இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

கம்பராமாயணத்தில் தண்டனைகள்

முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.


முன்னுரை

மன்னராட்சி காலத்தில் தவறு செய்பவர்களை மன்னனே நேரடியாக விசாரித்துத் தீர்ப்புகளை வழங்கி வந்தான். அறம் கூறும் அவையங்கள் இருந்தன. நல்லவை செய்தவர்களைப் பாராட்டுதலும், அங்கீகரித்தலும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு தவறு இழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்குதலும் முக்கியமானதாகும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தவறு செய்தால் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். சரியாக விசாரணை செய்து, சட்டத்தின் எல்லையை மீறாமல் தண்டனை வழங்க வேண்டும். தேவைப்படுமானால் ஏற்கனவே வழங்கிய தண்டனைகளைக் குறைக்கலாம். எல்லாவற்றிலும் தண்டனைகள்தான் வழங்க வேண்டும் என்பதில்லை, கண்டித்தும் விட்டுவிடப்பட்டுள்ளது. கூட்டங்களைக் களைப்பதற்காகத் தேவையான இடங்களில் தடியடி நடத்தப்பட்டுள்ளது. அடித்துத் திருத்த வேண்டிய காலங்களில் அம்முறையும் பின்பற்றப்பட்டுள்ளது. செய்த தவறைச் சுட்டிக்காட்டலாம். நாக்கை அறுத்தல், மூக்கு காது முலைக் காம்புகளை அறுத்தல் என்பன போன்ற கம்பராமாயணத்தில் காணப்படுகின்ற தண்டனைகள் குறித்து இக்கட்டுரையின் வழியாகக் காண்போம்.

1. யார் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்

தாடகை வதைப் படலத்தில் பெண்ணைக் கொல்லலாமா என்ற இராமன் எண்ணிய போது விசுவாமித்திரர்,

"கறங்கு அடல் திகிரிப்படி காத்தவர்
அறம் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமா? (தாடகை வதைப்படலம் 384)

அறத்தைக் கெடுத்து நின்ற ஒருவர் ஆணாய் இருந்தால் என்ன? பெண்ணாய் இருந்தால் என்ன? அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்கிறார்.
இதன் வழியாக, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை அறிய முடிகிறது.

2. தண்டனை வழங்கும் போது கவனிக்க வேண்டியது

தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றாலும், அவர்களுக்குத் தண்டனை வழங்கும் போது, சிலவற்றைக் கவனிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அரசியற்படலத்தில் ஒரு குற்றத்திற்குத் தண்டனை வழங்கும் போது, சட்டத்தின் எல்லையை மீறாமல், தண்டனை வழங்க வேண்டும். இதைச் சுக்ரீவனுக்கு, இராமன் அறிவுரையாக வழங்குகிறான்.

"நாயகன் அல்லன் நம்மை நனி பார்த்து எடுத்து நல்கும்
தாய் என இனிது பேணி தாங்குதி தாங்குவோரை
ஆயது தன்மையேனும் அற வரம்பு இகவா எண்ணம்
தீயன வந்தபோது சுடுதியால் தீமையோரை" (அரசியற்படலம் 420)

தவறு செய்கிறவர்களையும் நீ கட்டாயம் தண்டிக்க வேண்டும். ஆனால், அப்படித் தண்டிக்கும் போது, அது அறவரம்பு இகழா வண்ணம் இருக்க வேண்டும் என்று இராமன் கூறுகிறான்.


3. தண்டனைக் குறைப்பு

இராமன் பிறந்ததை அறிந்து மகிழ்ந்த தசரதன், வரிவிலக்கு கொடுத்ததோடு நில்லாமல், தன் நாட்டுச் சிறையில் வாடும் அயல் நாட்டுச் சிற்றரரசர்களையும், மக்களையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிடுகிறான்.

"படை ஒழிந்திடுக தம் பதிகளே இனி
விடை பெறுகுக முடி வேந்தர் வேதியர்” (திருஅவதாரப்படலம் 290)

தண்டனைக் குறைப்பு கொடுக்கும் வழக்கமும், பொதுமன்னிப்பு வழங்கும் வழக்கமும் அன்றே இருந்தது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

4. கண்டித்தல்

கைகேயின் இரு வரங்களைப் பற்றிக் கேட்டதும் கொதித்து எழுகிறான் இலட்சுமணன். அவன் பேசும் கடுஞ்சொற்களைக் கேட்டு அவனைக் கண்டிக்கிறான் இராமன்.

