கம்பராமாயணத்தில் மலைகள்
முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.
முன்னுரை
ஒரு காப்பியத்தில் இயற்கை வர்ணனை அமையவேண்டும். நாட்டின் பாதுகாப்பு அரண்களில் ஒன்றாக அமைந்திருப்பது மலை. மலை குறித்த வர்ணனை இன்றியமையாததது. ஏனெனில், மலை வளம் சிறந்தால் நீர்வளம் பெருகி. பயிர் வளம் செழிக்கும். நாடும் அந்நாட்டு மக்களும் நல்ல சமுதாயத்தைப் பெற்று, சிறந்த வாழ்வைப் பெறமுடியும் என்ற கருத்தைக் குறிப்பிடுகின்றார். மலை வர்ணனை என்பது ‘தமிழ் விடு தூது’ நூலில் கூறப்பட்டுள்ள ’அட்டாதச வர்ணனை’ எனப்படும். பதினெட்டு வகை வர்ணனைகளில் மலை வருணனை முதலிடம் பெற்றிருக்கிறது. கம்பர் தம் இராமாயணத்தில் மலைகள் குறித்து கூறியுள்ளதைப் பற்றி இக்கட்டுரையின் வழியாக ஆராய்வோம்.
மலை வகை
அறை சிறுபாறை - முரம்பு சரட் பாங்கான மேட்டுநிலம்; கரடு கற்பாங்கான பெருந்திடல்; பொற்றை, பொறை, பொச்சை, பெரும்பாறை; பறம்பு சிறு குன்று - குன்று, குன்றம், கோடு சிறுமலை - குறும்பு அரணான சிறுமலை; மலை மரமடர்ந்து வளமான குன்றுக்கூட்டம்; பொருப்பு பக்கமலை; அடுக்கம் மலையடுக்கு; விலங்கல் நாட்டின் குறுக்காகவுள்ள மலை; விண்டு விண்ணளாவிய மலை; ஓங்கல் உயர்ந்த மலை; சிலம்பு எதிரொலிக்கும் மலை; வரை மூங்கில் வளரும் மலை; குவடு, கோடு மலைச்சிகரம்; முடி உச்சிச் சிகரம்; கொடுமுடி உச்சிச் சிகரவுச்சி; கவான் இரு குவடுகள் சேருமிடம்; வெற்பு அடிமலை; சாரல் மலையடிவாரம்.
வர்ணனை பற்றிய விளக்கங்கள்
வர்ணனை என்னும் சொல்லுக்கு பலவாறாகப் பொருள்கள் அமைகின்றன. இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல் என்று தொல்காப்பியமும்,
"தன்னிகர் இல்லாத் தலைவனை யுடைத்தாய்
மலைகடல் நாடு, வளநகர் பருவம்
இருசுடர்த் தோற்றமென்று இனையன புனைந்து" (தண்டியலங்காரம், நூற்பா - 8)
என்று
"தாழ்விலா அட்டா தசவன் னனைகளென்னும்
வாழ்வெலாங் கண்டு மகிழ்ந்தாயே’ (தமிழ்விடுதூது 34)
என்று தமிழ்விடுதூது பாடலில் 18 வகையான வர்ணனைகள் அமைத்து, அவை மலை, கடல், நாடு, நகர், சிறுபொழுது ஆறு, பெரும்பொழுதும், சந்ரோதயம், சூர்யோதயம் என்று விளக்குகிறது.
வர்ணனை என்ற சொல்லுக்கு ஒப்பனை, புனைந்துரை, உவமேயம், வர்ணிப்பு, தோத்திரம், கற்பனைச் சித்தரிப்பு, புனைவுரை என அகராதி பலவாறு பொருள் தருகிறது.
கம்பராமாயணத்தில், வரைக்காட்சிப் படலத்தில் மலையின் காட்சியையும், அதன் வளத்தையும், அங்கிருந்த மக்களின் செயல்களையும் விவரித்து, அதன் மேல் கதிரவனின் ஒளி படர்வதால் யானையின் மீது பாய்கின்ற சிங்கத்தை ஒத்ததாகவும் இருந்தது செவ்வானம். அந்தச் சிங்கம் பாய்ந்ததால் தோன்றிப் பரந்த செந்நிற இரத்தம் போலத் திகழ்ந்ததாகவும் மிகச் சிறந்த வர்ணனையைக் கற்பிக்கின்றார். “மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது வானில் ஓடும் வெஞ்சாயையுடைக் கதிர் அங்கு அதன் மீது பாயும் பஞ்சானனம் ஒத்தது மற்று அது பாய் ஏறு செஞ்சேரி எனப் பொலிவுற்றது செக்கர் வானம்” என்ற பாடலில் இயற்கையை இயற்கையோடு வர்ணிப்பதைக் காண முடிகின்றது. அது மட்டுமல்லாமல் மலைகளில் நிறைந்துள்ள மணம் வீசும் மரங்களின் அழகையும், விலங்குகளின் செயல்களையும் சிறந்த கற்பனை நயத்தோடு வரைக்காட்சிப் படலத்தில் வர்ணித்துள்ளார்.
மலை
பாலகாண்டம் வரைக்காட்சி படலத்தில் சந்திர சயலமலைக் காட்சிகளை வர்ணிக்கும் கம்பன், அந்திகாலத்தில் மலைக்காட்சியின் மாட்சியைக் கூறும் இடத்திலும் மூலவனைக் குறிப்பிடுகின்றான். இரு கண்களும், களிப்பு கொள்ளும் வண்ணம் எழில் மேனியாக அமையும் இறைவன் கட்புலனுக்குத் தரும் இன்பம் மலையின் பசுமைத் தோற்றத்திற்கு ஒப்பாகின்றது. உயர்ச்சியாலும், பரப்பாலும் எண்ணத்திற்கு உட்படாது சிந்தனைக்குள் அடங்காத மலையின் பாங்கு கடவுளின் கருத்துக்கு உட்படாத அறிவு கடந்த தன்மைக்கு இணையாகின்றது. சந்தன மரங்கள் பரப்பும் மணம் சந்தனக் குழம்பு தோய்ந்த இறைவனின் மணி மார்புக்குச் சார்பாகின்றது. இவ்வாறு புலனுக்கும், அறிவுக்கும் இன்பம் தரும் இறைவனைக் குற்றமற்ற குன்றில் காண்கின்றான் கவிஞன்.
