Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

பொருளையே விரும்பும் பொதுமகளிர்

முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.


முன்னுரை

பண்டையத் தமிழர் சமுதாயத்தில் விளைபொருட்கள் வாணிபத்திற்குப் பயன்பட்டது போல, சமுதாய மகிழ்விற்குப் பெண்மையும் விலை பேசப்பெற்றிருக்கிறது. காமத்தின் மிகுதியால் சிற்றின்பத்தை அனுபவிக்கக் கருதியோர்க்கு பெண்கள் தங்களையே விலை பொருட்களாகக் கொடுத்துள்ளனர். அத்தகைய விலைமகளிரும் பொன், பொருளுக்குத் தங்களுடைய உடம்பையேப் பண்டமாற்று முறையில் அனுபவிக்கக் கொடுத்து வாணிபம் செய்தமையும் குறிக்கப் பெற்றுள்ளது.

விபச்சாரி, விலைமாது , வேசி என்று பேச்சு வழக்கிலும், ஆங்கிலத்தில் Harlot , Prostitute ,Whore, Strumpet ,Courtesan என்று அழைக்கப்படுகிறார்கள். தன் உடம்பை ஆடவர்க்கு விற்கும் பெண்களை இலக்கியங்களில் கணிகை, சலதி, பரத்தை, விபச்சாரி, பொதுமகளிர்,விலைமகள், வரைவின் மகளிர், பொருட்பெண்டிர், வேசி, தாசி, கற்பற்றீர் எனப் பல சொற்களால் குறிக்கப் பெற்றுள்ளனர். கணிகையருக்குப் பொருள் மட்டுமே முக்கியம். அவர்களுக்கு வரம்பு கிடையாது. பண்பற்றவர்கள். ஆண்களை மயக்கி ஏமாற்றுபவர்கள். உடல் ஓரிடம், மனம் ஓரிடம் என்று இருப்பவர்கள் என்று குறிப்பிடுகிறார்.

திருவள்ளுவர் பொதுமகளிரைச் சென்று சேர்ந்தால் தீமையே ஏற்படும். இது மனித சமுதாயத்துக்கு ஏற்றதல்ல என்று கூறுகிறார். நாலடியார், ஆசாரக்கோவை, சிறுபஞ்சமூலம், ஏலாதி போன்ற நூல்களும் இதேக் கருத்தை வலியுறுத்துகின்றன. பொதுமகளிர் பொருளைக் கவரும் இயல்பினர் என்பதை இக்கட்டுரை வழியாக ஆராய முற்படுகிறது.

பரத்தையர் பரிசம்

"ஒரு வன் பாங்கர்உளம் வைத் தொழுகும்
அதன்மி...” (பெருங்கதை 1:35. 68-69)

பரத்தையர் பரிசம் பெறுவதற்குரியர். பரிசம் பெண்ணைத் துய்ப்பதற்குத் தரும் தொகையாகும்.

நருமதைக்குப் பரிசமாக 101 கழஞ்சு பொற்காசுகளை உதயணன் அனுப்பினான். மதனமஞ்சிகைக்கு பாசிலை நன்கலம் பரியமாகக் கொடுக்கப்பட்டது என்பதை;

"வீழ்ந்தார் நல்கும் வெறுக்கை யன்றிக்
காணிக் கொண்டும் கடன்றிந்தெண்ணிய
ஒன்றுமுத லாக ஓரெட் டிறுத்த
ஆயிரம் கூறும் அந்த பரிசு" (பெருங்கதை 1:35. 80-83)

என்று கூறுகிறது. சீவகசிந்தாமணியும் "ஒன்று ஆதியாக ஆயிரத்து ஓரெட்டு ஈறாகப்” பரிசம் பெற்றதைக் கூறுகிறது. சிலப்பதிகாரமும் "நூறுபத் தடுக்கி எட்டுகடை நிறுத்த வீறுயர் பசும்பொன் பெறுவதிம் மாலை (சிலப்பதிகாரம் 3: 164-165) நாடகக் கணிகையர் தலைவரிசையாக ஆயிரத்தெண் கழஞ்சு பெறுதல் நூல் வழக்காகும்.


