இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

புறநானூறும் காஞ்சித்திணைப் பாடல்களும்

முனைவர் ஏ. கோதண்டராமன்

இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத்தலைவர்,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (சுழல் - II),
மீனம்பாக்கம், சென்னை - 600 061.


ஆய்வுச்சுருக்கம்

சங்க இலக்கியங்களில் புறத்தினை பற்றிய இலக்கியங்களாக எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகியன உள்ளன. பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம், மதுரைக்காஞ்சி ஆகிய ஆறு இலக்கியங்கள் உள்ளன. அவற்றுள் புறநானூறு தனிப்பெரும் சிறப்புடையது. இந்நூலில் புறத்திணையின் உட்பிரிவுகளைக் காட்டும் பாடல்கள் பல காணப்படுகின்றன. இதனை, “பல்வேறு காலத்து வாழ்ந்த புலவர் பலரால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பான புறநூனூற்றிற்கு ஏனை புறநூல்களிலும் தனிச்சிறப்புண்டு” என்னும் நீலகண்ட சாஸ்திரி அவர்களின் கருத்து தெளிவுபடுத்தக் காணலாம். அவ்வகையில் புறநானூற்றில் காணப்படும் காஞ்சித்திணை குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

கருச்சொற்கள்

புறநானூறு - தொகுப்புமுறை - புறத்தின் அடிப்படை மரபுகள் - திணை: பொருள் விளக்கம் - காஞ்சித்திணை - புறநானூற்றில் காஞ்சித்திணை - வஞ்சினக்காஞ்சி - தொடாக்காஞ்சி - பூக்கோட் காஞ்சி - மகட்பாற்காஞ்சி - உரையாசிரியர்கள் - மகட்கொடை வேண்டியோர் மூவேந்தர்களே - காடுவாழ்த்து - மனையறம் துறவறம்.

முன்னுரை

இந்நூலில் அமைந்துள்ள நானூறு பாடல்களில் இரண்டு தொலைந்துவிட்டன. 44 பாடல்கள் சிதைந்த நிலையில் உள்ளன. சிலபாடல்களுக்கு அடிக்குறிப்புகளும் பிறவிவரங்களும் கிடைக்கவில்லை. இப்பாடல்கள் ஏறத்தாழ புலவர் நூற்றைம்பதின்மரால் பாடப்பட்டுள்ளன. இவருள் அரசர் பதினால்வர். பெண்பாற் புலவர்கள் பதினைவர். இப்பாடல்களில் சேரரைக் குறித்தன 22; சோழரைக் குறித்தன 61; பாண்டியரைக் குறித்தன 31; குறுநிலமன்னர்களையும் வள்ளல்களையும் குறித்தன 134. இப்புகழ்ப் பாடல்களைத் தவிரப் பொதுப் பொருண்மை குறித்தனவாக 120 பாடல்கள் உள்ளன. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும் தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை.

புறநானூறு - தொகுப்புமுறை

புறநானூற்றின் தொகுப்பு முறை ஒரு குறிப்பிட்ட வரையறையில் அமையாது விளங்குகிறது என்பதை, “2 - ஆம் பாட்டு முதல் 16 - ஆம் பாட்டு வரையில் சேரர், பாண்டியர், சோழர், என்னும் முறையில் பாடல்கள் அமைந்திருக்கின்றன. அதன்பின் இம்மூவரும் ஒரு முறையின்றிப் பாடப்பெறுகின்றனர். சோழர்களும் பாண்டியர்களுமே பல பாடல்களால் புகழப்படுகின்றனர். முதல் 85 பாடல்கள் முடிமன்னர்களாகிய இம்மூவரின் புகழைச் சொல்வன. அதன்பின் அதியமான், பாரி, காரி, ஆய், பேகன், ஓரி முதலிய வள்ளல்களும் நாஞ்சில் வள்ளுவன், பிட்டங்கொற்றன் முதலிய வீரர்களும், பல வேளாளர்களும் புகழப் பெறுகின்றனர். 182 - முதல் 185 பாடல்கள் வரை சில மன்னர்கள் தாமே இயற்றிய பாடல்கள் உள்ளன. 186 முதல் 195 வரையில் பொது வகையில் அமைந்த தனிப்பாடல்களும், 196 முதல் 211 வரையில் பரிசில் துறை பற்றிய பாடல்களும், 212 முதல் 216 வரையில் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த செயலைப் பற்றிய பாடல்களும் அமைந்திருக்கின்றன. 217 முதல் 256 முடிய கையறுநிலையும் பிறவுமாகிய அவலச் சுவையமைந்த துறைப் பாடல்களையும், 257 முதல் ஒரு வரையறையின்றிப் பல புறத்துறை அமைந்த செய்யுட்களையும் காணலாம். இடையிடையே பாடாண்பாட்டு, பாடாண்திணை, காஞ்சித்திணை பற்றிய பாடல்கள் பல ஒரு சேரக் காணப்படுகிறது. பொதுவாகப் புறநூனூற்றுப் பாடல்களின் தொகுப்புக்குரிய முறை இன்னதுதான் என்று வரையறுத்துச் சொல்லவியலவில்லை.” (1) என்பார் கி. வா. ஜகந்நாதன். திணை - துறை அடிப்படையிலும் வேந்தன், குறுநில மன்னன் என்னும் முறையிலும் பாடினோர், பாடப்பட்டோர் என்னும் வகையிலும் புறநூனூற்றுப் பாடல்கள் தொகுக்கப்பெற்றுள்ளன என்பதோடு, அப்பாடல்கள் உரிய முறை இன்னதுதான் என்று வரையறுத்தற்கில்லை.



