குறுந்தொகை பெண்கவிகளின் காதல் உவமைகள்
முனைவர் பி. வித்யா
157, மில்லைன், புதுச்சிறை சாலை,
மதுரை - 625016.
முன்னுரை
தமிழறிந்த நெஞ்சமெல்லாம் உவமையாலும், மேற்கோள்களாலும் நிறைந்து நீங்கா இடம் பிடித்தது குறுந்தொகை. எத்தனை உள்ளுறைப் பொருளைத் தன்னகத்தே கொண்டதோ? தெரியாது. காலங்கடந்த பின்னும் தங்கமும், வைரமும் எல்லோரும் மகிழும்படியும், தங்கள் பெட்டகங்களில் சேமிக்கும்படியும் இருப்பதைப் போல குறுந்தொகையும் நாளும் படிக்குந்தோறும், கேட்குந்தோறும், ஆராயுந்தோறும் எத்தனை ஆளுமை நிறைந்ததாக இருக்கிறது என்பதைச் சொல்லில் வடிக்க இயலாது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த குறுந்தொகையில் இட்டு நிரப்ப முடியாத இடங்களையும் தங்கள் ஆளுமையால் தொட்டு நிரப்பியிருக்கிறார்கள் நம் பெண் கவிகள். அவா;களால் எழுதப்பட்ட உவமைகள் பெண்களின் உளவியலோடு தொடர்புடையவை என்பதனை தெள்ளாறும், தெளிதேனும் போல் நம்மால் உணர முடிகிறது. அது விளக்குகின்ற பொருண்மையின் பரப்பு எவ்வளவு விரிந்தது என்பதனை அறிவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
பெண்கவிகளின் காதல் உவமைகள்
புறத்தார்க்கு இன்னதென்று விளக்கிச் சொல்ல முடியாததுதான் அகம். அதிலும் பெண் என்றால் அதனைச் சொல்ல, எழுத சில தடைகள் இப்பொழுதும் கூட இருக்கிறது. ஆனால் சங்ககால பெண்கவிகளுக்கு இந்தச் சிக்கல்கள் இல்லாமல் இருந்ததை வ. சு. ப. மாணிக்கம் அவர்கள், “பண்டைத் தமிழ்ச் சமுதாய அளவில் நோக்கின், பெண் கற்கும் உரிமையும், கவிபாடும் உரிமையும், காதலுரிமையும், காதற்களவு செய்யும் உரிமையும், இல்லறத் தொழிலுரிமையும், பெருமையும், புகழும் எல்லாம் ஆடவர்க்கு நிகராகப் பெற்றிருந்தாள்” (1) என்று குறிப்பிடுவதை அடிப்படையாகக் கொண்டு குறுந்தொகை காலகட்டத்தைச் சேர்ந்த நம் பெண்கவிகள், இன்னதென்று வரையறுத்துச் சொல்ல முடியாத காதல் உணர்வுகளையும், அதன் ஊடான தன் மன ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், விருப்பங்கள் என்று பல பரிமாணங்களையும் உவமைகளால் தங்கள் உள்ளக் கிடக்கைகளுக்குச் சிறகுகள் தந்திருக்கின்றனர் என்பதனை விளங்கிக் கொள்ள முடிகிறது.
அவர்கள் கூறும் காதல் உவமைகளைக் கீழ்க்கண்டவாறு பகுத்துக் கொண்டு ஆராய முற்படலாம்.
* நேரடியான காதல் உவமைகள்
* காதல் நெஞ்சம் - உவமைகள்
* பசலை - உவமைகள்
எல்லாம் காதலுக்கான உவமைகள்தான். ஆனாலும், அவற்றில் சிலவற்றை முன்னிலைப்படுத்தும் பெண்கவிகள், காதலுக்கான நேரடியான உவமைகளையும், சில இடங்களில் அக்காதல் கொள்ளும் நெஞ்சத்திற்கான உவமைகளையும், அக்காதலால் உண்டாகிய நோயான பசலைக்கான உவமைகளையும் படைத்தளித்துள்ளனர்.
