கம்பராமாயணத்தில் பறவைகள்
முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை.
முன்னுரை
சிச்சிலிப்பறவை, கின்னரமிதுனங்கள், சக்கரவாகம், கரண்டம், அன்றில் பறவை, பாறு, அசுணம், ஆண்டலை, தூக்கணாங்குருவி, சிவல் பறவை, புறா, அன்னப்பறவை, மயில், நீர்க்காகங்கள், மகன்றில், கொக்கு, குருவி, அண்டங்காக்கை, பருந்து, நாரை, குயில், கருடன், கோழிகள், உன்னம், குணாலங்கள், சேவல், ஊறுவல்லூறு, கிளி, நாகணவாய்ப்புள், காக்கை, உள்ளான், கிலுக்கங்கள், கௌதாரிகள், குருகு, வெண்குருகு, கருந்தகையகுருகு, பெருவலிக்குருகு, பெருநாரை, குரண்டம் அல்லது கொக்கு, புள்ளிநாரை, கொடிறுதாங்கியவாய், குருகுநாரை, உளில, கின்னரம், நீ ர்கோழி, ஓதிமம், சென்னம், எருவை, கங்கம், கூகை, குன்றில்வீழ்குரீஇ, தினைக்குருவி, புள்ளிஅம்புறவு,மாடப்புறா, ஊர்க்குருவி, சிவல், குறும்பூள் அல்லது காடை, கோழி பறவைகள் குறித்துக் கம்பர் தம் இராமாயணத்தில் கூறியுள்ளார். அவற்றுள் சில பறவைகளை ஆராய்வோம்.
1. சிச்சிலிப் பறவை
சடாயு போரில் சிச்சிலிப் பறவை பாய்வது போல், இராவணன் மார்பிலும், தோளிலும் தன் சிறகால் ஓச்சிப் புடைத்தார். அதனால் இராவணன் மூச்சற்றுத் தலை சாய்ந்து மயங்கி இருந்தான். அது கண்ட சடாயு போச்சு இத்தனை போலும் நின் ஆற்றல் எனப் புகன்று எள்ளினார்.( சிச்சிரல்- சிச்சிலி- மீன் கொத்திப் பறவை) இலக்கியங்களில் சிரல் என வழங்கப்படும் மீன் கொத்திப் பறவை வெகு விரைவில் அம்பு போல் பாய்ந்து, மீனைக் கொத்தி எடுத்து வந்து உண்ணும் தன்மையுடையது. கம்பர் இச்சிரல் பறவையின் வேகத்தை உவமையாக்கியுள்ளார். சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனை, வழியில் எதிர்ப்பட்ட சடாயு என்னும் கழுகின் வேந்தன், இராவணனின் தோளின்மீதும், மார்பின் மீதும் சிரல் பறவை போல் பாய்ந்தான் என்கிறார். 3542, 5092 இரண்டு இடங்களில் இச்சிரல் பறவையினைக் கையாண்டுள்ளார்.
“மாச் சிச்சிரல் பாய்ந்தென மார்பினும் தோள்கள் மேலும்
ஓச்சிச் சிறகால் புடைத்தான் உலையா விழுந்து” (சடாயு உயிர் நீத்த படலம் 926)
2. கின்னர மிதுனங்கள்
மானுடமுகம், குதிரை உடல் கொண்ட தேவசாதியைச் சேர்ந்த ஆண், பெண் இணைந்து கின்னரம் என்னும் இசைக் கருவியை இசைத்துப் பாடும் தன்மை என்கிறார்கள். கின்னரமிதுனங்கள் ஒரு வகைப் பறவை இனமாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. இது அழிந்து விட்ட பறவை இனங்களில் ஒன்றாக இருக்கலாம். (எழுச்சிப்படலம் 740), (சித்திரக்கூடப்படலம் 739)
“நறை செவிப் பெய்வது என்ன நைவள அமுதப் பாடல்
முறை முறை பகர்ந்து போனார் கின்னர மிதுனம் ஒப்பார்” (எழுச்சிப்படலம் 740)
3. சக்கரவாகம்
இதை புராணப் பறவை என்றும் கருதுவர். இந்த பறவை வட்டமாகவும், உருண்டையாகவும் மகளிரது மார்பகங்கள் போல இருக்கும் என்றும் கூறுவர்.
