Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

கம்பராமாயணத்தில் அதிகாயன் மாட்சியும் வீழ்ச்சியும்

முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.


முன்னுரை

இராவணனுக்கும், அவன் இரண்டாவது மனைவி தானியமாலிக்கும் பிறந்தவன் மேகநாதன். இந்திரனை வென்றதால், “இந்திர சித்தன்” என்று போற்றப்பட்டான். இராவணனின் மற்றொரு மகனோ, இந்திரன் போன்று, வேறு ஒரு இந்திரன் இல்லாமல் போனதால், இந்திரனை வென்று இந்திரசித்து என்று பெயர் சூட்டிக் கொள்ள முடியவில்லை. எனவே ’அதிகாயன்’ என்று பெயர் கொண்டான். அதிகாயன் என்ற சொல்லுக்கு ’பேருடல் பெற்றவன்’ என்பது பொருள். அத்தகைய பல சிறப்புகளைப் பெற்ற அதிகாயனின் மாட்சியையும், வீழ்ச்சியையும் குறித்து கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.

அதிகாயன் பெருமை

இந்திரசித்தனில் இருந்து வேறுபட்டு நிற்கிறான். இந்திரஜித் மாயப் போர் செய்வதில் வல்லவன். மாயப் போர் செய்தாவது, தான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமுடையவன். ஆனால் அதிகாயன் மாயப்போரை இகழ்ந்தான். போர் செய்து வெற்றி கொள்வதையேச் சிறந்தது என்ற கொள்கை உடையவன். வானவர்களுடன் போரிட்டான்.

அறம் அல்லாததை பாவம் அன்றி, மற்றொன்றை அறியாதவன். வீரம் என்னும் அணிகலனைத் தவிர, வேறான பல அணிகலனை அணியாதவன். வலிமை அற்றிருந்த மிக எளிய எந்த உயிரையும் அழிக்காமல் பெரும் புகழைப் பெறுவதே சிறந்தது என்பதை அறிந்தவன்.

“அறனல்லது அல்லது மாறு அறியான்
மறன் அல்லது பல் மணி மற்று அணியான்
திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான்
உறல் நல்லது பேர் இசை என்று உணர்வான்” (அதிகாயன் வதைப் படலம் 1732)

போர்க்களத்தில் உடலில் உள்ள உயிரை விட நேரும் போதும், மாயச்செயலில் வல்லவர் கூடிப் போரிட்டாலும், தேசத்தில் உள்ள அனைவரும் தந்திரச் செயல்கள் செய்தாலும், அவற்றுக்கு எதிராக மாயத் தொழிலைச் செய்ய நினைக்க மாட்டான்.

“காயத்து உயிரே விடு காலையினும்
மாயத்தவர் கூடி மலைந்திடினும்
தேயத்தவர் செய்குதல் செய்திடினும்
மாயத்தொழில் செய்ய மதித்திலனால்” (அதிகாயன் வதைப் படலம் 1733)

விதியே சினந்தாலும், அதனால் வெற்றி கொள்ள முடியாத வீரம் அவனுடைய வீரம் என்று கம்பர், விதிகாயினும் வீரம் வெலற்கு அரியான் அதிகாயன் எனும் பெயரான் அறத்திற்கு மாறாக நடப்பவர்களை அறக்கடவுள் அழிக்கும் என்னும் எண்ணம் சிறிதும் இல்லாமல் பாவச் செயல் புரிபவன்.


அதிகாயன் பெருமை குறித்து வீடணன்

அதிகாயன் அழகாபுரியை ஆண்ட குபேரனையும் வெற்றி பெற்றவன். அதிகாயனின் பெருமை குறித்து வீடணன், இலட்சுமணனுக்கும், இராமனுக்கும் எடுத்துக் கூறும்போது ’மாவலியான்’ என்று கூறுகிறான். அவன் வீரத்துடனும், அறக் கொள்கையில் மாறுபாடு இல்லாது போர் செய்யக்கூடியவர் என்றும் கூறுகிறான். இவனை அழித்தப் பிறகே, இனி இந்திரசித்தனையும் அழிக்கலாம் என்று வீடணன் நம்புகிறான். அத்தகைய வீரமுள்ளவர், மாயப்போர் செய்யாத நல்லவன் அதிகாயன்.

அதிகாயன் பெற்ற வரங்கள்

இடையறாது சிறப்பாக தவம் செய்து பிரம்மன் அளித்த வரத்தால் தேவர்களும், அசுரர்களும் செய்த சண்டையில் இறக்காமலும், உடலும், உள்ளமும் சலிக்காமலும் நின்ற வலிமை வாய்ந்தவன். பிரம்மாத்திரம் அன்றி மற்ற ஆயுதங்களால் சாகாமல் இருக்க வரம் பெற்றவன்.