"இளையான் இது கூற இராமன் இயைந்த நீதி
வளையாவரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே
உளையா அறம் வற்றிட ஊர் வழுவுற்ற சீற்றம்" (நகர்நீங்குபடலம் 417)

5. தடியடி செய்தல்

இராவண வதம் முடிந்து சீதை, இராமனைக் காண வருகிறாள். மக்கள் அனைவரும் விமானத்தைச் சூழ்ந்து கொள்கிறார்கள். அந்தக் கூட்ட நெரிசலில், வழியை ஏற்படுத்த வேண்டும் என்பதால், அரக்கர்களின் காவலர்கள் தடியடி நடத்தினர்.

"அருங்குலக் கற்பினுக்கு அணியை அண்மினார்
மருங்கு பின் முன் செல வழி அன்று என்னலாய்
நெருங்கினர் நெருங்குழி நிருதர் ஓச்சலால்" (மீட்சிப்படலம் 3941)

அரக்கர்களின் காவலர்கள் நடத்தும் தடியடியால் அங்கிருந்த அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்.

அன்றைய காலத்திலும் கூட்ட நெரிசலைச் சரி செய்ய, தடியடி நடத்தப்பட்டதை அறியமுடிகிறது.

6. அடிகொடுத்தல்

அனுமன் இலங்கைக்குள் புக முயன்ற போது, இலங்கை மாதேவி அவனை உள்ளேச் செல்லவிடாது தடுக்கிறாள். அனுமனுடன் போர் செய்கிறாள். அனுமன் பெண்ணைக் கொல்லக்கூடாது என்பதால் ஒரு அடி கொடுத்தான். உடனே இலங்கை மாதேவி கீழே விழுந்து விட்டாள்.

"ஒடியா நெஞ்சத்து ஓர் அடி கொண்டான் உயிரோடும்
இடி ஏறு உண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தாள்" (ஊர்தேடுபடலம் 185)


7. தவறைச் சுட்டிக் காட்டல்

யுத்தம் முடிந்து இராவணன் மேனியைப் பார்த்து, அவன் முதுகில் காயம் இருப்பதைப் பார்த்த இராமன் அவசரப்பட்டு, இராவணனைப் புறமுதுகு காட்டியவன் என்றும், அவனைத் தாக்கும் இழிசெயலைத் தான் செய்துவிட்டதாகவும், அதனால் அந்த வெற்றி, ஒரு வெற்றியே அல்ல என்றும், மனம் கசந்து வீடணனிடம் கூறினான். உடனே வீடணன் முதுகில் ஏற்பட்ட புண்கள் இராவணன் உலகங்களிலுள்ள எல்லா நாடுகளிலும் வெற்றி கொண்டு போர் செய்ய வேறு யாரும் இல்லாத நிலையில், எட்டு திசை யானைகளோடு போர்புரிய, அந்த யானைகள், தம் தந்தங்களால் இராவணன் உடலில் குத்த, அந்த யானைகளை மேலேத் தூக்கி எறிந்த போது, அந்தத் தந்தங்கள் அவன் உடம்பில் தங்கிவிட்டன. அனுமன், இராவணனைக் குத்த, அந்தத் தந்தங்கள் கீழே விழுந்ததால் ஏற்பட்ட புண்களே இது என்று வருத்தத்துடன் கூறினான்.

உடனே இராமன், தான் அவசரப்பட்டுச் சொன்னதற்காக வருத்தப்படுகிறான். தான் பேசியது தவறு என்பதை ஒத்துக்கொள்கிறான். இறந்து போனவரிடத்தில் தான் குறைவாகப் பேசியிருக்கக்கூடாது என்றும் ஒத்துக்கொள்கிறான்.

"அன்னதோ என்னா வீரன் ஐயனும் நாணும் நீங்கி
தன்ன தோள் இணையை நோக்கி வீடணா தக்கது அன்றால்
என்னதோ இறந்துளான் மேல் வயிர்த்தல்" (இராவணன் வதைப் படலம் 3856)

தன்னிடம் அடைக்கலம் பெற்ற ஒருவன் தன் தவறைச் சுட்டிக்காட்டி குற்றுணர்வு ஏற்பட வைப்பதும் ஒரு வகை தண்டனையேயாகும்.