"கண்ணுக்கு இனியது ஆகி விளங்கிய காட்சியாலும்
எண்ணத்திற்கு அரிது ஆகிஇலங்கு சிரங்களாலும்
வண்ணக்கொழுஞ் சந்தனச் சேதகம் மார்பு அணிந்த
அண்ணல் கரியோன்தனை ஒத்தது-அல்ஆசுஇல்குன்றம்" (வரைக்காட்சிப்படலம் 829)
1. கிரௌஞ்ச மலை
பரசுராமனும், முருகப் பெருமானும் சிவபிரானிடம் வில் வித்தை கற்று வந்தனர். அது போழ்து, அவர்களது ஆற்றலைச் சோதிக்கக் கிரௌஞ்ச கிரியின் சிகரம் ஒன்றைத் துளைக்குமாறு சிவன் ஆணையிட்டார். முருகன் செயல்படத் தயங்கினார். பரசுராமன் கணையைச் செலுத்திக் கிரௌஞ்ச மலையில் துளை ஒன்று உண்டாக்கினார். இது பருவ மாற்ற காலங்களில் அன்னம், பறவை முதலானவை மலையைச் சுற்றிச் செல்லாது, துளை வழி எளிதில் இடம் மாறிக் கொள்ள வழி செய்தது.
“சையம் புக நிமிர் அக்கடல் தழுவும்படி சமைவான்
மையின் உயர்மலை நூறிய மழு வாளவன் வந்தான்
ஐயன் தனை அரிதின் தரும் அரசன் அது கண்டான்
வெய்யன் வர நிபம் என்னைகொல் என வெய்துறும் வேலை" (பரசுராமப் படலம் 1223)
2. சந்திர சயல மலை
இராமன், சீதையின் திருமணத்தைக் காண, அயோத்தியில் உள்ள அனைவரும் மிதிலை நோக்கிச் சென்றனர். வழியில், ’சந்திரசைலம்’ எனும் மலைப்பகுதியில் நடை பயின்றனர். அதே நேரத்தில் சுற்றுச்சூழலை ரசித்த வண்ணம், ஆடவர் சிங்கங்களை போல அம்மலை அருகே உலாவித் திரிந்தனர். ஆடவரும், மங்கையரும் அம்மலை வளத்தில் ஈடுபட்டனர். மலையிலிருந்து திரும்புவதற்கு அவர்களுக்கு ஒரு சிறிதும் மனம் வரவில்லை. அவர்கள் பூவில் தேன் உண்ணும் வண்டுகளைப் போல, சந்திரமலையின் சூழலைச் சுவைத்தனர். மலைச்சாரலில் எல்லாப் பக்கங்களிலும் விளையாடினர்.
"பொங்கு தேன் நுகர் பூ மிஞிறு ஆம் என
எங்கும் மாதரும் மைந்தரும் ஈண்டி அத்
துங்க மால் வரைச் சூழல்கள் யாவையும்
தங்கி நீங்கலர் தாம் இனிது ஆடுவார்" (வரைக் காட்சிப் படலம் 825)
மலையை விட்டு இறங்க வேண்டும் என எண்ணுவதும் கூட, அவர்களுக்குத் துன்பமாக இருந்தது. விண்ணுலக இன்பத்தை நுகர்வது போல அவர்கள் உணர்ந்தார்கள். அம்மலையின் சிறப்பு அவர்கள் மனதில் திரும்பத் திரும்ப வந்தது.
"துறக்கம் எய்திய தூயவரேயென
மறக்க கிற்றிலர் அன்னதன் மாண்பெலாம்" (வரைக்காட்சிப் படலம் 826)
3. சித்திரக்கூட மலை
பரத்வாஜ முனிவரைச் சந்தித்த பிறகு, இராம, இலட்சுமணர்கள் சீதையுடன் சித்திரகூட மலையைக் கண்டனர்.
"பிளிறு மேகத்தைப் பிடி என பெரும் பனைத் தடக்கை
களிறு நீட்டும் அச்சித்திரகூடத்தைக் கண்டார்" (வனம்பு கு படலம் 727)
சித்திரக் கூடத்தில் காணப்பட்ட ஒவ்வொரு காட்சிகளையும் மகிழ்வுடன் ரசித்து, சீதைக்கு கூறியபடியே மகிழ்வுடன் நடந்து சென்றான் இராமன்.
"பொருந்திய காதலோடு ஆண் குரங்கு நீராடிய பின், குரங்கு அருவி நீரை எடுத்து ஆண் குரங்கின் மீது வீசியது. உடனே ஆண் குரங்கு மலையின் உயர்ந்த சிகரம் ஏறி அங்கே படிந்துள்ள தொகுதியான மேகங்களை மழைத்துளிகள் பெண் குரங்கின் மீது விழுமாறு பிழிவதைப் பார்ப்பாய் என்று இராமன், சீதையிடம் கூறினான்.
