கம்பராமாயணத்தில் சடங்குகள்
முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை.
முன்னுரை
மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை, பல்வேறு வகையான சடங்குகளைப் பின்பற்றுகின்றான். நம்பிக்கை அடிப்படையில், தலைமுறை தலைமுறையாகச் செய்யப்படும் செயல்கள், ’சடங்கு’ எனப்படும். ஆசையினாலும், அச்சத்தினாலும் உருப்பெறும் பழக்கவழக்கங்கள், நாளடைவில் மக்களின் வாழ்க்கைக்கேற்ப சடங்குகளாக மாற்றப்படும். நம் முன்னோரிடமிருந்து, நாம் பெற்ற ஒவ்வொரு சடங்கும், அடுத்தடுத்த தலைமுறைக்காக மாற்றி அளிக்கப்படுகின்றது. மனிதனின் வாழ்வோடு சம்பந்தமான பல சடங்குகள் உள்ளன. பிறப்பு, பெயர் சூட்டல், காதுகுத்தல், பூப்படைதல், நிச்சயதார்த்தம், சிலம்பு கழிதல், முடி எடுத்தல், திருமணம், வளைகாப்பு, அறுபதாவது கல்யாணம், இறப்பு ஆகியவற்றோடு தொடர்புடைய சடங்குகள் தமிழ் மக்களின் வாழ்வியலோடு தொடர்புள்ளவையாகும். கம்பராமாயணத்தில் பெயர் சூட்டல், திருமணச் சடங்கு, யாகம் செய்தல், முடி சூட்டல், இறுதிச் சடங்கு செய்தல், கைம்மைச் சடங்கு, குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.
1. யாகம் செய்யும் சடங்கு
தசரதனுக்குப் பிள்ளைப்பேறு இன்மையால், வசிஷ்டர் ஆலோசனைப்படி கலைக்கோட்டு முனிவரை அழைத்து வந்து அஸ்வமேத யாகமும், புத்திரகாமேஷ்டி யாகமும் செய்தார்.
"தகவுடை முனியும் அத்தழலின் நாப்பணே
மக அருள் ஆகுதி வழங்கினான் அரோ" (திருஅவதாரப்படலம் 265)
குபநாசன் என்ற மன்னனும், புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான் என்பதை பாலகாண்டம் வேள்விப் படலம் 409 ஆவது பாடல் மூலம் அறிய முடிகிறது.
2. பெயர் சூட்டல்
தசரதனின் மனைவியர்களான கோசலை, கைகேயி, சுமத்திரைக்கு நான்கு புதல்வர்கள் பிறந்தனர். குலகுரு வசிஷ்டரே குழந்தைகளுக்குப் பெயர் சூட்டினார். கஜேந்திரன் எனும் யானையின் காலை, முதலைக் கடித்த போது, ’ஆதிமூலமே’ என்று அழைக்க, அக்கணத்திலேயே அங்கு வந்து அதனைக் காத்த உண்மைப் பொருளான திருமாலுக்கு, வசிஷ்டன் `இராமன்’ என்னும் திருப்பெயர் சூட்டினார்.
"விராவி அளித்தருள் மெய்ப்பொருளுக்கே
இராமன் எனப் பெயர் ஈந்தனன் அன்றே" (திருஅவதாரப்படலம் 297)
இராமனுக்குப் பின்னே உதித்த, ஒளி மிகுந்த குழந்தைக்கு `பரதன்’ என பெயரிட்டான்.
"வரதன் உதித்திடு மற்றைய ஒளியை
பரதன் எனப் பெயர் பன்னினன் அன்றே" (திருஅவதாரப் படலம் 298)
வஞ்சனை உடைய அரக்கர்கள் அழிவாராயினர். தேவர்கள் பிழைத்தார்கள். பூமாதேவியும் வருத்தம் ஒழிந்தாள். இவற்றுக்குக் காரணமான, எவராலும் தடுக்க முடியாத, அரிய ஆற்றலைப்
பெற்ற ஒளி வடிவமான இக்குழந்தைக்குப், பெயர் `இலக்குவன்’ என்று வசிஷ்டர் கூறினார்.