“அங்கொர் பாகத்தில் அஞ்சன மணிநிழ லடையப்
பங்கு பெற்றொளிர் பதுமதுரா கத்தொளிபாயக்
கங்குலும் பகலும் எனப் பொலிவென கமலம்
மங்கை மார்தட முலையெனப் பொலிவன வாகளம்” (பம்பைப்படலம் 20)
பழுப்பு கலந்த சிவப்பு நிறமாகக் காணப்படும். நிகண்டுகளில் ’நேமிப்புள்’ என்றும், ’சகோரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் தமிழ் பெயர் என்று தெரிகிறது சுந்தரகாண்டத்தில் ஆழிப்புள்
என்று கம்பர் குறிப்பிடுகின்றார். நேமி புள், ஆழிப்புள் என்றெல்லாம் சக்கரவாகப் பறவையை அழைப்பர். சக்கரவாகத்தை Ruddy Shelduck என்றழைப்பர் பறவை நூலர்Tadorna ferrugina என்று அழைப்பர். இந்தப் பறவையும் அன்றில் பறவையை போன்று, ஆண், பெண்ணாகக் கூடி வாழ்ந்து பிரியின் இறந்துவிடும் என்ற கூற்றும் வடமொழியில் உள்ளது. இதன் பெயர் வடமொழியில்
இருந்து வந்தது.
இராமன் தண்டினைக் கொண்ட தாமரை மலராகிய படுக்கையில் கண்கள் மூடியிருக்கச் சக்கரவாகப் பறவைகள் தங்கியிருப்பதைப் பார்த்து சீதையின் மார்பகங்களைப் பார்த்தான்.
பம்பைப் படலத்தில் இரவுக் காலமும், பகற்காலம் என்று கூறும்படி விளக்கம் உடைய கரைகளில் உள்ளனவாகிய ஆணும், பெண்ணுமாகிய சக்கரவாகங்கள் எப்போதும் பகலாக நினைத்துப் பிரியாதிருப்பதால், மங்கை பருவமுடைய பெண்களின் பருத்த இரு முலைகளைப் போல தோன்றின.
நேமிபுள் மழையை உண்டு வாழும் பறவை. இப் பறவை இரு இடங்களில் பேசப்பட்டுள்ளது. இதனை வாளப்புள் எனவும், நேமிபுள்(3289) எனவும் அழைப்பர். இது பகலில் தன் பெடையுடன்
கூடி மகிழும் தன்மையுடையது. சூடாமணிக் கதிரைக்கண்ட சக்கரவாகப் பறவைகளும், தாமரை மலர்களும் மலர்ந்தன என்றும், பெண்பறவைகளைக் காணச் சென்ற ஆண் சக்கரவாகப்
பறவைகளும் தீயில் கருகி உயிர்இழந்தன என்பதை 5533, 6754 ஆகியப் பாடல்களில் சக்கரவாகப் பறவையின் தன்மையைக் கூறுகிறார்.
ஆண் சக்கரவாகப் பறவையும், பெண் சக்கரவாகப் பறவையும் தம்முள் புணர்ந்தன. குவிந்திருந்த தாமரை மலர்கள் மலர்ந்தன. ஞாயிறு சூரியக் காந்தக் கற்கள் வெப்பம் கக்கின.
“மஞ்சலங்கு ஒளியோனும் இம் மா நகர் வந்தான்
அஞ்சலன் என வெங் கண் அரக்கர் அயிர்ந்தார்
சஞ்சலம் புரி சக்கரவாக முடன் தாழ்
கஞ்சமும் மலர்வுற்றன காந்தினகாந்தம்” (சூளாமணிப்படலம் 690)
சக்கரவாகப் பறவைகள் இரவில் இரை தேடிவிட்டுப் பகலிலே உடல்உறவு கொள்ளும் செய்தி இப்பாடலால் அறியப்படுகிறது.
4. கரண்டம்
Indian Shag என்பது கரண்டம் என்று அழைக்கப்படுகிறது. அப்புறம் தேவாரத்தில் ’கரண்டமளி தடம் பொய்கை காளியார் கோன்’ என்பார். கரண்டியின் பெயர் கரண்டம் பிங்கலந்தை நிகண்டு கரண்டி போன்ற மூக்கு உள்ளதால் ’கரண்டை’ என்ற பெயர் வந்திருக்கலாம். உடல் முழுவதும் கருப்பு நிறம் உள்ளவை. நீரில் மூழ்கி, நீருக்கடியில் நீந்தி மீனைத் துரத்தி பிடிக்கும். அலகில் மீனோடு எழும்பும் கரண்டம் முழுகுவ மீனோடு எழுக. இதன் சிறகில் நீர் ஒட்டிக் கொள்ளாத படி, ஒரு வகையான நெய் உண்டு. கரண்டத்தை Phaacro-Coran fuscicollis என்றும் அழைப்பர்.