"அருவி நீர்கொடு வீச தான் அப் புறத்து ஏறி
கருவி மா மழை உதிர்ப்பது ஓர் கடுவனைக் காணாய்” (சித்திரகூடப்படலம் 741)
4. பிரசரவணம் எனும் குன்று
அகத்தியரைக் கண்டு அவரிடமிருந்து விடை பெற்று வந்த இராம, இலட்சுமணரும் சீதையும் பிரசரவண குன்றின் மீது இருந்த ஜடாயுவைக் கண்டனர். இராமர் இலட்சுமணரான அவ்விருவரும் தன் நண்பனான தசரதனின் சாயல் கொண்டிருப்பதைக் கண்ட ஜடாயு அவர்களை யார் என வினவினார். தசரதன் மைந்தன் என அவர்கள் கூற, அம்மன்னனின் நலம் கேட்டார். தசரதன் பற்றி கூற ஜடாயு அரற்றினார்.
“நடந்தனர் காவதம் பலவும் நல் நதி
கிடந்தன நின்றன கிரிகள் கேண்மையின்
தொடர்ந்தன துவன்றின சூழல் யாவையும்
கடந்தனர் கண்டனர் கழுகின் வேந்தையே” (சடாயு காண் படலம் 175)
இராமனின் கட்டளைப்படி இலட்சுமணன், சுக்ரீவனுக்கு முடிசூட்டினான். இராமன் அரச நீதிகளைச் சுக்ரீவனுக்கு பலபடப் போதித்தான். அது கார் காலத் தொடக்கம். காரும், கூதிருமான நான்கு மாதங்கள் சென்ற பின் உன் குரங்குப் படையைச் சேர்த்து வருக என்று இராமன் கூறினான். தன்னுடன் தன் அரண்மனை வந்து தங்குமாறு இராம இலட்சுமணர்களைச் சுக்ரீவன் வேண்டினான். காடு வாழ்வதே என் விரதம் என்று இராம, இலட்சுமணர் சுக்ரீவன் வதியும் மாலையை விடுத்து 'வேறு ஓர் உயர் தடங் குன்றம் உற்றார்"(4144) அவர்கள் சென்று தங்கிய மலையின் பெயரை கம்பர் குறிப்பிடவில்லை. வால்மீகி ராமாயணமும், அத்யாத்ம ராமாயணமும் அது பிரசிவணமலை என்று குறிப்பிடுகின்றன. இம்மலைக்கு ’மாலிய வான்மலை’ என்ற பெயரும் உண்டு உரை குறிப்பு. (கோவை கம்பன் அறநிலைப்பதிப்பு)
5. சக்கரவாள மலை
இராமன், இலட்சுமணர் இருவரும் கவந்தனிடம் அகப்பட்டுக் கொண்டனர். 'சக்கரவாளம்' எனும் பெரிய மலை ஒன்று உள்ளது. அது நெருங்கி வந்து நெருக்குகிறது என்று சொல்லுமாறு அமைந்த கவந்தனின் கரங்கள் எனும் மதிலுக்குள் சிக்கிய இருவரும், தேன் போல இனிய மொழியை பேசும் சீதையின் பொருட்டு அரக்கரின் சேனை இங்கு வந்து பெருமிதத்தோடு நம்மை வளைத்துக் கொண்டது என்று எண்ணினர். கவந்தனின் கைகள் வளைத்ததை சக்கரவாள மலை நெருங்கி நிறுத்தியதற்கு கம்பர் ஒப்பிடுகிறார்.
"தேமொழித் திறத்தினால் அரக்கர் சேனை வந்து
ஏமுற வளைத்தது என்று உவகை எய்தினார்
நேமி மால் வரை அது நெருக்குகின்றதே
ஆம் எனல் ஆய கைம் மதிட்குள் ஆயினார்" (கவந்தன் படலம் 1132)
6. ரிசிய முக மலை
கபந்தன் சாப விமோசனம் பெற்று கந்தர்வனாக வடிவெடுத்து, சுக்ரீவன் தங்கியுள்ள ரிசயமுக மலைக்குச் செல்லுமாறு இராம, இலட்சுமணர்களிடம் கூறினான். இராம இலட்சுமணர்கள் ரிசிய முக மலைக்குச் சென்றனர். வழியில் அனுமனைச் சந்தித்தனர். வாலிக்குப் பயந்து சுக்ரீவன் இந்த மலையில்தான் வாழ்ந்து வருகிறான். மதங்க முனிவர் வாலிக்கு இட்ட சாபத்தினால் அவனும் இந்த மலைக்கு வர அஞ்சினான்.
"எய்தினார் சவரி நெடிது ஏய மால் வரை எளிதின்
நொய்தின் ஏறினர் அதனின் நோன்மை சால் கவி அரசு
செய்வது ஓர்கிலன் அனையர் தெவ்வர் ஆம் என வெருவி
உய்தும் நாம் என விரைவின் ஓடினான் மலைமுழையின் " (அனுமப் படலம் 43)
7. மேருமலை
சிகரங்களைக் கொண்டது. அனைத்து மலைகளின் ராஜாவாகக் கருதப்படும். மத நூல்களில் வர்ணிக்கப்படும் பெரியமலை. வாலி இடம்விட்டு எழுவானானால் அந்த அதிர்ச்சியில் மேரு முதலிய பெரிய மலைகள் எல்லாம் வேரொடும் இடம் பெயர்ந்து போகும்.
"மேருவே முதல் கிரிகள் வேரெடும்
பேருமே அவன் பேருமேல் நெடுங்
காரும் வானமும் கதிரும் நாகமும்" (நட்புகோட்படலம் 119)
8. மந்தரமலை
தேவர்கள் வேண்டிக் கொண்டதால் பாற்கடலை மந்தரமலையில் சுற்றிய வாசுகி என்னும் பாம்பின் உடம்பு தேயும்படியாகவும், அமுதம் தோன்றும்படியாகவும் வாலி கடைந்தான்.
"கழறு தேவரோடு அவுணர் கண்ணின் நின்று
உழலும் மந்தரத்து உருவு தேய முன்" (நட்புகோட்படலம் 115)
9. கிட்கிந்தை மலை
வானர அரசன் வாலி அரசாண்ட பகுதி கிட்கிந்தை மலை. மரங்கள் வளர்ந்து விளங்கும் அருவிகளையுடையது. குரங்குகள் வாழும் இடம் என்னும் ஒரு குற்றத்தையுடையதே அல்லாமல், செல்வம், இன்பம் ஆகியவற்றால் அரங்கங்கள் பலவுடைய பொன் உலகத்தை விட மேம்பட்டது.
