கம்பராமாயணத்தில் இறுதிச்சடங்கு, நீர் சடங்கு
முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.
முன்னுரை
மனிதப்பிறவி எடுத்த மனித உயிர் குழந்தையாகப் பிறப்பெடுத்து, வளர்ந்து பெரியவனாகி, இறப்பு என்னும் நிலையை அடையும். மனிதன் பிறந்தது முதல் இறப்பு அடையும் வரையும் உயிரானது உடம்பை விட்டு பிரிந்தப் பின்பும், சடங்கு செய்யும் வழக்கம் நம்மிடையை இருந்து வருகிறது. இறந்த பிறகு அவருக்காக அவருடையப் பிள்ளைகள் செய்யும் சடங்கே நீர்ச்சடங்காகும். மரணத்திற்குப் பிறகு எள்ளும், தண்ணீரும் இறைக்க தன்னினமும், உறவும் வேண்டும் என்று கருதுகிற அக்கால வாழ்க்கையின் நம்பிக்கை கம்பருக்கும் இருந்தது என்பதை, அவர்தம் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம். அளவுக்கு அதிகமான நெரிசல் இருக்கும் இடத்தை அடையாளப்படுத்த 'எள் விழவும் இடமில்லை' என்பர். மிகக் குறைந்த அளவை எடுத்துச் சொல்ல எள்ளளவு என்று சொல்வதும் உண்டு.
இறுதிச் சடங்கு
மனிதன் பிறந்தது முதல் இறப்பு வரை, இறப்பிற்குப் பிறகும் பல்வேறு சடங்குகள் செய்யப்படுகின்றன. சடங்கு என்பது மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு வரன்முறையாகும். மனிதனின் வாழ்வோடு சம்பந்தமான பல சடங்குகள் உள்ளன. பிறப்பு, பெயர் சூட்டுதல், காதுகுத்தல், பூப்படைதல், திருமணம், வளைகாப்பு என்று பல சடங்குகள் இருக்கின்றன. இறுதியில் இறப்புக்கான சடங்குகளும் உள்ளன. ஒரு மனிதனின் உயிர் பிரிந்த பின்பு, அந்த உடல் மண்ணில் புதைக்கப்பட்டோ அல்லது நெருப்பில் எரித்துச் சாம்பலாக்கப்பட்டோ அழிக்கப்படுகிறது. உயிர் பிரிந்த உடல் அழிக்கப்படுவதற்கு முன்பாகச் சில சடங்குகள் (நடைமுறைகள்) செய்யப்படுகின்றன. இதற்கு 'இறுதிச் சடங்கு' என்று பெயர்.
திவசம் வேறு தர்ப்பணம் வேறு
தர்ப்பணம் என்பது ஒவ்வொரு நாளும் எல்லோரும் செய்யவேண்டிய புண்ணிய காரியம். சூரியன், வருணன், அக்கினி என எல்லாத் தேவர்களுக்கும் நீர்நிலைகளில் நின்று ஜலத்தை அள்ளி விட்டு, "ஆதித்யா தர்ப்பயாமி" என ஒவ்வொரு தேவர்களுக்கும் செய்வதே தர்ப்பணம் ஆகும். 'தர்ப்பணம்' என்றால் 'திருப்தி செய்வது' என்று பொருள். நீரை அவர்களுக்கு அளித்து அருளைப் பெறுவது. ஆனால், அமாவாசை மற்றும் இறந்தவர்களின் திதி நாளன்று எள்ளும், நீரும் கலந்து இறந்தவர்களுக்குத் தர்ப்பணம் செய்யலாம். அந்த இரு நாட்களில் மட்டுமே இறந்தவர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். அதிலும் இதை இரத்த உறவு கொண்டவர்கள் மட்டுமேச் செய்ய வேண்டும். இறந்த திதியில் நீர் நிலைகளுக்குச் சென்று எள்ளும், நீரும் தெளித்துத் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஒருவன் இறந்து விட்டால், அவருடைய முதல் புதல்வன்தான் இறுதிச்சடங்கை செய்யவேண்டும். அவர் வரவில்லையென்றால் அடுத்த மகன் செய்யலாம். (1)
ஷ்ராத்தத்தில் கருப்பு எள்
ஷ்ராத்தத்தில் கருப்பு எள்ளைப் பயன்படுத்துவது என்பது கருப்பு எள்ளிலிருந்து வெளிப்படும் ராஜா - தம அதிர்வெண்களின் உதவியுடன் மர்த்யலோகத்தில் சிக்கி இறந்த முன்னோர்களை (பிதர்களை) அழைப்பதாகும். ஷ்ராத்தத்தில் மந்திரங்களை ஓதுவது கருப்பு எள் விதைகளுக்கு பலன் தரும். கருப்பு எள்ளில் உள்ள செயலற்ற ராஜா - தம ஆற்றல் மந்திரம் ஓதுவதன் மூலம் உருவாகும் ஒலி சக்தியின் விளைவாக விழித்தெழுகிறது. இந்த ஆற்றல் ராஜா - தம அதிர்வுகளின் சுழல் வடிவத்தில் சுற்றுச்சூழலுக்கு உமிழப்படுகிறது. அந்த நேரத்தில், ஷ்ராத்தத்தில் செய்யப்பட்ட அழைப்பின்படி, குறிப்பிட்ட பிடார்களின் நுட்பமான உடல்கள் இந்த அதிர்வுகளை நோக்கி ஈர்க்கப்பட்டு பூமியின் சூழலில் நுழைகின்றன. இந்தச் செயல்பாட்டில், கருப்பு எள்ளிலிருந்து வெளிப்படும் ராஜா - தாம அதிர்வெண்களின் உதவியுடன், பிதர்களின் நுட்பமான உடல்களுக்கு ஷ்ரத்தா சடங்கு இடத்தை அடைவது எளிதாகிறது. புரவலரால் ஷ்ராத்தம் நடக்கும் இடத்தில் கருப்பு எள் பொழிகிறது. பிடார்களின் அதிர்வெண்கள் கருப்பு எள் விதைகளை நோக்கி ஈர்க்கப்படுவதால், ஷ்ராத்தத்தின் இடம் பிடார் அதிர்வெண்களால் சார்ஜ் செய்யப்படுகிறது. கருப்பு எள் விதைகளிலிருந்து வெளிப்படும் அதிர்வெண்களால் நுட்பமான உடல்களைச் சுற்றி இருக்கும் ஆசை உறை செயல்படுத்தப்படுகிறது மற்றும் பிடார்கள் தங்கள் ஷ்ரத்தையின் பகுதியை காற்று வடிவத்தில் உட்கொள்வதன் மூலம் திருப்தி அடைகின்றன. (2)ஷ்ரத்தத்தில், மந்திரங்களால் (திலோதகம்) சுமத்தப்பட்ட கருப்பு எள் கொண்ட நீர் சிறப்பு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது.
