Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

மதுரைக் காஞ்சியில் நிலையாமைக் கூறுகள்

முனைவர். சி. சேதுராமன்


உலகமும் உலகத்துத் தோன்றும் யாவும் என்றும் நிலையில்லாதன. நிலைபேறுடையது சிறந்த புகழ் ஒன்றே. உயிர்களானது அறவழிப்படுமாயின் நிலையில்லா உடம்பை விட்டு நிலைபேறாம் - வீடுபேற்றை அடையும். இத்தகு கருத்தினை உள்ளடக்கியது நம் சங்கப் புலவர்களின் காஞ்சித் திணைக் கூறுகள். இவ்வியல், மதுரைக் காஞ்சியில் இடம்பெறும் நிலையாமைக் கூறுகள் பற்றி விளக்குவதாக அமைந்துள்ளது.

இன்பமும் துன்பமும்

இன்ப மயமான காட்சிகளினூடே துன்பக் கலப்பு இல்லாமல் இல்லை; பிறப்பு என்னும் போதே இறப்பும், புணர்வு என்னும் போதே பிரிவும் கலந்துதான் தோற்றமளிக்கின்றன. இவை ஒருவருடைய வாழ்வில் இரவும் பகலும் போல மாறி மாறி வருபவை என்பதை,

‘‘இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
நன்பகல் அமையமும் இரவும் போல
வேறு வேறு இயலஆகி மாறு எதிர்ந்து
உளஎன உணர்ந்தனை ஆயின் ஒரூஉம்
இன்னா வெஞ்சுரம் நல்நசை துரப்ப
துன்னலும் தகுமோ? துணிவுஇல் நெஞ்சே’’ (அகம்., பா.எ., 327, பா.வரி: 1-6)என வரும் அகநானூற்றின் வரிகள் எண்ணிப் பார்க்கச் செய்கின்றன. திருக்குறளும், இன்பம் விழையாதானும் துன்பத்திற்கே துன்பம் செய்து இன்பம் கொள்வான் என்பதை,
‘‘இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்’’. (திருக்குறள்., அதி : 63, கு.எ : 628)

என்ற குறள் மூலம் வாழ்வின் இன்ப துன்பம் பற்றிய கருத்தை உணரச் செய்கின்றது. மாங்குடிமருதனார், இன்பம் நிலைபெற்றுப் பெருகவும் துன்பம் கெடவும், வேண்டும் என்பதை,

‘‘கேட்டிசின் வாழி! கெடுகநின் அவலம்!’’
கெடாது நிலைஇயர், நின் சேண்விளங்கு நல்லிசை!’’ (மதுரைக்காஞ்சி: 208 - 209)

எனப் பாண்டியன் நெடுஞ்செழியனைப் புகழ்வது போல் உலகோர்க்கு இன்பதுன்பம் பற்றிச் சுட்டிக் கூறியுள்ளார். ஒரே சமயத்தில் ஒரு பால் மகிழ்வும் மற்றொரு பால் துக்கமும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. உலகினைப் படைத்த முதல்வன் இப்படி ஒன்றையொன்று ஒத்துவராத வெவ்வேறு மாறுபட்ட இயல்புகளை ஒன்றாக நிகழும் வண்ணம் அமைத்திருப்பது மிகவும் விந்தையானது. இந்த உலகியலை உற்றுணர்ந்து தமது கருத்தை,

‘‘ஓரி னெய்தல் கறங்க வோரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பனிவார் புறைப்பப்
படைத்தோன் மன்றவப் பண்பி லாளன்
இன்னா தம்மவிவ் வுலகம்
இனிய காண்கித னியல்புணர்ந் தோரே’’ (புறம்., பா.எ : 194)

