இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

நற்றிணையில் செலவழுங்குவித்தல்

முனைவர் ம. சியாமளா
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி - 2),
குரு நானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை-42.


முன்னுரை

செலவழுங்குதல் என்பது ஒரு துறை தொடக்கத்திலேயே செலவழுங்குதல் செல்லாமை அன்று என்று கூறப்படுகிறது. தலைவி நிலை குறித்துப் பிரிந்து செல்லாமல் இருப்பதாகும். திருமணத்திற்கு பின்னர், காதலிலேயே மூழ்கி அன்பு மனைவியை விட்டுப் பிரிய மனமின்றி இல்லறத்திலேயே இருத்தல் தலைவனுடைய கடமை உணர்வுக்கு இழுக்காகவும் அமையும். இத்தகைய செலவழுங்கல் குறித்து நற்றிணையின் வழி இக்கட்டுரையில் காண்போம்.

நற்றிணை

நானூறு பாடல்கள் கொண்ட நற்றிணையில் நூற்று நான்கு பாலைத்திணைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அது நற்றிணையில் 26 விழுக்காடு ஆகும். இந்நூலில் செலவழுங்குவித்தல் என்ற துறையில் அமைந்த பாடல்களின் எண்ணிக்கை பதின்மூன்று ஆகும். அதன் விழுக்காடு 3.25 ஆகும். இத்துறையைச் சார்ந்த பதின்மூன்று பாடல்களில் பாலைத்திணையைச் சார்ந்தது பன்னிரண்டு ஆகும். மற்றொன்று நெய்தல் திணையைச் (124) சார்ந்ததாகும். இந்நூலில் அமைந்துள்ள பாலைத்திணைப் பாடல்களுள் செலவழுங்குவித்தல் சார்ந்த பாடல்களின் விழுக்காடு 11.53 ஆகும்.

செலவழுங்குவித்தல்

செலவழுங்குவித்தல் துறையில் காட்டப்படும் தோழி அறிவு நுட்பம் கொண்டவளாகவும், தலைவனிடம் தலைவியின் நிலையை எடுத்துரைக்கும் சொல்லாற்றல் கொண்டவளாகவும் அறியப்படுகிறது. நற்றிணையில் காட்டப்படும் தோழி தலைவியின் கண்ணீர், உடல் மெலிவு, தலைவியின் உள்ளக் கலக்கம், அவற்றோடு காலத்தின் இன்பப் பயனை மிகுதியாகக் கூறிச் செலவழுங்குவிப்பதாக அமைந்துள்ளது. பாலையின் கொடுமையை விளக்கிக் கூறிச் செலவழுங்குவித்தல் ஒரு சில பாடல்களே உள்ளன. தலைவியின் பிரிவாற்றாத நிலையே தலைவனின் செலவைத் தவிர்க்கும் என்பது நற்றிணைத் தோழியின் முடிபாகும் எனலாம்.

தலைவன் ஆறலை கள்வர் நிறைந்திருக்கும் பாலை நிலம் கடந்து செல்வதாக இருக்கும் எண்ணத்தை அறிந்த தலைவி மறுமொழி கூற முடியாது, விம்மி அழுது கொண்டு தன் தோழியின் முகத்தையே நோக்கினாள். அவள் கண்களிலிருந்து வடிந்த நீர் மார்பின் பரப்பை நனைத்தது. இத்தகைய நிலையில் பிரிந்தால் தலைவியின் நிலை கேள்விக்குறியாகும் என்று தலைவனிடம் தலைவியின் அவல நிலையை எடுத்துரைத்து அவனது செலவைத் தவிர்க்கின்றாள். தலைவியின் அழுகையும் கண்ணீரும் தலைவனது செலவைத் தவிர்க்க இயலும் என்பதை அறிந்த தோழி,

“விம்முறு கிளவியள் என்முகம் நோக்கி
நல்அக வனமுலைக் கரைசேர்பு
மல்குபுனல் பரந்த மலர்ஏர் கண்ணே” (நற்.33.10-12)

என்ற அடிகளால் எடுத்துக் கூறுகிறாள். பெண்களின் மிகப்பெரும் ஆயுதம் கண்ணீர் என்று கூறுவர். தலைவனின் பொருளார்வத்தைக் குறைக்கச் செய்து, அவனது செலவையும் தவிர்க்க வைக்கும் கருவி தலைவியின் கண்ணீராகும். இதனை நன்குணர்ந்த தோழி,