“சாவான் இறையும் சலியா வலியான்
மூவா முதல் நான்முகனார் மொழியால்” (அதிகாயன் வதைப்படலம் 1724)

அதிகாயனின் ஆற்றல்

கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணன், பல தேவர்களுடன் கூடிய வடமேரு மலையை அகழ்ந்து எடுப்பதற்காக, அதற்கேற்ற வலிமை பெறுமாறு, இந்த அதிகாயனை வளர்த்தான். திருமாலும், மந்தர மலையும், வாசுகிப்பாம்பும், தேவரும் உதவியாக வேண்டும் என்று எண்ணாமல், பெரிய பாற்கடலையேத் தன் காலால் கலக்கும் ஆற்றல் பெற்றவன். (அதிகாயன் வதைப்படலம் 1726) இராவணன் திக்கு யானைகளைத் தள்ளினான். அதிகாயன் சக்கரவாளகிரியைத் தள்ளினான். எண்ணற்ற காலங்கள் கடந்தாலும், சிவபெருமான் மிகுதியான தீயைத் தன் முனையிலே கொண்டு சூலத்தை அதிகாயன் மீது வீச, அதைக் கையால் ஏற்றுக் கொண்டு,’ நீ எறிந்தது நான் கையிலேப் பற்றிவிடும் அற்ப தன்மை பெற்ற இந்தச் சூலத்தைத்தானா? என்று’ எள்ளல் தன்மையோடு கேட்கும் இயல்புடையவன். (அதிகாயன் வதைப் படலம்1728)

தன்னோடு பகைமை பாராட்டிய தேவர்களின் பல வகையான ஊர்களைத் தீயிட்டுக் கொளுத்திய அந்தக் காலத்தில், இவனை வெல்லவேண்டும் என்று எண்ணி, எப்போதும் வெற்றி மாலையையே அணியும் திருமால், இவனது குற்றம் நிறைந்த உயிரை உண்க என்று கூறி எறிந்த கொடுந்தன்மை வாய்ந்த சக்கராயுதத்தையும் தடுத்த வில் வித்தையில் வல்லவன். (அதிகாயன் வதைப்படலம் 1729) வஜ்ராயுதத்தையும் வெற்றி கொண்டவன். தனுர் வேதத்தின் உண்மைகளை, அதற்குரிய துணை நூல்களுடன், சிவபெருமானிடம் கற்றவன். மேலும் தேவர்கள் முற்றிலும் கற்றறியாதனவும், அவற்றை செலுத்தும் வல்லமை பெற்றவர் வேறு யாரும் இல்லை எனும் அளவும் வலிமையான ஆயுதங்களையும் அப்போதேப் பெற்றவன். அதனால் பேராண்மை பெற்று உள்ளான்.

“கற்றான் மறை நூலொடு கண்ணுதல்பால்
முற்றாதன தேவர் முரண் படைதாம்
மற்று ஆரும் வழங்க இலார் இலவும்
பெற்றான் நெடிது ஆண்மை பிறந்துடையான்” (அதிகாயன் வதைப்படலம் 1731)


அதிகாயன் கூறிய வஞ்சினம்

அதிகாயன், இராவணனிடம் உன் தம்பி கும்பகர்ணன் உயிருக்கு இறுதி செய்து அழித்த இராமனுக்குத் தம்பியான இலட்சுமணனின் உயிருக்கு இறுதி செய்து, பின்பு, அந்த இராமனை நடுங்கும்படி செய்யவல்ல ஒப்பற்ற கொடுந்துன்பத்தைச் செய்யாமல் போவேனாயின், அதன் பிறகு, நான் சிறந்த தலைவனாகிய உனக்கு ஒரு நல்ல மகனாகத் திகழுவேனோ? என்று வஞ்சினம் கூறுகிறான்.

"உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன்
தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து அவனைக்
கம்பிப்பது ஓர் வன்துயர் கண்டிலனேல்
நம்பிக்கு ஓர் நன் மகனோ இனி நான்" (அதிகாயன் வதைப் படலம் 1679)

நெருங்கிப் போரிடும் அக்கிளர்ச்சி பெற்ற வானரப்படை முழுவதையும் அழித்து, இதுவரை உயர்வு பெற்ற அவ்வானரங்களின் தலையை வெட்டி, பூமியில் போடுவேன், இவ்வாறு அதிகாயன் வஞ்சினம் உரைத்ததை அறியமுடிகிறது.

