இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

கம்பராமாயணத்தில் கூந்தல்

முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.


முன்னுரை

பெண்களுக்கு அழகு தருவது அவர்களின் கூந்தல். கூந்தல் பெண்களின் மங்களப் பொருட்களில் ஒன்றாகும். பெண்களின் கூந்தலை முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை என்று ஐவகையாக முடிந்தனர். தலைவனைப் பிரிந்த தலைவி, தலை சீவி தன்னை அலங்கரித்துக் கொள்ள மாட்டாள். இராமனைப் பிரிந்த சீதையும், தன்னை அலங்கரித்துக் கொள்ளாமல், சிக்கடைந்த கூந்தலுடன் இருந்தாள்.அரக்கியர் செந்நிறக் கூந்தலைப் பெற்றிருந்தனர். தீநிமித்தம் வரும் அறிகுறியாகக் கூந்தலும் பயன்பட்டுள்ளது.தலைவனை இழந்த தலைவிக்கு, தலைமுடி அலங்காரம் என்பது தேவையேயில்லாத ஒன்றாகிவிட்டது. துன்பத்தில் இருக்கும் போதும், பெண்கள் கூந்தலில் மலர் சூடுவதில்லை. கம்பராமாயணத்தில் கூந்தல் பற்றி வரும் செய்திகளைக் குறித்து ஆராய்வோம்.

சௌளம் வைத்தல்

இராமன், இலட்சுமணன், பரதன், சத்ருக்கணன் ஆகிய நால்வருக்கும் வசிட்டன், சௌளம் (குடுமி வைத்தல்), உபநயனம் (பூணூல் அணிவித்தல்) ஆகிய சடங்குகளை முறைப்படி செய்வித்தான். (திருஅவதாரப்படலம் 304)

இராமனின் கூந்தல்

மிதிலை நகர வீதியில் வரும் இராமனைக் கன்னிமாடத்தில் நின்றிருந்த சீதை கண்டாள். கண் வழியேப் புகுந்த காதல், உடல் முழுவதும் பரவியது.காதல் நோய் கொண்டு, தன்னுடைய நுனி சுருண்ட கூந்தலும், ஆடையும் நெகிழ்ந்து கீழிறங்க வாடினாள். சீதை, இராமனது தலைமயிரினை இருள் கொண்டு அமைக்கப்பட்ட பூமாலையுடன் கூடிய காடு என்கிறாள். (மிதிலைக்காட்சிப் படலம் 537)

திருமணத்திற்குக் கூந்தல் அலங்காரம் (சீதை)

சீதையை அலங்காரம் செய்யும் தோழியர் வனப்பும், கரிய வண்ணமும் கொண்ட கூந்தல் தொகுதியை வட்டமாகப் பின்னி முடித்தனர். கூந்தல் வட்டத்தில் மேகத்திலே தோன்றும் கிரணங்கள் விரிய, சந்திரனைப் போல, மெல்லிய பூக்களால் ஆன ’சிகழிகை’ என்னும் தலைமாலையைச் சீதைக்குச் சூட்டினார்.

“வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து மழையில் தோன்றும்
விண் நின்ற மதியின் மென் பூஞ் சிகழிகைக் கோதை வேய்ந்தார்” (கோலம் காண் படலம் 1067)

’சுட்டி’ எனும் அணியை சீதையின் நெற்றியிலே ஒளி வீசும் படி தொங்கவிட்டனர்.

சந்திரன் என்னும் கன்றினைப் பெற்ற காராம் பசு, அதன் மேனியை நக்கும் பொருட்டு, அதன் பக்கத்தில் நாக்கை நீட்டுவது போல, நெருங்கிய இருண்ட முன்னெற்றியை ஒட்டிய கூந்தல் பகுதியிலே ’பூட்டு’ என்னும் ஆபரணத்தை தோழியர் அணிவித்தார்கள். (கோலம் காண்படலம் 1068)


கூந்தலில் பூக்கள்

உதிரிப்பூக்கள் - பின்னலில் செருகும் மென்மையான பூக்கள் -கூந்தலின் உச்சியில் அணியும் பூக்கள் -காதுகளில் வைக்கும் குற்றமற்ற பூக்கள் ஆகிய இவற்றை உரிய இடங்களில் அணிவித்து, அவற்றின் மேலே கற்பகத்தின் பொன்மயமான தளிர்கள் போல, ஒளி வீசித் திகழுமாறும் - சுரும்பும் - வண்டும், - மிஞிறும் - தும்பியும் மொய்க்கும் படி, புன்னை மலர்களின் மகரந்தப் பொடிகளை ஒத்த பொற்சுண்ணத்தை அப்பி, சீதைக்குரிய அலங்காரத்தை தோழியர் முடித்து விட்டனர்.

