இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

நக்கண்ணையாரின் காதலும் மீளாத் துயரும்

முனைவர் கு. சு. செந்தில்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.


முன்னுரை

சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் இருந்ததாக அறிஞர்கள் கூறுவர். அவர்கள் கல்வியறிவில் சிறந்திருந்தனர். அரசனும் மதிக்கும் பண்பினராக உயர்ந்திருந்தனர். யாரையும் கண்டு அஞ்சாமல் துணிந்துரைக்கிற ஆற்றலும், சுயமாக முடிவெடுக்கிற உரிமையும் பெற்றிருந்தனர். ஆண்பாற் புலவர்களுக்கு நிகராகச் செய்யுள் புனைவதில் ஆற்றல் கொண்டிருந்தனர். அவர்களின் அகப்பாடல்கள், தலைவனின் பிரிவால் தலைவிக்கு உண்டாகும் மனத்துயரினையும் காம மேலீட்டினையும் விவரிக்கின்றன. புறப்பாடல்கள், பெண்களின் வீரம், அரசர்களுக்கு அறிவுரை சொல்லும் பாங்கு, நாட்டின் நலனுக்காகத் தூது செல்லும் முறைமை முதலானவற்றை எடுத்துரைக்கின்றன. அவர்களின் பாடல்கள் வழியாகச் சங்ககாலச் சமூகத்தையும், பெண்டிர் நிலையையும் அறிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில், நக்கண்ணையார் எனும் பெண்பாற் புலவரின் உலகியல் அறிவையும் சோழன் மீது காதல் கொண்டு புலம்பும் அவரின் தனிமை இரக்கத்தையும் புலப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.

கைக்கிளை - இலக்கணம்

தமிழின் முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியம், எழுத்து, சொல், பொருள் எனும் மூன்றுக்கும் இலக்கணம் வகுத்திருக்கிறது. அதில் பொருளதிகாரத்தின் முதல் இயலாகிய அகத்திணையியலில் கைக்கிளை குறித்து,

“காமம் சாலா இளமை யோள்வயின்
ஏமம் சாலா இடும்பை எய்தி
நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே” (தொல். பொருள். அகத். நூ. 53)

என்று பேசப்பட்டிருக்கிறது. காம உணர்வு பெறாத இளையோள் மீது காதல் கொண்ட ஒருவன், மிகுந்த துன்பத்தினை அடைந்து நன்மை, தீமை எனும் இரு திறத்தால் தனக்கும் அவளுக்கும் ஒத்தனவற்றைச் சொல்லி, சொல்லெதிர் பெறாமல் தமக்குள்ளாகவேs சொல்லி இன்புறுவது கைக்கிளைக்குரிய இலக்கணமாகும். இதனை ‘ஆண்பாற் கைக்கிளை’ என்று கூறலாம்.


தொல்காப்பியர், ஆண் ஒருவன் ஒருதலையாகக் காதல் கொண்டு புலம்புவதற்கு இவ்வளவு விரிவாக இலக்கணம் வகுத்திருக்கிறார். ஆனால், ஒரு பெண், ஆண் மீது கொண்டிருக்கிற காமத்தால் புலம்புவதற்கு இலக்கணம் வகுத்தாரில்லை. புறத்திணையியலில் கைக்கிளை எனும் அகத்திணைக்குப் புறனாகப் பாடாண் திணையைப் பேசியிருக்கிறார். அங்குப் பேசப்பட்டிருக்கிற காம வகை அகத்திணையியல் கூறுகின்ற கைக்கிளையிலிருந்து வேறுபட்ட ஒன்றாகவே அமைந்திருக்கிறது.

தமிழ்க்காதல் எனும் நூலில் கைக்கிளை குறித்து மிக விரிவாக ஆராய்ந்த வ. சுப. மாணிக்கனார்,

“ஆணாயினும் பெண்ணாயினும் விழைந்தாரைப் பெறுகை அரிது என்று அறுத்தெறிந்த பின்னுங்கூடக் காதல் ஒழியார், கவர்ச்சி நீங்கார். காமம் விளைந்த பருவத்தாரைக் காதலித்தும் அக்காதல் அவரால் ஏற்கப் பெறாவிட்டால், ஏக்கத்திற்கு எல்லையுளதோ? உள்ளம் அவமானத்தைத் தாங்க மாட்டுமா?” (வ.சுப. மாணிக்கம், 2012: 189)

என்று விளக்கம் வழங்கியிருக்கிறார்.

