Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

பகவத்கீதையில் அட்டாங்க யோகம்!

முனைவர் சி. சேதுராமன்


பகவத்கீதை மகாபாரதத்தின் ஒரு கூறாக அமைந்துள்ளது. பாண்டவர்-கௌரவர்களிடையே மூண்ட பெரும் போர்க்களத்தின் நடுவில் இறைவன் கண்ணனால் அர்ஜுனனுக்கு எடுத்துரைக்கப்பட்ட நூல் பகவத்கீதையாகும். இம்மகாபாரதத்தை ஐந்தாவது வேதம் என்றும் கூறுவர். போர்க்களத்தினூடே மனதை ஒருநிலைப்படுத்தக் கூறப்பட்ட யோகமுறைகளே பகவத்கீதையாகும். பகவத்கீதை வாழ்வியல் நெறிமுறைகளை யோகநெறிகளாகக் கூறுகிறது.

பகவத்கீதையின் சிறப்பு

“அமிர்த சாத்திரம்” - அதாவது சாகாமலிருக்க வழி கற்றுக் கொடுக்கும் சாத்திரமாகிய பகவத் கீதையைச் சிலர் கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள். துரியோதனாதிகளைக் கொல்லும்படி அர்ஜுனனைத் தூண்டுவதற்காகவே, இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டனவாதலால், இது கொலைக்குத் தூண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூலென்று சிலர் பேசுகிறார்கள். கொலை செய்யச் சொல்ல வந்த இடத்தே, இத்ததை வேதாந்தமும், இத்தனை சத்வ குணமும், இத்ததை துக்க நிவர்த்தியும் இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவதென்னே என்பதை அச்சிலர் கருதுகின்றனர்.

துரியோதனாதியர் காமக் குரோதங்கள். அர்ஜுனன் ஜுவாத்மா. கிருஷ்ணன் பரமாத்மா. இந்த ரகசியம் அறியாதவருக்குப் பகவத் கீதை ஒருபோதும் அர்த்தமாகாது. சத்திரய அரசர் படித்துப் பயன்பெறச் செய்ய வேண்டுமென்பதே இந்த நூலில் விசேட நோக்கம். பூ மண்டலத்தாரனைவருக்கும் பொதுமையாகவே விடுதலைக்குரிய வழிகளை உணர்த்த வேண்டுமென்று கருதி எழுதப்பட்டதே பகவத் கீதை.

வேறு சிலர் பகவத் கீதையை சந்நியாச நூலென்று கருதுகிறார்கள். அதாவது பெண்டாட்டி பிள்ளைகளைத் துறந்து, தலையை மொட்டையிட்டுக் கொண்டு ஆண்டியாய்த் திரிவோருக்கு எழுதப்பட்ட நூலென்று நினைக்கிறார்கள். கடவுள் கர்ம யோகிகளிலே சிறந்தவன். அவன் ஜீவாத்மாவுக்கும் இடைவிடாத தொழிலை விதித்திருக்கிறான்; சம்சாரத்தை விதித்திருக்கிறான்; குடும்பத்தை விதித்திருக்கிறான்; மனைவி மக்களை விதித்திருக்கிறான்; சுற்றத்தாரையும் அயலாரையும் விதித்திருக்கிறான். நாட்டில் மனிதர் கூட்டுறவைத் துறந்து ஒருவன் காட்டுக்குச் சென்ற மாத்திரத்திலே அங்கு அவனுக்கு உயிர்க் கூட்டத்தின் சூழல் இல்லாமற் போய்விட மாட்டாது.எண்ணற்ற விலங்குகளும், பறவைகளும், ஊர்வனவுமாகிய ஜீவர்களும், மரம், செடி, கொடிகளாகிய உயிர்ப் பொருள்களும் அவனைச் சூழ்ந்து நிற்கின்றன. சூழ மிருகங்களை வைத்துக் கொண்டு, அவற்றுடன் விவகரித்தல் மனிதக் கூட்டத்தினரிடையே இருந்து அதனுடன் விவகரிப்பதைக் காட்டிலும் எளிதென்றேனும் கவலைக் குறைவுக்கு இடமாவதென்றேனும் கருதுவோன் தவறாக யோசனை எண்ணுகிறான். மனிதர் எத்தனை கொடியோராயினும், மூடராயினும், புலி, கரடி, ஓநாய் நரிகளுடன் வாழ்வதைக் காட்டிலும் அவர்களிடையே வாழ்வதும் ஒருவனுக்கு அதிக நன்மை பயக்கத் தக்கது என்பதில் ஐயமில்லை.