“கார் எனும் பெயர்க் கரியவன் மார்பினில் கதிர்முத்து
ஆர மென்னவும் பொலிந்தன அளப்ப அரும் அளக்கர்
நீர் முகந்த மா மேகத்தி னருகுற;நிரைத்துக்
கூரும் வெண்ணிறத திரை என பறப்பன குரண்டம்” (கார்காலப் படலம் 480)
5. அன்றில் பறவை
அன்றில் பறவை இரவு காலங்களில் துவங்கும் முன் ஓசை இடும் ஒரு வகை கொக்கு என்று தெரிகிறது. ஆண், பெண்ணாகக் கூடி வாழ்ந்து பிரியின் இறந்துவிடும். இராமனைப் பிரிந்த சீதையின் நிலைக்கு, அன்றில் பறவையின் பிரிவைக் குறிப்பிடுகிறார்.
“வெளி நின்றவரோ போய் மறைந்தார் விலக்க ஒருவர் தமைக்காணேன்.
எளியள் பெண் என்று இரங்காதே எல்லி யாமத்து இருளுடே
ஒளி அம்பு எய்யும் மன்மதனார் உனக்கு இம் மாயம் உரைத்தாரோ
அளியென் செய்த தீமையையே அன்றிலாகி வந்தாயோ” (மிதிலைக் காட்சிப்படலம் 551)
இராமனைப் பிரிந்த விடத்து தன் தீவினையை அன்றிலாக வந்து இருளிலே கூவி வருந்துகின்றது என்று சீதை கூறுவதாகக் கம்பர் கூறுகிறார். அன்றில் வெளியில் போகும் போதும், ஒன்றை ஒன்று விலகாது பெரும் இன்பத்தை கம்பர் கூறியுள்ளார். அன்று பனை மரத்தில் கூடு கட்டி தங்கும். (கடிமணப்படலம் 1111) பரிபாடலில் அன்றில் கிரவுண்டம் என்ற பறவையாக கூறப்பட்டுள்ளது பிளவு பட்ட வாயினை உடைய அன்றில் உருவம் போல இருந்ததாக இந்திரஜித் அணிவகுத்து நின்றதாக கம்பர் கூறியுள்ளார்.
6. பாறு என்ற பிணந்தின்னி கழுகுகள்
கரியதாய் கழுத்தில் சிறியதும் மயிரின்றி காணப்படும். கழுத்து நீண்டிருக்கும். பார்க்க விகாரமாக இருக்கும். கழுகுகள் பிணத்தை கண்டுவிட்டால் ஒன்றன்பின் ஒன்றாக வானத்திலிருந்து கீழே இறங்கி வரும். இவ்வாறு கூட்டமாக வருவதையே வானம் வெளியேற துவண்டி வாழும் பறவை என்றார்.
“பிறவியிற் பெரிய நோக்கிற்
பிசிதமுண் டுழலும் பெற்றிச்
சிறையன என்ன நோக்கித்
தேவருந் திகைப்பத் தேற்றித்
துறைதொறுந் தொடர்ந்து வானம்
வெளியறத் துவன்றி வீழும்
பறவையிற் பெரிது பட்டார்
பிணத்தின் மேற் படிவ மாதோ” (நாகபாசப்படலம் 2040)
7. அசுணம்
யாழ், குழல் இசையில் மகிழ்ந்து இருக்கும் என்று கூறுவர். பறையின் வல்லோசை கேட்டால் உயிர்விட்டு விடும் என்பர். அதுபோல நற்கவிகள் கேட்டுத் திழைத்தசெவிகளில் என் புல்லிய பாவிற் ஓசை வீழ்த்தால் கேட்டோர் துன்புறுவர். (சித்திரக்கூடப்படலம் 751)
“துறை அடுத்த விருத்த தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச்செவிப்
பறை அடுத்தது போலும் என்பாஅரோ” ( பாயிரம் 7- பாலகாண்டம்)
8. ஆண்டலைப் பறவை
இலட்சுமணனுடைய அம்புகள் பாய்ந்தமையால் அறுபட்டு துடித்த பிறர் கருவியினால் தீண்ட முடியாத நீண்ட தலைகளைத் தழுவி சேர்ந்தெனவாகிய கழுகுகள் தலைகளைப் பற்றிக் கொண்டு மேல் எழும் தன்மை வாய்ந்து கைகளை பெறாதனாய் விளங்கி அதனால் ஆண்டலை என்னும் பறவையை ஒத்தன. வாய் திறந்து கொண்டு இருந்தன. (ஆண் மகனின் தலை போன்ற தலையைப் பெற்ற பறவை ஆண்டலை).