இதன் வழியாக, ஆண் எப்படி ஒரு பெண் மீது ஒருதலையாகக் காதல் கொண்டு புலம்புகிறானோ, அவ்வாறு பெண்ணும் புலம்புவாள் என்பதை அறியமுடிகிறது. பெண் புலம்புவதற்குப் ‘பெண்பாற் கைக்கிளை’ என்று பெயர்.


நக்கண்ணையின் ஒருதலைக் காதல்

சங்கப் பெண்பாற் புலவர்களில் நக்கண்ணையார், அகம் - 252, புறம் - 83, 84, 85, நற்றிணை – 19, 87 ஆகிய ஆறு பாடல்களைப் பாடியிருக்கிறார். நற்றிணை, அகநானூறு ஆகிய நூல்களில் காணப்படும் அவரது பாடல்கள் அகப்பொருண்மையை மீறாமல் அமைந்திருக்கின்றன. ஆனால், புறநானூற்றில் உள்ள அவரது மூன்று பாடல்களும் சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி மீது காதல் கொண்டதை உரைப்பதாகவும், அவனது வீரத்தினைப் பறை சாற்றுவதாகவும், காம மேலீட்டினால் புலம்புவதாகவும் அமைந்திருக்கின்றன. ஆதலால், தொகுத்தோர் அதனைக் கைக்கிளை பொருண்மையினவாகக் கொண்டு புறத்தில் சேர்த்துள்ளனர்.

வ.சுப. மாணிக்கனார், நக்கண்ணையார் ஆமூர் மல்லனைக் காதலித்தாகவும், அவரது காதல் கைக்கிளையாக முடிந்ததாகவும் பின்வருமாறு சுட்டுகிறார்.

"சங்கப் புலமகள் நக்கண்ணையார் ஆமூர் மல்லன்மேற் கொண்ட காதல் கைக்கிளைக் காமமாய் முடிந்தது. இவை பற்றிய செய்யுட்கள் அகத்திணையாகாது புறத்திணையாயின் (புறம். 83, 84, 85) பருவம் அடைந்த நக்கண்ணையார் ஒத்த இளைஞனான மல்லனைக் காதலித்தும், இருபாற்கும் பருவத் தகுதியிருந்தும், உள்ளப் புணர்ப்பு இல்லை காண்" (வ. சுப. மாணிக்கம், 2012: 189)

புலவர் நக்கண்ணையார் ஆமூர் மல்லனைக் காதலித்தார் என்பது பிழைபடக் கூறப்பட்டதாகும். இதற்குப் புறநானூற்றின் (83, 84, 85) ஆகியப் பாடல்களேச் சான்றாகும்.

சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி காலில் வீரக்கழலை அணிந்தவன். கருமை நிறம் கொண்ட தாடியினை உடையவன். காளையைப் போன்றவன். அவன்பொருட்டு என் கைவளை கழல்வதால் தாய்க்கு அஞ்சுகிறேன். வீரம் மிகுந்த வலிமையான அவனது தோளைத் தழுவுவதற்கு அவையில் உள்ளோரைக் கண்டு நாணுகிறேன். எப்போதும் ஒரே தன்மையில் இல்லாமல் இருவேறுபட்ட தன்மையில் உள்ள, மயக்கம் மிகுந்த இந்த ஊர் என்னைப் போல அஞ்சி நடுக்கம் கொள்க எனப் புறம் 83ஆவது பாடலில் பழித்துப் பேசுகிறார் நக்கண்ணையார்.

ஒத்த அன்பு இல்லாமல், ஒருதலையாகச் சோழன் மீது காதல் கொண்டிருக்கிறார் நக்கண்ணையார். அவனது தோற்றமும் வீரமும் இவரது மனத்தை ஆட்கொண்டிருக்கிறது. அதன் காரணமாகத் தம் உடல் இளைப்பதும், கைவளை கழல்வதும் கண்டு தாய்க்கு அஞ்சுகிறார். அவையோரைக் கண்டு நாணுகிறார். பெண்மைக்கே உரிய அச்சமும் நாணமும் இவரிடம் மிகுந்து காணப்பட்டிருக்கிறது. தாயும் - ஊரும் தன்னை அவனோடு சேர்த்து வைக்கும் என எண்ணியிருக்கிறார். அவ்வெண்ணம் ஈடேறாததால் இவ்வாறு ஆற்றாமையால் பழித்துரைக்கிறார்.