சிரார்த்த நியமம்
ஆத்மாவுக்கு திருப்தி செய்வது அவர்கள் பிள்ளைகள் கடமை. பசி தாகத்தோடுஅலையும் ஆத்மா, பிள்ளைகள் தரும் தர்ப்பணத்தில் திருப்தி அடையும். பெற்றவர்கள் மரணம் அடைந்த பிறகு அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடன்தீர, கர்மா ஏதாவது பூர்த்தியாகவில்லை எனில் அந்த ஆத்மா வரும். இதனை ‘பித்ருக்கடன்’ என்பர். இதை சிரத்தையுடன் செய்வதாலேயே ‘சிரார்த்தம்’ என்று பெயர். (3)
இறந்தவர்கள் பசி தாகத்திற்கு மட்டும் வரவில்லை. அவர்கள் கர்மகடன் தீர, வசூலிக்கவே வந்துள்ளார்கள். அவர்கள் திருப்தி அடைந்து வம்சத்திற்கு ஆசிர்வாதமும் வழங்குகிறார்கள். பாவங்களில் பெரியப் பாவம் பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். பித்ருதோஷம் உள்ளவர்கள் ‘திலதானம்’ செய்யவேண்டும். எள்ளைத் தானம் கொடுக்கலாம். தானம் செய்யும்போது, அது அளவிடமுடியாத அளவுக்குப் பலன் கிடைக்கும். எப்பேற்பட்ட பாவமும் நீங்கும் என்று சாத்திரம் கூறுகிறது. (4)
அமாவாசையன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக நம்பிக்கை. நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்து விடுத்து, அவர்களைச் சொர்க்கலோக வாழ்விற்குக் கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. எள்ளும், தண்ணீரும் கலந்து அளிக்கப்படும் தர்ப்பணம் பித்ருக்களுக்கு அமிர்தமாகக் கருதப்படுகிறது. எள் என்னும் கருமை நிற விதை பரிசுத்தமான தானியம் என்பதே வேதக்கூற்று. பித்ருக்களுக்கு செய்யப்படுகின்ற தர்ப்பண வழிபாட்டில் கருமை நிற எள்ளைப் பயன்படுத்துவதால் நமது முன்னோர்களும், தேவர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். (5)
இந்து தர்மப்படி, ஒரு குடும்பத்தில் மூத்த மகன்தான் தன் தந்தைக்குக் கர்மா செய்ய கர்த்தாவாகிறார். ஆகையினால், இராமரும் தனக்குத் தந்தை இறந்ததாகத் தகவல் தெரிந்தவுடனே கானகத்திலேயே கர்மா செய்ய ஆரம்பிக்கிறார். என் மூலமே, எள் மூலமே பித்ருக்கடன் தீர்க்கப்படுகிறது. நீ இந்த திதியில் நான் உன்னை நினைந்து பெற்று வளர்த்த நன்றியாக நற்கதி நிமித்தம் உனக்கான நற்கதி நிமித்தம், இந்த எள் நீர் விட்டு என் எண்ணத்தை சிரத்தையாக காட்டுகிறேன் என்பதே ‘சிரார்த்த நியமம்’ஆகும். “எள் தான் பூலோகம் தாண்டி அதிர்வுகளைப் பரப்பும் வீரியம் பெற்றது. அதனால் பித்ரு தொடர்புக்கு எள் தான் பிரதானம். எள் தான் நம் எண்ண சமர்ப்பணத்தின் ஊடகம் ஆகும். எள் கொஞ்சமும், நீர் அதிகமாகவும் எடுத்துக் கொள்ளவேண்டும்” என்று சாத்திரம் சொல்கிறது. (6)
சீவகசிந்தாமணியில் நீர்க்கடன்
நந்தட்டன், சீவகனைக் கண்டு பேசும்போது, கல்வி தந்த ஆசானுக்கு, உரைக்க என்ன இருக்கிறது. நல்லொழுக்கமெல்லாம் ஒன்று திரண்டது போன்ற உனக்கு நான் இனிக் கூறுவது யாது என்றாலும் தம்பியான நந்தட்டனே இதனைக் கேட்பாயாக, நடுக்கம் தரும் இந்த துன்பத்துனின்று விடுபட்டு, நமக்கு உறவானவரின் துன்பத்தையும் போக்கி அவரிருக்கும் வரையும் பாதுகாத்து அவர் மறைந்தால் நீர்க்கடனாகும் முறையையும் செய்வாயாக என்று கூறினான்.
