இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

தொல்காப்பியம் சுட்டும் புணர்ச்சிக் கட்டமைப்பு

ஜெ. கார்த்திக்
முதுகலைத் தமிழ் இலக்கியம், இரண்டாமாண்டு,
தூய வளனர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.


முகவுரை

தமிழில் உள்ள உருபனியல், தொடரியல் கோட்பாடுகளில், ‘புணர்ச்சி’ பற்றிய கருத்தாக்கங்கள் இன்றியமையாதவையாகும். புணர்ச்சி நிலைகளினைத் தொல்காப்பியம் அறிவியல் கலந்த மொழியியல் நுட்பத்துடன் விளக்கி நிற்கின்றது. தொல்காப்பியர் குறிப்பிடும் தமிழ்மொழியின் புணர்ச்சிக் கட்டமைப்பையும், அவற்றின் இயல்புகளையும் ஆராயும் களமாக இக்கட்டுரை அமைகின்றது.

புணர்ச்சி

எழுத்தோ சொல்லோ நிலைமொழி வருமொழி இடையீட்டில் ஒன்றோடொன்று இணைவதைப் புணர்ச்சி என்னும் கலைச்சொல்லால் குறிப்பிடுவர். “ஒரு வாக்கியத்தில் அல்லது வாக்கியங்களுக்கிடையேக் காணப்படும் தொடர்களும் சொற்களும் சொற்களில் காணப்படும் பல்வேறு உருபன்களும் தம்முள் தாம் சேரும்போதும் ஏற்படும் சேர்க்கை, மொழிப்புணர்ச்சி அல்லது புணர்ச்சி எனப்படும். இதனைச் சந்தி எனவும் அழைப்பர்” (1) என்று புணர்ச்சியைப் பற்றி ச. அகத்தியலிங்கம் குறிப்பிடுகின்றார். புணர்ச்சி இலக்கணம் பற்றித் தொல்காப்பியர் ‘புணரியல்’ என்ற இயலை எழுத்ததிகாரத்தின்கண் யாத்துள்ளார். இப்புணர்ச்சி இலக்கணத்தை மொழியியலாளர்கள் ‘உருபொலியனியல்’ ((Morphophonemic) என்று அழைப்பர். ‘சந்தி’ என்றும் ‘புணர்ச்சி’ என்றும் இது வழங்கலாகின்றது. “இலக்கண நூல்கள் சொற்களின் சேர்க்கையால் (புணர்ச்சி) மாற்றம் ஏற்படுகிறது என்று கொள்ள, மொழியியல் தனிச் சொல்லின் எழுத்து மாற்றமே உருபொலியன் அல்லது சந்தி என்று கொள்கிறது” (2) என செ. வை. சண்முகம் குறிப்பிடுகிறார். சொற்களின் தொடரமைவுக்கேற்ப மொழிகள் புணரும் போது எழுத்துக்களில் உண்டாகும் மாற்றம் புணர்ச்சி என்றும், ஒலிமாற்றத்தேவையின் அடிப்படையில் எழுத்துக்காக உண்டாகும் புணர்ச்சியினைச் சந்தி எனவும் கொள்ளலாம். எழுத்துக்களின் புணர்நிலையை அடிப்படையாகக் கொண்டு புணர்வது அகநிலைப்புணர்ச்சி (Internal Assimilation) ஆகும். அதாவது சொற்களுள்ளேயே புணர்தல் என்னும் கோட்பாடமைவது. அகநிலைப்புணர்ச்சி பற்றி இங்கு கூறுவதன் நோக்கம் வேற்றுமை, அல்வழி புணர்ச்சிகளின் விரிவான செய்திகள் சொல்லதிகாரத்தில் அமைந்தாலும், எழுத்துக்களின் புணர்ச்சிதான் உருபொலியனியல் கோட்பாட்டை நெறிப்படுத்துகின்றது என்பதாகக் கொள்ளலாம். எழுத்துக்களின் புணர்ச்சியின் அடுத்தநிலை, உருபன்களின் புணர்ச்சி அதாவது மொழிப்புணர்ச்சி ஆகும். இதனைப் புறநிலைப் புணர்ச்சி (External Assimilation) என்பர். முதலீறு, ஈற்றுமுதல் எழுத்துக்களின் புணர்ச்சியைப் புணர்நிலைச் சுட்டு எனவும், பெயர், வினைச் சொற்களின் புணர்ச்சியை மொழிபுணர்இயல்பு எனவும் தொல்காப்பியர் பகுத்துள்ளார்.


நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியும்

நிறுத்த சொல், குறித்துவரு கிளவி ஆகிய இரண்டு கலைச்சொற்களைத் தொல்காப்பியர் புணர்ச்சியின்போது பயன்படுத்துகின்றார்.

“நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவிஎன்று
ஆயீர் இயல புணர்நிலைச் சுட்டே” (3)

என்று தொல்காப்பியர் இவற்றைக் குறிப்பிடுகிறார். புணர்வதற்கேற்ற இடைப்பகுதியாகிய சந்திக்கு முதலில் வருவது நிறுத்த சொல் ஆகும். சந்திக்கும் பின் வருவது குறித்துவரு கிளவியாகும். வீரசோழியம் இவற்றை நின்றசொல், வருசொல் என்று குறிப்பிடுகின்றது. நிறுத்தச்சொல் என்பதை நிலைமொழி என்றும் குறித்து வருகிளவி என்பதை வருமொழி என்றும் நன்னூலார் குறிப்பிடுகின்றார்.

புணர்நிலைச் சுட்டு

நிறுத்தச் சொல்லின் ஈற்றெழுத்தும் குறித்து வருகிளவியின் முதல் எழுத்தும் இணைவதைப் ‘புணர்நிலைச்சுட்டு’ என்கின்றது தொல்காப்பியம். “சொல்லப்பட்ட ஒரு சொல்லோடு அடுத்த சொல் கூடும் நிலைமையாகிய கருத்து” (4) ஆகும். உயிர், மெய் எழுத்துக்கள் ஈற்றும் முதலுமாக இணைந்து நான்கு வகையில் புணர்நிலை அமையும் என்பதைத் தொல்காப்பியர்,

“உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும்
உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும்
மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும்
மெய்யிறு சொல்முன் மெய்வரு வழியும் என்று” (5)

என்று விளக்குகிறார்.

1. நிறுத்த சொல்லின் ஈற்றுயிரும் குறித்துவருகிளவியின் முதல் உயிரும் புணர்தல் (மா+இலை=மாவிலை)

2. நிறுத்த சொல்லின் ஈற்றுயிரும் குறித்துவருகிளவியின் மெய் முதலும் புணர்தல் (மரம்+பலகை=மரப்பலகை)

3. நிறுத்த சொல்லின் ஈற்றுமெய்யும் குறித்துவருகிளவியின் முதல் உயிரும் புணர்தல் (நூல்+அகம்=நூலகம்)

4. நிறுத்த சொல்லின் ஈற்றுமெய்யும் குறித்துவருகிளவியின் முதல் மெய்யும் புணர்தல் (நூல்+முகம்=நூன்முகம்)

என்னும் நான்கு மொழிப்புணர்ச்சிகளை விளக்குகிறார். பெயர், வினை என்று சொற்கள் இரு வகையாக இருப்பினும் இவையன்றி உருபனியல், தொடரியல் ஆகியவைகளை உள்ளடக்கிய, பொதுவான புணர்ச்சிக் கட்டமைப்பை உருவாக்க ஒலிப்பு நிலையை அடிப்படையாகக் கொண்டு புணர்மொழிச் சுட்டை யாத்துள்ளார்.


