சங்கத் தமிழர்களின் மாமிச வெறுப்பும் மது விலக்கும்
முனைவர் சுப. வேல்முருகன்
இளநிலை ஆராய்ச்சியாளர்,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,
பெரும்பாக்கம், சென்னை – 100.
முன்னுரை
சங்ககாலத் தமிழ் இலக்கியமாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்க இலக்கியங்களில் மதுவிலக்கு என்பதும் மாமிசத்தை வெறுத்தல் என்பதும் கண்டிக்கப்படாத ஒன்றாகும். சமண பௌத்த மதங்கள் தலையெடுத்த பிற்காலத்தில்தான் மாமிசவெறுப்பும், மதுவிலக்கும் தமிழ் இலக்கியங்களில் புகுந்தன. முதன் முதலில் திருக்குறளில்தான் மாமிசம் உண்ணுவது பாவம் என்றும், அது உயிர்க்கொலைக்கு அடிப்படை வித்து என்றும் அறிவுறுத்தப்பட்டன. எனவே, திருக்குறளுக்கு முற்பட்ட எந்த இலக்கியங்களிலும் மாமிசமும் மதுவும் விலக்கப்படவும் இல்லை; வெறுக்கப்படவும் இல்லை என்பது அறிஞர்களின் பொதுவான கருத்தாகும். மாமிசமும் மதுவும் வெறுக்கப்படாத அச்சூழலிலும் தமிழர்கள் மரக்கறியை விரும்பி உண்டதையும், புலவர் பெருமக்கள் மது உண்பதை நகைத்ததையும் விளக்கும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.
உணவு உற்பத்தி
சங்ககால மக்களின் உணவுப் பழக்க வழக்கங்கங்கள் இயற்கையோடு இயைந்ததாகவே அமைந்திருந்தைச் சங்கப்பாடல்கள் வாயிலாகவே அறிகின்றோம். சங்ககாலச் சமுதாயத்தில் வேட்டையாடி உணவு சேகரித்து அதனைப் பகிர்ந்து உண்டுள்ளனர். அவ்வாறு, வேட்டையாடி உணவு சேகரிக்கச் செல்லும் போது, கொம்பினை (இசைக்கருவி) ஊதிக்கொண்டு, வேட்டை நாயுடன் செல்வர் என்பதனை,
“கோடு துவையாக் கோள்வாய் நாயொடு
காடுதேர் நசசைஇய வயமான் வேட்டு
வயவர் மகளிர் என்றி ஆயின்
குறவர் மகளிரேம் குன்றுகெழு கொடிச்சியேம்
சேணோன் இழைத்த நெடுங்கால் கழுதில்
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல்லகத் ததுஎம் ஊரே…” (நற்றிணை, 276:1-7)
என்னும் நற்றிணைப் பாடலடிகளின் வாயிலாக அறியலாம்.வேட்டையாடுதல் குறிஞ்சி நில மக்களுக்கே உரியதென்றாலும் பிற நில மக்களும் தங்களுடைய நிலத்திற்கு ஏற்ப உணவுகளை உற்பத்தி செய்தும் சேகரித்தும் வந்துள்ளனர் என்பதையும் அறியமுடிகிறது.
நெல்லரிசிச்சோறு
நெல்லரிசியைச் சோறாக சமைத்தும், குழம்பு வகைகளை ஆக்கியும் நாகரிகமான உணவு வகைகளைச் சமைத்து உண்ட பெருமைக்குரியவர்கள் தமிழர்கள் என்பது அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்டதொன்றாகும். தமிழர்களின் உணவில் நெல்லரிசி உணவே தலைசிறந்ததாக அமைந்திருக்கிறது. இதனைக் கீழ்வரும் சங்கப் பாடல்கள் உணர்த்துகிறது. தலைவி இல்லறம் நிகழ்த்தும் சிறப்பினை நேரில் கண்டறிந்து வந்த செவிலித்தாய் நற்றாய்க்கு உரைப்பதாக அமைந்த அப்பாடல்,
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே” (குறுந்தொகை, பா. 167)
நம் மகள், நன்றாகக் காய்ச்சிய பாலை உறை ஊற்றிப் பெற்ற முற்றிய தயிரைப் பிசைந்து, புளிப்பு சுவையுடைய குழம்பினைச் சமைத்து தன் கணவனுக்கு பறிமாறினாள். அந்தக் குழம்பு மிகவும் நன்றாயிருக்கிறது என்று சொல்லிக் கொண்டு அவளது கணவன் அதைச் சுவைத்துச் சாப்பிட்டான் என்கிறாள்.