“நீர்சூழ் மாமலர் அன்ன கண்அழ” (நற்.37.5)


என்று தலைவியின் அழுகையும் கண்ணீரும் தலைவனிடத்துக் கூறிச் செலவழுங்குவிக்கின்றாள். தலைவியின் ஆற்றமுடியாத அழுகையும் கண்ணீரும் தொடரப் பாலை நிலத்தைக் கடந்து சென்று பொருள் தேட முயல்வது அறமற்ற செயலாகும் என்றுரைப்பதை,

“பூப்போல் உண்கண் புதுநலம் சிதைய
வீங்குநீர் வாரக் கண்டும்
தகுமோ பெரும தவிர்கநும் செலவே” (நற்.325.7-9)

என்ற அடிகளால் தலைவனுக்கு உணர்த்தி அறத்தை நிலைநாட்டும் தோழி பாராட்டுக்குரியவளாகும். பெண்களின் கண்ணீருக்குப் பெரியோர் காரணமாகுதல் அறத்திற்கு முரணாகும் என்ற உண்மையைத் தலைவனுக்கு எடுத்துரைத்துச் செலவு விலக்கும் தோழியானவள் செலவழுங்குவிப்பதற்கு ஏற்றப் பாத்திரமே என்பது நற்றிணை வழிப்பெறப்படுகிறது.

நம்பி வந்து அடைக்கலமாகப் புகுந்தவரை இறுதி வரைக்கும் பாதுகாத்து அருளுதல் தமிழர் மரபாகும். அம்மரபே இல்லறத்தில் பெரிதும் போற்றப்படுகிறது. பெரும் செல்வ மரபைச் சேர்ந்த தலைவி எளிய தலைவனைத் திருமணம் செய்து கொண்டு அவனது ஊருக்கு வருவாள். இல்லறம் நடத்த போதுமான பொருள் பற்றாக்குறையால் தலைவன் பொருளீட்டச் செல்ல எண்ணுவான். அவ்வெண்ணம் தன் மனையாளை நல்முறையில் வாழ்விக்கவே ஆகும். ஆயினும், அப்பிரிவு தலைவியை வேதனைப்படச் செய்யும். தலைவியின் வேதனையை உணராத தலைவனுக்கு எடுத்துரைப்பதாகத் தோழி கூற்று அமைகின்றது.

“விண்டுப் புரையும் புணர்நிலை நெடுங்கூட்டுப்
பிண்ட நெல்லின் தாய்மனை” (நற்.26.3-4)

என்ற அடிகளால் தலைவியின் தாய் மனையினது செல்வச் செழிப்பைத் தோழி எடுத்துக் கூறுகிறாள். அச்செல்வக் குடும்பத்திலிருந்து தலைவனின் அன்பின் பொருட்டே தலைவி நீங்கி வந்தாள். ஆனால், தலைவனோ பொருளைத் தேடித் தொகுத்து வர, தலைவியைப் பிரிந்து செல்ல எண்ணுகிறான். நம்பி வந்தோரைத் தவிக்கவிட்டுச் செல்லுதல் பெருங்குற்றம் என்று தோழி எடுத்துக் கூறித் தலைவனின் குற்றங்களைத் திருத்துவதால், அறிவுடைய சான்றோர்களின் குணநலன்கள் தோழி பெற்றிருப்பது கண்கூடாகும். கணவன் மனைவி ஆகிய இருவரும் பிரிதல் கூடாது என்று செலவழுங்குவித்தல் துறை வலியுறுத்துவதையும் அறிய முடிகின்றது.


தலைவியின் புறமாகிய உடலில் பிரிவாற்றாத நிலையில் ஏற்படும் மாற்றங்களைத் தோழி சுட்டுவதைப் போலத் தலைவியின் அகமாகிய உள்ளத்தில் நிகழும் எதிர்ப்பார்ப்பைத் தலைவனிடம் கூறி அவனது செலவை விலக்குவதும் உண்டு. தலைவிக்கு இருக்கும் இயல்பான உள்ளத்தின் நிலையானது இளவேனிற்காலம், கார்காலம், கூதிர்காலம் ஆகிய காலங்களில் ஏற்படும் விருப்பம், மாற்றங்களைத் தலைவனுக்கு எடுத்துரைத்துச் செலவை விலக்குமாறு வேண்டிக் கொள்வதே. நற்றிணையில் ஆறு பாடல்கள் உள்ளன. பொருளைக் காட்டிலும் இன்பமே பெரிதெனக் கொண்ட கணவன், மனைவி ஆகியோரின் வாழ்வைப் பெறவே நற்றிணைச் செலவழுங்குவித்தல் துறை விரும்புகின்றது எனலாம்.