புறத்தின் அடிப்படை மரபுகள்

* புறம் பாடிய புலவர்கள் தம் வாழ்வில் நிகழ்ந்த உண்மையான நிகழ்ச்சிகளையே பெரும்பாலும் எடுத்துரைக்கின்றனர். எனவே, புறப்பாடல்கள் புலவர்களின் உள்ளத்திலிருந்து இயல்பாகப் பீறிட்டெழுந்த வலிமைமிக்க உணர்ச்சிகளாகும். அவை புலவர்கள் தம் சொந்த வாழ்வில் அனுபவித்த இன்பதுன்பங்களின் வலிமைமிக்க வெளிப்பாடுகளாகும். இத்தகைய வெளிப்பாட்டில் அகப்பாடல்களைக் காட்டிலும் ஒரு குறிப்பிட்ட அளவு வீரியமும் உணர்ச்சியும் மிக்க வகையில் புறப்பாடல்களைப் பாடியுள்ளனர்.

* இப்பாடல்களின் நோக்கு வாழ்த்துதலும் போற்றுதலுமாம். வழிபாட்டுப் பாடல்களிலும் இவ்விரு கூறுகளே மேலோங்கி நிற்கக் காண்கிறோம். அவை வாழ்வின் மெய்ப்பொருள் என்ற நோக்கில் அல்லாமல் மிக ஆழ்ந்த உணர்ச்சியிற் புனையப்பட்டன.

* அரசர்கள், புலவர்கள் அல்லது கவிஞர்களுக்கிடையே நிலவிய நட்பின் அடிப்படையிலான நிகழ்வுகளை விளக்கும் பாடல்கள் அவர்களின் மிகுந்த நட்பை விளக்கும் பாங்கில் அகப்பாடல்களை ஒத்திருக்கின்றன. அகப்பாடல்களில் காதல் விளக்கப்படுவதைப் போலவே இறைவன் மீது அடியவர் கொள்ளும் காதலும் விளக்கப்படுகிறது. அரசர்களும் குறுநில மன்னர்களும் இறந்துபட அவர்களுக்காகப் பாடிய கையறுநிலைப் பாடல்கள் உணர்ச்சியை வெளிக்காட்டுவதில் ஈடிணையற்றவையாகும்.

* புறப்பாடல்கள் தமிழர்தம் வரலாற்றையும் நாகரிகத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. அகப்பாடல்களைப் போல குறிப்பிட்ட அரசரையோ தலைசிறந்த மனிதரையோ குறிப்பிடாத புறப்பாடல்களும் உள்ளன. சிலபாடல்களில் நாம் அரசர்களின் பெயர்களையும் பிற விவரங்களையும் அறிகிறோம். இவற்றை நாம் பெரும்பாலும் பாடல்களின் அடிக்குறிப்புகளிலிருந்து அறிகிறோமேயன்றி அகச்சான்று எனும் வகையில் பாடல்களிலிருந்து அறியவில்லை. பலபாடல்கள் அப்பாடல்களோடு தொடர்புடைய அரசர்களின் இயர்பெயர்களைத் தருவதன்றியும் வேறு விவரங்களையும் அளிக்கின்றன.

திணை: பொருள் விளக்கம்

திணை என்பது ஓர் ஒழுக்கம் பற்றிய பல நிகழ்வுகள் (துறைகள்) அடங்கிய தொகுதி என்பர். தொல்காப்பியத்தில் ‘திணை’ என்பது முதற்பொருள், கருப்பொருள். உரிப்பொருள் என்னும் மூன்று நிலைகளிலும் விளக்கம் பெறுகிறது. எனவே இம்மூன்றையும் உள்ளடக்கிய திணை என்ற சொல்லுக்குப் பாடல் அல்லது பாட்டு என்று பொருள் கொள்வது பொருத்தமாகலாம். முல்லைப் பொருளையும் (இருத்தல்), குறிஞ்சிப் பொருளையும் (புணர்தல்) விளக்கும் பாடல்கள் முல்லைத்திணை, குறிஞ்சித்திணை என்று பெயர் பெறாமல் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு என்று பெயர் பெறுதல் குறிப்பிடத்தக்கது.

“திணை என்ற சொல் காட்சிப் பொருள் (பருப்பொருள்), கருத்துப் பொருள் (நுண்பொருள்) என்ற இரண்டு நிலையிலும் விளக்கம் பெறும். காட்சிப் பொருளை (பருப்பொருள் – முதல் – கரு) பாடலுக்குரிய பருப்பொருள் என்றும் கருத்துப் பொருளை (உரிப்பொருள் – நுண்பொருள்) பாடல் நுதல் பொருள் என்றும் கொள்ளலாம். இதன்மூலம் காட்சிப்பொருளையும் கருத்துப் பொருளையும் உள்ளடக்கிய திணை என்ற சொல்லுக்குப் பொது விளக்கம் கூறுவதனால் பாடல் அல்லது பாட்டு என்று கூறலாம்” (2) என்பார் புறத்திணை என்னும் ஆய்வு நூலில் அ. சீனிவாசன்.

காஞ்சித்திணை

யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை எனப் பல நெறியானும் நிலையாமையை விளக்குவது காஞ்சித்திணை ஆகும்.

“பாங்கருஞ் சிறப்பிற் பன்னெறி யானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே” (3)

என்பது தொல்காப்பியர் கூற்று.

“பாங்காதல் அரிய சிறப்பினால் பலநெறியானும் நில்லாத உலகத்தைப் பொருந்திய நெறியுடைத்து” என்பார் இளம்பூரணர்.

“தனக்குத் துணையில்லாத வீட்டின்பம் ஏதுவாக அறம், பொருள், இன்பமாகிய பொருட்பகுதியானும் அவற்றுப் பகுதியாகிய உயிரும் யாக்கையுஞ் செல்வமும் இளமையும் முதலியவற்றானும் நிலைபேறில்லாத உலகியற்கையைப் பொருந்திய நன்னெறியினை யுடைத்து காஞ்சி” என்பார் நச்சினார்க்கினியர்.