மற்றுமொரு நற்றிணைப்பாடல், தலைவனின் சிறப்பினைக் கூறுமிடத்து அரிசியால் சமைத்த சோற்றுத்திரளை விரும்பி உண்ணும் கையை உடையவன் எனக் குறிப்படுகிறது. இதனை,
“புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு
கவர் படு கையை… … … … … ” (நற்றிணை, பா. 60:5-6)
என்னும் பாடலடி தெளிவுப்படுத்துகிறது. இதன் மூலம் நீர்வளமும் நிலவளமும் பொருந்திய நிலத்தில் வாழும் செல்வமுள்ளவர்களின் சிறந்த உணவாக நெற்சோறு உணவு இருந்துள்ளதை உணரமுடிகிறது.
தானியச்சோறு - கூழ்
அரிசிக்கு அடுத்தப்படியாக தமிழர்கள் வரகு, சாமை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவற்றுள் கஞ்சியும், கூழும், களியும் செய்து சாப்பிட்டுள்ளனர். உளுந்து, எள் போன்ற தானிய வகைகளைப் பயன்படுத்தித் தின்பண்டங்கள் செய்துள்ளனர் என்பதையும் சங்கப் பாடல்கள் காட்டுகிறது. வரகு, சாமை, கம்பு, சோளம், கேழ்வரகு, உளுந்து, எள் போன்ற தானியங்களை மக்கள் விருப்பமாக உண்டனர் என்பதை,
“புரவுக் கருஅன்ன புன்புல வரகின்
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி…” (புறநானூறு, பா. 34: 9-10)
என்ற பாடல், புறாவின் கருமுட்டை போன்ற புன்மையான நிலத்தில் விளைந்த வரகரிசியைப் பாலிட்டுச் சமைத்த உணவை தேனுடன் கலந்துண்டனர் என்கின்றது.
மேலும்,
“கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண் தயிர்க் கொளீஇ
ஆய்மகள் அட்ட அம் புளி மிதவை” (புறநானூறு, பா. 215:1-4)
என்ற பாடல், வரகுக்கதிரை குற்றிச் சமைத்த சோற்றை வேளைப்பூவொடும் தயிரோடும் சேர்த்து உண்டனர் என்கிறது. உழவர்களின் இயற்கையான உணவு இவைதான் என்பதை,
“நெடுங்குரற் பூளைப் பூவி னன்ன
குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப்
புகரிணர் வேங்கை வீகண் டன்ன
அவரை வான் புழுக் கட்டிப் பயில்வுற்று
இன்சுவை மூரற் பெறுகுவிர்” (பெரும்பாணாற்றுப்படை, வரி. 192 -196)
என்ற பெரும்பாணாற்றுப்படை வரிகளும் குறிப்பிடுகின்றன. மேலும், புன்செய்பயிர் செய்யும் உழவர்கள், வரகரிசிச் சோற்றை அவரைப் பருப்புடன் கலந்து உண்டு வந்தனர் என்பதையும் அதனை விருந்தினர்க்குக் கொடுத்து மகிழ்ந்தனர் என்பதையும் புலப்படுத்துகிறது.
ஆயர் மக்கள் செம்மறியாட்டின் பாலில் இருந்து கிடைத்த தயிருடன் குற்றிய வரகு அரிசியையும், ஈசலையும் சேர்த்து சமைத்து உண்டனர் என்றும், இனிய புளிச்சோற்றின் மேலே பசுவின் வெண்ணையை போட்டு உருகும்படி செய்து உண்டனர் என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கொழியலரிசியினை களியாகத் துழாவி செய்யப்பட்ட சூடான கூழினை அகன்ற வாயை உடைய பிழாவிலே இட்டு, ஆற்றி அதன் பிறகு உண்டனர் என்பன போன்ற செய்திளை அறியமுடிகிறது. இதனை,
“அவையா அரிசி அம் களி துழவை
மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூ புறம்நல் அடை அளஈ தேம் பட
எல்லை உம் இரவு உம் இரு முறை கழிப்பி
வல் வாய் சாடியின் வழைச்சு அற விளைந்த
வெநீர் அரியல் விரல் அலைநறு பிழி
தண் மீன் சூட்டொடு தளர்தல் உம் பெறுகுவிர்” (பெரும்பாணாற்றுப்படை, வரி.275-282)
என்னும் வரிகள் தெளிவுபடுத்துகின்றன.