பெண்டு பிள்ளைகளைத் துறந்துவிட்ட மாத்திரத்திலேயே ஒருவன் முக்திக்குத் தகுதியுடையவனாக மாட்டான். இஃதே .பகவத் கீதையில் உபதேசிக்கிற கொள்கை. பெண்டு பிள்ளைகளையும் சுற்றத்தாரையும் இனத்தாரையும் நாட்டாரையும் துறந்து செல்பவன் கடவுளுடைய இயற்கை விதிகளைத் துறந்து செல்கிறான். ஜன சமூக வாழ்க்கையைத் துறந்து செல்வோன் வலிமையில்லாமையால் அங்ஙனம் செய்கிறான். குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சி பண்ணுகிறான்.

தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்கத் தக்க செய்கை பாவம். தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம் விளைவிக்கத்தக்க செயல் புண்ணியச் செயல் எனப்படும். ஒருவனுக்கு மனைத் துறவைக் காட்டிலும் அதிகத் துன்பம் விளைவிக்கத்தக்க செய்கை வேறொன்றுமில்லை.

யோகம் - விளக்கம்

விலங்கு நிலையில் இருந்த மனிதனை இறைநிலைக்கு உயர்த்தும் வழி முறையே யோக நெறிகளாகும். இன்பத்தையும் அமைதியையும் தேட விரும்பிய மனிதன் பொருள்களின் மூலம் இவற்றைப் பெற நினைத்துத் தொழில்களை வளர்த்தான், ஆனால் அவன் தேடிய அமைதியும் இன்பமும் கிடைக்கவில்லை. மாறாகத் துன்பமும் தொல்லைகளும் தொடர்ந்தன, வாழ்வில் அமைதி பெற விரும்பிக் காடுகள், மலைகள் போன்றவற்றிற்குச் சென்று அலைந்தான், அவன் தேடிய அமைதி கிட்டவில்லை. ஆனால் பற்றுக்களைத் துறந்து உலக நன்மைக்காகவும், மேன்மைக்காகவும் சென்று முனிவர்கள் தவம் இருந்தார்கள். அவ்வாறு தவம் செய்த முனிவர்கள் மன அமைதியைக் கண்டனர், அம்முனிவர்கள் தாம் மட்டுமின்றி, இவ்வுலக மக்கள் வாழ்வில் அமைதியும், இன்பமும் காண வேண்டும் என்று விரும்பினர், அதற்காக அம்முனிவர்கள் கண்ட வாழ்வியல் நெறிமுறைகளுள் ஒன்றுதான் யோக வாழக்கையாகும்.யோகம் என்பதனை முறையான செயல் என்று குறிப்பிடலாம், இச்செயல் மூலமாக விலங்கு நிலையில் இருந்த மனிதன் உயர்ந்து கடவுள் நிலைக்கு மாறுகின்றான். இம்முறையில் யோகம் என்பது தனி மனிதனின் நோக்கங்களை நிறைவு செய்வதுடன் சமுதாய முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கிறது.

யோகம் என்பதற்கு, சேர்க்கை, அதிட்டம், நூல், நற்சுழி, தியான நிட்டை, உணர்ச்சி என ஆறுவிதமான பொருள்களைக கழகத்தமிழ் அகராதி வழங்குகிறது. யோகநித்திரையில் உள்ளோரை அறிதுயிலில் உள்ளார் என்று கூறுவர். “யூஜ்” என்ற வடசொல்லில் இருந்து பிறந்ததே ”யோகா” என்ற சொல்லாகும். வடமொழியில் உள்ள “யூஜ்” என்ற சொல், ஒன்றாக இணைதல், சேருதல், கூடுதல், இரண்டறக் கலத்தல் ஆகிய பொருள்களைத் தருவதாக அமைந்துள்ளது. ஜீவாத்மா பரமாத்வுடன் ஒன்றிணைவதனை வடநூலார் யோகா என்கின்றனர்.