புறநானூற்றில் காஞ்சித்திணை

தொல்காப்பியரின் விளக்கத்தின்படி, காஞ்சித்திணையின் பெரும்பான்மையான துறைகள் இவ்வுலகின் நிலையாமையினையும் அதனைச் சார்ந்த பிற கூறுகளையும் எடுத்துரைக்கின்றன. புறநானூற்றில் 32 பாடல்கள் காஞ்சித்திணைக்குரியனவாகும். இத்திணைக்குரிய துறைகளாக அமைவனவற்றைப் பின்வருமாறு துறைக்கான பாடல் எண்களுடன் காணலாம்.

வஞ்சினக்காஞ்சி - 71, 72, 73 (3)

தொடாக்காஞ்சி - 281 (1)

பூக்கோட்காஞ்சி - 293 (1)

மகட்பாற்காஞ்சி - 336 முதல் 354 வரை (20)

காடுவாழ்த்து - 356 (1)

பெருங்காஞ்சி - 357, 359, 360, 365, 366 (5)

மனையறம் துறவறம் - 358 (1)


வஞ்சினக்காஞ்சி

வஞ்சினக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் உட்கூறாகிய துறைகளுள் ஒன்றாகும். வஞ்சியரது வரவுணர்ந்த காஞ்சி மன்னன், அவ்வஞ்சியாரைப் பணியச் செய்தற்காக வஞ்சினம் கூறுவது. புறநானூற்றில் வஞ்சினக்காஞ்சித்துறையில் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியப் பாண்டியன், நலங்கிள்ளிச் சோழன் ஆகிய மூன்று பேரரசர்கள் வஞ்சினம் உரைத்ததாக மூன்று பாடல்கள் உள்ளன. தொல்காப்பியம் வஞ்சினக்காஞ்சியை,

“இன்னது பிழைப்பின் இதுவாகியர் எனத்
துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானும்” (4)

என்று இன்னவாறு செய்தலைப் பிழைத்தேனாயின் இவ்வாறு ஆவேன் என்று வஞ்சினக்காஞ்சியைக் குறிப்பிடுகிறது. புறப்பொருள் வெண்பாமாலை,

“வெஞ்சின வேந்தன் வேற்றுவர்ப் பணிப்ப
வஞ்சினங் கூறிய வகைமொழிந் தன்று” (5)

என்று காஞ்சி வேந்தன் தன் நாட்டின்மேல் படையொடு வந்த மாற்றாரைப் பணிவித்தலின் பொருட்டு வஞ்சினம் கூறுவது என்று கூறுகிறது. சேரனும் சோழனும் பெருஞ்சினத்துடன் போரிட வரும் செய்தி கேட்டு ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், போரின்கண் பகைவரைப் புறங்காணச் செய்யேனாயின் என் தேவியைப் பிரிவேனாகுக! குறை விளக்கி முறை கேட்டு என்னிடம் வந்தார்க்கு முறை செய்து காப்பாற்றும் இறையாக நானில்லாது கொடுங்கோலனாகுக! என் கண்ணைப் போன்ற நண்பர்களை நான் இழப்பேனாகுக! பல உயிர்களைக் காக்கும் நீள்குடியாம் பாண்டியர் வழிவந்த நான் இந்தத் தென்புலங்காக்கும் உரிமையை இழந்து வன்புலங்காவல் கொண்ட குடியிற் சென்று பிறப்பேனாகுக! என வஞ்சினம் உரைக்கின்றான். பாடியவர்: ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்; திணை: காஞ்சி; துறை: வஞ்சினக்காஞ்சி. (இச்சூளுரையால், மனைவியைப் பிரிவதும், அறந்தவறுவதும், அரிய நண்பரை இழப்பதும், நன்னாட்டு அரச மரபிற் பிறவாமையும் பழி என்பதனை உணரலாம்)

“வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும்,
கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த
இன்களி மகிழ்நகை இழுக்கி, யான் ஒன்றோ,
மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஒரீஇப், பிறர்
வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே” (புறம். 71)

என்னும் பாடலில் அவ்வஞ்சினமொழி சிறந்து விளங்குகிறது.

புறநானூற்றில் வரும் வஞ்சினக் காஞ்சிப் பாடல்கள் இதைச் செய்வேன். செய்யேனாயின் இவ்வாறு ஆவேன் என்று தொல்காப்பியம் கூறுகின்ற விளக்கத்தையொட்டியே வருகின்றன.

“நகுதக் கனரே நாடுமீக்கூறுநர்’, ‘மடங்கலிற் சினைஇ’ என்னும் புறப்பாட்டுகள் உயிருஞ் செல்வமும் போல்வன நிலையும் பொருளென நிலையாது வஞ்சினஞ் செய்தன” என்று நச்சினார்க்கினியர் அரண் செயக் காணலாம். தொல்காப்பியத்தின் இக்கருத்து பின்னர்த் தோன்றிய புறப்பொருள் வெண்பாமாலையிலும் அதே விளக்கத்தைப் பெற்றுச் சிறந்துள்ளது.

தொடாக்காஞ்சி

இருநூற்று எண்பத்தோராவது (281) பாடல் தொடாக்காஞ்சி ஆகும். இனிதாகிய நகையினையுடைய மனைவி புண்ணுற்ற கணவனைப் பேய் தீண்டுதலை நீக்கியது தொடாக்காஞ்சியாகும்.