8. நாக்கை அறுத்தல்

கூனியின் பேச்சைக் கேட்டு, அதை ஏற்க முடியாமல் வெகுண்டு எழுந்த கைகேயி, கூனியின் நாக்கை அறுத்து விடுவேன் என்று அச்சுறுத்துகிறாள்.

"போதி என் எதிர்நின்று நின் புன்பொறி நாவைச்
சேதியாது இது பொறுத்த னென் புறம் சிலர் அறிவின்" (மந்தரைச் சூழ்ச்சிப்படலம்160)

தவறு செய்தால் நாக்கை அறுக்கும் தண்டனை பின்பற்றப்பட்டதை அறியமுடிகிறது.

சூர்ப்பணகை, இராவணனின் கோபத்தை இராமனிடம் சுட்டிக் காட்டினாள்.

"ஆக்கு அரிய மூக்கு உங்கை அரியுண்டாள் என்றாரை
நாக்கு அரியும் தயமுகனார் நாகரிகர் அல்லாமை" (சூர்ப்பணகைப்படலம் 341)

சூர்ப்பணகையின் மூக்கு அரிபட்ட செய்தியைத் தன்னிடம் சொல்ல வந்தவனின் நாக்கை அறுத்து விடுவானாம் இராவணன். இதைப் பெருமையாகவே சூர்ப்பணகை சொல்கிறாள்.

தவறு செய்தவர்களுக்கு நாக்கை அறுக்கும் தண்டனை தரப்பட்டது என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.

9. மூக்கு, காது, முலைக் கண்கள் அறுப்பு


சூர்ப்பணகை, சீதையைத் தூக்கிச் செல்ல எத்தணித்த போது, இலட்சுமணன் பாய்ந்து அரக்கியின் கூந்தலை இடக்கையால் பற்றிக் கொண்டு, வாளை எடுத்து அவளுடைய மூக்கு, காதுகள், முலைக் கண்கள் ஆகியவற்றை அறுத்து எரிந்துவிட்டு தலைமயிரைப் பிடியினின்று விட்டான்.

"மூக்கும் காதும் வெம் முரண் முலைக் கண்களும் முறையால்
போக்கிய சினத்தோடும் புரி குழல் விட்டான்" (சூர்ப்பணகைப்படலம் 310)

முன்பு, போரிலே எதிர் வீரர்களின் மூக்குகளையும், பெண்களின் மூக்குகளையும் அரிதல் உண்டு. ஒருவர் ஓரிடத்தில் மானக்கேடு அடைந்துவரின் அவர் அங்கே மூக்கு அறுபட்டு வந்தார் என்று சொல்லும் வழக்கம் உண்டு. இதை ஆங்கிலத்தில் (Nose Cut) என்பர். உடல் உறுப்புகளுள் மூக்கு அழகு அளிக்கும் ஒரு சிறந்த உறுப்பாகும். இத்தகைய மூக்கறுபட்டு சூர்ப்பணகை மானக்கேடு அடைந்தாள்.

அயோமுகி, இலட்சுமணனை மயக்கித் தூக்கிச் சென்றபோது, அவன் தன் மெய்யுணர்வால், அவள் பிடியிலிருந்து விடுபட்டு அவளது மூக்கை அரிந்தான்.

"பேர்ந்தான் நெடுமாயை யினில்பிரியா
ஈர்ந்தான் அவள் நாசிபிடித்து இளையோன்" (அயோமுகிப்படலம் 1102)

இந்திரசித்தின் தேர்ப்பாதுகாப்பிற்காக உடன் சென்ற மாபெரும்புக்கன், புகைக்கண்ணன் இருவரும் அனுமனால் தாக்கப்பட்டு, போர்க்களத்திலிருந்து ஓடி வந்து விட்டார்கள். மறுபடியும் தங்களைப் போர்க்கு அனுப்பும்படி இராவணனிடம் கேட்ட போது, அருகிலிருந்த ஒற்றர்கள் இந்த இருவரும் போர்க்களத்திலிருந்து புறமுதுகிட்டு ஓடி வந்தவர்கள் என்று கூறினர். உடனே இராவணன் அவர்களிருவரின் மூக்கை அறுத்து விடுங்கள் என்று சொல்லி,

"நாற்றம் நுகர்ந்துஉயர் நாசியை நாமக்
கோல்தரு திண்பணனை கொட்டினிர் கொண்டு ஊர்
சாற்றுமின் அஞ்சினர் என்றே" (படைத்தலைவர் வதைப் படலம் 2249)

என்றும், ஊர்மக்கள் பார்வையிடும்படி அழைத்துச் செல்லுங்கள் என்று கட்டளையிட்டான்.