“நம்புநந்தட்டன் கேட்க நங்கட்குக் குரவ தள்ளார்
தம்பரி வகற்றி யோம்பி நீர்க்கடன் மரபு தாங்கிக்
கம்பஞ்செய் பரிவி யீங்கிக் கற்பிப்பார்க் குவாத்துச் சொல்லார்” (சீவகசிந்தாமணி-கனகமாலையார் இலம்பகம் 1737)
கம்பராமாயணத்தில் இறுதிச் சடங்கு, நீர்ச்சடங்கு
மனிதன் இறந்து விட்டால், அதற்கு இறுதிச்சடங்கினைச் செய்தனர். கம்பராமாயணத்தில் இறந்த ஒவ்வொருவருக்கும் யார், யார் இறுதிச் சடங்கினை எவ்வாறு செய்தனர் என்பதையும், நீர்க்கடன்களைச் செய்ததையும் கம்பர் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து இறுதிச்சடங்கின் மேலும், நீர்ச்சடங்கின் மேலும் கம்பருக்கு இருந்த நம்பிக்கையை நாம் உணர்ந்து கொள்ளமுடிகிறது.
பரசுராமர் துயரம்
இருபத்தொரு தலைமுறை, இவ்வுலகில் உள்ள முடிசூடிய மன்னர்களை எல்லாம், கொதிப்பு மிக்கு எழும் எனது கோடரியின் கூரிய நுனியால், வேரற்று அழியும்படி களைந்துவிட்டேன். என்னால் கொல்லப்பட்ட அரசர்களின் தசைகளிலிருந்து பெருகிய இரத்த வெள்ளம் என்னும் நீர்த்துறையில் முறைப்படி என் தாய், தந்தைக்குச் செய்ய வேண்டிய நீர்க்கடன்களைச் செய்தேன். அதன் பின்பு, தணிக்கமுடியாத என் கோபத்தை அடக்கிக் கொண்டேன் என்று கூறுகிறார்.
“தூ எழு குருதி வெள்ளத் துறையிடை முறையின் எந்தைக்கு
ஆவன கடன்கள் நேர்ந்தேன் அருஞ்சினம் அடக்கி நின்றேன்” (பரசுராமப்படலம் 1241)
எனும் பாடல் வழியேப் பரசுராமர் தன் தாய், தந்தைக்கு நீர்க்கடன் செய்தார் என்பதை அறியமுடிகிறது.
தசரதன் வருத்தம்
கைகேயி வாங்கின வரத்தினால் மனவருத்தமும், கோபமும் கொண்டான் தசரதன். பலவாறு சொல்லி வந்த அவன் அவற்றைக் கேட்டு சிறிதும் இரங்காத கைகேயியின் நிலையை அறிந்து கொண்டு, வசிட்ட முனிவனிடம் ," முனிவனே! இப்பொழுதே சொல்லி விடுகின்றேன். இந்தக் கைகேயி என் மனைவி அல்லள். இவளை மனைவி என்னும் நிலையிலிருந்து முற்றும் நீக்கி விட்டேன். அரசனாக வரப்போகும் அந்தப் பரதனையும் இனி என் மகன் என்று கருதமாட்டேன். அவன் என் இறுதிச்சடங்கு செய்வதற்கும் உரிமையுடையவன் ஆக மாட்டான்" என்றான்.
"மன்னே ஆவான் அப்பரதன்தனையும் மகன் என்று
உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு என்றான்" (நகர்நீங்குபடலம் 341)
மேலும் கண்கள் நீர்நிலைகளாக, உயிரும் அக்கண்ணீரைப் போல் வெளியே ஒழுகிவிட இறக்கும் நிலையில் இருக்கிறேன். அனைவரும் மதிக்கும் தன்மை பொருந்திய நான்கு வேதங்களில் வல்ல அந்தணர்கள், ஓமத்தீயின் முன்னே உன்மீது அபிசேகம் செய்வதற்காக கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களிலிருந்து கொண்டுவந்த திருமஞ்சனநீரை, தீவினை உடைய நான் இறந்த பிறகு எனது இறுதிக்கடனுக்கு உரிய நீராகக் கொடுத்துவிட்டு, அதன்பின் பெரிய காட்டுக்கு நீ செல்வாயாக" என்று தசரதன் இரங்கிப் புலம்பினான்.
இராமன் பிரிந்து சென்றால் நிச்சயமாக தன் உயிர் பிரியும் என்பதை தசரதன் அறிந்து வைத்திருந்ததால், அவ்வாறு கூறினான் என்பதை அறியமுடிகிறது.
இறுதி ஊர்வலத்தின் முன்னும் பின்னும்
பின்னர் கதைப்படி, தசரதன் உடலும் சரயுநதி அடைகிறது. தனித்து அன்று குதிரைகளும், யானைகளும், விலங்குகளும், தேர்களும், ஏனைய அரசர்களும், நான்மறை ஓதும் வேதியர் கூட்டமும் முன் செல்ல, தேவியர் பின்தொடரச் சரயுநதி ஏகுகிறது, தசரதன் உடலும்.
“மாவும், யானையும், வயங்கு தேர்களும்,
கோவும், நான் மறைக் குழுவும், முன் செல,
தேவிமாரொடும் கொண்டு, தெண் திரை
தாவு வார் புனல் சரயு எய்தினார்” (பள்ளிப்படைப் படலம் -910)
என வரும் பாடலின் வழி கம்பன் காட்சிப்படுத்தும் நிகழ்வு நெஞ்சறுக்கும் நிகழ்வு. குதிரைகள், யானைகள், தேர்கள் இவற்றோடு, பிற மன்னர்களும் நான்மறைக்குழுவும் முன் செல்கின்றன. ஆனால், தேவிமார் செல்லவில்லை, கொண்டு செல்லப்பட்டனர். இதில், கொடுந்துயர் என்னவெனில், முன்சென்ற யாவரும் யாவையும் பின் வந்து நாடு ஏகுவர். ஆனால், இந்த, அறுபதினாயிரப் பெண்டிர்? கூடவரும் குதிரைகளுக்கும், யானைகட்கும் கிடைக்கிற மறுவாழ்வு கூட, தசரதனை மணந்த பெண்டிருக்கு இல்லையே.
இறுதி ஊர்வலம் தசரத உடலுக்கு மட்டுமா, இப்பெண்டிரின் இளமைக்கும் வளமைக்கும், ஏன் வாழ்க்கைக்கும்தான்.
