Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

சங்ககால மகளிரின் வீர மரபுகள்

முனைவர் ம. சியாமளா
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி - 2),
குரு நானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை-42.


முன்னுரை

சங்க காலச் சமுதாய அமைப்பை அகம், புறம் என்ற இரு உணர்வுகளின் அடிப்படையில் பிரித்து, அவை சார்ந்த வாழ்வை இலக்கியமாகப் படைத்துள்ளனர். காதலும், காமமும் சார்ந்த அக வாழ்வில் ஏற்படுகிற பிரிவும், துயரமும் அகம் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. பொருள் ஈட்டுதலும், பொருளைப் பாதுகாத்தலும், பொருளுக்காக இனக்குழுக்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதும் புறம் எனப்படுகிறது. இந்தச் சண்டையிடுதலே கால வளர்ச்சியில் போராகப் பரிணாம வளர்ச்சி அடைந்துந்துள்ளது. தமிழ்ச் சமுதாயத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் காலங்காலமாகவே போர்களைக் கொண்டாடப் பழக்கப்பட்டிருந்தனர். இதனைத் தொல்காப்பியமும், சங்க இலக்கியமும் உறுதிப்படுத்துகின்றன. இங்கு போர் பற்றிய பெருமிதங்கள் ஆணுக்கானதாக உருவாக்கம் பெற்றுள்ளன. போரில் பெண்ணுக்கான இருப்பு என்பது ஆண் குழந்தைகளுக்கு வீர உணர்வை ஊட்டி வளர்த்தல் என்பதாக மட்டுமே உள்ளது.

சங்க காலப் பெண்கள்

கற்புடையவர்களாகவும், கணவனைத் தெய்வமாகத் தொழுபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். மேலும், கணவன் இறந்துவிட்டால் உடன்கட்டை ஏறுதல் அல்லது கைம்மை நோற்றல் போன்ற செயல்களை மேற்கொள்பவர்களாக இருந்திருக்கிறார்கள், இருத்தலுமாகிய பண்புகளை உடையவர்களாகத் திகழ்ந்தனர். சங்க அக இலக்கியப் பாடல்கள் பெண்களை அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு, அடக்கம், பொறுமை, இரக்கம், அழகு கொண்டவர்களாகப் படைத்திருக்கின்றன. இவை, பெண்ணின் இயல்புகளாகவே சுட்டப்பட்டுள்ளன. அக வாழ்வில் ஆண் மையச் சமுதாயம் கட்டமைத்த பண்புகளின் அடிப்படையில் கணவனுக்குக் கட்டுப்பட்டு பெண் வாழ்ந்திருக்கிறாள்.

ஆனால், வீரயுகச் மையச் சமுதாயத்தில் போர் மையமாக இருந்ததால் போர் உணர்வுகளைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி நாட்டைக் காக்கும் கடமை அவர்களுக்கு உரியது என்று சொல்லிக் கொடுத்து வளர்க்கும் மிக முக்கியப் பணியைச் செய்துள்ளனர் என்பதையும் சங்கப் பாடல்கள் சுட்டுகின்றன.

சங்கப் புறப்பாடல்களில் தலையொடு முடிதல் நிலை, பூசல் மயக்கம், பையுல், மூதானந்தம், முதுபாலை போன்ற பல துறைகளில் மறக்குடிமகளிரின் மாண்புகளும் வீரத்தாயின் பண்புகளும், கணவனுக்காக உயிர் துறக்கும் மனைவியின் பண்புகளும் பேசப்பட்டுள்ளன. இங்கெல்லாம் பெண்ணின் உடல்வழிதான் மறப்பண்புகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.