நிலமுள்ள உழவர்கள் வேளாளர் என்னும் உயர்ந்த வகுப்பினராகக் கருதப்பட்டனர். அவர்களின் இல்லத்திற்குச் சென்றால் கிடைக்கும் உணவுகள் இத்தகையன என்பதனை,
“தண்டலை உழவர் தனிமனைச் சேப்பின்
தாழ்கோட் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம்
வீழி இல் தாழைக் குழவுத் தீம் நீர்க்
கவைமுலை இரும்பிடிக் கவுணமருப் பேய்க்கும்
குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழம்
திரள் அறைப் பெண்ணை நுங்கொடு பிறவும்
தீம்பல்தாரம் முனையிற் சேம்பின்
முளைப்புறம் முதிர் கிழங்கு ஆர்குவிர்…” (பெரும்பாணாற்றுப்படை, வரி. 355-362)
என்னும் வரிகள், இனிப்பான சுளைகள் நிறைந்த பெரிய பலாப்பழம் கிடைக்கும்; நல்ல இன்சுவை இளநீர் கிடைக்கும்; யானைக் கொம்புகளைப் போன்ற தோற்றத்துடன் வளைந்து, குலையிலே பழுத்திருக்கும் வாழைக்கனிகள் கிடைக்கும்; நல்ல பனைநுங்கு கிடைக்கும்; இன்னும் பல இனிய பண்டங்களும் கிடைக்கும்; சேப்பம் இலையுடன், முற்றிய நல்ல கிழங்குகளும் கிடைக்கும் எனக்கூறுகிறது. எனவே, அவர்கள் புலால் உண்ணாமல் சைவர்களாக வாழ்ந்தனர் என்பதையும் அறியமுடிகிறது.
கலவைச்சோறும் திண்பண்டங்களும்
புளியைக் கலந்து செய்யும் சோற்று வகையும், தயிரைக் கலந்து செய்யும் சோற்று வகையும் வழக்கத்தில் இருந்துள்ளது. இதனை,
“எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு
தேமா மேனிச் சில்வளை யாயமொடு
ஆமான் குட்டின் அமைவரப் பெறுகுவிர்”
(சிறுபாணாற்றுப்படை, வரி.175-177)
என்னும் சிறுபாணாற்றுப் பாடல் வரிகள் குறிப்பிடுகிறது.
சங்க காலத்தில் உளுந்து, அவரை, முதலிய பருப்பு வகைகளைக் கலந்து செய்யும் பருப்பு வகைச் சோறுகளும் வழக்கத்தில் இருந்துள்ளன. இச்சோற்றுடன் நெய்யையும் கலந்து உண்டுள்ளனர். உளுத்தம் பருப்புடன் கலந்து செய்த பொங்கலையும் தேன்கலந்த இனிய பாலையும் உண்டனர் என்பதனை,
“பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொன்கலத்து ஒருவகை ஏந்திப்
புடைப்பில் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்ணென்று ஓக்குபு புடைப்பத் தெண்ணீர்”
(நற்றிணை, பா.110:1-4)
என்ற நற்றிணைப் பாடலடிகள் விளக்குகின்றன.
பாலை நில மக்கள் சோற்றுத் திரளையோடு எருமையின் வெண்ணெயைச் சேர்த்து உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தனர் என்பதை,
“செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி
அற்சிரை வெய்ய வெப்ப தண்ணீர்
சேம செப்பில் பெறீஇயரோ அன்னை”
(குறுந்தொகை, பா.277:2-5)
என்னும் குறுந்தொகைப் பாடலடிகள் புலப்படுத்துகிறன. மேலும், சோற்றோடு எருமையின் வெண்ணெய்யைக் கலந்து, அதனை குளிர் காலத்திற்கு ஏற்ற, விரும்பத்தக்க வெப்பத்தோடு கூடிய மெல்லிய நீரை மூடியுடன் கூடிய காப்பினை உடைய கமண்டலத்தில் வைத்துக் குடித்து மகிழ்ந்தனர் என்பதையும் தெளிவுபடுத்துகிறன.