தமிழில் இதனைத் தவம் என்று குறிப்பிடுவர். ஜீவாத்மா என்பது “பசு” -உயிரினைக் குறிக்கும். பரமாத்மா என்பது “பதி” -இறைவனைக் குறிக்கும். உயிராகிய பசு, பதியாகிய இறைவனுடள ஒன்றாக இணைவதையே தவம் என்று ஆன்மீகத்தில் ஞானிகள் கூறுகின்றனர். “யோகா” என்ற வடசொல்லிற்கு நேரான தமிழ்ச் சொல்லாக, “தவம்” என்ற சொல்அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வடமொழியில் வழங்கப்பட்டு வரும் யோகம் என்பது தமிழில் தவம் என்று வழங்கப்பட்டு வருவது நோக்குதற்குரியதாகும். யோகம், தவம் ஆகிய சொற்கள் மனிதனின் உடல், உள்ளம், உயிர் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளன.

மனிதனின் உடல், உள்ளம், உயிர் (ஆன்மா) ஆகியவை ஒன்றாக இணைந்து சீராகச் செயல்பட்டால் வாழ்வில் ஒரு முழுமை கிடைக்கின்றது. இவை ஒன்றுடன் ஒன்று இணையாது நின்று முரண்பாட்டுடன் செயல்படுகின்ற போதுதான் மனிதன் துன்பங்களுக்கு ஆட்படுகிறான். மனிதன் தமக்குள் தாமே இணைந்த பின்னர் இறைவனோடு (பரமாத்மாவோடு) இரண்டறக் கலத்தல் (ஐக்கியமாதல்) வேண்டும். இங்ஙனம் இரண்டறக் கலத்தலை உயரிய ஆன்மீக நிலை என்று மொழிவர். இத்தகைய உன்னத நிலையை அடையும் சாதனமாக, யோகா என்ற தவம் அமைந்துள்ளது எனலாம்.பகவத்கீதையில் யோகம்

கீதையில் உள்ள பதினெட்டு அத்தியாயங்களுள் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒவ்வொரு யோகம் என்ற பெயராக அமைகிறது. மனத்தின் பண்பாடு யோகமாகிறது. மனம் தளர்வுறுவார்க்கும் துயருறுவார்க்கும் யோகமில்லை என்பது கோட்பாடு. அதாவது கவலையுடைய மனத்தை உடையவன் யோகியாக மாட்டான். பகவத்கீதையில் கூறப்பட்டுள்ள யோகநெறிகள் திருமூலரும், பதஞ்சலியும் கூறும் அட்டாங்க யோகத்தில் வரும் இயமம், நியமம், ஆதனம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவற்றின் விளக்கமாகப் அமைந்துள்ளன.

பதினெட்டு அத்தியாயங்களில் உள்ள பதினெட்டு யோகங்களையும் மேலும் தொகுத்து நான்கு யோகங்களில் அடக்கிக் கூறலாம். கர்மயோகம், ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்பவை அந்த நான்கு யோகங்களாகும்.

இந்த யோகங்களுள் முதலாவதாக இருப்பது கர்ம யோகமாகும். இக் கர்ம யோகம் ராஜ யோகமாகப் பரிணமிக்கின்றது; அதிலிருந்து பக்தி யோகம் வளர்கிறது; பின்னர் அது ஞானமாக முற்றுப் பெறுகிறது என்று கூறுவர். கீதையில் பதினெட்டு அத்தியாயங்களின் அமைப்பே தக்க சான்றாக அமைகிறது. நான்கு யோகங்களையும் அரும்பு, பிஞ்சு, காய், கனி என்று பொருள்படுத்துவாரும் உளர். பகவத்கீதையில் இந்த யோகங்களை கண்ணபிரான் வேறுபடுத்திக் கூறவில்லை. கர்ம யோகத்துடன், ஞான யோகத்தையும், பக்தி யோகத்துடன் பிறவற்றையும் இணைத்துக் கூறுகிறார்.இயமம்