கணிகை

"மாயப் பொய்பலகூட்டிக் கவ்வு கரந்து" (மதுரைக்காஞ்சி 570) பல வஞ்சனைகளையுடைய பொய் வார்த்தைகளாலே முதற் கூட்டிக் கொண்டு என்பர் நச்சினார்க்கினியர். "மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள்” கோவலனும் மாசற்ற மாதவியை இழித்துரைத்தான். திருவள்ளுவரும் "மாயமகளிர்" (918) வஞ்சனையை மறைத்து இன்சொல் பேசி ஏமாற்றுபவர் என்பதனை "ஊறு செய் நெஞ்சம் உள்ளடக்கி ஒண்ணுதலாக துறை மொழிந்த மொழி என்று நாலடியும் கூறுகிறது. விலைக் கணிகை என்றாலே தன் பண்டைய வரைவின்றிப் பொருள் தருவார் யாவர்க்கும் விற்று வாழ்பவர். அன்பின் விழையாராய் பொருள் விளையும் பண்பினர். இவர்களை விலைநலப் பெண்டிர் என புறம் 365 பேசுகிறது.

பரிபாடலில் விலைக்கணிகை

யாவராலும் விரும்பப்படும் காம இன்பத்தினை வஞ்சத்தோடு கூடிய பொய் மொழிகளோடும் சேர்த்துத் தன்னை நாடிவரும் காமுகரை மயக்கும் விலைமகளிர் ‘கணிகை’ என்றும், ‘காமுகப் பன்றிகள்’ நுகர்வதற்குரிய இரண்டு உதடுகளைக் கொண்ட ‘தோட்டி’ என்றும் கூறுகிறாள் என்பதை,

"மாயப்பொய் கூட்டி மயக்கும் விலைக்கணிகை" (பரிபாடல் - வையை- 20:49)

என்றும்,

"தூற்றுவ தோற்றம் துணை இதழ் வாய் தொட்டி" (பரிபாடல்- வையை - 20:52)

என்பதை அறியமுடிகிறது.

விலைமகள் தலைவியிடம் பேசுவதாகக் கூறப்பட்டுள்ளது. நீ மிகுதியாக அன்பு பூண்ட நின் கணவன் எம்பால் அன்புடையவன். ஆதலால் இவ்வளையல்களையும், ஆரத்தையும் புணர்ச்சிக்குரிய விலையாக எனக்குத் தந்தான். மேலும், இவ்வணிகளைத் தவிர, இப்பொழுது நின் காலில் கிடக்கும் சிலம்புகளையும் எம் பொருட்டாய் கழற்றுதலையும் செய்யவல்லவன் என்று குறிப்பிடுவதை,

"மாலை அணிய விலை தந்தான் மாதர்நின்
கால சிலம்பும் கழற்றுவான் சால
அதிரல் அம்கண்ணி நீ அன்பன் என்று அன்பன்" (பரிபாடல் - வையை- 20:79-81)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

வைகை நதியில் புதுவெள்ளம் வந்து விட்டால் பரத்தையருடன் உறவு கொண்டு அவர் மனம் குளிரப் பொன்னும், பொருளும் கொடுத்து தாமும் இன்புற்றிருப்பர். ( பரிபாடல்)


மதுரைக்காஞ்சியில் பரத்தை

நீர் திரண்டு எழுவது போல வெள்ளியப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை அகன்ற விசும்பில் சென்று மணம் கமழுமாறு தங்கள் கூந்தலில் முடித்துக் கொள்வர். அழகிய, திரண்டு விளங்கும் வளையல்கள் மேலும் நன்கு விளங்கும்படி கைகளை வீசி மனைதோறும் செல்வர். அலரும் பருவத்தில் உள்ள புதிய மலர்கள் எங்கும் மணம் வீச அவர்கள் தெருவில் செல்வர். முற்படப் பலருடன் புணர்ந்த புணர்ச்சியால் குலைந்த ஒப்பனைகளைப் பின்னும் பெருமை தரும் அழகு மிகுகின்ற நன்மையுண்டாகும்படி திருத்திக் கொள்வர். புறமண்டிலத்தைச் சார்ந்தவர்களும், உள்ளூரில் உள்ளவர்களுமாய்த் தம் வடிவழகை விரும்பி வந்த பல செல்வம் உடையவர்களைப் பல வஞ்சனையுடையப் பொய் வார்த்தைகள் கூறி, முதலில் அழைத்துக் கொண்டு சென்று, பின்னர் அவர்களுடைய நுண்ணிய பூண்களையுடைய மார்பினைத் தம் மார்பில் வடுபடும்படி தழுவுவர். அவ்வாறு அன்புடையவர் போல முயங்கி முயக்கத்தை அவர்கள் பொருள் தரும் அளவும் மறைத்து, அவர் செல்வமெல்லாம் அழியும்படி வாங்கிக் கொள்வர். பூ மலரும் காலம் அறிந்து அதன் நுண்ணிய தாதினை உண்டு தாது அற்ற வறுவிய பூவைப் பின் நினையாமல் துறந்து செல்கின்ற மெல்லிய சிறகினையுடைய வண்டின் கூட்டத்தைப்போலத் தம்மை நுகர்ந்தவர்களுடைய நெஞ்சு கலங்கும்படி, அவரிடத்து இனிய கூட்டத்தை கைவிட்டு நீங்குவர். அவர்களுடைய செயல் பழுமரம் உள்ள இடத்தைத் தேடிச் சென்று அவற்றின் பழத்தை ஆராய்ந்து நுகர்தலை தமக்குத் தொழிலாக உடைய பறவைக் கூட்டங்களில் செயலைப் போன்றதாகும் என்பதை,

