கம்பராமாயணத்தில் பூளைப்பூ
முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.
முன்னுரை
பூளைப்பூ என்பது இன்று காணப்படும் பூண்டுச் செடி வகை. சாம்பல் நிறம் பூசியத் தண்டுகளுடன், வெள்ளை நிறத்தில் பூக்கள் சடைசடையாய் நீண்டிருக்கும். பூளைப் பூவைப் பறித்துக் குவித்துப் பார்த்தால், சாம்பல் குவியல் போலவே இருக்கும். இது மென்மையானது. பூளைப்பூ காற்றில் சிதறியோடுவதை வீரர் முன், வீரமிலாப்படை சிதறியோடுவதற்கு உவமை சொல்வர். சங்க இலக்கியத்தில் காதலில் தோல்வியுற்றத் தலைவன் மடல் ஏறும் போது பயன்படுத்தும் பூக்களில், பூளைப் பூவும் ஒன்று. பூளைப் பூப் போல் நிலையில்லாதது இப்பிறவி என்று பக்தி இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. சிவபெருமானுக்கு உகந்த பூக்களில் ஒன்று. இந்தப் பூ மருத்துவ குணங்கள் நிறைந்தது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று வீட்டில் இந்தப் பூவை வைத்தல் மரபு. இப்பூளைப்பூக் குறித்துச் சங்க இலக்கியங்களில் கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி புராணங்களில் பெரியபுராணம், அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ், போன்ற இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளன. கம்பராமாயணத்தில் பூளைப் பூக் குறித்து கம்பர் கூறியுள்ளக் கருத்துக்களை ஆராய்வோம்.
வீட்டின் கூரையில் வைப்பது மரபு
பொங்கல் சமயத்தில் ’காப்புக் கட்டு நோன்பு’ அன்று வீடுகள், தொழுவம் எல்லா இடங்களிலும் வேப்பிலை, ஆவாரம்பூ இலை, மாவிலையுடனும் இணைத்து பூளைப்பூக் கட்டப்படுகிறது.
கலித்தொகையில் பூளைப்பூ
காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன் ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு, மேனியில் சாம்பலைப் பூசிக்கொண்டு யாரும் சூடாத பூளைப்பூ, ஆவிரம் பூ, எருக்கம் பூ ஆகிய பூக்களைச் சூடிக்கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து, காண்பவர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்லுதலாகும்.
"மணிப்பீலி சூட்டிய நூலொடு, மற்றை
பூளை, ஆவிரை, எருக்கொடு, பிணித்து, பாத்து" (கலித்தொகை 138-7)
மடல் ஏறுவேன் என்ற தலைவன் மடலேறி நின்ற போது, தன்னைச் சுற்றிச் சூழ்ந்தக் கண்டோருக்குக் கூறியது. என்னைக் கண்ட நீங்கள் எல்லாம் விரைவாக வந்து இவ்வூரிடத்தில் என்னை முன்னர் அறியாதவர் போலப் பார்க்கின்றார். யான் கொண்டது மடல் அன்று மா என்று உணருங்கள். தலையிலும், மார்பிலும் கிடைக்கின்ற இவை, பூ அல்ல .பொன்னின் விளக்கத்தை ஒளிக்கும் ஆவிரம் பூவால் கட்டிய மாலையும் உழிஞையோடு பூளைப் பூவையும் புனத்தின் கண் மயில் உதிர்த்த பீலி முதலியவற்றையும் நூலாலே, நாவுடன் கூடிய மணியுடன் சேர்த்துக் கட்டியவையும் பூ அல்ல. யான் விரும்பிக் கட்டியப் பூந்தாராகும் என்று உணருவீராக என்று கூறினான்.