தாய் என்ற நிலையில் பெண்

இந்தியச் சமுதாயத்தில் பெண் என்பவள் தாய் மற்றும் மனைவி என்ற நிலையில்தான் பெரும்பாலும் அடையாளப்படுத்தப்படுகிறாள். எனவே, குடும்பம் என்ற நிறுவனத்திலிருந்து பிரித்தறிய முடியாத ஒரு நிலையில்தான் அவளது வாழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெண் விடுதலை பெற வேண்டும் என்றால் இன்றைக்குள்ள தனிக்குடும்ப வேலைகள் (பிள்ளை பெறுவது, வளர்ப்பது, சமைப்பது போன்றவை) பொதுத் தொழிலாக மாற வேண்டும் என்ற கருத்து முன்னெடுக்கப்படுகிறது. எனவே, தாய்மையைக் கொண்டாடித்தான் ஆணாதிக்கம் தன்னை நிலைநாட்டிக் கொண்டுள்ளது என்பது தெரிய வருகிறது. தாய்மை என்கிற இந்தக் கருத்தாக்கம் ஆணாதிக்கம் கையாண்ட தந்திரங்களுள் ஒன்று என்று இன்றைய பெண்ணியலார் கருதுகின்றனர். ஏனென்றால், ஆதிகாலச் சமுதாயத்தில் குழந்தையைப் பெற்ற எல்லாப் பெண்களுமே குழந்தைகளைப் போற்றி வளர்த்தார்கள். அது பெண்ணினது இயற்கைக் குணம் என்றெல்லாம் முடிந்த முடிவாகச் சொல்லிவிட முடியாது. குறிப்பாக மனிதர்களின் இயற்கைக் குணம், இது செயற்கைக் குணம் இது என்று எதையும் எளிதாக வரையறுத்துவிட முடியாது. இயற்கைக் குணம் போலவே ஆகிவிட்ட நம்மிடமுள்ள பல குணநலன்கள் சமுதாய நிறுவனங்களால், அதிகார அமைப்புகளால் வசதிக்கேற்பச் செயற்கையாகப் புனையப்பட்டவைதான். இது தாய்மை என்பதற்கும் பொருந்துவதாக உள்ளது. அதாவது தாய்மைப் பண்பு புனிதமானது என்று கட்டமைக்கப்பட்டதன் வழி ஆணாதிக்கம் நிலைநிறுத்தப்பட்டது.

தாய்மை பற்றிய புனைவுகள், ஒரு பக்கம், பெண்களது வெளிப்புறச் சமுதாய நடவடிக்கைகளைச் சுருக்கியது. மறுபக்கம், அதிகாரச் சமுதாயத்தின் உயிர் வாழ்விற்கு அடிப்படை அலகான குடும்பம் என்கிற நிறுவனத்தைக் கட்டிக்காப்பதற்கும் பயன்பட்டது. இன்றும் தாய்மை பற்றிய இந்தப் புனைவுகள்தான் குடும்பம் என்கிற நிறுவனத்தைச் சிதைய விடாமல் கட்டுக்குலையாமல் காப்பாற்றுகிற மாபெரும் கருத்தாயுதமாகப் பயன்பட்டு வருகின்றன. இத்தகைய ஒரு சூழலில்தான் பெண் என்பவள் இரண்டு காலுடைய ஒரு கருப்பை அவ்வளவுதான் என்று ஆண்களால் மிக எளிதாக அவளை ஒரு குடும்பத்திற்குள் முடக்கிப்போட முடிந்திருக்கிறது.

போர் பெருமிதங்களைக் கொண்டது தமிழ்ச் சமுதாயம். போரில் வெற்றி பெருவதையும், நாட்டிற்காக உயிரைத் துறப்பதையும் பெருமையாகக் கருதி வீரர்கள் வாழ்ந்தனர். அவர்களைப் பெற்று வளர்த்த தாய்மார்களும் தன் மகன் ஒரு வீரனாக வாழ்வதோடு வீரனாகவே இறக்க வேண்டும் என்றும் எண்ணினர். அதாவது இறக்கும் போது கூட மார்பில் புண்பட்டு இறக்க வேண்டும் என்று எண்ணியதோடு, அதுவே தான் பிறந்த குடிக்கு பெருமை என்றும் எண்ணினர். இதனை,

“நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்றோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறின னென்றுபலர் கூற
மண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென்
முலையறுத் திடுவேன் யானெனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களந் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே” (புறம். 278:1-9)