காலத்திற்கும், காமத்திற்கும் உள்ள தொடர்பைச் சங்க அகப்பாடல்களே எடுத்துக் காட்டுகின்றன. நற்றிணையில் பொருள் குறித்துப் பிரிய நினைக்கின்ற தலைவனிடம் காமம் தோன்றும் காலத்தின் வரவை எடுத்துரைத்துச் செலவு மேற்கோள்ள வேண்டாம் என்று கூறுவதாகத் தோழி கூற்று அமைந்துள்ளது.

“கார்செய் மாலை வரூஉம் போழ்தே” (நற்.37.11)

என்று கார்காலப் பெரும்பொழுதையும், மாலைப்பொழுது என்னும் சிறுபொழுதையும் சுட்டிக்காட்டி, அப்பொழுதுகளில் தலைவி படும் துன்பங்களைத் தன்னால் தாங்கிக் கொள்ள இயலாது, ஆகவே செலவை விலக்கிக் கொள்க என்று தோழி செலவழுங்குவிப்பதை அறிந்து கொள்ளலாம். அதேபோலத் தண்டியலங்கார விளக்கப்பாடலில் செலவழுங்குவிக்கும் தோழி மாலைப்பொழுதில் வரும் இருளும் நிலவும் தலைவியை நோகச் செய்யும் இயல்பை,

“இப்போது இவளும் இசைகின்றாள் – தப்பில்
பொருளோ! புகழோ?தரப்போவீர் மாலை
இருளோ நிலவோ எழும்” (திருஞானசம்பந்தம்.ச – தண்டி.- ப.23.)

என்ற அடிகளில் எடுத்துக்கூறுகிறாள்.

காலமுறைகளை அறிவதற்குத் தவறிய தலைவனுக்குக் கூதிர்காலத்தின் வருகையை உரைத்து அவனது செலவை விலக்க வேண்டுகிறாள். கூதிர் காலத்தில் மலரக்கூடிய இண்டங்கொடியில் அரும்பும் காட்டு மல்லிகையின் மலரும் மணல் திட்டில் நிரம்பி இருக்க, அவை மான்களின் வலிய குளம்பில் மிதிப்பட்டு வெள்ளிய தெளிந்த நீர் ஓடும்படி கூதிர்காலம் வந்ததை,

“முகைவீ அதிரல் மோட்டுமணல் எக்கர்
நவ்வி நோன்குளம்பு அழுந்தென வெள்ளி
உருக்குறு கொள்கலம் கடுப்ப” (நற்.124.5-7)

என்ற அடிகளில் பூக்கள் மானின் காலால் மிதிபட்டு வாடுவதைப் போலக் கூதிர்காலத்தால் தலைவியும் வாடுவாள் என்றும், பூக்களில் தேன் சிந்தி ஓடுவதைப் போலத் தலைவியின் கண்களில் கண்ணீர் பெருகி ஓடும் என்றும் குறிப்பு மொழியால் தலைவனுக்குத் தலைவியின் நிலையைத் தோழி உணர்த்திச் செலவழுங்குவித்தலை நற்றிணை வெளிக்காட்டுகின்றது.

மழை பொழிந்து வீசுகின்ற வாடைக்காற்று யாவரையும் நடுக்கம் கொள்ளச் செய்யும். அது தனித்திருக்கின்ற தலைவியைப் பெரிதும் துன்புறுத்தும் என்பதை அறிந்த தோழி, தலைவனிடம் சென்று யாமப்பொழுதில் தலைவனை அணைத்துக் கொண்டு உறங்கும் பொழுதும், தலைவியானவள் நடுங்கும் இயல்பினை உடையவள். அந்நிலையில் மிகுதியான மழை பெய்து குளிர்ந்த வாடைக்காற்றும் வீசுவதால் அவளை விட்டுப் பிரிதல் ஏற்புடையதன்று எனத் தோழி கூறுகின்றாள்.