“சின்னப் பூ செருகும் மென் பூ சேகரப் போது கோது இல்
கன்னப் பூ கஞல மீது கற்பகக் கொழுந்து மான
மின்ன பூஞ் சுரும்பும் வண்டும் மிஞிறும் தும்பிகளும் பம்ப
புன்னைப் பூனந் தாது மானும் பொற் பொடி அப்பிவிட்டார்” (கோலம் காண்படலம் 1080)

திருமணத்திற்கு கூந்தல் அலங்காரம் (இராமன்)

மங்களகரமான பூரண கலைகளோடு பொழிகின்ற சந்திரனை, பொங்கி எழும் பெரிய கடல் தோற்றுவித்ததைப் போல, சிவந்த நெட்டியால் செய்யப்பட்ட ’சிகழிகை’ என்னும் மாலையும், செம்பொன்னாலான மாலையும், மலர் மாலையும் முன்னே அசைந்து நிற்க, இராமன் முடியிலே ’சுழியம்’ எனும் அணிகலன் அணிந்தான்.

“செங்கிடைச் சிகழிகை செம் பொன் மாலையும்
தொங்கலும் துயல்வர சுழியம் சூடியே” (கடி மணப் படலம் 1157)


துறவியின் அடையாளங்களில் ஒன்று கூந்தல்

கைகேயி, இராமனிடம் கடலால் சூழப்பட்ட இந்த உலகம் முழுவதையும் பரதனே ஆட்சி செய்ய, நீ இந்த நாட்டை விட்டு சென்று, நீண்டு தொங்கும் சடைகளைத் தாங்கிக்கொண்டு, பிறர் மேற்கொள்வதற்கு அரியதான, தவ வேடத்தை ஏற்று’ என்று கூறுவதில் இருந்து துறவியின் அடையாளங்களில் கூந்தலும் (சடாமுடி) ஒன்று என்பது பெறப்படுகிறது.

முடிசூட்டல்

கைகேயி பெற்ற வரத்தின் படி, காடு செல்ல உடன்பட்ட இராமன், கோசலையிடம் வந்த போது, இராமன் முடி சூட்டிக் கொள்ளவில்லை, நீராடுதலுக்குரிய புனித நீரினால் அவனது தலை மயிர் நனையவில்லை. இதற்கு காரணம் என்ன என்று கேட்டாள். (நகர் நீங்கு படலம் 294)

மங்கள நீராடலில் தலைக்கு நீராடல் வேண்டும் என்பது பெறப்படுகிறது.

குகனின் கூந்தல்

இருளைச் சேர்த்து இணைத்தனைப் போன்ற தலையிலேத் தேர்ந்தெடுத்த நெற்கதிர்களைச் செறுகிக்கொண்டான். (குகப்படலம் 641)

சிக்கடைந்த கூந்தல்

கம்பராமாயணத்தில், இலங்கையில் அசோகவனத்தில் இருந்த சீதை மாசு படிந்த மணியைப் போல் காட்சியளித்தாள். ஒளி மங்கிய சந்திரனைப் போன்ற முகத்தையும், சீர் செய்யப்படாத சிக்கடைந்த கூந்தலுடன் காணப்பட்டாள் என்பதை,

”காசுண்ட கூந்தலாள் கற்பும் காதலும்
ஏசுண்டது இல்லையால் அறத்துக்கு ஈறுஉண்டோ” (காட்சிப்படலம் 396)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

நீராட வாசனை திரவியங்கள்

இராமனின் கட்டளைப் படி வீடணன், சீதையிடம் வந்து ’சீரோடு அழைத்து வா’ என்று இராமன் கூறியதைக் கூறினான். மேனகையும், ரம்பையும், ஊர்வசியும் மற்றும் உள்ள தெய்வ மங்கையர் எல்லோரும், சீதைக்கு நீராட்டல் செய்வதற்கு ஏற்ற கத்தூரி, புனுகு கலந்த குற்றமில்லாத கலவைச் சாந்தை எடுத்துக் கொண்டு வந்து நீராட்டினர்.

“மேனகை அரம்பை மற்றை உருப்பசி வேறும் உள்ள
வானகநாட்டு மாதர் யாரும் மஞ்சனத்துக்கு ஏற்ற
நான நெய் ஊற்றப் பட்ட நவை இல கலவை தாங்கி
போனகம் துறந்த தையல் மருங்குற நெருங்கிப் புக்கார்” (மீட்சிப் படலம் 3934)

சீர் செய்யப்பட்ட கூந்தல்

சீதையின் தலையில் சடையை, ரம்பை என்ற தேவமங்கை மிகச்சிறந்த வேதம் முழுவதையும் ஒழுங்குபடுத்துகின்ற திருமாலைப் போல, மெல்ல ஒழுங்காகச் சிக்கைப் போக்கி வகைப்படுத்தி, வாரி விட்டாள். (மீட்சிப் படலம் 3935)
செந்நிறக்கூந்தல்

அரக்க மகளிரும், ஆடவரும் தீயின் நிறமும், தம் செம்பட்டை மயிரின் நிறமும் ஒத்திருக்கின்ற தன்மையால் தீப்பற்றாமையையும், தீப்பற்றி எரியும் தன்மையையும் தெரிய முடியாதவர்களாயினர் என்பதை,

“கூய் கொழும் புனல் குஞ்சியில் கூந்தலில்
மீச் சொரிந்தனர் வீரரும் மாதரும்” (இலங்கை எரியூட்டுப்படலம் 1187)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

சூர்ப்பணகையை வர்ணிக்கும் போது,

”செம் பராகம் செறிந்த கூந்தலாள்
வெம்பு அராகம் தனி விளைந்த மெய்யினாள்” (சூர்ப்பணகைப் படலம் 226)

என்ற பாடலடி மூலம் அறியமுடிகிறது.