“மாயப்பொய் பலகூட்டி கவ்வுக்கரந்து
சேயரும் நணியரும.தலன் நயந்து வந்த
இளம்பல் செல்வர் வளம் தபவாங்கி
நுண்தாதுஉண்டு வரும் பூத் துறக்கும்” (மதுரைக்காஞ்சி 570-573)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

பரத்தை ஒருத்தி கூர்மையான பற்களையும், மூங்கில் போன்ற தோளினையும், கைவந்திகை என்னும் அணிகலனும், நீண்ட கருமுடியினை உடையவளும், இனிமையாகப் பேசுபவளுமாகிய இவள், தன்னை அழகு செய்து கொண்டு வீதியில் மெத்தென நடந்து இளைஞர்களைக் கைத்தட்டி அழைத்தாளாம்“ ( மதுரைக்காஞ்சி 420)

கொண்டி மகளிர்

கொண்டி மகளிர் என்பது விலைமகளிரைக் குறிக்கும் பெயராகும் என கலைக்களஞ்சியம் பொருள் கூறுகிறது. அரசனால் சிறைபடுத்திக் கொண்டுவரப்பட்ட பகை மன்னர்களின் உரிமை மனைவியர் பலரும் நீர் உண்ணும் துறைகளில் நீராடுவர். அம்பலங்களை மெழுகிட்டுத் தூய்மைப்படுத்துவர். அந்திப் பொழுதில் விளக்குகளை ஏற்றித் தெய்வம் உறையும் இடங்களுக்கு மலர் சூட்டி வழிபாடு செய்வர். (மன்னனின் ஆற்றலுக்குப் புகழ் சேர்ப்பதாகும் என்று கருதினர்) என்பதை,

"கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலர் அணி மெழுக்கம் ஏறிப் பலர் தொழ
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்
பருநிலை நுடுந்தூண் ஒல்கத் தீண்டி" (பட்டினப்பாலை246-250)

குறளில் வரைவின் மகளிர்

திருவள்ளுவர் வரைவின் மகளிர் அதிகாரத்தில் கூறும் பரத்தையர், அகப்பொருள் பரத்தையர் அல்லர். அவர்கள் நடைமுறை விலைமகளிர் ஆவர். பொருட்பெண்டிர், மாயமகளிர், வரைவு இலா மாண் இழையர், இருமனப்பெண்டிர், முதலான அடைமொழிகளோடும், பிணம், அளறு முதலான வசவு மொழிகளோடும் திருவள்ளுவர் குறிப்பிடுபவரே விலைமகளிர்.

"பொருட்பெண்டிர் பொய்ம்மைமுயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று" (திருக்குறள் 913)

தான் தழுவிப் புணரும் ஆடவர் கொடுக்கும் பொருளுக்காக ஆசைப்பட்டுப் பொய்யாகத் தழுவும் பெண் ‘வேசியர்’ எனப்படுவர். அத்தகைய வேசியருடன் ஒருவர் தழுவல் புணர்ச்சி கொள்வர் என்பது இருட்டறையில் பிணத்துடன் உருண்டு ஒலி எழுப்புவது போல ஆகும். அன்பு இல்லாமல் பொருள் திரட்டுவதையேக் குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு, இறுதியில் துன்பமே வந்து சேரும். அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிர், இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள். விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் நரகம் எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை.


ஆசாரக்கோவையில் வரைவின் மகளிர்

தன் உடலைக் கவர்ச்சியாக ஆடை, அணி மணிகளால் அலங்கரித்துக் கொண்டிருப்பது விலைமாதர்க்கு அழகாகும்.

"வண்ணமகளிர் இடத்தொடு தம்மிடம்
ஒள்ளியம் என்பார் இடங்கொள்ளார் தெள்ளி
மைக் கிழமை உண்டெனினும் வேண்டாவே பெண்டிர்க்
குவப்பன வேறாய்விடும்" (ஆசாரக்கோவை 82)

நாலடியாரில் வரைவின் மகளிர்

தம்மைப் புகழொளி இடையில் என்று சொல்லிக் கொள்பவர் வண்ணமிட்டுத் தன்னைப் பூச்சழகு செய்து கொள்ளும் மகளிராகிய வேசையர் வாழும் இடத்திற்கு அருகில் தம் இல்லத்தை, மிகவும் உரிமையுடைய இல்லமாயினும் அமைத்துக் கொள்ளமாட்டார். அமைத்துக் கொண்டால் தன் மனைவி போன்ற பெண்கள் விரும்புவன வேறாக அமைந்துவிடக் கூடும்.