நேரடியான காதல் உவமைகள்
காதல் உலகத்தின் எவ்வுயிர்க்கும் எக்காலத்திற்கும், எவ்விடத்திற்கும் பொதுவான உணர்வாகும். இந்தக் காதல் உணர்வானது, எந்த வயதினரையும் தன்வயப்படுத்தும். காலத்தைக் கடந்தும் காதல் சுமக்கும் குறுந்தொகையில் இக்காதலானது எவ்வாறு பேசப்பட்டிருக்கிறது? இதனை ஒருபுறம் கையில் வைத்துக்கொண்டு பெண் எழுத்துக்களின் பின்புலத்தால் பெண்கவிகளின் பாடல்களை ஆராய்ந்தோமானால், பெண் என்னும் ஆளுமை அவள் என்ன எதிர்பார்க்கிறாள்? அவள் எதைத் தவிர்க்கப் போராடுகிறாள்? எதனை வலியுறுத்த விரும்புகிறாள்? என்பதான பல பரிமாணங்களையும் நாம் காண முடியும்.
பெண்ணை அவளின் உணர்வுகளைக் கூட கட்டுப்படுத்த முயற்சிக்கும் சமூகமாகத் தற்போதைய சமூகம் இருப்பதை ச. தமிழ்ச்செல்வன், “அவள் என்ன யோசிக்க வேண்டும் என்பதும் கூட முன்பே இறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. ஒவ்வொரு பருவத்திலும் அவளுக்கான சிந்தனை, பேச்சு, இயங்கும் வெளி, இவை மடடுமின்றி அவளது உணவும் உடையும் கூட ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டுவிட்டது” (2) என்றுரைக்கிறார். ஆயினும், சங்ககால நம் பெண்கவிகள் தங்களது காதலையும் உணர்வையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளமையைக் காண முடிகிறது.
இங்கு ஒரு பெண்கவி, காதலுக்கான நேரடி உவமையாக, ‘நால் ஊர்க்கோசர் நல்மொழி’யைக் குறிப்பிடுகிறார். அதாவது,
“நால்ஊர்க் கோசர் நல்மொழி போல,
வாய் ஆகின்றே தோழி - ஆய்கழல்
சேயிலை வெள்வேள் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே” (3)
என்கிறார் ஔவை. காதலின் உறுதித்தன்மையை வேண்டும் பெண்ணின் மனநிலையோடு இந்த உவமையை அணுகியிருக்கிறார் அவர். இங்கு சொல்லப்பட்ட உவமை நாலூர்க்கோசர் நல்மொழி - காதலின் உறுதித்தன்மைக்காக சொல்லப்பட்டது. காதல் என்பது உறுதித்தன்மையோடு இருக்க வேண்டும். அதற்கு அக்காதல் கரணத்தில் முடிவடைய வேண்டும். அதற்கான உவமையை, பெண் புலவராக, தூதுவராக பல நேரங்களில் போர் புரியும் மன்னர்களோடு நெருங்கி அறிவுரை கூறிய அனுபவத்திலிருந்து நம் பெண்கவி உவமையை எடுத்துக் கையாள்கிறார்.
மோகூர்ப் பழையனுக்கு உதவுவதாக சொன்ன நாளில், தன் வாக்கு பொய்யாமல் தன் படையை அளித்தனர், நால் ஊர்க் கோசர். அந்த நல் மொழி போலே, தலைவனோடு தலைவி கொண்ட காதல் இன்று உறுதியானது, என ஒரு பெண் எழுத்து தன் அனுபவத்தில் போர் நிகழும் இடத்தில் யாருக்குச் சாதகமாக முடியும் என்பதை கடைசித் தருணத்தில் அவர்களின் துணைப்படையே முடிவு செய்யும், அப்படிப்பட்ட வெற்றி வாய்ப்பைப் பெற்றுத் தந்தது நால் ஊர்க்கோசரின் வாக்கு. அது போன்றதான காதலையே பெண் மனம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. அதனை அப்படியே ஔவை படைத்திருத்தலை இவ்வுவமையின் மூலம் காண முடிகிறது.