"விலக்க அரு மொய்ம்பின் விளக்கு ஒளி நாமம்
இலக்குவன் என்ன இசைத்தனன் அன்றே" (திருஅவதாரப்படலம் 299)
இந்த ஒளி வடிவமான குழந்தையினால் எல்லாப் பகைகளும், ஒழியும் என்பதை எண்ணிப் பார்த்து `சத்துருக்கன்’ என்று பெயர் சூட்டினார்.
"எத் திருக்கும் கெடும் என்பதை எண்ணா
சத்துருக்கன் எனச் சாற்றினன் நாமம்" (திருஅவதாரப்படலம் 300)
இவ்வாறு குலகுரு வசிஷ்டர், தசரத மைந்தர்களுக்குப் பெயர் சூட்டினார்.
3. உபநயனச் சடங்கு
வெண்மதி அணிந்த சிவனைப் போன்ற வசிஷ்டன் அவர்களுக்கு சௌளம் (குடுமி வைத்தல்), உபநயனம் (பூணூல் அணிவித்தல்) ஆகிய சடங்குகளை முறைப்படி செய்வித்து, இவ்வளவினது என்று தனியே ஒரு வரம்பு இல்லாத படி, அழிவில்லாத வேதங்களையும், கெடுதல் இல்லாத சாத்திரங்களையும் கற்றுத் தந்தான்.
"சவுளமொடு உபநயம் விதிமுறை தருகுற்று
இவ் வளவது என ஒரு கரை பிறிது இலவா
உவள் அரு மறையினொடு ஒழிவு அறு கலையும்
தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே" (திரு அவதார படலம் 304)
இவ்வாறு உபநயனச்சடங்கு நடைபெற்றதை அறியமுடிகிறது.
4. திருமணச் செய்தியை முரசறைந்து அறிவித்தல்
இராமன் வில்லை வளைத்து, வெற்றி பெற்ற செய்தியைத், தூதர்கள் வந்து சொல்லக் கேட்ட தசரதன், மகிழ்ந்தான். இராமனுக்குத் திருமணம் நடைபெற இருக்கின்ற செய்தியை, ஊர் மக்களுக்கு முரசறைந்து சொல்லுவாயாக என்று ஆணையிட்டான். அதன்படியே வள்ளுவனும் தசரதனது ஆணையை, முரசறைந்து அறிவித்தார். (எழுச்சிப்படலம் 687, 688) மிதிலையில் இராமனுக்கும், சீதைக்கும் திருமணம் நாளை நடைபெற இருப்பதால், அதன் பொருட்டு மலர்களாலும், இந்த அழகான நகரத்தை மேலும் அழகு படுத்துங்கள் என்று ஜனகன் ஆணையிட்டான். அந்த ஆணையை ஏற்று, முரசை ஒலிக்கச் செய்து, வள்ளுவன் அறிவித்தான். (கடிமணப்படலம் 1125) இவ்வாறு தசரதனும், ஜனகனும் திருமணச் செய்தியை நகர மக்களுக்கு முரசறைந்து அறிவித்ததை அறியமுடிகிறது.
5. திருமணத்திற்கு நீராடல் சடங்கு
இராமன் திருமணத்திற்காக, ஏழு கடல்களில் இருந்து கொண்டுவரப்பட்ட நீர்- குறைவில்லாத வேதங்கள் கூறிய புனித நீர் -கங்கை முதலிய, புனித நதிகளின் நீர்- வாசனை கலக்கப்பட்ட நீர்- ஆகிய இந்நீர்களைக் கொண்டு, விதிமுறைப்படி இராமன் மங்கல நீராடினான்.
"கங்கையே முதலவும் கலந்த நீரினால்
மங்கல மஞ்சனம் மரபின் ஆடியே" (கடிமணப்படலம் 1154)
இவ்வாறு திருமணத்திற்கு நீராடல் சடங்கு நடைபெற்றதை அறியமுடிகிறது.
6. திருமணச் சடங்கு
திருமணச் சடங்கு அறிவிப்புத் தொடங்கி, திருமணம் முடியும் வரையிலும், பல சடங்குகள் கடைபிடிக்கப்படுகின்றன. தம் மகள் அல்லது மகன் திருமணத்தை ஊர் மக்கள் அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகப், பெற்றோரால் செய்யப்படும் சடங்காகும். இது சங்க இலக்கியத்தில் கயமனார் பாடல்களிலும் காணப்படுகிறது (அகநானூறு 221) திருமணம் பெண் வீட்டில் நடத்தப்படுவது. திங்களும், ரோகிணியும் சேரும் நல்ல நாளில் நிமித்தம் பார்த்தும், விடியற்காலையில் செய்யப்பட்டது.