“இன்னகை மனைவி பேஎய்ப் புண்ணோற்
றுன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்” (6)

என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

கொலைத்தொழிலுக்கு அஞ்சாத பெரிய நிலையினையுடைய வீரனின் புண்ணினைத் தொடுதற்கு அஞ்சிப் பேயொன்று நடுங்கி பெயர்ந்தனை உரைப்பது தொடாக்காஞ்சி ஆகும்.

“அடல் அஞ்சா நெடுந்தகை புண்
தொடல் அஞ்சித் துடித்து நீங்கின்று” (7)

என வரும் புறப்பொருள் வெண்பாமாலை மூலம் அறியலாம்.

இரவ இலையினையும் வேப்பிலையையும் மனையிறைப்பிலே செருகி, பல இசைகளும் யாழொடு முழங்கி, மையமாகிய மெருகினையிட்டு, ஆம்பற் குழலினை ஊதி, வெண்சிறு கடுகு தூவி, மணிகள் இசைமுழங்க, காஞ்சிப்பண் பாடியாடுவோம். வீடெல்லாம் அகில் முதலியவற்றைப் புகைப்போம். வேந்தனுக்கு உற்றதுயர் தீர்த்த எம் தலைவன் போரில் பெரும் புண்பட்டான். அவன் புண்ணுக்கு மருந்திட்டுக் கூற்றுவந்து கொண்டு போகாதவாறு காப்போம் என்று தலைவி ஒருத்தி தன்தோழியை அழைப்பதாக உள்ளது. இதனை, பாடியவர்: அரிசில் கிழார், திணை: காஞ்சி, துறை: பேய்க்காஞ்சி.

“தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப்பு யாழொடு பல்இயங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
இசைமணி எறிந்து, காஞ்சி பாடி,
நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்,
காக்கம் வம்மோ - காதலந் தோழீ!
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே” (புறம். 281)

எனவரும் புறநானூற்றுப் பாடல் மூலம் போரில் புண்பட்ட கணவனை, மனைவி பேய் தீண்டாமல் காத்ததைக் காட்டுகிறது.

உ. வே. சா. உரையில் இப்பாடல் பேய்க்காஞ்சி என்று குறிக்கப்பட்டுள்ளது. ஒளவை துரைசாமி உரையில் தொடாக்காஞ்சி என்று குறிக்கப்பட்டுள்ளது. இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் இப்பாடலைத் தொடாக்காஞ்சி என்னும் துறைக்கே மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர். இரவில் காத்தற்குரிய சுற்றத்தார் இன்மையால் புண்பட்டவனைப் பேய் பேணுவது பேய்க்காஞ்சி ஆகும்.

“ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோன்
பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்” (8)

என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. பிணங்கள் மிகுந்த போர்க்களத்திலே விழுப்புண்பட்டு வீழ்ந்து கிடந்த மறவர்களைப் பேய்கள் அச்சுறுத்துவது பேய்க்காஞ்சி ஆகும்.

“பிணம் பிறங்கிய களத்து வீழ்ந்தாற்கு
அணங் காற்ற அச்சுறீஇ யன்று” (9)

என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது. எனவே பேய்க்காஞ்சி என்பதற்கு இப்பாடல் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை.

பேய் தொடாத நிலை இருவேறு கருத்துகளிலும் பொருந்துகிறது. பேய் தொடாமல் கணவனைக் காத்த மனைவியைத் தொல்காப்பியம் குறிப்பிட, புறப்பொருள் வெண்பாமாலை புண்ணுற்றோனைக் கண்டு பேய் தானாகவே அஞ்சி நீங்கியதாகக் குறிப்பிடுகிறது. ஆனால் புறநானூற்றின் இப்பாடல் தொல்காப்பியத்தின் விளக்கமாகவே அமைந்துள்ளது.

பூக்கோட் காஞ்சி

தொல்காப்பிய காஞ்சித்திணையில் இத்துறை காணப்பெறவில்லை. புறப்பொருள் வெண்பாமாலையில் மட்டும் காணப்பெறுகிறது. இதனைப் பூக்கோள் நிலை என்று குறிப்பிடுகிறது.

நகர்ப்புறத்துப் படையுடன் வந்து தங்கிய பகையரசன் தோற்றோடுமாறு மறவர், அரசன் வழங்கிய போர்ப்பூவினை ஏற்றுக் கொள்வது பூக்கோள் நிலை ஆகும்.

“கார் எதிரிய கடற்றானை
போர் எதிரிய பூக்கொண்டன்று” (10)

என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.

அரசன் தன்னாட்டுப் புறத்தே முற்றி நிற்கும் வஞ்சிவீரரை வெல்லப் போரெடுத்துச் செல்வதற்குத் தம் வீரரைக் காஞ்சிப்பூ பெற்றுச் செல்லுமாறு முரசறைவர். பூக்கோட் பறை ஒலி கேட்டுக் காலம் தாழ்த்துவோர் ‘நாணுடை மாக்கள்’ என்று எள்ளப்படுவதால் வீரர் விரைந்தனர். இத்தண்ணுமை ஒலி கேட்டபின் பூவிலைப்பெண்டு, போர் தொடங்கிவிட்டது. இனி ஆடவர் மனைக்கண் இரார். அதனால் இம்மனைமகளிர் நம்பால் பூக்களை வாங்கமாட்டார் என்று கருதிப் பிறர் மனைக்கண் செல்கின்றாள் என்று புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுகின்றது. பாடியவர்: நொச்சி நியமங்கிழார்; திணை: காஞ்சி; துறை: பூக்கோட் காஞ்சி.

“நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
குறுபர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
எம்மினும் பேர்எழில் இழந்து, வினையெனப்
பிறர்மனை புகுவள் கொல்லோ?
அளியள் தானே, பூவிலைப் பெண்டே!” (புறம். 293)

என்பது அப்பாடல்.