"பூ வல்ல பூளை உழிஞையோடு யாத்த
புனவரை இட்ட வயங்குதார்ப் பீலி,
பிடியமை நூலொடு பெய்ம் மணி கட்டி,
அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரங் கண்ணி" (கலித்தொகை 140: 7)
அகநானூற்றில் பூளைப்பூ
அகநானூற்றிலும் பூளைப்பூக் குறித்த செய்தி கூறப்பட்டுள்ளது. பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லியது. அறத்தால் அராவப்பட்ட ஊசியின் திரண்ட நுனியைப் போன்ற வலிமை பொருந்திய பற்களைக் கொண்ட செந்நாய், அம்மான் கூட்டத்துள் புகுந்து தாக்கியது. அதனால், மான் கூட்டம் காற்றில் அகப்பட்ட பூளைப்பூவைப் போன்று ’ஒய்’ என்று ஒலி எழுப்பிக்கொண்டு ஓடியது. ஓடிய மான் கூட்டத்தை மீண்டும் அழைப்பதற்காக, ஞாயிறு மறையும் மாலை பொழுதில் கலைமான் தன் ஆண்மைக் குரல் எழுப்பும்.
"அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்
வளிமுனைப் பூளையின் ஒய் என்று அலறிய
கெடுமான் இனநிறை தழிய கலையே" (அகநானூறு 199)
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவர் தன் ஆற்றாமை மீதுரச் சொல்லியது. மழையினைப் பெய்து விட்டு உலக உயிர்களைப் பாதுகாப்புச் செய்திட்ட மேகம், கடையப் பட்ட பஞ்சினது துகள் பரந்து தோன்றினாற் போன்ற சிறிய மழைத்துளிகளையும், தூவுதலையும் விட்டொழித்தது. அகன்ற வகையில் இடத்து நீண்டு தண்டாக வளர்ந்த கரும்பினது திரண்ட காம்பினையுடைய வெண்ணிறப் பூக்கள், கோடைக் காலத்து பூக்கும் பூளைப் பூக்களைப் போல வாடைக்காற்றில் அசைந்தாடின.
"துவலை தூவல் கழிய அகல்வயல்
நீடு கழைக் கரும்பின் கணைக்கால் வான்பூக்
கோடைப் பூளையின் வாடையொடு துயல் வர" (அகநானூறு 217)
பொருள் வையின் போகா நின்ற தலைமகன் தன் நெஞ்சுக்குச் சொல்லியது. தெய்வம் வாழும் ஓமை மரங்களையுடைய அத்தகைய காட்டில், பற்றி இழுக்கின்ற முள் வேலியினையுடைய புலால் நாறும் முற்றத்தில் ஓவியத்தில் எழுதி வைத்தாற் போன்ற நெடிய உடலை உடைய பூளைப் பூவினைப் போன்ற மயிரினையுடைய குட்டிகள் திங்களைச் சுற்றியுள்ள விண்மீன்களைப் போலத் தன் தாயைச் சுற்றித் திரியும்.
"நீர்முள் வேலி புலவு நாறு முன்றில்
எழுதி யன்ன கொடிபடு வெருகின்
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை
மதிசூழ் மீனின் தாய் வழிபடூஉம்" (அகநானூறு 297)
புறநானூற்றில் பூளைப்பூ
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடிய பாடலில் பூளைப் பூவைக் குறித்துப் பாடியுள்ளார். கொம்பு அற்றுப்போன பெரிய ஆண்மான், புலியிடம் அகப்பட்டது. அதனால், தன் சிறிய மான் குட்டியைத் தழுவியபடி துள்ளும் நடையையுடைய மான் பிணை, பூளைச் செடி வளர்ந்த அச்சந்தரும் பாழிடத்தில் வேளையின் வெளிய பூவைத் தின்னும்.
"சிறு மறி தழீஇய தெறிநடை மடப்பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண் பூக்கறிக்கும்
ஆள் இல் அத்தம் ஆகிய காடே" (புறநானூறு23;19-22)
பெரும்பாணாற்றுப்படையில் பூளைப்பூ
கரகு - வரகு வைக்கோல், கரிய வைக்கோல் வேய்ந்த குடிசைகள், கார்காலத்து முகில்கள் பரந்து நிற்பது போலத் தோன்றுமாம். சிறு பூளைப்பூ வரகுச் சோற்றிற்கு உவமை
"நெடுங்குரல் பூளைப்பூவின் அன்ன
குறுந்தாள் வரகின் குறள்அவிழ்ச் சொன்றி
புகர்இணர் வேங்கை வீகண் டன்ன" (பெரும்பாணாற்றுப்படை 192-195)
நீண்ட கொத்தையுடைய பூளைப்பூவைக் குறுகிய தாளுடைய வரகின் சோற்றுக்கு உவமையாகக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் குறிப்பிடுகிறார்.
