கம்பராமாயணத்தில் புஷ்பக விமானம் என்பது நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்கின்ற விமானம் போன்ற வாகனமாகும். தெய்வத்தட்சனாகிய விஸ்வகர்மாவினால் செய்யப்பட்டு, பிரம்மாவால் அளகாபுரி அரசர் குபேரனுக்கு வழங்கப்பட்டது. குபேரனிடமிருந்து இலங்காபுரி அரசர் இராவணன் அதை அபகரித்தான். பஞ்சவடியில் இருந்த சீதையை, இராவணன் மண்ணோடு பெயர்த்து எடுத்து, புஷ்பக விமானத்தில் தூக்கி வந்து அசோகவனத்தில் சிறை வைத்தான். இராம-இராவண யுத்தம் முடிந்த பிறகு, அயோத்திக்கு அனைவரும் சென்று திரும்பிய பின், அந்தப் புஷ்பக விமானத்தை இராமன் குபேரனிடமே ஒப்படைத்தான். கம்பராமாயணத்தில் புஷ்பக விமானம் குறித்த அறிவியல் செய்திகளை இக்கட்டுரையில் ஆராய்வோம்.
புறநானூற்றில் விமானிகள் இல்லாத விமானங்களை அக்கால மக்கள் விண்ணில் செலுத்தினர் என்பது பற்றி குறிக்கப்பட்டுள்ளது.
“புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்ப தம் செய்வினை முடித்து என”
(புறநானூறு 27)
சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, பெருங்கதை, சிவஞானபோதம், மகாபாரதம் மற்றும் தேவாரத்திலும் விமானம் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
கம்பராமாயணத்தில் புஷ்பகவிமானம்
பர்ணசாலையில் இருந்த சீதையை, இராவணன் (பிரம்மன் முன்னிட்ட சாபத்தை மனதில் நினைத்து) அவளைத் தொடாமல், சீதை இருந்த இடத்தின் கீழேயும், பக்கத்திலேயும் ஒரு யோசனை அளவு பெயர்த்தெடுத்தான். தூக்கிச் சென்று, தேரின் மேல் வைத்துக்கொண்டு தேரைச் செலுத்துக என்று தன் தேர்ப்பாகனிடம் கூறுகிறான்.
“விடு தேர் என வெங்கனல் வெந்து அழியும்
கொடிபோல் புரள்வாள் குலைவாள் அயர்வாள்”
(சடாயு உயிர் நீத்த படலம் 876)
சடாயுவுக்கும், இராவணனுக்கும் போர் நடந்தது. அப்போது சடாயு, குதிரைகள் பூட்டப்பட்ட இராவணனது தேரைச் செலுத்தும் சாரதியின் தலையைக் கொய்து, அதை இராவணனின் முகத்திலே வீசி எறிந்தான்.
(சடாயு உயிர் நீத்த படலம் 920)
சடாயு கீழே விழுந்த உடனே, இராவணன் சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட தனது தேரை, எதையும் எளிதில் பின்பற்றி சென்று பார்க்கும் இயல்பை உடைய கண்ணின் பார்வையையும் பின் தொடராத வேகத்தில் தானேச் செலுத்திக் கொண்டு ஆகாயத்தில் கிளம்பினான்.
“மண்மேல் விழுந்தான் விழலோடும் வயங்குமான் தேர்
கண்மேல் ஒளியும் தொடராவகை தான் கடாவி
விண்மேல் எழுந்தான் எழு மெல்லியலாளும் வெந்தீ
புண்மேல் நுழையத் துடிக்கின்றனள் போல் புரண்டாள்”
(சடாயு உயிர் நீத்த படலம் 922)
தேரில் பொருந்தி இருந்த 16 குதிரைகளும் ஒடுங்கி அலைந்து ஒழிந்து போகும் படி சடாயு தாக்கினான். உடனே இராவணன், சிவன் தந்த வாளால் சடாயுவைத் தாக்கினான். சடாயு விழுந்து கிடப்பதைக் கண்ட இராவணன் முன்பு பெயர்த்து தேரின் மீது வைத்த அந்நிலத்திருந்த சீதையை எடுத்துக் கொண்டு ஆகாய வழியாகச் சென்றான்.