முன்செல், கொண்டு என்ற சொற்றொடர்கள் காட்டும் அவலத்தின் தொடர்ச்சிதான் அடுத்த பாட்டு.
அத்தேவிமார் யாவரும், வறிதே கொண்டு செல்லப்படவில்லை. பொன்வடமும், முத்துவடமும் ஏராளமாகப் பூட்டி அழைத்துக் கொண்டு செல்லப்பட்டனராம். அவர்கள் எத்தன்மையராய் இருந்தார்கள் என்றால், ஒல்கித் தளரும் மலர் பூத்த கொம்பினை ஒத்தவர்களாக இருந்தார்கள் என்கிறார் கம்பர்.
கோசலையின் துயரம்
கைகேயி வரம் பெற்றதில் பரதனுக்கு உடன்பாடு இல்லை என்பதைப் பரதன்கூறக் கேட்ட கோசலை, மாசற்ற மகனே உன் தந்தையார் இறந்து ஏழு நாட்கள் கடந்து விட்டன. அதற்குப் புதல்வர்கள் செய்யவேண்டிய இறுதிக் கடனை நீ செய்து முடிப்பாயாக" என்று மிகுந்த வலிமையான அன்பினால் கூறினாள்.
"இறுதி எய்தி நாள் ஏழ் இரண்டின
சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி என்று
உறுவல் மேயினாள் உரையின் மேயினாள்" (பள்ளியடைப்படலம் 903)
பரதன்மேல் இருந்த வருத்தம், கோபம் எல்லாம் தீர்ந்து, பரதனை இறுதிக்கடன் செய்வாயாக என்கிறாள்.
பரதன் துயரம்
சரயு நதிக் கரையை அடைந்து, அற நூல்களை அறிந்தவர் இறுதிக்கடனாகக் கூறிய எல்லாச் சடங்குகளையும் செய்து, தீயிலிடுவதற்கு ஈமப்பள்ளியைச் செப்பமுற அமைத்து, அதன்மீது தசரதனது உடலைத் துன்பத்தோடு ஏற்றி வைத்தனர். பின்னர் வீரனே இங்கு வந்து உன் தந்தைக்கு செய்ய வேண்டிய வழுவில்லாத ஈமச்சடங்கினை செய்து முடிப்பாயாக என்று பரதனை அழைத்தனர். ஈமச்சடங்கு செய்யயெழுந்த பரதனை நோக்கி,"தசரதன் உன் தாய் செய்த கொடுஞ்செயலால் நேர்ந்தமிகுந்த துயரத்தால், முன்னரே மகனுக்குரிய உரிமைக்குத் தக்கவன் நீ அல்லன் என்று உன்னை நீக்கிய பிறகே இறந்தான்" என்று வசிட்டன் கூறினான்.
பிரேதத்துக்கு உரிய சடங்குகளைச் செய்யும் பேற்றைப் பெறாத நான் அரசனாக இருந்து ஆட்சி செய்வதற்கு மட்டும் உரியவன் ஆவேன் என்று வருந்தி கூறினான்.
தசரதனுக்கு இறுதிக்கடன்
இவ்வுலகில் பிறந்த எந்த உயிரும் இறந்தால், பஞ்சபூதங்களில் ஒன்றில் அடக்கமாக வேண்டும். மனிதர்கள் இறந்தால் அவர்களது உடலைப் புதைக்கவோ, எரிக்கவோ செய்வர்.
தசரதன் இறந்ததால் சத்ருக்கணன் அவனுக்கு ஈமச்சடங்குகளைச் செய்தான்.
“அன்று நேர்கடன் அமைவது ஆக்கினான்
நின்று நான்மறை நெறி செய் நீர்மையான்” (அயோத்தியா காண்டம் - பள்ளியடைப்படலம் 919)
சத்ருக்கணனைக் கொண்டு செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளை, நான்கு வேதங்கள் கூறும் நெறியிலே நின்று வசிட்டன் முறைப்படி நடத்தினான்.
இராமன் வருத்தம்
தசரதன் இறந்த செய்தியைப் பரதன், இராமனிடம் கூறினான். இராமன் அளவில்லா துன்பம் அடைந்தான். வசிட்டர், இராமனிடம் “நீ எத்துன்பமும் அடைதல் வேண்டா, உன் தந்தைக்கு இதைக் காட்டிலும் உய்வடையத் தக்க வழி ஏதேனும் உண்டோ ? ஒன்றும் இல்லை. ஆதலால் இனி, நீ உனது தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக்கடன்களை எல்லாம் முறைபிறழாது செய்து வருவதோடு, உனது கைகளால் ஆற்ற வேண்டிய நீர்க்கடன்களையும் செய்து முடிப்பாய்” என்றார்.
இராமர் கங்கை நீருக்குள் இறங்கிக் குளித்த பின்பு மீண்டும் கரை நோக்கி வந்தான். அங்கு நான்கு வேதங்களிலிலும் வல்ல சான்றோராகிய வசிட்டன் சடங்கு முறைகளை ஓத, தனது தந்தையினை எண்ணிக்கொண்டு மூன்று முறை கைகளால் நீரை அள்ளி, விதிமுறைகளின்படி கீழேவிட்டு நீர்க்கடன் ஆற்றினான்.
"முக் கையின் நீர் விதி முறையின் ஈந்தனன்
ஒக்க நின்று உயிர்தொறும் உணர்வு நல்குவான்" (திருவடி சூட்டு படலம் 1137)
நீர்க்கடன் செய்து முடித்ததும், இறந்தார்க்குச் செய்து வர வேண்டிய பிற கடன்களை எல்லாம் வரிசை தப்பாது செய்து முடித்தான்.
"ஆனவன் பிற உள யாவும் ஆற்றி பின்" (திருவடி சூட்டுப் படலம் 1138)
தசரதன் இறந்ததை அறிந்த இராமன், அவருக்கு நீர்க்கடன்கள் செய்தான் என்பதை அறியமுடிகிறது.