மகட்பாற்காஞ்சி

மகட்பாற்காஞ்சியைச் சார்ந்தனவாக 336 முதல் 355 வரை இருபது பாடல்கள் உள்ளன. புறநானூற்றில் காஞ்சித்திணையில் மிகுதியான எண்ணிக்கைப் பெற்ற துறை மகட்பாற்காஞ்சி ஆகும். மாற்று வேந்தனின் மகளை மணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் படை எடுத்து வந்த வேந்தனுக்கு மகட்கொடை மறுத்தது மகட்பாற்காஞ்சி ஆகும்.

“நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும்” (11)

என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். நின்மகளை எனக்குத் தருக எனக் கேட்கும் வஞ்சி வேந்தனோடு, காஞ்சி வேந்தன் வேறுபட்டு நிற்பது மகட்பாற்காஞ்சி. இதனை,

“ஏந்திழையாள் தருகென்னும்
வேந்தனோடு வேறுநின்றன்று” (12)

என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகின்றது.

புறப்பொருள் வெண்பாமாலையில் மகட்பாற்காஞ்சித்துறை, காஞ்சித்திணையில் மட்டுமல்லாது நொச்சித் திணையில் மகண்மறுத்து மொழிதல் என்ற பெயரிலும் உழிஞைத்திணையில் மகட்பால் இகல் என்ற பெயரிலும் கூறப்பட்டுள்ளமை ஒப்பு நோக்கத்தக்கதாகும். நொச்சியரசன் மகளைத் தனக்கு மணஞ்செய்து தரும்படியாக வேண்ட, அதற்கு நொச்சியரசன் மறுத்துக் கூறியது மகண்மறுத்து மொழிதல் ஆகும்.

“வெமுரணான் மகள் வேண்ட
அம்மதிலோன் மறுத்துரைத்தன்று” (13)

என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது. நொச்சி அரசனின் மகளை மணக்க விரும்பிய உழிஞை வேந்தனின் நிலைமையைக் கூறுவது மகட்பால் இகல் ஆகும்.

“மயிற்சாயன் மகள் வேண்டிய
கயிற் கழலோன் நிலையுரைத்தன்று” (14)

என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.

”மகட்பாற்காஞ்சி என்பது மகள்+பால்+காஞ்சி என்று பகுக்கப்படும். மகள் – இளமை வாய்ந்த பெண்பால் பகுதியாகும். அதாவது இளம்பெண் வாழும் ஊரின் பகுதியைச் சுட்டுமென்க. காஞ்சி நிலையாமையாம். எனவே, இளமை வாய்ந்த பெண் வாழும் ஊரின் பகுதி நிலையாமை பெறுதல் என்றவாறு. இனி, பால் – ஊழ் என்ற பொருளைத் தரும். எனவே, இளமை வாய்ந்த பெண்ணிடத்து வேந்தன், தான் பெற்ற ஊழால் எதிரூன்றி நிலையாமையைப் பெறுதல் என்றும் பொருளமையும்” என்று புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி நூலில் மகட்பாற்காஞ்சி பற்றி விளக்கம் தருகிறார்சிவபாத சுந்தரனார்.


உரையாசிரியர்கள்

மகட்பாற்காஞ்சி குறித்து உரையாசிரியர்கள் பலரும் விளக்கியுள்ளனர். “ஒத்து மாறுபட்டுத் தன்மேல் வந்த வேந்தனோடு தன் தொல்குலத்து மகட்கொடை அஞ்சிய மகட்பாற்காஞ்சியும்” என்று இளம்பூரணர் குறிப்பிடுகிறார். “பெண் கோலொழுக்கத்தினொத்து மறுத்தல் பற்றிப் பகைவனாய் வலிந்து கோடற்கு எடுத்து வந்த அரசனோடு முதுகுடித் தலைவராகிய வாணிகரும் வேளாளருந் தத்தம் மகளிரைப் படுத்தற்கு அஞ்சிய மகட்பாற்காஞ்சி என்றும் மேலும் “வேந்தியலாவது உயிர் போற்றாது வாழ்தலின், அவரது நிலையாமை நோக்கி, அவரோடொத்து மகளிரைப் படுத்தற்கஞ்சி மறுப்பாராதலின் அஞ்சியவென்றும் மேல்வந்தவென்றுங் கூறினார்” என்றும் நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.

“குடித்தொன்மையில் ஒவ்வா நிலையில் ஒத்தானாகக் கருதி மகள் கொள்ளப் படையொடு வந்த மன்னனொடு தொல்குடிமகளைப் படுத்தலஞ்சி, அதை விலக்க அவள் தனையர் வந்தவனோடு தம்முயிரைப் பொருட்படுத்தாது பொரும் மகட்பாற்காஞ்சியும்” என்று சோமசுந்தர பாரதியார் குறிப்பிடுகிறார்.

“பெண் கொடுக்க மறுத்தமையால், வலிதிற் கோடற்கு வந்த அரசனோடு பழங்குடிப் பிறந்தோர் தம் மகளைச் சேர்த்தற்கு அஞ்சும் மகட்பாற்காஞ்சியும், வலிதிற் கோடற்கு வந்த அரசனுக்குத் தம் மகளைக் கொடுக்க அஞ்சும் மகட்பாற்காஞ்சி என்க. வலிய எடுத்துச் செல்ல வந்த அரசனுக்குத் தன் மகளைக கொடுத்தலை மறுத்து, அவனோடு போர் செய்தேனும் இறப்பதேயன்றி அவனுக்குக் கொடுக்கக்கூடாது என எண்ணுவதால் மகட்பாற்காஞ்சியாயிற்று, மகளால் தன் நிலையாமை குறித்தது” என்றும் புலவர் குழந்தை குறிப்பிடுகிறார். குடிப்பெருமை காரணமாகவும் அரசவாழ்வின் நிலையாமைக் காரணமாகவும் மகட்கொடை மறுத்துள்ளனர். பெண்கேட்டு வந்த அரசனோடு குடியினர், போர்புரியவும் தயாராக இருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

மகட்கொடை மறுப்பால் போர் நிகழ்வு ஏற்படப் போவதாகப் பாடல்கள் உள்ளன. ஆனால் போர் நிகழ்ந்தது பற்றிய குறிப்பு இல்லை. வேந்தனின் வெஞ்சினத்தால் இவ்வூர் என்ன ஆகுமோ என்று இரங்கிப் பாடுவதாகவே பாடல்கள் அமைந்துள்ளன.

