இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

கம்பராமாயணத்தில் விருந்தோம்பல்

முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.


முன்னுரை

பழங்கால மக்கள் விருந்தினரை அகமும், முகமும் மலர வரவேற்று விருந்தளித்து சிறப்பித்தனர். விருந்தோம்பல் என்பது தன் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று, உண்ண உணவும், இருக்க இடமும் கொடுத்தல், அவர்களிடம் அன்பு பாராட்டல் இவையே ‘விருந்தோம்பல்’ ஆகும். இல்லறக் கடமைகளில் ஒன்றான திருமணம் நடைபெறுவதன் நோக்கமே, விருந்தோம்பலாகும். கணவனுடன் கூடி வாழும் மங்கல மகளிர்க்குரிய தனி உரிமையாக விருந்தோம்பல் கருதப்பட்டது. கணவனை இழந்தவர்களும், பிரிந்து வாழ்பவர்களும் விருந்தினரை வரவேற்கும் உரிமை இல்லாமல் வருந்தினர். கவிச்சக்கரவர்த்தி கம்பர் தன் காவியத்தில் உவமை, உருவகம், கற்பனை, சொல்லாட்சி, வர்ணனை என பல சிறப்புக்களைக் கொண்டு பாடியுள்ளார். விருந்து குறித்தும், விருந்தினரைப் பேணும் முறை குறித்தும், தம் பாடல்களில் அழகாகப் பாடியுள்ளார். விருந்தினர் யார், அவர்களை எவ்வாறு உபசரிக்க வேண்டும் என்பது குறித்தும் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். விருந்து குறித்து கம்பர் குறிப்பிட்டுள்ளதைப் பற்றி ஆராய்வோம்.

தொல்காப்பியத்தில் விருந்து

"விருந்தே தானும் புதுவது கிளர்ந்த
யாப்பின் மேற்றே" (தொல்காப்பியம் -பொருளதிகாரம் 1495)

'விருந்து' என்பதற்கு, 'புதுமை' என்று பொருள். புதிதாய் வந்தோர்க்கு உணவு கொடுத்தல் என்று அகராதி கூறுகிறது.

“அறிமுகமானவர்களும் விருந்தினர்களாக வருவர், அறியாதவர்களும் வருவர். ஆனாலும் விருந்து என்பதற்கு, ‘புதிது’ என்றும், ‘விருந்தினர்’ என்பதற்கு, ‘புதியவர்’ என்றுமே பொருள். எத்தனை முறை வந்தாலும் சரி, பழகி அவர்களையெல்லாம் புதியவராக எண்ணிப் போற்ற வேண்டும் என்னும் விழுமிய எண்ணத்தால் எழும்பியதே இச்சொற்கள் போலும்” என்கிறார் இரா. இளங்குமரனார்.


சிலப்பதிகாரத்தில் விருந்தோம்பல்

சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் மாதரியிடம், கண்ணகியை அடைக்கலமாகத் தரும் போது, சாயலன் என்பவனின் மனைவி செய்த நல்வினை குறித்து கூறுகிறார். எட்டி என்ற பட்டத்தினைப் பெற்ற சாயலனும், அவன் மனைவியும் நோன்பு மேற்கொள்ளும் நோன்பிகளுக்கு உணவு அளிப்பதையே, தங்கள் வாழ்க்கையின் முக்கியக் கடமையாகச் செய்து வந்தனர். ஒருநாள், சாயலன் மனைவி, முனிவர் ஒருவருக்கு, உணவளித்து உபசரிக்கும் வேளையில் குரங்கு ஒன்று, அம்மனையினுள் புகுந்து, முனிவரின் திருவடிகளை வணங்கி, அவர் உண்டு எஞ்சிய எச்சில் சோற்றையும், ஊற்றிய நீரையும் உண்டு மகிழ்ச்சி கலந்த விருப்புடன், அவருடைய திருமுகத்தை நோக்கியது.

"எட்டி சாயலன் இருந்தோன் தனது
பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையிலோர்
மாதவ முதல்வனை மனைப்பெருங் கிழத்தி
ஏதம்நீங்க எதிர்கொள் அமயத்து" (சிலப்பதிகாரம்- அடைக்கலக்காதை 163-166)

இல்லறத்தார், முனிவர்களுக்கு உணவளித்த செய்தி பெறப்படுகிறது.

மணிமேகலையில் விருந்து

அறுசுவை உணவு கச்சிமா நகர்ப்புக்கு காதையில், மன்னவன் சாரணர்களுக்கு உபசரிக்கும் முறையைச் சாத்தனார்,

"ஆசனத்து ஏற்றி அறுசுவை நால்வகை” (மணிமேகலை -காஞ்சிமாநகர் புக்க காதை 241)

இதற்கு விளக்கம் அளிக்கும் உ. வே. சா. அவர்கள் அறுசுவையான கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என்றும், நால்வகை அமிழ்தமாவன. உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன என்றும் விளக்கம் தருகின்றார். இவ்விளக்கத்தால் மணிமேகலைக் கால சமுதாயத்தில் அறுசுவையோடு கூடிய உணவும், நாள் வகையான அமிழ்தமும் சிறப்பாக அளிக்கப்பட்டன என்பது தெரிகிறது.