அந்தணர் என்போர் அறவோர் என தொல்காப்பியத்தால் அறியலாம். இவர்கள் பார்ப்பார் என்றும் அழைக்கப்பட்டனர். அவர்கள் வாழ்கின்ற இடத்திற்குப் போனால் அருந்ததியைப் போன்ற கற்புடைய பார்ப்பனப் பெண்களால் சமைக்கப்பட்ட பாற்சோறு, பருப்புச்சோறு முதலியவற்றைப் பெறுவீர்கள். இராஜான்னம் என்று பெயர் பெற்ற உயர்ந்த நெற்சோறும் கிடைக்கும்; மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடியும் கறிவேப்பிலையும் கலந்து, பசும் வெண்ணெயிலே வேகவைத்து எடுத்த பொரியல் கிடைக்கும்; நல்ல வடுமாங்காய் கிடைக்கும்; இன்னும் தயிர்சாதம், மாங்காய்ச் சாதம், புளியஞ்சாதம் போன்ற பலவகையான சித்திரான்னங்களும் கிடைக்கும் என்று கூறியுள்ளார் இவ்வாசிரியர். இதனை,
“மறைகாப் பாளர் உறைபதிச் சேப்பின்
பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையுங் கற்பி னறுநுதல்
வளைக்கை மகடூஉ வயினறித் தட்ட
சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தம்
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி அளைஇப் பைந்துணர்
நெடுமரக் கொக்கி னறுவடி விதிர்த்த
தகைமாண் காடியின் வகைப்படப் பெறுகுவிர்”
(பெரும்பாணாற்றுப்படை, வரி. 301-310)
என்னும் இவ்வடிகளால் தமிழர் குடியில் தோன்றிய அந்தணர்களின் உணவு வகைகளை அறிந்து கொள்ளமுடிகிறது.
“ஊனும் ஊணும் முனையின் இனிது என
பாலின் பெய்தவும் பாகின் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லியது பருகி
விருந்துறுத்து ஆற்றி இருந்தனெம் ஆக”
(புறநானூறு, பா.381:1-4)
என்னும் புறநானூற்றுப் பாடலடிகள், பாலிற் கலந்து செய்தனவும் வெல்லப்பாகிற் செய்தனவும் ஆகிய பண்டங்களை இவை மிக இனிய என்று எண்ணுமாறு அளவாக நன்கு கலந்து மென்மையாகப் பருகி விருந்தினர்களாகத் தங்கி பசியைப் போக்கி இனிது இருந்தோம் என திண்பண்டங்களின் வகைகளைக் குறிப்பிடுகிறது. மேலும், முளைத்த தானியங்களை இடித்து அடையாகவும் சுட்டு உண்டனர் என்பதை,
“பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும்
பூம்புற நல்லடை யளைஇக் தேம்பட
எல்லையு மிரவு மிருமுறை கழிப்பி
வல்வாய்ச் சாடியின் வழைச்சற விளைந்த
வெந்நீர் அரியல் விரவலை நறும்பிழி
தண்மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்”
(பெரும்பாணாற்றுப்படை, வரி. 277-282)
என்னும் பெரும்பாணாற்றுப்படை வரிகள் விளக்குகின்றன. இவைகள் அதிக சக்தி வாய்ந்த உணவுப் பண்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மரக்கறி உணவுகள்
உழவர்கள் உழாமல் இயற்கையாகக் கிடைத்த உணவுப் பொருள்களையும் உணவிற்குப் பயன்படுத்தினர். மூங்கில் அரிசி, பலாப்பழம், வள்ளிக்கிழங்கு, தேன் என்னும் நான்கு பொருட்களையும் மக்கள் விருப்பமாக உண்டனர் என்பதையும் அறியமுடிகிறது.
கீரைவகைகளான வேளைக்கீரை, குப்பைக்கீரை முதலியவற்றையும் மழைப்பருவத்தில் வளர்ந்த சில இலைகளையும் சமைத்து உண்டனர் என்பதை,
“கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி
மெனிபிணி யவிழ்ந்த குறுமுறி யடகும்
அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேருன் சோறும்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர்…” (மதுரைக்காஞ்சி,வரி.530-535)
என்னும் மாங்குடிமருதனாரின் வரிகள் உணர்த்துகின்றன. மேலும், வெள்ளிக்கிழங்கு சேப்பங்கிழங்கு கூவைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளையும் சங்ககாலத் தமிழர்கள் விரும்பு உண்டனர் என்பதனை,
“தீம்பல் தார முனையிற் சேம்பின்
முளைப்புற முதிர்கிழங் கார்குவிர் பகற்பெயல்” (பெரும்பாணாற்றுப்படை, வ. 362 )
என்னும் பாடலடிகள் தெளிவுபடுத்துகின்றன.