“இன்ன மறவர்த் தாயினும், அன்னோ!
என்னா வதுகொல் தானே –
நன்னல் வேலிஇப் பணைநல் லூரே! (புறம். 345)

எனவும்,

“ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ” (புறம். 354)

எனவும்,

“என்ஆ வதுகொல் தானே” (புறம். 351)

எனவும்,

“பெருங்கவின் இழப்பது கொல்லோ” (புறம். 341)

எனவும் வரும் பாடலடிகள் மூலம் மகட்கொடை மறுப்பால் ஊர் அழியப் போகும் சூழல்கள் காட்டப்பட்டுள்ளன.

“நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப, வயின்தொறும்,
செந்நுதல் யானை பிணிப்பம்
வருந்தல மன்எம் பெருந்துறை மரனே” (புறம். 348)

என்னும் பாடற்பகுதியும்

“மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும்
நீஇர் இன்மையின், கன்றுமேய்ந்து உகளும்;
ஊரது நிலைமையும் இதுவே மற்றே” (புறம். 355)

என்னும் பாடற்பகுதியும் ஊரது அழிவின் உறுதியைப் பாடியுள்ளதை அறிய முடிகிறது.

மகட்கொடை வேண்டியோர் மூவேந்தர்களே

முதுகுடி மன்னரிடம் மகட்கொடை வேண்டியோர் வேந்தரே என்பது எல்லாப் பாடல்களிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால், மகட்கொடை வேண்டிய வேந்தரின் இயற்பெயர் எங்கும் குறிப்பிடப்பெறவில்லை. புறநானூற்றில் சேர, சோழ, பாண்டியர் மட்டுமே வேந்தர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். குறுநில மன்னர்களை வேந்தர் எனக் குறிப்பிடும் மரபு புறநானூற்றில் எங்கும் இடம் பெறவில்லை. எனவே, மகட்பாற்காஞ்சிப் பாடல்களில் வேந்தர் எனக் குறிப்பிடப்படுவோர் மூவேந்தர்களே. இப்பாடல்கள் எதிலும் இவர்களின் இயற்பெயர் சுட்டப்பெறவில்லை.

“வேம்பு மாரும் போந்தையு மூன்றும்” (புறம். 338)

எனும் புறப்பாடலில் வேம்பு, ஆர் (அத்தி), போந்தை (பனம்பூ) அணிந்தவர் எனக் குறிப்பிடுதல் வழி வேந்தர் மூவேந்தரே என்பது உணர்த்தப்பட்டுள்ளது.

“ஆர்கலியினனே சோணாட்டண்ணல்” (புறம். 337)

என வரும் அடியும் சோழ மன்னன் மகட்கொடை வேண்டியதைக் காட்டுகிறது.

காடுவாழ்த்து

காடுவாழ்த்து என்னும் துறையில் அமைந்த பாடல் ஒன்று மட்டுமே. விரிந்த இடத்தையுடைய உலகத்து இயல்முறை நன்றாய் உணருமாறு பிறந்தோரெல்லாம் இறந்துபோகவும் எஞ்ஞான்றும் இறப்பின்றி நிலைபெற்ற புறங்காட்டை வாழ்த்தும் காஞ்சி என்பதைத் தொல்காப்பியம்,

“மலர்தலை உலகத்து மரபு நன்கு அறியப்
பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்து” (15)

என்று நூற்பா மூலம் அதைக் குறிப்பிடுகிறது.

புறப்பொருள் வெண்பாமாலையில் காஞ்சித்திணையில் காடுவாழ்த்து என்ற துறை காணப்படவில்லை. பதிலாகப் பொதுவியல் திணையில் வைக்கப்பட்டுள்ளது. உலகிடத்து எஞ்சியோர் பலருக்கும் நிலையாமையினை அறிவுறுத்துவது போல முழங்கும் பெரிதான முழக்கத்தையுடைய காடுகாட்டை வாழ்த்தியது காடுவாழ்த்து ஆகும்.

“பல்லவர்க் கிரங்கும் பாடிமிழ் நெய்தல்
கல்லென ஒலிக்கும் காடு வாழ்த்தின்று” (16)

என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது. காடு படர்ந்து, கள்ளி மிகுந்து, பகற்போதின்கண்ணும் கூகைகள் கூவுமாறு இருள் அடர்ந்து, பிளந்த வாயுடைய பேய்மகளும் ஈமத்தீயும் நிறைந்து, புகைபடர்ந்த இம்முதுகாடு, மனங்கலந்த காதலர்கள் அழுது அழுது பெருக்கிய கண்ணீரால், சுடலையே வெந்து நீரான சாம்பலை அவிக்குமாறு விளங்குகிறது. தன்னை எதிர்த்த எல்லாரையும் வெற்றி கண்டு, உலக உயிர்களுக்கெல்லாம் தானே முடிவிடமாய் விளங்குவது. தன்னைப் புறங்கண்டு மீள்வோரை என்றும் கண்டறியாதது அது என்று சுடுகாட்டை வாழ்த்துதலின் மூலம் உலகின் நிலையாமை கூறப்படுகிறது. பாடியவர்: தாயங்கண்ணனார்; திணை: காஞ்சி; துறை: பெருங்காஞ்சி.