மொழிபுணர் இயல்புகள்

புணர்மொழிகள் என்பதனை ‘மொழிபுணர் இயல்புகள்’ என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். மொழிபுணர் இயல்புகள் நான்கிலும் சந்தியின்கண் எவ்வித மாற்றமும் நேராமல் இயல்பாய்ப் புணரும். சொற்களின் புணர்ச்சியினை,


1. பெயரும் பெயரும் புணர்தல் (அவன் இராவணன்)

2. பெயரும் வினையும் புணர்தல் (இராவணன் வென்றான்)

3. வினையும் பெயரும் புணர்தல் (வென்றான் இராவணன்)

4. வினையும் வினையும் புணர்தல் (வந்தான் வென்றான்)

என்று நான்கு வகையான மொழிகளின் புணர்வினைக் குறிப்பிடுகின்றார். வினைச்சொல்லைத் தொழிற்சொல் எனத் தொல்காப்பியர் இங்கு குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

இயல்புப் புணர்ச்சி

இயல்புப்புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி என்று இருவகையாகப் புணர்ச்சி அமையும். இயல்புப் புணர்ச்சியில் பெரிதும் மாற்றம் இருப்பதில்லை. இயற்கையாகவே மாறுபாடடையாத புணர்ச்சி ஒன்றே எனவும், அவ்வொன்றானது இயல்புப்புணர்ச்சியே என்றும் ‘ஒன்றே இயல்பென’ என்பதன் மூலம் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இலக்கண அறிஞர்களின் பார்வையில் கீழ்க்கண்டவாறு இயல்புப் புணர்ச்சிகள் அமையப்பெறுகின்றன.

1. மாற்றம் இன்றிப் புணர்தல். (மண்+மணம்=மண்மணம்)

2. ‘புள்ளி ஈற்றுமுன் உயிர்தனித்தியலாது’ விதிப்படி மெய்யீறும் உயிர்முதலும் புணர்தல். (அவன்+அழகன்=அவனழகன்)

3. உடம்படுமெய் பெறுதல். (பூ+அரசன்=பூவரசன்)

4. குற்றியலுகரத்தின் முன் உயிர் புணர்தல். (வரகு+அரிசி=வரகரிசி)

ஆகியவை இயல்புப் புணர்ச்சிகளின் வடிவங்களாகும்.

விகாரப் புணர்ச்சி

தொல்காப்பியர் “மூன்றே திரிபு” எனக் கூறுவதன்மூலம் புணச்சியின் மாற்றங்கள் மூன்று என்பதனை அறியமுடிகிறது. இம்மூவகை மாற்றங்களைத்தான் பிற்கால இலக்கணிகள் விகாரப்புணர்ச்சி என்றனர். விகாரம் என்பதற்கு மாறுபாடு என்று பொருள். “விகாரப்புணர்ச்சி என்பது இரண்டு தொடர்களோ இரண்டு சொற்களோ இரண்டு உருபுகளோ இணையும் போது முன்னதிலோ அல்லது பின்னதிலோ அல்லது இரண்டிலுமோ ஏதாவது மாற்றம் ஏற்படின் அது விகாரப் புணர்ச்சி எனப்படும்” (7) விகாரப்புணர்ச்சியினைத் தொல்காப்பியர்,

“அவைதாம்
மெய்பிறந்து ஆதல் மிகுதல் குன்றல் என்று
இவ்வென மொழிப திரியும் ஆறே” (8)

என்று குறிப்பிடுகின்றார். மெய்பிரிதாதல் என்பது திரிதல் விகாரமாகும். “மெய்பிறிதாதலை மொழியியலார் ஒலித்திரிபெனக் (Assimilation) கொள்வர்” (9)

1. மெய்யெழுத்துக்கள் மட்டுமே மெய்பிரிதாதலில் திரியும் (கல்+சிலை=கற்சிலை)

2. மிகுதல் (பூ+தோட்டம்=பூந்தோட்டம்)

3. குன்றல் (மரம்+வேர்=மரவேர்)