வசிஷ்டர் வேத விதிப்படி நடக்கும் திருமணச் சடங்குகளுக்குத் தேவையான, குற்றமறப் பொருந்திய அனைத்தையும், எடுத்து வந்தார். வெண் மணலைச் சதுரமாகப் பரப்பி, உரிய இடங்களில் தருப்பையை வைத்தார். அக்கினி வைப்பதற்கு உரிய, வட்டமான இடத்தை விதிப்படி அமைத்து, மென்மையான மலர்களை உரிய இடங்களில் வைத்தார். அந்த வட்டத்தில் ஓமாக்கினியைக் குவிந்து, எரியும்படி மூட்டி நெய்யைச் சொறிந்தார். பழமையான வேத மந்திரங்களை முறைப்படிக் கூறி, திருமணச் சடங்கை செய்தார். (கடிமணப்படலம்1190)
7. கன்னிகாதானம்
இராமனும், சீதையும் மணமேடைக்கு வந்து, திருமண நிகழ்ச்சிக்காக இடப்பட்ட மனையிலே ஏறி, நெருக்கமாக அமர்ந்திருந்தனர். அப்போது அவ்விருவரும் ஒன்றாக ஒன்றிவிட்ட போகமும், யோகமும் ஒத்திருந்தனர். இராமன் முன்னே ஜனகன் நின்று, `திருமகளும், திருமாலும் போல நீ என் மகளோடு சேர்ந்து வாழ்க’ என்று கூறி, இராமனது பெரிய கையிலே குளிர்ந்த நீரை வார்த்துச் சீதையை கன்னிகாதானம் செய்தார். அப்போது அந்தணர்கள் வாழ்த்தினர். சுமங்கலிப் பெண்கள் பல்லாண்டு பாடினர். மன்னர்கள் பாராட்டினர். புலவர்கள் வாழ்த்தினர். சங்குகள் முழங்கின. வானவர், அரசர் பூத்தூவி வாழ்த்தினர்.
"கோமகன் முன் சனகன் குளிர் நல் நீர்
பூ மகளும் பொருளும் என நீ என்
மா மகள் தன்னொடும் மன்னுதி என்னா
தாமரை அன்ன தடக் கையின் ஈந்தான்" (கடிமணப்படலம் 1192)
8. கையைப் பற்றுதல்
தீக்கடவுள் முன் நின்று, என்றும் பிரியாமல் உடன் இருப்பதாக உறுதி உரைத்து, ஏற்றுக் கொள்வதைக் `கையைப் பற்றுதல்’ விளக்கமாக இருந்து வருகிறது. (அகநானூறு 396) மெய்யறிவு பெற்ற தந்தையான ஜனகன் விரும்பியவனாகி, தன் கைகளில் பிடித்த சீதையின் கைகளை, இராமனின் கைகளுக்கு மாற்ற, இராமன், சீதையின் இடக்கையைத், தன் வலக்கையால் பற்றிக்கொண்டு, திருமணச் சடங்கினைச் செய்தான்.(கடிமணப்படலம் 1195)
9. தீவலம் வருதல்
அந்த மங்கல நாளில் இராமன் வேள்வித் தீயின் முன் மந்திரங்கள் முழுவதும் சொல்லி, ஓமத்தீயை வலம் வந்து வணங்கி, பொரியால் செய்யப்படும் `வாஜஓமம்’ என்பதையும், பிறவற்றையும் செய்து முடித்தனர்.
"இடம் படு தோளவனோடு இயை வேள்வி
தொடங்கிய வெங் கனல் சூழ்வருபோதின்
மடம் படு சிந்தையள் மாறு பிறப்பின்
உடம்பு உயிரைத் தொடர்கின்றதை ஒத்தாள்" (கடிமணப்படலம் 1196)
10. அம்மி மிதித்தல்
இருவரும், ஓமத்தீயை வலமாக வந்து வணங்கி, அழகிய பொரியால் செய்யப்படும் `வாஜ ஓமம்’ என்பதையும், செய்யவேண்டிய பிறவற்றையும் செய்து முடித்தனர். முடித்த பின்பு, ஒளி பொருந்திய அம்மிக் கல்லை மணமகள் மிதிக்கும் சடங்கைச் செய்தனர்.
