பண்டைத் தமிழர்கள் செம்மாந்த வாழ்வினை மேற்கொண்டிருந்தனர். அவர்களின் வாழ்க்கை திட்டமிட்ட கட்டமைப்பை உடையதாக இருந்தது. அவர்கள் தாம் வாழ்ந்த சமுதாயம் போற்றிக் காத்து வந்த மரபுகளை போற்றிக் காப்பவர்கள் ஆகவும், தம் முன்னோர் கற்றுக் கொடுத்த பழக்க வழக்கங்களை போற்றுபவர்கள் ஆகவும் இருந்தனர். இத்தகையச் சிறப்புகளுக்கு எல்லாம் அவர்களின் மரபே காரணமாக அமைந்தது.
பழக்கம், வழக்கம், மரபு எனும் மூன்றும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்க இயலாதவை. எளிதில் மாற்ற முடியாதவை. எனவே “பழக்கம் என்பது தனி மனிதனைச் சார்ந்தது என்றும், வழக்கம் என்பது சமுதாயத்தைச் சார்ந்ததென்றும், மரபு என்பது சமுதாயம் விதிக்கும் கட்டுப்பாடு எனவும் கூறலாம்” (1). அவ்வகையில் பழக்கம் வழக்கமாகி நிலைபெற்ற மடல் ஏறுதல் குறித்து சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகளை இங்கேக் காணலாம்.
மடலேறுதல் என்பது ஆடவன் ஒருவன், தான் விரும்பியப் பெண்ணை மணம் செய்வதற்காக மேற்கொள்ளும் வழிமுறைகளில் ஒன்று. காதல் கைகூடுமோ இல்லை, கைவிட்டுப் போகுமோ என்ற அச்சத்தில், ஆண்மகன் தன் காதலை ஊரார்களின் முன்னிலையில் தெரியப்படுத்துதல் அல்லது தன் காதலை உணர்த்தல் மடல் என்பதன் பொருளாகும்.
சங்க இலக்கியங்களில் குறிஞ்சித்திணைப் பாடல்களிலும், நெய்தல் திணைப் பாடல்களிலும் மடலேறுதல் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. ஆடவன் ஒருவன் தன் மனதில் நினைத்தப் பெண்ணை மணம் செய்து கொள்ள வேண்டும் என்னும் வேட்கையின் அடிப்படையில் தன் நாணத்தை விட்டு மேற்கொள்ளும் மடலேறும் நிகழ்வு பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொல்காப்பியர் மடலேறுதலுக்கான சூழலை,
“ஏறிய மடல் திறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே” (2)
என்னும் சூத்திரத்தின் வாயிலாகத் தெளிவுபடுத்துகிறார். இச்சூத்திரத்திற்கு விளக்கம் கூறும் தமிழண்ணல், “உலகில் பெரிதும் காணப்படுவன, அளவான் அமையாது மிகுதிப்படும் காம உணர்வு நிலைகளேயாகும். தலைவியைத் தமர் தர மறுக்கும் நிலையிலும் இது நிகழும். பனங்கருக்காற் செய்த குதிரை வடிவான ஒன்றில், தலைவி படமும் பெயரும் எழுதிய ஒன்றை வைத்துக் கொண்டு எருக்கம் மாலை முதலியன அணிந்து, அதன் மேல் ஏறி ஊர்வது, ரத்தம் கசிய உயிர் விடுவதாகும். மடலேறுவேன் என வாயால் அச்சுறுத்துவது அன்பின் ஐந்திணையுள் அடங்கும். அல்லாமல் மடலேறிவிடுவதில் முடியுமாயின், அது பெருந்திணையின் பாற்படும். இருவரும் இளமைக் காலமெல்லாம் பிரிந்திருக்க நேர்ந்து காலமெல்லாம் வீணேக் கழிவது இளமை தீர்திறம். தேறுதல் சொல்லிச் சொல்லித் தெளிவிக்க முடியாது பெருகிய காமத்தால் வருந்துவது. அடுத்தது, ‘காமம் மிக்க கழிபடர் கிளவி’ என்னும் நிலை பறவை ,விலங்குகளைப் பார்த்துப் பேசுதலும், தனக்குத்தானேப் பேசிக்கொள்ளுதலுமாகிய நிலை இது” (3) என்று மேற்கொண்ட சூத்திரத்திற்குத் தரும் விளக்கம், மடல் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமைகிறது. கிடைக்காத இன்பத்தைப் பெற நினைத்தல், காலத்தால் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போனதற்கான இரங்கி வருத்தம் கொள்ளல், இன்பம் நிறைவேறாத இடத்துப் புலம்புதல் என்னும் களங்களில் மடலில் பங்களிப்பு நிகழ்ந்ததை அறியமுடிகிறது .
