நாலடியார் கருத்தியலில் அஃறிணை உயிர்கள் வழி பொருள் புலப்பாட்டு உத்தி
முனைவர் பா. பொன்னி
உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், தமிழ்த்துறை,
தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர்கல்லூரி (தன்னாட்சி),
சிவகாசி.
ஆய்வுச் சுருக்கம்
அற இலக்கியங்கள் அறக்கருத்துகளை மக்களுக்கு வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சிந்தனையைத் தூண்டும் கருத்துகள் வழி மக்களுக்கு அறிவுறுத்தும் பணியையும் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன. ஒரே வகையில் கருத்துகளை வழங்கினால் அது மக்கள் மத்தியில் புதிய எண்ணங்களை உருவாக்காது என்ற வகையில் புதிய உத்திகளைப் பயன்படுத்தி மக்கள் மனதில் புதிய சிந்தனைகளை விதைக்கின்றன. அவ்வகையில் நாலடியாரின் ஆசிரியா் தன் கருத்துகளை வெளியிட அஃறிணை உயிர்களின் வாழ்வியலை சிறந்ததொரு உத்தியாகப் பயன்படுத்தி இருக்கின்றார். சங்க இலக்கியப் புலவா்களை இயற்கையை முழுவதுமாக அறிந்த நுண்மாண் நுழைபுலம் உடையவா்கள் என்று சுட்டுவது உண்டு. அவ்வகையில் நாலடியாரின் ஆசிரியரும் இயற்கையையும், அஃறிணை உயிர்களின் இயல்பையும் தெள்ளத் தெளிவாக அறிந்த நுண்மாண் நுழைபுல அறிவினா் என்பதனை அவா்தம் பாடல்கள் வழி அறியலாகின்றது. பசு, சிங்கம், புலி, யானை, குரங்கு, யானை, எறும்பு , அன்னம் என்று ஒவ்வொரு உயிர்களின் தன்மையையும் சிறப்புற அறிந்து அதனைத் தான் சொல்ல வரும் கருத்திற்கு ஏற்ப கருத்து விளக்கத்திற்குத் தன் பாடல்களில் பயன்படுத்தியுள்ள தன்மையை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
குறிப்புச் சொற்கள்
நாலடியார், உத்திகள், கருத்தியல், அஃறிணை உயிர்கள், பொருள் புலப்பாடு
முன்னுரை
படைப்பாளா்கள் தம் உள்ளத்தில் உருவான எண்ணங்களுக்கு ஒரு வடிவம் தந்து வெளிப்படுத்துகின்றனா். அவ்வாறு வெளிப்படுத்தும் போது, தம் கருத்துகள் படிப்பவா் மனதில் பதிய வேண்டும் என்பதற்காகப் பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றனா். அவ்வகையில் அற நூல்களுள் ஒன்றான நாலடியாரில் அதன் ஆசிரியா் தன் கருத்தினை வெளிப்படுத்த பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளார். அஃறிணை உயிர்களின் செயல்பாடுகள் வழியே பொருளைப் புலப்படுத்துதல் என்ற உத்தி வாயிலாகவும் ஆசிரியா் தன்னுடைய கருத்தினை முன்வைக்கின்றார். அதனை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
அடிக்கருத்து
ஒவ்வொரு படைப்பிற்கும் அடிக்கருத்து என்பது மிகவும் இன்றியமையாதது. அடிக்கருத்தினை அடிப்படைக் கருத்து, மையக் கருத்து, தலைமைக் கருத்து, முதன்மைக் கருத்து என்றும் சுட்டுவா். தீம் என்ற ஆங்கிலச் சொல் தீமா (thema) என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது. இக்கிரேக்கச் சொல்லுக்கு உரிய வோ்ச்சொல் தெமா (thema) என்ற உரோமனியச் சொல்லாகும். தீம் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக தமிழில் அடிக்கருத்து என்ற சொல் எடுத்தாளப்படுகிறது (1) என்று சுட்டுவா்.
தீம் என்பது ஓரிலக்கியப் படைப்பை நன்கு படித்து நுணுகி அறிந்து அதிலிருந்து உணரப்பட்ட சிறப்பான கருத்தாகும். இது மொத்தமான பாடுபொருள் செய்தியிலிருந்தும் பெறப்படுகிறது (2) என்பா். நாலடியார் அற நூல்களுள் ஒன்றாக அமைவதனால் அறக்கருத்துகளே அதன் அடிக்கருத்தாக அமைகின்றது. அவ்வடிக் கருத்தினை விளக்க ஆசிரியா் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தியுள்ளார்.