(சடாயு உயிர் நீத்த படலம் 936)
தேர்ப்பாகன் இல்லாத நிலையில் அந்த விமானத்தைத் தானே இயக்கும் ஆற்றல் பெற்றவனாய் இராவணன் இருந்தான் என்பது பெறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், அந்த விமானம் அதிவேகமாக இயங்கும் என்பதும் பெறப்படுகிறது.
விமானத்தின் சிறப்பு
பர்ணசாலைக்கு வந்த ராம லட்சுமணர்கள் சீதையைக் காணாது தேடி வந்த போது, பூமியில் அந்த இராவணனது தேர் சென்ற நீண்ட வழியில் சென்றனர். சீதையைக் கவர்ந்து சென்றவனது தேர் நிலத்தின் மீது சென்றதால் உண்டான சக்கரங்களின் சுவடுகள் மறைந்து, ஓரிடத்தில் அந்தத் தேர் ஆகாயத்தில் எழுந்து சென்றதாகத் தெரிகிறது.
“மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடு எலாம் மாய்ந்து
விண்ணில் ஓங்கியது ஒரு நிலை மெய்உற வெந்த
புண்ணினூடு உறுவேல் என மனம் மிகப் புழுங்கி
எண்ணி நாம் இனிச் செய்வது என் இளவலே என்றான்” (சடாயு உயிர் நீத்த படலம் 964)
இதிலிருந்து அந்த விமானம் தரையில் சிறிது தூரம் சென்று, வானத்தில் பறந்து சென்றது. (தற்போதுள்ள விமானங்களும் ஓடுபாதையில் சிறிது தூரத் ஓடிய பின்பே, படிப்படியாக வானத்தை நோக்கிச் செல்லும்) என்பது பெறப்படுகிறது.
புஷ்பக விமானத்தில் ஏறி தப்பிய இராவணன்
அனுமன் இலங்கையை எரித்ததால் அரண்மனை எறிந்த அதே நேரத்தில், இராவணன் தன் உரிமை மாதர்கள் சூழ, அழகிய மணிகள் பதிக்கப்பட்ட புஷ்பக விமானத்தில் ஏறி அத்தீயில் இருந்து தப்பிச் சென்றான். (இலங்கை எரியூட்டுப்படலம் 1225)
ஒளியுடைய வாளையேந்திய இராவணனும், அன்று தான் அணிந்த மாலையும், சந்தனமும் அணிகலன்களும் உடுத்திய ஆடையும் என்னும் இவற்றுடனே இலங்கையில் தங்கமுடியாமல் ஏழு நாள் வானத்திலேயே இருந்தான் என்றால், திரிகூடமலை வெந்த தன்மையைப் பற்றி வேறு என்ன சொல்வது என்று வீடணன், இராமனிடம் கூறுகிறான். (இலங்கை வேள்விப்படலம் 522)
இதிலிருந்து அந்த விமானம் ஏழு நாட்கள் தொடர்ந்து விண்ணில் இயங்கும் என்பதும் பெறப்படுகிறது.
தெய்வீக விமானம்
பிரம்மாஸ்திரத்தால் இராமன் இறந்து விட்டான் என்று தூதர்கள் சொல்லக் கேட்ட இராவணன், சீதைக்குக் காவலாக இருந்த அரக்க மகளிரிடம் தெய்வத்தன்மை உள்ள விமானத்தில் சீதையை ஏற்றி இராம லட்சுமணர்களுக்கு ஏற்பட்ட நிகழ்ச்சிகளை அவள் காணும்படி காட்டுங்கள். அப்போதே அவள் நம்புவாள் என்றான். அவர்களும் அப்படியேச் செய்ய, இராமனைக் கண்ட சீதை கதறி அழுதாள். நானும் இராமன் திருமேனி மேல் விழுந்து இறப்பேன் என்று கீழே விழ எழுந்த போது, திரிசடை அவளைத் தடுத்தாள். பலவாறு சொல்லி அவளை ஆறுதல் படுத்தும் போது, மங்கல நாணை இழந்தவர்களையும், அறிய உயிர்களை இழந்தவர்களையும் இந்தத் தெய்வீக விமானம் தாங்கும் குற்றம் பெற்றது அன்று என்று கூறுகிறாள். (சீதை களம் காண்படலம் 2641)
இதிலிருந்து மங்கலநாணை இழந்தவர்களையும், இறந்தவர்களையும் இந்த விமானம் தாங்காது, இத்தகையச் சிறப்பினை உடையது என்றும் கூறுகிறாள் என்பது பெறப்படுகிறது.