சடாயுவின் வருத்தம்
தசரதனும், சடாயுவும் ஒருவருக்கொருவர் உதவி, இன்னுயிர் நண்பர்களாக விளங்கினர். சம்பராசுரனை எதிர்த்துப் போரிட்டபோது, சடாயு துணை நின்று தசரதனுக்கு வெற்றி தேடித் தந்தான். அது கண்டு மனம் உவந்த தசரதன் "நான் உடல், நீ எனக்கு உயிர்" என்று கூறி மகிழ்ந்தான். தசரதன் இறந்த செய்தியை இராம, இலட்சுமணர் மூலமாகக் கேட்டதும் மூர்ச்சையானான். உணர்வு வந்ததும், தசரதன் "நான் உடல் நீ எனக்கு உயிர்" என்று கூறிய வார்த்தை பொய்த்ததோ? கூற்றுவன் உடலை வைத்துவிட்டு உயிரைக் கவர்ந்து செல்லுதல் வழக்கம். மாறாக உயிர் என்ற என்னை வைத்துவிட்டு உடல் என்ற உன்னை எடுத்துச் சென்று விட்டானே என்று பழித்து பிரிவு துன்பம் தாழாது தீப்பாய்ந்து உயிரைவிடத் துணிந்தான். இராம,இலட்சுமணர் ஆறுதல் கூறி சமாதானம் செய்தனர்.
தசரதன் இறந்த செய்தியைக் கேட்ட சடாயு, மிகவும் வருந்தினான். இராம லட்சுமணரைப் பார்த்து, இச்சடாயு தன் இரண்டு சிறகுகளால் நன்றாகத் தழுவிக் கொண்டான். பின்பு,"பிள்ளைகளே! தீவினை உடைய எனக்கும் இறுதியில் செய்வதற்குரிய கடமைகளை நீங்களே செய்யுங்கள்" என்கிறான்.
"மருவ இனிய குணத்தவரை இரு சிறகால்
உறத்தழுவி மக்கள் நீரே
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர்
உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான்" (சடாயு காண் படலம் 201)
நண்பனான தசரதன் இறந்ததை அறிந்த சடாயு மிகவும் வருந்தினான். இராம, இலட்சுமணர்களை தன் மகனாக ஏற்றுக் கொண்டு, தனக்கும் இவர்களே இறுதிச்சடங்கை செய்யவேண்டும் என்று விரும்பியதை அறியமுடிகிறது.
சடாயுவுக்கு இறுதிக்கடன்
இராவணன் சீதையைக் கவர்ந்து விண்ணில் தூக்கிச் சென்றபோது, போரிட்டு இராவணன் வாளால் வெட்டப்பட்டு சடாயு வீழ்ந்தான். சடாயு இறந்த பின் இராம இலக்குவணர் இறுதிக்கடன் செய்தனர். தம்பி இறந்த தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடமைகள் அனைத்தையும் செம்மையாகச் செய்து முடிப்போம் என்று கூறினான். இருவரும் விறகுகள் எத்தனை வகையின என்று காண்பவர் வியக்கும்படி கரிய அகில் கட்டைகளின் கூட்டத்தோடு, சந்தனக் கட்டைகளையும் கொண்டு வந்து குவித்தனர். தேவையான தருப்பைப் புல்லையும் திருத்தமாக அமைத்தனர். மலர்களை மேலே பரப்பினர். குற்றமற்ற முறையில் மணல் மேடையை அமைத்தனர். தெளிவான நீரைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டனர். பிறகு, இராமன் தன்னுடைய பெரிய கைகளால் சடாயுவை எடுத்துக் கொண்டு, அம்மணல் மேடையில் வைத்தான். சிறந்த நூல்களில் நிறைந்துள்ள மந்திர முறைகளில் வல்லவனான இராமன் சந்தனத்தோடு மலரையும் நீரையும் பெய்து அச்சடலத்தைத் தூய்மையாக்கி அலங்கரித்தான். பிறகு அவ்வுடலை, தன் இரு கைகளாலும் ஏந்திச் சென்றவனாகி, அங்குஅடுக்கி வைத்திருந்த விறகுகளின் மேலே ஏற்றி வைத்தான். பின்பு, சடலத்தின் தலைப் பக்கத்தில் தீ மூட்டி எரிய வைத்தான். செய்ய வேண்டிய வேறு கடமைகளையும் முறை தவறாமல் செய்து முடித்தான்.
“ஏந்தினான் இரு கைதன்னால் ஏற்றினன் ஈமம் தன் மேல்”
சாத்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின்சாரக்" (ஆரண்யகாண்டம் - சடாயு உயிர் நீத்தப்படலம் 1021 பா)
சடாயு விரும்பியபடி இராம, இலட்சுமணர்களே இறுதிச் சடங்கைச் செய்தனர் என்பதை அறியமுடிகிறது.
வாலிக்கு இறுதிக்கடன்
இராமபிரானின் அம்பினால் வாலி இறந்தான். வாலியின் மைந்தன் அங்கதன் இறுதிக்கடனைச் செய்தான்.
“கடன் யாவும் கடைகண்டு கண்ணனோடு
உடன் ஆய்உற்ற தெலாம் உணர்த்தலும்” (கிட்கிந்தாகாண்டம் - வாலிவதைப்படலம் 404)
அனுமன், வாலிக்கு செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் அங்கதனைக் கொண்டு செய்யச் செய்தான் என்பதை அறியமுடிகிறது.
சீதை கொண்ட துயரம்
சீதை, அனுமனிடம் (இராமனிடம் சொல்லச் சொல்லி) கூறும்போது ஒன்றாக இன்னும் ஒரு மாதத்தில் நான் மேற்கொண்டுள்ள விரதம் முடிந்துவிடும். அதற்குள் இராமன் இங்கு வரவில்லை என்றால், புது வருவாயாக அமைந்த நீரைக் கொண்ட கங்கையாற்றங்கரையிலே, தன் சிவந்த கைகளால் எனக்கு இறுதிச்சடங்குகளைச் செய்து முடிக்குமாறு அவனிடம் கூறுக என்றாள்.