11. அருந்ததி பார்த்தல்
பின்பு அம்மிக் கல்லை மணமகள் மிதிக்கும் சடங்கைச் செய்து, அருந்ததி தன் எதிர் நிற்க, இராமன் காட்ட, சீதை கண்டனள்.
"வலம்கொடு தீயை வணங்கினர் வந்து
பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி
இலங்கு ஒளி அம்மி மிதித்து எதிர் நின்ற
கலங்கள் இல் கற்பின் அருந்ததி கண்டாள்" (கடிமணப்படலம் 1197)
இவ்வாறு திருமணச்சடங்கு நடைபெற்றதை அறியமுடிகிறது.
12. முடி சூட்டு விழா அறிவிப்பு
தசரதன், மந்திர ஆலோசனை கூட்டத்தில் அனைவரிடமும், அவர்தம் கருத்தைக் கேட்டு, அனைவரும் இராமனுக்கு முடிசூட்ட சம்மதம் தெரிவித்த பிறகு, இராமனை அழைத்து விபரத்தைக் கூறிய பின், வெற்றி வேந்தர்களை அழைக்கும் பொன்னால் அமைந்த ஓலைகளைக் கருடன் திகழும் முத்திரையை இட்டு அனுப்பினான். (மந்திரப்படலம் 72) இராமனை அழைத்துக்கொண்டு வசிஷ்டர், திருமால் கோயிலை அடைந்து சேவித்த பின்பு, கடவுளின் முன்பு நான்கு வேதம் மந்திரங்களை ஓதித், தூய்மை பெற்ற புண்ணிய தீர்த்தத்தால் இராமனை நீராட்டி, அறிவுடையோர் முடிசூட்டும் விழாவுக்காக எண்ணிக் கூறும் எல்லா சடங்குகளையும் முடியச் செய்து, வெண்ணிறமான தர்ப்பைப் புல்லைப் பரப்பி, அதில் அவனை அமரச் செய்தார். அரசனை அடைந்து, அவரிடம் சடங்குகள் செய்து முடிந்ததை அறிவித்தான். அதைக் கேட்ட தசரதன், நகரை அலங்காரம் செய்யும்படி முரசறைந்து தெரிவிக்க என்று வள்ளுவருக்கு ஆணையிட்டான். (மந்தரை சூழ்ச்சி படலம் 116, 117) தசரதனால் ஆணையிடப்பட்ட வள்ளுவர்கள் இராமன் நாளையே நிலமகள் தலைவனாக மணிமுடி சூடுவார். ஆதலால் இத்தலை நகரத்தை அலங்கரிப்பீராக என்று சொல்லி, நகரமுழுவதும் பிரிந்து, தேவர்களும், களிப்புக் கொள்ளும்படி முரசறைந்து தெரிவித்தார்கள்.
13. இறை வழிபாட்டுச் சடங்கு
கோசலையிடம், பெண்கள் இராமன் நாளை முடிசூடப் போகிறான் என்று சொல்ல, அவள் சுமத்திரையோடு சென்று, திருமால் கோயிலை அடைந்தாள். அவரை வழிபட்டு, நான்கு வேதங்கள் கூறும் பூசைகளைச் செய்தாள். தவசி களுக்கெல்லாம், கன்றை உடைய பசுவின் கூட்டத்தைத் தானமாகத் தந்தாள். (மந்திரப்படலம் 94)
14. போருக்கான முரசு அறிவிப்பு
மலை போன்ற உடம்பையும், புகை போன்ற நிறத்தையும் உடைய புருவத்துடன் பொருந்திய தீப் போன்ற கண்களையும் உடைய மகோதரன் எனும் ஒப்பற்ற வீரனை, இராவணன் பார்த்து, இறப்பு இல்லாத சேனையாக இலங்கை நகரில் எது உள்ளதோ அச்சேனை எல்லாவற்றையும் போருக்கு எழுக என, அழகிய முரசை யானை மீது ஏற்றி அறையுமாறு செய்க என்று ஆணையிட்டான்.