தீ நிமித்தம் காட்டும் கூந்தல்

கம்பராமாயணத்தில் சுக்ரீவன், இராமனுடன் நட்பு கொண்டு வாலியுடன் சண்டை செய்ய அழைத்த போது, வாலியை அவன் மனைவி தாரைத் தடுக்கிறாள். அதனால் கோபம் கொண்ட வாலியின் வாயிலிருந்து புகைவருமாறு அவன் கண்களிலிருந்து கிளம்பிய சினத் தீயினால், அமுதம் நிகர்த்தவளும், மூங்கில் போன்ற தோள்களை உடையவளுமான வாலியின் மனைவி தாரை, தன் நீண்ட கூந்தல் எரியப் பெற்றவளாய், அவனுக்கு இடையில் வந்து நின்று, வெளியில் செல்ல எத்தனித்த அவனைத் தடுத்தாள் என்பதை,

“ஆயிடைத் தாரை என்று அமிழ்தின் தோன்றிய
வேயிடைத் தோளினாள் இடை விலக்கினாள்
வாயிடைப் புகை வர வாலி கண்வரும்
தீயிடை தன் நெடுங் கூந்தல் தீகின்றாள்” (வாலிவதைப்படலம் 248)

வாலியின் சினத் தீயினால் தாரையின் கூந்தல் எரிவதாய்ச் சொல்லி, அவளுக்கு நிகழவிருக்கும் அமங்கலத்தைக் குறிப்பால் கம்பர் உணர்த்துகிறார்.

வாலி, இராமன் செலுத்திய அம்பு பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தான். தாரை ஓடிவந்து அவன் மார்பில் விழுந்து அழும்போது, அவள் கூந்தலில் இரத்தம்படிந்து சிவக்கும்படியாகவும் விழுந்து அழுதாள். (வாலிவதைப்படலம்388)

தீய நிமித்தங்கள் பற்றி இராவணன் மந்திரப்படலத்தில் வீடணன் கூற்று மூலம் கூறப்பட்டுள்ளன.

“வாயினும் பல்லினும் புனல் வறந்து
உலறினார் நிருதர் வைகும்” (இராவணன் மந்திரப்படலம் 107)

அரக்கர் வாயிலும், பல்லிலும் நீர் மற்றும் காரணத்தால் நா வறண்டனர். அரண்மனையிலும், இலங்கை நகரத்திலும் தங்கும் பேயைக் காட்டிலும் மிகவும் பெரிய தோற்றமுடைய நரிகளும் நிறைகின்றன. மற்றவற்றையும், நினையின் அரண்மனையிலும், இலங்கை நகரத்திலும் உள்ள மகளிர் கூந்தலும், ஆடவரான நம் மயிர் முடியும், தீயில் கரிந்து தீய நாற்றம் உடையன ஆயின. இவற்றையே அல்லாது, ஒரு நல்ல நிமித்தமேனும் பெறுகின்ற வகையும் இல்லை என்று கூறுகிறான்.

கம்பராமாயணத்தில் அனுமன், சீதையைத் தேடி இலங்கையில் சுற்றிப் பார்த்த பொழுது மண்டோதரியைக் கண்டான். உத்தமப் பெண்ணுக்குரிய இலக்கணங்கள் சில இவளிடம் உள்ளன. எனினும் எல்லையற்ற துன்பம் அண்மையில் எய்தப் போகிறாள் என்பதை, இவள் உடம்பு எடுத்துச் சொல்கிறது. மலர் சூடிய கருங்கூந்தல் அவிழ்ந்து, வாய்க்குழறச் சிலவார்த்தைகளைத் தூக்கத்தில் சொல்வதால் , இவள் கணவன் விரைவில் இறப்பான், இலங்கையும் அழியும் என்று அனுமன் எண்ணினான் என்பதை,

“இலக்கணங்களும் சில உள என்னினும்
எல்லை சென்று உறுகில்லா
அலக்கண் எய்துதல் அணியது உண்டு என்று எடுத்து
அறைகுவது இவள் யாக்கை
மலர்க் கருங் குழல் சோர்ந்து வாய் வெரீஇ சில
மாற்றங்கள் பறைகின்றாள்
உலக்கும் இங்கு இவள் கணவனும் அழிவும் இவ்
வியன் நகர்க்கு உளது என்றான்” (கம்பராமாயணம் - சுந்தரகாண்டம் - ஊர்தேடுபடலம் 296)

என்பதிலிருந்து அறியமுடிகிறது.

கம்பராமாயணத்தில், திரிசடை தான் கண்ட கனவினைப் பற்றி சீதையிடம் கூறும் போது, இராவணனின் மனைவியும், மயனின் மகளுமான மண்டோதரியின் கூந்தல் பின்னல் அவிழ்ந்து, பிரிந்து விழுந்தது. அக்கூந்தலில் அருகேயிருந்த பெரிய விளக்கின் தீ பற்றிக் கொள்ள, அது சுறு சுறு என்று எரிந்தது. இராவணனுக்கும், அவனைச் சார்ந்தோருக்கும் துன்பம் நேரும் என்பதற்கு, இதுவே தகுந்த காரணமாகும் என்று திரிசடை கூறினாள்.