- என்ற புறப்பாடல்வழி பக்குடுக்கை நன்கணியார் புலப்படுத்தியுள்ளார்.இப்பாடலுக்கு உரை விளக்கம் தந்த ஔவை சு. துரைசாமி பிள்ளை, ‘‘இவர் காலத்தே நாட்டில் வாழ்ந்த வேந்தார்கட்டும் ஏனைச் செல்வராகட்டும் உலக வாழ்வில் பெரு விருப்பந் தோன்றி, ‘‘மெய்வலி யுடையார்க்கே இவ்வுலகம் உரியது., உலகத்திற்கு பிறந்தார் அனைவர்க்கும் பொதுவென்பது பொருந்தாது’’ என்றும் ‘‘அவ்வலியைக் கெடாது பேணிக் கொள்ளற்குச் செல்வம் இன்றியமையாமையின் தேடுவது வலியுடையார்க் கேற்ப தென்றும் கருதி, அவற்றிற்கேற்ப நாளும் போரும் பொருளீட்டமுமே நினைந்தொழுகப் பண்ணிற்று. இதன் விளைவாக நாட்டில் இன்ப வாழ்வுக் கிடனில்லையாயிற்று. இதனைக் கண்டார் நம் பக்குடுக்கை நன்கணியார். ‘‘இவ்வுலகம் இனிதன்று., ஒரு மனையில் சாப்பறை முழங்க, ஒரு மனையில் மணப்பறை முழங்குகிறது. ஒருத்தி பூவணியாற் பொற்புற்று விளங்க, ஒருத்தி கணவனைப் பிரிந்து கண்கலங்கி நிற்கிறாள். இவ்வாறமையுமாறு இவ்வுலகினைப் படைத்தவன் பண்பறிந் தொழுகும் பாடில்லாதவனெ யாவன். இவ்வுலகில் இத்தன்மையை யறிந்தவன் இதனிடையே கிடந்து உழல வேண்டுமென்பதன்று. இதனிற் சிறந்த இன்ப வுலகத்து இன்ப வாழ்வு காண்டலை வேண்டியவனாவான்’’ என இப்பாட்டால் வற்புறுத்தலானார்’’ எனலாம் (புறம்., பக்., 418 – 419).

இன்பமும் துன்பமும் கலந்து நிற்கும் இந்த உலகில் இன்பம் பெருக்கும் பேரின்ப வாழ்விற்கு ஏதுவான நல்ல செயல்களை அறிந்து செய்க! என அறிவுறுத்துவராயினர் சங்கப் புலவர்கள்.

நிலையாமை

தோற்றமும் மறைவும் என்றும் நிகழும் என்னும் நிலையாமை உணர்ச்சி அறிவாளர்களிடையே வேரூன்றியிருந்தது. ஒருவனது வாழ்நாள், அவ்வாழ்நாளில் அவனது இளமை, செல்வம், யாக்கை எல்லாம் நிலையற்றவை. மூப்பும் மரணமும் நேர்தல் எல்லார்க்கும் ஒத்தது. இவற்றையெல்லாம் சங்கப் புலவர்கள் ஆங்காங்கே குறிப்பாகத் தம் பாடல்களில் சுட்டிச் செல்கின்றனர். இவ்வுலகத்து நிலையில்லாதனவாகிய இளமை, செல்வம், யாக்கை இவை மூன்றும் எனக் கொண்டு நிலையுடையதுவாகப் புகழ் ஒன்றையே கூறுவாராயினர். உலகின் நிலை இவ்வாறாக இதில் பிறந்த பொருள்களின் நிலை கூறல் வேண்டுமோ? அவை யாவும் நிலையற்றனவே. ஒருவனுடைய ஆயுள் காலம் இவ்வளவு என்று அறுதியிட்டு அறிந்தார் எவரும் இலர். இக்கருத்து,‘‘வாழ்நாள் வகையளவு அறிஞரும் இல்லை’’ (நற்றிணை., பா.எ: 314, பா.வ : 1)

- என்ற நற்றிணைப்பாடல் வரியாலும்,

‘‘நாற்றம் சால்நளி பொய்கைஅடை முதிர்முகையிற்குக்
கூற்று ஊழ்போல் குறைபடூஉம் வாழ்நாள்’’ (கலி., பா.எ : 17, பா.வரி : 11-12)

-என்ற கலித்தொகைப் பாவாலும் வாழ்க்கை நிலையற்றது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. காற்றைக் காட்டிலும் நிலையற்ற வாழ்நாள் கழியும், கனவுப் பொருள்களே போல் நாள்கள் ஒன்றன்பின் ஒன்றாய் ஓடி மறைந்து இளமை நீங்கி முதுமை வருதலும் எல்லார்க்கும் நேர்கின்ற ஒரு நிலைமை. இதனை,

‘‘............... நாளும்
கனவுக் கழிந்தனை யவாகி, நனவின்
நாளது செலவும் மூப்பினது வரவும்
அரிதுபெறு சிறப்பின் காமத்து இயற்கையும்
இந்நிலை அறியாய்!’’ (அகம்., பா.எ : 353, பா.வரி : 2-6)

-எனும் அகப்பாடல் அறியக் கூறுகின்றது.

