம் சார்ந்த மதிப்புகளாகும். கொடை, வீரம், மானம் போன்ற பல பொருட்கள் குறித்த மதிப்புகள் புறம் சார்ந்த மதிப்புகளாகக் கொள்ளப்படுகின்றன.
"ஆன்முலை அறுத்த அறன் இல்லோர்க்கும்
மாண் இழைமகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்... ... ... " (1)
என்கிற இப்பாடலில், பசுவின் பால் தரும் மடிப்பகுதியை அறுத்தல், பெண்களின் கருவைச் சிதைப்போர், பெற்றோர்க்குக் கொடுமை செய்வோர் மூவரும் மதிப்படைய முடியாது. இந்த மூன்றையும் ஏற்றாலும் செய்நன்றி கொல்லுதல் என்பது மிகக் கொடுமையானது என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த நான்கு மதிப்பின்மைகளும் தற்போதும், நாள்தோறும் நிமிடந்தோறும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன என்பது வருந்தத்தக்கது.
சான்றோர் என்போர் மறுமையில் நன்மை கிடைக்கும் என்பதற்காக இம்மையில் நல்லன செய்யமாட்டார்கள். சான்றோர்கள் இயல்பாகவே எவ்வித எதிர்பார்ப்புமின்றி நன்மை செய்வார்கள். பயன் கருதி அறம் செய்பவர்கள் அறத்தை விலை கூறி விற்கும் வணிகர்கள் ஆவார்கள் என்பது புறநானூற்று நெறியாகும்.
"இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆய்அலன் பிறகும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்கு பட்டன்று அவன் கைவன்மையே" (2)
பிசிராந்தையார் நரையின்றி வாழ்ந்தமைக்குக் காரணம் நல்ல மக்கள், மனைவி, மன்னன் என்று தன்னைச் சூழ்ந்து இருந்தவர்கள்தான் காரணம் என்கிறார். இந்த உலகம் இன்னும் இயங்கக் காரணம், தன்னலம் மறந்து பெருந்தன்மையாகப் பொதுநலத்தோடு வாழும் தன்மை படைத்த சிலரேக் காரணம் என்று புறப்பாடல் சுட்டுகிறது.
"நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்" (3)
என்று புறம் சார்ந்த மதிப்புகள் மக்கள் சார்ந்த மதிப்புகளாக அமைகின்றன.
பொருளாதார நிலை
அறம், பொருள், இன்பம், வீடடைதல் நூற்பயனே எனக் கூறிப் பொருளாதார வளர்ச்சிக்குத் தமிழ் நூல்கள் பல வழிவகுத்துள்ளன. 'திரைகட லோடியுந் திரவியம் தேடு" (4) என்கிறது மூதுரை.
இயற்கையாகக் கிடைத்த உணவினை உண்டு வந்த பண்டைத் தமிழர்கள், உணவின் தேவை அதிகரிக்கும் போது, தானே உற்பத்தி செய்யும் முறையினைக் கண்டுபிடித்தனர். தொழிலில் ஏற்படும் போட்டிகளில் வெற்றிபெற அவரவர் திறன்களைக் காட்டத் தொடங்கினர். 'அந்தணர், அரசர், அளவர், இடையர், உப்புவணிகர் (உமணர்), உழவர், எயிற்றியர், கடம்பர், கடைச்சியர், கம்மியர், களமர், கிணைஞர், கிணைமகள், குயவர், குறத்தியர், குறவர், குறம்பர், பாணர், புலையர், புண்செய் கொல்லர், பூவிலைப் பெண்டு, பொருநர், மடையர், மழவர், மறத்தியர், மோரியர், யவனர், யாழ்ப்புலவர், யானைவேட்டுவர், வடவடுகர், வணிகர், வலைஞர், பேடர்" (5) என்று அக்காலத் தொழில் பிரிவினரை உ. வே. சாமிநாதையர் சுட்டுகிறார்.