வெறி கொண்டது கூந்தலே

அயோத்தி மக்கள் குறித்து கூறும்போது, அந்த நாட்டில் செல்ல வேண்டிய வழியைவிட்டுப் பரவிச் செல்வன வெள்ளங்களே, மக்கள் அல்லர் தமக்குரிய குறிகள் அழிந்தவை, குங்குமத் துயில் ஒழுகிய மகளிரின் தோள்களே, பிறப்பொருள்கள் அல்ல, சிறுமை பண்பை உடையன மங்கையருடைய மெலிந்த இடைகளே, மக்களிடம் சிறுமை இல்லை. வெறியாகிய மனம் பெற்றவை அம் மகளிரின் மெல்லிய மலரை அணிந்த கூந்தலே, கொடுமையான வெறி குணம் எவரிடமும் இல்லை. பெண்கள் கூந்தலுக்கு இடும் அகில் புகையும், சமையல் கூடங்களில் உண்டாகும் புகையும், விளங்குகின்ற கரும்பு ஆலைகளில் உண்டாகும், வாசம் மிகுந்த புகையும், நான்கு வேதங்களைச் சொல்லுகின்ற வேள்வியில் உண்டாகும் புகையும், கலந்து மேகங்களைப் போல் எல்லா இடங்களிலும் விளங்கின. பெண்களின் கூந்தலுக்குத் தோற்றுப்போன தொழிலில் உள்ள மேகங்களே என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

“சிறிய மங்கையர் தேயும் மருங்குலே
வெறியவும் அவர்மென்மலர்க் கூந்தலே” (நாட்டுப்படலம் 72)

இராமனைக் கண்ட சீதையின் நிலையில், காதிலே உள்ள ஒளி வீசும் குண்டலம் வரையில் செல்லும் நெய் பூசப் பெறாத, நெருப்பில் இட்டு காய்ச்சப் பெறாத வேலைப் போன்ற விழிகளைப் பெற்றவள் சீதை. அவள் தன்னுடைய நுனி சுருண்ட கூந்தலும், ஆடையும் நெகிழ்ந்து கீழிறங்க, தீயிலேப் போடப்பட்ட பூங்கொடியைப் போல வாடினாள்.

“சுழலிடு கூந்தலும் துகிலும் சோர்தர
தழல்இடு வல்லியே போலச் சாம்பினாள்” (மிதிலைக் காட்சிப்படலம் 527)

கணவனை இழந்த பெண்கள் கூந்தலின் நிலை

கணவனை இழந்த பெண்கள், தம் கூந்தலில் மலர்களை அணிவதில்லை. வாலி இறந்த பின்பு, கார்காலம் முடிந்தும் சுக்ரீவன் வராததால்,, இராமன் கட்டளைப்படி இலட்சுமணன், சுக்ரீவனைப் பார்க்க வரும் போது, தாரையே அவன் முன்பு நின்றாள்.தாரை பின்வாங்காமல், மலர் சூடிய கூந்தலையுடைய தோழியர் பலருடனே, இயற்கை நறுமணம் வீசும் கூந்தலையுடைய தாரை இலட்சுமணனை வழிமறித்தாள்.

“விரை செய் வார் குழல் தாரை விலக்கினாள்” (கி்ட்கிந்தைப்படலம் 604)

கணவர் உயிருடன் இருக்கும் போது, கூந்தலை அகில் புகையிட்டு, பூச் சூடி அழகு செய்வர். அவன் இல்லாதபோது மலர் சூடுதல் இல்லை.

சுயம்பிரபை சடைமுடி

சீதையைத் தேடிச் சென்ற வானரர்கள் வழியில் பிலத்தில் சுயம்பிரபையைக் கண்டனர். மரவுரியைத் தரித்தும், அழகிய கூந்தலானது, சுருண்டு நிமிர்ந்த தொகுதியாக நிறைந்த நீண்ட கரிய கூந்தலானது நெருங்கிய சடையாகப் பொருந்தியத் தரையில் புரளவும், இரண்டு வினைகளும், அடியோடு பெயர்ந்து நீங்கவும், தன் மனதில் உண்டாகக்கூடிய பாச பந்தமானது விலகிநிற்கவும், கண்களில் அருள் விளங்கவும் இருந்தாள்.

“நெறிந்து நிமிர் கற்றை நிறை ஓதி நெடு நீலம்
செறிந்து சடை உற்றன தலத்தில் நெறி செல்ல” (பிலம் புக்கு நீங்கு படலம் 860)

தசரதனுக்கு வந்த நரைமுடி

நரைமுடி ஒன்று, தசரதனுக்கு தன் முதுமையை அறிவித்தது. தான் இனி வாழ்க்கையில் கரையேற வேண்டும் என்று நினைத்தான். நிலைக் கண்ணாடி முன் புதிய நினைவு தோன்றியது. பெருநிலம் காவலனின் கருத்திருந்த மயிர்முடி ஒன்று வாழ்க்கையை வெளுத்து காட்டியது. அவன் செவியில் வந்து மோதியது. அவன் மூப்பைப் பற்றிக் கூறியது.