இளமை நிலையாமை

இளமை ஆற்று நீர் ஓடுதல் போல மிக வேகமாகவே ஓடி மறைதலும், குளத்து நீர்போல் ஒரு காலைக் கொருகால் குறைந்து படுதலும் இளமையும் வாழ்நாளும் - மூப்பும் மரணமும் கனவு நிகழ்ச்சி போன்று ஆதலும் மதுரைக்காஞ்சியில்,

‘‘பொய்அறியா வாய்மொழியால்
புகழ்நிறைந்த நல்மாந்தரொடு
நல்ஊழி அடிப்படர
பல்வெள்ளம் மீக்கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக! (மதுரைக்காஞ்சி : 19-23)

எனவும்,‘‘பணைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்
கரைபொருது இரங்கும் கனைஇரு முந்நீர்த்
திரையிடு மணலினும் பலரே உரைசெல
மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே!’’ (மதுரைக்கா : 234-237)

எனவும் கூறி, இளமை முதல் உலகத்து யாவற்றின் நிலையாமையினை மிக நுண்மையாக உணர்த்தப்பட்டுள்ளது.

மரணம் யாவர்க்கும் வருவது உறுதி. உலகமெல்லாம் புகழ் பரவ ஒருகுடையின் கீழ் ஆண்ட மன்னரும் இறுதியில் மாய்ந்தனர் உயிரை நிலையாகப் பெறுதல் அரசர்க்காயினும் பிறர்க்காயினும் இயலாததொன்றாகும் என்பதை,

‘‘விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்
ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித்து ஆக
அரவுஎறி உருமின் உரறுபு சிலைப்ப
ஒருதாம் ஆகிய பெருமை யோரும்
தம்புகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனரே’’ (புறம்., பா.எ : 366, பா.வரி : 1-5)

-என்ற புறநானூற்று வரியும்

‘‘இளமையும் காமமும் நின்பாணி நில்லா’’ (கலி., பா.எ : 12, பா.வ.: 14)

-என்ற கலித்தொகைப் பாடலும் கூறும் இளமையினது நிலையாமை மதுரைக்காஞ்சியோடு ஒப்புநோக்கற்பாலது. திருவள்ளுவர் கூறும்,

‘‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு’’ (திருக்குறள்., அதி : 34, கு.எ : 336)

-எனும் குறளும் வாழ்வு நிலையற்றது என்பதை உணரச்செய்கின்றது.

செல்வம் நிலையாமை

வாழ்நாளை வளமாக்கும் பொருளோ எல்லார்க்கும் ஒரு படித்தாகக் கிட்டுவது இல்லை. கிட்டிய பொருள் நிலையாக இருப்பதும் இல்லை. அது மாறிமாறி உறழ்ந்து கொண்டேயிருக்கும். செல்வத்தின் நிலைத்தன்மையின்மைக்குக் காரணம் எதுவாயினும், மதுரைக்காஞ்சியில் இருவேறு நிலையில் இழப்பதாகக் காட்டுகிறார். ஒன்று போர் மற்றொன்று பரத்தை வழிச் சேரல். பாண்டியனின் பெருமை கூறும் இடத்து, பகைவரின் செல்வங்கள் போரினால் அழிந்து பட்ட நிலையை,

‘உறுசெறுநர் புலம்புக்கு அவர்
கடிகாவின் நிலை தொலைச்சி,
இழிபு அறியாப் பெருந்தண் பணை
குரூஉக் கொடிய எரிமேய
நாடுஎனும் பேர்காடு ஆக,
ஆசேந்த வழிமா சேப்ப,
ஊர்இருந்த வழிபாழ் ஆக’’ (மதுரைக்காஞ்சி : 152 - 158)

என்றும் மேலும், அவ்வூரில் வாழ்ந்தேன்,

‘‘கொழும் பதியகுடி தேம்பிக்
செழுங்கேளிர் நிழல்சேர’’ (மதுரைக்கா : 167 - 168)

