குலதெய்வ வழிபாடுகள் - தோற்றச் சிந்தனைகள்
பா. கார்த்திகா
பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,
தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்னம் மகளிர் கல்லூரி, சிவகாசி.
”ஒருவரது குலம் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்ற வேண்டுமென்றால், “குலதெய்வ வழிபாடு” அவசியமாகும். குலதெய்வ வழிபாடு என்பது அவரவர்களுடைய முன்னோர்கள், பல தலைமுறைகளாய் வழிபட்டு வந்த தெய்வமாகும். குலம் என்றால் குடும்பப் பாரம்பரியம் என்பது பொருளாகும். குறிப்பிட்ட சாதி முறையினருக்குள் அவர்கள் வணங்கும் குலதெய்வ வழிபாட்டு முறைகள் நெருங்கிய தொடர்புடையது. எந்தச் சாதியினராக இருந்தாலும், அவர்கள் தங்கள் வீட்டில் நடக்கும் எந்த நிகழ்வானாலும், குலதெய்வங்களுக்கு முன்னுரிமை வழங்கி, பொங்கல் வைத்தல், காது குத்தல், மொட்டையடித்தல் என்று அன்பின் கொடையாகக் காணிக்கை அளித்துத் தெய்வங்களை வழிபடுகின்றனர். இத்தகைய நம்பிக்கைகள் தோன்றுவதற்கான காரணங்களை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
குலம் - விளக்கம்
"குலம் என்பதற்கு கூட்டம், திரள் என்னும் பொருள் உண்டு” (1) “கோத்திரம்” என்பதை “கோத்து இரம்”எனப் பிரிப்பர். 'இரம்' என்னும் பின்னொட்டு தமிழில் பழமையானதே. கோத்து இருப்பது கோத்திரம்” (2) ஒருவர் தொடக்கமாகக் கோக்கப்பட்டு உள்ள தெடர்ச்சி என்பதாகும். தொடக்கம் யார்? என்பது அறியாது வழிவழியே வந்த அடுத்தடுத்த தலைமுறையின் தொடர்ச்சியாக நீண்டு கொண்டிருப்பதாகும். குலம் என்பதற்கு விக்சனரி அகரமுதலி பின்வரும் விளக்கமளிக்கிறது. “வருக்கம், சுற்றம். துணையாகச் சேரும் கூட்டம், நிரை, ஒருதொகுதியுள் சேர்த்து வழங்கற்குரியது, ஒப்பு” (3) என்பதாகும். இக்கருத்தை அடியொற்றி ஆய்ந்தால் குலம் அல்லது கூட்டம் என்பது உறவு முறையாலும், வம்சாவழியாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவாகும் என அறியலாம். பொதுவாகக் குலம் ஓரளவு பெரியது. குலமொன்றின் உறுப்பினர்கள், பல தலைமுறைகளுக்கு முற்பட்ட ஒரு பொது முன்னோனைக் கொண்டிருப்பார்கள். இலக்கியப் பதிவுகளில் குலம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
“நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு” (4)
குலம் சிறக்க பணிவு வேண்டும் என்பது திருவள்ளவர் கருத்தாகும்.
“சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும் என் பார்” (5)
மாசற்ற குலப்பெருமையுடன் வாழ்வோம் என்று கருதுவோர் வஞ்சனையுடன் தகுதியில்லாதது செய்யமாட்டார் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” (6)
திருமூலர் திருமந்திரத்தில் ஒன்றே குலம் என்று பேதமற்ற சமுதாயம் குறித்துப் பேசியுள்ளார்.
“குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை” (7)
திருவாய்மொழியைப் பாடிய நம்மாழ்வார் குலம் என்று சாதிக் குழுக்களைக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய அடிப்படையில், குலம் என்பது வழிவழி வந்துள்ள குழுக்களைக் குறித்தமை அறியப்படுகிறது. அவ்வகையில், “ஒருவன் குலதெய்வ வழிபாட்டினைச் செய்தால் அவனது ஏழேழு தலைமுறைகளைக் காக்கும் என்பது நம்பிக்கையாகும். குலதெய்வ வழிபாட்டை ஒழுங்காக செய்து கொண்டு வருகிறவர்களை எந்தக் கோள்களும் ஒன்றும் செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது” (8) என்பர்.