" அங்கோட் பகலல்குல் ஆயிழை நம்மொடு
செங்கோடு பாய்துமே என்றாள்மன் செங்கோட்டின்
மேற் காணம் உண்மையான தேவை தொழிந்தாளே
காற்கால் நோய் காட்டிக் கலுழ்ந்து" (நாலடியார் 372)

உடலழகும் அணியழகும் கொண்ட பொதுமகளிர், நம்மிடம் பணம் இருந்தால் மலையின் உச்சி மீது ஏறியும் உங்களுக்காகப் பாய்ந்து தரையில் விழுந்து உயிர் விடுவேன் என்று கூறுவர். ஆனால், நம்மிடம் பொருள் இல்லாமற் போகுமானால் என் காலில் வலி நோய் வந்துள்ளது எனப் பொய்யாக அழுது மலையின் அடிவாரத்துக்கும் வராமல் வீட்டிற்குள்ளேயே இருப்பர்.

காட்டுப் பசு போல் நக்கி, சுகமளித்துக் கைப் பொருளைக் கவர்ந்து கொள்ளும் கணிகை , எல்லாம் கவர்ந்த பின் காட்டு எருது போலப் பாய்ந்து விலகி பிறரிடம் சென்று விடுவாள். அவளது இந்த அற்ப அன்பினை உண்மை என நம்பி ஏமாறுகிறவர்களது வாழ்க்கை, பிறரால் நகைக்கக்கூடியதாக இழிவுறும். இதற்கென தனி அதிகாரத்தை அமைத்துள்ளார்.

சிறுபஞ்சமூலத்தில் பொதுமகளிரைக் கண்டால் பகைவரைப் போல வெறுக்கவேண்டும் என்று 42வது பாடலில் கூறப்பட்டுள்ளது.

"மை விழியார் மனை அகல்" (ஆத்திச்சூடி 96)

மை தீட்டிய கண்களைக் கொண்டு பிறரை மயக்கும் பெண்களின் வீட்டை நாடிச் செல்கின்றவரை,

"மைவிழியார் தம்மனை அகன்று ஒழுகு" (கொன்றைவேந்தன் 78)

விழிக்கு மை தீட்டி வழியில் செல்கின்றவரை மயக்குபவர்களின் வீட்டை விட்டு விலகி வாழவேண்டும்.

"விலை மகட்கு அழகு மேனி மினுக்குதல்" (கொன்றைவேந்தன் 13)

தன் உடலைக் கவர்ச்சியாக ஆடை, அணி மணிகளால் அலங்கரித்துக் கொண்டிருப்பது விலைமாதர்க்கு அழகாகும்.

சிலப்பதிகாரத்தில் கணிகையர்

விலை மகளிர் குலம் இனி வேண்டாமென்று சிந்தைக்கு எடுத்துச் செயல்பட்டவர் இளங்கோவடிகள் ஆவார்.

சிலப்பதிகாரத்தில் கணிகையர் நடன மகளிர், ஆடற்கூத்தியர், அரங்கக்கூத்தி, வம்பப்பரத்தையர், அரங்கியர் மகளிர், கடைகழிமகளிர், கணிகை, தாசி, கலையுணர் மகளிர், பரத்தை, நாடகமகளிர் என்று அழைக்கப்பட்டனர்.

சிலம்பில் மாதவி கணிகையர் குலத்தில் பிறந்ததால் கோவலனைமட்டும் நினைத்து வாழ்ந்தாலும், சமூகம் அவளைக் கணிகையாகவே பார்த்தது. அவள் மகள் மணிமேகலை துறவியானாலும் மன்னன்மகன் உதயகுமாரனே அவள் பின்னால் வந்து தொல்லை கொடுத்து வந்தான். கணிகையரே மாற நினைத்தாலும் சமூகம் அவர்களை மாற விடுவதில்லை.


மணிமேகலையில் கணிகையர்

கணிகையர் வாழ்க்கையைப் பற்றி மணிமேகலை கூறுகிறது.

“கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே?
பாண்மகன் பட்டுழிப் படுஉம் பான்மை இல்
யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியும்
நறுந்தாது உண்டு நயன்இல் காலை
வரும் பூத் துறக்கும் வண்டு போல்குவம்
வினை ஒழிகாலைத் திருவின் செல்வி
அனையேம் ஆகி ஆடவர்த் துறப்போம்” (மணிமேகலை- உதயகுமரன் அம்பலம் புக்க காதை 15-22)

மாதவியின் தாய் சித்ராபதி கணிகையர் குலம் குறித்து,” நாம் பலருடைய கையினின்று பொருளைப் பெற்று உண்டு வாழ்தலாகிய உரிமை உடையோம். பாணன் இறந்த பின் (உடன் இறக்கும் தன்மையில்லாத) பிறனொருவன் கைப்படும் ‘யாழ்’ போன்ற இயல்புடையோம். அன்றியும் மணமுள்ள மகரந்தத்தை உண்டு,தேன் இல்லாது வறிதாகிய பூவினைக் கைவிடும் வண்டினைப் போன்றோரும் ஆவோம். மற்றும் நல்வினை நீங்கும் போது நீங்கும் திருமகளைப்போல் ஆடவரைவிட்டு நீங்குவோம்” என்று கூறுகிறாள்.

“நாடவர் காண நல் அரங்கு ஏறி
ஆடலும் பாடலும் அழகும் காட்டி
கருப்பு நாண் கருப்பு வில் அருப்புக் கணைதூவச்
செருக் கயல் நெடுங்கண் சுருக்கு வலைப்படுத்து
கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்குப்
பண் தேர் மொழியின் பயன் பலவாங்கி
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப்
பான்மை… … … … … …” (உதயகுமரன் அம்பலம் புக்க காதை. 103-110)

நாட்டில் உள்ளோர் காணும் வண்ணம், நன்முறையில் அமைந்த நாடக அரங்கிலே ஏறி, ஆடலும், பாடலும் அழகும் புலப்படுத்தி வண்டுகளாகிய நாணினையுடைய கரும்பு வில்லைக் கொண்ட மன்மதன், அரும்புகளாகிய அம்புகளை ஆடவர் மீது பொழியுமாறு போர் செய்யும் கயல்மீனைப் போன்ற நீண்ட கண்களாகிய வலையால் சுருக்கிட்டு, காண்போர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு தம் வீட்டிற் சென்று அங்கு, தம் பால் போன்ற இனிய பேச்சினாலே அவர்களுடைய பொன்னையும், பொருளையும் கவர்ந்து கொண்டு, தேனைப் பருகிப் பின் மலரைத் துறக்கும் வண்டு போல பொருள் வற்றியபின் அந்த ஆடவரைத் துறக்கும் இயல்பினரன்றோ பரத்தையர் அத்தகையோரைக் கட்டுப் படுத்தி அவர்தம் பொய்யுரைகளை அடக்குதல் செங்கோன் முறைமை அல்லவோ என்று கூறுகிறாள்.

ஆதிரையின் கற்பு சிறப்பைக் கூறும் போது, பரத்தையின் இயல்பினை காயசண்டிகை வாயிலாகக் கூறுகிறார். பொருளை இழந்தவனை, அதுவரை பேணிய கணிகையும் பொருளை இழந்ததால் பிறரின் செல்வச் சிறப்பைக்காட்டி “பொருள் இல்லாதவனே போ” எனக் கை அசைத்துப் புறக்கணித்தாள் என்பது பெறப்படுகிறது.

வளையாபதியில் கணிகையர்

கணிகையர் வாழ்க்கையைப் பற்றி வளையாபதி கூறுகிறது.

“ஆய்குரங்கு அம்சிறை வண்டினம் போல்க வென்று
பாயிரம் இன்றிப் பயிற்றி மொழிந்தனள்
மேவரும் வன்பொருள் தந்து நின்றோள்நம்பி
யாவ ரடைந்தவர்க் கவையும்” (வளையாபதி 52)

வயது முதிர்ந்த கணிகை, இளைய கணிகைக்கு “உன்னிட ம் வருபவர் பலர் இருப்பினும், பொருள் மிகுதியாகத் தருபவரை ஏற்றுக்கொள்” என அறிவுரை கூறுவதோடு கணிகையரை விலங்கொடு ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.

பரத்தை தன் மகளுக்குக் கூறிய அறிவுரைகள்

“யாறொடு யாழ்ஞெலி கோனில வார்கொடிப்
பாறொடு பத்தினி மாபோல் ஒழுகென்று
கூறினாள் காந்தி முதிர்ந்தாள் மகட்கு இவை
வேறு இடத்து வெளிப்படல் நன்றாம்” (வளையாபதி 51)

வயதான பரத்தை ஒருத்தி, தன் மகளாகிய இளம் பரத்தையை நோக்கி “ஏடி உன்னை விரும்பி நாடி வரும் காமுகரிடத்தில் நீ ஆறு போலவும், யாழ் போலவும், தீக்கடை போலவும், நிலவு போலவும், மரக்கலம் போலவும், விலங்குகள் போலவும் நடந்து கொள்வாயாக” என்று கூறினாள்.