மண்பாண்டத் தொழில்
கிராமப் புறங்களில் வேளார் என்றழைக்கப்படும் குயவர்களால் களிமண் கொண்டு திருவை மூலம் விதவிதமான பாண்டங்கள் செய்யப்படுகின்றன. தற்போது உலோகங்கள், நெகிழி கொண்டு உருவாக்கப்பட்ட வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களின் பயன்பாடு அதிகமாகிவிட்ட நிலையிலும், மண்பானையில் தண்ணீர் சேகரித்துக் குடித்தால் உடலுக்குக் குளிர்ச்சி என்றும், மண்பானைகளில் சமைக்கப்படும் உணவுப்பொருட்கள் சுவை மிகுந்ததாய் இருப்பதுடன் உடல் நலத்திற்கும் பயனளிக்கக் கூடியது என்று மண்பாண்டப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் சிலர் இருக்கின்றனர். சில உணவகங்கள், தங்கள் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் மண்பாண்டப் பொருட்களைக் கொண்டு சமைக்கப்படுவதாக விளம்பரம் செய்வதையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம். பண்டைக் காலத்தில் மண்பாண்டத் தொழில் செய்வோர் பெரிதும் மதிக்கப்பட்டனர்.
"இருள் தினிந்தன்ன குருஉத்திருள் பரூஉப்பகை
அகல்இரு விசும்பின் ஊன்றுஞ்சூளை,
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!" (6)
என்று அழைக்கப்பட்டனர். வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் மட்டுமின்றி, முதுமக்கள் தாழி உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், மண்ணைக் கொண்டே செய்யப்பட்டிருக்கின்றன. அன்றைய காலத்தில், மண்பாண்டப் பொருட்கள் அனைத்துத் தரப்பினருக்கும் மிகுந்த தேவையுடையதாக இருந்ததால், மண்பாண்டத் தொழில் செய்பவர்கள், சமூகத்தில் உயர்ந்த இடத்தினைப் பெற்றிருந்தனர் என்பதைப் புறநானூறு சுட்டுகிறது.
பெண்களின் நிலை
சமுதாயத்தில், மனித இனத்தின் தோற்றத்திற்கும் அதன் பல்வேறு செயல்பாடுகளுக்கும் பெண்கள் அடிப்படைக் காரணங்களாக அமைந்துள்ளனர். பிறப்பு முதல் இறப்பு வரை பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்க இருக்கிறது. சங்க இலக்கியத்தில் பெண்கள் கல்வி கற்றவர்களாக, ஆளுமை நிரம்பியவர்களாக, உரிமை கிடைத்தவர்களாக, ஆட்சி செலுத்துபவர்களாகவும் இருந்திருக்கின்றனர். பெண்கள் குறித்து தொல்காப்பியர்,
“அச்சமும் நாணும் மடனும்முந் துறதல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப" (7)
என்ற நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். அச்சம், மடம், நாணம் முதலிய பண்புகள் பெண்மைக்குரியவை என்கிறார்.
வீரம் நிறைந்த ஆடவரையே இளமகளிர் விரும்பினர். மறக்குடி மகளிரின் வீரத்தினை 'மூதின்முல்லை"என்ற புறப்பொருள் இலக்கணம் கூறுகிறது. மறக்குடி மகளிரை மூதின்மகளிர் என குறிப்பிட்டனர். மறக்குடியிற் பிறந்த பெண்ணொருத்தி, முதல்நாள் போரில் தன் தமையனும், மறுநாள் போரில் தன் கணவனும் மடிந்த நிலையிலும், தன் குடிக்கு ஒருவனாய் எஞ்சி நிற்கும் தன் இளம் மகனை அழைத்து, அவன் கையில் வேலினைக் கொடுத்து, வெள்ளுடை அணிவித்து, தலை முடித்து, செருமுகம் நோக்கிச் செல்க என விடுத்ததாகப் புறப்பாடல் ஒன்று கூறுகிறது.