வழிபாட்டின் தொடக்கம் - இயற்கை வழிபாடுகள்
மனிதன் இயற்கையோடு இணைந்த வாழ்வு முறையை மேற்கொள்ளும் போது, இயற்கையின் பல்வேறு ஆற்றல்களையும், அதீத தன்மைகளையும் கண்டு அஞ்சியும், அதன் சீற்றத்திற்கு ஆளாகாமல் இருக்கவும் இயற்கையைச் சக்திகளான நிலம், நீர், காற்று, ஆகாயம், இடி, மழை, மின்னல், சூரியன், சந்திரன் போன்றவற்றை வழிபடலானான். இயற்கையையே இறைவனாக நினைத்து வழிபட்டவர்கள் நம் முன்னோர்கள். இதற்குச் சிலப்பதிகாரம் சான்று பகர்கின்றது.
“ஞாயிறு போற்றுதும்... திங்களைப் போற்றுதும்.... மாமழைப் போற்றுதும்...” (9)
என்ற பாடல்களின் வழி அறிய முடிகிறது.
“இயற்கை வழிபாட்டில் முக்கியமான ஒன்றுதான் ‘விருட்ச வழிபாடு’ என்னும் மர வழிபாடு. இதற்கு ஆதாரம் தரும் விதமாக ஆலயம்தோறும், ஒவ்வொரு தல விருட்சம் இருப்பதை இப்போதும் காண முடியும். அது மட்டுமின்றி 27 நட்சத்திரங்களுக்கும் விருட்சங்கள் இருக்கின்றன. அந்தந்த நட்சத்திரத்திற்கு உரிய மரத்தை வழிபாடு செய்து வந்தால், நினைத்த பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கையாக இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆதிகாலம் தொடங்கி இன்றுவரை தன் பெரும்பாலான தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள மனித இனம் மரங்களையே நம்பியிருக்கிறது. தொடக்கத்தில் ஓடும் விலங்குகளை வேட்டையாட சிரமப்பட்ட மனித இனம், எந்த எதிர்ப்பையும் வெளிப்படுத்தாத மரத்திலிருந்து தன் உணவு, உடை, உறையுளைப் பெற முடிந்தது. இயற்கை நிகழ்வுகளான இடி, மின்னல், மழை, நெருப்பு போன்றவற்றை பயத்தின் காரணமாக வழிபட்ட அவர்கள், அவற்றிலிருந்து தப்பிக்க மரத்தையே நாடியுள்ளனர். இந்த நன்றியுணர்வே பின் நாளில் மரத்தை வழிபட அவர்களைத் தூண்டியது எனலாம். ”10 உலகம் முழுவதும் “மர வழிபாடு” இருந்ததற்கு தொல்லியல் சான்றுகள் உள்ளன. “பண்டைய பாரசீகம், எகிப்தில் பேரீச்சை மரங்களும், ஐரோப்பாவில் ஓக், ஆலிவ் மரங்களும், ஆப்பிரிக்காவில் பவோபாப் மரங்களும் வழிபடப்பட்டன என்று அறியப்படுகின்றது.