“களரி பரந்து கள்ளி போகிப்
பகலும் கூஉங் கூகையொடு, பிறழ் பல்
ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்று, இம் மஞ்சுபடு முதுகாடு
நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்” (புறம். 356)

என்று புறநானூற்றுப் பாடல் விளக்குகிறது.

உ. வே. சா. அவர்களும் ஒளவை சு. துரைசாமி பிள்ளை அவர்களும் இப்பாடலை மகட்பாற்காஞ்சித் துறைக்குரியதாகச் சுட்டுகின்றனர். இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் இதனைக் காடு வாழ்த்து என்னும் துறைக்கே எடுத்துக்காட்டாகக் கூறுவர். உலகில் பிறந்தோர் எல்லாம் இறந்து போகவும் தான் மட்டில் செல்லாத நிற்கும் முதுகாடு அதனால் காடுவாழ்த்து எனப்பட்டது. இப்பாடல் மகட்பாற்காஞ்சி என்று குறிக்கப்பட்டாலும் தொல்காப்பியர் கூறும் காடு வாழ்த்து என்னும் துறைக்கே பொருத்தமுடையது. நிலையாமை உணர்த்துவதால் காஞ்சித்திணையில் பொருந்துகிறது.

பெருங்காஞ்சி

மனிதனின் இறப்பைக் கூறி, நிலையாமையை வற்புறுத்துவது பெருங்காஞ்சி ஆகும். புறநானூற்றில் 357, 359, 360, 365, 366 ஆகிய ஐந்து பாடல்கள் பெருங்காஞ்சித் துறையில் அமைந்துள்ளன. இவை தவிர, புறநானூற்றில் பொதுவியல் என்ற திணையிலும் பெருங்காஞ்சிப் பாடல்கள் சில அமைந்துள்ளன (அவை இங்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை). பிறரால் தடுத்தற்குரிய கூற்றம் வருமெனச் சான்றோர் சாற்றிய பெருங்காஞ்சி என்பதை,

“மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருங்காஞ்சி” (17)

என்கிறது தொல்காப்பியம்.

புறப்பொருள் வெண்பாமாலை காஞ்சித்திணையில் வரும் பெருங்காஞ்சி இதனின் வேறுபட்டது.

“தாங்கு திறல் மறவர் தத்தம் ஆற்றல்
வீங்குபெரும் படையின் வெளிப்படுத்தன்று” (18)

என்று போர் வலிமையைக் குறிப்பதாகவே உள்ளது.

“மலையோங்கிய மாநிலத்து
நிலையாமை நெறியுரைத்தன்று” (19)

என்று புறப்பொருள் வெண்பாமாலையில் பொதுவியல் என்ற திணையில் வரும் பெருங்காஞ்சி தொல்காப்பியர் சாற்றிய நிலையாமைப் பொருளோடு ஒத்து வருவதைக் காணலாம்.

சிறுசினமும் பல கேள்வியும் நுண்ணுணர்வும் பெருங்கொடையும் பணிமொழியுமாகிய நற்பண்பு நற்செய்கைகளால் பலர்க்குப் பயன்பட வாழ்ந்து இன்பமாக அரசியல் நடத்திய வேந்தர் மிகச் சிலரேயாவர். அதனை அடைய வழி அறியாதவர் தாம் பகைவர். அத்தகையோர் செல்வமும் நிலைத்து நில்லாது. இன்றும் செல்வத்தின் பண்பு அதுவே. அதனால் நீ ஒழுக்கம் குன்றாமல், இரவலர் இன்மை தீரம் கொடுத்தலைக் கைவிடா தொழிக; மேற்கூறிய ஒழுக்கக் குறைவின்றித் தாம் உடையது பகுத்துண்டு வாழ்வோருள்ளும் ஈமத்தின்கண் எரிவாய்ப்புக்க பின்னும் புகழ் வாய்த்திலர் பலர் என்று தந்துமாறனுக்கு அறிவுரை கூறுகிறார். இதனைப் பாடியவர்: சங்க வருணர் என்னும் நாகரியர்; திணை: காஞ்சி; துறை: பெருங்காஞ்சி.

“அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது;
இன்னும் அற்று, அதன் பண்பே; அதனால்
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில்
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி…” (புறம். 360)

என்னும் பாடற்பகுதியால் அறியலாம்.

புறப்பொருள் வெண்பாமாலையை ஒட்டிப் புறநானூற்றிற்குத் திணை, துறை வகுக்கப்பெற்றிருந்தால் மேலே சுட்டப்பட்ட ஐந்து பாடல்களுக்கும் பொதுவியல் திணை என்றே வகுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் காஞ்சித்திணை என்று குறிக்கப்பட்டுள்ளது. இதன்வழி தொல்காப்பியத்தின் அடிப்படையில் புறநானூற்றுப் பெருங்காஞ்சித்துறை அமைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.



மனையறம் துறவறம்

மனையறம் துறவறம் என்ற ஒரு துறை தொல்காப்பியத்திலும் புறப்பொருள் வெண்பாமாலையிலும் இல்லை. புறநானூற்றிற்குத் துறை வகுத்தோர் புதியதாக இத்துறையை வகுத்துள்ளனர். இப்பயன் பொருந்திய பெரிய நிலவுலகம் ஒருபகல் நேரத்திலும் எழுவரைத் தலைவராகக் கொள்ளும் நிலையாமையினை உடையது. அதனால் அறிந்தோர் தவத்தைக் காதலித்து வையத்தில் பற்றுவிட்டனர். திருமகள் பற்றுவிட்டோரை நீங்கமாட்டாள். பற்றிலே அழுந்திருப்போரைத் திருமகள் கைவிட்டு நீங்குவாள். ஆதலால் தவமே செய்யத்தக்க ஒன்றாகும் என்று வான்மீகியார் வற்புறுத்தியுள்ளார்.

“பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி யற்றே!
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி யனைத்தும் ஆற்றாது; ஆகலின்,
கைவிட்டனரே காதலர்; அதனால்
விட்டோரை விடாஅள், திருவே;
விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே” (புறம். 358)

என்னும் புறநானூற்றுப் பாடல் மூலம் மனையறத்தினும் துறவறமே சிறந்தது என்பதை அறிய முடிகிறது. மனையறம் துறவறம் என்ற துறை தொல்காப்பியத்தில் காணப்படவில்லை என்றாலும் நிலையாமை பொருளில் வருவது கவனிக்கத்தக்கது.

முடிவுரை

* புறநானூற்றில் காஞ்சித்திணைக்குரியனவாக 32 பாடல்கள் அமைந்துள்ளன. இத்திணைக்குரிய துறைகளாவன வஞ்சினக்காஞ்சி, தொடாக்காஞ்சி, பூக்கோட்காஞ்சி, மகட்பாற்காஞ்சி, காடுவாழ்த்து, பெருங்காஞ்சி, மனையறம் துறவறம் ஆகியனவாகும்.

* புறநானூற்றில் வரும் வஞ்சினக்காஞ்சிப் பாடல்கள் தொல்காப்பியம் கூறுகின்ற விளக்கத்தையொட்டியே வருகின்றன. புறப்பொருள் வெண்பாமலையிலும் இக்கருத்து ஒத்துக் காணப்படுவதை அறிய முடிகிறது.

* தொல்காப்பியம் கூறுகின்ற தொடாக்காஞ்சி என்ற துறை புறப்பொருள் வெண்பாமாலையில் சிறிது மாற்றத்துடன் காணப்படுகிறது. புறநானூற்றில் வரும் தொடாக்காஞ்சிப் பாடல் தொல்காப்பியத்தின் விளக்கமாகவே அமைந்துள்ளது.

* பூக்கோட்காஞ்சி என்ற துறை தொல்காப்பியத்தில் இல்லை. புறப்பொருள் வெண்பாமாலையில் இத்துறை காணப்பெறுகிறது. புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் விளக்கமே புறநானூற்றுப் பாடலுக்குப் பொருந்துகிறது.

* புறநானூற்றில் மகட்பாற்காஞ்சிப் பாடல்கள் தொல்காப்பியம் கூறுகின்ற நிலையாமைப் பொருளில் வருவதை அறிய முடிகிறது.

* புறநானூற்றில் வரும் காடுவாழ்த்து என்ற பாடல் தொல்காப்பியம் கூறுகின்ற விளக்கத்தை ஒட்டி அமைகிறது. புறப்பொருள் வெண்பாமாலையில் பொதுவியல் திணையில் வரும் காடுவாழ்த்து துறையோடு இக்கருத்து ஒத்து வருவதை அறிய முடிகிறது.

* புறநானூறு காஞ்சித்திணையில் வரும் பெருங்காஞ்சிப் பாடல்கள் தொல்காப்பியம் கூறுகின்ற நிலையாமைப் பொருளில் வருகிறது. புறப்பொருள் வெண்பாமாலையில் இத்துறை போர் வலிமையைக் குறிப்பதாகப் பொதுவியல் திணையில் வைக்கப்பட்டுள்ளது.

* மனையறம் துறவறம் என்ற துறைக்குரிய பாடலும் நிலையாமைக் காஞ்சிக்கு உரியதேயன்றி எதிரூன்றுதலாகிய காஞ்சிக்கு உரியது அன்று.

* மனையறம் துறவறம் என்ற துறை தொல்காப்பியத்திலும் புறப்பொருள் வெண்பாமலையிலும் காணப்படவில்லை. புறநானூற்றிற்குத் துறை வகுத்தோர் தேவைக்கும் வளர்ச்சிக்கும் ஏற்பப் புதிய துறை அமைத்துக் கொண்டனர் என்பதை அறிய முடிகிறது.

அடிக்குறிப்புகள்

1. கி. வா. ஜகந்நாதன், புறநானூறும் தமிழரும், பக். 46 – 47

2. அ. சீனிவாசன், புறத்திணை, ப. 89

3. தொல். பொருள். நூ. எ. 76

4. மேலது. நூ. எ. 77

5. புறப்பொருள் வெண்பா மாலை, 69

6. தொல். புறத். நூ. எ. 24

7. பு. வெ. மா. 79

8. தொல். புறத். 77

9. பு. வெ. மா. 77

10. பு. வெ. மா. 70

11. தொல். நூ. எ. 1025

12. பு. வெ. மா. 84

13. மேலது. 94

14. மேலது. 123

15. தொல். புறத். 77

16. பு. வெ. மா. 274

17. தொல். புறத். 77

18. பு. வெ. மா. 66

19. மேலது. 270

துணைநூற்பட்டியல்

1. சோமசுந்தரனார், பொ. வே, (உ. ஆ), சங்க இலக்கியம் மூலமும் உரையும், கழக வெளியீடு, சென்னை, 2007.

2. இளம்பூரணர் (உ. ஆ), தொல்காப்பியம், முல்லை நிலையம், சென்னை, 1998.

3. புலியூர்க்கேசிகன் (உ. ஆ), புறப்பொருள் வெண்பா மாலை, சாரதா பதிப்பகம், சென்னை, 2009.

4. கி. வா. ஜகந்நாதன், புறநானூறும் தமிழரும், சக்தி மலர், சென்னை, 2019.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p330.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License