“பூண்டு எழு கரதலம் பொறுக்கலாதன
ஆண்டலை நிகர்த்தன எருவை ஆடுவ” (அதிகாயன் வதைப்படலம் 1785)
9. தூக்கணாங்குருவி
மின்மினி பூச்சியாகிய விளக்கில் ஆண் குருவியினால், பெண் துணை குருவிகளுடன் கூடுகளில் தூங்கும் என்று கம்பர் கூறுகிறார். இந்த பாட்டு கார்காலத்தை வர்ணிக்கும் படலத்தில் வருகின்றன. இராமன், சீதையைப் பிரிந்து துயர் உறும்போது இடம் பெற்றுள்ளது. கார்காலத்தில் மின்மினி பூச்சியை எடுத்து கூட்டில் வைத்து வாழும் பறவையாகத் தூக்கணாங்குருவி கூறுவது சங்க தமிழ் இலக்கிய மரபாகும். ஈர மண்ணில் மின்மினிப் பூச்சிகள் இருப்பது இயல்பே. ஈர மண்ணை வைத்த போது விண்மனைப்பூச்சி இருந்திருக்கலாம். தூக்கணாங்குருவி, மின்மினிப் பூச்சியைத் தேடிப் பிடித்து கூட்டில் விளக்காக வைத்ததாக கம்பர் கூறுகிறார்.
“தெரிகணை மலரொடும் திறந்த நெஞ்சொடும்
. அரியவன் றுயரொடும் யானும் வைகுவேன்
எரியும் மின்மினி மணி விளக்கின் இன் துணைக்
குரீஇ யினம் பெடையொடுந் துயில்வ கூட்டினுள்” (கார்காலப்படலம் 526)
10. சிவல் பறவை
பள்ளியடைப்படலத்தில் வெற்றியினையேக் குறிக்கோளாகக் கொண்டு போரிடும் கோழிகள், புள்ளிகளையுடைய கௌதாரிகள் ஆகிய இவற்றைச் சண்டையிடச் செய்வதற்காக நன்கு வளர்க்கின்ற வாழ்க்கையை உடைய மக்களும் தெருங்கினர். இதிலிருந்து சண்டை செய்வதற்காகவே சிவல் பறவைகளைப் பழக்கியுள்ளனர் என்பது பெறப்படுகிறது. (பள்ளியடைப்படலம் 797)
11. புறா
பெண் புறா தன்னை வந்து கூடுமாறு, ஆண் பறவையை அழைத்தது. ஆனால் அந்த ஆண்புறா அக்கோபுர வாசலில் அமைந்த ஓவியப் பெண் புறாவைத் தன் பேடை என மயங்கி, அதன் அருகே நின்றது.அதைக் கண்ட பெண்புறா அது வேறு ஒரு பெண் புறாவை விரும்பியதாகக் கருதி ஊடல் கொண்டு வேறு ஒரு இடத்திற்குச் சென்றது என்பதை,
“ஆவிஒத்த சேவல் கூவ அன்பின் வந்து அணைந்திடாது
ஓவியப் புறாவின் மாடு இருக்க ஊடுபேடையே” (நகரப்படலம் 116)
மாடப்புறா என்ற ஒரு புறாவும் இருந்ததை நகரப்படலம் 121 மூலம் அறியமுடிகிறது.