இதன் நீட்சியாக விலங்கு, செடி, மரங்களை வணங்கச் செய்தது. இந்த நம்பிக்கைகள்தான், ஆற்றங்கரை ஓரங்களில் குடியமர்த்தல், பயிரிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடவும் தூண்டியது. இந்நம்பிக்கையுடையவர்கள் குலக்குரியுடைய மக்கள் (Vote MiStic People ) என்று மானுடவியலாளர்கள் கூறுகிறார்கள்" (11) தமிழகத்தில் மிகப் பரவலாக குலக்குறி வழிபாடு காணப்படுகிறது. தமிழகத்தில் வாழும் பழங்குடிகளில் புலையர், வளியர், குன்னுவர், தோடர் முதலியவர்களிடத்திலும் பள்ளர், பறையர், நாயக்கர், கவுண்டர் இனத்தவரிடதிலும் குலக்குறி வழிபாட்டின் எச்சங்கள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்” (12)
அவ்வடிப்படையில் பண்டைய தொல்காப்பியர் காலச் சூழலில், ஐந்து நில மக்கள் தம் வாழ்வியலுக்கு ஏற்ப இயற்கையோடு இறைவழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
”மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” (13)
ஐந்திணைகளாகப் பகுக்கப்பட்டிருந்த பண்டைத் தமிழகத்தில் குறிஞ்சி என்ற மலைக்கடவுளாக ‘சேயோன்’ என்ற முருகனும், முல்லை என்னும் காட்டின் தெய்வமாக ‘மாயோன்’ என்ற திருமாலும், மருதம் என்னும் வயலுக்கு ‘வேந்தன்’ என்றழைக்கப்படும் இந்திரனும், நெய்தல் என்னும் கடலுக்கு வருணன் என்ற தெய்வமாக நானிலக் கடவுளைத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். பாலை என்ற மணல் சார்ந்த நிலத்திற்குக் கொற்றவை என்று அழைக்கப்பட்ட காளி தெய்வமாக வணங்கப்பட்டுள்ளாள். இத்தகைய பண்டைய வழிபாட்டுமுறைக்கான காரணத்தை பின்வருமாறும் கூறுகிறார் ஆய்வாளர்,
“குறிஞ்சி நிலத்து மக்கள் தம் தெய்வத்தைத் தீயின் கூறாகக் கொண்டதால் சேந்தன் (சிவந்தவன்) சேயோன் என்று பெயரிட்டு அழைத்தனர். முல்லைநிலத்து மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக முதற்கண் மழையே இருந்ததால் முகிலையே தெய்வமாகக் கொண்டு ‘மால்’ என்று தம் தெய்வத்திற்குப் பெயரிட்டு வழிபட்டனர். மருத நிலத்து மக்கள் இவ்வுலகில் தீவினையை விட்டு நல்வினை செய்து வாழும் கொள்கை கொண்டோராக, இம்மையில் வேந்தனாக அறவாழ்க்கை நடத்தினால், மறுமையில் தேவர் கோனாய்ப் பிறப்பான் என்ற கொள்கை கொண்டு தேவர்கோனைத் தேவர் ‘வேந்தன்’ என்றனர். மேலும், உழவுத் தொழிலுக்கு இன்றியமையாத மழையானது விண்ணிலிருந்து பொழிகிறது. இவ்விண்ணுலக வேந்தனே ‘இந்திரன்’ ஆயினான். நெய்தல் நிலத்து மக்கள் கடலை நம்பியே வாழ்க்கை நடத்தியதால் தம் தெய்வத்தைக் கடல் தெய்வமாகவே கொண்டு அதற்கு ‘வாரணன்’ அல்லது ‘வருணன்’ என்று பெயரிட்டு வணங்கினர். பாலை நிலத்து மக்களின் வாழ்வு வறட்சியும், போர்க்களங்களும், பிணங்களும், பிணந்திண்ணிப் பேய்களும் கொண்டதால் பேய்களுக்குத் தலைவியாகிய ‘காளி’யை தெய்வமாகக் கொண்டனர். இத்தகைய ஐந்நிலத்து மக்களும் தம் வாழ்வியலோடு ஒன்றி வந்த இயற்கையைப் பொருத்தி தெய்வத்தைத் தோற்றுவித்தனர்” (14)
மேற்கூறிய கருத்தையே தமிழர் மதம் நூலில் காணலாம். மேலும், பண்டைய தமிழரின் தெய்வ வழிபாட்டு முறைகளுக்குக் காரணமாக, அச்சம், முற்காப்பு, நன்றியறிவு, பாராட்டு, அன்பு, கருதுகோள், அறிவு வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படைகள் என்று அந்நூல் கூறுகின்றது. சங்கஇலக்கியத்தில் மரவழிபாடுகள் குறித்த செய்திகளில் அச்சம் பற்றிய காரணம் இடம் பெற்றுள்ளது.