தொல்காப்பியப் புறத்திணையியலில் வரும்,

“காமப் பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்” (தொல். பொருள். புறத். நூ. 83)

எனும் நூற்பாவுக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர்,

“அடிபுனை தொடுகழன்… மைய லூரே: இது பெருங்கோழி நாய்கன் மகளொருத்தி, ஒத்த அன்பினாற் காமமுறாத வழியும் குணச்சிறப்பின்றித் தானே காமமுற்றுக் கூறியது இதனின் அடக்குக” (தொல். புறத். சூ. 28 ந) (உ.வே. சாமிநாதையர், 2014: 225)

என்று கூறியிருக்கிறார்.

புலவர் நக்கண்ணையார் சோழனை ஒருதலையாகக் காதலித்தார் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

உயர்ந்தோர் கைக்கிளை

அடியோர், வினைவலர் எனும் இருவரும் கைக்கிளை, பெருந்திணைக்கு உரியர் எனத் தொல்காப்பியர் கூறியதாக உரைகாரர்கள் விளக்கம் தருவர். நம்பியகப்பொருள் ஆசிரியர் நாற்கவிராச நம்பி,

“அதுவே
இறைமையில் லோர்க்கும் இழிகுலத் தோர்க்கும்
முறைமையின் உரித்தே முன்னுங் காலை” (நம்பி. 242)

எனும் நூற்பாவின்வழித் தலைமைப்பாடு இல்லாதவர்க்கும் இழிந்த குலத்தோர்க்கும் கைக்கிளை உரியது என்கிறார். ஆண்பாற் கைக்கிளைக்கு இவர் தந்த இந்த விளக்கம் பெண்பாற் கைக்கிளைக்கும் பொருந்தும்.

புறநானூற்றுப் பாடலைப் பாடிய நக்கண்ணையார் ‘நாய்கன்’ எனும் வணிக மரபைச் சார்ந்தவர். அரசர்களுக்குப் பெண் கொடுக்கும் மரபு இவர்களுடையது. ஆகவே, தொல்காப்பிய உரையாசிரியர்கள் கூறுகின்ற அடியோர் என்று இவரைச் சுட்டமுடியாது. வினையை முடிக்கின்ற ஆற்றல் பெற்றவர் என்கிற பொருளில் வரும் வினைவலர் மரபைச் சார்ந்தவர் என்று வேண்டுமானால் கொள்ளலாம். ஆனால், நம்பியகப்பொருள் ஆசிரியர் கூறுகிற தலைமைப்பாடு இல்லாதவராகவோ அல்லது இழிந்த குலத்தைச் சார்ந்தவராகவோ இவரைக் கருத இயலாது.

“ஏவல் மரபின் ஏனோரும் உரியர்
ஆகிய நிலைமை அவரும் அன்னர்” (தொல். பொருள். அகத். நூ. 26)

எனும் நூற்பாவுக்கு உரையெழுதிய இளம்பூரணர் குறிஞ்சிக் கலி 26ஆவது பாடலைக்காட்டி இது ‘உயர்ந்தோர்மாட்டு வந்த கைக்கிளை’ என விளக்கம் தந்துள்ளார். ஆகவே, கைக்கிளை ஒழுக்கம் இழிந்தோர்க்கு மட்டும் உரியதன்று. உயர்ந்தோருக்கும் உரியது என்பதை அறியமுடிகிறது.


நாணத்தை அழித்த காமம்

புறநானூற்றில், உடல் மெலிந்து கைவளை கழல்வதைக் கண்டு அன்னைக்கு அஞ்சுவதாகப் பாடிய நக்கண்ணையார், அகம் 252 வது பாடலில் அன்னையின் காவல் மிகுதியைப் புலப்படுத்துகிறார். நள்ளிரவில் கனமழை பெய்கிறது. அதனால் குளம் நிரம்பி அலையெழும்பிக் கரையை மோதுகிறது. அக்குளத்தின் சிறிய கரை உடையாமல் இரவெல்லாம் காவல் காக்கும் காவலன் போல நள்ளிரவிலும் அன்னை உறங்காமல் காவல் காக்கிறாள். இனி, இரவுப் பொழுதிலும் சந்திப்பது அரிது எனக் கூறி வரைந்துகொள்ள அறிவுறுத்துகிறாள். இப்பாடலில் வரும்,