"குரங்கு உறை இருக்கை என்னும் குற்றமே குற்றம் அல்லாமல்
அரங்கெழு துறக்க நாட்டுக்கு அரச எனல் ஆகும் அன்றே" (அரசியற்படலம் 424)
10. விந்திய மலை
சீதையைத் தேடி வானரக் கூட்டங்களுடன் அனுமன் முதலானோர் புறப்பட்டனர். தென்திசை ஏகும் வானர வீரர்களுக்குச் சுக்ரீவன் வழி கூறும் போது, “நீங்கள் இங்கிருந்து புறப்பட்டு அழகுமிக்க ஒளி வீசும் ஆயிரம் சிகரங்கள் காணப்படுவதால் பெருவடிவத்தைக் கொண்ட திருமால்தானோ என்று எதிரே சென்று வணங்குவதற்குரிய விந்திய மலையை முதலில் சென்று சேருவீராக. அந்த விந்திய மலையில் சீதையைத் தேடித் தீர்த்த பின், தேவர்களும் வந்து நீராடுவதற்குரிய நீரால் அடித்து வரப்பட்ட மலர்களில் உள்ள தேனை உண்டு, கழிப்பால் வண்டுகள் பஞ்சமும் எனும் பண்ணை பாட பெறுகின்றதுமான பல வகையான மணிகளின் ஒலிகள் இருள் இருந்த இடம் தெரியாது விலகுவதற்கு காரணமான நர்மதை ஆற்றினைப் போய் சேருங்கள்” என்று கூறினான்.
"நீண்ட நேமி கொலாம் என நேர் தொழ
வேண்டும் விந்த மலையினை மேவுவீர்" (நாடவிட்டப்படலம் 749)
அவர்கள் விரைந்து சென்று விந்திய மலையை அடைந்தனர். விந்திய மலை முழுவதும் ஒரு பகல் நன்றாகத் தேடினார்கள். அவர்கள் அந்த மலையில் தேடாத இடமே இல்லை. பின்னர் அங்கிருந்து நர்மதை ஆற்றுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். நர்மதை ஆற்றைச் சூழ்ந்த பகுதிகளில் நன்றாகத் தேடினார்கள். எங்கும் சீதையைக் காணவில்லை. அகத்தியன் யோக மார்க்கத்தில் இருக்கும் பெரிய முனிவர்கள் துன்பம் அடையாமல் விந்திய மலையைக் கடந்து செல்லும் வழி யாது என்று கேட்க, தன் திருவடியால் அம்மலையை மிதித்து ஏறி, “பெரிய மேகங்களின் வரிசைகள் தவழுகின்ற அந்த விந்தியம் என்னும் வானளாவிய உயர்ந்த மலையானது, கீழே உள்ள பாதாள உலகத்தை அடையும்படி ஒரு யானையைப் போல பெருமிதத்துடன் நிற்கும்” என்றான்.
11. ஏமகூட மலை
நர்மதை ஆற்றைக் கடந்து, ஏமகூட மலையை ஏதினார்கள். அந்தப் பகுதி இராவணனின் இருப்பிடமோ என்று ஐயுற்றுத் தேடினார்கள். சீதையைக் காணாமையால், இது இராவணனின் இருப்பிடம் அன்று, என முடிவு செய்தனர். பின்னர் ஏமகூடமலையை விட்டுக் கீழே இறங்கினர். பல புண்ணிய ஆறுகளின் சங்கமமும், மிகச்சிறந்த இரத்தினங்களும் நிரம்பப் பெற்றது ஏமகூடமலை. பொன்னிறம் வீசும் அம்மலை தந்த ஒளியால் சுற்றியுள்ள இடங்கள் பொன் மயமாகக் காட்சி தந்தன. மலை கொட்டும் நீரும் பொன் நிறம் காட்டிற்று.
"செம்பொன் நல்கிரியை ஓர் பகலில்தேடினார்
கொம்பினைக் கண்டிலர் குப்புற்று ஏகினார்" (பிலம்புக்குப்படலம் 830)
12. பாண்டு மலை
நீண்ட வடிவம் எடுத்த திருமாலின் பெரிய திருவடிகளின் கீழ் ஆகாய கங்கை வந்து விழுகின்றதோ எனக்கூறும் படியாக, பாண்டு என்ற அழகிய மலையின் வானத்தைத் தொடுமாறு உயர்ந்துள்ள குளிர்ந்த உச்சியினைப் போய்த் தொடுமாறு வானரர்கள் போய் அடைந்தனர். அந்தப் பாண்டு மலை உலகத்தில் பரவிய இருளைத் தாக்கி ஒழித்து, வானத்திலிருந்து எழுந்து தோன்றிய சந்திரன் வியப்பை உண்டாக்கும் செழுமையான நிலவின் ஒளி வீசுவதால் மனத்தில் அருள் சிறிதும் தோன்றுதல் இல்லாத அரக்கனான இராவணன் மீது, அவன் கீழே விழுந்து உருளும்படி அழுத்திய வலிய கைலாய மலையைப் போல விளங்கியது.
"பாண்டம் மலைப் படர் விசும்பினைத்...