எனும் பாடல் சுட்டுகிறது. அதாவது, போர் ஒன்றில் வீரன் ஒருவன் பகைவர் வாளால் வெட்டுண்டு இறந்தான். அவன் துணிவுடன் போர் புரிந்ததால் உடல் துண்டுபட்டுச் சிதைந்து வேறு வேறாகச் சிதறிக் கிடந்தது. அதனை அறியாத வீரர் சிலர் போர் முடிவில் ஊருக்குள் சென்று அவன் தாயைக் கண்டு, ‘உன் மகன் போரில் புற முதுகிட்டு மாண்டான்’ எனக் கூறினர். அது கேட்டு முதியவளான அத்தாய் தன் மகன் செயல் குடியின் புகழுக்கும், நலனுக்கும் ஊறு விளைவிப்பதாகும் என்று எண்ணினாள்; கண்களில் தீயெழ விழித்து நோக்கி, என் மகன் அவ்வாறு மாண்டிருப்பானாகின் அவன் வாய் வைத்துண்ட என் மார்பை அறுத்தெறிவேன் என வஞ்சினம் கூறி வாள் ஒன்றைக் கையில் ஏந்திப் போர்க்களம் புகுந்தாள். களம் எங்கும் சிதறிக் கிடந்த பிணங்களைப் புரட்டிப் பார்த்தாள். ஓர் இடத்தில் தன் மகன் உடல் கிடந்ததைக் கண்டாள். சிதறிக் கிடந்த உறுப்புகளைச் சேரத் தொகுத்து ஒழுங்குற அமைத்து உற்று நோக்கினாள். அவன் முகத்திலும் மார்பிலும் விழுப்புண் பட்டு வீழ்ந்தானேயன்றிப் புறப்புண் பட்டு மாண்டிலன் எனத் தெளிந்தாள். அப்போது அவள் உள்ளத்தில் கனன்ற வெம்மை நீங்கியது. மகன் தன் குடியின் நலன் காக்கவும், குடிப்பெருமையை உயர்த்தவுமே போரிட்டு மாண்டான் என்பதை அறிந்து பெருமகிழ்வு எய்தினாள். முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் போரில் புறமுதுகு காட்டி ஓடுதலையும், புறப்புண்பட்டுத் தோற்றலையும் எந்த அளவுக்கு வெறுத்தனர் என்பதை இப்பாடல் காட்டுகிறது. இவ்வாறு வெற்றி அல்லது வீரமரணம் என்ற உணர்வோடு அவர்கள் போரில் ஈடுபட்டதற்கு அவர்கள் வாழ்ந்த சமுதாய அமைப்பே காரணம் ஆகும்.

ஒரு வீரனின் கடமை பற்றித் தாய் குறிப்பிடுவதாக,

“ஈன்றுபுறந் தருத லென்றலைக் கடனே
சான்றோ னாக்குத றந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவா ளருஞ்சம் முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” (புறம்.312:1-6)

என்று புலவர் பொன்முடியார் குறிப்பிடுகிறார்.

போரில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகச் சிறு வயதிலிருந்தே வீர உணர்வினை அவன் மனத்துள் விதைத்து வளர்த்திருக்கின்றனர் வீரத்தாய்மார்கள் என்று புறநானூறு விளக்குகிறது. மறக்குடியில் பிறந்து வீரத் திருமகனை ஈன்ற புலவர் காவற் பெண்டுவும் வீரப் பெண்மணியாக விளங்கினார் என்பதை அவரின் பாடல் மூலம் அறிய முடிகிறது. நாட்டைக் காக்க, வீட்டை விட்டுச் சென்று பலநாட்கள் ஆகியும் வராமல் இருந்த மகனைப் பற்றிக் கேட்டபொழுது,

“புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ விதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே” (புறம்.86:4-6)

என்று பெருமிதம் அடைகிறாள்.

ஒக்கூர் மாசாத்தியாரின் மூதின் முல்லைப் பாடல் மறக்குடி மகளிரின் மறமாண்பைப் புலப்படுத்துவதுடன், தான் வாழும் சமுதாயத்தின் நலன் காத்திட எத்தகையத் தியாகத்தைச் செய்யவும் அப்பெண்கள் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்பதையும் உணர்த்துகிறது போர்ப்பறையின் அழைப்பொலி கேட்ட வீரத்தாய் தன் குழந்தையைப் போருக்கு அனுப்பி வைத்தாள் என்பதை,

“கெடுக சிந்தை கடிதிவ டுணிவே
மூதின் மகளி ராத றகுமே
மேனா ளுற்ற செருவிற் கிவடன்னை
யானை யெறிந்து களத்தொழிந் தனனே
நெருந லுற்ற செருவிற் கிவள் கொழுநன்
பெருநரை விலங்கி யாண்டுப்பட் டனனே
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப்
பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி
ஒருமக னல்ல தில்லோள்
செருமுக நோக்சிச் செல்கென விடுமே” (புறம்.279:1-11)

எனும் பாடல் குறிப்பிடுகிறது.


