நெய்தல் திணையில் அழுகை மெய்ப்பாடு
கி. ச. புனிதவதி
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை,
காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
புதுச்சேரி – 605008.
மற்றும்
முனைவர் வேல். கார்த்திகேயன்
இணைப் பேராசிரியர் & நெறியாளர், தமிழியல் துறை,
காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,
புதுச்சேரி – 605008.
முன்னுரை
காலங்கள் மாறினாலும் கருத்து வளத்துடன் வலம் வருபவை சங்க இலக்கியங்கள். அவ்விலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனத் திணை சார்ந்து எழுதப்பட்டுள்ளன. அதில் கடல் சார்ந்த பகுதியில் நிகழும் தலைவன் தலைவியரின் அன்பொழுக்கங்கள் நெய்தல் திணை எனப்படும். கடலும், சூரியன் சாயுங்காலமும் முதற்பொருட்களாகவும், சுறா, புன்னை, நெய்தல், தாழை, மீன் பிடித்தல், உப்பு விளைத்தல் முதலியன கருப்பொருட்களாகவும், தலைவன், தலைவி காதலில் பிரிவால் வாடும் ’இரங்கல்’ உரிப்பொருளாகவும் உள்ளன. சங்க அகப்பாடல்களில் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகியவற்றில் வெளிப்படும் அழுகை மெய்ப்பாடு உவமை வழி உரிப்பொருள் சிறக்கப் பாடப்பட்டுள்ளதை ஆராய்வதே இக்கட்டுரை.
மெய்ப்பாடு
“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப” (தொல்.பொருள்.மெய்.நூ.251)
என்று தொல்காப்பியர் தம் நூலில் எட்டுவகை மெய்ப்பாடுகளாக நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பனவற்றைக் குறிக்கின்றார்.
அழுகை மெய்ப்பாடு
அழுகை மெய்ப்பாட்டிற்கான நிலைக்களன்களாக இளிவு, இழவு, அசைவு, வறுமை எனும் நான்கின் வழித் தோன்றும். இவற்றை;
“இளிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே” (தொல்.பொருள்.மெய். நூ.253)
என்று தொல்காப்பியர் சுட்டுகிறார்.
நெய்தல் திணையில் அழுகை மெய்ப்பாடு
நெய்தல் திணையில் அழுகை மெய்ப்பாடு தலைவி, தலைவன், தோழி முதலிய மூன்று கூற்றுகள் வழி வெளிப்படுகின்றது. தலைவியின் களவு வாழ்க்கையால் இல்லத்தில் காப்பு மிகுதியான போதும், பருவங்கண்டு கூறும் போதும், வரைவிடை ஆற்றாளென வற்புறுத்தும் போதும், சிறைப்புறமாக தலைவன் இருக்கும் போதும், இரவுக்குறி மறுக்கும் போதும், தோழியிடம் வன்புறை மறுக்கும் போதும், காமம்மிக்க கழிபடர் கிளவியிடத்தும், வரைவிடைப் பிரிவில் வருந்திக் கூறும் போதும், நெஞ்சிற்குச் சொல்லும் போதும் நிகழ்கிறது. தலைவன் அல்லகுறிப்பட்டு நெஞ்சிற்குச் சொல்லும் போதும், தோழி கேட்பச் சொல்லும் போதும் வெளிப்படுகிறது. தோழி காப்பு மிகுதியைக் கூறும் போதும், குறைநயப்பிக்கும் போதும், சிறைப்புறமாகக் கூறும் போதும், பிரிவுணர்த்தப்பட்ட போது தலைவிக்குச் சொல்லும் போதும், வரைவு கடாதலின் போதும் தோன்றுகிறது. பரத்தை தலைவனை நொந்து கூறும் போதும் என அழுகை மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.
தலைவன் பிரிந்த காலத்தில் நீ ஆற்றியிருத்தல் வேண்டுமென்று கூறும் தோழிக்குத் தலைவி அழிவுற்றுச் சொல்லியது.
“செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல வில்லா குதுமே”
(குறுந்.290: 4-6)
என்று தலைவி, தோழியிடம் காமநோயைப் பொறுத்து ஆற்ற வேண்டும் என்று வற்புறுத்துவோர், காமத்தின் இயல்பினை அறிந்தது இல்லையோ? அதனைத் தாங்கும் அளவு வன்மையும் கொண்டவரோ என்று கூறுகின்றாள். பிரிந்து சென்றுள்ள எம் தலைவரைக் காணவில்லை என்று கூறியதனால், மிகுந்த துயரத்துடன் இருக்கின்றேன். அத் துயரம் மிக்க வெள்ளத்தில் பாறையின் மேல் மோதும் சிறிய நுரை மெல்ல மெல்ல இல்லாமல் போவதைப் போன்று அமைந்துள்ளது என்கிறாள்.
“நுரை கல்லில் மோதுந்தோறும் சிறிது சிறிதாகக் கரைதலைப் போல தலைவர்
பிரிவை எண்ணுந்தோறும் உயிர் தேய்ந்தொழியு மென்க”
(தொல்.பொருள்.கற்பு.6.நச்சர்)
என்று கற்பியலில் தலைவியின் நிலைக்கு இப்பாடலை எடுத்துக் காட்டுகின்றார்.
இங்கு நெய்தற் திணையின் உரிப்பொருள் இரங்கல் என்பது தலைவன் பிரிவில் தலைவியின் உயிர் இழத்தலைப் போன்ற, தன்னிலையில் தாழ்ந்த அசைவு நிலைக்களனைக் கொண்ட அழுகை
மெய்ப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளதை அளவு உவமத்தின் வழி அறியமுடிகிறது.
இதைப்போன்று, நற்றிணைத் தலைவியும் அறத்தொடு நின்ற பின்பும் பொருள் வழி பிரிந்துள்ள தலைவனை நினைந்து வருந்திய போது பொறுத்திரு என்ற தோழிக்கு, இன்றும் மாலைப் பொழுது வரும் என்செய்வேன் என்று வன்புரை எதிரழிந்து சொல்லுகிறாள்.
“கங்கைஅம் பேர்யாற்றுக் கரைஇறந்து இழிதரும்
சிறைஅடு கடும்புனல் அன்னஎன்
நிறைஅடு காமம் நீந்துமாறே”
(நற்.369: 9-11)
கங்கை ஆற்றின் வெள்ளம் கரை கடந்து ஓடிவரும். அணையை உடைத்துச் கொண்டு விரைவான ஓட்டத்தினை உடைய நீர் வெள்ளம் போன்று, என்னுடைய ஒழுக்கத்தை அழித்து வரும் காம
வெள்ளத்தை நீந்தும் வினையை அறியவில்லை தோழி, நான் எவ்வாறு பிழைப்பேன் என்று கூறுகின்றாள்.
தலைவன் வினையின் பொருட்டுப் பிரிந்து சென்றுள்ளான். தலைவியின் காமநோயைத் தடுக்க முடியாது தவிக்கும் நிலை உள்ளது. அவன்தான் அக்காம நோய்க்கு மருந்தாகக் கூடியவன்.
இந்நிலையில் காத்திரு என்றெல்லாம் கூறித் தேரேறிச் செல்லும் போது தலைவி மிகுந்த வேதனை அடைகிறாள். கங்கை ஆற்றின் வெள்ளம் போல, என்று சொல்லும் போது, அதன் வேகம் விரைந்து
ஓடும் திறம் நீரைக் காக்கும் அணையை உடைத்துக் கொண்டு வருவதைப் போல, தன்னால் தடுக்கவியலாதபடி கங்கையைப் போல காமம் விரைந்து வருகிறது என்ன செய்வேன் என்கிறாள்.
புலவர் தான் உணர்த்த நினைக்கும் உணர்வினை இவ்வுவமை வழி விளக்கிச் சென்றுள்ளார். மேலும் நெய்தல் திணையின் உரிப்பொருளான இரங்கல் நிமித்தம் தலைவியின் ஏக்கம் இவ்வுவமை வழி வெளிப்பட்டுள்ளது. சிறைஅடு கடும்புனல் அன்ன என்ற வினை உவமத்தின் வழி தலைவனை இழத்தல், காமத்தைத் தடுக்கவியலாத தன் நாணத்தை இழத்தல், காத்திரு என்ற தோழியிடம் பொறுமையை இழத்தல் என்று இழத்தல் நிலைக்களனைக் கொண்ட அழுகை மெய்ப்பாட்டினை இவ் உவமை வழி அறிய முடிகிறது.