இயமம் என்பது அனைவரும் கைக்கொள்ள வேண்டிய வாழ்வியற் பண்புகளாகும். இரண்டாவதாக இடம் பெறும் ஸாங்கிய யோகம், சிரத்தாத்ரய விபாக யோகம்(17), மனிதன் கைக்கொள்ள வேண்டிய வாழ்வியற் கருத்துக்கைள கர்மத்தைக் கர்மயோகமாக்கு அதுவே யோகத்திற்குத் திறவுகோல் என 31-ஆவது சுலோகத்திலிருந்து எடுத்துரைக்கின்றது.

செயலில் ஈடுபடுவதே ஒருவனது கடமையாகும். பலனை எதிர்பார்த்துச் செய்யும் பணி கடமையாகாது. வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருத வேண்டும். ஒரு பொருளின்மீது பற்று வைப்பதை உதறி விட வேண்டும். அப்போதுதான் மனத்தில் சலனமும், கவலையும் ஏற்படாமல் இருக்கும். இப்படிப்பட்ட ஒரே நிலையில் இருக்கும் மனத்தை அடைந்தவனே யோகி. அவனே உயர்ந்தவன் (38-ஆவது சுலோகம்). யோகியின் மனத்தில் பகைக்கு இடமில்லை. சுகங்களைத் தேடி ஓடும் எண்ணத்தைத் துறந்தவன் பற்றையும் அதனால் ஏற்படும் உறவுகளையும் உதறியவன் பயமும், கோபமும் அவனை எப்போதும் அணுகாது. இப்படிப்பட்டவனே நிலையான அறிவு பெற்ற யோகி.

இடையூறு ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்ததும், அங்கங்களை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்ளும் ஆமையைப் போல் புலன்கள் ஐந்தையும் ஒருவன் உள்ளே இழுத்து ஒடுக்கி விடவேண்டும். அப்போதுதான் அவனுக்கு நிலையான அறிவு கிட்டும். பொருள்தான் ஒருவனுக்கு இன்பத்தையும், துன்பத்தையும் தருகிறது. எனவே அதைப் பற்றிய எண்ணமே பந்தத்துக்கு அடிக்கல்லாக அமைகிறது. இந்தப் பந்தத்திலிருந்துதான் பற்று உருவாகிறது. இந்தப் பற்று நிறைவேறாத போது சினத்தைக் கிளப்புகிறது. இந்தச் சினம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. குழப்பம் மேலோங்கும் போது பகுத்தறிவை இழப்பதினால் ஏற்படுவது அழிவே தவிர ஏதுமில்லை.

- இவ்வாறு பல்வேறு வகைகளில் மனத்தைக் கட்டுப்படுத்தும் பலநெறிகளைப் பற்றி இரண்டாவது அத்தியாயம் விளக்கம் தருகிறது. மனதைப் பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்தலாம். இந்தப் பயிற்சிதான் யோகம் என்று கீதையில் ஆங்காங்கே குறிப்புகளால் உணர்த்தப்படுகின்றன. எனவேதான் பகவத்கீதையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றாக இரண்டாவது அத்தியாயம் போற்றப்படுகிறது.

மனிதனின் அறிவு வளர்ச்சிகளுக்கும், குண வேறுபாடுகளுக்கும் உணவு வகைகள் ஒருவிதத்தில் காரணமாக இருக்கின்றன. காரம், புளிப்பு, கரிப்பு ஆகிய சுவைகள் கூடுதலாக இருக்கும் உணவை ராஜஸகுணத்தினன் விரும்பி உண்பான். தும்ஸ குணத்தினன் கெட்டுப்போன, தள்ளப்பட வேண்டிய உணவை உண்பான் காரம், புளிப்பு, கரிப்பு ஆகியவை மிதமாக இருக்கக் கூடிய உணவை சத்துவ குண மனிதன் உண்பான் என பதினேழாவது அத்தியாயத்தின் 8, 9, 10, 11-ஆவது அத்தியாயங்கள் எடுத்துரைக்கின்றன.

