கம்பராமாயணத்தில் அறுபதினாயிரம் என்ற பேரெண்ணின் சிறப்பு
முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.
முன்னுரை
கம்பர் தம் இராமாயணத்தில் அணி, சொல்லாட்சி,கற்பனை,என்று பல சிறப்புகளைக் கொண்டு இயற்றியுள்ளார்.திருமாலே, இராமனாக அவதாரம் எடுத்து இராவணனை வதம் செய்தார் என்பதைக் கூறும் இந்நூலில் அறுபதினாயிரம் என்ற பேரெண் சிறப்புக்குரியதாகவே அமைத்துள்ளார் என்பதை கம்பராமாயணத்தின் வழி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தசரதனின் ஆட்சி காலம் அறுபதினாயிரம்
சூரியக் குலத்து அரசர்களில் மிகுதியான காலம் எடுத்து ஆண்டவன் தசரதன். அறுபதினாயிரம் ஆண்டுகள் என்று தசரதன் தனக்கு மகப்பேறு வாய்க்காத குறையை வசிஷ்டரிடம் தெரிவிக்கும் இடத்தில் அறுபதினாயிரம் ஆண்டு காலம் அரசாண்டேன் என்று ஆண்டுக் கணக்கைக் குறிப்பிடுகின்றான்.
"அறுபதினாயிரம் ஆண்டு மாண்டு உற
உறுபகை ஒடுக்கி இவ்உலகை ஓம்பினேன்
பிறிது ஒரு குறை இலை என் பின் வையகம்
மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு அரோ" (திருஅவதாரப்படலம் 183)
புத்திரப்பேறு வாய்த்துத் தலையில் நரை தோன்றிய நிலையில் தான் அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்து மூப்பெய்தி கலைத்து விட்டதாகத் தசரதனே கூறுகிறான்.
"வெய்யவன் குலமுதல் வேந்தர் மேலவர்
செய்கையின் ஒரு முறை திறம்பல் இன்றியே
வையம் என் புயத்திடை நுங்கள் மாட்சியால்
ஐ இரண்டு ஆயிரத்து ஆறு தாங்கினேன்" (மந்திரப்படலம் 13)
தசரதனின் அமைச்சர்கள் அறுபதினாயிரம்
தசரதனின் அமைச்சர்கள் மொத்தம் அறுபதினாயிரம் பேர் என்றாலும், தசரதனுக்கு நன்மை ஏற்படுத்துவதில் அனைவருக்கும் ஒரே எண்ணம் என்று நினைக்கத்தக்க, மிகச்சிறந்த ஆராய்ச்சித்திறம் பெற்றவர்கள். அவர்கள் மடங்கி விழும் கடலைப் போல அந்த மண்டபத்தில் வந்து நிறைந்தார்கள்.
"அறுபதினாயிரர் எனினும் ஆண்தகைக்கு
உறுதியில் ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம்
பெறல் அருஞ் சூழ்ச்சியர் திருவின் பெட்பினர்
மறி திரைக்கடல் என வந்து சுற்றினார்" (மந்திரப்படலம் 10)
தசரதன் தனக்கு கிடைத்த அறுபதினாயிரம் ஆண்டு அரசாட்சியைக் கூட, தன் பலத்தாலும் தன் முயற்சியாலும் கிடைத்தது என்று அவன் ஒருபோதும் எண்ணியதும்இல்லை, சொன்னதும் இல்லை.
தசரதன் கோசல நாட்டை அறுபதினாயிரம் ஆண்டுகள் கட்டிக் காத்தான். ஆண்டுக்கு ஒரு மனைவி வீதம் அறுபதினாயிரம் மனைவிமார்கள் அவனுக்கு உண்டு என்று புராணங்களும் பேசுகின்றன. கம்பராமாயணத்திலும் கூறப்பட்டுள்ளது.
மகளிர் அறுபதினாயிரம்
தாமரை அரும்பு போன்ற வெண்மையான கொங்கைகளை உடைய வர்ணிக்க முடியாத வனப்பைப் பெற்ற இலக்குமியை விடச் சிறந்த அழகு பொருந்திய அறுபதினாயிரம் என்னும் எண்ணிக்கைக் கொண்ட மகளிர் பவளத்தாலும், ரத்தினத்தாலும், பசும்பொன்னாலும், ஒளி வீசும் மகரத்தாலும், முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஒப்பில்லாத வண்டிகளில் ஓவியத்தைப் போல ஏறி அமர்ந்து அரசியர்களின் பக்கங்களில் சென்றார்கள்.