“காமப் பெருக்கின் விடுவிப்பில் உள்ள நிச்சயமின்மை, களவுக் காமத்தை உடலைக் கடந்து மனதோடு சுகிக்க முனையும் விபரீதத்தை உண்டாக்குகின்றது. ஏக்கம், காத்திருத்தலின் துயரம், தாங்க இயலாமை, தவிப்பு, நிச்சயமற்ற தன்மை, தூக்கமில்லாமை, உணவு செல்லாமை, பசலை நோய், புலம்பல் (இரங்கல்), உருகுதல், மெலிதல் என்ற பாடுகளைக் களவுக் காமத்தில் காணலாம்”
(ராஜ் கௌதமன், பழந்தமிழ் அகவல் பாடல்களில் பரிமாற்றங்கள், ப.85)
என்று சங்கப் பாடல்களில் திறனாய்வை மேற்கொள்ளும் பேராசிரியர் தம் நூலில் குறிப்பிடும் கருத்து, காமத்தின் இயல்பினால் ஏற்படும் உள மாற்றத்தினை வெளிப்படுவது மேற்கூறிய
பாடல்களுக்குப் பொருந்தி வருகிறது.
இதைப்போன்று, நற்றிணைப் பாடலிலும் தோழி வரைவிடை வைத்துப் பிரியும் தலைவனிடத்துக் கூறிச் செலவழுங்குவிடத்து,
“இனமீன் ஆர்ந்த வெண்குருகு மிதித்த
வறுநீர் நெய்தல் போல”
(நற்.183: 9-10)
மீன்களை மேய்ந்த செருக்கோடு நாரை நீர் வற்றிய குளத்தில் சிறிது சிறிதாக மலர்ந்து வாட்டம் உறுகின்ற நெய்தல் மலரை மிதித்துக் கெடுத்தல் போல, பொருள் ஈட்டும் உள்ளத்தொடு நீண்ட
இடைவெளியில் ஒவ்வொரு காலத்தும் நின்னைப் பெற்று ஏனைய காலத்துப் பெறாது வாடியிருக்கும் தலைவியை முற்றும் நீங்கி உயிர் நீங்குதலைப் போன்று செய்கின்றாய் என்று தோழி குறிப்பிடுகின்றாள்.
“கடல் சார்ந்த இடத்தில் நெய்தற் செடி காணப்படுகின்றது. கடலோரங்களில் கழிகளில் நெய்தல் செடி காணப்படுவதாகச் சங்க நூல்கள் கூறுகின்றன. ‘இருங்கழி நெய்தல்’ என்று குறுந்தொகைப்பாடல் 36 கூறும். இருங்கழி ஓரத்தில் கழிசேர் மருங்கில் நெய்தல் மலர்வதாகக் கூறப்பட்டிருக்கின்றது. செடிநூலிலும் மேற்குக்கடற்கரையில் கழிகளில் (Backwaters) காணப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது”
(பி.எல்.சாமி. சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம், ப.55)
இங்கு நெய்தல் மலர் நீரில் வாழக்கூடியது. நெய்தல் திணை எனப் பெயர் பெறுவதற்கு பொருந்துவதாய் கடற்கரையைச் சார்ந்த இடத்தில் வளரும் இயல்புடையது. நீரின்றி வாடியிருக்கும் சூழலில் நாரையானது மீனை உண்ட மகிழ்ச்சியில் நெய்தல் மலரை மிதித்துச் செல்கிறது. நாரையைப் போன்று நீ, மீன் போன்ற பொருள் வேட்கையில் நெய்தல் மலர் போன்ற தலைவியைப் பரிந்து வாடவிடுதல் தகாது என்கிறாள்.