அங்கிருந்த மாலி, இராவணனைத் தடுக்கிறான். இராவணா, போர்க்களத்தில் ஒருநாள் தோற்றுத் திரும்பியவர், மறுபடியும் போர்முனை சென்று போர் புரிவதில்லையா? நீயும் தான் ஒருமுறை திரும்பி வந்தாய் அதனால் என்ன? இப்படிக் களம் புகுந்து திரும்பி வந்தவரை எல்லாம் மூக்கறுக்க முனைந்தால், இலங்கையில் பாதி மக்களுக்கு மேல் மூக்கு இருக்காது என்று இடித்துரைத்தான்.

இதிலிருந்து தவறிழைத்த போது, மூக்கறுக்கும் தண்டனையும், அந்தத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதையும் அறியமுடிகிறது.

செய்த தவறுக்குத் தண்டனையும், அதை ஊர் மக்களுக்கு அறிவித்து மேலும் அவர்களை அவமானப்படுத்தலும் நடைபெற்றுள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது.

அனுமன், இராவணனிடம் கூறுதல்

பிறர் எள்ளி நகைக்கும் செயலைத் துணிந்து செய்து கொண்டு இழிநிலையை எட்டுகிறவன் பழிக்க வாழ்ந்து கொண்டிருப்பவன் ஆண்மகனே அல்லன் என்றான் அனுமன். தன்னை விரும்பாத ஒரு பெண்ணைத், தன்னை அடியோடு வெறுக்கும் பெண்ணைத் தேடிச் சென்று, அவள் பலமுறை மறுத்து கூறிய பின்னும், கெஞ்சியும் கூத்தாடியும் அவள் இசைவைப் பெற்று விடலாம் என்பது வாழ்க்கையா? அத்தகைய மானமற்ற வாழ்வு வாழ்வதைக் காட்டிலும், முகத்தின் நடுவே காணப்படும் மூக்கை அறுத்துக் கொண்டு வாழ்வது கூட அழகாகத்தான் இருக்கும் என்று ஆத்திரத்துடன் அனுமன் பேசினான். மானமற்று வாழ்பவனுக்கு முகத்தில் மூக்கு இருக்க வேண்டிய அவசியமே இல்லை என கடுமை தோன்றக் கூறினான்.

"வெறுப்பு உண்டாக ஒருத்தியை வேண்டினால்
மறுப்பு உண்டாகிய பின் வாழ்கின்ற வாழ்வினின்
உறுப்பு உண்டாய் நடு ஓங்கிய நாசியை
அறுப்புண்டால் அது அழகு எனல் ஆகுமே" (பிணி வீட்டு படலம் 1145)


கும்பகர்ணனின் மூக்கு இழப்பு

போர்க்களத்தில் எல்லோரையும் வெற்றி பெற்று விட்டு, இறுதியாக சுக்ரீவனை வென்று தோளில் போட்டுக் கொண்டு நகர்ப்புறத்தை நோக்கி வரும் பொழுது இராமனின் அம்பு கும்பகர்ணனின் நெற்றியில் பட்டு நிலை தடுமாறுகின்றான். சுக்ரீவனை கீழேப் போட்ட பிறகு, தன்னிடம் உள்ள மூக்கும் செவியும் அறுபட்டிருப்பதை உணர்கிறான். அப்பொழுது, இராமன் வீடணனுடன் பிறந்தமையால் உன்னை உயிரோடு விடுகின்றேன் என்றதும், உறுப்பிழந்த முகத்தைக் காட்டி உலகில் உயிர் வாழ மாட்டேன் என்று கும்பகர்ணன் பதில் கூறுகின்றான். மேலும், இராமனுடன் போர் புரியும் போது, கை கால்களும், அறுபட்டுப் போனதும் கும்பகர்ணன், இராமனிடம் ஒரு விண்ணப்பம் செய்கிறான்.