அத்தகைய காதலில் தலைவனின் வினைவயிற் பிரிவு தலைவியை நேரடியாகத் தாக்கும் தன்மையது. பிரிவென்பதையேக் காதல் மனது விரும்புவதில்லை. ஒருவேளை பிரிவு நிகழ்ந்து விட்டால்தான் எப்படி எப்பொழுதும், முப்பொழுதும் தலைவனை நினைக்கிறோமோ, அதுபோல தலைவனும் நம்மை நினைந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு தலைவியின் நினைவாக இருக்கும். ஆனால், உலகத்துப் பண்போ அது போல் இருப்பதில்லை. அங்கு பெண்ணின் கேள்வியை முன்வைக்கிறார்.
இந்த உவமையின் வழி,
“நீடிய மராஅத்த கோடு தோய் மலிர்நிறை
இறைத்து உணச் சென்று அற்றாங்கு,
அனைப் பெருங்காமம் ஈண்டு கடைக்கொளவே” (4)
இங்கு உவமை, வெள்ளம் இறைத்து உண்ணும் அளவினதாகக் குறைதல் - காதல் மிகுதலும் குறைதலும் சொல்லப்பட்டது. நெடிய கடம்ப மரத்தின் கிளைகள் வரை பெருகி வரும் வெள்ளம், நெடுந்தூரம் கடந்த பின்னே, அங்குள்ளோர் கையால் இறைத்து உண்ணும் அளவினதாகக் ஆகிவிடும். அதுபோல வினையின் பொருட்டு இல்லாததாக காதல் இருந்தாலும், காதலானது வினை முடிந்த நிலையில் பெருக்கெடுத்துவிடும். அது தலைவியைக் காணும் இடத்துத்தான் இறைத்து உண்ணும் நீரின் அளவைப் போல் குறைந்து விடும். ஆனால் பெண் மனமோ மாறாத அன்பைத்தானே எதிர்பார்க்கிறது. அதனை இவ்வுவமையின் வழி விளக்கி விடுகிறார் ஔவை.
மற்றுமொரு பாடலிலும் காதலுக்கு வெள்ள உவமையைப் படைத்துக் காட்டுகிறார்கள் பெண்கவிகள். நம் வெள்ளிவீதியார்,
“வான்பூங் கரும்பின் ஒங்குமணற் சிறுசிறை
தீம்புனல் தெரிதர வீழ்ந்து உக்காங்கு,
தாங்கும் அளவைத் தாங்கி,
காமம் நெரிதரக் கைந் நில்லாதே” (5)
(இங்கு உவமையானது,பெரும் வெள்ளத்தைக் கரும்பின் அணை கொண்டு தடுத்தல் - காதலைக் கட்டுக்களால் தடுக்க இயலாது என்பதற்காகச் சொல்லப்பட்டது.) வெள்ளத்தைத் தடுக்க அணைபோல கரும்பின் கழிகளை இட்டு வைப்பதுண்டு. ஆனால், பெருகிய வெள்ளம் வந்த நிலையில் அந்தக் கரும்பினையும் அடித்துச் சென்றுவிடும். அதுபோலக் காதலானது பெருகிய நிலையில் அது ஒரு கட்டமைப்பிற்குள்ளேக் கட்டுப்பட்டு நிற்காது. இங்கேச் சொல்லப்படும் மறைபொருள், பெண்ணின் காதலும் அதுபோலத்தான் என்பதே. வெள்ளத்தின் முன் போடப்பட்ட கரும்பின் சிறு அணைபோல அதுவும் ஒருநாள் அடித்துச் செல்லப்படும்.