அதாவது போர்ப்பறை ஒன்று முழங்கி நாட்டில் உள்ள வீரர்களை அழைத்தது. ஒரு வீட்டில் மறக்குடி மகள் ஒருத்தி தன் தமையனைப் போர்க்களத்திற்கு அனுப்பினாள். அவனோ களத்தில் பெரிய யானையுடன் போரிட்டு; அந்த யானையைக் கொன்று; தானும் மடிந்து இறவாப் புகழ் பெற்றான். அடுத்த நாளும் பறை முழங்கியது. வீட்டிற்கு ஒரு வீரர் வருக என்ற அழைப்பொலி எழுந்தது. கணவன் களம் புகுந்தான்; பெரும் படைகளுடன் போரிட்டான்; களத்திலேயே மாண்டான். அடுத்த நாளும் பறை முழங்கியது. இப்பறை கேட்டாள் வீரமகள். அவளுடைய நாடி நரம்புகள் துடித்தன. அவள் களம் புக விரும்பினாள். ஆனால், பெண்கள் போர்க்களம் செல்லக் கூடாது என்ற நிலையிருந்ததை உணர்ந்த அவள் மனம் வருந்தவில்லை. அவளுடைய கண்ணில் சின்னஞ்சிறுவன் தென்பட்டான். அவன், அவள் ஈன்ற குலக்கொழுந்து. ஒரே ஓர் அருமை மைந்தன்; போர்க்களம் செல்வதற்குரிய பருவம் இல்லாதவன். போர் அனுபவம் இல்லாதவன். களம் பல கண்ட தன் தமையனும், கணவனும் மாண்டதை அவள் நன்றாகவே அறிவாள். தன் மைந்தன் திரும்பி வர மாட்டான் என்பதையும் நன்கறிந்தவள் அவள். அவள் உள்ளத்தில், வீட்டுக் கடமையை விடநாட்டுக் கடமையே முன் நின்றது. தன் நலத்திலும், பொது நலமே என்ற விவேகப் பண்பு ஓங்கி நின்றது. அதனால், அவள் போர்ப்பறை கேட்டு அஞ்சவில்லை; அழவில்லை; மாறாக மகிழ்ந்தாள்; போரை விரும்பினாள். தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தன் இன்னுயிரனைய மகனை அழைத்தாள். பரட்டைத் தலையில் எண்ணெய் பூசித் தலைமுடியைச் சீவினாள். தூய வெள்ளை ஆடையை உடுத்தினாள். வேலினைக் கையில் கொடுத்தாள். போர்க்களத்திற்குப் போய்வா என்று கூறாமல் செல்க என்று கூறினாள்.

வெட்சியார் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்கச் சென்ற கரந்தையார் வெற்றியோடே மீண்டனர். அப்போது நிகழ்ந்த போரில் பலர் மாண்டனர். சிலர் மட்டுமே மீண்டு வந்தனர். மீண்டு வந்த வீரர்களை ஊரில் உள்ளவர்களும், உறவினர்களும் உண்டாட்டு நிகழ்த்திக் கொண்டாடிப் போற்றினர். மீண்டு வந்த வீரர்களுள் அந்தக் குடியைச் சேர்ந்த மறக்குடி மங்கையின் மைந்தனும் ஒருவன். தன் மகன் உயிருடன் மீண்டமைக்காக அத்தாய் மகிழ்ந்தாளில்லை; மாறாக வருந்தவே செய்தாள். அவளின் வருத்தத்தை,
“வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்னோ ரன்ன விளைய ரிருப்பப்
பலர்மீது நீட்டிய மண்டையென் சிறுவனைக்
கால்கழி கட்டிலிற் கிடப்பித்
தூவெள் ளறுவை போர்ப்பித் திலதே” (புறம்.286:1-5)

எனும் பாடல் குறிப்பிடுகிறது.