“எம்மூர் வாயில் ஒண்டுறைத் தடைஇய
கடவுள் முதுமரத்து...” (15)
நற்றிணைப் பாடல் கடவுள் உறையும் முதுமரம் என்றே குறிப்பிடுகின்றது.
“மன்ற மராஅத்த பே எமூதிர் கடவுள்
கொடி யோர்த் தெறூஉ மென்ப” (16)
குறுந்தொகைப் பாடலில், ஊர் பொது மன்றத்தில் இருக்கும் மரத்தில் வாழும் தெய்வம் தீயவரை அழிக்கும் என மக்கள் நம்பியதாகப் பதிவு செய்துள்ளது.
பேய் பற்றிய நம்பிக்கை
பழங்காலத்தில் வாழ்ந்த குழுக்களிடையே பேய்கள் பற்றிய நம்பிக்கை இருந்திருக்கிறது.
“ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோன்
பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்” (17)
போர்க்களத்தில் காயம் ஏற்பட்டுக் கிடக்கும் வீரன் அருகில் பேய்கள் காவல் செய்ததாக தொல்காப்பியம் பதிவு செய்துள்ளது. இத்தகையப் பேய் பற்றிய நம்பிக்கைகளை ஆவியுலகக் கோட்பாடு என்று விளக்குவர். “ஆவியுலகக் கோட்பாடு என்பது ஆவிகளின் மேல் மனிதன் நம்பிக்கை வைத்து, அது உயிருள்ள பொருட்களின் மேலும் சடப்பொருட்களின் மேலும் ஆவி அல்லது ஆன்மா உறையும் என்ற நம்பிக்கையில் தோன்றியது. இறந்த முன்னோர்களைத் தெய்வமாக வழிபடுதல், சிறு தெய்வ வழிபாடு, இறந்தோர் கல்லறை வழிபாடு, இறந்தவருக்கு உணவு படைத்தல், மிருகங்களை வழிபடுதல், ஆவியின் எழுப்புதல் கூட்டங்கள், பொட்டு வைத்தல், பேயாட்டம், சாமியாடுதல், கிணறு வெட்டும் போது பலிகொடுத்தல், தச்சு கழித்தல், அணை அல்லது பெரிய கட்டிடங்கள் கட்டும் போது பலி கொடுத்தல் போன்ற பல சடங்குகளும் அவை சார்ந்த நம்பிக்கைகளும் ஆவியுலகக் கோட்பாட்டிலிருந்து தோன்றியதாகும்” (18)
இந்த ஆவிகளும் ஆன்மாவும் மனிதர்கள் மற்றும் விலங்களின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்றும் சுற்றியுள்ள உலகப் பொருட்களின் மீதும் இயற்கை நிகழ்ச்சிகளின் மீதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும் ஆதிகால மனிதன் நம்பினான். இந்த ஆவியுலகக் கோட்பாட்டின் மூன்று முக்கிய அம்சங்களை லீச் (Leach) என்பவர் விளக்குகின்றார். இறந்த அல்லது உயிரோடிருக்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் ஆவி அல்லது ஆன்மாவின் மீது நம்பிக்கை கொண்டு வழிபடுதல். பௌதீக பொருட்களின் மீது உறைகின்ற ஆவிகளின் மீது நம்பிக்கைக் கொள்ளல். இயற்கை பொருட்களின் மீது வாழும் ஆவிகளின் மீது நம்பிக்கை கொண்டு வழிபடுதல். இந்த ஆவிகள் நல்லவையாகவோ அல்லது கெட்டவையாகவோ இருக்கலாம். நல்ல ஆவிகளும் ஆன்மாக்களும் அவர்களுக்கு துனைபுரியும் என்றும், தீய ஆவிகளும் ஆன்மாக்களும் தீய விளைவுகளைத் தருமென்றும் நம்பினான். இவற்றின் அடிப்படையில் பல நம்பிக்கைகள் உருவாகி இன்றளவும் மக்கள் மத்தியில் உள்ளது. கூடு விட்டு கூடு பாய்தல், புனித பொருள் வழிபாடு (Fetishism) , குல மரபுக்குறி முறைகள் (Totemion) போன்றவை இவற்றிலிருந்து உருவான நம்பிக்கைகள் ஆகும். பின்நாட்களில் இயற்கை சக்திகளுக்கும் பொருட்களுக்கும் மனித உருவம் அளிக்கப்பட்டது. வல்லமைமிக்க தெய்வங்கள் உருவாகின. இந்த தெய்வங்களுக்கு தெய்வீக ஆவி, புனித ஆவி (Holy Spirit) உள்ளதாக நம்பப்படுகின்றது" (19)
இறந்தவனது ஆன்மாவைச் சில சடங்குகள் மூலம் ஓர் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைக்கலாம். அங்குள்ள ஒரு பொருளில் நுழைந்து கொள்ளச் செய்யலாம் என்ற நம்பிக்கை உலகமெங்கும் பண்டைய மக்களின் பண்பாட்டில் காணப்படுகிறது என்பர்.