சீவகசிந்தாமணியில் விருந்து

வெள்ளி அடுப்பிலே, நறைக் கொடியும் தூவியெரிக்கும் புழுகும் மணக்கும் நல்ல மணமுறு விறகினாலே, அழகிய பொற்கலத்திலே நிறைய சமைத்த நெய் கலந்த இனிய சோற்றை, அங்கு வாழும் மக்கள் விருந்தொடும் உண்பார்கள்.

"நறையு நானமு நாறு நறும்புகை
விறகின் வெள்ளி யடுப்பினம் பொற்கல
நிறைய வாக்கிய நெய்பயில் இன்னமு
துறையு மாந்தர் விருந்தொடு முண்பவே" (சீவகசிந்தாமணி- நா மகள் இலம்பகம் 131)

இவ்வாறு ஏமாங்கதநாட்டு மக்களின் விருந்தோம்பல் பண்பு சிறந்திருந்தது.

பெரியபுராணத்தில் முனிவர்களுக்கு உணவளித்தல்

அறுபத்து மூன்று நாயன்மார்களில் இளையான்குடிமாற நாயனார், சிறுதொண்ட நாயனார், இயற்பகை நாயனார், காரைக்கால் அம்மையார் போன்றோர் சிவனடியார்களுக்கு உணவளித்ததை பெரியபுராணம் மூலம் அறியமுடிகிறது.

கம்பராமாயணத்தில் விருந்தோம்பல்

கம்பராமாயணத்தில் பலரும் விருந்தளித்து சிறப்பித்துள்ளனர். விருந்திடும் பண்பைக் காப்பியத்தில் பல இடங்களிலும் சொல்லிச் சென்றுள்ளார் கம்பர். நாட்டு வருணனையிலும், மக்கள் வாழ்வியல் பற்றி வருணிக்கும் போதும், கதாப்பாத்திரங்கள் வாயிலாகவும் விருந்தின் சிறப்பைக் கம்பர் வெளிப்படுத்தியுள்ளார். விருந்தினர் முகம் கண்ட நாளே விழா நாளாக எண்ணப்பட்டது.விருந்தினரை வரவேற்பதற்காகவே மங்கல வள்ளைகள் வீடுதோறும் முழங்கிக் கொண்டிருந்தன.

விருந்து போற்றுதல்

தசரதன் இறந்த செய்தியைக் கேட்டு இராமன் வருந்தினான். வசிட்டர் அவனைத் தேற்றும் போது, இராமனே உடலோடு பொருந்திய நிலைபெற்ற உயிர்களுக்கு மிகச் சிறந்த துணையாக விளங்கக்கூடியவை இரண்டு. அவற்றுள் ஒன்று. இல்லற வழியை நாடாமல் துறவற வழியை மேற்கொள்வது. மற்றொன்று, இல்லற வழியை மேற்கொண்டு விருந்து போற்றுதல் முதலாக உள்ள நல்லறச் செயல்களைச் செய்து வருவது. இவை இரண்டும் அல்லாமல் மக்கள் உயிருக்கு மிகச் சிறந்த துணையாக அமைவது வேறு ஒன்றும் இல்லை என்று அறிவுறுத்தினான். (திருவடி சூட்டு படலம் 1126)

1. உரோமபாதன், தசரதனுக்கு அளித்த விருந்து

வசிஷ்டர் அறிவுரைப்படி தசரதன், உரோமபாத முனிவரைக் கண்டு கலைக்கோட்டு முனிவர் மூலமாக புத்திர காமேஷ்டி யாகம் செய்ய விரும்பி, அவரை அழைக்க வந்த போது, அவருக்கு வேண்டிய உபச்சாரங்களைச் செய்தான். விருந்தளித்தான். தசரதனும் உபசாரங்களை மனமகிழ்ந்து ஏற்றுக் கொண்டான்.

“ஏடு துற்ற வடிவலோன் தனை இருத்தி
கடன் முறைகள் யாவும் நேர்ந்து
தோடு துற்ற மலர்த் தாரான் விருந்து அளிப்ப
இனிது உவந்தான் சுரர் நாடு ஈந்தான்” (திருஅவதாரப்படலம்241)

2. கோசலநாட்டு மக்கள் விருந்தினர்களை உபசரித்தல்

அந்நாட்டு மக்களில் சிலர் தமக்குப் பொருத்தமான மகளிருடன் திருமணச் சடங்கில் பொருந்தினார்கள். சிலர் பருந்தோடு அதன் நிழலும் தொடர்ந்து செல்வதைப் போல, இயற்றமிழோடு தொடர்ந்து செல்லும் இசைத் தமிழின் பயனை அனுபவித்தார்கள். சிலர், அமுதத்தைக் காட்டிலும் அதிகமாக இனிக்கும் நூல் பொருளைச் செவியால் பருகினார்கள். சிலர் விருந்தினர்களின் முகங்களைப் பார்த்து, அவர்களுக்கு அன்னம் அளிக்கும் விழாவை விரும்பினார்கள்.

"பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும்
பருந்தொடு நிழல் சென்றன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும்
மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்
விருந்தினர் முகம் கண்டன்ன விழாஅணி விரும்புவாரும்" (நாட்டுப்படலம் 47)

உழவர்கள், அடுக்கப் பெற்ற நெற்கதிர்களைத் தொகுதிகளை எடுத்து வானளாவிய போர்களாக இட்டார்கள். அவற்றை, தம்மைச் செலுத்துவோரின் கருத்தின்படி செல்கின்ற கடாக்களைக் கொண்டு மிதிக்கச் செய்தார்கள். அச்செயலால் கிடைத்த நெல்லை, அங்கேயேக் குவியலாகக் குவித்தார்கள். பின்பு களத்துக்கு வரும் ஏழைகளுக்குக் கொடுத்தது போக, எஞ்சிய நெல்லை விருந்தினர் உண்ணும்படி, வீட்டுக்குச் செல்வதற்காக, செல்கின்ற வழிகளும் தெரியாதபடி மறைந்து போக, வண்டிகளில் ஏற்றுவார்கள். பாரத்தால் நிலம் நெளிந்து போகும்படி, அந்த வண்டிகளைச் செலுத்துவார்கள்.


"எறிதரும் அரியின் சும்மை எடுத்து வான் இட்ட போர்கள்

குறிகொளும் போத்தின்கொல்வார் கொன்ற நெல் குவைகள் செய்வார்
வறியவர்க்கு உதவி மிக்க விருந்து உண மனையின் உய்ப்பான்
நெறிகளும் புதைய பண்டி நிறைந்து மண் நெளிய ஊர்வார்" (நாட்டுப்படலம் 52)

அந்நாடு முழுவதும், அந்தணர் முதலிய எல்லா வருணத்து மக்களும், தத்தமக்கு உரிய வீடுகளில் இருந்து கொண்டு, சிறப்புடைய மா - பலா - வாழை ஆகிய முக்கனிகளுடனும், பல்வகையானப் பருப்புகளுடனும், அப்பருப்புகளை முழுகச் செய்யும் நெய்யுடனும், செந்நிறமுள்ள தயிர்க்கட்டி – கண்டச் சக்கரை ஆகியவை இடையிடையே கலக்கப்பெற்ற சோற்றினுடனும், விருந்தினரோடும், சுற்றத்தாரோடும் தாங்களும் அமர்ந்து உணவை உண்ணும் ஆரவாரத்தை உடையது.

"முந்து முக்கனியின் நானாமுதிரையின் முழுத்த நெய்யின்
செந்தயிர்க் கண்டம் இடை இடை செறிந்த சோற்றின்
தம்தம் இல் இருந்து தாமும் விருந்தொடும் தமரினோடும்
அந்தணர் முதலோர் உண்டி அயிலுறும் அமலை எங்கும்" (நாட்டுப்படலம் 54)

மிகப் பெரிய விழிகளையும், பிறைச் சந்திரன் போன்ற நெற்றியையும் உடைய அந்நாட்டுப் பெண்கள் அனைவருக்கும், நிலை பெற்ற செல்வமும், நீங்காத கல்வியும் நிறைய இருந்தன. அதனால், வறுமைத் துன்பத்தால் தம்மை அடைந்தவர்களுக்குக் கொடை வழங்குவதும், வந்த விருந்தினரை உபசரித்தும் ஆகிய செயல்கள் அல்லாமல், நாள்தோறும் அவர்கள் செய்கின்ற வேறு செயல்கள் யாவை, எவையும் இல்லை.

"பெரிந் தடங் கண் பிறை நுதலார்க்கு எலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே" (நாட்டுப்படலம் 68)

அன்னச் சத்திரங்கள் ஆயிரமாயிரம் அயோத்தியில் அமைந்திருந்தன. அங்கேப் பணி செய்வோர், உணவு நாடி வருவோர், உண்டு மீள்வோர் ஆகிய பல்வேறு கூட்டத்தினரின் ஆரவார ஒலி பொழுதெல்லாம் எதிரொலித்தவாறு இருந்தது. பிறைமுகம் பெற்ற அரிவாள் மணைகள் ஒரு பக்கம் கிடந்தன. பருப்பு வகைகள் குவியல் குவியலாகக் காணப்பட்டன. இருந்த காய்கறித் துண்டுகள் நிறைந்து கிடந்தன. அரசின் குவியல்கள் முத்தைக் குவித்து கிடந்தன.

"பிறை முகத் தலை பெட்பின் இரும்பு போழ்
குறை நறைக் கறிக், குப்பை, பருப்பொடு்
நிறை வெண் முத்தின் நிறத்து அரசிக் கோவை
உறைவ கோட்டம் இல் ஊட்டிடம் தோறுமே" (நாட்டுப்படலம் 69)

விருந்துண்ண வருவோர்க்கு எப்பொழுதும், எந்நேரமும் தட்டுப்பாடு இல்லாது உணவு வழங்குவதற்காக அடுப்படிகளில் அரிசி வெந்து கொண்டிருக்குமாம். அரிசியை உலையில் போடும் முன்பாக, அதைக் கழுவி, அதிலிருந்து வருகின்ற கழுநீர் வெளியில் வடித்து விடப்பட்டதாம். அரிசி பெரிய பெரிய உலைகளில் அடுக்களையில் அடுப்பில் வெந்து கொண்டிருக்க வேண்டும். அப்படியானால், அளவில்லாத வகையில் அரிசியும் கழுவப்பட்டு, அந்த நீர் வெளியேற்றப்பட வேண்டும்.