12. அன்னப்பறவை
மகளிர் நடைக்கு அன்னப்பறவையே உவமையாக்குவர்.அதுமட்டுமன்றி கங்கையாற்றில் செல்லும் நாவாயின் செலவுக்கும் 2075,2460 வெண்ணிற குதிரையின் செலவுக்கும் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
மிதிலையில் உள்ள மகளிரின் நடையழகைக் கண்டு, தன் இனமான பெண் அன்னங்கள் என்று எண்ணி, ஆண் அன்னங்கள் பின் தொடர்ந்துவரச் சென்று நீர் நிலையில் மூழ்கி விளையாடுவார்கள். அதே நீரில் தங்கியுள்ள நீர்ப்பறவைகள் குங்குமக் குழம்புகளின் அடையாளங்கள், தம் மேல் பொருந்துவதால், ஒன்றோடு ஒன்று பிணங்கி இவை தங்கிய பூக்களிலே அவை உறங்கமாட்டா என கூறப்பட்டுள்ளது.
“ஓவு இல் குங்குமச் சுவடு உற ஒன்றோடு ஒன்றுஊடி
பூ உறங்கினும் புள்உறங்காதன பொய்கை” (அகலிகைப்படலம் 466)
13. மயில்
இராமன் இருக்கும்போதே பரதனுக்கு முடிசூட்டச் சொல்லி கைகேயி மனத்தை கூனி மாற்ற முற்படும் போதும், மயில் குலத்து உரிமை என்ற சொற்றொடரைக் கைகேயி கூறுவதுபோல கம்பர் அமைத்துள்ளார்.
“வெயில் முறைக் குலக் கதிரவன் முதலிய மேலோர்
உயிர் முதல் பொருள் திறம்பினும் உரைதிறம் பாதோர்
மயிர் முறைக் குலத்து உரிமையை மனு முதல் மரபை
செயிர் உற புலைச் சிந்தனையால் என் சொனாய் தீயோய்?” (மந்தரை சூழ்ச்சிப்படலம் 157)
என்று கூனியைச் சாடும் கைகேயி இவ்வாறு கூறுகிறாள். மயில் பல முட்டைகளை இட்டு குஞ்சுகளைப் பொரித்தாலும், முதலில் பொரித்த குஞ்சுக்கே தோகை வளரும் என்று கூறுவர்.
மயிலின் குல உரிமையைக் கம்பர் நன்றாக அறிந்ததன் காரணமாகவே இவ்வாறு பாடியுள்ளார். மயில் எவ்வளவு காமவேட்கை மிகினும், தான் இருக்கும் குன்றைவிட்டு, காதலரைத்தேடி
இன்னொரு குன்றுக்குச் செல்லுதல் அரிது. இராவணன் மனைவியர் அரக்கியர் இராவணனின் இருபது தோள்களுள் ஒரு தோளைத் தழுவி அடுத்தடுத்த தோள்கட்குச் செல்வது கடினமாயிருந்ததாம்.
‘மென் தொழில் கலாப மஞ்ஞை வேட்கைமீக் கூடு மேனும்’ (ஊர் தேடு படலம் 309)
14. நீர்க்காகங்கள்
பொய்கையில் நீர்க்காகங்கள் நீரில் மூழ்கி மீன்களோடு மீண்டும் மேல் எழுந்து வரும் காட்சியினை, மக்களுக்கு பிறப்பும், இறப்பும் இத்தகையவை மாறி மாறி வருவனவாகும் எனக்கூற முற்படுகிறார்.
“ எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்ன
கவ்வு மீனொடு முழுகின எழுவன காரண்டம்” (பம்பைப்படலம் 16)
15. மகன்றில்
பெரிய குளங்கள் நீர் நிரம்பின. அந்த நீர்நிலைகளில் அலைகள் ஒன்றன் மேல் ஒன்றாக நெருங்கின. கரிய குயில்கள் குரல் ஒடுங்கப் பெற்றன. உயரமான மலைகள் குளிர்ச்சி பெற்றன. பெரிய திக்குகள் மேகங்களால் மறைந்தன. துணைவரைப் பிரிந்தவர் வருந்தினர். மகன்றில் பறவைகள் அன்றில்களிடனே ஆண், பெண் இரண்டும் ஒன்றே என்னும்படி உயிர் ஒன்று பட்டுத் தழுவின.
“மறைந்தன தடந்திசை வருந்தினர் பிரிந்தார்
உறைந்தன மகன்றிலுடன் அகன்றில் உயிர் ஒன்றி” (கார்காலப்படலம் 510)
இவற்றிலிருந்து அகன்றில், மகன்றில் என்று இரண்டு பறவைகள் இருந்ததை அறியமுடிகிறது.