"மூக்கிலா முகம் என்று முனிவர்களும், அமரர்களும்
நோக்குவார் நோக்காமை நுன் கணையால் என் கழுத்தை
நீக்குவாய் நீக்கியபின் நெடுந்தலையைக் கருங்கடலுள்
போக்குவாய் இது நின்னை வேண்டுகினுற கொருள் என்றான்" (கும்பகர்ணன் வதைப்படலம் 1570)

என் பகைவர்களான முனிவர்களும், தேவர்களும் மூக்கில்லாத முகம் என்று ஏளனத்தோடு என் முகத்தைப் பார்ப்பர். அவர்கள் அவ்வாறு பாராதபடி என் கழுத்தை அறுத்து கடலுக்குள் போட்டு மறைத்து விடுவாயாக என்று கேட்டுக்கொள்கிறான் கும்பகர்ணன்.

சுக்ரீவன், கும்பகர்ணனின் மூக்கையும் காதுகளையும் கடித்து அகற்றினான். மூக்கிலா முகம் என முனிவர்களும் பிறர் எள்ளி நகையாடுவர் என்ற தாழ்வு மனப்பான்மையால் ஒரு பெருவீரனிடம் ஏற்பட்டுவிட்ட பின்னடைவைப் பார்க்க முடிகிறது.

10. வாலில் தீ வைத்தல்

வீடணன் கூறியக் கருத்துக்களை ஏற்ற இராவணன், அனுமனைக் கொல்லவில்லை. இவ்வானரத்தின் வாலை அடியொடு அழியும்படி சுட்டெரித்து, அதன் பின், இவனை இந்நகரத்தைச் சுற்றி வரச் செய்து, பின்பு நம் எல்லைகளைக் கடந்து செல்ல வையுங்கள்' என்று கூறினான். (பிணிவீட்டுப்படலம் 1161)

இதிலிருந்து வாலில் தீ வைத்துத் தண்டனையளித்துள்ளனர் என்பதும், அதை அந்த ஊர்மக்களுக்குத் தெரிவித்து, தண்டனை பெற்றவர்களையும் அழைத்துச் சென்று காட்டி அவமானப்படுத்தியுள்ளனர் என்பதையும் அறியமுடிகிறது.

11. தலையைத் துண்டித்தல்

பெரும் தவறு செய்தவர்களுக்குத் தலையைத் துண்டிக்கும் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இந்திரசித் இறந்த செய்தியைத் தூதர்கள் வந்து இராவணனிடம் ,' இல்லை ஆயினன் உன் மகன் இன்று என்று தெரிவித்தார்கள். உடனே வீறிட்டு எழுந்த இராவணன் தன் கை வாளினால் அந்தத் தூதரைக் கொல்ல முனைந்தான். ஆனால், புத்திர சோகத்தினால் உடனே செயலற்றுக் கீழே விழுந்துவிட்டான். (இராவணன் சோகப்படலம்3130)

12. கொலைத் தண்டனையைத் தடுத்தல்

அனுமனைக் கட்டி இழுத்து வந்து, இராவணன் சபையில் இந்திரசித் நிறுத்தினான். இராவணன் அவனைக் கொலை செய்ய ஆணையிட, வீடணன் வந்து தூதர்களைக் கொல்லக்கூடாது என்று தடுக்கிறான்.

"இளையவன் தன்னைக் கொல்லாது இரு செவி மூக்கொடு இருந்து
விளைவு உரை என்று விட்டார் வீரர்ஆல்" (பிணிவீட்டுப்படலம் 1160)

அதாவது, இந்தத் தூதனைக் கொன்று விட்டால், இவன் இலங்கையில் கண்ணால் கண்ட நம் வலிமையை நம்முடைய எதிரிகளிடத்தில் எப்படிச் சொல்லமுடியும் என்று கூறினான். உடனே இராவணன் நல்லது உரைத்தான் என்றுகூறி கொலைத் தண்டனையை நிறைவேற்றாமல் விட்டுவிட்டான்.

13. அவமானப்படுத்துதல்

சுக்ரீவன், இராவணனுடன் சண்டையிட்டு மதிப்பு மிக்க மகுடத்திற்கு பங்கம் செய்து அவனை அவமானப்படுத்தினான் என்றும், இத்தகைய நிலையை அடையாதவனான இராவணன், நின்றவர்களான தேவர்கள் நமக்கு சுக்ரீவனால் உண்டான அவமானத்தைக் கண்டார் என்பது பற்றி நாணம் மிகுந்திட, அன்று அங்குள்ள மகளிர் பார்வை, ஆடவர் காண்கின்ற பார்வை போலக் காதலை ஏற்படுத்தாமல் இரக்க உயிர்ப் போகாமலேயே இறந்தவனைப் போன்றவனாகி தன் புகழ் இழிந்ததைப் போல, வானரப் படையை காண ஏறிய இடத்தில் இருந்து இறங்கிச் சென்றான்.