“ஆடிய இளமழைப் பின்றை
வாடையும் கண்டிரோ வந்துநின் றதுவே” (நற்.229.10-11)

என்று தோழி எடுத்து மொழிய, தலைவனும் தலைவியின் மெல்லியல்பை உணர்ந்து தன் செலவை விலக்கினான் என்பதை அறியலாம். அதைப்போல வாடைக்காற்று வீசும் காலத்தில் பிரியக் கருதிய தலைவனுக்குப் பருவ வரவை உரைத்துத், தலைவியின் நிலை குறித்து இரக்கம் கொண்ட தோழி செலவழுங்குவிக்கும் தன்மையை,

“முல்லைக் கொடிநடுங்க மொய்காந்தள் கைகுலைப்ப
எல்லை இனவண்டு எழுந்துஇரங்க – மெல்லியல்மேல்
தீவாய் நெடுவாடை வந்தால் செயல்அறியேன்
போவாய் ஒழிவாய் பொருட்டு” (திருஞானசம்பந்தம்.ச – தண்டி.ப.99)

என்ற பாடல் காட்டுகின்றது. ஆகவே கூதிர்காலத்தில் கணவன் மனைவி ஒன்றுபட்டு இருக்கும் இல்லற நெறியை அகப்பாடல்கள் வலியுறுத்துகின்றன என்பதை அறியலாம்.


தென்றல் வீசுகின்ற காலமாகிய இளவேனிற்காலமும் பிரிந்திருக்கும் மனையாளை வருத்தக்கூடிய காலமாகும். இளவேனிற்காலத்தில் பூத்த மலர்களைத் தலைவி சூடித் தன்னை அழகு படுத்திக்கொண்டாள். தலைவி சூடிய பூக்களை,

“முதிரா வேனில் எதிரிய அதிரல்
பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர்” (நற்.337.3-4)

என்ற அடிகளால் தோழி தலைவனுக்கு உணர்த்துகிறாள். நறுமணம் கமழ்கின்ற ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்ட கூந்தலில் உடனிருந்து உறைகின்ற பெரும்பயனாகிய இன்பத்தை விட்டுச் செல்வது முறையற்றது என்றும் உலகம் தோன்றிய காலத்திலிருந்து தம்மை வந்து அடைந்தவரைக் காக்கின்ற மரபினை மறப்பது அறமற்றது என்றும் தலைவனின் குறைகளைச் சுட்டிக்காட்டித் தலைவியோடு இன்புற்று இருக்க வேண்டுவதாக,

“அரும்பெறல் பெரும்பயம் கொள்ளாது
பிரிந்துறை மரபின் பொருள்படைத் தோரே” (நற்.337.9-10)

என்ற பாடலடிகள் காட்டி நிற்கின்றன. அடைக்கலமாக வந்தோரைப் பேணிக் காக்கும் தமிழர்களின் உயர்ந்த அறத்தை நற்றிணை வழி உணர்ந்து கொள்ளலாம்.

தலைவனைப் பிரிந்த தலைவி, காமம் மேலோங்காது தனித்து இருக்கும் நிலையில் பற்பல பிரிவுகளாய் அமைந்த இல்லத்தில் சிவந்த கால்களையுடைய ஆண்புறா தான் காமுறும் பெண்புறாவைப் புணர்ச்சிக்கு அழைக்கும் ஒலிக்கின்ற குரலை இவள் கேட்பாளாயின் அழகிய கூந்தலையுடைய தலைவி பெரிதும் நடுங்குவாள் என்று தலைவியின் தனிமைத் துயரைத் தலைவனுக்குப் புலப்படுத்திச் செலவழுங்குவிக்கும் பாங்கை,

“வண்ணப் புறவின் செங்கால் சேவல்
வீழ்துணைப் பயிரும் கையறு முரல்குரல்
நும்இலள் புலம்பக் கேட்டொறும்” (நற்.71.8-10)

என்ற நற்றிணைப் பாடலடிகள் அழகுறக் காட்டுகின்றன. அண்மையில் மணமான மனையாளை விடுத்துப் புறம் போதலானது அறமற்ற செயல் என்பது பழந்தமிழர்களின் முடிபு என்பதைச் செலவழுங்குவித்தல் என்னும் துறை உறுதிப்படுத்துகிறது.

பொருளீட்டிய பின்னர் இன்புறலாம் எனினும் இளமையும் காம விருப்பமும் நிலையற்றதாக உள்ளது. பொருள், யாக்கை எவ்வாறு நிலையற்ற பொருளோ அதைப்போல இளமையும் காம விருப்பமும் நிலையற்றதாகவே அகச்சான்றோர் கருதுவர். இதனை அறிந்த தோழி இவற்றின் நிலையாமையை அழகான உவமையால் எடுத்து மொழிகின்றாள்.