-என்ற மதுரைக்காஞ்சி வரிகளால் போரின் அழிவால் தாம் வாழும் குடிபெயர்ந்து சென்றனர் என்கிறார் மாங்குடி மருதனார். மேலும், பாண்டியன் தன்னைப் பணிந்தவர் தம் நிழல் வாழ்ந்தனர் என்றும் பணியாதாரினைப் போரிட்டு அடிபணியச் செய்து அவர்தம் செல்வத்தினை, திறையாகப் பெற்றார் எனவும் பின்வருமாறு கூறியுள்ளார் என்பது,

‘‘பணிந்தோர் தேஎம் தம்வழி நடப்ப,
பணியார் தேஎம் பணித்துத் திறைகொண்மார்’’ (மதுரைக்கா:229-230)

எனும் வரிகளால் அறியக் கிடக்கின்றது. இவைகள் போர் நிகழ்வால் ஏற்படும் செல்வ நிலையாமை எனலாம்.

செல்வத்தின் நிலையாமையை உணர்ந்த சங்கத்தமிழர், செல்வம் நிலையில்லாமல் சகடக்கால் போல் சுழலும் தன்மையது என்றும் கூறுவராயினர். பரத்தை வழிச் சேரலிலும் செல்வம் நிலையற்றதாகும் என்பதை,‘‘திறந்து மோந்தன்ன சிறந்து கமழ்நாற்றத்து,
கொண்டல் மலப்ப புதல்மானப் பூவேய்ந்து,
நுண்பூண் ஆகம் வடுக் கொள முயங்கி,
மாயப் பொய்பல கூட்டி கவவுக் கரந்து,
சேயரும் நணியரும் நலன்நயந்து வந்த
இளம்பல் செல்வர் வளம்தப வாங்கி,
நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும்
மென்சிறை வண்டினம் மான புணர்ந்தோர்
நெஞ்சு ஏமாப்ப இன்துயில் துறந்து
பழம்தேர் வாழ்க்கைப் பறவை போல
கொழுங்குடிச் செல்வரும் பிறரும் மேஎய’’ (மதுரைக்கா :567 - 577)

-என்று கூறுவதன் மூலம் செல்வம் நிலையற்றது என்பதை உணரச் செய்துள்ளார். பரத்தையர் வாழ்வு பற்றிக் கூறும் இளங்கோவடிகள்,

‘‘மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள்’’ (சிலம்பு., கானல்வரி., 52:3)

என்கிறார். அவர்களுடன் செல்வர்கள் சேர்ந்து பிரிந்த நிலைபற்றி கோவலன் வழி பின்வருமாறு கூறுமிடத்து,

.........‘‘தன்பைந்தொடி
வாடியமேனி வருத்தம் கண்டு, ‘‘யாவும்
சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக்
குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணுத்தரும் எனக்கு’ என்ன-’’ (சிலம்பு., கனாத்திறம் உரைத்த காதை., பா.வரி., 68 – 71)

என்கிறார். பொருட்செல்வம் தொலைந்து போயின எனக் கூறுவதால் செல்வத்தின் நிலையாமை தீயொழுக்கத்தின் கண்ணதாயும் உண்டென்பதை தெளிவுபடுத்தியுள்ளார் ஆசிரியர். வாழ்நாளை வளமாக்கும் பொருளோ எல்லார்க்கும் ஒரு படித்தாகக் கிட்டுவதும் இல்லை. கிட்டிய பொருள் தானும் நிலையாக இருப்பதும் இல்லை அது மாறிமாறி உறழ்ந்து கொண்டேயிருக்கும். இதனை,

‘‘கிழவர் இன்னோர் என்னாது பொருள்தான்
பழவினை மருங்கின் பெயர்பு உறையும்’’ (கலி., பா.எ : 21, பா.வரி : 10-11)

என்னும் கலித்தொகைப் பாடல் எடுத்துரைக்கின்றது. இக்கருத்தை வள்ளுவர்,

‘‘கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளித் தற்று’’ ( திருக்குறள்., அதி : 34, கு.எ : 332)