"பூதரம் அனைய மேனி புகை நிறப் புருவச் செந்தீ
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி
ஏது உளது இறந்திலாதது இலங்கையுல் இருந்த சேனை
யாதையும் எழுக என்று ஆனை மணி முரசு எற்றுக என்றான்" (இராவணன் தேர் வேறு படலம் 3582)
இவ்வாறு போருக்கான முரசு அறிவிப்பு செய்ததை அறியமுடிகிறது.
15. தானம் செய்தல் சடங்கு
தான் மேற்கொள்ள வேண்டிய அரசாட்சி எனும் செல்வத்தை விலக்கிவிட்டு, காட்டுக்குச் செல்லும் நாளில் இராமன் `யாத்திரா தானம்’ செய்தான். அப்போது தானம் பெறும் ஆசையோடு வந்த, `திரிசடன்’ எனும் வேதியனுக்குப் பசுக் கூட்டத்தைப் பரிசளித்த இராமன், வேதியனின் ஆசை எல்லையில்லாததாக இருந்ததைக் கண்டு புன்னகை செய்ததைச் சீதை நினைத்து அழுதாள்.
"பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள்
அருத்தி வேதியற்கு ஆன் குலம் ஈந்து அவன்
கருத்தின் ஆசைக் கரையின்மை கண்டு இறை
சிரித்த செய்கை நினைத்து அழும் செய்கையாள்"(காட்சி படலம் 354)
நல்லதொரு நிகழ்ச்சி நடைபெற இருக்கின்ற போது, தானம் செய்தல் நடைபெற்றது என்பதை அறிய முடிகிறது. இராவணனுக்கு ஆலோசனை வழங்கியும், எந்த பயனும் இல்லாததை உணர்ந்த இந்திரஜித், வானவர் தன்னிடம் அடைக்கலமாகக் கொடுத்தப் போர்க் கருவிகளையும், கையாளும் வித்தைகளையும், பிறவற்றையும் தேர் மேல் எடுத்துக்கொண்டு விரும்பியவருக்கெல்லாம் `யாத்திரா தானம்’ செய்துவிட்டு, தன்னுடன் வீரர்கள் வரவேண்டாம் என்று கூறிவிட்டுப் போருக்குச் சென்றான்.
"படைக்கல விஞ்சை மற்றும் படைத்தன பலவும் தன்பால்
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன தேர்மேல் ஆக்கிக்
கொடைத் தொழில் வேட்டோருக்கு எல்லாம் கொடுத்தனன் கொடியோன்
தன்னைக்" (இந்திரசித் வதைப்படலம்3070)
இராவணன் போருக்குப் புறப்படும் முன், தேரினை நூல் முறையாகிய விதிப்படி அர்ச்சித்து வழிபட்டு, இத்துணையர் என்று அளவிட்டுச் சொல்ல முடியாத, கணக்கில்லாத அந்தணர்கள் அனைவருக்கும் செய்வதற்குரிய சடங்கின்படி, நல்ல நிதி ஆகிய அளக்க முடியாத பெரும் பொருளை, நினைப்பதற்கும் எட்டாத நிலையில், மிக்கதொரு பெரிய தானமாக உள்ளம் உவந்து அளித்தான். (இராவணன் தேர் ஏறு படலம் 3605)
16. இறப்புச் சடங்கின் முக்கியத்துவம்
தசரதன், வசிஷ்டரிடம் கைகேயி, எனக்கு மனைவியும் அல்ல. பரதன் எனக்கு மகனும் அல்ல. என் இறுதிச் சடங்கிற்கு உரியவன் ஆகான் என்று கூறியப் பின்பே, இறந்தான், (நகர் நீங்குபடலம் 341) தசரதனுக்கு இறுதிச்சடங்கினைச் செய்ய பரதன் வந்தபோது, வசிஷ்டர், தசரதன் கூறியதைக் கூறி இறுதிச்சடங்கை பரதன் செயலாகாது என்றும் கூறி, சத்துருக்கணனைக் கொண்டு, இறுதிச் சடங்கினைச் செய்வித்தார். தன்னால் தன் கடமையைச் செய்ய முடியவில்லையே என்று பரதன் வருந்தினான். ஜடாயு, இராமனிடம் நீயே எனக்கு இறுதி சடங்கினைச் செய்ய வேண்டும் என்றும், வேண்டிக் கொண்டான்.(சடாயு காண் படலம் 201)
சீதையும், அனுமனிடம் இன்னும் ஒரு மாதம் மட்டுமே உயிரோடு இருப்பேன். அதற்குள் இராமன் வந்து என்னை மீட்க வேண்டும். இல்லாவிட்டால், அங்கேயே கங்கையில் எனக்கு இறுதிச் சடங்கினைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். (சூளாமணிப் படலம் 636)
இறந்தவர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து இறுதிக் கடன் செய்தால்தான் அவர்கள் சொர்க்கம் செல்வர் அதைச் செய்ய நீயாவது உயிருடன் இருக்க வேண்டும் என்று கும்பகர்ணன், வீடணனிடம் கூறினான். (கும்பகர்ணன் வதைபடலம் 1377)
யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யவேண்டும். இவ்வாறு இறுதிச்சடங்கின் முக்கியத்துவம் பெறப்படுகிறது.