“தீயும், இடியும் போன்ற பூத இயற்கைக்கும், பாம்புபோலும் நச்சுயிரிக்கும், இறந்தோராவிகட்கும், பேய்கட்கும் அஞ்சிய அச்சத்தால் தெய்வ வணக்கம் முதற்கண்ணாகத் தோன்றியது. கொள்ளை நோய், பஞ்சம், இயற்கை சீற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்குமாக முற்காப்பு அடிப்படையில் அச்சம் தோன்றியது. இவை தெய்வங்களின் சீற்றத்தால் நேர்பவையென எண்ணி அச்சம் கொண்டனர். மேலும், உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத கதிரவன், மதி, மரம், ஆ, இன்ன பிறவற்றையும் தெய்வமாக நன்றியறிவின் பொருட்டு வணங்கினான். மறவனையும், மழை வரவழைத்தும், பழுக்கக் காய்ச்சிய பொன்னைக் கையிலேந்தியும், தீயோரைச் சாவித்தும், சினத்தால் ஊரினை எரித்தும், உடன்கட்டை ஏறியும், கடுங்கற்பைக் காத்தப் பத்தினிப் பெண்டிற்கும்; கல்நட்டு விழாவெடுத்தது பாராட்டே ஆகும். இவ்வடிப்படையிலும் தெய்வம் தோற்றம் பெற்றது. அரசன் இறந்த பின்னர் அன்பு மிகுதியால் அவனை வழிபட்டதும், கண்ணால் காணும் இயற்கைக் கூறுகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் தெய்வங்கள் கருதுகோளின் அடிப்படையிலும் தோற்றம் பெற்றன. அதுமட்டுமன்று அறிவு வளர்ச்சி பெற்ற பின்னர் மறுமையும், கடவுள் உண்மையும் கண்டு நம்பிக்கையின் அடிப்படையிலும் ‘தெய்வம்’ தோன்றிற்று” (20) என்று தேவநேயப்பாவாணர் குறிப்பிடுகிறார்.
நடுகல் வழிபாட்டு முறை
பண்டைய காலத்துப் போர்மரபில் வழிபாட்டுச் சடங்குகள் நிகழ்ந்துள்ளதைத் தொல்காப்பியம் உறுதி செய்கின்றது. இறந்த வீரனுக்கு நடுகல் நட்டு அபிஷேக, ஆராதனை செய்து பிடித்தமான உணவுப் பொருட்களைப் படையிலிட்டு வழிபட்டுள்ளனர். போரில் உயிர் நீத்த வீரனுக்கு, அவனுடைய பெயரையும் வீரப்புகழையும் கல்லில் பொறித்து அவன் நினைவாகப் பலரும் வழிபடுமாறு கல் நடுவதை நடுகல் என்பர். தொல்காப்பியர் நடுகல் எடுத்தலின் நிலைகளை வெட்சித் திணையில் குறிப்பிட்டுள்ளார்.
