காதல் உள்ளம்
முனைவர். வி.தேன்மொழி

“ஆயகலைகள் அறுபத்தி நான்கு” என ஆன்றோர் கூறுவர். பொதுவாகக் கலை என்னும் வரையறைக்குள் இலக்கியமும் உட்பட்டுள்ளது. ஆதி கிரேக்கர்களே “கவிதைக்கலை” (Poetics) என்னும் சொல்லைப் பயன்படுத்தினர் என “இலக்கியக் கலை” என்னும் நூலில் அ. ச. ஞானசம்பந்தன் குறிப்பிடுகின்றார். “உணர்ச்சிகரமான ஓசை நயமுள்ள மொழிகளின் மூலம் உறுதியாகவும் கலைத் தன்மையோடும் வெளிப்படுத்தும் மனித மனமே கவிதை” என்று பிரிட்டானிகா கலைக் களஞ்சியம் கூறுவதை வழி மொழிகிறார் ஹட்சன். “ஒவ்வொரு கோணத்திலும் கவிதை என்பது உணர்ச்சிகளின் மொழி” என்கிறார் வின்செஸ்டர்.
கற்றுத் தீர வேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் இலக்கியம் கற்பவர்க்கு இல்லை. ஆயினும் அனைத்து மொழிகளிலும் இலக்கியம் தொடந்து இயற்றப்படுகின்றது. கற்கப்படுகின்றது. விமர்சிக்கப்படுகின்றது. இவ்வாறு நடக்கும் தொடர் நிகழ்விற்குத் தன் அனுபவத்தை அல்லது கற்பனையை நயத்துடன் வெளிப்படுத்த வேண்டும் என்ற மனித இனத்தின் உந்துதலே காரணம் ஆகும். கற்பவன் இலக்கியப் படைப்புகளைக் கற்கும் போது படைப்பாளன் பெற்ற அனுபவத்தைத் தானும் பெறுகின்றான். படைப்பாளன் கருதியதை விடவும் அதிகமாக அதன் நயத்தினை உணர்ந்து இன்புறுகின்றான். அது மட்டுமல்லாது அப்படைப்பின் இன்பத்தில் தோய்ந்து தன் கவலைகளை மறக்கிறான். ஆகவே கற்பதால் பெறும் பயன் ஒன்றையே இலக்கியம் கற்றல் என்னும் நிகழ்வு சார்ந்துள்ளது எனக் குறிப்பிடலாம். இதனை முருகியல் இன்பம் என்று இலக்கியவாதிகள் குறிப்பிடுகின்றனர்.
பொதுவாகக் காதல் சார்ந்த கவிதைகளே கற்பவரைக் கரைய வைக்கிறது என்பது பொதுவான கருத்து. ஆனாலும் பக்தி சார்ந்த கவிதைகளும் ஆழ்ந்து நோக்குங்கால் உணர்வுப்பூர்வமான நயத்தினை கற்பவருக்கு ஏற்படுத்துகின்றது. எடுத்துக்காட்டாக, பெரியாழ்வாரின் மகளான ஆண்டாள் எழுதிய இறைக்காதலைக் குறிப்பிடலாம். இவரைப் பக்தி இலக்கியம் “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்று குறிப்பிடுகின்றது. மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்று வாழ்ந்தவர் ஆண்டாள். இவருடைய அன்பு முழுவதும் இறைவனையே சார்ந்து, பொங்கித் ததும்பியதனை இவருடைய படைப்புகள் புலப்படுத்துகின்றன. அவர் வடித்த பாடல்களில் ஒன்று.
“கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ
மருப்பொ சித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே”
- இப்பாடல் காதல் கொண்ட பெண்ணுள்ளம் ஒன்று இறைவனின் இயல்பினைப் பற்றி வெண்சங்கிடம் வினவுவதாய் அமைந்துள்ளது. கருப்பூரத்தின் வாசனையும் இறைவன் சூடிய கமலப்பூவினுடைய வாசனையும் இறைவனுடைய சிவந்த வாயின் இனிமையும் அதன் வாசனையும் எவ்வாறு இருக்கும்? இதனை நான் விருப்பமுடன் கேட்கின்றேன். ஆழ்கடலில் இருந்த வெண்சங்கே நீ இதனைக் கூறுவாயாக! என்று கேட்கிறது இப்பெண்ணுள்ளம். மேலோட்டமாகப் பார்க்கும்போது இத்தகைய பொருளைத் தருவதாய் அமைந்திருந்தாலும் ஆழ்ந்து நோக்குங்கால் அழுத்தமான உணர்வுப் பதிவினைத் தருவதாய் இப்பாடல் அமைந்துள்ளது.
வெண்சங்கினை வினவும் முறை கவிதையின் அழகினை மெருகூட்டுகிறது. மாதவனின் இயல்பினைப் பற்றி அறிந்து கொள்ள மாதவனின் கையில் இருந்த சுதர்சன சக்கரம், துயில் கொள்ளும் பாம்பணை போன்றவைகளைக் கேட்காது சங்கினை வினவுகின்றது ஆண்டாளின் காதல் உள்ளம். இதன் காரணம் என்ன தெரியுமா? பாரதப் போரை முடிக்க சங்கினை எடுத்து ஊதியவன் மாதவன். ஆகவே திருமாலின் வாய்ச்சுவை, வாசனை ஆகியவற்றை பாம்பணையை விடவும் சுதர்சன சக்கரத்தினை விடவும் திருமாலின் வாயை முத்தமிட்ட வெண்சங்கே நன்கறிந்திருக்கும். அதனாலேயே “சொல்லாழி வெண்சங்கே” என வினவுகின்றார். திருமாலின் மீதான ஆண்டாளின் காதல் சங்கினைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.
டால்ஸ்டாய் கலையைப் பற்றிக் குறிப்பிடும்போது “கலை என்பது அதனிடத்துப் பழகுகிறவர்களை உணர்வு வலையில் சிக்கச் செய்ய வேண்டும்” என்று ‘கலை என்றால் என்ன?’ (Tolstoy, "What is Art?" -Sec15) என்னும் தம் கட்டுரையில் விளக்கம் தருகின்றார். டால்ஸ்டாயின் இக்கூற்றினை நிறுவுவதாய் அமைந்துள்ளது ஆண்டாளின் பாடல்.
“கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ” என வினவும் தொனியில் தான் அருகில் இருந்து அனுபவிக்காத ஏக்கம் ததும்பி வழிகின்றது. மனிதக் காதலில் மூழ்கித்ததும்பும் உள்ளங்களுக்கிடையே இறையன்பில் ஏங்கித் தவிக்கும் இனிய உணர்வுப் பதிவின் பெட்டகமாக ஆண்டாளின் பாடல் விளங்குகிறது எனின் அது மிகையாகாது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.