வெள்ளம் போல் வடித்து விடப்படும் கழுநீர் வாய்க்கால் போல ஓடி, வீடுகளை ஒட்டி உள்ள சோலைகளில் பாய்கிறது. அங்கே வயலில் பயிரிட நாற்றுகள், நாற்றங்காலில் வளர்கின்றன. அவற்றுக்குப் பாய்ந்து நாற்றுகளை வயலில் நடுவதற்குத் தோதாக நிற்கிறதாம். அப்படி நன்கு வளர்ந்த நாற்றுகள் பிடுங்கி வயலில் நடப்பெற்று, அவை செந்நெல்லாக ஆகி, அவை அரிசியாகி மீண்டும் சமைப்பதற்காக அடுப்படிக்கே வந்து சேர்கிறது.

தன்னைக் கழுவும் நீர், திரும்பவும் தான் விளையும் இடத்திற்கே வந்து அரிசியாகி உலையில் போடப்பட்டு உணவாக உதவுகிறது.

"முட்டு இல் அட்டில் முழங்குற வாக்கிய
நெட்டுலைக் கழுநீர் நெடு நீத்தம்தான்
பட்ட மென் கமுகு ஓங்கு படப்பை போய்
நட்ட செந்நெலின் நாறு வளர்க்குமே" (நாட்டுப்படலம் 58)

உண்மைக் காதலன் ஒருவன், தன் உண்மைக் காதலியுடன் உடலுறவு கொண்டு மகிழ்ந்து, தனது மகிழ்ச்சிக்கு ஓர் ஒப்புமை கூறுகிறான். இந்தப் பெண்ணோடு கொண்ட புணர்ச்சி இன்பம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் சொந்த உணவைப் பலர்க்கும் பங்கிட்டு, உண்ணும் இன்பம் போன்றது என்று பாராட்டினான்.


3. கௌதம முனிவர், விசுவாமித்திரருக்கு விருந்தளித்தல்

இராமன், இலக்குவன்,விசுவாமித்திரர் மூவரும் கௌதம முனிவர் ஆசிரமத்தை அணுகினர். உடனே, கௌதம முனிவர் சிறிதும் எதிர்பாராத விருந்தினரைக் கண்டு வியப்புற்று, அன்போடு எதிர் கொண்டு வரவேற்றான். விருந்தினரை உபசரிக்க வேண்டிய கடமைகளைக் குறைவின்றி செய்தான்.

"அருந்தவன் உறையுள் தன்னை அனையவர் அணுகலோடும்
விருந்தினர் தம்மைக் காணா மெய்ம்முனிவியந்த நெஞ்சன்" (அகலிகைப்படலம் 483)

4. முனிவர்களின் விருந்தினன்

இராமன் கங்கைநீர்த் துறையின் நல்ல நீரிலே நீராடினான். பிறகு, வேதம் ஓதும் முனிவர்களின் இருப்பிடத்தை அடைந்து மெய்யுணர்வு பெற்ற ஞானிகளே, உணரத்தக்க பரம்பொருளை வணங்கினான். பின்னர் சிறப்பாகத் தீயை வளர்த்துச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்தான். அதன் பின்னர் பேரறிஞர்களான அந்த முனிவர்களுக்குத் தகுந்த விருந்தினனாக அமைந்து விருந்துண்டான்.

"இறைவற் கைதொழுது ஏந்து எரி ஓம்பி பின்
அறிஞர் காதற்கு அமை விருந்து ஆயினான்" (கங்கைப்படலம் 635)

5. முனிவர்கள் தந்த விருந்து

தான் மிகவும் முயன்று பெற்ற அமுதத்தையும், நீங்கள் உண்ணுங்கள் என்று கூற தேவர்களுக்குக் கொடுத்து உண்ணச் செய்த திருமாலாகிய இராமன், முனிவர்கள் தந்த விருந்தாகிய மெல்லிய இலை உணவை உண்டு, மகிழ்ச்சியுடன் விளங்கினான். செம்மையான மனத்தைப் பெற்றவர்க்கு ஒருவர் செய்தவை அற்பமானவையாக இருப்பினும், அவை சிறப்பிலே குறைபடுமோ? குறைபடாது.

இராம, இலட்சுமணன், சீதையைக் கண்ட முனிவர்கள் அவர்களைத் தம் தவப்பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். தவப்பள்ளியில் வேள்வித்தீயை வளர்த்து வணங்கினர். முன் செய்த தான தருமங்கள் நல்லோருக்குச் செய்த உதவி, திரும்பப் பயன் கொடுப்பது போல் முனிவர்கள் கூடினர். இராமனை விருந்துண்ண அழைத்தனர். இராமன் நீராடி, எரிவளர்த்து வழிபாடு செய்து, விருந்து ஏற்று, அந்த முனிவர்கள் இட்ட கீரை உணவை விரும்பி உண்டான்.

"வருந்தித் தான் தர வந்த அமுதையும்
அருந்தும் நீர் என்று அமர்ரை ஊட்டினான்
விருந்து மெல் அடகு உண்டு விளங்கினான்
திருந்தினார் வயின் செய்தன தேயுமோ?" (கங்கைப்படலம் 636)

6. குகன் அளித்த உணவு

தூய உள்ளமும், தாயினும் நல்லான் குகன், இராமனுக்கு உணவாக விருந்து படைக்கத் திருந்திய மீனையும், தேனையும் கொணர்ந்து தந்தான்.