இவை மூன்றும் விகாரங்கள் ஆகும். “விகாரம் எனினும், செயல் எனினும், செயற்கை எனினும், விதி எனினும் ஒக்கும்” (10) என்று தி. வே. கோபலனார் குறிப்பிடுகிறார். இயல்புப் புணர்ச்சியை இயற்கைப் புணர்ச்சி என்றும், விகாரப்புணர்ச்சியைச் செயற்கைப் புணர்ச்சி என்றும் கூறிப்பிடலாம். உரையாசிரியர்கள் தோன்றல், திரிதல், கெடுதல், நீளல், நிலைமாறுதல் மருவிவழங்கல், ஒத்துநடத்தல் என்று எழுவகை விகாரங்களைக் குறிப்பிடுவர். (11)

நன்னூலார் செய்யுள் விகாரம் என்ற விகாரத்தை,

“வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல்
விரித்தல் தொகுத்தல் வருஞ்செய்யுள் வேண்டுழி” (12)

என்றவாறு குறிப்பிடுகிறார். வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல், ஆகிய அறுவகை செய்யுள் விகாரங்களைக் குறிப்பிடுகின்றார். இருப்பினும் இதற்கு முந்தைய நூற்பாவில்,

“தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
மூன்றும் மொழி மூவிடத்தும் ஆகும்” (13)

தொல்காப்பியரின் மும்மாற்றக்கொள்கையை (மூன்று விகாரங்களை) நன்னூலார் ஏற்கின்றார். பின்னைய நாட்களில் காலத்திற்கேற்ப செய்யுளில் ஏற்பட்ட அறுவகையான விகாரங்களைத்தான் முன்னர் கூறிய நூற்பாவில் நன்னூலார் இயம்புகிறார்.

இருவகைப் புணர்ச்சிகள்

எழுத்துக்களின் அடிப்படையில் எழுத்துக்களின் புணர்ச்சி அமையும். பெயர், வினை அடிப்படையில் மொழிப்புணர்ச்சி அமையும். உருபுகள் இணைப்பின் அடிப்படையில் வேற்றுமை, அல்வழிப் புணர்ச்சிகள் அமையப்பெறும். தொல்காப்பியர் இவற்றை,

“வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும்
வேற்றுமை அல்வழிப் புணர்மொழி நிலையும்
எழுத்தே சாரியை ஆயிரு பண்பின்
ஒழுக்கல் வலிய புணருங் காலை” (14)

உருபுகள் ஏற்ற வேற்றுமைப் புணர்ச்சி, வேற்றுமை உருபு ஏலாத அல்வகைப் புணர்ச்சி என்று தொல்காப்பியர் இருவகைப்படுத்துகிறார். இவ்விரு புணர்ச்சிகளில் எழுத்து மிகுதலும், சாரியை மிகுதலும் உண்டு என்னும் குறிப்பினையும் தொல்காப்பியனார் இயம்புகிறார்.


வேற்றுமைப் புணர்ச்சி

ஒன்றன் தொடரில் பெயருக்கும் வினைக்கும் உண்டான உறவுநிலையைக் குறிப்பிட்டு வேற்றுமை அமையும். வேற்றுமை உருபுகளை ஏற்று எழுகையில் தோன்றும் இருசொற்களின் இணைப்பு வேற்றுமைப் புணர்ச்சியாகும். புலப்படும் பெயர் பொருளை வேற்றுமைப்படுத்தும் புணர்ச்சியே வேற்றுமைப் புணர்ச்சி என்றும் வரையறுப்பர். எண்வகை வேற்றுமைகளில் எழுவாய், விளி நீங்கலாகிய,

“ஐ ஒடு குஇன் அதுகண் என்னும்
அவ்ஆறு என்ப வேற்றுமை உருபே” (15)

என்று மேற்சுட்டப்பட்டுள்ளவற்றில்

1. ஐ (வாளைக் கொணர்)

2. ஒடு (ஊரோடு வாழ்)

3. கு (மறவர்க்குக் கொடு)

4. இன் (ஊரின் நீங்கு)

5. அது (கிளியினது கூண்டு)

6. கண் (மலையின்கண் கோயில்)