என விளக்கியுள்ளார். இதற்கு உரைகூறும் பரிமேலழகர், பெருஞ்செல்வ’ மெனவே துறக்கச் செல்வமு மடங்கிற்று. ‘போக்கு’ மென்ற எச்சவும்மையான், வருகவென்பது பெற்றாம். அக்குழாய் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின்கட் பஃறிறத்தாற்றானே வந்து, அக்காரணம் போய வழித் தானும் போமாறு போல, செல்வமும் ஒருவன் நல்வினை காரணமாக அவன்மாட்டுப் பஃறிறத்தாற்றானே வந்து, அக்காரணம் போயவழித் தானும் போமென்றதாயிற்று’’ என்கிறார் (திரு.,பரிமேலழகர் உரை., ப., 122) செல்வம் பெற்றதனால் ஆயபெரும் பயனை அடைந்து, அறநிலை வழுவாது வாழ்ந்தார் செல்வமும் கூட நிலைத்து நில்லாது போல் விடுகிறதாம் என்று செல்வ நிலையாமையை,

‘‘பெரிது ஆராச் சிறுசினத்தர்
சிலசொல்லான் பலகேள்வியர்
நுண்ணுணர்வினாற் பெருங்கொடையர்
கலுழ்நனையாற் றண்டேறலர்
கனிகுய்யாற் கொழுந்துவையர்
தாழுவந்து தழுஉமொழியர்
பயனுறுப்பப் பலர்க்காற்றி
ஏமமாக விந்நில மாண்டோர்
சிலரே பெரும! கேளினி நாளும்
பலரே தெய்யவஃ தறியா தோரே
அன்னோர் செல்வமு மன்னி நில்லா
தின்னு மற்றதன் பண்பே யதனால்
......................’’ (புறம்., பா.எ.; 360, பா.வரி., 1-12)

புறநானூற்றில் தந்து மாறனுக்கு சங்க வருணரென்னும் நாகரையர் எடுத்துரைத்து ‘செல்வத்துப் பயன் ஈதலே’ என்பதை அறிவுறுத்தியுள்ளார். இதற்கு உரை விளக்கம் தரும் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, ‘‘நிலையாமை யறிந்து இந்நிலமாண்டோராகிய சிலரும், அறியாதார் பலருமாகிய இருதிறத்து வேந்தர் செல்வமும் நில்லாது; அதனால் நீ ஒழுக்கம் முட்டிலையாய் நிரப்பல் ஓம்புமதி யென்பவர், இவ்வுண்மையறிந்து பகுத்துண்பவர் பலரும் செல்வமும் வாழ்வும் நிலைபெறப் பெறுவர் போலும் என்னும் ஐயமறுத்தற்குப் ‘‘பலர் வாய்த்திரார் பகுத்துண்டோர்’’ என்றார். இனி தாம் உடையது பகுத்துண்போருள்ளும் ஒழுக்கமுட்டாது புகழ் வாய்ந்திருந்தவர் சிலரே பலர் அது வாய்த்திரார் என வுரைப்பினுமமையும். இதற்குப் புகழ் என ஒரு சொல் வருவித்துக் கொள்க’’ என்கிறார். (புறம்., ஔவை. சு. துரைச்சாமிப்பிள்ளை உரை., ப., 322).யாக்கை நிலையாமை

உலக வாழ்வில் ஒவ்வொன்றையும் உற்று நோக்கும் போது எங்கும் நிலையாமைத் தத்துவம் நிலைபெறுதல் விளங்கும் வாழ்நாள் முதலியன எல்லாமே நிலையற்றதாகி ஓடுகின்ற நிலையில் ஒவ்வொருவரும் தம் வாழ்நாளைப் பயனுடையதாகச் செய்ய வேண்டும். துன்புறும் நாள்கள் வரும் முன்பே குறித்த நற்செயல்களைப் புரிய வேண்டும். நற்செயல் புரிதற்குத் துறவு நெறியே சிறந்தது எனவும் கருதியுள்ளனர். இறந்துபடும் முன்னர் இல்லறம் கொண்டு துறவறம் காண தொல்காப்பியர்,

‘‘காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே’’ (தொல்., பொருள்., கற்பு., நூற்பா., 51)

என்கிறார். பொருநராற்றுப்படையில்,

‘‘தவம்செய் மாக்கள்தம் உடம்பு இடாஅது
அதன்பயம் எய்திய அளவை மான’’ (பொருநர்., பா.வரி : 91-92)

என்பதனால், தவம் இயற்றியோர் உரிய காலத்தில் தம் உடம்பை விடுத்து உயர்ந்த உலகாகிய வீட்டுலக இன்பத்தையும் அடைவர் என்கிறது எனலாம். ஏலாதி இயற்றிய கணிமேதையார்,