"இருத்தி ஈண்டு என்னவேலடும் இருந்திலன் எல்லை நீத்த
அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன் என்கொல் திருஉளம் என்ன வீரன்
விருத்த மா தவரை நோக்கி முறுவலன் விளம்பலுற்றான்" (குகப்படலம் 649)

7. பரத்வாசர் அளித்த விருந்து

பரத்வாச முனிவர், இராமன் முதலியோரை அழைத்துக் கொண்டு ஆசிரமத்திற்கு வந்து, அவர்கள் தங்குவற்குரிய இடத்தைக் கொடுத்து, விருந்தினர்களுக்குச் செய்ய வேண்டிய உபச்சாரங்களை முறையாகச் செய்து, உண்ணும் பக்குவம் உற்ற காய்களையும், கனிகளையும் அளித்து, புகழ்வதற்கு உரிய அன்பினோடு, பொருந்திய நல்ல ஒழுக்க முறைகளை உரைத்து, தம் உயிர்க்கு ஒப்பான மக்களாக, அவர்களைக் கருதி, அவர்களோடு கூடிய செயல்களைச் செய்தான். இராம, இலட்சுமணர்களும் ஆனந்தம் அடைந்தனர்.

"புக்கு உறைவிடம் நல்கி பூசனை முறை பேணி
தக்கன கனி காயும் தந்து உரை தரும் அன்பால்" (வனம்புகு படலம் 708)

8. பரதனுக்கு, பரத்வாசர் அளித்த விருந்து

பரத்வாசர், பரதனை தனது தூய பர்ணசாலைக்கு அழைத்துச் சென்றார். இங்கே வந்திருக்கும் பரதனது படைகளுக்கெல்லாம் விருந்தளிக்க எண்ணினார். தேவலோகப் பெண்கள், ஆடவர்களுக்கு வாசனைப் பொடிகளைப் பூசி, ஆகாய கங்கையில் குளிக்கச் செய்து மெல்லிய ஆடைகளையும், அணிகலன்களையும் தந்து உணவையும் ஊட்டினர்.

"அம்பரத்தின் அரம்பையர் அன்பொடும்
உம்பர்கோன் நுகர் இன் அமுது ஊட்டினர்" (திருவடிசூட்டுப்படலம் 1066)

பரத்துவாசர் தன் தவ வலிமையால் தேவர்களையும், தேவ மாதரையும் அழைத்துச் சமைத்த விருந்தை, ஏனையோர் உண்டனர். பரதனோ, இராமனைப் பற்றிய நினைவிலேயே அமிழ்ந்து ஏங்கினான். விருந்து ஏற்காது, காயும், கிழங்கும் உண்டான்; பொன் போன்ற தன் மேனி புழுதி படும்படிக் கிடந்தான்.

"இன்னர், இன்னணம் யாவரும், இந்திரன்
துன்னு போகங்கள் துய்த்தனர்; தோன்றல் தான்
அன்ன காயும் கிழங்கும் உண்டு, அப் பகல்
பொன்னின் மேனி பொடி உற போக்கினான்" (திருவடி சூட்டுப் படலம் 1073)

9. அத்திரி முனிவர் அளித்த விருந்து

சீதையுடன், இராம இலட்சுமணர் அத்திரி முனிவரின் தவக்குடில் வந்தனர். விருந்தும் உண்டனர். அப்போது அத்திரி முனிவர் தன் சுற்றத்தினர் அனைவரும் ஒருங்கே வந்ததைக் கண்டதைப் போன்ற களிப்பினை உடையவராய், குமாரர்களே நீங்கள் இங்கு வந்து காட்சி கொடுத்த நிகழ்ச்சி எளிதில் கிடைப்பதன்று. இது, தேவர்கள் அனைவரும், உலகங்கள் அனைத்தும் வந்து காட்சியளித்ததைப் போன்றது. இத்தகைய பேறு பெறும்படி எங்களின் பெருந்தவம் செய்தவர் எவரோ என்று உரைத்து, உள்ளம் உருகினார். முனிவரின் மனைவி அனுசூயா சீதைக்கு ஆடைகள் நல்கி, அணிகலன்கள் பூட்டி அனுப்பி வைத்தாள்.

"அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து அவன் அரும்
பன்னி கற்பின் அனசூயை பணியால் அணிகலன்
துன்னு தூசினொடு சந்து இவை சுமந்த சனகன்
பொன்னொடு ஏகி உயர் தண்டக வனம் புகுதலும்" (விராதன் வதைப் படலம் 4)

10. சுதீக்கண முனிவர் அளித்த விருந்து

சுதீக்கண முனிவரை நாடி வந்த இராமன், அவரைச் சந்தித்து வணங்கினான். முனிவர், இராம, இலட்சுமணர், சீதையையும் வரவேற்று விருந்தளித்தார். விருந்தளித்து, தான் அளித்த விருந்துடன் அதுவரை தாம் செய்த தவம் எல்லாவற்றையும் ஏற்குமாறு இராமனிடம் வேண்டி அளித்தார்.

“உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு எதிர்
நவமை நீங்கிய நற்றவன் சொல்லுவான்
அவம் இலா விருந்து ஆகி என்னால் அமை
தவம் எலாம் கொளத் தக்கனையால் என்றான்” (அகத்தியப்படலம் 146)

11. அகத்தியர் அளித்த விருந்து

இராமன், அகத்தியர் வாழும் சோலைக்குச் சென்றபோது அகத்தியர், அவனுக்கு விருந்திட்டார். அதன்பின், இராமன் அங்கே மகிழ்ச்சியோடு இருந்தான்.