ஆகிய ஆறு உருபுகள் மட்டுமே வேற்றுமைப் புணர்ச்சிக்கு உரியனவாகும். விரி (கிளியினது கூண்டு, தொகை (கிளிக்கூண்டு), உடன்தொக்கத்தொகை (கூண்டின்கண் உள்ள கிளி) என்னும் மூவகையில் வேற்றுமைத்தொடர் அமையும். வேற்றுமைத் தொடரில் பெயர்ச்சொல்லுக்குப் பின்புதான் வேற்றுமை உருபுகள் உண்டாகும். அதாவது பெயருக்கு ஈறாகும் தன்மை. இதனைத் தொல்காப்பியர்,

“கூறிய முறையின் உருபுநிலை திரியாது
ஈறு பெயர்க்கு ஆகும் இயற்கைய என்ப” (16)

என்று குறிப்பிட்டு, ஆறு வேற்றுமை உருபுகள் புணர்ச்சியின் போது பெயர்நிலைக்கிளவிக்கு முன் தன்னிலை திரியாமல் புணர்ந்து நிற்கும் என்கிறார்.

அல்வழிப் புணர்ச்சி

வேற்றுமைப் புணர்ச்சி அல்லாத புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி ஆகும். வேற்றுமை அல்லாத புணர்ச்சி இது என ‘வேற்றுமை அல்வழிப் புணர்மொழி” என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். “ ‘வேற்றுமை அல்வழி’ என்பதே அதன் முழுப்பெயர். சுருக்கம் கருதி இஃது ‘அல்வழி’ எனப்பட்டது” (17) என்று தொல்காப்பியர் கூற்றினை வழிமொழிவார் தி.வே. கோபலனார். அல்வழிப்புணர்ச்சியினை ‘தொகைப்புணர்ச்சி’ என்றும் அழைப்பர். “அல்வழிப் புணர்ச்சியைக் கூறி, வேற்றுமைப் புணர்ச்சியை விவரித்தல்” (18) என்னும் நடையைத் தொல்காப்பியர் கையாண்டுள்ளார் என்பது அறிஞர் பெ. சுயம்பு அவர்களின் கூற்று. அல்வழிப்புணர்ச்சியின் உள்ளடக்கம் பதினான்கு ஆகும். அவையான, வினைத்தொகை (வளர்தமிழ்), பண்புத்தொகை (செந்தமிழ்), உவமைத்தொகை (முத்துப்பல்), உம்மைத்தொகை (கபிலபரணர்), இந்நான்கன் புறத்தும் பிறந்த அன்மொழித்தொகை (பொற்றொடி வந்தாள்), எழுவாய்த்தொடர் (சாத்தன் வந்தான்), விளித்தொடர் (சாத்தா வா!), குறிப்புவினைமுற்று (நல்லன் சாத்தன்), தெரிநிலைவினைமுற்று (உழுதான் சாத்தன்), பெயரெச்சத்தொடர் (வந்த சாத்தன்), வினையெச்சத்தொடர் (வந்து போனான்), இடைச்சொற்றொடர் (மற்றொன்று), உரிச்சொற்றொடர் (தவப்பிஞ்சு), அடுக்குத்தொடர் (வாழி வாழி) ஆகியனவாம். இலக்கணிகள் அல்வழி பற்றிய பட்டியலை முழுமையாகத் தரவில்லை. முதன்முதலில் அல்வழிகளைப் பட்டியலிட்டவர் இளம்பூரணரே. அவரே, தொல்காப்பிய உரையில் அல்வழி பன்னிரண்டு வகைகள் உள்ளன என்பதையும் காண்பிக்கிறார். இதனைக் கொண்டே நன்னூலார் அல்வழிப் புணர்ச்சி வகைகள் பதினான்கு என வகைப்படுத்துகிறார் என்பது மொழியியலாளர்தம் கருத்து.