நீலகேசி

கணிகையர் வாழ்க்கையைப் பற்றி நீலகேசி கூறுகிறது.

“ஊன்நின்ற வலிழுக்கென்னா னுயிரினையுமுதென்ன
னோன்றலையு நோன்பென்னா னோக்குடைய கணிகையரே
போனாறிருந்து பொதியறுக்கும் புத்தன்றன் புன்னெறியை
யான்சென்ற தடிப்படுப்ப னறக்கரும் மிகுவென்றாள் “ (நீலகேசி 93)

இவ்வரிகள் கணிகையர் பொருளைக் கவரும் இயல்பினர் என்பதை உணர்த்துகின்றன.

ஆழ்வார் பாடலில் விலைமாது

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப்பொடி ஆழ்வாரை மயக்கி, அவரைத் தன் வசப்படுத்தினாள் தேவதேவி என்ற விலைமாது. பின் அவரை விட்டு வந்துவிட்டாள். தேடி வந்த அவரை அவமதிக்கிறாள். பொருள் இருந்தால் மட்டுமே அவரை வீட்டுக்குள் அனுமதிக்க முடியும் என்கிறாள். ஏங்கி தவிக்கும் விப்ரநாராயணனைக் காப்பற்றத் திருவரங்கன் முன் வருகிறான். அழகிய மணவாளதாசன் என்ற பெயர் தரித்து கோயிலில் இருக்கும் பொன்வட்டிலை எடுத்துக் கொண்டுபோய் தேவதேவியிடம் அளித்து விப்ரநாராயணன் கொடுக்கச் சொன்னதாகச் சொல்கிறான். பொன்வட்டில் களவுபோன செய்தி அரசனுக்குப் போகிறது. அரசன் காவலர்களை அனுப்ப , தேவதேவியின் வீட்டுவேலைக்காரி தன் எஜமான் வீட்டில் கண்டதாகக் கூற தேவதேவி கைதாக, அவள் விப்ரநாராயணரைக் காட்டிக் கொடுக்க அவரும் கைதாகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

திருமந்திரம் பொருட்பெண்டிர்

திருமந்திரம் பொருட்பெண்டிர் பற்றி கூறுகிறது.

“இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயலுறும் புல்லின் புணர்ந்தவர் யினும்
மயல்உறும் வானவர் சார இரும் என்பார்
அயல்உறப் பேசி அகன்று ஒழிந்தாரே” (திருமந்திரம் 206)

பொருளை விரும்பும் பொதுமகளிர் பொருளுடைய செல்வரை ‘வானுலகத் தேவர்’ என்றும், பொருள் இல்லாதவரை ‘தொலைந்து போ ‘என்றும் கூறும் இயல்புடையவர் என்று கூறுகிறது.

கம்பராமாயணம் காட்டும் பரத்தையர்

தங்களை நாடி வருவோர் அளிக்கும் பொருளை விரும்பும் மனத்தை உடையவர் பரத்தையர் என்று குறிப்பிடுகிறார். தம்மிடம் வருவோரின் தலை, மார்பு, பாதம் முதலியவற்றைத் தழுவி, அவர்களிடம் உள்ள பொருட்களை எல்லாம் பறித்துக் கொண்டு அவர்களைவிட்டு நீங்குவர்.

நகரப்படலத்தில் அகழியின் ஆழத்தை வருணிக்கும்போது, “வாரிக்கொண்டு விரைவாக மலையிலிருந்து நீங்கி சென்றது...” என்கிறார்.

"பொன்விலை...” (கம்பராமாயணம் - பாலகாண்டம்.- நகரப்படலம் 107)

என்று மிகுந்த பொருள் ஆசையுடைய விலைமகளிர் மனம் எவ்வளவு பொன் பெறினும் தூராமல் மேலும் ஆழமாதல் போல, அகழியும் அளவு காணமுடியாத ஆழமுடையதாக இருந்தது என்று கூறுகிறார். இதன் மூலம் தம்மிடம் வருவோரிடம் அன்பு கொண்டோர் போலத் தம்மைக் காட்டிக் கொண்டு அவர்களிடம் உள்ளப் பொருளையெல்லாம் பறித்துக் கொண்டு, அவர்களிடம் தங்கியிருக்காமல் அவர்களை விட்டு விரைவில் நீங்குவர் என விலைமகளின் இயல்புகளைக் கூறுகிறார்.