மூவகை மனிதர்களைப் பகுத்து அவர்கள் எவ்வாறு உணவு உண்ண வேண்டும், யார் யார் எவ்வகை உணவு வகைகளை விரும்பி உண்பார்கள் என்பதை விளக்கும் இப்தினேழாவது அத்தியாயத்தின் 27, 28-வது சுலோகங்கள் விவரிக்கின்றன. இவ்வாறு மனிதன் நாள்தோறும் கடைபிடிக்க வேண்டிய வாழ்வியற் நெறிகளை கீதை எடுத்துரைக்கின்றது.நியமம்

ஒழியாது மேற்கொள்தலாம். தானம், தவம் முதலியவற்றால் இடையறாது இறைவனை வணங்கி நற்பண்புகளைப் பெறுதலே நியமமாகும். இதனை கீதையின் மூன்றாவது அத்தியாயம் (கர்மயோகம்), நான்காவது அத்தியாயமாகிய ஞானபரம ஸந்யாஸ யோகம், ஐந்தாவதாகிய ஸந்யாஸ யோகம், ஆகியவை விளக்குகின்றன.

செயலில் ஈடுபடாமல் இருப்பதினாலும் செயலைக் கைவிடுவதினாலும், ஞானத்திற்குத் தேவையான முழுமையை ஒருவன் அடைய முடியாது. ஐம்பொறிகளையும் செயில் ஈடுபடுத்தாமல் அவற்றை முடக்கிவிட்டுத் தனக்கு ஞானம் கிட்டிவிட்டது என்று சொல்வது வெறும் பாசாங்காகும். ஒரு பொருளை அடைந்தாக வேண்டும் என்று அதன்மீது பற்று வைக்காமல் செயலில் ஈடுபடுபவனே உயர்ந்த ஞானத்தைப் படிப்படியாகப் பெறமுடியும். ஒவ்வொரு மனிதனும் தனக்கு விதிக்கப்பட்ட வேலையைச் செய்வதே செயல் ஆகும். இந்தக் கடமையைச் செய்வதிலிருந்து மனிதன் தவறக் கூடாது. கடமை வேள்விக்கு ஒப்பானது (3) என்று இறைவன் குறிப்பிட்டு அனைவரும் கடமையாற்ற வேண்டும் என்று நியமத்தை வலியுறுத்துகிறார்.

ஒருவன் எப்படிப்பட்ட பாபமான காரியம் செய்தபோதிலும் ஞானத்தை உணர்வதன் வாயிலாக அந்தப் பாபத்திலிருந்து அவன் மீளமுடியும். நெருப்பில் விழுந்தவை சுட்டு எரிக்கப்படுவதுபோல ஞானம் என்ற தீயில் விழுந்த பாபச் செயல்களும் பொசுக்கப்படுகின்றன (4)

அறிவிலி, சிரத்தையில்லாதவன், ஐயமுறுபவன் அழிவடைகிறான். ஐயமுறுபவனுக்கு இவ்வுலகம் இல்லை; அவ்வுலகும் இல்லை” (5; 40-வது சுலோகம்)

யோகம் என்பது பொறிகளை அடக்கும் பயிற்சிதான். பொறிகளை அழிக்கும் பயிற்சி அல்ல. எனவே, செயலில் ஈடுபட்டுக் கொண்டே ஒருவனால் இந்த யோக நெறியில் ஞானத்தை நோக்கிப் பயணம் செய்ய இயலும். இவ்வாறு பயணிக்கும் போது, தீய செயல்களுக்குக் காரணமான ஆசை, பயம், சினம், ஆகிய மூன்றும் அவனிடமிருந்து விலகிப் போகின்றன. மனிதனைத் தவறான பாதையில் இழுத்துச் செல்லும் இந்த மூன்றையும் வென்றவன்தான் பிரம்மம் என்ற பரம்பொருளை எளிதில் அடைகின்றான் (5). என யோகம் செய்வோர் கடைபிடிக்கத் தக்க நியமங்களை பகவத்கீதை மொழிகிறது.