கைடவனே அதிகாயன்

மது, கைடவர் திருமாலுடன் போரிட்டனர். பல்லாயிரம் நாட்கள் கழிந்தன. அவர்கள் திருமாலை நோக்கி, எம்மைப் போன்றவர்கள் எடுத்துரைப்பது என்னவென்றால், மதிக்கத்தக்க வலிமை வாய்ந்தவரில் உன்னை ஒத்தவர் எவர் இருக்கின்றனர். எவரும் இல்லை என்று மதுகைடவர் உரைத்தனர். நாங்கள் ஒருவராகவே ஏழு உலகங்களையும் உண்டு, பிறகு வெளியே உமிழும் ஆற்றல் பெற்றுள்ளோம். அத்தகைய எங்கள் இருவரோடும் நீ தனி ஒருவனாக இவ்வளவு நாட்கள் போரிட்டாய். உன் மனதில் நீ நினைக்கும் வரத்தைத் தருவோம், தந்தே விட்டோம் என்று மதுகைடவர் கூறினர். திருமாலும், “உங்களை வெல்லும் வழியைச் செல்லுக” என்றார். நாங்கள் உனது இடது தொடையில் இறந்து போவோம் என்ற போது, திருமாலும் இடது தொடையை நீளச் செய்தார். இருவரும் சிக்கிக் கொண்டனர். இவர்களுள் மது - கும்பகர்ணன் ஆவான். கைடவன் - அதிகாயன் ஆவான் என்று வீடணன், இராமனிடம் கூறினான்.

“கதிர்தான் நிகர் கைடவன் இக்கதிர்வேல்
அதிகாயன் இது ஆக அறைந்தனெனால்” (அதிகாயன் வதைப்படலம் 1743)

அதிகாயன் தன் வீரத்தை மிகுத்துக் கூறல்

இராவணன் மிகுந்த கோபத்துடன், போருக்குச் செல்பவர்கள் செல்லுங்கள். இனிமேல் இறந்து போவதே செய்யக்கூடியது என்று கூறுவீர்களானால், போர்க்களத்துக்குப் போகாமல், வேறு இடம் செல்லுங்கள் என்ற போது, அதிகாயன் “வானத்தில் உள்ளவர்கள் அஞ்சட்டும். இந்த வையகத்தில் உள்ளவர் அஞ்சட்டும். திருமாலும், ஐந்து முகங்களைக் கொண்ட சிவனும் அஞ்சட்டும். மேலும் நான் போருக்குப் போக அஞ்சினேன் என்று உன்னைப் பற்றி நீயே எண்ணி வெட்கப்படுக. ஆனால் நான் போருக்கு அஞ்சினேன் என்று சொல்வது முறையோ? தரையிலே தேய்க்கப்பட்ட அக்க குமரனும், கும்பகர்ணனும் அந்த இராம இலட்சுமணர்களின் புகழின் வலிமையால் ஏமாற்றப்பட்டவனாகிய வீடணனாகிய இவர்களுக்குச் சமமாக என்னை எண்ணி விட்டாயோ? இராம இலட்சுமணரைக் கட்டி இழுத்து, உன் முன்பாகக் கொண்டு வருவேன். இந்த எனது ஆற்றலை நீ காண்பாயாக”, என்று பலவாறாக அதிகாயன் இராவணனிடம் பேசினான்.

“வெட்டித் தரைஇட்டு இரு வில்லினரைக்
கட்டித் தருவேன் இது காணுதியால்” (அதிகாயன் வதைப் படலம் 1680)

தந்தையின் சம்மதத்திற்காகக் காத்திருத்தல்

படைகளோடு போருக்குப் போ என்று சொன்னாலும் சரி, அல்லது படை இல்லாமல் தனியாகப் போ என்று சொன்னாலும் சரி, நான் இப்போதே நீ ஏவியபடி செய்வேன். இவ்விரண்டில் உனக்கு சம்மதமானதைச் சொல்லுக விடை தருக என்று கூறி கோரினான். (அதிகாயன் வதைப்படலம் 1681)

இராவணனுக்கு நம்பிக்கையூட்டியவன்

போருக்குச் செல்கிறேன் என்று அதிகாயன் கூறியவுடன், இராவணன் அதிகாயனிடம், ’நீ அந்த இலட்சுமணனது உயிரைப் பறித்துக் கொடுத்தாயானால், மறுநாளில் நான் அந்த இராமன் என்னும் பெயரை உடையவனது அருமையான உயிரைப் பறித்துக் கொண்டு போரை முடிப்பேன்” என்று கூறினான். அந்த அளவிற்கு தன் தந்தையின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டான். (அதிகாயன் வதைப்படலம் 1682)