“கங்கை யாற்றங்கரை அடியேற்கும் தன்
செங்கையால் கடன் செய்க என்று செப்புவாய்” (சூளாமணிப்படலம் 636)
சீதை, ஒரு மாதத்திற்குள் இராமன் வராவிட்டால், தான் இறந்துவிடுவேன் என்றும், தனக்கு, இராமனே இறுதிச்சடங்கை செய்யவேண்டும் என்று கூறியதை அறியமுடிகிறது.
மகரக்கண்ணன் துயரம்
கரணை வதைத்தவன் இராமன். அவன் மகன் மகரக்கண்ணன் என் அன்னை அழுத கண்ணை உடையவளாய், கடப்பதற்கு முடியாத துன்பக்கடலில் மூழ்கி இருக்கிறாள். அவளுடைய கணவனைக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றவனது வலிய தலையாகிய பாத்திரத்தில் அல்லாமல் 'இறந்தவனுக்குச் செய்யவேண்டிய நீர்க்கடன்களைச் செய்து முடிக்க மாட்டேன்' என்றாள். அதனால் பெருமை பொருந்திய திருமாங்கல்யத்தையும் நீக்கப் பொறாள். பிணங்களை உணவாக அளிப்பதால் பருந்துகளுக்கு இன்பம் செய்கின்ற வேலினை உடையவனே. இனிய அருளுடன் நான் போருக்குச் செல்லுமாறு ஆணையிடுக என்று இராவணனிடம் வேண்டினான்.
"கருந்தலைக் கலத்தின் அல்லால் கடனது கழியேன் என்றாள்
பருந்தினுக்கு இனிய வேலாய் இன் அருள் பணித்தி என்றாள்" (மகரக்கண்ணன் வதைப்படலம் 2349)
இறந்தவர்களுக்கு இறுதிக்கடன் செய்யவேண்டும் என்பதை அறியமுடிகிறது.
கும்பகர்ணன் வருத்தம்
இராமனிடம் அடைக்கலம் பெற்ற வீடணன், கும்பகர்ணனைச் சந்தித்துப் பேசும் பொழுது, வீடணனிடம் ஐயனே, “இந்த அரக்கராய் இருக்கின்ற நாங்கள் எல்லோரும் இராமன் செலுத்தும் அம்பு மழையில் அழிந்து வீணாவோம். அவ்வாறு அழிந்துவிட்டால், நீ அயோத்தி அரசன் இராமனுக்கு அடைக்கலமாகி உயிர் பிழைத்து வாழாவிட்டால், இறக்கும் எமக்குக் கையினால் எள்ளுடன் கூடிய நீரைக் கொடுத்து நீர்க்கடனை நிறைவேற்ற, வேறு யாருளர் இருந்தால் அவரைக் காட்டுவாய்” என்கிறான்.
"ஐய நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே
உய்கிலை என்னின் மற்று இவ்வரக்கராய் உள்ளோம் எல்லாம்
எய்கணை மாரியாலே இறந்து பாழ் படுவேம் பட்டால்
கையினால் எள் நீர் நல்கிக் கடன் கழிப்பாரைக் காட்டாய்!" (கும்பகர்ணன் வதைப்படலம் 1349)
இராமனிடம் அடைக்கலம் பெற்ற வீடணன், கும்பகர்ணனைச் சந்தித்துப் பேசும் பொழுது, வீடணனிடம், “ஐயனே இங்கிருந்து நீ இராமனிடம் செல். பிறகு வேதியர்களுக்குத் தலைவனாக விளங்கும் இராமனை வேண்டி அவன் அனுமதிபெற்று, மெய்மையான பழமையான நூல்களில் கூறியவாறு, போரில் இறந்த அனைவருக்கும் இறுதிக்கடன்களைச் செய்து, அவர்கள் அடைவதாகவுள்ள பெரும்துன்பம் தரும் நரகத்தை அடையாதவாறு காப்பாயாக" என்று கும்பகர்ணன் கூறினான்.
"ஆதி நூல் மரபினாலே கடன்களும் ஆற்றி ஏற்றி
மாதுயர் நகரம் நண்ணா வண்ணமும் காத்தி மன்னோ!" (கும்பகர்ணன் வதைப்படலம் 1377)
இறந்தவர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து இறுதிக்கடன் செய்தால்தான் அவர்கள் சொர்க்கம் செல்வர் என்றும், இல்லையானால் அவர்களுக்கு நரகமே கிடைக்கும் என்று கூறியதை அறியமுடிகிறது.
இந்திரசித்தின் துயரம்
கும்பகர்ணன் இறந்த பிறகு, இந்திரசித், இராம இலட்சுமணருடன் போரிட வருகிறான். “நீங்கள் அம்பினால் அறுத்துத் தள்ளிய கும்பகர்ணன் என்னும் பெயர் பெற்ற ஒருவனாகிய இராவணனுடைய தம்பி அல்லன் நான். அதனால் அவனைப் போல உங்களால் கொல்லப்படமாட்டேன். நான் இராவணன் புதல்வன். ஆனால், அக்கக்குமரன், அதிகாயன் போலன்றி வீரத்தால் தனித்து நிற்பவன். இறந்துபோன என் தம்பியர்க்கும், சிறிய தந்தையான கும்பகர்ணனுக்கும் உங்கள் இருவருடைய இரத்தமாகிய நீரைக் கொண்டு நீர்க்கடன்களை செய்து முடிப்பேன்” என்று இந்திரசித் தெரிவித்தான்.