16. கொக்கு
அளவிடமுடியாத கடலிலிருந்து நீரைக் கவர்ந்து செல்லும் கரிய மேகத்தினது அருகிலே பொருந்த வரிசையாய் வெண்மை நிறத்தை உடையனவாய்ப் பறக்கின்ற கொக்குகள் ‘கிருட்டினன்’ என்ற பெயர் கொண்ட கரிய திருமாலின் மார்பில் பூண்ட முத்தாரம் போலத் தோற்றம் தந்தன” (கார்காலப்படலம் 480)
17. குருவி
ஆண் குருவிகள் ஒளிவீசும் மின்மினிப்பூச்சியான அழகின் விளக்கின் வெளிச்சத்திலே இனிய தம் வாழ்க்கைக்குத் துணையான பெண்குருவிகளோடு தம் கூடுகளில் இனிதாய் உறங்குகின்றன.
“எரியும் மின்மினி மணி விளக்கின் இன் துணைக்
குரிஇனம் பெடையொடும் துயில்வ கூட்டினுள்” (கார்காலப்படலம் 526)
18. அண்டங்காக்கை
அண்டங்காக்கை என்ற ஒரு வகை கருப்பு காக்கை. இது இறந்த மனிதனின் கண்களை முதலில் உண்பதை காட்டில் வேட்டையாடுபவர் கண்டு எழுதியுள்ளனர் என்று அதன் நகத்தினையும் ஓரிடத்தில் கம்பர் வர்ணித்துள்ளார். கம்பர் 3 பாடல்களில் குறிப்பிடுகிறார். காக்கைகள் கவர்ந்து கொள்ளும்.
“தாக்கு இகல் இராவணன் தலையில் தாவின
பாக்கியம் அனைய நின் பழிப்பு இல் மேனியை
நோக்கிய கண்களை நுதி கொள் மூக்கினால்
காக்கைகள் கவர்ந்து கொண்டு உண்ணக் காண்டியால்” (சூளாமணிப் படலம் 664)
19. பருந்து
ஏதாவது ஓர் இரையைத் தரையில் கண்டால் பறக்கின்ற உயர மட்டத்திலிருந்து கீழே செங்குத்தாக சிறிது இரங்கி ஆராயும். ஆராயும் பொழுது அந்த மட்டத்திலிருந்து வட்டமிட்டுக் கொண்டே இருக்கும். இம்முறையாகப் படிப்படியாக இரங்கி, கடைசியில் தன்னுடைய இரையை உறுதிப்படுத்தும். சடுதியில் பாய்ந்தும், எடுத்துச் சென்றுவிடும். இதுதான் பருந்து வேட்டையாடும்
தனித்ததொரு முறையாகும்.
20. நாரை
நாரைகளில் ஒருவகை எப்போதும் நீர் நிறைந்த கால்வாய்களின் ஓரங்களில் உள்ள செடி, புதர்களில் வாழும். பகலில் பதுங்கி இருந்து சாயங்காலங்களில் உணவு தேட வெளிவரும். இந்த
இன நரைகளை ‘பிட்டெர்ன்” (Bittern) என்று பறவை நூலில் கூறுவர். இவைகளில் மஞ்சள் நாரை, தவித்து நாரை, கருப்பு நாரை என்று மூன்று வகைகளை பிரித்து கூறுவர். இதில் கம்பர் கருப்பு
நாரையை குறிப்பிடுவார். ஆபத்து காலத்தில் அவைகள் பறந்து செல்வதில்லை. அப்படியே ஆடாது, அசையாது தங்களைச் சுற்றியுள்ள இலை போலக் கிளை போல மாறிவிடும். இந்தக் காரணத்தால் இதைக் கண்டுபிடிப்பது எளிதன்று. இந்த நாரைகள் சூழ்நிலையைப் போல் இருப்பதுடன், தன்னுடைய உடலில் எந்த பாகத்தை திருப்பிக் காட்டி சூழலில் உள்ள செடி போல இருந்து மறைந்து கொள்ளும் என்றும் கூறுவர். இதைக் கம்பர்;
“சிறையொருக்கி, உடல். பேராது இருந்த குருகின் பெடை” என்பர்.