அதிகாயனுக்குத் துணையாகச் சென்ற போர் வீரர்கள்

மூவாயிரம் கோடி காலாட் படையினரும், யானையும், தேரும், குதிரையும், அதுவரை போருக்கு அனுப்பாதன பலவகை சேனைகளையும், அதிகாயனுடன் செல்ல இராவணன் பணித்தான். கும்பன், நிகும்பன், அகம்பன் மூவரும் தேரின் பக்கத்தில் துணையாகச் செல்வர் என்றும், இராவணன் பணித்தான். அதிகாயன் வில்லின் நாண் தெறித்த ஒலி, ஆக்கல் - காத்தல் - அழித்தல் எனும் மூன்று முறைகளைப் பெற்றுள்ள கடல் அஞ்சும்படி பேரொளி ஓலித்தது. பெரிய முரசுகள் நீரையும் கொண்ட மேகங்கள் அஞ்ச முழங்கின. சூரியனோடு சேர்ந்து ஊர் கோளாகிய ஒளிவட்டம் சென்றதுபோல, அதிகாயனின் ஒரு தேரை சூழ்ந்து, தேர்கள் வட்டமாகச் சென்றன. யானைகள் சென்றன. குதிரைகள் வேகமாக செல்வதால், தரையில் கால் பதிவது சரியாக தெரியாமல், அவை பூமியில் செல்லவில்லை போலும். (அதிகாயன் வதைப்படலம் 1683, 84)


சித்தப்பா மேல் கொண்ட பாசம்

போர்க்களத்தில் மலையைப் பார்த்தது போன்ற தோற்றம் தரும் தோள்களுடன், கால்களும் துண்டிக்கப்பட்டு, கரிய உடலைப் போலிருந்த கும்பகர்ணனின் உடலைக் கண்டு கலங்கிய அதிகாயன், அந்த மாவீரன் பெற்ற அவல நிலையைக் கண்டு, ஒப்பற்ற அந்த தந்தையினுடைய நீண்ட தலையைக் காணாதவனாகி நின்று, மனம் தளர்ந்தான். இது பிறரால் வெல்ல முடியாத என் தந்தை கும்பகர்ணனின் உடலாகும் என்று கூறி பெருமூச்சுவிட்டு, சினம் கொண்டான். ஐயோ இந்தத் துன்பக் காட்சிகளைப் பார்க்கத்தான், நான் இங்கு வந்தேனா? என் உயிரைக் காத்துக் கொள்ளும் வழியில் செல்ல மாட்டேன். விரைவாக இன்னும் உயிருடன் தெரிகின்ற அந்த மனிதர்களைக் கொல்லவில்லை என்றால், அந்தத் துன்பம் நீங்க பெறுவேனோ? என்று கூறி கோபமடைந்தான். என் தந்தை கும்பகர்ணன் உடலை இவ்வாறு சிதைத்தவனான இராமனுடைய தம்பி இலட்சுமணனையும், அதேப்போல சிதைத்து, அழித்து, அதைக் கண்டு இராமன் பெறும் துன்பத்தைக் கண்ணால் கண்ட பிறகே, என் துன்பத்தைத் துடைத்துக் கொள்வேன் என்று அதிகாயன் கூறினான்.

“அன்னான் இடர் கண்டு இடர் ஆறுவென் என்று
உன்ன ஒருவற்கு இது உணர்த்தினனால்” (அதிகாயன் வதைப்படலம் 1699)

மயிடனுக்கு வாக்குறுதி அளித்தல்

இலட்சுமணனைப் போரிட அழைத்து வந்தால், உன்னை ஒரு மன்னனாக செய்து விடுவேன் என்றும், சிறப்பு மிகுந்த மதுவினைக் கொண்ட குடங்கள் எண்ணாயிரமும், குபேரன் கொடுத்த ஒளிவிடும் அணிகலன்களையும், யானைகள் லட்சக்கணக்கிலும், குதிரைகளையும், பட்டாடைகள் ஆயிரம் வண்டிகளும், இப்போது சொன்னதும், இன்னும் சொல்லாததும் நிறைய தருவேன் என்று மயிடனுக்கு வாக்குறுதி அளித்தான். (அதிகாயன் வதைப் படலம் 1706, 7, 8, 9, 10)