“துப்பினின் மணியின் பொன்னின் சுடர் மரகதத்தின் முத்தின்
ஒப்பு அற அமைத்த வையம் ஓவியம் போல ஏறி
முப்பத்திற்று இரட்டி கொண்ட ஆயிரம் முகிழ் மென் கொங்கைச்
செப்ப அருந்திருவின் நல்லார் தெரிவையர் சூழப் போனார்” (எழுச்சிப் படலம் 749)
தசரதன் இறந்தவுடன் துவளும் தன்மையுள்ள சிறந்த மலர்கள் கொண்ட பூங்கொடிகளைப் போன்ற அவன் மனைவியர் அறுபதினாயிரம் பேரும் தாம் அணிந்த மாலைகளும் மற்றும் உள்ள அணிகலன்களும் தம்முடைய இடைகளை விளங்கித் தோன்ற இலையில்லாத தாமரை மலர்கள் நிறைந்த பூக்காட்டிலே மலை குகையில் வாழும் மயில்கள் புகுவது போல ஈமத் தீயில் இறங்கி மூழ்கினர்.
“இழையும் ஆரமும் இடையும் மின்னிட
குழையும் மா மலர்க்கொம்பு அனார்கள் தாம்
தழை இல் முண்டகம் தழுவு கானிடை
முழையில் மஞ்ஞை போல் எரியில் மூழ்கினார்” (பள்ளிப்படைப்படலம் 920)
சகரப் புத்திரர்கள் அறுபதினாயிரம்
அகலிகைப் படலத்தில் விசுவாமித்திரன், இராமனுக்கு கங்கை ஆற்றின் வரலாற்றைக் கூறும் போது, சகரப்புத்திரர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றார். நூறு அஸ்வமேத யாகம் செய்தவன் சாகரன். அம்மன்னனின் 2 மனைவிகளில் சுமதி என்ற கருடனின் உடன்பிறந்த தங்கை வயிற்றில் தோன்றிய அறுபதினாயிரம் சகரப் புத்திரர்களின் புகழோ கடல் உள்ளளவும் அலை போல் என்றும் உழைத்துக் கொண்டிருக்கிறது.
சகரனுடைய புத்திர பௌத்திரர்கள்
“விறல் கொள் வேந்தனுக்கு உரியவர் இருவரில், விதர்ப்பை
பொறையின் நல்கிய அசமஞ்சற்கு அஞ்சுமான் புதல்வன்;
பறவை வேந்தனுக்கு இளைய மென் சுமதி முன் பயந்த
அறனின் மைந்தர்கள் அறுபதினாயிரர் வலத்தார்” (அகலிகைப் படலம் 511)
சகரப் புத்திரர்கள் அறுபதினாயிரம் வரும் கபில முனிவரின் சினத்தினால் எரிந்து சாம்பலானார்கள்.
தசரதனின் குல முன்னோனான சகரனின் புத்திரர்கள் அறுபதினாயிரம் இவர்கள் அனைவரும் பாதாளத்தில் கபில முனிவரின் வெகுளியால் எரிந்து சாம்பல் மேடாயினர். திருமணமாகாமலேயே சகரப் புத்திரர்கள் இறந்ததனாலும், ஆட்சிக்கட்டிலே ஏறாது போனதனாலும், இவை இரண்டும் தசரதனுக்குப் பெரும் குறையாகவேப் பட்டது. தன்னுடைய பாட்டன்களான சகரப் புத்திரர்களின் விருப்பினை நிறைவேற்றவும், அவர்களின் ஆன்மா சாந்தியடையவும், தசரதனே முயன்று அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓராண்டு வீதம் அறுபதினாயிரம் ஆண்டு, இப்புவியைத் தாங்கி ஆளுக்கொரு மனைவி வீதம் அறுபதினாயிரம் பெண்களை மணந்து, தன் குல முன்னோர்களை மோட்சம் பெறச் செய்தவன் என்று ’தசரதன்’ என்ற நூலில் ரா. தர்மராஜன் குறிப்பிடுகிறார். தானும் ஒரு சத்திரிய வம்சத்தவன் அதனால், பரசுராமன் இலக்கிற்கு ஆட்படாது இருக்கவே, அறுபதினாயிரம் ஆண்டு காலத்தில் தசரதன் அறுபதினாயிரம் மனைவிகளை மணந்து மணக்கோலத்தில் இருப்பதற்குக் காரணம் கற்பிப்பது திறனாய்வாளர்கள் என்று தசரதன் என்ற நூலில் ரா. தர்மராஜன் 69 ஆவது பக்கத்தில் கூறுகிறார்.