"விருந்து அவன் அமைத்த பின் விரும்பினன் விரும்பி" (அகத்தியப்படலம் 164)

12. மனையாள் பரிமாறாத விருந்தை இராமன் கண்டான்

இராமருடன், சுக்ரீவன் நட்பு கொண்டான். இராமனை விருந்துக்கு அழைத்தான். கனியும், காயும் தூயதாகக் கொணர்ந்து இட்டான். விருந்தளிப்பவனான சுக்ரீவன் மனம் நொந்து, மனைவி இல்லாமல் விருந்து பரிமாறி உபசரிப்பதைக் கண்டு 'நீயும் நன்மனைக்குரிய பூவையைப் பிரிந்துளாய் கொல்’ என்று இராமன் கேட்டான். மனையாள் இல்லா இடத்தில் விருந்து சிறக்காது என்பது நம் நாட்டின் கொள்கை. மகளிருக்கு விருந்தோம்பலே தலையாய கடன். இராமனும், சுக்ரீவனும் தூய அன்போடு அளவளாவினார். சுக்ரீவனுக்கு இராமன் நல்விருந்து ஆயினான். கனியும், காயும் தூயன இனிய யாவையும் சுக்ரீவன் கொண்டான். மனையாள் பரிமாறாத விருந்தை இராமன் கண்டான்.

"விருந்தும் ஆகி, மெய்ம்மை அன்பினோடு
இருந்து, நோக்கி நேர்ந்து, இறைவன் சிந்தியா
பொருந்து நன் மனைக்கு உரிய பூவையைப்
பிரிந்துளாய் கொலோ நீயும் பின் என்றான்" (நட்புக் கோட்படலம் 112)

13. விருந்து விரும்பும் சுக்ரீவன், உறக்கத்துக்கு விருந்தினன்

நளன் என்ற வானரனால் அமைக்கப்பட்ட அரண்மனையினுள் படுக்கையிலே மகளிர் சிறந்த அடிகளைத் தடவிப் பிடிக்க உண்டாகும் உறக்கத்துக்கு தான் விருந்தினன் ஆவதை விரும்பிப் படுத்திருந்தான் சுக்ரீவன்.

"இள முலைச்சியர் ஏந் தடி தைவர
விளை துயிற்கு விருந்து விரும்புவான்" (கிட்கிந்தைப்படலம் 578)

14. சுயம்பிரபை அளித்த விருந்து

சீதையைத் தேடிச் சென்ற வானரர்கள் பசி தாகத்துடன் ஒரு பிலத்துக்குள் சென்றபோது, அங்கு தவப்பெண் சுயம்பிரபையைக் கண்டனர். அவள் யார்? என விசாரித்தனர். தாங்கள் வந்தக் காரணத்தையும் கூறினர். அத்தவமகள் மகிழ்ந்து அவர்களுக்கு இனிய உணவை அன்போடு படைக்கின்றாள்.

"கேட்டு அவளும் என்னுடைய கேடில் தவம் இன்னே
காட்டியது வீடு என விரும்பி நனி கால் நீர்
ஆட்டி அமிழ்து அன்ன சுவை இன்னடிசில் அன்போடு
ஊட்டி மனன் உள் குளிர இன்னுரை உரைத்தாள்” (பிலம்புக்கு நீங்கு படலம் 867)

15. விருந்தினர் இயல்பு

வானில் வந்த மேகங்களை விருந்தினர் எனக் கருதி, தாம் வீட்டில் இருந்தபடியே அவரது வருகையை நோக்கி உள்ளம் களிக்கின்ற பெண்கள் முகம் மலர்தல் போலத் தாமரைக் கொடிகள் நீரிலே மகிழ்ச்சியுடன் விளங்கின.

"வெளிக்கண் வந்த கார் விருந்து என விருந்து கண்டு உள்ளம்
களிக்கும் மங்கையர் முகம் எனப் பொலிந்தன கமலம்" (கார்காலப்படலம் 476)

16. மைந்நாகமலை தந்த விருந்து

விருந்து அருந்திச் செல்லும்படி வேண்டிய மைந்நாகமலையிடம், அனுமன் உடலுக்கு வலிமை தருவதுபோல் வேறு உண்டோ? பூசனைக்கு உபசரிப்பதற்கு அன்பாலும் சிறந்த ஒன்று உண்டோ என்றான்.

"என்பின் சிறந்தாயது ஓர் ஊற்றம் உண்ட என்னால் ஆமே
அன்பின் சிறந்தாயதுஓர் பூசனை யார்கண் உண்டே" (கடல் தாவு படலம் 60)

17. அந்தணரைப் போற்ற முடியவில்லையே

பண்டையத் தமிழரின் பண்பாட்டில் தலையானது விருந்தோம்பல் ஆகும். முன்பின் அறியாதவர்களைப் பேணுதலே ‘விருந்தோம்பல்’ என்று தமிழர் கருதினர். தமிழர் மரபில் உணவோடு, உணர்வையும் குழைத்துச் செய்த சமையல் விருந்தாகிறது. இல்லறக் கடமைகளில் ஒன்றான திருமணம் நடைபெறுவதன் நோக்கமே, விருந்தோம்பலாகும். கணவனுடன் கூடி வாழும் மங்கல மகளிர்க்குரிய தனி் உரிமையாக விருந்தோம்பல் கருதப்பட்டது. கணவனை இழந்தவர்களுக்கும், பிரிந்து வாழ்பவர்களுக்கும், விருந்தினரை வரவேற்கும் உரிமை கிடையாது.