"எம்பிமாருக்கும் என் சிறு தாதைக்கும் இருவிர்
செம் புணீர்கொடு கடன் கழிப்பேன் என்று தெரிவித்தான்" (பிரமாத்திரப் படலம் 2447)
நினைத்தக் காரியத்தைச் செய்த பிறகு, இறந்தவர்களுக்கு நீர்க்கடன்களை செய்ததை அறியமுடிகிறது.
இலக்குவன் கூற்று
அரக்கர் எனும் பெயர் பெற்றுள்ள அனைவருக்கும் நிகழப் போவதாக இருப்பதும், உயிரை ஈடேற்றுவதாக இருப்பதுமான சிறந்த நீர்க்கடன்களை செய்வதற்குத்தான் வீடணன் எம்மிடம் வந்துள்ளான். இறந்து மறையப் போகும் உன் தந்தைக்கு, நீ செய்ய வேண்டிய நீர்க்கடன்களை, இப்போதே என் கையால் இறக்கப் போவதால், மனத்துயரத்துடன் உனக்கு அவன் (இராவணன்) செய்யப் போகிறான்" என்று இலட்சுமணன் கூறினான்.
"கரக்கும் நுந்தைக்கு செயக் கடவன கடன்கள்
இரக்கம் உற்று உனக்கு அவன் செயும் என்றனன் இளையோன்" (பிரமாத்திரப்படலம் 2448)
யார் இறந்தாலும் இரத்த சொந்தங்களே நீர்கடன்களைச் செய்வர் என்பதை அறியமுடிகிறது.
இராவணன் துயரம்
கும்பகர்ணன் இறந்த செய்தியினைக் கேட்டு இராவணன் எல்லையில்லாத் துயரம் அடைந்தான். எல்லா த் திசைகளிலும் போரிட்டு வென்றவனாகிய இராவணன், அப்போது உற்றவர்கள் ஆறுதல் கூற ஓரளவு தணிந்து, "இப்போதே, இந்த மனிதர்களின் ஈரமான இரத்தத்தால், இறந்துபோன என் தம்பி கும்பகர்ணனுக்கு மூன்று முறை கையால் நீர் இறைப்பதாகிய தர்ப்பணத்தைச் செய்வேன்" என்று கோபித்துக் கூறி, கனல் கக்கும் கண்களையுடையவனாய், அங்கிருந்து அகன்று சென்றான்.
"இக்கணத்து மானிடவர் ஈரக் குருதியால்
முக்கைப் புனல் உகுப்பென் எம்பிக்கு என முனியா" ( மாயா சனகப்படலம் 1664)
இந்திரசித் இறந்த செய்தியைக் கேட்டு உடனே போர்க்களத்துக்கு ஓடினான் இராவணன். தலையற்ற தன் மகன் உடலைக் கையிலே ஏந்தி மிகுந்த வருத்தத்துடன் பலவாறாகப் புலம்பினான். "இதுவரை நான் சினத்தோடு நின்று வெற்றியை நிறைவேற்றி இந்திரனின் செல்வங்கள் எல்லாம் என்னை வந்து சேர, நினைத்தமை முடித்து நின்றேன். அணிகலன்கள் அணிந்த சீதை எனும் பெண்ணொருத்தி காரணமாக, எனக்கு மகனான நீ, நான் இறந்தபின் செய்யவேண்டிய கடமைகளையெல்லாம் மனம் இரங்கி, வருந்தி, தந்தையான நான், மகனான உனக்குச் செய்ய வேண்டியவனானேன் என்னைவிட இழிந்தவர் இவ்வுலகினில் எவரேனும் உள்ளனரோ?” என்று கூறிக் கதறினான்.
"எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி
உனக்கு நான் செய்வதானேன் என்னின் யார் உலகத்து உள்ளார்?" (இராவணன் சோகப்படலம் 3164)
தந்தை இறந்தால், மகன் இறுதிச்சடங்கைச் செய்வான். ஆனால், மகன் இறந்து, தந்தை மகனுக்கு இறுதிச்சடங்கை செய்யும் அவலநிலையை அறியமுடிகிறது.
வீடணன் இறுதிக்கடன்
இராவணன் இறந்த பிறகு வீடணனிடம், இராமன், "வீடணா நீ இன்னும் இறந்தவன் மேல் பகை கொள்வது எதற்காக? இது தகுதியன்று. இந்த இராவணனுக்கு இப்பொழுதே நூல்கள் சொன்ன விதிப்படி இறுதிக்கடன் செய்யத் துணிக" என்றான்.
"என்னதோ இறந்துளான்மேல் வயிர்த்தல் நீ இவனுக்குஈண்டு
சொன்னது ஓர் விதியினாலே கடன் செயத் துணிதி என்றான்?" (இராவணன்வதைப்படலம்3856)
இராவணன் இறப்பிற்காக, இராமனுடன் இருந்த வீடணன், அவன் இறந்த பின்தான் இறுதிச்சடங்கு மற்றும் நீர்க்கடனைச் செய்ய வாயைத் திறந்து கேட்கும் நிலையில் இல்லை. இறந்த இராவணனின் மகன்கள் அனைவரும் இறந்து விடவே, தம்பி வீடணனே இறுதிக்கடன் செய்யவேண்டும். ஆனால், அவன் முன்பே இராமனிடம் அடைக்கலம் பெற்ற பிறகு, பின் விளையப் போவதை முன்னரே அறிந்து நடக்கும் மேன்மையுடைய வீடணன், ஐயனே என்றும் அழியாத பெருமையுடைய இலங்கை அரசச் செல்வத்தை எனக்கு அளித்தாயானால் களவையே இயல்பாகக் கொண்ட இராவணனின் பிறப்புத் தொடர்பு எனக்கு நீங்குமாறு, இளையவனான பரதனுக்குச் சூட்டிய பாதுகையான முடியை எனக்கும் சூட்டுவாயாக” என்றான்.
“களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர
இளையவற் கவித்த மோலி என்னையும் கவித்தி என்றான்” (வீடணன் அடைக்கலப் படலம் 447)
அண்ணன் என்ற தொடர்பே நீக்குமாறு அவனே வேண்டிக் கொண்டதால், அவன் கேட்கவில்லை. இராமனே நீர்க்கடனைச் செய்யக் கூறினான்.