“கெடுக சிந்தை கடிதிவள் துணிவே
மூதின் மகளிர் ராதல் தகுமே
மேனாள் உற்ற செருவிற்கிவள் தன்னை
யானை யெறிந்து களத்தொழிந் தனனே
நெருதல் உற்ற செருவிற் கிவள்கொழுநன்
பெருநிரை விலங்கி யாண்டுப்பட் டனனே
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப்
பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோன்
செருமுக நோக்கிச் செல்கென விடுமே" (8)
என்று ஒக்கூர் மாசாத்தியார் என்பவர் பாடிய பாடல் வழியாக, மறக்குடி மகளிர் வீரத்தை முதன்மைப்படுத்தி, அதற்காகத் தங்கள் உறவுகள் அனைத்தையும் இழக்கத் தயாராக இருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது.
கைம்மை மகளிர்
கணவனை இழந்த மகளிர் நிலைகள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன. காதலன் இறந்தான் எனக் கேள்வியுற்ற நிலையில் உயிர் துறத்தல் முதல் நிலையாகும். கணவரின் ஈமத்தீயிற் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்வது இரண்டாம் நிலையாகும். மூன்றாம் நிலை கணவன் இறந்த பின்னர் கைம்மை நோன்பு மேற்கொண்டு வாழ்தலாகும்.
இரண்டாவதாகிய உடன்கட்டை ஏறும் நிலையானது புறநானூற்று பாடல் ஒன்றில், சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிற்கிள்ளியும் திருப்போர்ப்புறத்தில் போரிட்டு இறந்த போது அவரின் உரிமை மகளிர் அனைவரும் உடன்கட்டை ஏறினர் என்பதை,
“... ... ... பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி யாங்கமைந் தனரே" (9)
எனும் பாடல் வழியாக அறியலாம்.
பழக்க வழக்கம் - மரபுகள்
“இயற்கையிலேயே மனிதன் சமுதாய இயல்புடையவன் என்று முதன் முதலில் வாதிட்டவர் அரிஸ்டாட்டில் என்றும், பிறக்கும் போதே மனிதனின் இயல்புகள் சமுதாயத்தோடு ஒன்றுபடும் தன்மைகளைப் பெற்றுள்ளன என்றும், இத்தன்மைகள் மொழி, பழக்கங்கள், வழக்கங்கள், அறிவார்ந்த முறையில் சிந்தித்தல் போன்றவற்றில் புதைத்து கிடக்கின்றன என்று அரிஸ்டாட்டில் கூறுவதாகத் தம் 'பண்பாட்டு மானிடவியல்" என்ற நூலில் பக்தவத்சல பாரதி கூறுவர்"
க. காந்தி தான் எழுதிய 'தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்" என்ற நூலில் 'ஒரு சமுதாயத்தின் உண்மை நிலையை நாம் அறிய வேண்டுமெனில் அச்சமுதாயத்தின் நம்பிக்கை, பழக்க வழக்கங்களை நாம் ஆய்வு செய்ய வேண்டும். அச்சமுதாயத்தின் கால ஓட்டத்தில் உருவாக்கப்படுகின்ற இலக்கியங்களில் அச்சமுதாயத்தின் வெளிப்பாடாக இத்தகு பழக்கவழக்கங்கள் பரவலாகப் பதியப்படுகின்றன" (11) என்று கூறுவர்.
இவ்வறங்களை வாழையடி வாழையாகப் போற்றிப் பேண வேண்டுமென்ற நோக்கில் சேரமான் கணைக்கால் இரும்பொறை மன்னனே, தம் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்ச்சியைக் கூறித் தமிழினத்திற்கு வேண்டுகோள் விடுத்துப் பாடியுள்ளார்.
'குழவி யிறப்பினும் மூன்றடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளிற் றப்பார்
தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணு மளவை
ஈன்ம ரோவில் வுலகத்தானே" (12)
என்று நாட்டார் வழக்கு நன்கு புரியும் வண்ணம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
விழுப்புண்ணோடு உயிர் துறப்பவர்க்கே சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அக்கால மக்களிடம் இருந்தது. பிள்ளை இறந்து பிறப்பினும், தசைப் பிண்டமாகப் பிறப்பினும் அவற்றையும், ஆளாகக் கருதி வாளால் கீறிப் புதைக்கும் வழக்கம் இருந்தது.