"என்றானு மினைய தன்மை எய்தாத இலங்கை வேந்தன்
நின்றார்கள் தேவர் கண்டார் என்பதுஓர் நாணம் நீள
அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆக
பொன்றாது பொன்றினான் தன் புகழ் என இழுந்து போனான்" (மகுட பங்கப் படலம் 886)


14. சாபம் அளித்தல்

சாபம் அளித்தலும் ஒருவித தண்டனையே. இராவணனுக்கு வேதவதி, நந்திதேவர், பிரம்மன் சாபமளித்தனர். அகலிகைக்கு கௌதம முனிவரும், விராதனுக்கு குபேரனும், வாலிக்கு மதங்க முனிவரும், சுயம்பிரபைக்கு இந்திரனும், இலங்காதேவிக்கு பிரம்மனும், தசரதனுக்கு சலபோசன முனிவரும், தாடகைக்கு அகத்திய முனிவரும், துர்வாசமுனிவர் இந்திரனுக்கும் சாபம் அளித்தனர்.

15. சிறை வைத்தல்

போரில் தோற்றவர்களைக் கைது செய்து, தன் நாட்டுச் சிறையில் அடைத்து வைப்பதும் ஒரு வகை தண்டனையே. இராவணன், சீதையைத் தூக்கி வந்து இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைத்தான்.

16. சிறையில் அடைத்தல்

இராவணனுக்கும், இந்திரனுக்கும் நடைபெற்ற போரில் மேகநாதன் இந்திரனை வென்று அடக்கி, சிறையில் அடைத்தான். இந்திரனை வென்றதால் இந்திரஜித் என்ற பெயரும் பெற்றான். பிரம்மதேவனே, இராவணனிடம் வேண்டிக் கொண்டதால், இந்திரனை விடுதலை செய்தான் இராவணன்.

17. கண்ணைக் குத்துதல்

தாண்டகவனத்தில் இராமனும், சீதையும் இருந்த போது, செயந்தன் காகம் வடிவெடுத்து வந்து சீதையின் மார்பைக் கொத்தினான். இதைக் கண்ட இராமன் தன் அருகே இருந்த ஒரு புல்லை எடுத்து அதையே பிரம்மாத்திரமாக எய்தான். புல்லே ஆயுதமாக மாறி, செயந்தனைத் துரத்த அவன் சிவலோகம், பிரம்மலோகம், திருமாலோகம் சென்று அவனைக் காப்பவர் இன்மையால் இராமனிடமே வந்து மண்டியிட்டான். பிரம்மாத்திரம் காகத்தின் கண்ணைக் குத்தியது. அன்று முதல் அவனுக்கு ஒரு கண் பார்வை இல்லாமல் போனது.

"காகம் முற்றும் ஓர் கண் இல ஆக்கிய
வேக வென்றியைத் தன் தலைமேல் கொள்வாள்" (காட்சிப்படலம் 356)

18. அம்பிட்டுக் கொலை செய்தல்

வாலிக்கும், சுக்ரீவனுக்கும் இடையே நடைபெற்றப் போரில் இராமன் சுக்ரீவனுக்கு ஆதரவாக, வாலிக்கு எதிராக அம்பிட்டுக் கொலை செய்தான்.

விசுவாமித்திரர் வேள்வியைக் காக்க இராமன் தாடகையை அம்பிட்டு வதம் செய்தான்.

19. பெண், ஆணை அவமானப்படுத்துதல்

இராமன், சீதையைத் தூக்கி வந்து அசோகவனத்தில் சிறை வைத்தான். அவளிடம் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி, அவள் காலில் விழுந்து மன்றாடினான். சீதை, ஒரு துரும்பைக் கிள்ளி எடுத்துப் போட்டு அதனிடம் பேசினாள். இராவணனிடம் அறிவுரைகளையும், அறவுரைகளையும் எடுத்துச் சொல்லியும் அவன் கேட்காததால், அவனை அவமானப்படுத்திப் பேசினாள். தவம் பல செய்தும், வரம் பல பெற்றவனையும் அவமானப்படுத்துதலும் ஒரு வகைத் தண்டனையேயாகும்.