“எறிதிரைத் திவலை தூஉஞ் சிறுகோட்டுப்
பெருங்குளங் காவலன் போல” (அகம். 252: 12-13)

எனும் அடிகள் குறித்து ந.மு. வேங்கடசாமி நாட்டார், “தலைவியானவள் காமவெள்ளம் மிகுதலால் தனது நாண் நுணுகி நின்ற நிலையைக் குறித்தாளாம். மிகுபெயல், உப்புச்சிறை நில்லா வெள்ளம் போல, நாணுவரை நில்லாக் காமம் நண்ணி’ என்பது ஈண்டு அறியற்பாலது” (ந.மு.வேங்கடசாமி நாட்டார், 2007: 310) என்று விளக்கம் தந்துள்ளார்.

தலைவியின் காம மிகுதியைப் பேசுவதுபோல, நக்கண்ணையார் சோழன் மீது தாம் கொண்டிருந்த காதலையும், நாணத்தை அழித்த காமத்தையும் இந்தப் பாடலில் இயம்பியிருக்கிறார். பெண்மை - நாணத்தை இழப்பது அரிது. ஆனால், இவர் நாணத்தையும் இழந்து புலம்பியிருப்பதை அறியமுடிகிறது.

நிறைவேறாக் கனவு

தலைவன் வரைவிடை வைத்துப் பொருளீட்டப் பிரியக் கருதுகிறான். ஆற்றாத தலைவி கனாக்கண்டு தோழிக்கு உரைப்பதாக நற்றிணை 87ஆவது பாடலை அமைத்திருக்கிறார்.

நெய்தல் நிலத்துப் புன்னையின் அரும்புகள் மலர்ந்து அதன் தாதுகள் கடற்கரையில் மேயும் இப்பிகள் மேல் விழுகின்றன. பரதவரின் மகிழ்ச்சியையும் சோலையையும் நான் நினைத்துப் பகற்கனவு கண்டேன். ஊரில் உள்ள மாமரத்தில் கூர்மையான பற்களைக் கொண்ட வெளவால் உயர்ந்த கிளையைப் பற்றிக்கொண்டு தூங்குகிறது. அப்பொழுது சோழர் குடியில் பிறந்த அழிசி என்பவனது காவல் காட்டில் உள்ள நெல்லிக்கனியின் இனிய புளிச் சுவையைத் தான் பெற்றதாகக் கனவு கண்டு விழித்தது போல நானும் அவரோடு முயங்கியதாகக் கனவு கண்டேன். விழித்தவுடன் அக்கனவு ஒழிந்தது என்று பாடுகிறார் நக்கண்ணையார்.

சோழனை அவன் அறியாமலேயே காதலித்து வந்த நக்கண்ணையார் தலைவியின் துயரைப் பேசுவதுபோலத் தம் துயரை இப்பாடலில் பேசுகிறார். சோழனை மணந்து கொண்டு முயங்க வேண்டும் எனும் அவரது கனவு நிறைவேறாக் கனவாகவே ஆகியிருப்பதை அவரே இப்பாடலில் உணர்த்தியிருக்கிறார்.

சோழனின் வீரம்

புலவர் நக்கண்ணையார் புறநானூற்றுப் பாடல்களில் கோப்பெருநற்கிள்ளியின் வீரத்தைப் பேசியிருக்கிறார். நற்றிணை 87ஆவது பாடலில் எல்லாப் போரிலும் வெற்றி பெறுகிற ஆர்க்காட்டில் உள்ள அழிசி என்னும் சோழனின் காவல் சிறப்பை உணர்த்தியிருக்கிறார். சோழர் குலப் பெருமையைப் பேசும் ஒரு புலவராகவே இவர் திகழ்ந்திருப்பதை இது காட்டுகிறது.

சோழன், போர்வைக் கோப்பெருநற்கிள்ளி தம் தந்தையாகிய உறையூர் வீரைவேண்மான் வெளியன் தித்தனைப் பகைத்து, நாட்டைவிட்டு வெளியேறியதாகப் புறம் 80ஆவது பாடலில் சாத்தந்தையார் கூறுகிறார். நக்கண்ணையாரும் இதனைத் தம் பாடல்களில் சுட்டுகிறார். உறையூரை விட்டு நீங்கி ஆமூர் வந்த கோப்பெருநற்கிள்ளி வறுமையின் காரணமாகப் புல் அரிசியை உண்கின்றான். ஆனாலும், தோள் இளைக்காமல் வலிமையுடையவனாகவே திகழ்கிறான். சிறைப்புறமாக இருந்து அவனைக் கண்ட புலவர் நக்கண்ணையார் அவனது தோளைத் தழுவ முடியாத ஏக்கத்தினால் வாடுகிறார். ஆதலால், அவர்மேனியில் பசலை படர்கிறது.