‘‘இளமை கழியும் பிணிமூப் பியையும்
வளமை வலியிவை வாடும் - உளநாளால்
பாடே புரியாது பால்போலுஞ் சொல்லினாய்!
வீடே புரிதல் விதி’’ ( ஏலாதி., பா.எ., 21)

என்கிறார். இதற்கு விளக்கவுரை தந்த அழகரடிகளாம் இளவழகனார், ‘‘பால்போலுஞ் சொல்லினாய்! இளமை நில்லாது கழியும், பிணியும் மூப்பும் வந்தடையும், செல்வமும் வலியும் வாடும், தானுள்ள நாளின்கண் இவ்வைந்தானும் வரும் துன்பத்தையே நுகர விரும்பாது, வீடு பெறுதலையே விரும்புதல் ஒருவர்க்கு நெறியாவது’’ என்கிறார். (ஏலாதி., அழகரடிகள் உரை., ப., 26)
எல்லோர்க்கும் இறப்பு வருதல் உறுதி அதனை இயற்றும் யமன் சிறிதும் காலம் தவறாது கடமையைச் செய்து விடுவான். இளமை கழிந்து மூப்பும் இறப்பும் வரும் முன்னே நல்லறம் செய்தல் வேண்டும் என்பதை,

‘‘இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்
உடையிலை நடுவனது இடைபிறர்க் கின்றித்
தாமே ஆண்ட ஏமங் காவலர்
இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக்
காடுபதி யாகப் போகித் தத்தம்
நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே
அதனால், நீயுங் கேண்மதி அத்தை! வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்க லுண்மை மாயமோ வன்றே
கள்ளி யேய்ந்த முள்ளியம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பு இலாஅ அவிப்புழுக்கல்
கைக்கொண்டு பிறக்குநோக்கா
இழிபிறப்பினோன் ஈயப் பெற்று
நிலம்கலனாக விலங்குபலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னே
செய்ந்நீ முன்னிய வினையே
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே’’ (புறம்., பா.எ : 363)என புறநானூற்றில் தேரையார் விரிவாக எடுத்துரைத்துள்ளார். ‘மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும்’ எனத் தொல்காப்பியப் பொருளதிகாரத்துள் புறத்திணையியலில் இடம் பெறும் காஞ்சித்திணையின் பெருங்காஞ்சித் துறைக்கு இளம்பூரணர் இப்பாடலை எடுத்துக் காட்டியுள்ளார். எவ்வளவு செல்வம் வாய்க்கப் பெற்ற போதிலும் நாட்டில் வாழும் குடிமக்களும் தீநெறி விலக்கி நன்னெறியில் செல்வோராக வாழ்தல் வேண்டும். பலவகை அறங்களும் சேர்ந்து விளங்கினால்தான் நாட்டுமக்கள் அமைதியாக வாழமுடியும் என்பதை, ‘‘அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!’’ (ஐங்குறுநூறு, பா.எ : 7, பா.வ. 2) எனும் ஐங்குறுநூற்றுப் பாடல்வரியாலும்,

‘‘நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லாரு முவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமாஞ் ரதுவே’’ (புறம்., பா.எ : 195, பா.வரி., 6-9)

என்ற புறநானூற்றின் நரிவெரூஉத்தலையார் பாடல் வரிகளாலும் வலியுறுத்திக் கூறப்படுகின்றன. திருவள்ளுவரும்,

‘‘ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்’’ (திருக்குறள்., அதி : 4., கு.எ. 32)

என்கிறார். முதுகாஞ்சியில் மறுபிறப்பு பற்றிய சிந்தனை முன்வைத்து நிலையாமை யுணர்த்துகிறார் மதுரைக் கூடலூர்க்கிழார். இக்கருத்தானது,

‘‘மறுபிறப் பறியா ததுமூப் பன்று’’ (முதுமொழி., அல்லபத்து, பா.எ : 10)

என்ற முதுமொழிக்காஞ்சி அல்லபத்துப் பாடற்கூற்றால் அறியலாகிறது. மேலும், ஈயாதவனுக்குப் புகழில்லை என்பதை,

‘‘சோராக் கையன் சொன்மலை யல்லன்’’ (முதுமொழி., அல்லபத்து, பா.எ : 4)