20. ஆயுதங்களால் மழை பொழிதல்

பிரகலாதன், திருமாலை வணங்கியதால் கோபமடைந்த இரணியன், அவனுக்குத் தண்டனை வழங்கினான். வீசப்பட்டனவும், எய்யப்பட்டனவும், தாக்கும் இயல்பை உடையனவும், பிளக்கும் தன்மை கொண்டனவுமாகிய படைக்கலன்கள் எல்லாம் அவன் உடம்பில் பட்டன.

"எறிந்தன எய்தன எற்றின குத்தின
ஈர்த்தன படை யாவும்
முறித்து நுண் பொடியாயின முடிந்தன
முனிவு இலான் முழு மேனி" (இரணியன் வதைப் படலம் 212)

21. தீயில் தள்ளுதல்

பெரிய குழியில் விறகுக் கட்டைகளை மலை போல் அடுக்கி, குடங்களில் எண்ணையும், வெண்ணையும், நெய்யும் பெய்து தீயை வளர்த்து, பிரகலாதனை அதில் தள்ளினர்.

"குழியின் இந்தனம் அடிக்கினர் குன்று என
குடம்தொறும் கொணர்ந்து எண்ணெய்
இழுது நெய் சொரிந்திட்டனர் நெருப்பு
எழுந்திட்டது விசும் பெட்ட" (இரணியன் வதைப் படலம் 214)

22. பாம்பினை ஏவிக் கொத்தச் செய்தல்

அனந்தன் முதலிய எட்டு பாம்புகள் இரணியன் ஆணைப்படி, பற்கள் அழுந்த சினத்துடன் ஊன்றிக் கடித்தன.

"அனந்தனே முதலாகிய நாகங்கள்
அருள் என்கொல் என அன்னான்
நினைந்த மாத்திரத்து எய்தின நொய்தினில்
நெருப்பு உகு பகுவாயால்" (இரணியன் வதைப் படலம் 217)

23. யானையின் காலால் இடறச் செய்தல்

ஐராவதம் என்னும் யானையைக் கொண்டு பிரகலாதன் தலையை இடறச் செய்ய வைத்தனர்.

"மையல் காய் கரி முன்னுற வைத்தார்
பொய் அற்றானும் இது ஒன்று புகன்றான்" (இரணியன் வதைப் படலம் 221)

24. கடல் நீரிலேத் தள்ளிவிடச் செய்தல்

எவராலும் அசைக்க முடியாத, பெரிய மலையுடன் இறுக்கமாக கட்டிக் கொண்டு போய், கரை காண இயலாத கடல் நீரிலே தள்ளிவிடச் சொல்கிறான் இரணியன்.

"கட்டிக் கல்லொடு கால் விசையின் போய்
இட்டிட்டார் கடலின் நடு எந்தாய்" (இரணியன் வதைப் படலம் 221)

25. மன்னித்து விடுவதும் ஒருவகைத் தண்டனை

முதல் நாள் போரில் அனைத்துப் படைக்கலன்களையும் இழந்த இராவணனிடம், இராமன் ’இன்று போய் போருக்கு நாளை வா’ என்றான். முப்பத்து முக்கோடி வாழ்நாளையும், சங்கரன் கொடுத்த வாளையும், எவராலும் வெல்லப்பட மாட்டாய் என்ற தன்மையைப் பெற்ற அரக்கவீரன் தசகண்ட இராவணன். இதுவரை யாரிடமும் போரில் தோற்றதையே அறியாதவன். அவனிடம், இன்று போய் போருக்கு நாளை வா என்று உயிர்ப்பிச்சை அளித்ததும் ஒருவகை தண்டனையே ஆகும்.

"பூளை யாயின கண்டனை இன்று போய் போர்க்கு
நாளை வா என நல்கினான் நாகு இளங்கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்" (முதற் போர்புரி படலம் 1212)

26. மார்பைப் பிளத்தல்

இரணியனைத் திருமால் மாலைக் காலத்தில், அவன் வீட்டு வாயிலில் பற்றித் தன், தொடையின் மேல் கிடத்தி, தன் நகத்தினால் அவன் மார்பைப் பிளந்து அவனைக் கொன்று தேவர்களுடையத் துன்பத்தை நீக்கினான்.