இறந்தபிறகு எந்தவித மாறுபாடும் காட்டக்கூடாது தம்பியே அண்ணனுக்கு, அவன் இறந்த பிறகு, அவனே இறுதிச் சடங்கைச் செய்யவேண்டும் என்று இராமபிரான் கூறியதை அறியமுடிகிறது.
இராவணன், மண்டோதரி, அரக்கர் குலத்துக்கு இறுதிக்கடன்
இராவணன் இறந்தவுடன், அவன் மனைவி மண்டோதரியும் இறந்துவிட்டாள். அவர்களது உடலுக்கு வீடணன் இறுதிக்கடன் செய்தான்.
“உற்ற ஈமவிதியின் உடன்பட” (யுத்தகாண்டம் - இராவணன்வதைப்படலம் 3889 -90)
வீடணன் அக்கினியை முறைப்படி பிரதிஷ்டை செய்து, ஈமச் சடங்குகளை விதிப்படி முடித்து, துன்பம் நெஞ்சை அழுத்த, இராவணனை அஞ்சலி செய்து ஈமத்தில் கிடத்தினான். இராவணனைக் கிடத்திய ஈம விறகின் மீது அகில், சந்தனக்கட்டைகளை அடுக்கித் தேவ விமானத்தின் அழகு அமையுமாறு அமைத்தான். அப்போது எந்த ஓசையும் கீழ்ப்படுமாறு ஆரவாரித்து, நடுவே முற்படும் சங்கின் ஒலி எங்கும் முழங்கியது. அப்போது வெற்றி வெண்குடையுடன் கொடிகள் நெருங்கிப் பொருந்திய ஈமவிதிச்சடங்கு பொருந்த ஈம விதிச்சடங்கு பெருத்த சுற்றத்தாரும் பெண்டிரும் தன்னைத் தொடர்ந்து, சூழ்ந்துவர வீடணன் நெருப்பை விதிப்படி வைத்தான்.
குடத்திலுள்ள நீரை விட, அதிகமாகக் கண்களிலிருந்து பெருகும், குமிழியுடன்கூடிய கண்ணீரை உடையவனான வீடணன் இறுதிச் சடங்கினைச் செய்து முடித்த பிறகு, கணவனைத் தொடர்ந்து உயிர் நீங்கிய மயன் மகளாகிய மண்டோதரியோடு இராவணன் அடங்குமாறு வெம்மை மிகுந்த கனலுக்கு ஆவி ஆக்கினான்.
"கடன்கள் செய்து முடித்து கணவனோடு
உடைந்து போன மயன் மகளோடு உடன்
வெங் கனலுக்கு ஆவி ஆக்கினான்
குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான்" (இராவணன் வதைப் படலம் 3890)
மற்றைய அரக்கர்களுக்கும் வரைமுறைப்படி ஈமம் வகுத்து, நெருப்பை மூட்டி, அவர்கள் உண்ணுதற்குரிய நீரைச் சொரிந்து, 'எத்தகைய தன்மை உடையவர்க்கும் ஈமக்கடன் செய்பவர் இவன் அன்றிப் பிறர் இல்லை' என்று உலகம் புகழப் பெற்று வெற்றி வீரனான இராமனின் திருவடிகளை வணங்கினான்.
"மற்றையோர்க்கும் வரன் முறையால் வகுத்து
உற்ற தீக் கொடுத்து உண்குறு நீர் உகுத்து" (இராவணன் வதைப்படலம் 3891)
விபீடணன் தன் அண்ணன் மனைவி மண்டோதரியுடன், இராவணனுக்கும் இறுதிச் சடங்கைச் செய்தான் என்பதையும், இறந்த அரக்கர்களுக்கும் இறுதிச் சடங்கினைச் செய்தான் என்பதையும் அறிந்து கொள்ளமுடிகிறது.
முடிவுரை
இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கை கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்பதையும், எள்ளும், நீரும் இறைத்து இறந்தவர்களுக்கு நீர்க்கடன் செய்யவேண்டும் என்பதையும், கம்பர் தன் காப்பியத்தில் கூறியுள்ளார். பரசுராமர் தன் தாய், தந்தைக்கு இறுதிச்சடங்கை செய்தார். பரமனுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டதால் வருந்தினான். தசரதனுக்கு சத்ருக்கணனும், சடாயுவுக்கு இராமனும், வாலிக்கு அங்கதனும், இராவணன் மண்டோதரிக்கு, வீடணனும் இறுதிக்கடன் செய்ததை அறிய முடிகிறது. மரணத்திற்குப் பிறகு எள்ளும் தண்ணீரும் இறைக்கத் தன்னினமும், உறவும் வேண்டும் என்று கருதுகின்ற அக்கால வழக்கை கம்பரும் தன் காப்பியத்தில் எடுத்தாண்டுள்ளார். இதிலிருந்து நீர்க்கடன் செய்வது குறித்து கம்பருக்கு இருந்த நம்பிக்கையை அறிந்து கொள்ளமுடிகிறது.
மேற்கோள்கள் (இணையப் பக்கங்கள்
துணை நூற்பட்டியல்
1. இராமன் பன்முகநோக்கில், அ. ச. ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம், சென்னை, 2016.
2. கம்பன் புதிய தேடல், அ.அ. ஞானசந்தரத்தரசு,தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
3. கம்பனில் வாழ்வியல் நெறிகள், இளம்பிறை மணிமாறன், இராஜபாளையம் கம்பன் கழக வெளியீடு, இராஜபாளையம், 2002.
4. சீவகசிந்தாமணி இரண்டாம் தொகுதி, வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2016.
5. சுந்தர காண்டம் புதிய பார்வை, பழ. பழனியப்பன், வானதி பதிப்பகம், சென்னை 2008.
6. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8 வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.