21. குயில்
சந்திர சயில மலையில் சோனையாற்றங்கரையில், சோலையில் இசை என்னும் வெளிப்பாடு காட்டும் பேச்சுவல்ல பெண்கள் பேசினர். பாசமிகு கூந்தல் கொண்டீரின் பேரொளி கேட்டு முதியோரை கண்டு விட்டோம் எனும் அச்சத்தால் குயில்கள் வாய்மூடி கிடப்பதை, இனிமையாக பேசவல்ல அந்த மகளிர் முன் தனக்கு உள்ள தாழ்வுணர்ச்சி காரணமாக குயில்கள் சும்மா இருந்தன. (வாசகர் வரலாறு முன் யாவரும் வாய் திறக்க ஒண்ணார்)
மரக்கிளையில் வந்தமர்ந்த ஆணும், பெண்ணுமான குயில்கள் மணம் புரிந்து கொள்வதாகவும் ‘குயில் இனம் வதுவை செய்ய’ (நாட்டுப்படலம்46) மன்றங்களில் பருவமடைந்த ஆணும், பெண்ணுமான மணமக்கள் திருமணம் செய்து கொள்வார்கள்.
22. கருடன்
போர்க்களத்தில் இறந்து கிடந்த இராட்சசர் கண்களைக் காக்கைகள் பறித்தெடுத்தன. இராட்சசர்களின் கண் பார்வையைக் கருடன் பார்த்தாலும் அச்சப்படுவான் என்பதை, ’கருடன் அஞ்சுறு கண்மணி’ என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
23. கோழிகள்
எண்ணப்படுகின்ற யாமக் கணக்கில் கடைசியாகக் கழியும் யாமத்தைத் தெரிவிப்பனவாகிய கோழிகள் கைகேயினால், வண்டுகள் மொய்க்கும் மாலை அணிந்த மார்பை உடைய தசரதன், அழகான சிறகுகளாகிய இரு கைகளால் தம் வயிற்றில் பல முறை அடித்துக் கொண்டு அழுவன போலத் தோன்றின.
“கண்டு நெஞ்சு கலங்கி அம் சிறை ஆன காமர் துணைக்கரம்
கொண்டு தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றன கோழியே” (கைகேயி சூழ்வினைப்படலம் 228)
24. அகழியில் உள்ள பறவைகள்
உன்னம் என்னும் பறவைகள், நாரைகள், மகன்றில்கள், குருகுகள், உள்ளான்கள், அன்னங்கள், நீர்க்கோழிகள், பெருநாரைகள், சக்கரவாகங்கள், கின்னரங்கள், கொக்குகள், கிலுக்கங்கள், மீன்கொத்திகள், நீர்ப்பருந்துகள், காகங்கள், குணாலங்கள் முதலிய பறவைகள் அவ்வகழியில் ஒலி எழுப்பும்.
“உன்னம் நாரை மகன்றில் புதா உளில்
அன்னம் கோழி வண்டானங்கள் ஆழிப்புள்
கின்னரம் குரண்டம் கிலுக்கம் சிரல்
சென்னம் காகம் குணாலம் சிலம்புமே” (ஊர் தேடு படலம் 245)
25. சேவல்
அயோத்தியில் சினம் மிகுந்த மனமும், கண்களைப்போலச் சிவப்பு நிறம் பொருந்திய உச்சிக் கொண்டையும் தோன்ற, தமது காலாலே கட்டப் பட்ட கத்தியால் தம்முடன் போரிடும் கோழிகளைத் தாக்கி, அதனிடம் முன்பு கொண்டப் பகை ஏதும் இல்லாமல் கோபித்துப் போர் செய்வதில் வெறுப்பில்லாதனவாகி, செருக்கினால் அக்கொடியப் போரில் வலிமை பெற்றவையாகி, தமது வீர வாழ்க்கைக்குக் களங்கம் உண்டானால் தம் உயிரைக் காத்துக் கொள்வதையும் விரும்பாத சேவற்கோழிகளைச் சிலர் போர் செய்யுமாறு செய்தார்கள்.(நாட்டுப்படலம் 48)
26. ஊறு வல்லூறு
சுக்ரீவனைக், கும்பகர்ணன் தூக்கிச்சென்றபோது, வானரர்கள் துன்பத்தால் ஆரவாரம் செய்தனர்.குஞ்சுகளுக்கு இடையூறுவராது கூவின தாய்ப்பறவையை வல்லூறு தூக்கிச் சென்றது போல வானரப்படை அரற்றியது.