17. இறுதிச் சடங்கு
மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை, உயிரானது உடலை விட்டு பிரிந்த பின்பும் சடங்கு செய்யும் வழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. இறந்த பிறகு அவருக்காக, அவருடைய பிள்ளைகள் செய்யும் சடங்கு இறுதிச் சடங்காகும். மனிதனின் உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின்பு, மண்ணில் புதைக்கப்பட்டோ அல்லது, நெருப்பில் எரித்து சாம்பல் ஆக்கப்பட்டோ அழிக்கப்படுகிறது. உயிரைப் பிரிந்த உடல் அழிக்கப்படுவதற்கு முன்பாக சில சடங்குகள் செய்யப்படுகின்றன. இதற்கு `இறுதிச் சடங்கு’ என்று பெயர். ஜமதக்னி முனிவர் இறந்ததனால், அவர் மகன் பரசுராமன், நீர்க்கடன் செய்வதைப் பரசுராமப் படலம் 12 41 ஆவது பாடல் வழி அறிய முடிகிறது. சத்ருக்கணன், தசரதனுக்கு ஈமச்சடங்கினைச் செய்தான்.
“அன்று நேர்க் கடன் அமைவது ஆக்கினான்
நின்று நான் மறை நெறி செய் நேர்மையான்” (பள்ளியடைப்படலம் 91 9)
தசரதன் இறந்ததை பரதன் சொல்லக் கேட்ட பிறகு, இராமனும் தன் தந்தைக்கு, வசிஷ்டர் சடங்கு முறைகளை ஓத, தசரதனை எண்ணிக் கொண்டு ,மூன்று முறை கைகளால் நீரை அள்ளி, விதிமுறைகளின் படி கீழே விட்டு நீர்க் கடன் செய்தான்.
“முன் கையின் நீர் விதிமுறையின் ஈந்தனன்
ஒக்க நின்று உயிர்தொறும் உணர்வு நல்குவான்” (திருவடிசூட்டுப் படலம் 11 37)
ஜடாயு இறந்தபோது இராமனும், இலட்சுமணனும் இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.
சந்தனத்தோடு மலரையும், நீரையும் பெய்து, அச்சடலத்தைத் தூய்மையாக்கி அலங்கரித்தான். பின்பு அவ்வுடலை தன் இரு கைகளாலும் ஏந்திச் சென்றவனாகி, அங்கே அடுக்கி வைத்திருந்த விறகுகளின் மேலே ஏற்றி வைத்தான். பின்பு சடலத்தின் தலைப்பகுதியில் தீ மூட்டி எரிய வைத்தான். செய்ய வேண்டிய வேறு கடமைகளையும், முறை தவறாமல் இராமன் செய்தான்.
“ஏந்தினன் இரு கை தன்னால் ஏற்றினன் ஈமம் தன் மேல்
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரக்” (ஜடாயு உயிர் நீத்த படலம் 10 21)
வாலி இறந்த போது, அங்கதன் இறுதிச் சடங்கை செய்தான். (வாலிவதைப்படலம் 404)
இராவணன், மண்டோதரி இறந்தபோது, இருவருக்கும் வீடணன், இறுதிச் சடங்கினைச் செய்தான்.