குறிஞ்சிப்பாட்டில் பூளைப்பூ
தோழியும், தலைவியும் 99 வகையான மலர்களைப் பறித்துப் பாறையில் குவிக்கும் போது பூளைப்பூவையும் பறித்துக் குவித்தனர் என்ற செய்தியைக் குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடுகின்றார்.
‘குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி’ (குறிஞ்சிப்பாட்டு 72)
பட்டினப்பாலையில் பூளைப்பூ
திருமாவளவன் போருக்குச் சென்றான். பகைவர்கள் பணிந்து தந்த தன்னுடைய அரச உரிமைகளால் பெற்ற நன்மைகளைக் கண்டு அவன் மகிழ்ச்சி அடையவில்லை. புதர்கள் படர்ந்த நெருங்கிய மலைகள் போலப் பல்வேறு பூளைப்பூக்களையும், உழிஞைப் பூக்களையும் சூடிய யானைகள் தன் அரசனால் போர் செய்வதற்கு வாய்ப்புப் பெற்றவர்களின் மதில்களை இடித்தன.
"பெருதல் வானத்துப் பருந்து உலாய் தடப்ப
நூறு இவர் தறுகல்போல, போர்வேட்டு
வேறு பல் பூளையொடு உழிஞை சூடி" (பட்டினப்பாலை 233-235)
சிலப்பதிகாரத்தில் பூளைப்பூ
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் கனாத்திறம் உரைத்தக் காதையில் பூளைப் பூ குறித்துக் கூறப்பட்டுள்ளது.
‘அறுகு சிறுபூளை நெல்லொடு தூயஉய்ச் சென்று” (கனாத்திறம் உரைத்த காதை 43)
என்று அறுகம்புல், சிறு பூளைப்பூ, நெல் ஆகியவற்றைத் தூவி சாத்தன்கோவிலில் வணங்கியது குறித்து அறியமுடிகிறது.
சீவக சிந்தாமணியில் பூளைப்பூ
சீவக சிந்தாமணியிலும் பூளைப்பூக் குறித்துக் கனகமாலையார் இலம்பகத்தில் கூறப்பட்டுள்ளது.
"வாளி யம்பன வாட்டங் கண்ணிதன்
றோளு மென்முலைப் பாரமுந் தொன்னல
நாளு நாளினு நைந்துநைந்துள்சுடப்
பூளை மெல்லணை மேற்புற ளுங்கொலோ" (சீவகசிந்தாமணி - கனகமாலையார் இலம்பகம்-1628)
அழகுடைய அம்பு போன்ற ஒளி பொருந்திய பெருங்கண்ணால் தன்னுடைய தோளும், மென்மையான முலை பாரமும் தன் பழமையான அழகு ஒவ்வொரு நாளும் கெட்டுக் கெட்டு, உள்ளம் விரும்ப பூளை மலர் முதலியவற்றால் சமைத்த மெல்லிய அணையின் மேல் புரண்டாள். முன்பு பூளை மலரால் செய்த அணையின் மேல் துயின்றாள் கனக மாலை என்று கூறப்பட்டுள்ளது.
பெரியபுராணத்தில் பூளைப்பூ
சேக்கிழார் பாடிய பெரியபுராணத்திலும் பூளைப்பூப் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. திருநாளைப்போவார் நாயன்மார் பிறவி நிலையில்லாதது என்பது குறித்துப் பாடும் பொழுது இவ்வாறு பாடியுள்ளார்.