ஆதனம்

“ஆதனம்” என்பது “ஆசனம்” என்று வழங்கப் பெறுகிறது. அதாவது, இருக்கும் முறை. யோகம் புரிவதற்குக் கை, கால், உள்ளிட்ட உடல் உறுப்புக்களைத் தக்கவாறு அமைத்துக் கொண்டு அமர்ந்திருக்கும் முறையினை இஃது குறிக்கும். கீதையின் தியான யோகம், ஏழாவது அத்தியாயமான ஞானவிஞ்ஞான யோகமும் தெளிவுறுத்துகின்றன. யோகப் பயிற்சியின் போது உடலை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அப்போது அவனது ஆசனம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தியான யோகத்தில் வரும் சுலோகங்கள் விளக்குகின்றன.

சுத்தமான இடத்தில் உறுதியானதும், அதிக உயரமல்லாததும், மிகத் தாழ்வல்லாததும், துணி, மான் தோல், தர்ப்பை இவைகளையுடையதுமாகிய ஆசனத்தை நன்கமைத்துக் கொண்டு (11) ஆசனத்தமர்ந்து, மனதை ஒருமுகப்படுத்தி, மனம் ஐம்புலன்கள் இவகைளின் செயலை அடக்கி சித்த சுத்தியின் பொருட்டு யோகத்தைப் பயில வேண்டும் (12)

மேலும், ‘‘தேகம், தலை, கழுத்து இவைகளை நேராக அசையாது வைத்துக் கொண்டு உறுதியாயிருந்து தன் மூக்கு நுனியைப் பார்ப்பவன் போன்று திசைகளைப் பாராதிருத்தல் வேண்டும்(13) உள்ளம் அமைதி பெற்று, அச்சத்தையகற்றி, பிரம்மச்சாரிய விரதம் காத்து, மனதை அடக்கி, சித்தத்தை என்பால் இசைத்து, என்னைக் குறியாகக் கொண்டு யோகத்தில் அமர்ந்திருக்க வேண்டும்”(14). என ஆசன முறைகள் பகவத்கீதையில் விளக்கப் பெறுகின்றன.பிரத்தியாகாரம்

பிரத்தியாகாரம் என்பது, புலன்களால் பெறப்படும் புலனுகர்வு அனுபவங்களை ஞானேந்திரியங்கள் மனத்திற்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி, மனதைக் கட்டுப்படுத்தும் பயிற்சியாகும். ஏழாவது அத்தியாயமாகிய ஞானவிக்ஞான யோகம், எட்டாவது அத்தியாயமாகிய அட்ஷரப்ரஹ்ம யோகம், ஒன்பதாவது அத்தியாயமாகிய ராஜவித்யாராஜகுஹ்ய யோகம் போன்றவை எடுத்துரைக்கின்றன.

‘‘பொறிவாயில் யாவையும் அடக்கி மனதை இருதயத்தில் நிறுத்தி தன் பிராணனை உச்சந்தலையில் வைத்து யோக தாரணையில் நிலைத்திருந்து ஓம் என்கிற ஏகாட்ஷரமாகிய பிரம்ம மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு என்னை ஸ்மரித்துக் (நினைத்து) கொண்டு யார் உடலை நீத்துப் போகிறானோ அவன் பரமகதியைப் பெறுகிறான் (8;12-13) என மனதை நிறுத்தும் பயில்முறைகளை பகவத்கீதையானது இவ்வத்தியாயங்களில் எடுத்துரைக்கின்றது.

தாரணை

தாரணையாவது தரிக்கச் செய்தல். புறத்தே புலன்களின் வாயிலாக ஓடிய மனத்தை உள்ளுக்கிழுத்த பின் ஒரு குறியில் நிலைபெறச் செய்தல். மனதை ஆதாரங்களில் தொடர்ந்து ஊன்றி நிற்கச் செய்வது தாரணையாகும். இத்தாரணையானது பகவத் கீதையின் அனைத்து அத்தியாயங்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது.