அறம்
பண்டைத் தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலமாகப் புறநானூறு இருக்கிறது. இதனுள் புரவலர்கள் ,புலவர்களைப் போற்றி அவர்களின் அறிவரைகளைச் செவிமடுத்து ஒழுகிய சிறப்புகளும், அறமுறை பிறழாது போர் புரிந்து மார்பில் வேல் ஏற்ற வீரம், மறக்குடி மகளிரின் வீரம் அனைத்திலும் அறம் என்ற உணர்வு தோய்ந்துள்ளது. தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த வாழ்வில் மறக்குடியில் பிறந்தவர்கள் எனினும் அறம் போற்றினர் என்பதை பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி நெட்டிமையார்,
“ஆவும் ஆன் இயற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்..." (13)
என்ற பாடலில், போர் செய்வதிலும் பண்டைய தமிழர்கள் அறம்போற்றி வாழ்ந்த அறச்சிந்தனைகள் வெளிப்படுகின்றன.
பண்டைத் தமிழர்கள் எக்காலத்திலும்ம் எந்நேரத்திலும் எல்லோர்க்கும் வழங்கி அறம் போற்றி வாழ்ந்தார்கள் என்ற சிந்தனையை அதியமான் நெடுமாஞ்சியைப் போற்றி ஒளவையார் பாடிய,
“ஒரு நாள் செல்லலம்; இருநாள் செல்லலம்;
பல நாள் பயின்று பலரொடு செல்லினும்
தலை நாள் போன்ற விரும்பினன் மாதோட..." (14)
என்ற புறப்பாடலில் அதியமான் அஞ்சி அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தான் என்பதை அறியலாம்.
முடிவுரை
பண்டைய தமிழர்கள் சமுதாய ஒழுக்கத்தோடு, பல்வேறு நல்லறங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர். பல்வேறு தொழில்கள் நடைபெற்று வந்த நிலையில், அடிப்படைத் தேவையாக இருந்த மண்பாண்டத் தொழில் செய்து வந்தவர்களை மதிப்பளித்து உயர்வாக வைத்திருந்தனர். பெண்களுக்கு உரிய மதிப்பளித்து வந்ததுடன், அவர்களைச் சிறப்பித்து மகிழ்ந்தனர். பண்டைய காலத்தில் வீரத்திற்கும் அறத்திற்கும் அதிக மதிப்பு இருந்தது என்பதை இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.
அடிக்குறிப்புகள்
1. புறம் - 34
2. புறம் - 134
3. புறம் - 195
4. ஒளவை கொன்ற வேந்தன் பக்கம் - 39
5. உ.வே. சாமிநாதன் ஆராய்ச்சிக் குறிப்புகள், புறநானூறு பக்கம் - 65
6. புறம் - (226 - 228)
7. தொல்காப்பியக் களஞ்சியம் - 96
8. புறம் - 279
9. புறம் - 62 (13 - 15)
10. பக்தவத் சல பாரதி, பண்பாட்டு மானடவியல், பக்கம் - 26
11. முனைவர் க.காந்தி, தமிழர் பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும், பக்கம் - 1
12. புறம் - 74
13. புறம் - 9
14. புறம் - 101
துணை நூற்பாட்டியல்
1. புறநானூறு மூலமும் உரையும், உ.வே. சாமிநாதரையர், சென்னை பதிப்பகம்.
2. பக்தவத்சல பாரதி சீ, பண்பாட்டு மானிடவியல், அடையாளம் பதிப்பகம், திருச்சி (1990).
3. முனைவர் க. காந்தி தமிழர் பழக்க வழக்கங்களும், நம்பிக்கைகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை (முதல் பதிப்பு 1980).
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|