அளவில் மிகப் பெரியது
இராம - இராவண யுத்தம் முடிந்த பிறகு, 14 ஆண்டுகளும் இன்றோடு முடியுமானால் நான் உறுதியாய் முன் சொன்ன வண்ணம் அங்கு போகாது போனால், பரதன் இறப்பான். அவன் இறந்தால் இனி என் குலமானது அழிந்தேப் போகும். ஆதலால், இப்போதேச் சென்று சேரக்கூடிய ஓர் ஊர்தி உண்டோ என்று இராமன், வீடணனைக் கேட்டான். அதற்கு வீடணன், இன்றே சென்று சேருமாறு விரைவாக செல்லத்தக்க விமானம் இங்கு உள்ளது என்றான். வீடணன் இராமனைப் பார்த்து, இராவணன் குபேரனிடமிருந்து பெரும் செல்வத்துடன் இவ்விமானத்தையும் கவர்ந்து கொண்டான். இந்த விமானம் நின் மிகப்பெரிய எழுபது வெள்ளம் படைத் தன் மீது ஏறினாலும், தளர்ச்சி அடையாது இங்குள்ளவர்கள் யாவரும் ஏறி அமரக்கூடியது. இதன் மீது நீ ஏறுவாயானால் அயோத்திக்கு நலமாகச் சென்றடையலாம் என்கிறான்.
“வாங்கினான் இரு நிதியோடு தனதனில் வள்ளல்
ஓங்குமால் வெள்ளம் ஏழு பஃது ஏறினும் ஒல்காது
ஈங்குளார் எலாம் இவருவது இவரின் நீ இனிது
பூங்குலர் நகர் புகுதி இஞ்ஞான்று எனப் புகன்றான்”
(மீட்சிப் படலம் 4034)
பல உலக உருண்டைகள் திரண்டதை ஒத்து மனம் மிகவும் பெரியதாய் வானத்தில் ஆயிரம் சூரியர்கள் ஒரேக் காலத்தில் கூடியதைப் போலத் தன் பரந்த ஒளியால் திக்குகள் அனைத்தும் ஒளிரவும், தன்னிடம் உள்ள ஆயிரக்கணக்கான மணிகள் ஒலி எழுப்புமாறு சத்தமிடவும் இந்த விமானத்தை வீடணன் கொணர்ந்தான்.
(மீட்சிப் படலம் 4036)
இதிலிருந்து அந்த விமானம் நன்கு ஒளிரக்கூடியது என்பதும், ஒலி எழுப்பக்கூடியது என்பதும் பெறப்படுகிறது.
அயோத்தி திரும்புவதற்காக இராம லட்சுமணர்கள், சீதை விமானத்தில் ஏற, இராமபிரானின் பட்டாபிஷேகம் காண விரும்பிய சுக்ரீவன், வீடணன், படைத்தலைவர்கள் 70 வெள்ளம் படையினர் ஆக, அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். பதினான்காக ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்துள்ள பல உலகங்களிலும் மிகுந்துள்ள உயிர்க்கூட்டங்கள் ஏறினாலும், விமானத்தில் வெற்றிடம் அதிகமாகக் காணப்படும். இந்த விமானத்தின் தன்மையை புத்தர்கள் சொல்லக்கூடுமே அல்லது இவ்வுலகத்தில் சொல்வதற்கு உரியவர் யார். (மீட்சிப்படலம் 4050) இராமன் அமர்ந்த அந்த விமானம் உலக உருண்டையை ஒத்திருந்தது.