அதிகாயனின் நேர்மை

மயிடனிடம் இங்கே வா, ஒப்பற்ற வேகத்தோடு நீ செல், சென்று அந்த இலட்சுமணனிடம் அவனது தலையைக் கொய்து முண்டமாக்கும் செயலைச் செய்ய முடிவு செய்து நான் வந்துள்ளேன் எனும் இதனைச் சொல் எனது முடிவு சிறந்த நீதியாகும் என்பதையும் கூறு. நீக்க முடியாத துன்பத்தோடு மனம் கொதிக்கும் அதிகாயன், தம்பி கும்பகர்ணனுக்காக மனம் தளர்ந்து அழுகின்ற தன் தந்தையான, இராவணனது துன்பத்தை நீக்குவதற்காக இங்கே வந்தான் என்று முன்னுரையைச் சொல்க என்றான். இராவணன் நாளோளக்கத்தில் இலட்சுமணனுடைய கால் அறுபட்டு உருளுமாறு அன்பினைச் செலுத்துவதாய், அதிகாயனாகிய நான் சபதம் செய்தது உண்டு அதனையும் அவனிடம் சொல்லுக என்றான். (அதிகாயன் வதைப் படலம் 1700)

மயிடனை தூது அனுப்பல்

நான் செய்ய நினைக்கும் செயல், எனக்குத் தீமை தரக்கூடியது என்பதை எண்ணிப் பார்க்கவில்லை. இதுவே எனது இயற்கை பண்பு. இதுவே அரச குலத்தினுக்கான நீதியும் ஆகும். நான் கூறப்போவது தூதுரை தானே, என்று நீ அலட்சியம் காட்டாமல், உன்னுடைய சொல்லாற்றலால் அவனை அழைத்து வருக என்று அதிகாயன் கூறினான். (அதிகாயன் வதைப்படலம் 1703)

அதிகாயன் சபதம்

அதிகாயன் அனுமனிடம், உன்னை இன்று கொன்றதால் அன்றை இனிவரும் நீண்ட நாட்களில், எந்த ஒரு நாளிலும் உன்னை எதிர்த்து போரிடமாட்டேன். ஒன்று அல்லாமல் பல தீங்குகளைச் செய்தாய். எனவே உன்னை வெற்றி பெற்றல்லது திரும்பாத நான், என் வலிய கொடிய அம்பு மழையால் இலட்சுமணனையும், உன்னையும் கொல்லாமல் திரும்பிச் செல்ல மாட்டேன். இதனை உள்ளத்தில் பதித்துக் கொள்வாயாக என்று கூறினான்.

“இன்று அல்லது நெடுநாள் உனை ஒரு நாளினும் எதிரேன்
ஒன்று அல்லது செய்தாய் பல இளையோனையும் உனையும்
வென்று அல்லது மீளாத என் மிடல் வெங்கணை மழையால்
கொன்று அல்லது சொல்லேன் இது கொள் என்றனன் கொடியோன்” (அதிகாயன் வதைப் படலம் 1842)

அதிகாயன் வீர உரை

அதிகாயனுடன் வந்த சேனைகளையெல்லாம், இலட்சுமணன் அழித்தான். இலட்சுமணன், அதிகாயனிடம் உனக்குத் துணையாக இருந்த சேனை அழிந்தது. நீ போரைச் செய்கிறாயா? என்ற போது நாம் இருவரும் போர் செய்வோம். தொடர்ந்து பாதுகாவலாக வந்து உன்னைக் காப்பவர்கள் காப்பதானாலும் காக்கட்டும். உன்னைச் சிறப்பாக அழைத்தது, உன்னுடன் போர் புரியும் பொருட்டே அன்றோ என்று வீர உரை செய்தான். (அதிகாயன் வதைப் படலம் 1856)

உடல் தளர்ச்சியிலும், உள்ளம் தளராதவன்

இலட்சுமணன் ஏவிய நூறு அம்புகள் தனது கவசத்தைக் கிழித்துக் கொண்டு உட்புகுந்த உடனே, தளர்ச்சி தலை காட்ட அதிலிருந்து மீளும் அளவும், தனது தேரின் மீது வில்லை ஊன்றி நின்று அதிகாயன் இளைப்பாரினான். இடையில் ஏற்பட்ட தளர்ச்சி நீங்க பெற்ற அதிகாயன், தன் பக்கத்தே நின்ற படை வீரர்கள் இறந்து விழுந்த விதத்தையும், அரக்கரை நோக்கிப் பறந்து போகின்ற இலட்சுமணன் ஏவிய சிறந்த அம்புகள் அனைத்தையும் கணக்கிட, அந்த இடத்தில் ஒரு கணக்கே இல்லாத நிலையையும் உணர்ந்தான். அவன் ஊன்றிய வில்லினை எடுத்துக் கொண்டவனாய் மனம் கொதித்து, தொடுக்கப்படுதலைப் பெற்ற அம்பு மழையை, இயற்கை மழையைக் காட்டிலும், மும்மடங்கு அதிகமாக செலுத்தி நிரப்பினான்.