சீதையின் கூந்தல்

இராமனும், சீதையும் சித்திரக் கூடத்தில் செல்லும்போது புளுகு நெய், புதிய பூ, நறுமண மிகுந்த அகில் புகை, கத்தூரி, பூவில் உள்ள தேன் ஆகியவற்றில் மது கவல்கின்ற விடாது மழை பொழியும் கருமேகம் போல், கருத்த நீண்ட கூந்தலின் பாரம் தாங்காமல் இட்டுப் போவது போல, தளறுகின்ற எடையை உடைய மயில் போன்றவளே என்று இராமன் சீதையின் கூந்தலை வர்ணிக்கின்றான்.

“நானம் நாள் மலர் நறை அகில் நாவி தேன் நாறும்
சோனை வார் குழற் சுமை பொறாது இறும் இடைத் தோகாய்” (சித்திரக்கூடப் படலம் 746)

சீதை கங்கை நீரில் இறங்கிக் குளித்ததும் அவள் கூந்தலிலும் மேனியிலும் உள்ள நறுமணந்தை அப்போது கங்கை பெற்றாள்.அந்த மகிழ்ச்சியில் தன் மகளை நீராட்டும் செவிலித்தாயைப் போல அவள், அலையாகிய கையை நீட்டி சீதையை நீராடச் செய்தாள்.

அவிழ்ந்து விழும் கூந்தல்

இந்திரஜித்தனுக்கு நல்ல அடிபட்டது என்ற உண்மையை அறிய விரும்புகிற இராவணன், இந்திரஜித்தனைக் காண வருகிறான். கொடியும் துவளும் தன்மையில் பின்வாங்குவதற்கு காரணமான மகளிர், நெகிழ்ந்த துகிலினைக் கையால் தாங்கியவராய், அவிழ்ந்து விழும் கூந்தலை உடையவராய், மிக்க பெருமூச்சு உடையவராய், விண்ணையும் மறைக்குமாறு பரந்த கொங்கைகளை உடையவராய், உறங்கும் கண்களை உடையவராய் மெல்ல, தள்ளாடி அசையும் நடை உடையவராய் தூக்கக் கலக்கத்துடன் இராவணனைச் சூழ்ந்து வந்தனர் (நாகபாசப்படலம் 2223)

துன்பத்தை வெளிப்படுத்துவதில் ஒன்று கூந்தல் அவிழ்தல்

அதிகாயன் இறந்த செய்தியைக் கேள்விப்பட்ட அரக்கமகளிர், ஒன்று சேர்ந்து, தம் கூந்தல் அவிழ்ந்து தொங்க, ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டும் அழுதனர்.

“குழுமிக் கொலை வாட்கண் அரக்கியர் கூந்தல் தாழத்
தழுவித் தலைப் பெய்து தம் கைகொடு மார்பின் ஏற்றி” (நாகபாசப்படலம் 1944)

அதிகாயன் இறந்த செய்தியை அறிந்த தாய் தான்யமாலி, மலை உச்சியில் இடி தாக்கியதைப் போலக் கை வளையல்களும், கழுத்தின் மாலைகளும், ஒலி எழுப்பத், தன் முலைகளின் உச்சியில் அடித்துக் கொள்ளும் கையை உடையவள். குகை திறந்ததைப் போன்ற வாயை உடையவள். மேல் சிகரத்தில் அமைந்த செவ்வானம் போன்ற தனது செம்பட்டை மயிர்க்குழல்கள் குலைந்து எங்கும் விரித்து பரவ, உலைக்களத்திலே இட்டு உருக்கிய செம்பைப் போல, இரத்தக் கண்ணீரைச் சொரியும் கண்களை உடையவள். (அதிகாயன் வதைப் படலம்1934)

இந்திரசித் இறந்த செய்தியை அறிந்த தாய் மண்டோதரி, தன் கருமையான கூந்தலின் கற்றை, தன் கால்களைத் தொட, கூந்தல் அவிழ்ந்தவளாய், தன் தாமரை போன்ற மார்பிலே அடித்துக் கொண்டு, அருமையான அணிகலன்களின் பாரத்தைச் சுமக்க, அகன்ற அல்குலே அன்றிச் சிறிதளவேனும் இடை இருக்கின்றதோ, எனக் கண்டவர் கூறுமாறு மனம் பொங்கிக் கலங்கி அங்கு வந்தாள் (இராவணன் சோகப்படலம் 3169)

சீதையின் சடை முடி

பொறுமை பொருந்தியவளான சீதையின் அழகிய முகத்தில், பக்கங்களில் அமைந்த இரு கன்னங்களையும் நன்றாகக் கவ்விப் படர்ந்த கூந்தல் தொகுதியானது, நிலத்திடை கிடந்த மாசற்ற மதியைத் தன் வாயில் அடங்கும்படி விளங்கி, மீண்டும் உமிழ்கின்ற ராகு எனும் கரும்பாம்பின் தோற்றம் பெற்றிருந்தன. இவ்வாறு ஒன்று திரண்டு ஒரு சடையாக திரிக்கப்படும் கூந்தலை உடையவளானாள் சீதை.