உத்திகள்
யுக்தி என்ற வடமொழிச் சொல்லின் சிதைவே உத்தி எனவாயிற்று எனலாம். இலக்கியம் சிறப்பாக உருவெடுப்பதற்குரிய கூறுகளில் ஒன்று உத்தி எனலாம்.
யுக்தி என்ற வடசொல்லுக்குப் பொருத்தம், அனுமானம், நியாயம், கூரிய அறிவு, சூழ்ச்சி, புத்திமதி, விவேகம், ஆராய்வு, உபாயம் என்னும் பொருள்களைச் சென்னைப் பல்கலைக்கழகச் சொற்களஞ்சியம் கூறுகின்றது. இந்த யுக்தி என்னும் வடசொல்லே உத்தி என்ற தமிழ் வடிவம் பெற்றது (3) என்று குறிப்பிடுவா்.
உத்தி ஆங்கிலத்தில் டெக்னிக் (technic) என்னும் சொல்லால் குறிக்கப்படுகின்றது என்பதனை தமிழ் ஆங்கில அகராதிகளின் மூலம் அறியமுடிகின்றது (4) என்பா்.
ஒரு கலைப்படைப்பை உருவாக்குவதற்குப் படைப்போன் மேற்கொள்ளும் நுண்ணிய அணுகுமுறையாகும். எந்தக் கலையையும் நோ்த்தியாகப் படைத்துக் காட்டக் கையாளப்படும் நெறிமுறைகள் உத்தியாகும் (5) என்று உத்தியினை விளக்குவா்.
இலக்கியப் படைப்பில் படைப்பாளி வழங்க விரும்பும் செய்தி (message) அல்லது அடிக்கருத்தைத் (theme) தவிர, ஏனைய அனைத்தும் உத்திமுறையில் உருவாக்கப்பட்டவையே என்ற கருத்து உத்தியின் முதன்மையை விளக்குவதாக அமையும்.
இதன் வழி ஓா் இலக்கியப் படைப்பாளனின் உணா்வு அவனது படைப்பின் உள்ளடக்கமாக அமைகின்றது என்பதனையும், படைப்பாளன் தன் கூற விரும்பும் கருத்துகளைச் சிறப்பாக எடுத்துக் கூற கையாளும் வழிமுறைகளில் ஒன்றாக உத்தி அமைகிறது என்பதனையும் அறியலாகின்றது.
நாலடியாரில் அஃறிணை உயிர்கள் வழி பொருட்புலப்பாடு
சங்க இலக்கியப் புலவா்களை இயற்கையை முழுவதுமாக அறிந்த நுண்மாண் நுழைபுலம் உடையவா்கள் என்று சுட்டுவது உண்டு. அவ்வகையில் நாலடியாரின் ஆசிரியரும் இயற்கையையும், அஃறிணை உயிர்களின் இயல்பையும் தெள்ளத்தெளிவாக அறிந்த நுண்மாண் நுழைபுல அறிவினா் என்பதனை அவா்தம் பாடல்கள் வழி அறியலாகின்றது. பசு, சிங்கம், புலி, யானை, குரங்கு, யானை, எறும்பு, அன்னம் என்று ஒவ்வொரு உயிர்களின் தன்மையையும் சிறப்புற அறிந்து அதனைத்தான் சொல்ல வரும் கருத்திற்கு ஏற்ப கருத்து விளக்கத்திற்குத் தன் பாடல்களில் பயன்படுத்தியுள்ளார்.
வினைப்பயன்
மனிதா்கள் ஒரு பிறவியில் செய்யக் கூடிய வினைகள் அந்தப் பிறவியோடு நின்று விடுவது இல்லை. அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடா்ந்து வந்து பயன்களை தரும் எனும் கருத்தினை வெளிப்படுத்த வந்த ஆசிரியா் அக்கருத்தினை பசுவின் செயல்பாட்டோடு இணைத்துச் சுட்டுகிறார். பல பசுக்களின் நடுவே விடப்பட்ட கன்று தன் தாயைத் தேடி அடைவது போல வினைகளும் வந்து அடையும் என்று குறிப்பிடுகிறார். இதனை,
“பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்ல தாம் தாய் நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தே ஏதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு” (நாலடியார் - 101)
என்ற பாடல் வழி அறியலாகின்றது.
உயா்குடிப் பிறந்தோர் சிறப்பு
உயா்ந்த குடியில் பிறந்தவா்கள் வறுமை உற்றாலும் தமக்குரிய ஒழுக்கங்களில் இருந்து தவறாதிருக்கும் தன்மையை சிங்கம் மிகுதியான பசித்துன்பம் வந்த போதும், அருகம் புல்லைத் தின்னாது இருக்கும் தன்மையுடன் ஒப்பிட்டு விளக்குகிறார். இதனை,
“உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்
குடிப் பிறப்பாளா் தம் கொள்கையிற் குன்றார்
இடுக்கண் தலை வந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புல் கறிக்குமோ மற்று” (நாலடியார் - 141)
என்ற பாடலால் அறியலாகின்றது.