அந்தணரைப் போற்ற முடியவில்லை என்பதை சிலம்பில் கண்ணகி கோவலனிடம் பேசும் போது,

“அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (கொலைக்களக்காதை 71-73) நீங்கள் என்னைப் பிரிந்ததால் நான் அறவோர்க்கு அளித்தலையும், அந்தணரைப் போற்றுதலையும், விருந்தினரை வரவேற்று உபசரித்தலையும் இழந்தேன் என்கிறாள்.

கம்பராமாயணத்தில் சீதையும் விருந்து குறித்து, யார் தந்த உணவை இராமன் உண்பார், அவர் இருக்கும் இடம் தேடி விருந்து வந்தால் என்ன செய்வார், என்று கணவனை விட்டு பிரிந்த சீதை தன் கணவர் குறித்து குறிப்பிடுகிறாள். சீதை அசோக வனத்தில் இராமனைப் பற்றி பலவாறாக எண்ணி உழல்கின்றாள். இவளே மாற்றாரின் சிறையான அசோகவனத்தில் இருக்கிறாள். இவள் இராமன் கானகத்தில் என்ன உண்பாரோ? இராமனுக்கு பிடித்த சிறுகீரையையாவது நான் சமைத்து தர முடியவில்லையே. அந்த கீரை உணவையாவது அக்கானகத்தில் யார் தருவார்கள்? யார் தர உண்பார்?. ஒருவேளை காட்டில் அவர் இருக்கும் குடிலைத் தேடி விருந்தாக யாராவது வந்தால் அவர் என்ன செய்வார் என்று விம்மினாள். வேறு பல எண்ணித் தன் நோய்க்கு மருந்தும் உண்டோ என்று தன்னைச் சுற்றிச் செல்லரிக்கும் தரையிலிருந்து எழுந்து விடாமல் கிடந்தாள்.

"அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும்? என்று அழுங்கும்
விருந்து கண்டபோது என் உறுமோ என்று விம்மும்” (காட்சிப்படலம் 343)

மெல்லிய இலை உணவு யார் பரிமாற இராமன் உண்பான் என்றும், விருந்தினர் வருவதைக் கண்ட போது, உபசரிப்பவர் இல்லையே என்று எப்படித் துன்பப்படுவானோ என்று நினைத்து விம்முவாள்.


18. அனுமன் அளித்த கணையாளி ஒர் விருந்து

சீதை அசோகவனத்தில் உயிரை மாய்த்துக் கொள்ள எழுந்தாள். அனுமன் ’இராமநாமம்’ எனும் சஞ்சீவி மருந்து கூறி அவள் உயிரைக் காத்தான். அவன் தந்த கணையாழியும், அவளது உயிரைப் பிழைக்க வைத்த மருந்தாக ஆயிற்று. பசி தீர்க்கும் சோறாயிற்று. பிணி தீர்க்கும் மருந்தாயிற்று. அறவோர் பெற்ற விருந்தாயிற்று. விருந்து உயிர் தரும் மருந்து. பசி போக்கும் உணவு. அனுமன் சீதையின் கைகளில் தந்த கணையாழி இம்மூன்று அரிய செயல்கள் செய்தன என்று கம்பர் கூறுகிறார். உயிர் தந்த மோதிரம் அறவோர் பெற்ற விருந்து, இல்லறத்தை ஏற்றுக் கொண்டவரை அடைந்த விருந்தினரை ஒத்தது, மருந்தென வந்த சஞ்சீவனம் மூன்றும் ஒன்றே. அதுவே இராமன் சீதைக்கு அளித்த தெய்வீக மோதிரம்.

"இருந்தும் பசியால் இடர் உழுந்தவர்கள் எய்தும்
அருந்தும் அமுது ஆகியது, அறத்தவரை அண்மும்
விருந்தும் எனல் ஆகியது வீயும் உயிர் மீளும்
மருந்தும் எனல் ஆகியது, வாழி மணி ஆழி" (உருக்காட்டுப்படலம் 556)


19. தேவர்கள் விருந்து அளித்தல்

குரங்குக் கூட்டமாகிய பெரிய படை வெள்ளம் இறந்து வானுலகத்தை அடைந்தது. அவ்வாறு வந்த வானரங்களை தேவர்கள் நேரிலே பார்த்து விருந்தினராக ஏற்று, அவர்களுடன் ஒன்று சேர்ந்தனர். ஆனால் அவர்கள் உரையாடி, மகிழ்ந்தனர்.

"விண்ணில் சென்றது கவிக்குலப் பெரும் படைவெள்ளம்
கண்ணில் கண்டனர் வானவர் விருந்து எனக் கலந்தார்" (பிரமாத்திரப்படலம் 2564)

20. இராவணன் தன் வீரர்களுக்கு அளித்த விருந்து

இராவணன் தன் மகன் இந்திரஜித்துவைக் கொன்ற இலட்சுமணனை வேலினால் சாய்த்த மகிழ்ச்சியாலும், மனநிறைவாலும் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான்.