“அமைய வாயில்பெய்து உமிழ்கின்ற அயில் எயிற்று அரவின்
குமையுறத் திரண்டு ஒரு சடை ஆகிய குழலாள்” (காட்சிப்படலம் 338)

கைகேயி தன் கூந்தலை அவிழ்க்கும் செயல்

கூனி சென்ற பிறகு கைகேயி, சிறந்த மலர்கள் நிறைந்த படுக்கையிலிருந்து இறங்கினாள்.

கார்மேகம் போன்ற தனது நீண்ட கூந்தல் தொகுதியில் சொருகியிருந்த பூமாலையை, ஆகாயத்தில் உள்ள பெரிய-கரிய மேகத்தில் நுழைகின்ற வெண்ணிலாவைப் பிடித்துக் கையால் கசக்கிச் சிதறுகின்றவளைப் போல, தேனை விரும்பும் வண்டுக் கூட்டம் நிலைகெட்டுச் சுழலுமாறு, கூந்தலிலிருந்து இழுத்து, அறுத்துச் சிதைத்து எறிந்தாள்.

“வான மா மழை நுழைதரும் மதி பிதிர்ப்பாள் போல்
தேன் அவாவுறும் வண்டினம் அலமர சிதைத்தாள்” (கைகேயி சூழ்வினைப்படலம் 178)

அனுமனால் மகளிர் கூந்தலில் தீ

இலங்கையில் அனுமன் வைத்த நெருப்பு, அரக்க மகளிருடைய இடுப்பில் உடுத்திய பட்டாடையில் பற்றிக் கொண்ட பெரும் நெருப்பு, மேலாடையைச் சுற்றிக் கொண்டு, பின் நறுமணம் பொருந்திய கரு நிறக் கூந்தலில் பற்றிக் கொண்டது. அதனால் அம்மகளிர் மயங்கினர்.

“வாச மைக் குழல் பற்ற மயங்கினர்
பாசிழைப் பரவைப் படர் அல்குலார்” (இலங்கை எரியூட்டுப்படலம் 1207)

அரக்க மகளிரும், ஆடவரும் தீயின் நிறமும், தம் செம்பட்டை மயிரின் நிறமும் ஒத்திருக்கின்ற தன்மையால் தீப்பற்றாமையையும், தீப்பற்றி எரியும் தன்மையையும் தெரிய முடியாதவராயினர். அதனால் கூச்சலிட்டு, மிகுதியான தண்ணீரை, ஆடவர் தலைமயிரில் மகளிரும், மகளிர் தலை மயிரில் ஆடவரும் மேலேக் கொட்டினர்.

“ஏய்ந்த தன்மையினால் எரி இன்மையும்
தீக் கொளுந்தினவும் தெரிகின்றிலார்” (இலங்கை எரியூட்டுப்படலம் 1187)

ஊடலால் மகளிர் செய்கை

தம் கணவனோடு ஊடல் கொண்ட மகளிர், கணவன் மீதும் பார்வையைச் செலுத்தாமல் பெருமூச்சு விட்டனர். சினத்தால் நெற்றியைச் சுருக்கினர். இதழ் விரிந்த மலராலான மாலையைத் தன் கூந்தலில் சூட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் தாம் கணவருக்கு உயிர்கள். அவ்வாறு உயிராக இருந்தும், ஊடலால் அவர்களை அணைத்தும் செல்லாமல், சற்றுத் தள்ளி அருகே சென்றனர் என்பதை,

“ஊடிய மனத்தினர் உறாத நோக்கினர்
நீடிய உயிர்ப்பினர் நெரிந்த நெற்றியர்” (எழுச்சிப்படலம் 701)

என்ற பாடலில் கூறப்பட்டுள்ளது.


மானம் காத்த கூந்தல்

இந்திரஜித், பிரம்மாஸ்திரத்தால் இலட்சுமணன், அனுமன், அங்கதன், சுக்ரீவன் உள்ளிட்டவர்களைச் சாய்த்தான், என்ற செய்தி அறிந்த இராவணன் மகிழ்ந்து, அனைவருக்கும் கள் விருந்தளித்தான். தெய்வமாதரும், அரக்க மாதரும், வித்யாதர மகளிரும், அசுர மடந்தையரும், தேவ கன்னியரும், இயக்க மகளிரும். சித்த மடோரும் கூட்டம் கூட்டமாக வந்தனர். மேனகை, அரம்பை, திலோத்தமை, ஊர்வசி முதலிய தேவருடன் வாத்தியம் முழங்க, சிலம்பு ஒலிக்க நடனமாடியபடி வந்தனர்.

பெண் ஒருத்தி, இடை ஆடை நெகிழ்ந்ததையும், அவளது மானத்தை அவளது நீண்ட கூந்தல் மறைத்ததையும் கம்பர் கூறுகின்றார்.