“இடை நின்ற மயக்கம் தீர்ந்தான் ஏந்திய சிலையன் காந்தி
தொடை நின்ற பகழி மாரி மாரியின் மும்மை தூர்ந்தான்” (அதிகாயன் வதைப்படலம் 1863)

மண்ணுலகமும், விண்ணுலகமும் நடுங்கச் செய்தவன்

ஆகாயம், ஆகாயத்தின் எல்லைகள், மண்ணுலகம் முழுவதும், மலைகளின் சிகரங்கள், இவற்றை சார்ந்தவரின் உடல்களில் எல்லாம் அம்புகள், அதிர்ந்து நின்றவர் உடம்புகளில் எல்லாம் அம்புகள், கடலில் வாழும் மீன்களில் எல்லாம் அம்புகள், என்று மண்ணுலகமும், விண்ணுலகமும் நடுங்கும்படி அதிகாயன் போர் செய்தான். தேவர்களும் அச்சமடைந்தனர். அதிகாயன் செலுத்திய அம்புகளால் திக்குகள் யாவும் மறைந்தன. தேவர்களின் மனதைப் போல சூரியன் - சந்திரன்- அக்கினி என்னும் முச்சுடர்களின் தழைத்த கிரணங்கள் ஒளி குறைந்தன. மண்ணுலகமும், விண்ணுலகமும் நடுங்கியது. இலட்சுமணனை வெல்லும் வல்லமை உள்ளவனோ இந்த அதிகாயன் என்றும், இவன் கொலைத் தொழிலை எமனிடம் கற்றுக் கொண்டானோ? ஒப்பற்றவனான இந்த அரக்கன் கற்றுள்ள வில் வித்தையின் சிறப்பு தான் என்ன என்று கூறி தேவர்களும், அதிகாயனின் ஆற்றலையும், வீரத்தையும் கண்டு அச்சமடைந்தனர்.

“முற்றியது இன்றே அன்றோ வானர முழங்கு தானை
மற்று இவன் தன்னை வல்லவனோ வள்ளல் தம்பி
கற்றது காலனோயோ கொலை இவன் ஒருவன் கற்ற
வில் தொழில் என்னே என்னா தேவரும் வெருவலுற்றாள்” (அதிகாயன் வதைப் படலம் 1866)

மும்மடங்கு அம்புகளைச் செலுத்தியவன்

போருக்குரிய இரு அக்கினி அம்புகளும், தமக்குள் மோதிக்கொண்டன. இலட்சுமணன் செலுத்திய, அம்புகள் அதிகாயனின் மார்பை ஊடுருவிச் சென்றன. அப்போதும் வருந்தாதவனும், வலிமை குறையாதவனும், அதட்டும் சொற்களை உடையவனுமான அதிகாயன், இலட்சுமணன் ஏவிய அம்புகளை விட, மூன்று மடங்கு அதிகமான அம்புகளைச் செலுத்தினான். வீரம் மிக்கவன். இலட்சுமணன் விடுத்த அம்புகள் அதிகாயனுக்குப் பின்னே நிற்பவர், முன்னே நிற்பவரைப் பார்க்கும்படி அவனுடைய உடல் முழுவதையும் சல்லடைக் கண்களாக துளைத்தன. அந்த நிலையிலும் அதிகாயன் வலிமை குறையாதவனாய், உயிர்த் துறக்காதவனாய் பொன் போல் நிலைத்த அம்புகளை, மழையைப் போலப் பொழிகின்ற வில்லை உடையவனாய் விளங்கினான். (அதிகாயன் வதைப்படலம் 1870)


அதிகாயன் இறப்பு

வாயுதேவன், இலட்சுமணனிடம் அதிகாயன் பிரம்மாஸ்திரத்தால் அன்றி, மற்ற ஆயுதங்களால் உயிர்த் துறக்கமாட்டான் என்பதைக் கூறினார். வாயுதேவன் கூறியதைக் கேட்ட இலட்சுமணன், பிரம்மாஸ்திரத்தைச் செலுத்த, அது அதிகாயனது தலையினைக் கொய்த்து கொண்டு வான்வழியே சென்றது. இதனைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்தனர். இதனைக் கண்ட வீடணன்,இலட்சுமணனது மந்திர சித்தி கைவந்ததைப் போன்ற வில் வித்தையின் ஆற்றல் இத்தகையதனால் இந்திரஜித்துக்கும், மரணமே ஏற்படும் என்று கூறினான்.