“உரற்றின் பறவையை யூறு கொண்டெழச்
சிரற்றின பார்ப்பினின் சிந்தை சிந்திட
விரற்றறு கைத்தலத் தடிந்து வெய்துயிர்த்து
அரற்றின் கவிக்குலம் அரக்க ஆர்த்தனர்” (கும்பகர்ணன் வதைப் படலம் 1481)
27. கிளி
இசை போல ஒலிக்கும் அழகிய வாயினால் அம் மாதர்கள் பேசியதும், அதைக்கேட்ட கிளிகள் வெட்கம் கொண்டு பறந்து வெளியேறின.
“பண் சிலம்பு அணிவாய் ஆர்ப்ப நாணினால் பறந்த கிள்ளை
ஒண்சிலம்பு அரற்ற மாதர் ஒதுங்குதோறு ஒதுங்கும் அன்னம்” (பூக்கொய் படலம் 842)
28. நாகணவாய்ப்புள்
சீதை, சுமந்திரனிடம், என் தங்கையரிடம் நான் வளர்க்கும் நாகணவாய்ப் புள்ளையும், கிளியையும் பாதுகாக்குமாறு சொல்வாயாக என்று உரைத்தாள்.
“பொன்நிறப் பூவையும் கிளியையும் போற்றுக என்று” (தைலமாட்டுப்படலம் 563)
29. காக்கை
சீதை, அனுமனிடம் பேசும் போது, சித்திரகூட மலையில் என் அருகில் வந்து, எனது மார்பை வாள் போன்ற கூரிய நகத்தினால் துழாவிய ஒரு காக்கையைக் கோபித்து, அருகே கல்லிடை வளர்த்த புல்லைக் கொண்டு, பிரம்மாத்திரத்தை இராமன், செலுத்திய செய்தியை, மெதுவாக அவனிடம் சொல்வாயாக என்கிறாள்.
“காகம் ஒன்றை முனிந்து அயல் கல் எழு புல்லால்” (சூளாமணிப் படலம் 681)
தாய்ப் பறவை கண்ட குஞ்சுகள்
சீதாப்பிராட்டியை தேடிச்சென்ற அனுமன் நிலை யாதாகுமோ என்ற அச்சத்துடன் வானவர்களோ வாய்விட்டு புலம்பி கொண்டிருந்தனர். அங்கதன் முதலிய வானர வீரர்கள் சீதையை அனுமன் சந்தித்து விட்டு வருகின்ற நிலையை கண்டு தாய் பறவை பாய்ந்து உள்ளே வரும் கூட்டிலே இருந்தனவாகிய பறவைக் குஞ்சுகள், தம் தாய்ப் பறவை வரவைக் கண்டன போல மீண்டு வர அதனை பார்த்ததைப் போன்ற மகிழ்ச்சியினால் உடல் பூரித்தார்கள்.
“பாய்வரு நீளத்து ஆங்கண்இருந்தன பறவைப் பார்ப்புத்
தாய்வரக் கண்டதன்ன உவகையின் தளிர்ந்தார் அம்மா” (திருவடி தொழுத படலம் 1249)
முடிவுரை
சிச்சிலிப்பறவை, கின்னரமிதுனங்கள், சக்கரவாகம்,கரண்டம், அன்றில், பாறு, அசுணம், ஆண்டலை, தூக்கணாங்குருவி, சிவல் பறவை,புறா, அன்னப்பறவை,மயில், நீர்க்காகங்கள், மகன்றில், கொக்கு,குருவி, அண்டங்காக்கை, பருந்து, நாரை, குயில், கருடன், கோழிகள், உன்னம், குணாலங்கள்,சேவல், ஊறுவல்லூறு, கிளி, நாகணவாய்ப்புள், காக்கை, உள்ளான், கிலுக்கங்கள்,
கௌதாரிகள் ஆகிய பறவைகள் குறித்த செய்திகளை கம்பராமாயணத்தின் வழி அறியமுடிகிறது.அவற்றுள் சில பறவைகள் இன்றும் வாழ்கின்றன. சில பறவைகள் அழிந்துவிட்டன.
துணை நூற்பட்டியல்
1. இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம், சென்னை,2016.
2. காலமும் கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம், புதுச்சேரி, சென்னை.
3.கம்பன் புதிய தேடல், அ.அ. ஞானசந்தரத்தரசு, தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
4. எல்லைகள் நீத்த இராமகாதை, பழ.கருப்பையா, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.
5. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன்,வள்ளிபதிப்பகம், சென்னை,2019.
6. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5,6,7, 8 வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
7. செல்வம்.கோ,கம்பன் புதையல், சாரு பதிப்பகம், சென்னை 2016.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|