“கூந்தல் அம்பாரக் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல்
ஏந்து அகல் அல்குல் தேரை இகந்து போய் இறங்க யாணர்ப்
பூந் துகிலோடும் பூசல் மேகலை, சிலம்பு பூண்ட” (களியாட்டுப்படலம்2768)

மது மயக்கத்தால் சில பெண்களின் கூந்தல் அவிழ்ந்து விழுந்தது. அவர்கள் உடுத்தியிருந்த ஆடையும் கட்டு அவிழ்ந்து, கால்களில் சரிந்தது. அவர்களது மானத்தை, அவிழ்ந்த கூந்தல் காத்தது. கீழோரால் நேரும் குறைபாட்டை மேலோர் மறைத்துக் காப்பாற்றுதல் போல, இடையிலிருந்து சரிந்த ஆடை விழுந்து போகச் செய்யவிருந்த மானத்தை, தலையில் இருந்து சரிந்த கூந்தல் பாதம் வரை தொங்கி, பரந்து இடையை மறைத்துக் காப்பாற்றியது.

இடையைச் சுற்றிய ஆடை சரிந்தது. மேல் முகட்டில் இருந்த கூந்தல் சரிந்து மானம் காத்தது. மேல் வளர்ந்த கூந்தலை மேலோர்க்கும், கீழிருந்து சரிந்த ஆடையைக் கீழோருக்கும் ஒப்புமை கூறியுள்ளார் கம்பர்.

மாயா சீதையின் கூந்தல்

பிரம்மாஸ்த்திரக் கட்டுக்கள், மருத்துவமலையின் வரவால் விடுபட, இலட்சுமணன் முதல் யாவரும் மயக்கம் தெளிந்தனர். இந்திரஜித், மாயா சீதை உரு செய்து, அவளைக் கூந்தலால் பற்றிக் கொல்வேன் என வாளை உருவினான். அது கண்டு எதற்கும் அஞ்சாத அனுமனும் அஞ்சினான்.

மயிரு மழிக்கும் செயல்

இராவண வதம் முடிந்து, இராமன் தன்னிடம் அன்புள்ள பரதனோடும் மற்றத் தம்பியரும் தானுமாக, நந்திக்கிராமத்தை அடைந்து, மணம் பரவுகின்ற உடையை மாற்றி, மயிர் மழிக்கும் செயலைச் செய்து, சரயு ஆற்றில் மூழ்கினான்.பின்பு தேவர்களும் மகிழ்ச்சி கொள்ளுமாறுஅவர்களுக்குத் தக்க முறையில் அலங்காரங்களைச் செய்தனர்.

“நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி
வம்பயர் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மற்றைத்” (திருமுடிசூட்டுப்படலம் 4231)

சூர்ப்பணகை கூந்தல்

சூர்ப்பணகை, சீதையைத் தூக்கிச் செல்ல எத்தனித்தபோது, இலட்சுமணன் பார்த்து விடுகின்றான்.’அடியே நில்’ என்று அதட்டிக்கொண்டே விரைவாக வந்தான். அவளைக் கொல்ல நினைத்து, பெண்ணைக் கொல்லுதல் பாவம் என்பதால், கொல்லாமல் விட்டான். அதனால் அவளைக் கொல்லும்படி வாளை எடுக்காமல், நன்கு பற்றி எரிகின்ற நெருப்பைப் போல, பறந்துள்ள அவளது செலவாகிய வலிய கூந்தலைத், தனது சிவந்த ஒரு கையால் முறுக்கி, சுற்றிப் பிடித்து, விரைவாக இழுத்து உதைத்தான். பிறகு மற்றொரு கையினால், தனது உடைவாளை உருவி எடுத்தான்.

“வில் எடாது அவள் வீங்கு எரி ஆம் என விரிந்த
சில் வல் ஓதியைச் செங் கையில் திருகுறப் பற்றி” (சூர்ப்பணகைப்படலம் 309)

விசுவாமித்திரர் புனைந்த சடைமுடி

விசுவாமித்திரர் முதலில் மன்னனாக இருந்தார். வசிஷ்டரின் தவ வலிமையை உணர்ந்ததால், மன்னனாக இருப்பதை விட, தவ வலிமை பெறுவதே சிறந்தது என்று எண்ணி, தவம் செய்து முனிவரானார். எனவே ’புனைந்த சடைமுடி’ என்கிறார் கம்பர். நினைந்த முனி பகர்ந்த எல்லாம் நெறி உன்னி அறிவணம் என் புனைந்த சடைமுடி துலக்கி போர் ஏற்றின் முகம் பார்த்தான். வில்லின் பெருமை குறித்து சதானந்தர் கூற, விசுவாமித்திரரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இராமன். விசுவாமித்திரர் பேசவில்லை. முடியை அசைத்து, செய்தியை இராமனுக்கு அறிவித்து விட்டார். குறிப்புணர்ந்த இராமன், சிவதனுசுவைப் பார்த்தான். செய்தியைப் பரிமாறுவதற்குத் ’தலை அசைத்தல்’ பயன்பட்டது தெரிகிறது. சடைமுடி துலக்கியே குறிப்பு உணர்த்தப்படுகிறது. (கார்முகப்படலம் 639)

சாம்பலாகி வெளுத்த கூந்தல்

இராமனின் கணையால், கடலின் வரம்பை விட்டு நீங்கி எழுகின்ற கொழுமையான புகைப்படலம், மேலே செல்லுதலால், வானுலகத்தில் நடனம் ஆடும் அரம்பை முதலிய, தேவ மகளிரின் கரிய கூந்தல்கள் சாம்பலாகி வெளுத்துக் காணப்பட்டன.