“குன்றினும் உயர்ந்த தோளான் தலையினைக் கொண்டு அவ்வாளி
சென்றது விசும்பி னூடு தேவரும் தெரியக் கண்டார்” (அதிகாயன் வதைப்படலம் 1873)

இராவணனின் நிலையும் செயலும்

அதிகாயன் இறந்த செய்தியை தூதர்கள் வந்து சொல்லக் கேட்ட இராவணன், அருவி போல நீரைச் சொரியும் கண்களைப் பெற்றவன் ஆனான். இராவணன் ஏக்கம் கொள்ளச் செய்யும் விம்மல் - அவமானம் - இரங்குகின்ற இரக்கம் - வீரம் பெருகிய சோகம் - துன்பம் எனும் இந்த உணர்ச்சிகள் ஒன்றின் மேல் ஒன்றாகத் தொடர்ந்து வரும் அலைகள் போல விளங்க, கரை வரையில் தள்ளித் தள்ளி வந்து, மீண்டும் உள்நோக்கிச் செல்கின்ற கடலைப் போல நின்றான். (அதிகாயன் வதைப்படலம் 1830, 31, 32)

தானியமாலி கதறல்

அதிகாயனின் தாய் தானியமாலி அவன் இறப்பு செய்தி கேட்டுக் கதறியபடி வந்தாள். இராவணிடம் என் கண்மணியாகிய அதிகாயனை, என் முன் காட்ட மாட்டாயோ என்று அழுதாள். இந்திரனுக்கும் தோற்காத சிறந்த புதல்வனை இவள் பெற்றெடுத்தாள் என்று, வானத்தில் வாழும் தேவர்களும் போற்றும் போற்றுதலுக்குப் பாத்திரமான எளியேன் நான். என்னுடைய மந்தரமலையைப் போன்ற தோளைப் பெற்ற மகனை, அவனுக்குச் சமமாக மாட்டாத மனிதன் ஒருவனது வில்விட்ட அம்புக்கு இரையாக்கக் கொடுத்து விட்டேனே, அக்ககுமாரன் முன்பே இறந்தான். அதிகாயன் இப்போது இறந்து போனான். மிக்க வலிமை பெற்ற அனைவரும் அழிந்தனர். உன் புதல்வர்களில் உயிரோடு இருப்பவன், மண்டோதரியின் மகன் இந்திரஜித்தே. இனிமேல் திசைதோறும் சென்று வெற்றி பெறுவாயோ? சீதையால் இதுவரை வந்த துன்பங்கள் போக, இன்னும் வரவிருப்பவை சிலவோ?அவை பலவாகும். அறிவு நிறைந்த உன் தம்பி கும்பகர்ணன் உரைத்த நல்லுரையை ஏற்றுக் கொள்ளவில்லை. வீடணன் கூறியதையும் ஏற்கவில்லை. கும்பகர்ணனை முதலில் கொலை செய்துவிட்டு, இப்போது என் மகனான இளவரசன் அதிகாயனை அம்புக்கு பலியாக்கி, நீ இன்னும் அரசாட்சி செய்கிறாய் என்று பலவாறாகத் தொடர்ந்து கூறி, குரல் உயர்த்தி கூவி, தன் கன்று இறந்து போகத்தான் மட்டும் உயிர் பிழைத்திருக்க நேர்ந்த தாய்ப் பசுவைப் போலக் கவலை கொண்டு அழுதாள்.

“கும்பகர்ணனையும் கொல்வித்து என் கோமகனை
அம்புக்கு இரை ஆக்கி ஆண்டாய் அரசு ஐயா“ (அதிகாயன் வதைப் படலம் 1940)

நகர மக்கள் துயரம்

இலங்கை நகரத்து அரக்கர் ஒன்று கூடித் தத்தம் மகனை இழந்தவர் போல, அதிகாயன் இறந்ததற்கு வருந்தி அழுதனர். எண்ணற்ற வான மகளிரும், அரக்கமகளிரும் அழுதனர். அரக்கமகளிர் ஒன்று சேர்ந்து தம் கூந்தல் அவிழ்ந்து தொங்க, ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டும், தம் கைகளால் மார்பில் அடித்துக் கொண்டும் அழுதனர்.

அதிகாயன் இறந்த செய்தியைக் கேட்ட இந்திரஜித் அவனைக் கொன்றவனான அந்த இலட்சுமணனின் உடலை, அவன் நின்றுள்ள போர்க்களத்திலேயே அழித்தப்பின் அன்றி, இலங்கை நகருக்கு மீண்டு வரமாட்டேன் என்று சபதம் செய்தான். (நாகபாசப்படலம் 1952)

அதிகாயனிடம் பாசம் கொண்ட படைத்தலைவன்

இந்திரஜித், இலட்சுமணனுடன் போரிடுங்கள் என்று கட்டளையிடாமலேயே, அரக்கர் படைத் தலைவன் ‘எங்கள் தலைவனான இராவணன் மகனான அதிகாயனை அழித்தவனே, எங்கள் கண்ணில்படும்படி இப்போது வந்து சிக்கிக் கொண்டாய். இனிமேல் எங்களிடமிருந்து தப்பிச் செல்லமுடியாது என்று கூறி போரிட முற்பட்டனர்.