நாரை - தலைவன்
மீன் - பொருள்
வாடிய நெய்தல் மலர் - தலைவி
மலரை நாரை மிதித்தல் - தலைவன் பொருட் பிரிவு
நீர் இருந்தால் நெய்தல் மலர் செழித்திருக்கும். நீர் வற்றிவிட்டதனால் வாடி இருக்கின்றது. அம்மலர் நீரின்றி செழிப்பான நிலையிலிருந்து தாழ்ந்திருத்தலைப் போல, தலைவன் அருகில்
இல்லாதிருப்பதினால் செழிப்புடன் இருக்கக்கூடிய தலைவி தன்னிலையில் தாழ்ந்து இருக்கும் சூழலால் அசைவு நிலைக்களனைக் கொண்ட அழுகை மெய்ப்பாட்டினைக் கொண்டதாக
வெளிப்பட்டுள்ளது. வறுநீர் நெய்தல் போல என்ற உரு உவமத்தின் பொருட்டு நெய்தற் திணையின் இரங்கல் உரிப்பொருள் வெளிப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
இரவுக்குறியில் தோழி சொல்லியது
இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று தோழி சொல்லியது.
“மோட்டு மணல் அடைகரைக் கோட்டு மீன் கெண்டி,
மணல் கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே” (அகம்.10: 11-13)
அம்மூவனார் பாடியுள்ள இப்பாடலில் களவொழுக்கம் வழி அலர் எழுந்ததனால் ஏற்படும் மாற்றத்தினைத் தோழி மூலம் குறிக்கிறார். அலர் எழுந்ததை அறிந்த தலைவன் ஒருவழித் தணந்து
உறையக் கருதினான். அதனைக் குறிப்பால் உணர்ந்த தோழி, தலைவன் இரவுக்குறியிடத்து வந்து மீளும் பொழுது, நின்னைப் பிரிந்து தலைவி உயிர் வாழமாட்டாள் விரைவில் மணந்து கொண்டு
செல்ல வேண்டும் என்கிறாள். இதற்கு உவமையாகக் கீழ்க்காற்றினால் நிறம் மிக்க கடல் அலைகள் மோதி உடைக்கும் மணல் மேட்டில் கிடக்கும் பழைய படகின் அழிவு போக்கிப் புதிதாகக் செய்யப்பட்ட வலையினையுடைய பரதவர்கள் உயர்ந்த மணலையுடைய கரைப்பக்கத்தில் வந்து ஒதுங்கிக் கிடக்கும் சுறா மீனை அறுத்துத் தாமும் தின்று, மணம் கமழ்கின்ற பாக்கத்தில் பலர்க்கும் பகுத்துக் கொடுக்கும் வளம் பொருந்திய தொண்டி என்னும் பட்டினத்தைப் போன்ற இவளது அழகு இவளுக்கே உரித்தாகுமாறு நின் ஊரிடத்து மணந்து கொண்டு போதல் வேண்டும் என்கிறாள்.
உவமையில் வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலன் என்ற பயன் உவமத்தின் வழி அழகும் உயிரும் இழக்கப்படும் என்னும் இழத்தல் நிலைக்களனைக் கொண்ட அழுகை மெய்ப்பாட்டை வெளிப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
“அகவாழ்க்கையையும், புறவாழ்க்கையையும் உணர்த்துஞ் செய்யுட்கு உயிராயுள்ளது மெய்ப்பாடு; பொருளுணர்த்தற்கருவி உவமை; செய்யுட்பகுதிகள் உறுப்பு. அப்பகுதிகளின் பகுதி மரபு வழாத சொற்கள். ஆதலின், மெய்ப்பாடு, உவமை, செய்யுளுறுப்பு, மரபுச்சொல் என்ற நான்கினையும், ஆசிரியர் வெவ்வேறியலுள் விதந்தோதினார். ஆகவே, தொல்காப்பியப் பொருளதிகாரம், அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல். மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது பகுதிகளை உடைத்தாயியற்றென்றறிக” (கா. சுப்பிரமணிய பிள்ளை, பழந்தமிழர் நாகரிகம், ப.35)
என்று அகப்பாடல்களில் உவமை வழி புறச்செய்திகள் சுட்டப்படுகின்றன.
பாடல்களின் பொருள் புரிதலுக்கும் மெய்ப்பாடும், உவமையும் பொருளதிகாரத்தில் வைத்திருப்பதை இக்கருத்து நெய்தல் திணையில் அழுகை மெய்ப்பாடு எனும் ஆய்விற்கு அரணாகின்றது.