“வைகல் தோறும் இன்பமும் இளமையும்
எய்கணை நீழலின் கழியும்இவ் வுலகத்து” (நற்.46.1-2)

என்ற அடிகளில் எய்யப்பட்ட அம்பின் நிழல் விரைந்து செல்வதைப் போல நாள்தோறும் இளமையும், இளமையால் விளைகின்ற விருப்பமும் சென்று தேய்ந்து அழியும் என்று விளக்கப்பட்டுள்ளன. தலைவியின் இளமை விருப்பத்தின் அளவு மிகுந்திருப்பதை,

“உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே” (குறுந்.18.5)

என்னும் அடி சுட்டுகிறது. அவ்விருப்பத்தைப் போக்கவே தலைவன் தன் செலவைத் தவிர்ப்பான் என்பதை அறிந்து கொள்ளலாம். தலைவியின் விருப்பத்தை நிறைவேற்றி, அவளது உள்ளமும் உடலும் நலமுடன் இருப்பதில் முக்கிய பங்கு வகிப்பவள் தோழி என்பதை நற்றிணை உறுதிப்படுத்துகிறது.


காம விருப்பத்தைத் தோழி எடுத்துரைத்துச் செலவு விலக்கிய தலைவன் அண்மையில் மணமானவன் ஆவான். அதே பாலை நிலத்தில் நடக்கும் கொடுமைகளை எடுத்துரைத்துச் செலவு விலக்கிய தலைவன் எனில், அவன் அண்மையில் ஈன்றெடுத்த குழந்தையின் தந்தை ஆவான். தலைவனுக்குப் பாலை நிலத்தில் தீங்கு ஏற்படுமாயின் அவனது மனைவி, மக்கள் ஆகியோர் திக்கற்றுப் போவர். அக்கொடிய சூழலில் தலைவனது போக்கை நிறுத்த, பாலை நிலத்தில் நிகழும் கொடுமைகளை எடுத்துக் கூறிச் செலவு விலக்குவதும் நற்றிணையில் சில பாடல்கள் உள்ளன.

ஐந்து வகையான நிலப்பாங்கில், பாலைநில மக்களே கொடியவராகக் காட்டப்பட்டுள்ளனர். அங்கு வாழ்கின்ற ஆறலை கள்வர், நீண்ட மலைச்சாரலில் வன்மையான பாறைகளில் சிறுகுடிசை அமைத்து அச்சம் தரக்கூடிய வழியிலுள்ள கற்குழிகளில் நிற்கும் நீரைக் குடித்துவிட்டுத் துறவிக்குரிய ஆடையை அணிந்த கள்வர்கள் இரவில் கையில் அம்பையும் வில்லையும் கொண்டு கொள்ளையடிக்க வழியை நோக்கியவாறு இருப்பர்.

“நிறைபெயல் அறியாக் குறைக்கூண் அல்லில்
துவர்செய் ஆடைச் செந்தொடை மறவர்
அதர்பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை” (நற்.33.5-7)

என்ற அடிகள் இடைச்சுரத்தின்கண் வாழும் ஆறலை கள்வர்களின் வாழ்வியலையும் கொடிய கொலைத் தொழிலையும் எடுத்துரைத்துத் தலைவனைச் செலவு விலக்கியதைக் காட்டுகின்றன. பயணத்தைப் பற்றிய அறிவு நிரம்பியவளாகவே அனைத்துச் செலவழுங்குவித்தல் கூற்றுக்குரிய தோழி காட்டப்பட்டுள்ளாள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பாலை நில மக்களால் துன்பம் நேருவதைப் போல, அங்கு வாழ்கின்ற விலங்குகளாலும் துன்பம் நேரும் என்பதை அறிந்தவள் தோழி. நற்றிணையில்,

“இரைதேர் வேட்கையின் இரவில் போகி
நீடுசெயல் சிதலைத் தோடுபுனைந்து எடுத்த
அரவாழ் புற்றம் ஒழிய” (நற்.325.2-4)