காதல் நெஞ்சம் - உவமைகள்
உள்ளத்தே நிகழும் அகத்தை வார்த்தைகளால் எழுதிட முடிவதில்லை. அது காற்றில் வரையப்பட்ட கோட்டையைப் போல, வரையுமிடத்தே மறைந்து கொண்டே வரும். ஆனாலும் நம் பெண் கவிகள் அந்தக் கோட்டையையும், அதன் அழகையும் காட்டிடவே முயன்றிருக்கின்றனர். பெண் நெஞ்சம் படும்பாட்டினை பின்வரும் உவமைகளால் உணர்த்த விரும்புகின்றனர் நம் பெண் கவிகள்,
“ஏழ்ஊர்ப் பொதுவினைக்கு ஓர்ஊர் யாத்த
உலைவாங்கு மிதிதோல் போலத்
தலைவரம்பு அறியாது வருந்தும், என்நெஞ்சே” (6)
(இங்கு உவமை ஊதுலைத்துருத்திக்கு ஓய்வில்லை - காதல் நெஞ்சம் பிரிவால் முடிவின்றி வருத்தும்). தலைவன் பிரிவால் தலைவி வருத்தம் நிகழும் என்பது அனைவரும் அறிந்ததே. இங்கே வருத்தத்தின் அளவைக் குறிப்பிடும் வகையில் ஏழு ஊர்களுக்கும் பொதுவாகக் கட்டப்பட்ட ஊதுலைத் துருத்திக்கு எப்படி ஓய்வென்பது இல்லையோ, அதுபோல என் நெஞ்சமானது முடிவின்றி வருத்துகிறது என்று தவிக்கிறாள் தலைவி.
தலைவியின் நிலையை உணர்த்தத்தான் பெண்கவிகள் உவமைகளைக் கையாண்டனரா? என்றால், தலைவனின் நிலையை உணர்த்தும்படி எழுதப்பட்ட ஒளவையின் பாடல்,
“நல்லுரை இகந்து, புல்லுரை தாஅய்,
பெயல்நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிது அவாவுற்றனை - நெஞ்சே” (7)
(இங்கு உவமைகள், நல் மொழி இகழ்ந்து பழிமொழி ஏற்றல், நீரினை வைக்கும் பசிய மண்கலம் - காதல் வெள்ளந்தனில் நீந்த முயற்சிக்கும் நெஞ்சத்திற்கு உவமையாகச் சொல்லப்பட்டது). காதல் உயிருள்ளவைக்கு பொதுவானதல்லவா? தலைவனின் காதல் நிலையை ஔவை, நல்மொழிகளை இகழ்ந்து பழிச் சொற்களை ஏற்பதைப்போல, மழைநீரைச் சுடப்படாத மண்கலத்தில் சேர்க்க முயலுதல் போல, தன்னுடைய தாங்காத காதல் வெள்ளத்தில் நீந்திக் கரைசேர முற்பட்டமையே நெஞ்சே, எனத் தன் காமம் மிகுந்திருத்தலையும், அதைக் கடக்க முடியாமல் தவித்திருத்தலையும் விளக்குகிறார் நம் பெண்கவி.
தலைவனின் நெஞ்சம் குறித்துச் சொன்ன ஔவை, தலைவியின் நெஞ்சத்திற்கு மிக நெருக்கமாகச் சென்று மற்றுமொரு உவமையை வடிக்கிறார் நமக்காக,
“ஆயிடை, இருபேர் ஆண்மை செய்த பூசல்
நல்அராக் கதுவியாங்கு, என்
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே” (8)
(இங்கு சொல்லப்பட்ட உவமை, போர் நிகழ்ந்து கொண்டு இருக்குமிடத்தில் ஒருவனைப் பாம்பு தீண்டினாற் போன்று - கலக்கமுறும் நெஞ்சம்). ஏற்கனவே கூறப்பட்டதைப் போல போர்களுக்கும், மன்னர்களுக்கும் மிக நெருக்கமான பெண் புலவர் என்பதால் ஔவையின் உவமையில் கூட அவை பிரதிபலிப்பதைக் காண முடிகிறது. அதாவது தலைவியின் நெஞ்சமானது எவ்வளவு கலங்கியிருக்கிறது எனக் கேட்டால், ஏற்கனவே போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் இடத்தில் ஒருவனைப் பாம்பு தீண்டினால் எவ்வளவு துன்பத்தைத் தருமோ, அந்த அளவிற்கான துன்பத்தை அது ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார் நம் பெண்கவி.