சாரியைப் புணர்ச்சி

இரு வேறு சொற்கள் இணையும்போது அவற்றைச் சார்ந்து நிற்கும் பொருளற்ற சொல்லே சாரியை எனப்படும். இது ஓர் இடைச்சொல். சார்ந்து வரலால் சாரியை என்றும் கூறுவர். “பதம் முன் விகுதியும் பதமும் உருபுமாகச் சார்ந்து கிடந்தவற்றை இயைக்க வரும் இடைச்சொல் சாரியையாம்” (19)

ஒரு சொல்லின் முன் ஒரு சொல்லோ, உருபோ, விகுதியோ வந்து புணரும்போது சாரியை தோன்றும் என்றெல்லாம் பலவாறாக சாரியை பற்றிய செய்திகள் காணக்கிடைக்கின்றன.

“இன்னே வற்றே அத்தே அம்மே
ஒன்னே ஆனே அக்கே இக்கே
அன் என் உளப்படப் பிறவும்
அன்ன என்ப சாரியை மொழிப” (20)

இன் (ஆ+இன்+கோடு=ஆவின்கோடு), வற்று (அவை+வற்று+ஐ=அவையற்றை), அத்து (கலம்+அத்து+குறை=கலத்துக்குறை), அம் (புளி+அம்+காய்-புளியங்காய்), ஒன் (கோ+ஒன்+ஒடு=கோஒனொடு), ஆன் (பரணி+ஆன்+கொண்டான்=பரணியாற்கொண்டான்), அக்கு (குன்று+அக்கு+கூகை=குன்றக்கூகை), இக்கு (ஆடி+இக்கு+கொண்டார்=ஆடிக்கொண்டார்), அன் (ஒன்று+அன்+ஐ=ஒன்றனை) ஆகியவற்றைச் சாரியைகள் என்பார் தொகாப்பியர். கால ஓட்டத்தில் பல சாரியைகள் வழக்கமையலாம் என்று கருதிய தொல்காப்பியர், இவையன்றிப் பிற சாரியைகள் உள்ளன என்றும் குறிப்பிடுகின்றார். “இன் சாரியையினை முதலிலும், அன்சாரியையினை இறுதியிலும், பிற சாரியைகளை இடையிலும் அமைத்திருக்கின்ற முறைமைக்கு அவ்வவற்றின் சிறப்பேக் காரணமென இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் விளக்குவர்” (21) முதலெழுத்துக்கள் முப்பதையும் கரம், காரம், ஃகான் ஆகிய சாரியைகளைச் சேர்த்து வழங்கும்படிக் குறிப்பிடுவார் தொல்காப்பியர். இம்மூன்றும் எழுத்துச்சாரியைகள் ஆகும். சாரியைப்புணர்ச்சி பற்றிய கோட்பாடு தொல்காப்பியர் வடிப்பதற்கு அடிப்படை, அவரது காலகட்டத்தில் மொழிநிலையைப் பிரதிப்படுத்துதற்கேயாகும். வழக்கமைந்த சொற்களின் தொடரியல் கொள்கைகளை விளக்க அவர் சாரியைக் கோட்பாட்பாட்டைப் பயன்படுத்துகிறாரேயன்றி, மொழி ஆய்வு செய்யவேண்டும் என்பது அவரின் கருதுகோள் கிடையாது. சாரியைக்கோட்பாடு மட்டுமன்றி தொல்காப்பியம் முழுமையும் இந்த அடிப்படையில்தான் எழுதியுள்ளார்.