‘‘வேறு எண்ணமின்றி யார் என்னை நெடிது இடையறாது ஸ்மரிக்கிறானோ(நினைக்கின்றானோ) அந்த ஒரு நிலைப்பட்ட யோகிக்கு நான் எளிதில் அகப்படுகிறேன்’’ (8;14)
‘‘உடலை விட்டுப் பிரியும்போது என்னை நினைப்பவன் யாராக இருந்தாலும் அவன் என்னை வந்தடைகிறான். இதில் சந்தேகம் எதுவும் இல்லை’’(8;5)

என்ற எட்டாவது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள இந்த ஐந்தாவது சுலோகம் முக்கியமான சுலோகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

‘‘வேறு எதையும் எண்ணாத யோகத்தால் என்னிடம் பிறழாத பக்தி பண்ணுதல், தனியிடத்தை நாடுதல், ஜனக்கூட்டத்தில் விருப்பமின்மை, ஆத்ம ஞானத்தில் நிலைபேறு, உண்மைப் பொருள் ஆராய்ச்சி இவையாவும் ஞானமாகும்.’’ (13;10-11)

என சேத்திர சேத்திர ஞவிபாக யோகத்தில் கீதை குறிப்பிடுகின்றது. மனதை ஒரு நிலையில், ஒரு குறியில் நிலைக்க வைத்து யோக முத்தி பெறலாம் என கீதை வழிகாட்டுகின்றது.

தியானம்

தியானமாவது ஒன்றையே நினைத்திருத்தல். ஐம்புலன்களையும், புத்தியையம் நீங்கி நிற்கும் நிலையே தியானம் என்பதாம். ஆறாவது அத்தியாயமாகிய தியான யோகம், யோகத்தை எவ்வாறு தியானமாக மாற்றுவது என்பதை விவரிக்கின்றது.

அளவு கடந்துண்பவனுக்கு யோகமில்லை. அறவே உண்ணாதவனுக்கும் யோகமென்பது இல்லை. மிகையாக உறங்குபவனுக்கும் மிகையாக விழித்திருப்பவனுக்கும் யோகம் இல்லை (16). மிதமாக உண்டு உடற்பயிற்சி செய்பவனுக்கும் அளவுடன் கர்மங்களைச் செய்து உறக்கத்திலும் விழிப்பிலும் முறைமை வகிப்பவனுக்கும் யோகம் துன்பத்தைத் துடைக்கின்றது (17).

- எனத் தியானத்தின் வாயிலாக இறைவனை நெருங்க இயலும் என்று இவ்வத்தியாயத்தின் வாயிலாக கீதை குறிப்பிடுகின்றது. பந்தபாசங்கள் வலையாகப் பின்னியிருந்த போதிலும் பற்றற்ற செயல்களின் வாயிலாக இக்கட்டுகளிலிருந்து வெளியேறும் பக்குவத்தை ஞானி அடைகின்றான் எனத் தியான யோகம் தெளிவுறுத்துகிறது.சமாதி

சமாதியாவது உயிரும் இறைவனும் இரண்டற ஒன்றி நிற்றலாம். இயமம்; முதலாகவுள்ள படிகளின் முறையே பயின்று வந்தால் சமாதி கைகூடும். குணத்ரய விபாக யோகம் (14-வது அத்தியாயம்), புஷோத்தம யோகம் (15-வது அத்தியாயம்), தெய்வாஸூர ஸம்பத் விபாக யோகம் (16), மோசஷ ஸந்யாஸ யோகம் (18) ஆகிய அத்தியாயங்கள் எடுத்துரைக்கின்றன.