கிஷ்கிந்தாகாண்டம் கார்காலப் படலத்தில் மழை, காற்று, உயர்ந்த இடம், தாழ்ந்த இடம் எனக் கருதி நீங்காமல் மலைகளிலும், மரங்களிலும் மற்றும் எல்லா இடங்களிலும், பொருள் தருபவரின் உயர்வு, தாழ்வுகளைப் பார்க்காமல் தன் இன்பத்துக்கு விலையாகத் தரக்கூடிய பொருள் ஒன்றையே எண்ணி மிகுதியாகத் தருகின்றவரிடம் செல்லும் விலைமாதரின் அடிக்கடி சுழன்று மாறும் மனம்போல வீசியது என்று கூறப்பட்டுள்ளது.

திருப்புகழில் விலைமாதர்

வீட்டினுள் அழைத்துச் சென்று விளக்கை அணைத்துவிட்டு, படுக்கை மேல் படுக்க வைத்து, பசப்பு மொழிகளைப் பேசிக் கொண்டு கொடுத்தப் பொருள் போதாமல், அதற்கு வேண்டும், இதற்கு வேண்டும் என்று ஜாலப் பேச்சுகளைப் பேசி, கையில் உள்ள பொருட்களை எல்லாம் கக்கும்படி செய்து பிடுங்கிச் சோர்வடையும்படி செய்து விரட்டி துரத்துவார்கள் என்பதை,

"இருப்பது கத்துத் தளத்து மேல்
விளக்கெ டுத்துப் படுத்துமே
லிருத்தி வைத்துப் பசப்பியே... கொண்டுகாசு தணியா
திதுக்க துக்குக் கடப்படா
மெனக்கை கக்கக் கழற்றியே
இளைக்க விட்டுத் துரத்துவார்... தங்கள் சேர்வைத் தவிராய்" (திருப்புகழ் 66 திருச்செந்தூர்)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

பொருள் இல்லாத வாலிபர்களைப் பார்த்து, தமது நடவடிக்கைகளாலும், பேச்சுகளாலும் தளர்ச்சி அடையச் செய்வர். உயிரானது இந்த உடம்பை விட்டுப் பிரிகின்ற வரை உம்மைக் கூடி இருக்கும் தொழிலை ஒருக்காலும் விடமாட்டேன் என்று சபதம் செய்து, முன்பு தாம் சேர்த்திருந்த ஆடவர்களை வெறுத்து விலக்கி, பொன் முதலிய பொருட்களை அடையப் பெற்று, பின்னர் வருபவர்களைப் பேசி, அவர்களுக்கு விருப்பமானச் சொற்களைப் பலவாறு கூறி் அவர்களிடம் உள்ள பொருளைக் கொள்ளை கொள்ளும் பொதுமகளிர் என்று அருணகிரிநாதர் தன் திருப்புகழில் குறிப்பிடுகிறார்.


காளமேகப்புலவர் பாடலில் கூத்தியர்

கணிகையர் வாழ்க்கையைப் பற்றி காளமேகப்புலவர் பாடலில் கூறியுள்ளார்.

"ஓட்டங் கடியதா லுள்ளவரை மேவுதலால்
சேட்டை யெவரிடத்துஞ் செய்தலால் நாட்டமுடன்
காத்திரத்திற் குட்டியுறக் கட்டுதலாற் றெட்டுதலால்
கூத்தியர்க்கு நீரில் குரங்கு" (காளமேகப் புலவர் பாடல் 14)

கூத்தியர் என்னும் வைப்பாட்டி விரைவாக ஓடிவிடுவாள். கைப்பொருள் உள்ளவரை விரும்புவாள். எல்லாரிடத்தும் காதல் சேட்டை செய்வாள். ஆசையுடன் காப்பாற்றும் போதே குட்டி விடுவாள். கட்டிப்பிடித்துக் கையிலுள்ள பொருளைத் தட்டிப்பறித்துக் கொள்வாள் என்று கூறியுள்ளார்.

தண்டலையார் சதகம்

கணிகையர் வாழ்க்கையைப் பற்றி தண்டலையார் சதகம் கூறுகிறது.

"மேட்டுக்கே விதை விதை வீணருக்கே
செய்த நன்றி மேயும் பட்டி
மாட்டுக்கே கொடுத்த விலை பரத்தையர்க்கே
தேடியிட்ட வண்மையெல்லாம்
பாட்டுக்கே அருள் புரியும் கானலுக்கே
பெய்த மழை கருக்குந்தரினே” (தண்டலையார் சதகம் கங)

மேட்டிலே தூவின விதையும், சோம்பேறிகளுக்குச் செய்த நன்மையும், மேய்கின்ற கட்டுக்கடங்காத மாட்டுக்கு கொடுத்த இலையும், விலைமாதர்க்கு கொடுத்த கொடையும், காட்டிலும் பெய்த மழையும் ஒக்கும் கருக்கும்.