“ஆடும் மங்கையர் கருங்குழல் விளர்ந்தன அளக்கர்க்
கோடுதீர்ந்து எழக்கொழும் புகைப்பிழம்பு மீக்கொள்ள” (வருணனை வழி வேண்டு படலம் 551)

கூந்தல் குறித்த உவமை

1. குழலுக்குக் கமுகின் பாளையை உவமையாகக் கூறுவதை,

“மாந்தளிர் அனைய மேனிக் குறத்தியர் மாலை சூட்டி
கூந்தலின் கமுகின் பாளை குழலினோடு ஒப்புக் காண்பார்” (வரைக் காட்சிப் படலம் 803)

2. நிலக் கருப்பொருளான வேங்கை மரங்கள் மலர்ந்து குறத்தியரின் கூந்தல் போல நறுமணம் கமழ்ந்தன. நெய்தல் நிலக் கருப்பொருளாகிய புன்னை மரங்களும் மலர்ந்து வண்டுகள் வந்து ஆரவாரம் செய்யுமாறு செம்படவப் பெண்களின் கூந்தலைப் போல நறுமணம் வீசின. பக்கத்தே உள்ள மருதநிலக் கருப்பொருளான செங்கழுநீர்கொடிகள் மலர்ந்து உழத்தியரின் கூந்தலைப் போல நறுமணம் வீசின. அவற்றின் அண்மையில் உள்ள அன்று மலர்ந்த முல்லைநிலக் கருப் பொருளாகிய முல்லைக்கொடிகள் இடைக்குலப் பெண்களின் கூந்தலைப் போல மணம் கமழ்ந்தன. (கார்காலப்படலம் 487)

முடிவுரை

இயற்கையாகவே பெண்கள் அழகானவர்கள். அவர்களுக்கு தலைமுடி அழகுக்கு அழகு சேர்க்கிறது. மங்களப் பொருட்களில் தலைமுடியும் ஒன்றாகும். திருமணத்தின் போது, சிகைஅலங்காரம் முக்கியத்துவம் பெறுகிறது. கூந்தலை அழகாகப் பின்னி மலர்களையும், தலைக்கென உள்ள அணிகலன்களையும் அணியச் செய்வது, அழகிற்கு மேலும் அழகூட்டும். குகன் கரியநிறக் கூந்தலைப் பெற்றிருந்தான்.தீ நிமித்தம் காட்டும் அறிகுறியாகக் கூந்தலும் உள்ளது. முன்னர் அரசராக இருந்து, பின்பு துறவு கோலம் பூண்டு, துறவியாக வந்த விசுவாமித்திரர் சடைமுடி ’புனைந்த சடாமுடி’ எனப்பட்டது. துறவு கோலத்தில் உள்ள சடாமுடி கோலம், காலம் முடிந்தப் பிறகு பட்டாபிசேகம் செய்யும்போது, மயிர் மழிக்கும் செயல் செய்யப்பட்டது என்பதும் பெறப்படுகிறது. கணவர் அருகில் இருக்கும்போது , மனைவியின் கூந்தல் அழகு செய்யப்படுகிறது என்பதும், பிரிவில் அழகு செய்யப்படவில்லை என்பதும் பெறபடுகிறது. துன்பமான மனநிலையிலும் கூந்தலில் மலர் சூட்டப் பெறவில்லை என்பதும் பெறப்படுகிறது.


உயர்ந்த குலத்தில் தோன்றிய மகளிர், தம் கணவரைப் பிரிந்த காலத்தில் தம் பொறிகளைப் புலன்களில் செல்லாத வண்ணம் அடக்கி வைப்பர். நல்ல ஒழுக்கத்தையே உறுதியாகக் கொண்டு, தம் தலை மயிரை வாரி முடிக்காது, சடைத் தொகுதியாகத் திரித்துவிட்டு, அந்தச் சடையைத்தாங்குதலுடன் கூடிய ஒப்பில்லாத கற்பு நெறி என்ற தவத்தையுடையவராய் இருப்பர். அவ்வாறு வாழும்போது தமக்கு ஒரு பழி உண்டாயின், தம் உயிரைவிட்டு, அந்தப் பழியைப் போக்கிக் கொள்வர். (மீட்சிப்படலம் 3959)

துணைநூற்பட்டியல்

1. அரசேந்திரன்.கு., கம்பச் சித்திரம்,சாளரம், சென்னை, 2012.

2. இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம், சென்னை,2016.

3. காலமும் கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு,  (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம், புதுச்சேரி, சென்னை.

4. கம்பன் புதிய தேடல், அ. அ. ஞானசந்தரத்தரசு, தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

5. எல்லைகள் நீத்த இராமகாதை, பழ.கருப்பையா, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.

6. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன், வள்ளிபதிப்பகம், சென்னை, 2019.

7. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8 வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

8. செல்வம்.கோ, கம்பன் புதையல், சாரு பதிப்பகம், சென்னை, 2016.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p311.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License