மடல் என்பதற்கு, க. காந்தி தரும் விளக்கம் குறிப்பிடத்தக்கது. “ஓர் ஆடவன் ஒரு பெண்ணைக் களவுடனோ அல்லது களவின்றியோ அடைய மேற்கொள்ளும் வழிமுறையே மடலேறுதல் எனப்படும். தன் காதலின் திண்மையினைத் தலைவன் தன்னை வருத்திக் கொள்வதன் வாயிலாகப் பிறர்க்கு அறிவித்து ஊராரது அனுதாபத்துக்காளாகி அவர்களின் வாயிலாகத் தனது காதலை முற்றுவிக்கக் கையாளும் உத்தியாகவேத் தென்படுகிறது” (4)
மடலேறுதல் தன் எண்ணம் கைகூடாத நிலையில் நிகழ்கின்ற செயல் ஆதலால், மடலேறுதல் நாணம் துறந்த நிலையிலேயே நடைபெறும் என்பதைத் தொல்காப்பியம் தெளிவுபடுத்துகிறது.
“அச்சமும் நாணும் மடறும் முந்துறுதல்
நிச்சமும் பொற்குரிய என்ப” (5)
பெண் அச்சம், நாணம், மடம் என்னும் பண்புகளைத் தனக்குரிய காப்பாகக் கொண்டவள். தன் குணத்தைப் பொதிந்து காட்டும் இயல்புடையவள். அதனால், பெண் மடலேறுதல் இல்லை. ஆனால் ஆண்மகன் தன் மனத்தில் மூண்ட காமத்தின் காரணமாகத் தலைவியை அடையப் பெறாத மனநிலையில் மடலேறுதலாகிய செயலை நிகழ்த்தற்கு மனம் கொள்கிறான். அதன் முதல்நிலை நாணம் துறத்தலாகும். மடலேறுதல் இழிவு என்றேக் கருதப்பட்டது. தலைவியை நினைத்து மிகுதியான காதலால் துன்புறுதல் தலைவனுக்கு உரியதே அன்றித் தலைவிக்கு இல்லை. தலைவி, காமம் மிக்க கழிபடர் கிளவியில் பேசுதல் மட்டுமே உண்டு.
“எத்திணை மருங்கினும் மகடூ உ மடன்மேல்
பொற்புடை நெறிமை இன்மையான” (6)
- இச்சூத்திரம், பெண்கள் மடலேறாப் பெருந்தக்க நிலையினை அறிதற்குச் சான்றாக விளங்குகிறது. தலைவன் தன் காதல் கைகூடாத நிலையில் சிறப்புக்கும் அஞ்சுவது இல்லை என்பதை அகநானூறு எடுத்துக் காட்டுகிறது. காதல் கைகூடாத நிலையில் மலையில் இருந்து விழுந்து உயிர்விடுதலும் நிகழும் என்பதை,
“வயங்கு வெயில் நெமியப் பாஅய்மின்னுவசியு
மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல்
ஆராக் காமம் ஆடூஉ நின் றலைப்ப
இறுவரை வீழ்நரின் நடுங்கி” (7)
என்னும் அகப்பாடல் தெளிவுபடுத்துகிறது.