பட்டினத்தார் பாடலில் விலைமகள்

பட்டினத்தார் பாடலிலும் பொருளை விரும்பும் விலைமகள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

"நாவார வேண்டும் இதம்சொல்லு
வார்உனை நான் பிரிந்தால்
சாவேன்என்றேஇருந்து ஒக்கவுண்
பார்கள்கை தான்வறண்டால்
போய்வாரும் என்று நடுத்தலைக்
கேகுட்டும் பூவையருக்
கீவர் தலைவிதி யோஇறை
வாகச்சி ஏகம்பனே" (திருஏகம்பமாலை 238)

விலைமகளிர் உள்ளத்தில் ஒன்றை வைத்துத் தம் நா நிறையக் கைப் பொருளுடைய காமுகர் விரும்பும் இதமான சொற்களைக் கூறுவர். "உன்னை நான் பிரியும்படி, நேர்ந்தால் நான் இறந்து விடுவேன்” என்று கூறிக் காமுகருடன் இருந்து இவர் உண்ணத் தாம் உண்பர். அக்காமுகரின் கைப்பொருளாவது வறண்டு விட்டாலோ, “போய் வாரும் இனி இங்கு வரவேண்டாம்” என்று அவரது தலையில் குட்டி அனுப்பும் அந்த விலை மகளிருக்குத் தாம் சேர்த்தப் பொருள்களை எல்லாம் அளிப்பர். இவர்கள் இவ்வாறு அளிப்பதற்குக் காரணம் தலைவிதியா? அல்லது வேறொன்றா? என்கிறார்.

முடிவுரை

பொருள் தருபவரின் உயர்வு, தாழ்வுகளைப் பார்க்காமல் தன் இன்பத்துக்கு விலையாகத் தரக்கூடிய பொருள் ஒன்றையே எண்ணி மிகுதியாகத் தருகின்றவரிடம் செல்லும் விலைமாதர், பொருளை விரும்பும் பொதுமகளிர் பொருளுடைய செல்வரை ‘வானுலகத் தேவர்’ என்றும், பொருள் இல்லாதவரை ‘தொலைந்து போ ‘என்றும் கூறும் இயல்புடையவர். ஆண்களால்தான் பெண்களில் கணிகையர் குலம் உருவாக்கப்பட்டாலும், அப்பெண்களை மட்டுமே இச்சமூகம் இழிவுபடுத்துகிறதே தவிர, தவறாக நடந்து கொண்ட ஆண்களைத் தண்டிக்கவேயில்லை.

துணை நூற்பட்டியல்

1. அரசு (உரை.ஆ), படிக்காசு புலவர், தண்டலையார்சதகம், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.

2. கமலக்கண்ணன் இரா. வ. நாலாயிரதிவ்யபிரபந்தம் மூலமும் விளக்கவுரையும் தொகுதி I, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2001.

3. சுப்பிரமணியன். பெ.(உரை.ஆ) தட்சிணாமூர்த்தி அ. பரிபாடல் மூலமும் விளக்கவுரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடெட் சென்னை, 2004.

4. திருநாவுக்கரசு, ஆத்திச்சூடி, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை 2010.

5. நாகராசன்.வி. (உரை.ஆ) பத்துப்பாட்டு மூலமும் உரையும், முதல், இரண்டு தொகுதி நியூ செஞ்சுரி செஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடெட் சென்னை, 2004.

6. பழனியப்பன் எம்.ஏ. கவி காளமேகம் புலவரின் கவிநயம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, 2007.

7. பெருங்கதை பகுதி I உஞ்சைக்காண்டம் மகோமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை, 1968.

8. மாணிக்கனார். கு, திருமந்திரமும் மூலமும் தெளிவுரையும் வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2010.

9. மாணிக்கனார்.கு, பட்டினத்தார் பாடல்கள் மூலமும் உரையும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2010.

10. ஸ்ரீ சந்திரன். ஜெ. சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும், தமிழ் நிலையம், சென்னை, 2012.

11. ஸ்ரீ சந்திரன். ஜெ. மணிமேகலை மூலமும் தெளிவுரையும், தமிழ் நிலையம், சென்னை, 2012.

12. ஸ்ரீ சந்திரன். ஜெ. வளையாபதி மூலமும் தெளிவுரையும், தமிழ் நிலையம், சென்னை, 2012.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p283.html


  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License