என்ற முதுமொழிக்காஞ்சி அல்லபத்தில் நான்காம் பாடல்வழிக் காணலாம். மதுரைக் காஞ்சியில் நிலையாமைத் திறம்கூறும் நிலையாக,

‘‘கொன்ஒன்று கிளக்குவல், அடுபோர் அண்ணல்!
கேட்டிசின் வாழி! கெடுகநின் அவலம்!
கெடாது நிலையியர் நின்சேண் விளங்கு நல்லிசை!’’ (மதுரைக்காஞ்சி : 207 - 209)

‘‘கரைபொருது இரங்கும் கனையிரு முந்நீர்த்
திரையிடு மணலினும் பலரே, உரைசெல
மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே!’’ (மதுரைக்காஞ்சி : 235 - 237)எனும் பாடல் வரிகள் மூலம் வீடுபேற்றின் நிமித்தத்தினை உணர்த்தி, நிலையாமையை வற்புறுத்தி நன்னெறிப் படுத்தியுள்ளார். வாழ்நாள் நிலையற்றது என்பதுணர்ந்த சங்கத் தமிழன் அதனோடு சேர்ந்து அழிய விரும்பினானில்லை. நிலையற்ற உலகில் நிலைபெற விரும்பினர் என்பதனைப் புறுநானூறு,

‘‘மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே’’ ( புறம்., பா.எ : 165, பா.வரி : 1-2)

என்கிறது. இந்த உலகில் புகழை அனைவரும் விரும்புகின்றனர் ஆனால், அதற்குரிய வழியை மட்டும் முழுதும் மேற்கொள்வாரில்லை’’ என்பர் அறிஞர் (அ.ச. ஞானசம்பந்தன்., அகமும் புறமும் (புறம்)., ப., 132).

தான் வாழ்நாள் பயனுடையதாக இருக்க வேண்டின்,

‘‘தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று’’ ( திருக்குறள்., அதி:24, கு.எ: 236)

என மொழிகின்றார் வள்ளுவப் பெருந்தகை. மாங்குடிமருதனாரும்,

‘‘மகிழ்ந்து இனிது உறைமதி, பெரும!
வரைந்து நீ பெற்றநல் ஊழியையே!’’ (மதுரைக்காஞ்சி : 781-782)

என பாண்டிய நெடுஞ்செழியனுக்குக் கூறுவார் போல் உலகமக்களுக்கு, வாழும் காலம் வரையறையற்றது இவ்வுலகத்தில் ஆண்டுமறைந்தோர் பலராவர் வாழும் நாள் வரை நல்லறம் செய்து இசையுடன் இருக்க,

‘‘பொய் அறியா வாய்மொழியால்
புகழ்நிறைந்த நல்மாந்தரொடு
நல்ஊழி அடிப்படர,
பல்வெள்ளம் மீக்கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக!’’ (மதுரைக்கா : 19-23)

என்று மொழிவதன் வழி, நன்னெறி புகட்டியுள்ளார்.

இக்கருத்தினை,

‘‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு’’ (திருக்குறள்., அதி:24, கு.எ: 231)

எனும் குறட்பாவுடன் ஒப்பு நோக்கத்தக்கது.


உலகத்து நிலையாமையாவது இளமை, செல்வம், யாக்கை போன்றன நிலையற்றதைக் குறிக்கும் எனக் கூறுவாராயினர் சங்கத் தமிழர். இளமையானது - நீர்க்குமிழிபோல் கழிவது. செல்வம் - கூத்தாட்டு அலைக்களம் போல் யாதொரு காரணத்திற்காகக் கூடிப்பின் அக்காரணம் நிறைவேறியவிடத்துக் களையும் நிலைத்தன்மையற்றது என்பது தெளிவாகிறது. யாக்கை - நேற்றிருந்தார் இன்றில்லை என்றார் போல வாழ்நாளின் முடிவு அறுதியிட்டுக் கூறுவதற்கியலாத வழக்கை உடையது எனில் பொருந்தும். உலகத் தோற்றமும் முடிவும் நிலையற்றவிடத்து நிலைபேறாகிய வீடுபேற்றையடைய அறநெறி வழுவாது, செல்வத்துப் பயன் ஈதல் என்பதைக் கைகொண்டு வாழ வழிகூறுவதாய் மதுரைக்காஞ்சியை மாங்குடிமருதனார் படைத்துள்ளார் என்பது நோக்கத்தக்கது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p35.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License