மடலேறுதல் குறித்து, “காமம் மிக்க தலைவன் பனை மடலால் குதிரையைப் போல் ஓர் உருவம் அமைத்து, அதன் கழுத்தில் மணி, மாலை முதலியவற்றைப் பூட்டித் தன் உருவத்தையும், தலைவியின் உருவத்தையும் ஒரு படத்தில் எழுதிக் கையிலேந்தி அதன் மேல் யாவரும் அறிய ஊர்ந்து வருதலை மடலேறுதல் என்பர். அங்ஙனம் அவன் வருவதைக் கண்ட ஊரினர், இன்னவரைக்கும் இவனுக்கும் நட்பு உண்டு என்பதை அறிந்து அதனை வெளிப்படக் கூறிப் பழிப்பர். அது கேட்டுத் தமர் மணம் புரிவிப்பர். மடலேறும் தலைவன் சூடும் தன்மையில்லாத எருக்கமாலை, ஆவிரம்பூ மாலை முதலியவற்றை அணிந்து வருதல் வழக்கமென்று தெரிகிறது” (8) என்னும் உ. வே. சாமிநாதையரின் கருத்து மடல் ஏறுவானின் சூழல் மற்றும் தோற்றத்தைத் தெளிவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது.
தான் விரும்பிய பெண்ணுக்காக மடல் ஏறுதற்கான சூழல் இலக்கிய வழக்காகவே பெரும்பான்மையும் அமைந்திருக்கிறது. சங்க இலக்கியப் பாக்கள் பலவற்றிலும் மடல் குறித்த குறிப்புகள் உள்ளன. ஆண்கள் ஏறிச்செல்லுதற்கான மடல் என்னும் குதிரை, பெண்ணை எனும் பனை மடலால் செய்யப்படுவதாகும். பெண்ணை என்பது கூந்தல் பனையைக் குறிக்கும். நற்றிணை மடலை நன்மா என்னும் பெண்ணை மடல் என்றும் குறிப்பிடுகிறது. இதனை,
“சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇக்
குவிமுகி ழெருக்கங் கண்ணி சூடி
உண்ணா நன்மாப் பண்ணி” (9)
“வில்லாப் பூவின் கண்ணி சூடி
நல்லே முருவலெனப் பல்லூர் திரிதரு
நெடுமாப் பெண்ணை மடல்மா னோயே” (10)
என்னும் சான்றுகள் தெளிவாக்கும். குறுந்தொகை மடலை பெண்ணை மாமடல் என்றும், பனை படு கலிமா என்றும் குறிப்பிடுகிறது.
“விந்தலைப் பெண்ணை விளையல் மாமடல்” (11)
“ பொன்னேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பன்னூல் மாலைப் பனை படு கலிமா” (12)
மடல் ஏறுதல் மனமுறிவின் அடிப்படையிலான நிகழ்வு என்பதால் பிறரின் கவனத்தைக் கவர்ந்து தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதே இங்கு நோக்கமாக அமைகிறது. அதனால், பிறரால் விலக்கப்படும் பொருட்கள் மடலில் கவனிக்கத்தக்கவை ஆகின்றன. மடல் ஏறுபவர்கள் பயன்படுத்தும் மலர்கள் சாதாரணமாக யாரும் பயன் கொள்ளாமல் விலக்கும் மலர்களாகும். அம்மலர்களே மடலேறுதலில் பயன்படுகின்றன. குறிப்பாக, ஆவிரை பூளை, எருக்கு ஆகியன பயன்பட்டன என்பதை இலக்கியச் சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன. இதனை,
“அணியலங் காவிரைப் பூவோ டெருக்கின்
பிணையலங் கண்ணி மிலைந்து மணியார்ப்ப
ஓங்கிடும் பெண்ணை மடலூர்ந்தென்
எவ்வநோய்” (13)
“மாவென் நுணர்மின் மடலென்று மற்றிவை
பூவல்ல பூளை யுழிங்கையோ டியாத்த
புனவரை யிட்ட வயங்குதார்ப் பீலி” (14)
“ விழுத்தலைப் பெண்ணை வளையல் மாமடல்
மணியணி பெருந்தார் மார்பிற் பூட்டி
வெள்ளென் பணிந்து பிறர் எள்ளத் தோன்றி” (15)
- என்னும் சான்றுகள் வெளிப்படுத்தும். மடலேறுதல் ஆண்மகனைப் பொறுத்தவரை நாணம் துறந்த செயலாகவும், ஊரார்களைப் பொறுத்தவரை இரக்கம் கொள்ளத்தக்க செயலாகவும், விளையாட்டுப் பருவத்தில் உள்ளவர்களுக்குக் கேலிக்குரியதாகவும் அமைந்திருப்பதை இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தலைவன் மடலேறி வரும்போது சிறுவர்கள் அவனைச் சூழ்ந்து வந்தமையினை நற்றிணைப் பாடல் எடுத்துக்காட்டுகிறது.
“சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇக்
குவிமுகி ழெருக்கங் கண்ணி சூடி
உண்ணா நன்மாப் பண்ணி எம்முடன்
மறுகுடன் திரிதருஞ் சிறுகுறு மாக்கள்” (16)
தலைவனின் இரங்கத்தக்க நிலை கண்டு இவனை ஏமாற்றியவர் எவளோ என்னும் மன உணர்வில் தலைவன் மடல் ஊர்ந்து வரும் நிலை, இரங்கத்தக்க அவன் கோலம் ஆகியவற்றைக் கண்டு ஊர் மக்கள் பேசும் நிலையினைக் குறுந்தொகைச் செய்யுள் எடுத்துக்காட்டுகிறது.
“பொன்னே ராவிரை புதுமலர் மிடைந்த
பன்னூன் மாலைப் பனை படு கலிமாப்
பூண்மணி கறங்க வேறி நாணட்
... ... ... ... ...
றவள் பழி நுவலு மிவ்வூர்” (17)
மடல் குறித்துச் சங்கச் செவ்வியல் பனுவல்களில் காணப்படும் செய்திகள் மடல் என்பது தான் விரும்பிய நிலையிலும் , விரும்பாத நிலையிலும் பெண்ணை அடையும் பொருட்டுத் தாமாக நாணம் விட்டுச் செய்யும் செயல் என்பதை அறிய முடிகிறது.
தன் செயல் மூலம் பிறரின் இரக்க உணர்விற்கும், ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி, நினைத்த பெண்ணை அடைதல் இதன் நோக்கம் என்பதை இலக்கியங்கள் நுட்பமான கண்ணோட்டத்தில் பதிவு செய்துள்ளன. பண்டைக்காலத்தில் சமூகத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உலகியல் மற்றும் இலக்கிய வழக்காக மடல் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது.
1. க .காந்தி, தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், ப .15
2. தமிழண்ணல், தொல்.பொருள் .அகத் .54
3 .தொல்.பொருள். அகத் .997, வரை, ப .309
4. க. காந்தி, தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், ப.16
5. தொல்.பொருள். அகத் .96
6. தொல்.பொருள். அகத் .38
7. அகம்.322 :1-4
8. உ. வே. சாமிநாதையர், குறுந்தொகை, மூலமும் உரையும், ப.42
9 . நற்.220 :1-3
1 0. மேலது ,146 :1-3
1 1. குறுந்.182:1
1 2. மேலது,173-2
1 3. கலி.138 :8-10
1 4. மேலது.139:3-5
1 5 . குறுந். 182:1-3
1 6. நற்.220:1-4
1 7. குறுந். 220 :1-6
1. உ. வே. சாமிநாதையர் (பதி) , குறுந்தொகை, கழகவெளியீடு, சென்னை, இரண்டாம் பதிப்பு - 1947
2. உ. வே. சாமிநாதையர் (பதி), நற்றிணை நானூறு, கழக வெளியீடு, சென்னை, ஐந்தாம் பதிப்பு -1976
3. நச்சினார்க்கினியர் உரை - கலித்தொகை, கழக வெளியீடு, சென்னை, ஏழாம் பதிப்பு -1967
4. இராசரத்தினம். கு , சங்க இலக்கியத்தில் பொதுமக்கள், குகன் பதிப்பகம், திருவாரூர், முதற் பதிப்பு - 2004
5. இலக்குவனார். சி, சங்க இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, முதற்பதிப்பு -1966
6. க. காந்தி, தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், புலம் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு - 2007
7. சண்முகம்பிள்ளை, சங்கத்தமிழர் வாழ்வியல், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, இரண்டாம் பதிப்பு - 1997
8. தமிழண்ணல், சங்க இலக்கிய ஒப்பீடு -இலக்கிய வகைகள், செல்லப்பா பதிப்பகம், மதுரை, முதற்பதிப்பு - 2005
9. பரமசிவானந்தம். அ மு., சமுதாயமும் பண்பாடும், தமிழ்க் கலைப் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு -1962