"ஆயவன்தன்னை, மாயன் அந்தியின் அவன் பொன்கோவில்
வாயிலில் மணிக் கவான்மேல் வயிர வாள் உகிரின் வாயின்
மீயெழு குருதி பொங்க வெயில் விரி வயிர மார்பு
தீயெழப் பிளந்து தீக்கி தேவர்கள் இடுக்கண் தீர்த்தான்" (இரணியன் வதைப் படலம் 282)

27. புல்லை வாயில் கவ்வச் செய்தல்

அக்காலத்தில் போரில் தோற்றுவிட்டவர்களை வாயில் புல்லைக் கவ்விக் கொண்டு வரச்செய்வர். இப்படி ஒரு தண்டனை உண்டு. இந்திரசித் போர்க்களத்தில் அனுமனிடம் வீரவுரை பேசினான். அவனுக்கு அனுமன் அற்பனே எனக்கு வில்லெடுக்கத் தெரியாது. எனினும், எங்கள் படையில் வில் வீரர்கள் சிலர் இருக்கின்றார்கள். கல் எடுப்பது என்கிறாயே, அது போரில் இறந்தவர்களுக்குக் கல் நாட்டுவது என்னும் சடங்கு. நீ இன்று அல்லது நாளை இறக்கப் போகிறாய். அச்சடங்கைச் செய்ய உரியவனாகிய வீடணன் இருக்கின்றான். ஒளி பொருந்திய ஆயுதங்களையேந்திய தேவேந்திரன் முதலியோர் தோற்றோடிய இந்திராதியர் போல வாயில் புல்லைக் கௌவிக் கொள்பவர்கள் அல்லோம். வேறு சில வகைகளால் போர் புரிய உன் எதிரில் வந்துள்ளோம் என்று கூறினான்,

"எல் எடுத்த படை இந்திராதியர், உனக்கு
இடைந்து உயிர்கொடு ஏகுவார்
புல் எடுத்தவர்கள் அல்லம், வேறுசில
போர்எடுத்து எதிர் புகிந்துளோம்" (நாகபாசப்படலம் 2017)


28. தன்னைத் தானே தண்டித்தல்

இந்திரசித்தின் பிணத்தினைக் கண்டு, தம் கண்களைத் தோண்டிக் கொள்பவர்களும், கழுத்தை வெட்டிக் கொள்பவர்களும், தம் மார்புகளைப் புண்கள் உண்டாகப் பிளப்பவரும், ஈரல்களைப் போக்குபவர்களும், இராகங்கள் விளங்கும் தூய்மையான தங்கள் நாக்கையும், உயிரினையும் பிடிங்கிக் கொள்பவர்களும் ஆகிய இந்நகரில் வாழும் பெண்கள் இப்பெரும் துயர் பொறுக்க முடியாதவர்களாகி எண்ணிக்கையில் அதிகரித்தனர்.

"கண்களைச் சூல்கின்றாரும் கழுத்தினைத் தடிகின்றாரும்
புண்கொளத் திறந்து மார்பின் ஈருளைப் போக்குவாரும்" (இராவணன் சோகப் படலம் 3166)

முடிவுரை

சிறையில் அடைத்தல், அவமானப்படுத்துதல், மரண தண்டனை அளித்தல், கண்ணைக் குத்துதல், அம்பிட்டுக் கொலை செய்தல், தீயில் தள்ளுதல், பாம்பினை ஏவிக் கொத்தச் செய்தல், யானையின் காலால் இடறச் செய்தல், கடல் நீரிலேத் தள்ளிவிடச் செய்தல், மார்பைப் பிளத்தல், புல்லை வாயில் கவ்வச் செய்தல் என்பன போன்ற பல தண்டனைகள் கம்பர் காலத்தில் நடைமுறையில் இருந்தது என்பதை கம்பராமாயணத்தின் வழியாக நாம் அறிய முடிகிறது.

துணை நூற்பட்டியல்

1. இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம், சென்னை, 2016.

2. காலமும், கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம் புதுச்சேரி, சென்னை.

3. கம்பன் புதிய தேடல், அ. அ. ஞானசந்தரத்தரசு, தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

4. எல்லைகள் நீத்த இராமகாதை, பழ.கருப்பையா, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.

5. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன், வள்ளி பதிப்பகம், சென்னை, 2019.

6.கம்பன் காட்டும் வைணவப் பேருலகம், அமுதன்,லக்‌ஷண்யா பதிப்பகம், சென்னை, 2019.

7.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p314.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License