“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல் என்று
இருமூன்று வகையிற் கல்லொடு புணர” (21)
என்ற சான்றுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். சங்க இலக்கியங்களிலும் இத்தகு நடுகல் வழிபாட்டு முறையைக் காண முடிகின்றது. குறிப்பாக, குறிஞ்சித் திணையில், மலையும் மலை சார்ந்த வாழ்வில் ஆநிரை கவர்தல், மீட்டலில் ஈடுபட்டு, வீரமரணம் அடைந்தவர்களுக்கே ‘நடுகல்’ நட்டு வழிவழியாக வழிபாடு நிகழ்ந்திருக்கின்றது. புறநானூற்றில் நடுகல் வழிபாடு குறிப்பிடப்பட்டுள்ளது. கல்நடுதல், நன்னீராட்டுதல், பீலி சூட்டுதல், பலியிடுதல், நெய்விளக்கேற்றுதல், மது படைத்தல், மாலை சூட்டுதல், வணங்குதல் ஆகிய வழிபாட்டு முறை எடுத்துக்காட்டப்படுதல் கவனிக்கத்தக்கது. நடுகல் அமைக்கும் போது இறந்தவர்கள் பாவித்தப் பொருட்களை இட்டுப் புதைத்தலையும் புறநானூறு பதிவு செய்துள்ளது.
“ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை,
ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப்
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்,
பல்ஆன் கோவலர் படலை சூட்டக்,
கல்ஆ யினையே-கடுமான் தோன்றல்!
வான்ஏறு புரையும்நின் தாள்நிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வம் அன்றியும் ! விரிதார்க்
கடும்பகட்டு யானை வேந்தர்
ஒடுங்க வென்றியும், நின்னொடு செலவே” (22)
குழு மக்களின் தலைவன் போரில் மரணம் அடைந்தால் அவனுக்கு நடுகல் நட்டு பனம்பூமாலை அணிவித்து வழிபட்டதாக புறநானூற்றுப் பதிவு உள்ளது.
“பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி,
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து
இனிநட் டனரே! கல்லும்; கன்றொடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே?” (23)
மேற்கண்ட பாடலில் படையலாக கள் வைத்து மயிற்பீலிசூட்டி வழிபட்டதாக செய்தி உள்ளது.
“இல்லா கியரோ,காலை மாலை!
அல்லா கியர், யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி, நார்அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-
கோடு உயர் பிறங்குமலை கெழீஇய
நாடு உடன் கொடுப்புவும் கொள்ளா தோனே?” (24)
அதிமானுக்கு நடப்பட்ட நடுகல்லுக்கு சிறுகலத்தில் கள் வைத்து மயிற்பீலி சூட்டி வழிபட்டதாக பதிவு உள்ளது.
“இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி,
நன்னீர் ஆட்டி, நெய்ந்நறைக் கொளீஇய,
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்,
அருமுனை இருக்கைத்து ஆயினும், வரிமிடற்று
அரவுஉறை புற்றத்து அற்றே, நாளும்
புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை,
உரைசால், நெடுந்தகை ஓம்பும் ஊரே” (25)
மேற்கண்ட பாடலில் கள், நீராட்டுதல்,உணவுப் படையலிடுதல், புகை தூபம் காட்டுதல் போன்றன கூறப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குக் கல்லெடுத்து வந்து வழிபட்ட செய்தியைக் வஞ்சிக் காண்டத்தில் காண முடிகிறது.
சதிக்கல்
தன் கணவனுடன் உயிர் விட்ட மகளிரை போற்றும் வகையில் நடுகற்கள் அமைக்கப்பட்டன. கணவன் இறந்த பின் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து விட்டு, தானும் உயிர்விட்டு நடுக்கல்லாய் மாறியதும், கணவன் உயிர்விட்ட உடனே தானும் தீ பாய்ந்து உயிர் விட்டதும் பழங்காலத்தில் நிகழ்ந்துள்ளது. இத்தகையப் பெண்களுக்கு அவர்களின் உறவினர்கள் நடுகல் எடுத்து வணங்கியது பல சங்கப்பாடல்களில் சுட்டப்படுகின்றது. இவை சதிக்கல் என்றும் வழங்கப்படுகின்றது.