தீண்டுகின்ற தண் சிகரம் எய்தினர்" (ஆறுசெல்படலம் 908)
13. சந்திரகாந்த மலை
சீதையைத் தேடிச் செல்லும் வானர வீரர்களுக்கு வழி கூறும் போது சுக்ரீவன் கூறுகிறான். சுவணம் என்ற ஆற்றை தாண்டிய பின் சூரியகாந்தம் எனக் கூறுமாறு புகழ்பெற்று விளங்கிய அந்த மலையில் உள்ள பெண்களால் வீசப்பட்ட கவணினின்று வெளிப்படும் கற்கள் வீசுவதற்கு இடமான பெரிய மலையிலும் சந்திரகாந்த மலையிலும் தேடிப்பாருங்கள். அம்மலைகளை விட்டு அப்பால் சென்றால் அகலமான பல நாடுகளைக் கடந்து போனால் ஆதிசேஷன் கருடனுக்கு அஞ்சி மறைந்து வாழ்கின்ற கொங்கண நாட்டையும் குவிந்தநாட்டையும் போய்ச் சேருவீர்கள்.
"கவணுமிழ் கல் வெயில் இயங்கும் கன வரையும்...
சந்திரகாந்தகமும் காண்பீர்" (நாடவிட்ட படலம் 760)
14. அருந்ததி மலை
சிவன் உயர்ந்தவன், உலகை அளந்த திருமால் சிறந்தவன் என்று இதைப் பகுத்து கூறத்தக்கத் தத்துவ ஞானம் இல்லாத மூடர் நற்கதியை அடைதல் அருமையாதல் போல, புகுவதற்கு அரிய தன்மையை உடையதான வானத்தில் உள்ள சுரந்தியின் அருகில் உள்ளதும், வானத்தை அளாவிய தன் சிகரங்களில் சூரிய, சந்திரர் சேர்ந்தலை உடையதும், தன்னை வணங்கியவருக்கு எல்லாம் சிறந்த வரங்களைக் கொடுக்கும் தன்மையை உடையதுமான அருந்ததி என்ற மலையை அடைவீர்.
"சுர நதியின் அயலது வான் தோய் குடுமிச்
சுடர்த் தொகைய தொழுவோர்க்கு எல்லாம்
வரன் அதிகம் தரும் தகைய அருந்ததி யாம்
நெடுமலையை வணங்கி அப்பால்" (நாடவிட்ட படலம் 761)
15. மரகத மலை
எல்லா உயிர்களும் அஞ்சும் வெப்பமான பாலைவனமும், ஆறுகளும், பெரிய சுனைகளும், அகில் மரங்களும், உயர்ந்து வளர்ந்த சந்தன மரங்களும், வளப்பமான நாடுகளும் உங்களுக்குப் பிற்படும்படி அவற்றைக் கடந்து செல்வீர். அதன் பின் உள்ள வழியில் சென்றால், கருடன் விடம் கொண்ட நாகங்களுக்கு அமிர்தத்தை தந்து தன் தாயான வநதையை அடிமைத்தன்மை நின்று விடுவித்து கிட்டுவதற்கு அரிய இடமான குறைவில்லாத மரகத மலையை வணங்கி அம்மலையின் பக்கத்து வழியாக அப்பால் செல்லுங்கள் என்றான்.
"நஞ்சு இவரும் மிடற்று அரவுக்கு அமிர்து நனி
கொடுத்து ஆயைக் கலுழன் நல்கும்
எஞ்சல் இல் மரகதப் பொருப்பை இறைஞ்சி அதன்
புறம் சார ஏகி மாதோ" (நாடவிட்ட படலம் 762)
முல்லை நிலத்து இடைச்சியர், மரகத மலை மேல் உள்ள குறிஞ்சி நிலப் பெண்களிடம் பயிரைக் கொடுத்து, அதற்கு ஈடாகத் தேனைப் பெற்றுக் கொள்கின்றனர். இதுதான் பண்டமாற்று வாணிபம்.
16. வேங்கட மலை
அங்கதன், அனுமன், சாம்பவன் குழுவினரிடம் திருவேங்கடத்தின் சிறப்பை சுக்ரீவன் விவரித்தான். வேங்கடத்துக்கு ஈடான மலை ஏதுமில்லை. நினைப்பவர் போற்றி ஏத்தும் மலை வேங்கட மலை. பிறவிகளை ஒழிப்பது வேங்கட மலை. தேவகன்னியர் வந்து தொழும் மலை வேங்கட மலை. இசை ஒலிக்கும் மலை என்பதால், யானைகளும், புலிகளும் பகைமை மறந்து வாழும் மலை வேங்கட மலை. தவசி சூழ்ந்துள்ள மலை. சுதர்சனச் சக்கரம் கொண்ட திருமாலின் இரண்டு திருவடிகளையும் தாங்கிய மலை திருவேங்கட மலை. திருமலையில் புகுந்த அளவிலே இருவினை தொல்லைகள் ஒளிந்து நீங்கள் முக்தி அடைவீர்கள். அவ்வாறு நீங்கள் முக்தி அடைந்து விட்டால், நீங்கள் சீதையைத் தேடும் செயல் நடைபெறாது. ஆகவே அம்மலைக்குச் செல்ல வேண்டாம் என சுக்ரீவன் கூறினான்.
"கோடுஉறு மால் வரை அதனைக் குறிகுதிரேல்...
உம் நெடிய கொடுமை நீங்கி
வீடு உறுதிர் ஆதலினால் விலங்குதிர், அப்
புறத்து... நீர்மேவு தொண்டை" (நாடவிட்ட படலம் 766)
17. பொதிகை மலை
அகத்தியர் வாழும் பொதிகை மலை பற்றி;
"தென் தமிழ்நாட்டு அகன் பொதியில் திரு முனிவன்
தமிழ்ச்சங்கம் சேர்கிற் பீரெல்” (நாடவிட்ட படலம் 768)
சுக்ரீவன் வானரங்களுக்கு வழி சொல்லும் போது, தென்திசை நோக்கிச் செல்பவர்கள், அங்கே பொதிகை மலையைப் பார்ப்பீர்கள். அது அகத்தியர் தமிழ்ப் புலவர்கள் புடைசூழ வாழ்கின்ற உறைவிடம் ஆகும். அதை வணங்கி வலமாகச் செல்வீராக என்கிறார். அகத்தியரைப் பற்றிக் கூறும்போது,
"நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்" (அகத்தியப்படலம் 151)
என்று தமிழ் மொழியின் சிறப்பை அகத்தியர் மூலம் கூறுகிறார் கம்பர். தமிழால் உலகளந்தான் என்று தமிழை உலகம் முழுவதும் பரவச் செய்தான் என்பது பொருளாகும்.