கிழக்கில் தோன்றுபவனான கதிரவன் இந்த முறையைக் கைவிட்டு வடக்குத்திக்கில் செல்லக் கருதி வருவதைப் போல, புஷ்பக விமானம் தடை சிறிதும் இன்றி வானத்தேப் பாய்ந்து செல்லத் தொடங்கும் போது, இராமன் வேல் போன்ற விழிகள் உடைய சீதைக்கு ஒவ்வொரு இடத்தையும் சுட்டிக்காட்டி நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாகக் கூறியபடியே வந்தான்.
சீதை விருப்பப்படி கிட்கிந்தை மகளிர் அயோத்திக்குச் செல்ல அந்த புஷ்பக விமானத்தில் ஏறினர். அனைத்து மகளிரும் ஏறி அஷ்ட மங்களங்கள் ஆதியாக உள்ள பொருள்கள் அனைத்தையும் சீதை எதிரில் வைத்து வணங்கினர். அப்போது ஒளிவிக்கு எழுகின்ற புஷ்பக விமானம் மனவேகத்துடன் மேலே சென்றது.
(மீட்சிப் படலம் 4069)

இறங்க நினைத்தவுடன் தரை இறங்கிய விமானம்
விமானம் பரத்வாஜர் ஆசிரமம் மேலே வந்த போது, அவரைக் காண நினைத்த இராமன் புஷ்பக விமானம் அங்கு தரையில் இறங்கி தங்குமாறு நினைத்தான். இராமன் எண்ணிய அளவில் புஷ்பக விமானமும் தரையிறங்கியது.
“விட்பு அகத்து உரை கோள் அரி எனப் பொலி வீரன்
புட்பகத்தினை வதிகென நினைத்தனன் புவியில்” (மீட்சிப்படலம் 4074)
விமானத்தை யாராவது இயக்க வேண்டும் என்பதல்ல. மன எண்ணத்திற்குத் தக்க அதுவாகவே ஓடும் இயல்புடையது. விமானம் நிற்க வேண்டும், தரையிறங்க வேண்டும் என்று எண்ணினால் உடனே விமானம் தரை இறங்கும் என்பது பெறப்படுகிறது.
உவமை சொல்ல முடியாத விமானம்
வானத்தில் உள்ள தேவர்கள் புஷ்பக விமானத்தைப் பார்த்து மணம் மிக்க அசையும் தன்மையுள்ள மாலைகளைத் தொங்கும்படி கட்டிய இந்த புஷ்பக விமானத்திற்கு உவமை சொன்னால் உலகங்களை எல்லாம் உண்டருளிய பெருமாளின் அழகு பொருந்திய வயிறும் உவமையாக எல்லைக்காண இயலாத, வேதங்களை உணர்ந்த குறுகிய வடிவம் கொண்ட அகத்திய முனிவரின் கடலை அடக்கிய உள்ளங்கையும் உவமையாகாது என பல முறை வியப்புடன் சொல்லி மலர் மழை பொழிந்து ஆரவாரம் செய்தனர். (மீட்சிப் படலம் 4229)
தாவி ஏறிய விமானம்
பரத்வாச முனிவரைக் கண்டு அவர் அளித்த விருந்தினை உண்ட பிறகு, குகன் இராமனைக் காண வந்தான். அவனையும் அழைத்துக் கொண்டு விமானம் தாவி வனத்தில் தடை ஏதும் இல்லாது விரைந்து சென்றது.