அதாவது, ‘என் மகன் போல் இளையர் பலர் இவ்வூரில் உள்ளனர். அவரனைவரும் தலைவன் சென்ற நெறியே வெள்ளாடு போல அன்போடு அவனைப் பின்தொடரும் இயல்பினர். ஆயினும் உண்டாட்டு முதலிய சிறப்புக்கள் நிகழுங்கால், அவரனைவரையும் விடுத்து என் மகனைச் சிறப்பாகப் பேணி யாவர்க்கும் மேலாகக் கள் வழங்குவான் தலைவன். அவன் வழங்கிய அக்கள் அத்தலைவனும், ஊரவரும் கண்ணீர் மல்கச் சாகும் பேற்றினை என் மகன் பெறுமாறு செய்திலது’ என்று அத்தாய் மகன் தன் குடிக்காக வீரமரணம் அடையப் பெறாமைக்காக வருந்தினாள். மக்கள் நலம் காக்க மகன் தன் உயிரையும் தியாகம் செய்திருக்க வேண்டும். அங்ஙனம் செய்திருந்தால் அத்தாய் பெரிதும் மகிழ்ந்திருப்பாள் என்பதை இப்பாடலின் மூலம் அறிய முடிகிறது. தாய் ஒருத்தி தன் மகன் அடைந்த வீரமரணத்துக்காகப் பெரிதும் மகிழ்ந்தாள் என்பதை,

“வானரைக் கூந்தன் முதியோள் சிறுவன்
களிறெறிந்து பட்டன னென்னு முவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்” (புறம்.277:2-4)

எனும் பாடல் காட்டுகிறது.

மனைவி என்ற நிலையில் பெண்

சங்க காலச் சமுதாயம் ஆண் தலைமையேற்ற சமுதாயமாகும். இச்சமுதாய அமைப்பில் பெண் ஆணின் ஆளுமைக்கு உட்பட்டு நடக்க வேண்டியது கட்டாய கடமையாக்கப்பட்டிருந்தது. அந்த வகையிலே மன்னன் அல்லது வீரன் இறந்துவிட்டால் அவனது மனைவி உடன்கட்டை ஏறுதல் என்ற செயல் வழக்கத்தில் இருந்தது. அத்தோடு இச்செயல் பெண்ணின் பெருமையாகவும்போற்றப்பட்டது. கற்பு என்ற சமுதாய மதிப்பு சார்ந்து கணவன் இறந்தவுடன் பெண்ணும் உடன்கட்டை ஏறி இறந்திருக்கிறாள் என்பதைச் சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. இச்செயலை பெண்ணே விரும்பி ஏற்று நடைமுறைப்படுத்தும் அளவிற்கு பெண்ணின் மனத்தில் கற்பு என்ற அறம் ஊடாட்டம் செய்யப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாகிய ஒல்லையூர் நாட்டை ஆண்டதோடு, கலையரசனாகவும் திகழ்ந்தவன் பூதப்பாண்டியன். இவனின் பட்டத்தரசி பெருங்கோப்பெண்டு. இருவரும் அளவில்லா அன்பு கொண்டிருந்தனர். இந்நிலையில் போருக்குச் சென்ற பூதப்பாண்டியன் போரில் இறந்துவிட்டான். அரசியல் நீதிகளை நன்கு அறிந்திருந்த பெருங்கோப்பெண்டிடம் நாட்டை ஆட்சி புரிய வருமாறு சான்றோர்கள் அழைத்தனர். ஆனால் அதை ஏற்க மறுத்து தீப்பாகக் கருதினாள். இதனை,

“பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்
… … … … … … …
வள்ளித ழவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே” (புறம்;246:1-15)

எனும் பாடல் சுட்டுகிறது.

தலையோடு முடிதல்

தன் கணவன் போரில் இறந்தவுடன், அவனது தலையுடன் தனது முலைகளையும், முகத்தையும் சேர்த்து இறந்த நிலையைத் தொல்காப்பியம் தலையொடு முடிதல் என்கிறது. இத்துறையைப் புறப்பொருள் வெண்பா மாலையும் தலையொடு முடிதல் என்று குறிக்கப்பிடுகிறது.