அக்ரோணி சேனைகள் அறுபதினாயிரம்
அறுபதினாயிரம் அக்ரோணி சேனைகளும் காட்டுக்குச் சென்ற இராம பிரானை அழைத்து வரப் புறப்பட்ட பொழுது, பரதனைப் பின் தொடர்ந்து சென்ற படைகளின் எண்ணிக்கை ஆன்றவரால் என் தொகுதியில் மிகுதி என கூறப்பட்ட அறுபதினாயிரம் அக்ரோணிகள் ஆகும்.
“கான்தலை நண்ணிய காளையின்படர்
தோன்றலை அவ்வழித் தொடர்ந்து சென்றன
ஆன்றவர் உணர்த்திய அக்ரோணிகள்
மூன்று பத்து ஆயிரத்து இரட்டி முற்றுமே” (கங்கை காண் படலம் 989)
வீரர்கள் அறுபதினாயிரம்
ஏவலாளர் வில்லை மண்டபத்திற்கு கொண்டு வருக என அரசன் சனகன் ஆணை தெரிவித்ததால், மிகுந்த வலிமையுடைய யானையைப் போன்றவரும் மலை போலத் திரண்ட மயிர் அடர்ந்த தோள்களை உடையவருமான அறுபதினாயிரம் வீரர்கள் வில்லின் நடுநடுவே தூண்களை நுழைத்துத் தோளிலேச் சுமந்து கொண்டு வந்தனர்.
"உறு வலி யானையை ஒத்த மேனியர்
செறுமயிர்க் கல் என திரண்ட தோளினர்
அறுபதினாயிரம் அளவு இல் ஆற்றலர்
தறிமடுத்து இடையிடை தண்டில் தாங்கினர்" (கார்முகப்படலம் 617)
மாசனப்புத்திரர்கள் அறுபதினாயிரம்
பாலகில்யர் பிரம்மனது மயிரிலிருந்து தோன்றியவர்கள். அவனுடைய மாசனப்புத்திரர்கள் இவர்கள் அறுபதினாயிரம் என்பர். பெருந்தவம் புரிந்தவர்கள். இவர்கள் கட்டைவிரல் அளவுள்ள குறுவடிவினர். நாளும் கதிரவனின் இரதத்தை வலம் வந்து கொண்டிருப்பவர்.
"பண்டைய அயன் தரு பாலகில்லரும்
முண்டரும் மோனரும் முதலினோர்கள் அத்
தண்டக வனத்து உறை தவத்துளோர் எலாம்
கண்டனர் இராமனைக் களிக்கும் சிந்தையர்"
(அகத்தியப்படலம் 118)
முடிவுரை
கம்பராமாயணத்தில் அறுபதினாயிரம் என்ற பேரெண் சிறப்பானதாகும். தசரதனின் ஆட்சிக்காலம் அறுபதினாயிரம், அமைச்சர்கள் அறுபதினாயிரம், மனைவியர் அறுபதினாயிரம், சகரப்புத்திரர்கள் அறுபதினாயிரம், அக்குரோணிசேனைகள் அறுபதினாயிரம், வில்லைத் தூக்கி வந்த வீரர்கள் அறுபதினாயிரம், பிரம்மனின் மானசப்புத்திரர்கள் அறுபதினாயிரம் என்பதைக் கம்பராமாயணத்தின் வழி நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
துணைநூற்பட்டியல்
1. செல்வம். கோ, கம்பன் புதையல், சாரு பதிப்பகம், சென்னை. 2016.
2. ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
3. ஞானசம்பந்தன் அ.ச., இராமன் பன்முக நோக்கில், சாரு பதிப்பகம், சென்னை, 2016.
4. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8 வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.