இவ்வாய்வின் வழி பெறப்படுவன
* நெய்தல் திணையின் உரிப்பொருள் இரங்கல். தலைவன் தலைவி இருவரின் களவு, கற்பு வாழ்க்கையில் பிரிந்து வாழும் சூழலில் ஏற்படும் மனவெளிப்பாடாக மேற்கூறிய பாடல்கள்
அமைகின்றன.
* தலைவன் வினைமேற் சென்றுள்ள நிலையில் அவனை நினைந்து இல்லத்தில் இரங்கி இருக்கும் தலைவியின் துயரைப் பாறை மேல் போதும் சிறுநுரைப் போல் தலைவனை நினைக்குந்தோறும் உயிர் இல்லாமல் போவதாக தலைவி உரைக்கிறாள்.
* கங்கை ஆற்றின் வெள்ளம் கரைபுரண்டு ஓடிவரும் போதும் தடுக்கவியலாத நிலை போல தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் காமநோயைத் தடுக்கவியலாது தவிக்கிறாள்.
* தலைவன் வினையின் பொருட்டு பிரிந்துள்ளான். வினையே பெரிதென்று உள்ளான். தலைவியோ குளம் வற்றிய இடத்தில் வாடிய நெய்தல் மலராக இருக்கிறாள் என்று உவமை வெளிப்பட்டுள்ளது.
* காமத்தினைத் தடுக்கமுடியாத நிலையில் காமம் நீருடன் உவமைப் படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். நெய்தல் திணையில் அழுகை மெய்ப்பாடு மிகுதியாக வெளிப்பட்டுள்ளது.
இதன் மூலம் சங்க அகப் பாடல்களில் நெய்தல் திணையில் இரங்கல் உரிப்பொருள் சிறக்க பாடப்பட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.
முடிவுரை
சங்கப் புலவர்கள் அகப்பாடல்களில் நெய்தல் திணையின் இரங்கல் உரிப்பொருள் சிறக்க அழுகை மெய்ப்பாட்டினை மிகுதியாக வெளிப்படுத்தும் பாடல்களைப் பாடியுள்ளதனை மேற்கண்ட ஆய்வின் வழி பெறப்படுகின்றது. தலைவன் தலைவியின் அன்பொத்த வாழ்க்கையில் பிரிவுத்துயர் தலைவனை விட தலைவியின் வாயிலாக வெளிப்பட்டுள்ளதை இவ் ஆய்வின் வழி காணமுடிகிறது.
துணைநின்ற நூல்கள்
1. சாமி. பி.எல், சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி, சென்னை - 1.
2. சாமிநாதையர், டாக்டர் உ.வே., குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், வெளியீட்டெண்: 277, பெசன்ட் நகர், சென்னை - 600 090. எட்டாம் பதிப்பு - 2020.
3. சுப்பிரமணிய பிள்ளை, கா., பழந்தமிழர் நாகரிகம், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரி முனை, சென்னை - 600 108. முதல் பதிப்பு: மே, 2009.
4. செயபால், முனைவர் இரா. (உ.ஆ), சங்க இலக்கியம் அகநானூறு (புத்தகம் 1) (மூலமும் உரையும்), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., அம்பத்தூர், சென்னை - 600 098. நான்காம் அச்சு: அக்டோபர், 2011.
5. தமிழண்ணல், தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள் பாகம்-1, செல்லப்பா பதிப்பகம், மயூரா வளாகம் 48, தானப்ப முதலி தெரு, மதுரை - 625 001. இரண்டாம் பதிப்பு - ஆகஸ்ட் 2011.
6. நச்சினார்க்கினியர், (உ.ஆ), தொல்காப்பியப் பொருளதிகாரம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை.
7. பேராசிரியர் (உ.ஆ), தொல்காப்பியம், சாரதா பதிப்பகம், சென்னை - 600 014. முதற்பதிப்பு 2018.
8. ராஜ் கௌதமன், பழந்தமிழ் அகவல் பாடல்களில் பரிமாற்றங்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை - 600 098. முதல் பதிப்பு: ஜூலை, 2019.
9. வேங்கடராமன் வித்துவான் ஹெச். (பதி.ஆ), நற்றிணை மூலமும் உரையும், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், வெளியீட்டெண்: 277, பெசன்ட் நகர், சென்னை -600 090. எட்டாம் பதிப்பு - 2020.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.