அகத்தியன், முன்னொரு காலத்தில் தென்திசை உயர்ந்து வடதிசை தாழ்ந்து போக, நெருங்கிய பாம்புகளைத் தரித்துள்ள சிவன் பூப்படையாத குற்றமற்ற தவத்தை உடையவனே தென்திசை கண் செல்க என்று கூற, அதன்படி வானளாவி உயர்ந்து உள்ள பெரிய பொதிய மலையை அடைந்து அங்கே சிவபெருமானுக்குச் சமமாக உலகம் சமநிலை அடையும்படி தங்கியிருந்தவன்.
"நீசம் உற வானின் நெடு மா மலயம் நேரா
ஈசன் நிகர் ஆய் உலகுசீர் பெற இருந்தான்" (அகத்தியப்படலம் 155)
18. மைந்நாக மலை
இராமனின் இலக்கைத் தன் இலக்காகக் கொண்ட அனுமன், கடல் தாண்டி இலங்கை செல்ல முற்பட்டபோது, மைந்நாகமலை அன்பினால் கடலினின்று மேலெழுந்து, விருந்து அருந்திச் செல்லும் படி அவனைத் தடுக்கிறது. கடலினுள் இருந்து எழுந்து வந்து அவனுக்கு எதிரே நின்றது. அம்மலையை அனுமன் தள்ளிவிட்டான். விழுந்த மலை மனித வடிவில் எழுந்து வந்து, எந்தாய் என்னை பகைவன் என எண்ண வேண்டாம். முன்பு மலைகளின் சிறகை, இந்திரன் அரிந்த போது, வாயு பகவான் என்னைக் காப்பாற்றினார். நீர் அவர் மைந்தன் ஆதலின் உயர்ந்த தோளாய் உமக்கு உதவ வந்தேன் என்று கூறியது.
"கைந்நாகம் அந்நாள் கடல்வந்தது ஓர்காட்சிதோன்ற...
மைந்நாகம் என்னும் மலைவான் உற வந்தது அன்றே" (கடல்தாவுபடலம் 39)
19. மகேந்திர மலை
பாற்கடலைக் கலக்கிய மத்து இது என்று கூறுமாறு மகேந்திர மலை சுழன்றது. அம்மலையின் மேற்குப் பகுதியில் இருந்து கொண்டு, ஐம்பொறிகளை அடக்கித் தவம் செய்யும் முனிவர்கள், தாம் தொடங்கிய தவம் பாதி முடிந்து மீதி முடியாமலேயே உடம்பில் பொருந்திய பாசம் ஒழியாமலே மலைச்சுழற்சியால் தூக்கி எறியப்பட்டு மேலுலகம் செல்பவர்களை ஒத்தனர். அனுமான் அடி ஒன்றியத்தை பொறுக்க மாட்டாமல் மகேந்திரமலை வெடித்தது. அதனால் நடுக்கம் எழுதிய மயில் போன்ற மனைவியர் அம்மலையில் இருந்த தம் கணவர் ஆகிய தேவர்களை தழுவிக் கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் இராவணன் கயிலை மலையை தூக்க, அஞ்சிய பார்வதி தழுவிக் கொண்ட சிவபெருமானை ஒத்திருந்தனர்.
"அயில் எயிற்று அரக்கன் அள்ளத் திரிந்த நாள் அணங்கு புல்லக்
கயிலையில் இருந்த தேவைத் தனித்தனி கடுத்தல் செய்தார்" (கடல்தாவு படலம் 11)
20. பவளமலை
மகேந்திர மலை நின்று இலங்கை கடலைத் தாவி பவள மலையில் அனுமன் இறங்கினான். பவளமலையில் பாய்ந்த அனுமன், இலங்கையை உற்று நோக்கினான். பின்னர் காவல் மிகுந்த இலங்கை நகரை அதன் வாயிலின் வழியே அடைவது இயலாது என்பதை உணர்ந்தான். தேனூறும் தெய்வத் தன்மையுள்ள கற்பக மரத்தைப் பெற்ற தேவலோகத்தை நெருங்கி வான் வழியே செல்லும் அனுமன் பொற்கலசங்களையும் நாஞ்சில் என்ன ஒரு உறுப்பினையும் உடைய இலங்கை நகரின் மதிலில் தங்கி அந்நகரை பார்க்காமல் அந்த மூதூரில் இருந்து சிறிது ஒதுங்கிச் சென்று அங்கேயுள்ள பசும் சுடர் வீசும் சோலைகளை உடைய பெரிய பவளமலையின் மீது பாய்ந்தான். வானத்தின் மீது செல்லும் அனுமன் அங்கிருந்து விலகித் தன் மீது பாய்ந்ததனால், இலங்கையைச் சார்ந்த பவளமலை அசைக்கப்பட்டு அப்புறமும், இப்புறமுமாகத் தள்ளாடும். அவ்வாறு தள்ளாடும் பவளமலை, மழையோடு வீசும் காற்று, தன் போக்குக்குத் தடையாகி தாக்க, அதனால் தளர்ந்து, தன்னிடம் உள்ள பொருள்களைச் சிந்துகின்ற மரக்கலம் போன்றது என்று சொல்லுமாறு இருந்தது.