“உற்ற ஈம விதியின் உடன்பட” (இராவணன் வதைபடலம் 38 89)
தசரதனுக்குச் சத்துருக்கணனும், ஜடாயுவுக்கு இராமனும்,வாலிக்கு அங்கதனும், இராவணன், மண்டோதரிக்கு, வீடணனும் இறுதிச் சடங்கினைச் செய்ததைக் கம்பராமாயணத்தின் வழி அறிய
முடிகிறது.
18. கைம்மைச் சடங்கு
கைம்மை முறைகள் கடுமையான விதிகளைக் கொண்டதாக இருந்தது. கூந்தல் களைதல், அணிகலன்கள் களைதல், தரையில் பாய் இன்றி படுத்து உறங்குதல், உணவில் கட்டுப்பாடு, கணவனுக்குப் பிண்டமளித்தல், குளிர்ந்த நீரில் மூழ்குதல் என்று ஆறு வகைகளாகச் சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.
கணவன் இறந்த செய்தியை அறிந்தவுடன், மண்டோதரி உடன் உயிர்த்துறந்தாள். தசரதன் இறந்தவுடன், அவன் மனைவியர் 60,000 பேரும் உடன்கட்டை ஏறி உயிர்த் துறந்தனர். கணவனை இழந்த தாரை, கைம்மையாக அணிகலன்களை நீக்கி, பூ அணியாமல் கழுத்து மறையும்படியான ஆடையை அணிந்திருந்தாள்.
இறந்துவிட்ட ஒருவனின் மனைவிக்கு அக்கால சமுதாயத்தால் விதிக்கப்பட்டது கைம்மைச் சடங்காகும். கம்பராமாயணத்தில் வாலி இறந்த பின், தாரையின் நிலையைக் கம்பர் குறிப்பிடுகிறார். அவளுடைய முகம் வெண்மையான முழுமதி, பகல் காலத்தில் பூமிக்கு வந்த தோற்றத்தைப் போன்று, ஒளி குன்றி விளங்கியது. அவளை நிமிர்ந்து பார்த்த இலட்சுமணன், தன் தாயாரான சுமத்திரை முதலியோரை நினைத்துக் கொண்டான் என்றும், திருமாங்கல்யத்தை ஒழித்து, மணிகள் பதித்துச் செய்யப்பெற்ற மற்ற அணிகலன்களையும், அணியாமல் நீக்கி, நறுமணம் உள்ளதும், தேன் மிகுந்ததுமான மலர் மாலையையும் அணியாது விலக்கி, குங்குமப் பூவின் குழம்பையும், சந்தனக் குழம்பையும் பூசிக்கொள்ளாத பருத்த கொங்கைகள், பாக்கு மரம் போன்ற கழுத்துடன் மறையும் படி மேலாடையால் நன்கு போர்த்துள்ள மகளிரில் சிறந்தவளான அந்தத் தாரையைப் பார்த்த இலட்சுமணன் இரங்கத்தக்க அத்தோற்றத்தைக் கண்டதாலும், தன் தாயாரை நினைத்ததாலும், தன் கண்கள் நீர்வார வருத்தம் கொண்டான் என்று கூறப்பட்டுள்ளது.
இதிலிருந்து திலகமணியாமல், திருமாங்கல்யத்தை ஒழித்து, வாசமிகு மலர்களையும் நீக்கி, மேலாடையால் போர்த்துக் கொண்டதை அறிய முடிகிறது.
“மங்கல அணியை நீக்கி மணி அணி துறந்து வாசக்
கொங்கலர் கோதை மாற்றிக் குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்கு வெம் முலைகள் பூசக் கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நைந்நான்” (கிட்கிந்தைப் படலம் 612)
இவ்வாறு தாரை கைம்மை நிலையில் இருந்ததை அறியமுடிகிறது.
19. முடிசூட்டல் சடங்கு
முடி சூட்டுதல் என்பது, முடியாட்சியில் அரசராகப் பதவி ஏற்பவரின் தலையில் மணி முடி வைப்பதாகும். பரதன், வசிஷ்டரிடம் காப்பு நாண் அணிவதற்கு ஏற்ற நாள் எது என்று கேட்க, நாளையே என்றார்.நான்கு கடல்களிலும், புண்ணிய ஆறுகளில் இருந்து நீரையும், அனுமன் கொண்டு வந்து தர, அந்தப் புனித நீரைக் கொண்டு சுக்ரீவனும், அனுமனும், வீடணனும் நீர்முழுக் காட்டுச் செய்தனர்.