மதுவை நகைத்தல்
பண்டைத் தமிழர்களில் ஆண், பெண் இருவரும் கள்ளுண்டதை சங்கப் பாடல்கள் பலவும் காட்டுகின்றன. கபிலர் போன்ற அந்தணப் புலவர்களும் இதனைப் பாராட்டிப் பேசுகின்றனர். உழவரின் உழைப்பு நோவைப் போக்கவும், நீர்வேட்கையைத் தணிக்கவும் வெறிப்பும் குளிச்சியும் புளிப்புமான ஒருபாணம் வேண்டியதாயிருந்தது அதனால் கள்ளென்னும் பாணத்தைப் பருகினர் என்பர். இவர்கள் இயற்கையான பனங்கள், தென்னங்கள், ஈச்சங்கள் போன்றவற்றினை பருகினர். எனவே, நம் முன்னோர்கள் உணவாக பயன்படுத்திய அனைத்தும் நல்ல சத்தான உணவுகளே என்பதையும் உணரமுடிகிறது.
பண்டைத் தமிழர்கள் கள்ளையும் புலாவையும் கடிந்து ஒதுக்கவில்லை என்ற போழ்திலும், குடித்து விட்டுத் திரிகின்றவர்களை ‘மாக்கள்’ என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. மாக்கள் என்றால் மிருகங்கள் என்று பொருள். குடிவெறியர்கள் மாரிக் காலத்தில் எப்படித் திரிகின்றார்கள் என்பதை நக்கீரர் மிக நன்றாக கீழ்வரும் பாடலில் எடுத்துக்காட்டுகிறார்.
“முடலை யாக்கை முழுவலி மாக்கள்
துவலைத் தண்துளி பேணார் பகலிறந்து
இருகோட் டறுவையர் வேண்டுவயின் திரிதர
வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோள்” (நெடுநல்வாடை, வரி. 32-35)
முறுக்கேறிய உடல்வலிமை படைத்தவர்கள்; அறிவற்றவர்கள்; அவர்கள் வண்டுகள் மொய்கின்ற கள்ளைக் குடித்தார்கள்; கள்ளின் வெறியால் களிப்பு மிகுந்தார்கள்; அதனால் அவர்கள் மழைத்துளியைப் பொருட்படுத்தவில்லை. நேரத்தையும் பொருட்படுத்தவில்லை. இரண்டு முனையையுடைய ஒரே துணியுடன் அவர்கள் விரும்பிய இடங்களில் எல்லாம் வெற்றுடம்போடு திரிந்து கொண்டிருந்தார்கள் என்று மதுகுடியர்களின் செயலைக் கண்டிருத்திருப்பதைக் காணலாம்.
தொகுப்புரை
* பழந்தமிழர்கள் உட்கொண்ட உணவுகள் அனைத்தும் உடம்பில் வலிமையை ஏற்படுத்தும் உணவுகளாக இருந்தன என்பதையும், மாமிசம், மரக்கறி, தானியவகை, கீரைவகை, கிழங்குவகை என பலவகையான உணவுப் பொருட்களையும் அவற்றினைப் பலவாறு சுவை மிகுந்ததாகவும், ஊட்டமளிக்கும் வகையிலும் கலந்துண்டனர் என்பதையும் அறியமுடிகிறது.
* ஔவையர் கபிலர் போன்ற சங்ககால புலவர்களெல்லாம் மாமிசமும் மதுவும் சிறந்த உணவாக ஏற்றுக் கொண்டு உண்டு மகிழ்ந்தனர் என்பது ஒருபுறமிருக்க அப்புலவர்களே வகை வகையான மரக்கறி உணவுகளை வருணிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.
* பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்களில் கள்ளும், புலால் உணவும் வன்மையாகக் கண்டிக்கப்பட்டதைப் போலல்லாமல், சங்க நூல்களில் மதுபானமும் புலால் உணவும் மறைமுகமாக கண்டிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.
நூற்பட்டியல்
1. நற்றிணை, பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் உரை, கழக வெளியீடு, முதற்பதிப்பு – 1952.
2. புறநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, முதற்பதிப்பு – 2004.
3. பத்துப்பாட்டு மூலமும் உரையும் (தொகுதி-1,தொகுதி-2)பொ. வே. சோமசுந்தரனார், கழக வெளியீடு, பதிபாண்டு – 2008.
4. சங்க இலக்கியம், எட்டுத்தொகை மூலமும் தெளிவுரையும் (தொகுதி - 1), ச .வே. சுப்பிரமணியன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு – 2010.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.