தொகுப்புரை

மொழியியலார் வகுக்கும் உருபொலியனியல் கோட்பாட்டிற்குச் சான்றளிக்கும் வகையில் தொல்காப்பியரின் புணர்ச்சிக் கோட்பாடு அமையப்பெற்றுள்ளது. மெய் உயிர் எழுத்துக்களின் புணர்ச்சி, பெயர் வினைகளின் புணர்ச்சி என்றும் சொற்கள் அடிப்படையிலும் பொருண்மை அடிப்படையிலும் ஏற்படும் புணர்ச்சிகளைக் குறிப்பிடுகின்றார். புணர்மொழிகள் சந்திக்கும் இடங்களில் நிறுத்தசொல், குறித்துவருகிளவி ஆகியனவாக புணரும் எழுத்துக்கள் இருவகையாக மாற்றம் பெறும் என்ற நுட்பத்தையும் குறிப்படுகின்றார். உருபுகளை மையமிட்டு வேற்றுமைப் புணர்ச்சியினையும், தொகையை மையமிட்ட அல்வழிப்புணர்ச்சியினையும் எடுத்துக்காட்டியுள்ளார். சுருங்கக் கூறின் வேற்றுமைப் புணர்ச்சிகளைக் கூறி அவற்றிலிருந்து அல்வழிப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் உத்தியைத் தொல்காப்பியர் கையாண்டுள்ளார். மொழியியல் ஆய்வுக்குச் சாரியைகளை உட்படுத்தாமல் மக்கள் வழக்கின் அடிப்படையில் சாரியைகளை உட்படுத்துகிறார்.

சான்றெண் விளக்கம்

1. அகத்தியலிங்கம், ச., தமிழ்மொழி அமைப்பியல், ப.326

2. சண்முகம், செ.வை., எழுத்திலக்கணக் கோட்பாடு, பக்.203-204

3. தொல்காப்பியம், நூற்பா.107

4. கோபாலையர், தி.வே., தமிழ் இலக்கணப் பேரகராதி, எழுத்து 2, ப.135

5. தொல்காப்பியம், நூற்பா.107

6. மேலது நூற்பா.108

7. அகத்தியலிங்கம், ச., தமிழ்மொழி அமைப்பியல், ப.330

8. தொல்காப்பியம், நூற்பா.109

9. இன்னாசி, சூ., எழுத்தியல், ப.62

10. கோபாலையர், தி.வே., தமிழ் இலக்கணப் பேரகராதி, எழுத்து 2, ப.247

11. மேலது, ப.133

12. நன்னூல், நூற்பா.155

13. மேலது நூற்பா. 154

14. தொல்காப்பியம், நூற்பா.112

15. மேலது நூற்பா.113

16. மேலது, நூற்பா.553

17. கோபாலையர், தி.வே., தமிழ் இலக்கணப் பேரகராதி, எழுத்து 1, ப.36

18. சுயம்பு,பெ., இலக்கண நூற்களஞ்சியம், ப.23

19. கோபாலையர், தி.வே., தமிழ் இலக்கணப் பேரகராதி, எழுத்து 2, ப.1

20. தொல்காப்பியம், நூற்பா.119

21. இன்னாசி, சூ., எழுத்தியல், ப.114

துணைநூற்பட்டியல்

1. அகத்தியலிங்கம், ச., தமிழ்மொழி அமைப்பியல், மெய்யப்பன் தமிழாய்வகம், 53, புதுத்தெரு சிதம்பரம் -606001, பதிப்பு - 2002

2. இன்னாசு. சூ. - எழுத்தியல், பாரி புத்தகப் பண்ணை, 90, பிராட்வே, சென்னை - 600 108, பதிப்பு - 2009

3. கோபாலையர், தி.வே., - தமிழ் இலக்கணப் பேரகராதி, எழுத்து தொகுதி1, தொகுதி 2, தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர். சென்னை - 600017, பதிப்பு - 2013

4. சண்முகம், செ. வை. - எழுத்திலக்கணக் கோட்பாடு, அனைத்திந்திய தமிழ் மொழியியற் கழகம் , அண்ணாமலைநகர், பதிப்பு - 1980.

5. மயிலைநாதர் (உரை ஆசிரியர்), நன்னூல் மூலமும் மயிலைநாதர் உரையும், வைஜெயந்தி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு - 1918

6. மாணிக்கவாசகன், ஞா (உரை ஆசிரியர்) -தொல்காப்பியம் மூலமும் விளக்க உரையும், உமா பதிப்பகம், 18 (171), பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை-600001, பதிப்பு - 2010

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p280.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License