என் தலைவன் சோழனின் ஊர் இதுவல்ல; நாடும் இதுவல்ல. இது ஆமூர்; இவ்வூர் மல்லனுக்கு உரியது. இருவருக்கும் பகை தோன்றுகிறது. மற்போர் செய்யும் களத்திற்கு வருகின்றனர். அங்குள்ளோர் சிலர் என் தலைவன் சோழனுக்கே வெற்றி! என்கின்றனர். வேறு சிலர் சோழனுக்கு வெற்றி இல்லை என்கின்றனர். இருவகைப்பட்ட இச்சொற்களும் நல்லனவாக இருக்கின்றன என்கிறார். மேலும், சிலம்பு ஒலிக்க ஓடிவந்து முரசம் போன்று பருத்த பனையின் அருகில் நின்று இருவருக்கும் நிகழும் மற்போரினைக் கண்டேன். அக்களத்திற்குத் தற்பெருமை பேசி வந்த வீரர்களுக்கு உப்பு வணிகர் அஞ்சும் மேடுபள்ளம் போன்ற வழியை ஒத்தவன் என் தலைவன். அவன் போரில் வெற்றி பெற்றதைக் கண்டேன் எனப் பாடுகிறார். அதேபோல், சோழன் - மல்லனை எவ்வாறு வீழ்த்தி வெற்றி பெற்றான் என்பதைப் புறம் 80ஆவது பாடலில் புலவர் சாத்தந்தையாரும் விவரித்திருக்கிறார்.

கோப்பெருநற்கிள்ளி தம் ஊரைவிட்டு வெளியேறிய பொழுது புலவர் நக்கண்ணையாரும் வெளியேறியதாகத் தெரிகிறது. சோழன் புல்லரிசியை உண்டும் போர்செய்யும் ஆற்றல் பெற்றவனாக இருக்கிறான். ஆனால், நான் சிறைப்புறமாக இருந்தும் பசலையை வெல்ல முடியாமல் தவிப்பதாகத் தம் வேட்கை மிகுதியினை இப்பாடலில் பதிவிட்டிருக்கிறார்.


நக்கண்ணையின் உலகியல் அறிவு

நக்கண்ணையார் குறிஞ்சி, நெய்தல் திணைப் பாடல்களைப் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்திருக்கிறார். உலகியல் அறிவு நிரம்பப் பெற்றவராகவும் விளங்கியிருக்கிறார் என்பதை அவரது பாடல்கள் காட்டுகின்றன.

அகம் 252 வது பாடலில் இரவுக்குறியிடம் வரும் தலைவனுக்கு வழியில் உண்டாகும் ஏதங்களைப் பற்றி உரைக்கிறார். வேட்டைக்குச் செல்லும் புலியானது தம் இரையை வலது பக்கத்தில் மட்டுமே வீழ்த்தி உண்ணும். மாறாக இடது பக்கத்தில் வீழ்ந்தால் அதனை உண்ணாது புறக்கணிக்கும். அப்படிப்பட்ட வீரம் மிகுந்த புலியே அஞ்சும்படியாக யாளி எனும் விலங்கு அதன்மீது பாய்கிறது. மேலும், யானையின் மீதும் பாய்ந்து அதன் தந்தத்தைப் பறிக்கிறது என்று குறிஞ்சி நிலத்து மலைச்சாரலின் இயல்பினைப் பேசுகிறார். இதன் வழியாக, குறிஞ்சி நிலத்தின் தன்மைகளையும் அங்கு வாழும் விலங்குகளின் இயல்புகளையும் மிக நன்றாக உணர்ந்த ஒரு புலவராக இவர் திகழ்ந்திருப்பதை அறிய முடிகிறது.