என்ற அடிகளின் வழி மலைப்பகுதியில் வாழ்கின்ற கரடி, பெரும் பசியுடன் இரவுப் பொழுதில் பாம்புகள் வாழ்கின்ற கரையான் புற்றுகள் முழுவதும் அழிய, வேகமாகத் தன் நகங்களால் பெயர்த்து உணவினைத் தேடும் கொடிய வழியில் செல்லுதல் வேண்டாம் என்று செலவுக் குறிப்பாக அமைவதை அறியலாம். பாலைநிலக் கள்வர் விலங்குகள் இவற்றால் அவ்வழிச் செல்வோர்க்கு ஆபத்து ஏற்படலாம். கொலையுண்ட மாந்தர்களின் குடும்பம் துன்புற்றுக் கண்ணீர் வடித்துக் கதறிய காட்சிகளைக் கண்ட தோழி, அந்நிலையானது தன் தோழிக்கு வருதல் கூடாது என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு செலவழுங்குவிக்கும் தன்மையை நற்றிணையில் காணமுடிகின்றது. அகநானூறு - 10 பாடல்கள், ஐங்குறுநூறு - 13 பாடல்கள், கலித்தொகை - 16 பாடல்கள், குறுந்தொகை - 2 பாடல்கள், நற்றிணை - 13 பாடல்கள் என 54 பாடல்கள் எட்டுத்தொகை அக இலக்கியங்களில் செலவழுங்குவித்தல் துறை சார்ந்த பாடல்களாக இடம்பெற்றுள்ளன. எட்டுத்தொகை அக இலக்கியங்களில் செலவழுங்கல் துறை 88 பாடல்களும், செலவழுங்குவித்தல் துறை 54 பாடல்களும் என மொத்தம் 142 பாடல்கள் அமையப்பெற்றுள்ளன.


முடிவுரை

* சங்க அகப்பாடல்களில் பாலைத்திணையின் கண் இடம்பெறும் செலவழுங்குவித்தல் என்ற துறை, தலைவன் பிரிந்து செல்வதால் பிரிவாற்றாத தலைவியின் அழுகை, பசலை படர்தல், மனம் கலங்குதல், உடல் மெலிதல், நலனாகிய அழகு கெட்டு வாடுதல் ஆகிய துன்ப நிலைகளை அவனுக்கு எடுத்துரைத்துச் செலவழுங்குவித்தல்.

* கார்காலம், கூதிர்காலம், இளவேனிற்காலம், பனிக்காலம் ஆகிய காலங்களில் தலைவியின் விருப்பங்களை நிறைவேற்றும் இல்லறக் கடமையை எடுத்துரைத்துத் தலைவனின் செலவைத் தடுத்தல்.

* அஃறிணை உயிர்களின் இணைபிரியாத அன்புடைய காட்சிகளை விளக்கியுரைத்து இருவரையும் சேர்ப்பதின் பொருட்டு செலவு தடுத்தல்.

* பாலைநிலத்தின் வெம்மையும் வறட்சியும் விலங்குகளின் வாழ்க்கையையும் கள்வர்களின் கொலைத் தொழிலையும் எடுத்துரைத்துத் தலைவனின் செலவை விலக்குதல்.

* பொருள் நிலையாமை, யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, விருப்பம் நிலையாமை ஆகிய நிலையாமை என்னும் அறத்தை வலியுறுத்திச் செலவழுங்குவித்தல்.

- இது போன்ற பல்வேறு காரணங்களில் தோழி செலவழுங்குவிப்பதன் காரணம் இல்லறம் ஒற்றுமையுடன் அன்புடன் பிரிவில்லாது ஒழுக வேண்டிக் கூறப்படும் அறத்தின் தொகுப்பு எனலாம்.

துணை நின்ற நூல்கள்

1. சரளா இராசகோபாலன், சங்க இலக்கியம் (அகம்),ஒளிப் பதிப்பகம், 63, டாக்டர் ரங்காச்சாரி சாலை, சென்னை, முதற்பதிப்பு, 1988.

2. சுப்புரெட்டியார்.ந., அகத்திணைக் கொள்கைகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை,1966.

3. திருஞானசம்பந்தம்.ச., தண்டியலங்காரம் தெளிவுரை, கதிர் பதிப்பகம், திருவையாறு, 2006.

4. பாலசுப்பிரமணியன்.கு.வே., நற்றிணை, நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை. மு.ப.2008.

5. மாணிக்கம்.வ. சுப., தமிழ்க்காதல், மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம், இரண்டாம் பதிப்பு, 2005.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p290.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License