"விசும்புடைச் செல்லும் வீரன் விலங்கி. வேறு இலங்கை மூதூர்ப்
பசும்சுடர்ச் சோலைத்து ஆங்குஓர் பவளமால் வரையில் பாய்ந்தான்" (கடல்தாவு படலம் 89)
ஊரையும், ஊரில் உள்ள அனைத்து வளங்களையும் கண்டு ரசித்த அனுமான், தனது பெரிய உடலைச் சிறிதாகச் சுருக்கிக் கொண்டு அழகிய சாரலையுடைய அப்பவளமலையில் இருந்தான்.
21. சுவேத மலை
இலங்கை நகரத்தில் உள்ளது சுவேத மலை. இராமன் சுவேத மலையில் தங்கினார்.
“பெருந் துணை வீர்ரஃ சுற்றத் தம்பியும் பின்பு செல்ல
இருந்த மால் மலையின் உச்சி ஏறினன் இராமன் இப்பால்” (இலங்கை காண் படலம் 777)
22. சஞ்சீவி மலை
இந்திரஜித், இலட்சுமணன் மீது பிரம்மாஸ்திரம் ஏவினான். நூறாயிரம் அம்புகள் சுற்றி வளைத்த போது, இலட்சுமணன், சுக்ரீவன், அங்கதன், அனுமன் உட்பட அனைவரும் மூர்ச்சித்து விழுந்தனர். வீரர்களுக்கு உணவு கொண்டு வரச் சென்ற வீடணன் வந்து பார்த்து, அனுமனை எழுப்பினான். இருவருமாகச் சென்று சாம்பனைக் கண்டனர். அவர் இறந்தாரையும் எழுப்பும் மருந்து சஞ்சீவி மலையில் இருப்பதனையும், அதனைக் கொண்டு வருவதற்குரிய வழி வகைகளையும் அனுமனுக்குக் கூறினார்.
கடல்படையின் வேகத்தோடு செல்லும் அனுமன் பேர்பெற்ற ஆயிரம் யோசனை தூரம் கொண்ட இடைவெளியை அடைந்து, முடிவில்லாத காமபோகத்தைத் துய்க்கும் தேவர்க் கூட்டத்தைக் கண்டான். அப்பால் நிடதமலைச் சிகரத்தை அடைந்தார். மனத்துக்கும் மறக்க இயலாத அறிவை உடையவர் அமர்ந்து கண்ணுறும் ஞானக் கண்களுக்கும், எதையும் நினைக்கும் திறனுடைய தெய்வ உள்ளத்திற்கும் எட்டாதபடி விரைவை உடையவனாகிய அனுமன், பூமிக்கும் திசைகளில் நியமிக்கப்பட்டுள்ள எல்லைக்கும் மலரவனான பிரம்மதேவனின் வீற்றிருந்து அருளும் சத்திய லோகத்துக்கும் அளக்கும் கருவி போன்றுள்ள மேரு மலையின் மேலேச் சென்றான். இமைக்காத விழிகளைப் பெற்ற தேவரும், அதன் தன்மை இது என்று ஒரு சிறிதும் அறிய முடியாத வடக்கிலுள்ள மேரு கிரி மீது சென்று அனுமான் குளிர்ந்த சமுத்திரத்தை சூழப்பட்ட இடமான பூமியில் பெருமை வாய்ந்த நாவலம் தீவு ஒன்றை காவலைக் கொண்ட மூன்று உலகமும் புகழ்ந்து கூறுவதற்குக் காரணமான தெய்வத்தன்மை பெற்ற பெரிய நாவல் மரத்தைப் பார்த்தான்.
"மண்ணுக்கும் திசைகள் வைத்த வரம்பிற்கும் மலரோன் வைகும்
விண்ணுக்கும் அளவை ஆன மேருவின் மீது சென்றான்” (மருத்துமலைப் படலம் 2691)
மருத்துவமலை - மருத்துவக் குணங்கள்
அனுமனிடம் மருத்துவமலையைக் கொணரச் சொன்னபோது, அம்மலையின் மருத்துவக் குணங்கள் குறித்து சாம்பன் கூறினான். நீ கொணர உள்ள மருத்துவமலையில் உள்ள மருந்து மூலிகைகள்;
1. சஞ்சீவகரணி - இறந்தவர்களைப் பிழைப்பிப்பது.
2. சந்தானகரணி - உடம்பு வெவ்வேறு கூறுகளாய்ப் பிரிக்கப்பட்டாலும் பொருந்தச் செய்வது.
3. சல்லிய கரணி - உடம்பிலேப் புதைந்த படைக்கலன்களை வெளிப்படும்படி செய்வது.
4. சாவரணியகரணி - அடையாளம் தெரியாத வண்ணம் உருவழிந்த உடம்பை அதன் இயற்கை உருவம் அடையச் செய்வது.
“ மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்
மெய் வேறு வகிர்களாகக்
கீண்டாலும் பொருதுவிக்கும் ஒரு மருந்தும்
படைக்கலன்கள் கிளர்ப்பது ஒன்றும்
மீண்டேயும் தவ உருவை அருளுவது ஓர் மெய்ம்
மருந்தும் உள நீ வீர
ஆண்டுஏகி கொணர்தி என அடையாளத்தொடும்
உரைத்தான் அறிவின் மிக்கான்” (மருத்துவமலைப் படலம் 2671)
என்று அம் மருத்துவமலையின் அரிய மருத்துவ குணங்களைச் சாம்பவன் அனுமனுக்குச் சொன்னான். இம்மருந்துகள் தேவர், அசுரர் திருப்பாற்கடலைக் கடைந்த காலத்தில் தோன்றியவை. இவைகளை தேவர்கள் பத்திரமாக வைத்திருக்கின்றார்கள். வாமனனாக திருமால் திரிவிக்கிரமனாய் மூவுலகும் ஈரடியால் அடைந்த வெற்றியை நான் பறையறைந்து பகிரங்கப்படுத்த உலகெங்கும் திரிந்த போது, இந்த மருத்துவ மூலிகைகளைக் கண்டு இவற்றின் குணங்களை முனிவர்கள் மொழியக் கேட்டுத் தெரியலானேன். இம் மூலிகைகளை எண்ணிறந்த தெய்வங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் பெரிய சக்கராயுதம் ஒன்று சுற்றிச் சுழன்று காத்துக் கொண்டிருக்கிறது.