போரில் இறந்தவருக்கு நினைவு கற்கள் எடுக்காவிட்டால். தன் வாரிசுகளுக்கு துன்பம் நேரிடும் எனப் பயந்தனர். எனவே, நீர்நிலைகள், மரத்தடி, இறந்த இடத்தில் நினைவுக்கல் எழுப்பினர். தற்போதும் ஒரு சிலர் எழுப்புகின்றனர்.
”மனிதர்களுக்கு மட்டுமில்லாது விலங்குகளுக்கும் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. தன்னுடன் போரில் இறந்த நாய், தன் உயிரைக் காக்க இறந்த குதிரை, நாய், யானை, கோழி போன்ற விலங்குகளுக்கு நடுகல் பல இடங்களில் எழுப்பட்டுள்ளதை நன்றி உணர்வின் அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம்” (26 )
குலதெய்வம் வழிபாட்டு வரலாறு
“குலதெய்வம் என்பது நமது முன்னோர்களே தெய்வமாக மாறி புண்ணிய ஆத்மாக்களாக அறியப்படுகின்றனர். அந்தப் புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினைச் சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாகப் பேணிக் காக்கும் வல்லமை படைத்தவர்கள் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகின்றது. எனவேதான், தங்கள் குலத்தைக் காக்கும் தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை என்பர். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குல தெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவேக் காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிடமுடியாது” (27) என்பர்.
நம் முன்னோர்கள் வழிபட்ட வழிபாடுதான் குலம் காக்கும் வழிபாடாகும். தந்தை வழிப் பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம்தான் நம் குல தெய்வமாகும். இத்தகையக் குலதெய்வ வழிபாடு குறித்த ஆய்வுகள் பெரும்பாலும் இன வரைவியல், மானுடவியல், இருத்தலியல், குறியியல் போன்ற கோட்பாடுகளின் வழி நாட்டார் வழக்காற்றியலை விளக்குகின்றது எனலாம். நாட்டார் தெய்வங்கள் பெரும்பாலானவை கொலையில் உதித்த தெய்வங்கள் என்பர் ஆய்வறிஞர்கள். குறிப்பிட்ட தெய்வம் கொலையுண்ட முறைக்கும் அதற்கு உயிர்பலி கொடுக்கும் முறைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு என்பர்.
இனக்குழு சமுதாயத்தில் தன்னுடைய சந்ததிகள் பெருகுவதற்கு பெண்ணிடம் மிகை சக்தி இருப்பதை உணர்ந்து, பெண்ணைத் தெய்வமாக வழிபட ஆரம்பித்துள்ளனர். இதன் நீட்சியாக திராவிட பகுதிகளில் அம்மன் வழிபாட்டைக் கூறலாம். வீட்டு தெய்வம், குல தெய்வம், கிராம தேவதை அல்லது ஊர்க்காக்கும் தெய்வம் என்றவாறு வகைப்படுத்தி வழிபட்டு வணங்கியுள்ளனர். அதே போல ஆண் தெய்வங்களான ஐயனார், காத்தவராயன், மதுரைவீரன், சுடலைமாடன், கருப்பசாமி போன்ற தெய்வங்களை ஊருக்கு வெளியே வைத்து காவல் காக்கும் தெய்வங்களாக வணங்குகின்றனர்.
முடிவுரை
குலதெய்வ வழிபாட்டில் இறந்து போன தனது முன்னோர்களையும், தாய், தந்தையரையும் வழிபடத் தொடங்கினர். அவர்களை அடக்கம் செய்த இடத்தில் கல்லை நட்டும் வணங்கி வந்தனர். பழங்கதை ஒன்றில் ஒன்பது அக்கா, தங்கைகள் இறந்த பின் அவர்கள் வாழ்ந்த ஒவ்வொரு ஊரிலும் கிராம தேவதைகளாக இருந்து ஊரைக் காக்கின்றனர். இந்தத் தொன்மக் கதைகளின் வழி அம்மன் வழிபாட்டில் சாதி, சாதியக்கிளை, உறவுமுறை, குலம் ஆகியவற்றை மிக எளிதில் இனங்காணமுடியும்.