"நாளை போவேன் என்று
நாட்கள் செலத் தரியாது
பூளைப் பூ வாம் பிறவிப்
பிணிப்பொழியப் போவாராய்" (திருநாளை போவார் சரித்திரம்- பெரிய புராணம் 22)
இவ்வாறு நாளைப் போவேன் என்றும், நாளும் நந்தனார் சொல்லி வர நாட்களும் கழிதலால் பூளைப் பூப் போன்ற நிலையில்லாத இப்பிறவி சூழல் ஒழியத் தூதருக்கு ஒரு படுவாராய் பூம் பாலைகள் நிறைந்த கமுக மரங்கள் செரிந்த சோலைகளை உடைய ஆதனூரினின்றும் புறப்பட்டு வாளை மீன்கள் துள்ளி எழுந்து காய்வதற்கு ஏற்ற, நல்ல நீர் வளம் உடைய வயல் சூழ்ந்த தில்லையின் பக்கத்தினை அடைவாராய்.
திருப்புகழில் பூளைப்பூ
திருப்புகழிலும் அருணகிரிநாதர் பூளைப்பூக் குறித்துப் பாடியுள்ளார். பொதுப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.
“பூளை யெருக்கு ...... மதிநாக
பூண ரளித்த ...... சிறியோனே
வேளை தனக்கு ...... சிதமாக
வேழ மழைத்த ...... பெருமாளே” (திருப்புகழ் 1294)
பூளைப் பூ, எருக்கு இலை, பிறை சந்திரன், பாம்பு சடையிலே அணிந்துள்ள சிவபெருமானே. பூளைப்பூ வெற்றியின் சின்னமாகக் கருதப்படுகிறது.
கம்பராமாயணத்தில் பூளைப்பூ
பூளைப்பூ இது மென்மையானது எந்த நேரத்திலும் அழியக் கூடியது. அதனால் இதனைப் பிறவிக்கு ஒப்பிட்டார். ‘மாருதம் அறைந்த பூளைப்பூ’ என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
பூளைப்பூ போர் நிகழ்ச்சிகட்கேயன்றி, நிறநிலையில் வெண்முகிற் கூட்டங்கட்கும், பனி மழைக்கும் நிறவுவமையாகின்றது.
1. மன்மதன்
விசுவாமித்திரர், இராமனிடம் இந்த இடத்திலிருந்துதான், மன்மதன் சிவபெருமான் மேல் மலர் அம்புகளை எய்தான். உடனே நெருப்பைப் பொழியும் நெற்றிக்கண்ணின் கோபத் தீ அவனைச் சுட்டது. அவனது பூளைப் பூப் போன்ற மென்மையான மேனி எரிந்தது. அன்று முதல் மன்மதன் ’அனங்கன்’ உடல் இல்லாதவன் ஆகிவிட்டான்.
"பொங்கு கோபம் சுட பூளை வீ அன்ன தன்
அங்கம் வெந்து அன்று தொட்டு அனங்கனே ஆயினான்"
(தாடகை வதைப்படலம் 340)
2. சீதையின் நிலை
பூளைப்பூவைப் போன்ற வெண்ணிறமான பனிமழையால் வாடிய, தண்டோடு கூடிய தாமரைப் பூக்கள் நெருங்கிய குளத்தையும், கொடிய பாம்பினால் விளங்கப்பட்ட சந்திரனையும் போல மலர் மஞ்சம் வாடிப் போகும்படி புதிய மலர்கள் பொருந்திய அம்மஞ்சனத்தைக் காதல் வெம்மையாகச் சீதை அடைந்தாள்.
"நாள் அறா நறு அமளி நண்ணினாள்
பூளை வீ புரை பனிப் புயற்குத் தேம்பிய
தாள தாமரை மலர் ததைந்த பொய்கையும்
வாள் அரா நீங்கிய மதியும் போலவே"
(மிதிலைக் காட்சிப் படலம் 531)
3. இராவணனுக்கும், சீதைக்கும் இடையே வாக்குவாதம்
இராவணனுக்கும், சீதைக்கும் இடையே வாக்குவாதம் வர, சினம் மேலிட்ட இராவணன் ‘நாளைக்கு உன் இராமன் வாடைக்காற்றில் அகப்பட்ட பூளைப் பூவைப் போல, என் இருபது தோள்களின் வாடையால் அழியப் போவதைக் காண்க’ என்றான்.