சத்துவம், ராஜஸம், தாமஸம் என்னும் மூவகைக் கணங்களினால் மனிதன் ஆளப்படுகிறான். இவற்றைக் கொண்டுதான் மனிதன் முதல், இடை, கடை என்று வரிசைப்படுத்தப்படுகிறான். சத்துவ குணம் கொண்டவன் உத்தமன் என்று போற்றப்படுகிறான். அன்பு, அருள், ஈகை போன்றவை இவனிடம் நிரம்பிக் கிடக்கும். ராஜஸ குணம் கொண்டவன் எல்லாச் சுகங்களையும் அனுபவிக்க ஆசைப்படுபவன். இந்தக் கணம் கொண்டவன் அடுத்தவரின் பொருளைக் கவர்வது தவறு என்று எண்ணமாட்டான். தன்னிடம் இருப்பதைக் கொண்டு அவன் திருப்தி அடைவதில்லை. பிறரது பொருளைப் பறிக்கும் தொழிலில் துணிந்து இறங்குவான். இவன் இடைப்பட்டவனாகக் கருதப்படுகின்றான்.
தாமஸகுணம் கொண்டவன் சோம்பலின் சின்னமாக இருப்பவன். நல்லுரைகளைக் காதில் போட்டுக் கொள்ளமாட்டான். நற்செயல்களில் ஈடுபடமாட்டான். ஈடுபடுவது கடமை என்று உணர்த்தப்பட்டாலும் எதையும் செய்யாது காலத்தை வீணாகப் போக்குபவன். எனவே இவன் கடையனாகக் கருதப்படுகின்றான்.

சத்துவ குணம் அறிவைக் கொடுக்கும். ராஜஸம் ஆரையைத் தூண்டும். தாமஸம் இருட்டில் தள்ளும். எனவே சத்துவ குணமுடையவன் இறைவனை அடைவான். ராஜஸ குணத்தினை உடையவன் மறுபடியும் பிறப்பும், இறப்புமாகிய சக்கரத்தில் சிக்கித் தவிப்பான். தாமாஸ குணத்தினன் அறிவில் கேவலமான செயல்களில் ஈடுபடும் பிறவிகளைப் பெறுவான்.வாழ்நாளில் அறிவைத் திரட்டும் மனிதன் தான் கடவுளுடன் கலக்கவும் முடியும். அதாவது சமாதி நிலையை அடைய முடியம். அவன் தான் உத்தமன் (14-வது அத்., 5-18 சுலோகங்கள்).

பிறப்பிலிருந்து விடுபட்டு இறைவனுடன் கலப்பதே மனிதனின் இலட்சியமாகும். இதுவே பிறவியின் பயனாகும் ஞானம் அடையாத மனிதனால் இறைவனை அடைய முடியாது (15அத்) என இவ்வத்தியாயம் எடுத்துரைக்கின்றது. மனிதன் தெய்வாம்சமாக மாறி இறைவனுடன் கலத்தல் வேண்டும் என்பதை 16, அத்தியாததின் 7-18 வரையிலுள்ள சுலோகங்கள் தெளிவுறுத்துகின்றன.

கீதையின் 18-வது அத்தியயாம் சமாதி நிலையாகிய கடவுளுடன் இரண்டறக் கலக்கும் வழியை எடுத்துரைக்கின்றது. ‘‘எல்லாவற்றுக்கும் காரணம் அவனே என்று பாரத்தைக் கடவுளின் மீது போட்டு விட்டு மனிதன் கடமையைச் செய்ய வேண்டும். இதை உணர்வதுதான் அறிவு. இதுவே ஞானம். இதுவே கடவுளுடன் ஆத்மாவைக் கலக்க வைக்கும் நெறி. இதை அறிந்தவன்தான் இரகசியத்தை அறிந்தவன் ஆகிறான்.

பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்பவனே கடவுளை நெருங்க முடியும். ஏனென்றால் அவன்தான் இறைவனின் விருப்பத்துக்கு உரியவனாகிறான்’’(18;74-78) என்று அட்டாங்க யோகத்தின் சாமாதி நிலையை கீதை நன்கு எடுத்துரைக்கின்றது.

இவ்வாறு பகவத்கீதையானது சமய நூலாக மட்டுமின்றி மக்களின் வாழ்க்கையை வளப்படுத்தும் யோக நூலாகவும் விளங்குவது போற்றுதற்குரியது. பகவத்கீதை நம் உள்ளத்தையும், உடலையும் வளப்படுத்தும் உன்னத வாழ்க்கை நூலாகும். சமயச் சார்பின்றி அனைவரும் கற்போம். வலிமையான உடல் மற்றும் உள நலத்தைப் பெற்று வாழ்வோம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p38.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License