பசலை - உவமைகள்
காதல் நோய் என்று குறிப்பிடப்படும் பசலை சங்ககால எழுத்துக்களில் அதிகம் பேசப்பட்ட பொருண்மை என்றேச் சொல்லலாம். அத்தகைய பசலையாகிய காதல் நோயையும் உவமித்திருக்கிறார்கள் நம் பெண்கவிகள். வெள்ளிவீதியார் என்னும் பெண்கவி தமது பாடலொன்றில், இதனைக் குறித்து, இளமையான தனது பேரழகானது, பசலையால் மட்டுமே விரும்பி உண்ணப்பட்டு வீணாகுதலை உவமிக்கிறார்.
“கன்றும் உண்ணாது கலத்தினும் படாது,
நல்ஆன் தீம்பால் நிலத்து- உக்காங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும் -
திதலை அல்குல்என் மாமைக் கவினே” (9)
(இங்கு உவமை, நல்ல பசுவின் இனிய பால் தனது கன்றுக்கும் உதவாமல், கலத்தினால் கொல்லப்பட்டு பிறருக்கும் உதவாமல் வீணாகுதல் - பசலையால் இளமை வீணாகுதல் சொல்லப்பட்டது). தலைவனைச் சேராமல் தனித்திருக்கும் தலைவியின் இளமையாலும், அழகாலும் என்ன பயன்? என்று வருந்துகிறாள் தலைவி. எவ்வாறு நல்ல பசுவின் பால் தனது கன்றினுக்கும் உதவாமல் பிறத்தார்க்கும் பயன்படாமல் நிலத்தில் சிந்தினால் வீணாக அழிகிறதோ, அதுபோல என் அழகானது எனக்கும் உதவாமல், என் தலைவனுக்கும் பயன்படாமல், பசலையால் விரும்பி உண்ணப்படுகிறதே என்று இயலாமையை உரைக்கிறாள் தலைவி. இன்றைய நவீன உரையாடலில் கூட, இத்தனை வெளிப்படைத் தன்மையைப் பார்க்க இயலாது. அந்த அளவிற்குத் தலைவியின் அக உளவியவைச் நேரடியாகச் சொல்கிறார் வெள்ளிவீதியார்.
தலைவனை நினைந்து , தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவியை வாட்டுகிறது பசலை. அதனை, தான் மட்டும், தான் சொல்ல, தன் தோழி மட்டும் அறிந்தால் போதாது. அந்த உணர்வினை தலைவனும் உணர வேண்டும் என்னும் தவிப்பு மேலிடும் தலைவிக்காக ஔவை ஒரு உவமையைப் படைத்துக் காட்டுகிறார்.
“சென்ற நாட்ட கொன்றைஅம் பசுவீ
நம்போல் பசக்கும் காலை” (10)
தான் வருந்துவதை பசலையால் துன்பப்படுதலை, தலைவன் தன்னைப் பிரிந்து சென்ற நாட்டில் பூத்திருக்கும் கொன்றை மலர்கள் பசந்து காட்டிக் கொடுக்காதா? அதனைக் கண்டாவது என்னை நினைந்து தலைவன் விரைவில் வரமாட்டாரா? என ஏங்கும் உள்ளம்தான் இந்த உவமையின் வித்து. இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு இடமும் ஒன்றுண்டு. சென்ற நாட்டில் பூத்திருக்கும் கொன்றையைப் போல் தலைவி பசலை கொள்ளவில்லை. தலைவி தலைவன் பிரிந்த அன்றே பசலை கொண்டுவிட்டாள். ஆனால் இப்பொழுதுதான் கொன்றை பசலை கொண்டிருக்கிறது என்று தலைவியின் மனநிலையை முன்னிலைப்படுத்துகிறார் பெண்கவி.