“கொலையானாக் கூற்றே கொடிதே கொழுநன்
தலையானான் தையலாள் கண்டே முலையாள்
முயங்கினாள் வாள்முகஞ் சேர்த்தினாள் ஆங்கே
உயங்கினாள் ஓங்கிற்று உயிர்” (பு.வெ.மா.கா. 13)

என்று புறப்பொருள் வெண்பாமாலை விளக்கம் தருகிறது.

அதாவது, தலைவி ஒருத்தி போர்க்களத்தில் கிடந்த தன் கணவனின் தலையைக் கண்டு அமையாதவளாய், அவன் தலையைத் தன் முலையொடு சேர்த்து முயங்கினாள்; முகத்தொடு சேர்த்தாள்; அப்போதே மயங்கினாள்; அவ்வளவிலேயே அவள்உயிர்ப்போயிற்று என்கிறது புறப்பொருள் வெண்பாமாலை.


பூசல் மயக்கம்

போரின் போது இறந்துவிட்ட வீரனின் மனைவியின் செயல்பாடுகளைத் தொல்காப்பியம் துறைகளாக வகுத்து விளக்கியுள்ளது. இவை, சங்ககாலப் போர் சமுதாய அமைப்பை விளக்குவதாக உள்ளன. பெரும்புகழுடையவனாய் இருந்து மாய்ந்த ஆண்மகனைச் சுற்றி நின்று அவனது சுற்றம் கதறி அழுததால் உண்டாகும் கூச்சல் ஒலிகளைப் பற்றிக் கூறுவது பூசல் மயக்கம் எனும் துறையாகும். இதனைத் தொல்காப்பியம்,

“ஈரைந்து ஆகும் என்ப பேராசை
மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம்
ஆய்ந்த பூசல் மயக்கத் தானும்” (தொல்.நூ.1025:18-20)

என்று குறிப்பிடுகிறது.

பாழி என்னும் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவன் நன்னன் ஆவான். நன்னனின் ஆருயிர் நண்பன் வெளியன் வேண்மான் ஆய் எயினன்ஆவான். நன்னற்கும், மிஞிலி என்பானுக்கும் இடையே போர் மூண்டது. அச்சமயம் அஞ்சி ஒதுங்கியிருந்த நன்னனை நோக்கி ‘அஞ்சல்’ என்று கூறிய எயினன் தன் வார்த்தையைக் காப்பாற்றும் விதமாக, மிஞிலியுடன் கடும்போரிட்டுப் போர்க்களத்தில் வீழ்ந்து மடிந்தான். எயினன் இறந்துபட்ட செய்தியைக் கேட்ட அவன் உறவினராகிய வேளிர்குல மகளிர் போர்க்களத்திற்கு விரைந்தோடி வந்து தனது பூமாலைகளைப் பிய்த்துப்போட்டு அவன் உடலைப் பார்த்துக் கதறி அழுதபோது உண்டான பூசல் மயக்கத்தை,

“உருவினை நன்னன் அருளான் கரப்பப்
பெருவிதுப் புற்ற பல்வேள் மகளிர்
குரூஉப்பூம் பைந்தார் அருக்கிய பூசல்
வசைவிடக் கடக்கும் வயங்குபெருந் தானை” (அகம்.208:14-17)

எனும் பரணரின் அகநானூற்றுப் பாடல் விளக்குகிறது.

மூதானந்தம்

மூதானந்தம் குறித்து தொல்காப்பியம்,

“கணவனோடு முடிந்த படா;ச்சி நோக்கிச்
செல்வோர் செப்பிய மூதா னந்தமும்” (தொல்.நூ.1025:22-23)

என்று குறிப்பிடுகிறது.

பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு தீப்புகும் முயற்சியைப் புலவர் பேராலவாயர் மூதானந்தத் துறையில் விளக்குகிறார். தன் கணவனொடு இறந்த தலைவியின் செயலைக் கண்ட வழிப்போவார் வியந்து செப்பிய மூதானந்தம் எனும் இத்துறையை ‘மூதானந்தம்’ என்றே குறித்த ஐயனாரிதனார் இத்துறையைப் பொதுவியற்படலத்துள் சேர்த்துள்ளார். மூதானந்த நிலையை,

“ஓருயி ராக உணர்க உடன்கலந்தார்க்கு
ஈருயிர் என்பர் இடைதெரியார் - போரில்
விடனேந்தும் வேலோற்றும் வெள்வளையினாட்கும்
உடனே உலந்த துயிர்” (பு.வெ.மா.பொது.23)

என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.