விண்ணும் பிளக்கும்படி வலிய மேரு மலைக்கு மேலேச் செல்லும் பெருமை உடையவனும், பிரம்மபட்டத்தை உண்மையாக அடையப் போகின்றவனும், இனிமேல் பிறப்பு இல்லாதவனும் ஆகிய அனுமான் திரிவிக்கிரமனாகி உலகை ஈரடியால் வளந்த நாளிலே வளர்ந்த அரி என்னும் கரிய திருமால் போன்று உயர்ந்து நின்ற நீலம் எனும் பெரிய மலையைக் கண்டான். மலையைக் கண்டு தெய்வத் தன்மை வாய்ந்த மருந்துக்கு அறிகுறி மேலுலலகம் முழுவதும் சூரியனின் ஒளி குறையும்படி ஒளி விடுவது என ஊகித்து அறிந்தான்.அதைத் தெரிந்து மூலிகை எது என்று தெரிய நேரம் ஆகுமோ என்று எண்ணி அந்த மலையையேக் கையில் தூக்கிக் கொண்டு விரைந்து வந்தான்.
"நல் குன்றம் அதனைக் கண்டான் உணர்ந்தனன் நாகம் முற்ற
எல் குன்ற எறியும் தெய்வ மருந்து அடையாளம் என்ன" (மருத்துமலைப் படலம் 2704)
மருத்துவமலையில் வரவால் இலட்சுமணன், அங்கதன், சுக்ரீவன் முதலானவர்கள் உயிர் பெற்று எழுந்தனர். வானவர் பேராரவாரம் செய்தனர்.
23. கைலாய மலை
அனுமன் மருந்துமலையைத் தேடிப் போகும்போது, பெரிய மலையான இமயத்தையும் அடைந்தான். அங்குள்ள கண் இமைக்காதவரும், பொறுமையுடைய முனிவரும், மேலும் தர்ம வழியில் நடப்பவராகிய அனைவரும் நீ ஏற்றுக்கொண்டுள்ள காரியம் இனிதே முடிக என வாழ்த்தினர். அதற்குப் பிறகு உமாதேவியைத் தனது இடப்பாகத்தில் அமர்த்திய சிவன் வீற்றிருக்கும் கயிலாயம் கண்டு மகிழ்ந்தான். வடகிழக்கில் தோன்றும் மழுப்படையை உடைய சிவபெருமான் வீற்றிருக்கும் பெரிய கைலாய மலையை நோக்கி, தாமரை மலர் போன்ற சிவந்த கைகளைக் குவித்து வணங்கிச் செல்லும் அனுமனை அந்தப் பரமனும் அன்புடன் நோக்கி உமாதேவிக்குக் காண்பித்து இவன் வாயுவின் மைந்தன் என்றான்.
"அமைக நின் கருமம் என்று வாழ்த்தினர் அதனுக்கு அப்பால்
உமையொரு பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான்" (மருத்துமலைப்படலம் 2687)
24. திரிகூட மலை
திரிகூடமலையின் மேல்தான் இலங்கை நகரமே அமைந்துள்ளது.
“பொன் பிறங்கல் இலங்கை பொருந்தலர்” (சூளாமணிப் படலம் 621)
இலங்கையில் இரவில் இருளே இல்லை. பொன்மயமான திரிகூடமலை மீதும், பொன்னாலான மதிலின் நடுவிலும் அமைந்த ஒளியாக விளங்கும் மாணிக்கங்கள் எங்கெங்கும் ஒளிமயமே. இருள் என்பது இல்லை. எனவே அந்நாளில் இரவில் சஞ்சரிக்கும் நிசிசரர் ஆகிவிட்டனர்.
முடிவுரை
நால்வகை அரண்களாவன நிலஅரண், நீர்அரண், காட்டரண், மலைஅரண் ஆகியவைகளாகும். அது மட்டுமல்லாது, இயற்கை வர்ணனையாக மலை குறித்து கூறப்பட்டுள்ளது. கம்பராமாயணத்தில் க்ரௌஞ்ச மலை, சந்திரசைலமலை, சித்திரக்கூடமலை, பிரசிரவணமலை, சக்கரவாளமலை, ரிசியபுங்கமலை, மேருமலை, மந்தரமலை, கிட்கிந்தை மலை, விந்தியமலை, ஏமகூடமலை பாண்டு மலை, சந்திரக்காந்தமலை, அருந்ததிமலை, மரகதமலை, திருவேங்கடமலை, பொதிகைமலை, மைந்நாகமலை, மகேந்திர மலை, பவளமலை, சுவேதமலை, மருந்துமலை, கைலாய மலை, திரிகூடமலை ஆகிய இருபத்தி நான்கு மலைகள் குறித்து சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.
துணை நூற்பட்டியல்
1. இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம், சென்னை, 2016.
2. காலமும் கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி), கபிலன் பதிப்பகம், புதுச்சேரி, சென்னை.
3. கம்பன் புதிய தேடல், அ.அ. ஞானசந்தரத்தரசு, தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
4. எல்லைகள் நீத்த இராமகாதை, பழ.கருப்பையா, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.
5. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
6. தமிழ்ப்பெரியசாமி, தமிழ்விடுதூது, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2010.
7.தேவநேயப்பாவாணர்.ஞா., சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், பதிப்பாசிரியர்: புலவர் அ.நக்கீரன், தமிழ் மண் பதிப்பகம், சென்னை, 2000.
8. நடராசன்.பி.ரா., தண்டியலங்காரம், சாரதா பதிப்பகம், சென்னை, 2012.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.