"பொருந்து போர்ப் பெருங் கோயிலுள், போர்த் தொழில்
வருந்தினர்க்கு, தம் அன்பினின் வந்தவருக்கு
அருந்துதற்கு அமைவு ஆயின ஆக்குவான்
விருந்து அமைக்க மிகுகின்ற வேட்கையான்" (இராவணன் களம் காண் படலம் 3557)

தனக்காகப் போர்க்கோலம் பூண்டு போர் புரிந்த வீரர்களான விருந்தினரை, விருந்துண்ண அழைத்தான். வான நாட்டினரை வருவித்து, தேவலோக போகங்கள் அமைய விருந்துக்கு வேண்டியன செய்யுங்கள், அவற்றைக் குறைவின்றி செய்யுங்கள் என ஆணையிட்டான். மது வகைகளுடன், நிணமும், புத்தாடையும், சந்தனமும், மலர்களும், கத்தூரி கலந்த வாசனை நீரும் கொண்டு வந்தனர். தேவமாதர்கள் விருந்து நுகர்வார்க்கு, வாசனைத் தைலம் தேய்த்தனர். நறுமண நீராடினர். அன்னமும், அரும்பானங்களும் தந்தனர். சயனம் பரப்பினர். பாடினர். பாட்டின் பொருளுக்கு ஏற்ப, அபிநயித்து ஆடினர். இன்பம் ஊட்டினர். விருந்தினர்கள் அரசன் முதல் அடிமைகளாக உள்ளோர் அனைவரும் உள்ளடங்கினர். எல்லாரும் எல்லை இல்லாத இந்த போகத்தை நுகர்வாராயினர். இவ்விருந்தை, இராவணன் நன்றி தெரிவிக்க அழைத்தான். தனக்கு போரில் உதவியவர்களுக்கு எதிர் உதவி செய்து பாராட்டினான். எனவே விருந்தில் இது ஒரு வேறுபாடுள்ள விருந்தாகும்.


முடிவுரை

புதிதாய் வந்தவருக்கு உணவு கொடுப்பதே விருந்தாகும். கோசல நாட்டு மக்கள் விருந்தினர்களின் முகங்களைப் பார்த்து அவர்களுக்கு அன்னமளிக்கும் விழாவை விரும்பினார்கள். களத்தில் விளைந்த நெல்லைக் களத்துக்கு வரும் ஏழைகளுக்குக் கொடுத்தது போக, எஞ்சிய நெல்லை, விருந்தினர் உண்ணும்படி வீடுகளில் அடுக்கி வைத்திருந்தனர். வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு மா, பலா, வாழை, பருப்பு, நெய், கட்டித்தயிர், கண்ட சர்க்கரையுடன் கூடிய இனிய விருந்தை பரிமாறினர். சீதை, இராமனைப் பிரிந்து அசோகவனத்தில் இருந்த போது, விருந்தினர் வந்தால் இராமன் என்ன செய்வான் என்று வருந்தி அழுதாள். உரோமபாதர், தசரதனுக்கு, கௌதம முனிவர் விசுவாமித்திரருக்கு, முனிவர்கள் இராமனுக்கு, குகன் இராமனுக்கு, பரத்வாஜர் இராமன், பரதனுக்கு, அத்திரி முனிவர், சுதீக்கண முனிவர், அகத்திய முனிவர் ஆகியோர் இராம, இலட்சுமண சீதைக்கும் விருந்தளித்தனர். சுக்ரீவன், மனைவி இல்லாமல் பரிமாறிய உணவை இராமன் உண்டான். சுயம்பிரபையும், மைந்நாக மலையும் விருந்து அளித்தனர். அனுமன் அளித்த கணையாழி, சீதைக்கு விருந்தாக அமைந்தது. இராவணன் தன் வீரர்களுக்கு விருந்தளித்தான். இதன் மூலமாக கம்பர் விருந்திற்கு அளித்த முக்கியத்துவத்தை கம்பராமாயணத்தின் மூலம் அறிய முடிகிறது.

துணை நூற்பட்டியல்

1. இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம், சென்னை,2016.

2. காலமும் கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி), கபிலன் பதிப்பகம், புதுச்சேரி, சென்னை.

3. கம்பன் புதிய தேடல், அ.அ. ஞானசந்தரத்தரசு,தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

4. எல்லைகள் நீத்த இராமகாதை, பழ.கருப்பையா, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.

5. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன், வள்ளி பதிப்பகம், சென்னை, 2019.

6. கம்பன் காட்டும் வைணவப் பேருலகம், அமுதன், லக்‌ஷண்யா பதிப்பகம், சென்னை, 2019.

7. கிருபானந்த வாரியார், இராமகாவியம், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை, 2012.

8. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

9. ஸ்ரீ. சந்திரன். ஜெ., சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும், தமிழ் நிலையம், சென்னை, 2012.

10. ஸ்ரீ சந்திரன். ஜெ., மணிமேகலை மூலமும் தெளிவுரையும், தமிழ் நிலையம், சென்னை, 2012.

11. முகம் மலருதலே விருந்தோம்பலின் முதன்மைப் பண்பு, அரண் மின்னிதழ் - https://aranejournal.com/article/5980

12. சீவகசிந்தாமணி, இரண்டாம் தொகுதி, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2010.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p308.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License