“தீயவன் இளவல் தன் மேல் செல்வதன் முன்னம் செல்க என்று
ஏயினர் ஒருவர் இன்றி இராக்கதத் தலைவர் எங்கள்
நாயகன் மகனைக் கொன்றாய் நண்ணினை நாங்கள் காணப்
போய் இனி உய்வது எங்கே என்று எரி விழித்துப் புக்கார் “ (நாகபாசப்படலம் 2034)


முடிவுரை

அதிகாயன் ஆற்றல் பல பெற்றும், வரங்கள் பல பெற்றும், இலட்சுமணனின் அம்பு மழையில் நனைந்து, தலை கொய்யப் பெற்று இறந்தான். தன் உடலை இலட்சுமணன் சல்லடையாகத் துளைத்த போதும், அவன் மீது அம்பு எய்தவன். இறுதியில் பிரம்மாஸ்திரம் மூலம் இறக்கிறான். அதிகாயனின் இறப்பு, இராவணனுக்கு பெருந்துன்பத்தை அளித்தது. அடுத்தவன் மனைவி மேல் தந்தை காமம் கொண்டது தவறு என்று தெரிந்தும், தந்தைக்காகவே வாழ்ந்து, அவனுக்காகவே போர் செய்தான். இந்திரஜித் போல் மாயப்போர் செய்யாமல் நீதியுடனும், நேர்மையுடனும் போர் செய்து, இறுதியில் தந்தைக்காகவே உயிர் துறந்தான். அக்ககுமரன் மேல் பாசம் கொண்ட அண்ணனாகவும், சித்தப்பா மேல் பாசம் கொண்ட மகனாகவும் திகழ்கின்றான். இன்று நீ இலட்சுமணனை வென்றால், நான் நாளை இராமனை வெல்வேன் என்று இராவணன் கூறினான் என்பதிலிருந்து, தன் மைந்தனின் வீரத்தின் மேல் அவன் கொண்ட நம்பிக்கை பெறப்படுகிறது. தான்யமாலி, இராவணனிடம் இறந்த அதிகாயனை நினைத்து, என் கண்மணியைக் காட்ட மாட்டாயோ என்று கூறியபடி கதறி அழுதாள் என்பதிலிருந்து, அதிகாயன் உடலைக் கூட அவர்கள் யாரும் பார்க்கவில்லை என்பதும் பெறப்படுகிறது. தலையற்ற உடலாகவே போர்க்களத்தில் அதிகாயன் உடல் கிடந்தது. (இந்திரசித் தலையற்ற நிலையில் போர்க்களத்தில் இறந்து கிடந்ததைக் கண்ட இராவணன், அவனை அரண்மனைக்குத் தானே தூக்கிவந்து தைலத்தொட்டில் உடலைப் பாதுகாத்திட கூறினான்) ஆனால் அதிகாயன் இறந்தபோது, அவ்வாறு இராவணன் செய்யவில்லை.

துணை நூற்பட்டியல்

1. இராமன் பன்முகநோக்கில், அ. ச. ஞானசம்பந்தன், சாரு பதிப்பகம், சென்னை, 2016.

2. காலமும் கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள்: பழ. பழனியப்பன், சொ.சேதுபதி), கபிலன் பதிப்பகம், புதுச்சேரி, சென்னை.

3. கம்பன் புதிய தேடல், அ. அ. ஞானசந்தரத்தரசு, தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

4. எல்லைகள் நீத்த இராமகாதை, பழ.கருப்பையா, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.

5. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன், வள்ளிபதிப்பகம், சென்னை,2019.

6. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

7. செல்வம். கோ, கம்பன் புதையல், சாரு பதிப்பகம், சென்னை, 2016.

8. கம்பராமாயணத்தில் மும்மடங்கு என்ற சொல்லாட்சி, க. மங்கையர்க்கரசி, (முத்துக்கமலம் மின்னிதழ் - http://www.muthukamalam.com/essay/literature/p286.html)

9. கம்பராமாயணத்தில் சூளுரை அல்லது வஞ்சினம், க. மங்கையர்க்கரசி, (அரண் மின்னிதழ் - https://aranejournal.com/article/6069)

10. கம்பராமாயணத்தில் போர்அறம், க. மங்கையர்க்கரசி, (அரண் மின்னிதழ் - https://www.aranejournal.com/article/6074)

11. கம்பராமாயணத்தில் தூது, க. மங்கையர்க்கரசி, (அரண் மின்னிதழ் - https://www.aranejournal.com/article/6030)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p310.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License