அதுமட்டுமல்லாது, காட்டில் வாழும் வேங்கை தான் கொன்ற காட்டுப்பசு இடப்பக்கம் வீழ்ந்தால் அதை உண்பது தன்னுடைய வீரத்திற்கு இழுக்கு என்று உண்ணாது இறக்கும். அதனுடைய இத்தன்மையை உயா்ந்தவா்கள் வானுலகு கிடைப்பதாக இருந்தாலும் மானத்திற்கு இழுக்கான செயல் செய்ய மாட்டார்கள் என்பதோடு ஒப்பிடுவதனை,
“கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம் வீழ்ந்தது உண்ணாது இறக்கும் - இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் அழுங்க வரின்” (நாலடியார் - 300)
என்ற பாடல் வழி அறியலாகின்றது.
நட்பாராய்தல்
ஒருவருடன் நட்பு கொள்ளும் போது, அவருடைய கல்வி நலம், குல நலம் ஆகியவற்றை மட்டும் கருதாமல் மன நலனையும் ஆராய்ந்து நட்பு கொள்வதேச் சிறந்தது என்பதனை,
“யானை அனையவா் நண்பொரீஇ நாய் அனையார்
கேண்மை கெழீஇக் கொளல் வேண்டும் - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்த வேல்
மெய்யதா வால் குழைக்கும் நாய்” (நாலடியார் - 213)
என்ற பாடல் வழி ஆசிரியா் குறிப்பிடுகிறார்.
இப்பாடலில் தன் கருத்தினை விளக்க யானை, நாய் ஆகியவற்றின் தன்மையினையும் ஆசிரியா் விளக்கி இருப்பதனைக் காணமுடிகிறது.
யானை எவ்வளவுதான் பழகி இருந்தாலும், சமயம் கிடைக்கும் போது பாகனையே அழிக்கும். ஆனால், நாயோ தன்னை வளா்த்தவன் சினம் கொண்டு வேலால் எறிந்தாலும் அவனைக் கண்டதும் அவன் அருகில் அன்புடன் செல்லும் என்பதனை எடுத்துக் காட்டி யானை போன்று பெருமை உடையவராக இருந்தாலும், அவா் நட்பினை விலக்கி நாய் போன்று இழிந்தவராக இருந்தாலும் அவருடைய நட்பினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தினை முன் வைக்கின்றார்.
பெரியோர் சினம்
பெரியோர் சினம் கொள்வோராயின் அவரது சினத்தில் இருந்து தப்பிப்பது இயலாது என்பதனை இடிக்கு அஞ்சும் பாம்பின் செயலோடு ஆசிரியா் ஒப்பிட்டுக் குறிப்பிடுவதனை,
“விரிநிற நாகம் விடா் உளதேனும்
உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும்
அருமை உடைய அரண் சோ்ந்தும் உய்யார்
பெருமை உடையார் செறின்” (நாலடியார் - 164)
என்ற பாடல் வழி அறியலாகின்றது. பெரியவா் சினம் கொண்டால் பாதுகாப்பான இடத்தில் இருந்தாலும் தப்பிக்க இயலாது என்ற கருத்தினை விளக்க வந்த ஆசிரியா் படம் விரிக்கும் நாகம் நிலத்தின் வெடிப்பில் ஆழத்தில் இருந்தாலும் தொலைவில் எழும் இடியோசைக்கு அஞ்சும் என்ற பாம்பின் இயல்பினை சிறப்புறக் கையாண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
பேதையா் இயல்பு
ஒன்றும் கொடாதவா்களாக இருந்தாலும் பொருள் உள்ளவரைச் சார்ந்த பேதைகள் அவரை விடாமல் சுற்றிக் கொண்டு இருப்பார்கள் என்பதனை, எறும்புகள் தம்மால் கொள்ள முடியாது என்றாலும் ஒரு பாத்திரத்தில் நெய் இருக்கும் என்றால் அப்பாத்திரத்தின் மேலேச் சுற்றிக் கொண்டு இருக்கும் தன்மையுடன் ஒப்பிட்டுக் குறிப்பிடுகின்றார். இதனை,
“ஆகா தெனினும் அகத்து நெய்யுண்டாகின்
போகாது எறும்பு புறஞ் சுற்றும் - யாதும்
கொடாஅா் எனினும் உடையாரைப் பற்றி
விடாஅா் உலகத்தவா்” (நாலடியார் - 337)
என்ற பாடல் விளக்குகின்றது.