அரியணையை அனுமன் தாங்கவும், அங்கதன் உடைவாளைக் கையில் கொண்டு நிற்கவும், பரதன் வெண்மையான கொற்றைக் குடை பிடிக்கவும், மற்ற இரண்டு தம்பிகளான இலட்சுமணனும், சத்ருக்கணனும் வெண்சாமரை வீசவும், மணம் மிக்க செந்தாமரை மலரில் வீற்றிருப்பவனான திருமால், பொருந்தப் பெற்றுள்ள திருவெண்ணைநல்லூர் தலைவனான சடையப்ப வள்ளலின் முன்னோராக உள்ளவர் எடுத்துக் கொடுக்க, இராமனுக்கு வசிஷ்டன் முடி சூட்டினான். இலட்சுமியும், பூதேவியும் விரும்பும் தோள்களை உடைய இராமன், தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல நாளில், நல்ல இலக்கணத்தில் உலகம் மூன்றும் துள்ளியவாய் மகிழ்ச்சி கொள்ள, அசுரகுருவான சுக்கிரனும், தேவகுருவான வியாழனும் போன்ற புரோகிதர் நியமித்த முறைப்படியே, அரசருக்குரிய முடியைத் தலையில் சூடிக் கொண்டான்.
“அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடை வாள் ஏந்த
பரதன் வெம் குடை கவிக்க இருவரும் கவரி பற்ற
விரை செறிகமலத்தாள் சேர் வெண்ணையூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி” ( திருமுடி சூட்டுப்படலம் 4268)
இவ்வாறு முடிசூட்டுதல் நடைபெற்றது என்பதை அறியமுடிகிறது.
முடிவுரை
நம்பிக்கை அடிப்படையில், தலைமுறை தலைமுறையாகச் செய்யப்படும் செயல்கள், `சடங்கு’ எனப்படும். ஆசையினாலும், அச்சத்தினாலும் உருப்பெறும் பழக்கவழக்கங்கள், நாளடைவில் மக்களின் வாழ்க்கைக்கேற்ப சடங்குகளாக மாற்றப்படும். கம்பராமாயணத்தில், குழந்தைப் பேற்றிற்காக யாகம் செய்யும் சடங்கு, பெயர்சூட்டல் சடங்கு, உபநயனச்சடங்கு, திருமணச்செய்தியை முரசறைந்து தெரிவித்தல், திருமணத்திற்கு நீராடல் சடங்கு, திருமணச்சடங்கு, முடிசூட்டு விழாவுக்கான சடங்கு அறிவிப்பு, இறைவழிபாட்டுச் சடங்கு, இறுதிச்சடங்கு, கைம்மைச்சடங்கு, போருக்காக செய்தியை முரசறைந்து அறிவித்தல், தானம் செய்யும் சடங்கு, முடிசூட்டும் சடங்கு என பல்வேறு சடங்குகள் நடைபெற்றதை அறிந்து கொள்ள முடிகிறது.
துணை நூற்பட்டியல்
1. இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன், சாரு பதிப்பகம், சென்னை, 2016.
2. காலமும் கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம் புதுச்சேரி, சென்னை.
3. கம்பன் புதிய தேடல், அ.அ. ஞானசந்தரத்தரசு,தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
4. எல்லைகள் நீத்த இராமகாதை, பழ.கருப்பையா,விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.
5. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
6. மங்கையர்க்கரசி.க, கம்பராமாயணத்தில் இறுதிச் சடங்கு - முத்துக்கமலம் மின்னிதழ். (http://www.muthukamalam.com/essay/literature/p293.html)
7. மங்கையர்க்கரசி.க, கம்பராமாயணத்தில் தீ - அரண் மின்னிதழ். (https://www.aranejournal.com/article/5919)
8. மங்கையர்க்கரசி.க, கம்பராமாயணத்தில் மூவகைக் கற்புநிலை - வல்லமை மின்னிதழ். (https://www.vallamai.com/?p=103981)
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|