நற்றிணை 19 வது பாடலில் கடற்கரையில் உள்ள தாழையை மிக அழகாக உவமித்துக் காட்டியிருக்கிறார். இறாமீனின் புறத்தைப் போன்ற அடிப்பகுதியையும் சுறாமீனின் முகத்தில் நீண்டுள்ள கொம்புபோன்ற முட்களையும் கொண்டதாகத் தாழை விளங்குகிறது. அதன் அரும்பு யானையின் தந்தம் போன்று முதிர்ந்துள்ளது. பெண்மான் தலைசாய்த்து நிற்பதுபோல அது மலர்ந்துள்ளது எனச் சுட்டுகிறார்.

பரதவர்களின் இயல்புகளையும் நெய்தல் நிலத்துக் கருப்பொருள்களையும் தம் பாடல்களில் பதிவிட்டிருக்கிறார். ‘பெண் அறிவு பெரும் பேதமைத்து’ என்று பேசிய சங்ககாலத்தில் கூர்த்த அறிவு பெற்றவராக இவர் விளங்கியிருப்பதை இவரது பாடல்கள் உணர்த்துகின்றன.

தொகுப்புரை

* புலவர் நக்கண்ணையார், கூர்த்த மதி நுட்பம் உடையவராகவும் உலகியல் அறிவு நிரம்பப் பெற்றவராகவும் இருந்திருக்கிறார்.

* குறிஞ்சி, நெய்தல் நிலங்களின் இயல்புகளையும் தன்மைகளையும் மிக நன்றாக உணர்ந்து உணர்த்த முற்பட்டிருக்கிறார்.

* சோழர் குல அரசர்களின் வீரத்தையும் பறைசாற்றியிருக்கிறார்.

* சோழன் கோப்பெருநற்கிள்ளியின் தோற்றமும் வீரமும் புலவர் நக்கண்ணையாரின் மனத்தை ஆட்கொண்டிருக்கிறது. காதல் உணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து, காம உணர்வு மிகுதியாகி அவளைப் புலம்ப வைத்திருக்கிறது.

* பெண்மைக்கே உரிய அச்சமும், நாணமும் மடனும் அவரிடம் இருந்தாலும் கரைகாணாக் காமத்தால் அது உடைத்தெறியப் பட்டிருக்கிறது. தனிமைத் துயரும் நிறைவேறா ஆசையும் புலவரின் நலனையும் இழக்கச் செய்திருக்கிறது.

* வெளவால் கண்ட கனவோடு தம் கனவை ஒப்பிட்டு கனவிலும்கூட அவனைச் சேரமுடியவில்லையே எனப் புலம்ப வைத்திருக்கிறது.

* புலவர் தம் காதலைச் சென்று உரைத்தாரா என்பது பற்றி அறிய இயலவில்லை.

* அவர் ஒருதலையாகக் காதலித்து அவனிடம் சென்று உரைக்காமைக்கு, தாம் அரச குலத்தைச் சார்ந்தவர் இல்லை எனக் கருதியிருப்பாரோ என்று தோன்றுகிறது.

* எவ்வாறாயினும் ஒரு பெண்பாற் புலவரின் துயரம் இன்றளவும் அவரது பாடல்கள் வழியாக ஒலித்துக் கொண்டே இருப்பதை அறியமுடிகிறது.


துணைநின்ற நூல்கள்

1. கோவிந்தன். கா, பெண்பாற் புலவர்கள், கழக வெளியீடு, சென்னை, மறுபதிப்பு: 1956.

2. சண்முகம் பிள்ளை. மு, (ப.ஆ), தொல்காப்பியம் இளம்பூரணம், முல்லை நிலையம், சென்னை, மறுபதிப்பு: 2004.

3. சாமிநாதையர். உ.வே (ப.ஆ), புறநானூறு மூலமும் உரையும், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை, 8ஆம் பதிப்பு: 2014.

4. சுந்தரமூர்த்தி. கு., தொல்காப்பியம் பொருளதிகாரம், நச்சினார்க்கினியர் உரை (அகத்திணையியல், புறத்திணையியல்), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், முதற்பதிப்பு: 1986.

5. நாராயணசாமி ஐயர். அ., பின்னத்தூர், நற்றிணை நானூறு மூலமும் உரையும், கழக வெளியீடு, மறுபதிப்பு: 2017.

6. மாணிக்கனார். வ. சுப., தமிழ்க்காதல், சாரதா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு: 2007.

7. வேங்கடசாமி நாட்டார். ந.மு, (ப.ஆ), அகநானூறு களிற்றியானை நிரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, மறுபதிப்பு: 2009.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p322.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License