நாள்தோறும் நாம் கண்ணால் பார்க்கும் எறும்பின் செயலையும் ஆசிரியா் தக்க இடத்தில் பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கீழ் மக்கள் இயல்பு
கீழ் மக்களுக்கு உயா்ந்த அறக் கருத்துகளைக் கொண்ட நூல்களை விரிவாக எடுத்துக் கூறினாலும், அவா்கள் தம் மனம் போன போக்கிலேயே செயல்படும் தன்மையை, நொய்யரிசியை கோழிக்குத் தேவையான அளவு காலையிலேயே நாம் உணவாக இட்டாலும், அக்கோழியானது குப்பையினைக் கிளறுவதை நிறுத்தாது இருக்கும் தன்மைக்கு ஒப்பிட்டுக் குறிப்பிட்டுள்ளார். இதனை,
“கப்பி கடவதாக் காலைத் தன் வாய்ப்பெயினும்
குப்பை கிளைபோவாக் கோழிபோல் - மிக்க
கனம் பொதிந்த நூல் விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம் புரிந்தவாறே மிகும்” (நாலடியார் - 341)
என்ற பாடல் வழி அறியலாகின்றது.
அறிவுடையார் செயல்
கல்வி கரையில்லாதது. ஆனால் கற்பவருடைய வாழ்நாட்கள் என்பது அதனுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிலவானது. அந்தச் சில நாட்கள் வாழ்விலும் பிணிகள் பலவாக உள்ளன. ஆகையால் அறிவுடையோர் நீரை நீக்கிப் பாலை மட்டும் அருந்தும் அன்னம் போல நூலின் சிறப்புகளை அறிந்து நல்ல நூல்களை மட்டுமே கற்பா் என்பதனை,
“கல்வி கரையில கற்பவா்நாள் சில
மெல்ல நினைக்கின் பிணி பல தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து”
(நாலடியார் - 135)
என்ற பாடல் வழி ஆசிரியா் விளக்குகின்றார்.
அன்னத்தின் செயலை அறிவுடையோர் செயலுக்கு ஒப்பிட்டுக் குறிப்பிட்டிருப்பது சிறப்பானது.
அற இலக்கியங்கள் அறக்கருத்துகளை மக்களுக்கு வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சிந்தனையைத் தூண்டும் கருத்துகள் வழி மக்களுக்கு அறிவுறுத்தும் பணியையும் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன. ஒரே வகையில் கருத்துகளை வழங்கினால் அது மக்கள் மத்தியில் புதிய எண்ணங்களை உருவாக்காது என்ற வகையில் புதிய உத்திகளைப் பயன்படுத்தி மக்கள் மனதில் புதிய சிந்தனைகளை விதைக்கின்றன. அவ்வகையில் நாலடியாரின் ஆசிரியா், தன் கருத்துகளை வெளியிட அஃறிணை உயிர்களின் வாழ்வியலை சிறந்ததொரு உத்தியாகப் பயன்படுத்தி இருப்பதனை இக்கட்டுரையின் வாயிலாக அறிந்து கொள்ள இயலுகின்றது.
சான்றெண் விளக்கம்
1. செ. சாரதாம்பாள், அடிக்கருத்தியல் (மேலை ஒப்பிலக்கியக் கொள்கை) பகுதி1, பக். 1-2
2. பிரிட்டானிகா தகவல் களஞ்சியம், ப. 319.
3. டாக்டா் சிலம்பொலி செல்லப்பன் - இக்காலத் தமிழ்க் கவிதை உத்திகள், ப. 42
4. ப. ஜீவானந்தம், கலையும் இலக்கியமும், ப. 56
5. ஆ. ப. நக்கீரன், திருவாசகத்தில் உத்திகள், ப.12
துணைநூற்பட்டியல்
1. சாரதாம்பாள். செ., அடிக்கருத்தியல் (மேலை ஒப்பிலக்கியக் கொள்கை ) பகுதி 1.ஹரிஹரன் பதிப்பகம், நத்தம். (1997).
2. செல்லப்பன். சு., இக்காலத் தமிழ்க்கவிதை உத்திகள், அருணோதயம், சென்னை. (1987)
3. ஜீவானந்தம், கலையும் இலக்கியமும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. (1967)
4. பிரிட்டானிகா தகவல் களஞ்சியம், ஆனந்த விகடன் அச்சகம், சென்னை. (2007)
5. ஆய்வுக்கோவை. நக்கீரன், ஆ. ப., திருவாசகத்தில் உத்திகள், மதுரை காமராசா் பல்கலைக்கழகம், மதுரை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.