அடிக்குறிப்புகள்
1. கழகத்தமிழ் அகராதி, ப.410
2.
தமிழ் விக்கிப்பீடியா தளத்தில் சூத்திரம் கட்டுரை
2.
விக்சனரி அகரமுதலி தளத்தில் குலம் எனும் சொல்லுக்கான பொருள்
3.திருக்குறள். 960
4. திருக்குறள்.956
5. திருமூலர், திருமந்திரம், பாடல்.2104.
6. திருவாய்மொழி, பாசுரம்.3087.
7.
விகடகவி இணையதளத்தில் ஆரூர் சுந்தரசேகர், குலம் தழைக்க, குலதெய்வ வழிபாடு (செப்டம்பர் 21 , 2019)
8.மேலது.
9. சிலம்பதிகாரம், கடவுள் வாழ்த்து 1:1:7.
10.
சாந்திப்பிரியா பக்கங்கள் எனும் வலைத்தளத்தில் விருஷ வழிபாடு கட்டுரை, ப.2
11.பக்தவச்சல பாரதி, இலக்கிய மானிடவியல்,பக்175-176.
12.மேலது.
13.தொல்காப்பியம், அகத்திணையியல்,நூற்பா. 5.
14. தேவநேயப்பாவாணர், தமிழர் மதம்,ப.78
15. நற்றிணை.83
16. குறுந்தொகை. 87 1-2
17. தொல்காப்பியம்,புறத்திணையியல்,நூற்பா.77.
18.
தமிழ் விக்கிப்பீடியா தளத்தில் ஆவியுலகக்_கோட்பாடு.
19.மேலது.
20. தேவநேயப்பாவாணர், முந்நூல், ப.79
21. தொல்காப்பியம், புறத்திணையியல்,நூற்பா.5
22. புறநானூறு, பாடல்.265
23. மேலது, பாடல்.264
24. மேலது, பாடல்.232
25. மேலது, பாடல்.329
26.
கீற்று இணையதளத்தில் ஆ. நந்திவர்மன் எழுதிய நடுகல் கூறும் வாழ்வியல் நெறிகள், (ஜனவரி 4, 2013)
27.
விகடகவி இணையதளத்தில் ஆரூர் சுந்தரசேகர், குலம் தழைக்க, குலதெய்வ வழிபாடு (செப்டம்பர் 21 , 2019)
துணைநூற்பட்டியல்
1. சோமசுந்தரனார்.பொ.வே (உ.ஆ), குறுந்தொகை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 2007.
2. நாராயணசாமி ஐயா், பின்னத்தூர்.அ. (உ.ஆ), நற்றிணை நானூறு, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1952.
3. துரைசாமிப்பிள்ளை,ஔவை.சு. (உ.ஆ), புறநானூறு பகுதி II, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1947.
4. சாமிநாதையா்.உ.வே.சா (உ.ஆ),இளங்கோவடிகள் அருளிச்செய்த சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரையும்,கபீர் அச்சகம், சென்னை, 1968.
5. சுப்பிரமணியன்.ச.வே.,தொல்காப்பியம், மணிவாசகா் பதிப்பகம், சென்னை, எட்டாம் பதிப்பு, 2006.
6. பரிமேலழகா்.(உ.ஆ) ,திருக்குறள், பழனியப்பா பிரதா்ஸ், சென்னை, 1962.
7. ஞா.மாணிக்கவாசகன், திருமூலர் திருமந்திரம் ( மூலமும் விளக்க உரையும்), உமா பதிப்பகம்,சென்னை,2001.
8. பி.ஸ்ரீ.ஆச்சார்யா, நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி,அல்லயன்ஸ் பதிப்பகம்,சென்னை,இரண்டாம் பதிப்பு, 2013.
9. தேவநேயப் பாவாணர், ஞா., தமிழர் மதம், பூம்புகார் பதிப்பகம், சென்னை.2017.
10. பக்தவச்சல பாரதி,இலக்கிய மானிடவியல்,அடையாளம் பதிப்பகம்,திருச்சி,2014.
11. கழகத் தமிழ் அகராதி,தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,திருநெல்வேலி, 1997
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.