எவ்வளவுதான் பெண்ணுக்கு இவ்வுலகில் வாய்க்கப் பெற்றாலும், தலைவன் அருகிருக்கும் நிலை வாய்க்கப் பெறாவிட்டால் அவள் நிலை எவ்வாறு இருக்கும் என்பதற்கான சிறந்த உவமையை வடிக்கிறார் வெள்ளிவீதியார்.
“ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணைய் உணங்கல் போல,
பரந்தன்று, இந்நோய் : நோன்றுகொளற்கு அரிதே!” (11)
இங்கு சொல்லப்பட்ட உவமை, கையில் ஊமன் கண்ணில் வெண்ணைய் உணங்கலைக் காப்பது போல - பசலை நோய் பரவிவிட்டது. கதிரவன் காய்கின்ற நேரம், பாறை மீது வைக்கப்பட்ட வெண்ணெய் உருகிக் கொண்டிருக்கிறது. அதனைக் காவல் காப்பவனோ கையில்லாதவன், அதோடு ஊமை, அவன் என்ன செய்ய இயலும்? கை இருந்தால் அந்த வெண்ணெயை வேறு இடத்திற்கு மாற்றி வைக்கலாம். அல்லது வாய் பேச முடிந்தால் நிலையைச் சொல்லி வேறு யாரையாவது உதவிக்கு அழைக்கலாம். ஆனால் அவனுக்கோ கண்ணும் தெரியாது. ஊமையும் வேறு. கண் தெரியவில்லையென்றால் குறைந்தபட்சம் அந்த வெண்ணெய் பாழ்படுவது தனக்கும் தெரியாமல் இருந்திருக்கும். ஆனால் இங்கு நிலை அப்படியில்லையே, கையில்லை, பேசக்கூடிய தன்மை இல்லை. ஆனால் காணக்கூடிய தன்மை மட்டும் இருப்பதால் என்ன செய்வதென தெரியாமல் கதறும் பெண்மையின் மனம்தான் இங்கு எழுது பொருள் ஆகியிருக்கிறது.
முடிவுரை
குறுந்தொகை காலகட்டத்தைச் சேர்ந்த நம் பெண்கவிகள் உவமைகளால் உலகளந்துள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் உவமைகள் பெண் உளவியலான காதல், எதிர்பார்ப்பு, ஏக்கம், வருத்தம் என்ற உணர்வுகளால் படைக்கப்பட்டதாக உள்ளது. மேலும் அத்தகைய உவமைகள் தங்கள் அனுபவங்களின் வெளிப்பாடாகவும் தாங்கள் சொல்ல விரும்பும் கருத்துகளின் மறைமுகமான பொருளாகவும் படைக்கப்பட்டிருத்தலைக் காண முடிகிறது. பெண் உளவியலைப் பேசும் பெருங்கதைகள் சுருக்கமாக உவமைகளாக படைக்கப்பட்டிருப்பது இன்னும் வலு சேர்க்கிறது எனலாம்.
அடிக்குறிப்புகள்
1. மாணிக்கம். வ .சு .ப, தமிழ்க் காதல் ப.128.
2. தமிழ்ச்செல்வன். ச, எது கலாச்சாரம்?, ப.20.
3. சங்க இலக்கியம், குறுந்தொகை புத்தகம் 1, ப.50.
4. மேலது, ப.241.
5. மேலது, ப.344.
6. மேலது, ப.397.
7. மேலது, ப.84.
8. மேலது, ப.115.
9. மேலது, ப.80.
10. மேலது, ப.422.
11. மேலது, ப.150.
துணை நூற்பட்டியல்
1. சங்கப் புலவர்கள் , சங்க இலக்கியம் குறுந்தொகை, புத்தகம் 1, புத்தகம் 2, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை.
2. தமிழ்ச்செல்வன். ச, எது கலாச்சாரம்?, பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை.
3. மாணிக்கம் வ. சு. ப., தமிழ்க் காதல், மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் - 608001.
(நூல் வெளியான ஆண்டைக் குறிப்பிட்டிருக்கலாம்)
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.