"தேறுதி நாளையே அவ்இருபது திண் தோள் வாடை
வீறிய பொழுது பூளைவீ என வீவன் அன்றே"
(சடாயு உயிர் நீத்த படலம் 861)
பூளைப் பூ என்பது பஞ்சு போன்ற அமைப்புடைய ஒரு மெல்லிய பூ. காற்று அடித்தாலே அது பறந்து போய்விடும். பழுத்த பஞ்சு, காயை வெடித்ததும் பஞ்சு காற்றிலேப் பறந்து ஓடிவிடும். அதனிலும் மெல்லியது பூளைப்பூ. இராவணனின் 20 தோள்களின் வாடை பட்டாலே, காற்று முன் பூளைப் பூ போல் இராமன் இறந்து விடுவான் என்கிறான்.
பஞ்சவடியில் சீதையிடம், இராவணன் தன்னுடைய ஆற்றல் குறித்துப் பெருமிதத்துடன் பேசுகிறான். பெண்ணே என்னுடைய 20 கைகளில் இருந்து வீசுவதால் வரும் காற்று, உன் இராமன் மீது பட்டால் போதும் அவன் பூளைப் பூப்போன்று விழுந்து விடுவான் என்று கூறுகிறார்.
4. வெண்ணிறமான மேகங்கள்
மேகக் கூட்டங்கள் தாம் பருகிய நீர் முழுவதும் அற்றுப்போகும்படி பெரிய மலைகளின் சிகரங்களில் எல்லாம் சென்று, மீண்டும் கடலில் இருந்து நீரை முகப்பதற்காகச் சென்றன. அவ்வாறு பூளைப் பூவைப் போல, வெண்ணிறமாகச் சென்ற மேகங்கள், இலங்கையில் இருந்து எழுந்த கொடும்புகை முற்றிலும் சுற்றிக்கொள்ள, செல்லும் வழி அறியாமல் வானிலேச் சுற்றித் திரிந்தன.
"மாளும் வண்ணம் மாமலை நெடுந்தலை தொறும் மயங்கிப்
பூளை வீய்ந்தன்ன போவன புணரியில் புனல் மீன்"
(இலங்கை எரியூட்டப்படலம் 1213)
5. இராமன், இராவணனிடம் பேசுதல்
முதல் நாள் போரில் இராவணன் தோற்றுவிட, இராமன் அவனுக்கு உயிர்ப் பிச்சை அளித்தான். மூன்று உலகங்களையும் ஆள்பவனே, உனக்குத் துணையாக அமைந்த படைகள் எல்லாம், காற்றில் மோதப்பட்ட பூளைப் பூப் போலானதைக் கண்டாய் அன்றோ. எனவே நீ இப்பொழுது போர்ப் புரிய இயலாதவன் ஆகின்றாய். ஆதலால், இன்று அரண்மனைக்குச் சென்று, நாளைக்குப் படையுடன் போருக்கு வருவாயாக என்று மிக்க இளமையுள்ள பாக்கு மரத்தின் மீது வாளை மீன் துள்ளிப் பாயும் நீர் வளம் கொண்ட கோசல நாட்டிற்கு உரியவனும், கருணையுடையவனுமான இராமன் கூறினான்.
"ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை யாயின கண்டனை இன்று போய் போர்க்கு
நாளை வா என நல்கினான் நாகு இளங்கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்"
(முதற் போர்புரி படலம் 1212)
’மாருத மறைந்த பூளையாயன கண்டனை" என்று தோற்ற பின் இராமன் வாயால் கேட்டும் நிலைக்கு உரியவனாகின்றான்.
இராவணன், சீதையிடம் தன் வீரத்தின் பெருமையைக் கூறி இராமனை இழிவுபடுத்த பூளைப் பூவைப் பயன்படுத்தினானோ, அதேப் பூளைப் பூவை வைத்தே இராமன், தோற்ற இராவணனிடம் கூறினான்.