முதுபாலை

மிகக் கொடிய பாலை நிலப்பாதையில் வீரக் கணவனை இழந்த தலைவி தனியாளாக நின்று புலம்பி அழுதல் ‘முதுபாலை’ எனப்படும். இதனை தொல்காப்பியம்,

“நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து
தனிமகள் புலம்பிய முதுபாலையும்” (தொல்.நூ.1025:24-25)

என்று குறிப்பிடுகிறது.

“என்றிறத் தவலங் கொள்ள லினியே
வல்வார் கண்ணி யிளையர் திளைப்ப
நகாஅலென வந்த மாறே யெழாநெற்
பைங்கழை பொதிகளைந் தன்ன விளர்ப்பின்
வளையில் வறுங்கை யோச்சிக்
கிளையி ளொய்வலோ கூறுநின் னுரையே” (புறம்.253:1-6)

என்று புறப்பாடல் குறிப்பிடுகிறது.


முடிவுரை

சங்க அக இலக்கியங்களில் பெண் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளாள். புற இலக்கியங்களில் ஆணின் வீரம் முதன்மைப்டுத்தப்பட்டுள்ளது எனினும் புறத்துறைகளில் பெண்ணின் வீரநிலைப் பண்புகள் அவளுக்கே உரியதாக உடல் சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ளது. வீர உணர்வுள்ள மனைவியாக, தாயாகப் பெண் புறப்பாடல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறாள். வீர உணர்வு மிக்க தலைவி, தன் கணவன் போர்க்களம் சென்று, போர் புரிவதற்காக வேந்தன் பகை பெற வேண்டுமென்று வேண்டுகிறாள். தலையொடு முடிதல், பூசல் மயக்கம், பையுல், மூதானந்தம், முதுபாலை போன்ற துறைகளில் மறைமகளிரின் பண்புகள் சுட்டப்பட்டுள்ளன. இத்துறைகளின் வழி பெண்களின் வீர உணர்வுகளை போற்றி வளர்த்தெடுப்பவளாக இருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. தாய் என்ற நிலையில், புலிசேர்ந்து போகிய கல்லளை போல ஈன்ற வயிறும் இதுவே பெருமிதம் அடைகிறாள். தன் மகன் புறமுதுகு காட்டி மாய்ந்தான் என்றாள் என் முளை அறுத்திடுவேன் என்றும், தன் உடலை சிதைக்கும் அளவிற்கு பெண்கள் வீர உணர்வு மிக்கவர்களாக இருக்க வேண்டுமென்ற ஆண் சமுதாய எதிர்பார்ப்பை இங்கு உணரமுடிகிறது. கணவனை இழந்த பெண் கைம்மை பெண்டிர் பின்பற்ற வேண்டிய விதிகளை பெண்ணுக்கு மட்டும் ஆண் சமுதாயம் வரையறுத்துள்ளது. கைமை கொடுமையை விட உடன்கட்டை ஏறுதல் சிறப்பு என்று ஆண் சமுதாயம் பெண்ணின் மனத்தை தயார்படுத்தியுள்ளது.

துணைநின்ற நூல்கள்

1. துரைச்சாமி பிள்ளை, ஒளவை, சு., - புறநானூறு தொகுதி - I & I I, திருநெல்வேலி தென்னிந்தியச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை -18,பதிப்பு, 2007.

2. அரசு. வீ, - பெண்ணியமும் பாரதியும்,சென்னைப் பல்கலைக்கழகம், அலைகள் வெளியீட்டகம், 25, தெற்குச் சிவன் கோயில் தெரு, கோடம்பாக்கம், சென்னை - 600 024, முதல் பதிப்பு: டிசம்பர் 2001.

3. இளம்பூரணர்,தொல்காப்பியம் பொருளதிகாரம், சாரதா பதிப்பகம், G-4, சாந்தி அபார்ட்மெண்ட், 2, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, அஜந்தா ஹோட்டல் அருகில் இராயப்பேட்டை, சென்னை - 600014.

4. ஐயனாரிதனார், புறப்பொருள் வெண்பாமாலை, சென்னை : கமர்ஷியல் அச்சுக்கூடம் , 1924.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p284.html


  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License