’தாவி வான் படர்ந்து மானம் தடையிலாது ஏகும் வேலை’ (மீட்சிப்படலம் 4195)
அனுமன் பரதனைக் காட்டினான். அந்த பரதனைக் கண்களால் கண்ட இராமனின் நிலைமையைச் சொல்லுமிடத்து, அந்தப் பெருந்தகை ஏறிச் செலுத்திய புட்பகவிமானத்தில் வந்து தோன்றிய உயிருடன் கூடிய தன் தந்தையான தயரத மன்னனின் வடிவத்தைக் கண்டதைப் போன்ற இயல்பை அடைந்தான். (மீட்சிப் படலம் 4209)
தனக்கு ஒப்பின்றி உயர்ந்த புட்பகவிமானம்
அயோத்திக்கு வந்த இராமன் அத்தகைய சமயத்தில் இந்திரனோடும் அழகிய அமராவதி நகரமும் வருகின்றது என்று சொல்லும்படியாக, வானத்திலே நிறைந்து நின்று தேவர் சொரியும் பூ மழையுடன் தனக்கு ஒப்பின்றி உயர்ந்த புட்பக விமானம் தரையை அடைந்தது.
“ஆனதோர் அளவையின் அமரர்கோனோடும்
வானவர் திரு நகர் வருவது ஆம் என
மேல் நிறை வானவர் வீசும் பூவொடும்
தான் உயர் புட்பகம் நிலத்தைச் சார்ந்ததால்” (மீட்சிப்படலம் 4210)
பட்டாபிசேகம் எல்லாம் முடிந்தப் பிறகு, அயோத்தியிலிருந்து கிளம்பிய புஷ்பக விமானம் சிருங்கிபேரத்தில் குகனை இறக்கிவிட்டு, கிட்கிந்தையில் சுக்ரீவனை இறக்கிவிட்டு, அன்றே இலங்கைக்குள் சென்றது என்பதை விடை கொடுத்த படலம் 4037 மூலம் அறிய முடிகிறது.
இலங்கையில் இருந்து அயோத்திக்கு இன்றே சென்று சேருமாறு விரைவாய் செல்லத்தக்கது என்று வீடணன், இராமனிடம் கூறினான்.(விடை கொடுத்த படலம் 4033) அதே போன்று, அயோத்தியிலிருந்து ஒரே நாளில் இலங்கைக்குச் சென்றதையும் அறிந்து கொள்ளமுடிகிறது.
முடிவுரை
பிரம்மாவால் குபேரனுக்கு அளிக்கப்பட்ட புட்பக விமானத்தை இராவணன் கவர்ந்து கொண்டான் என்பதையும், அந்த விமானத்தில் தான் பஞ்சவடியில் இருந்த சீதையை மண்ணோடு ஒரு யோசனை அளவுக்குப் பெயர்த்தெடுத்து அதில் வைத்துக் கொண்டு வந்து அசோகவனத்தில் சிறை வைத்ததையும் அறிந்து கொள்ள முடிகிறது. சடாயுவுக்கும், இராவணனுக்கும் நடந்த சண்டையில் தேர்ப்பாகன் இறந்தமையால், அந்த விமானத்தை இராவணனே ஓட்டி வந்தான் என்பதையும், தரையில் சிறிது தூரம் சென்று பின் வானத்தில் எழுந்து பறக்கக்கூடியது என்பதையும், வானத்திலேயே ஏழு நாட்கள் பறக்கக்கூடியது என்பதையும், மங்கலம் இழந்தவர்களையும், இறந்தவர்களையும் அவ்விமானம் தாங்காது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. போர் முடிவில் இராமன், சீதை, இலட்சுமணன், வீடணன் உள்ளிட்ட ஏழுபது வெள்ளம் படையினரை ஏற்றிக் கொள்ளும் அளவுக்குப் பெரியது என்பதையும், பரத்வாசர் ஆசிரமத்தில் தரையிறக்க இராமன் எண்ணியவுடன் விமானம் தரையிறங்கியது என்பதிலிருந்து விமானத்தை ஓட்டத் தனி ஆள் தேவையில்லை என்பதையும், மனதில் எண்ணியவாறே ஓடவும், தரையிறங்கவும் முடியும் அவ்வளவு வசதிகளைக் கொண்டது என்பதையும், ஒளி பொருந்தியது என்பதும், ஒலியெழுப்பவும் செய்யும் என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
துணைநூற்பட்டியல்
1. ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
2. பாலசுப்பிரமணியன்.கு. வை (உரை.ஆ) புறநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடேட், சென்னை, 2004.
3. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.