6. வானரப்படையின் சினம்
வேல் ஏற்ற படலத்தில் ஆண் சிங்கம் போன்ற இராவணன் எதிர்த்துப் போர் செய்தபோது, அந்தப் போர்க்களத்தில் சேர்ந்திருந்த குரங்குப்படைகள், நாய்கள் போல இழிவடைந்து நின்றன என்பது ஏன்? நடு இரவிலே வந்து அடைந்த காளி போன்று மிகக் கொடூரமாக இராவணன் இருந்தான். வெற்றிடத்தில் காற்றின் முன் இருந்த இடம் தெரியாது ஒளித்தப் பூளைப்பூவைப் போன்றது அந்தப் போர் செய்கின்ற சினத்தைக் கொண்ட வானரப்படை.
"காளி போன்றனன் இராவணன் வெள்ளிடைக் கரந்த
பூளை போன்றது அப்பொரு சினத்து அரிகள் தன் புணரி"
(வேல் ஏற்ற படலம் 34 87)
7. வசிட்டன்
இராவண வதைக்குப்பின் இராமனுக்கு முடி சூட்டும் நிகழ்வு நடைபெறுகிறது. அதற்கு ஏற்ற நாளை வசிட்டன், இராமனிடம் குறிப்பிடும் இடத்தில் கம்பன் வசிட்டனை, சிவபெருமானாகக் காண்கிறான்.
"நாளை நீ மௌலி சூட நன்மை சால் பெருமை நல்நாள்
காளை நீ அதனுக்கு கடன்மை மீது இயற்றுக என்று
வேளையே பொடியதாக விழிக்கும் நீள் நுதலின் வெண்பூம்
பூளையே சூடுவானைப் பொருவும் மா முனிவன் போனான்"
(திருமுடி சூட்டுப் படலம் 4258)
காளை போன்ற இராமனிடம் நீ மகுடம் சூடப் பொருந்தும் நன்மை மிக்க சிறந்த நல்ல நாள் நாளைய ஆகும். நீ அதற்கு ஏற்ற காரியங்களை எல்லாம் நன்கு செய்வாயாக என்று, நெற்றிக்கண் பெற்ற மெல்லிய பூளைப் பூவை அணிந்த சிவபெருமானை ஒத்த வசிஷ்டன் சொல்லிச் சென்றதாகக் கம்பர் குறிப்பிடுகின்றார்.
முடிவுரை
பூளைப்பூ பஞ்சு போன்று மென்மையானது. காற்று அடித்தாலேப் பறந்து விடும். பக்தி இலக்கியங்களில் பூளைப்பூவைப் பிறவிக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார். கம்பரும் தம் இராமாயணத்தில் போர் நிகழ்ச்சிகளுக்கும், வெண்முகிற் கூட்டங்களுக்கும், பனி மழைக்கும், மன்மதனுக்கும் உவமையாகக் கூறுகின்றார். இப்பூளைப்பூக் குறித்து சங்க இலக்கியங்களில் கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி புராணங்களில் பெரியபுராணம், அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ்,கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளமுடிகிறது.
துணை நூற்பட்டியல்
1. இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம், சென்னை, 2016.
2. எல்லைகள் நீத்த இராமகாதை, பழ.கருப்பையா, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.
3. கம்பன் புதிய தேடல், அ. அ. ஞானசந்தரத்தரசு, தமிழ்ச்சோலைப்பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
4. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன்,வள்ளி பதிப்பகம், சென்னை, 2019.
5. கம்பன் காட்டும் வைணவப் பேருலகம், அமுதன், லக்ஷண்யா பதிப்பகம், சென்னை, 2019.
6. கருத்திருமன். பி. சி. கம்பர் கவியும் கருத்தும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2018.
7. காசி. ஆ, கம்பரும் திருத்தக்கதேவரும், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், சென்னை, 2010.
8. காலமும், கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம், புதுச்சேரி.
9. சக்தி நடராசன்.க, கம்பரின் கை வண்ணம், சரசுவதி பதிப்பகம், ஆர்க்காடு, 2017.
10. பழனிவேலு. தா, காலத்தை வென்ற கம்பன், பல்லவி பதிப்பகம், ஈரோடு. 2021.
11. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.