படைப்பு படைப்பாளனிடமிருந்து முற்றிலும் வேறானதாக அமைய முடியாது. படைப்பாளனையும் அறியாமல் படைப்புகளில் படைப்பாளனின் ஆழ்மனக் கருத்துகள் இடம் பெற்று விடுவதுண்டு. இத்தகைய இனப்பதிவுகளை அடையாளம் கண்டுரைக்கும் பணி இலக்கிய உளவியலைச் சார்ந்து அமைகின்றது. இலக்கிய உளவியல் படைப்பையும் படைப்பாளனையும் அறிவியல் நோக்கில் அதாவது படைப்பின் உண்மை நிலையை ஆராய்கின்றது. இவ்வகையான ஆய்வில் அழகுணர்ச்சியோ, வருணனைத் திறமோ, பா நலமோ பெரிதாகப் பாராட்டப் பெறுவது இல்லை. மாறாகப் படைப்பாளன் அப்படைப்பை உருவாக்கக் காரணமாக இருந்த முக்கியக் காரணிகள், சூழல், தாக்கம் ஆகியன உள்ளிட்ட மூலங்கள் மட்டுமே ஆராயப்படுகின்றன. கருத்துக்களை வெளிப்படுத்த படைப்பாளன் தேர்ந்தெடுக்கும் வடிவங்களும் கூட படைப்பாளனின் ஆழ்மன உணர்வினை வெளிப்படுத்த வல்லது.
இத்தகைய ஆய்வு, இலக்கியங்களை - படைப்பாளனை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகுகின்றது. படைப்பாளனின் ஒப்பனை செய்யப்பட்ட எழுத்துக்களையும் தாண்டி ஆழ்ந்திருக்கின்ற உள்மன உணர்வு தோண்டி எடுக்கப்படுகின்றது. இன்னொரு வகையில் கூறப் போனால் இதனை இலக்கியப் புலனாய்வு என்று கூறலாம். இத்தகைய புலனாய்வில் படைப்பாளனின் வாழ்க்கைச் சூழலே பெரும் பங்கு வகிக்கின்றது. சாதாரண இலக்கிய ரசனைக்குப் புலப்படாத நுணுக்கமான விஷயங்கள் உளவியல் என்னும் நுண்பெருக்கிக் கண்ணாடி வழியே பெரிதாக்கிக் காட்டப்படும் போது அவை படைப்பின் தரத்தினை மேலும் ஒரு படி பெரிதாக்கிக் காட்டக் கூடும். உளவியல் நோக்கில் ஆராயப்படுகின்ற படைப்புகள் சில நேரங்களில் வெளிப்புறமான அலங்காரங்களை உடைத்து உண்மையான உள்மன நிலையை வெளிக்காட்டுவதால் இலக்கிய வாசிப்புத் தளங்களில் மிகப் பெரும் அதிர்வை ஏற்படுத்தி விடுவதும் உண்டு. உளவியல் நோக்கிலான ஆய்வுகள் பாத்திர உளவியல், படைப்பு உளவியல் என இரு வேறுபட்ட தளங்களில் இயங்கக் கூடியது.
உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரது படைப்புகளில் உள்ள பாத்திரங்கள் பெரும்பான்மையும் உளவியல் நோக்கிலான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஹோமருடைய படைப்பில் உருவான ஈடிபஸ் என்னும் பாத்திரமே மகனுக்கு தாயின் மீது உள்ள காம உணர்வின் ஆழ்மனக் கோலத்தினை வெளிப்படுத்திக் காட்டும் கருவியாக அமைந்தது. அத்தகைய கோட்பாட்டினை வரையறுக்கும் பெயரும் கூட ஈடிபஸ் என்னும் பாத்திரத்தின் பெயரைக் கொண்டே குறிப்பிடப்படுகின்றது. இலக்கியத்தின் ஆழ்தளப் பதிவிற்கு உற்ற கருவியாக உளவியல் விளங்குகின்றது எனின் அது மிகையாகாது.
- என்ற பாரதியாரின் கவிதை அடிகள் கவிதை வரிகளுக்கு அப்பாற்பட்ட கவிஞனின் உள்ள விழைவினைக் காண வேண்டும் என்னும் பாரதியாரின் விருப்பத்தினைப் புலப்படுத்துகின்றது.
கடலுக்கு வெளிமட்டத்தில் தெரியும் பனிமலையின் சிறிய பகுதியே கவிதை வரிகள். கடலுக்குள்ளாகப் புதைந்து கிடக்கும் பனிமலையின் மிகப் பெரிய அடிப்பகுதியே கவிதை உணர்த்த வரும் பொருளாழம். சமீபத்தில் வெளியான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நிகழ்ச்சி நெறியாளராக இருந்த பாடகி ஒருவர் கண்ணதாசன் பாடல்கள் எழுதக் காரணமாக இருந்த அவருடைய சொந்த வாழ்க்கையின் பாதிப்புகளை விளக்கி அதனை பாடலோடு ஒப்பிட்டுக் கூறினார். இவ்வாறு அமைந்திருந்த மேலோட்டமான உளவியல் பார்வை படைப்பைப் பற்றிய புதிய பரிமாணத்தினை, ஆர்வத்தினை ரசிப்பவர்களிடம் ஏற்படுத்த வல்லது.
புதுமைப்பித்தனுடைய ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ என்ற சிறுகதை நகைச்சுவை உணர்வை வாசிப்பவர்களிடம் ஏற்படுத்தினாலும் ‘கடவுள் கொள்கை’ ஒரு சாதாரண மனிதனிடமிருந்து அந்நியமாகிப் போயிருப்பதனை – சமூகத்தின் மீதான தாக்குதலை இச்சிறுகதை வெளிப்படுத்தியுள்ளது. இச்சிறுகதையில் (ஆசிரியரின்) உள்மன உணர்வின் வடிகாலாக நகைச்சுவை உணர்வு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வகையில் உளவியல் சிந்தனையோடு பெரிதும் பொருத்திப் பார்க்க இடமளிப்பதாய் பாரதியாரின் கவிதைகள் பல அமைந்துள்ளன எனில் அது மிகையாகாது. அவருடைய கவிதைகளுள் ஒரே ஒரு கவிதை மட்டும் இவன் ஆய்வுக்குக் கொள்ளப்படுகின்றது. அதிலும் அக்கவிதையில் பயன்படுத்தப்பட்டுள்ள அடிக்குறிப்பு உளவியல் நோக்கிலான ஆய்வில் மிகப் பேரிடத்தை வகிக்கின்றது.
சிக்மண்ட் ஃப்ராய்ட் வகைப்படுத்திய மனம் (Mind) பற்றிய வரையறையினுள்
1. இச்சை உணர்ச்சி (id)
2. தன்முனைப்பு (ego)
3. பண்பாட்டு உணர்ச்சி (super ego)
இச்சை உணர்ச்சி என்பது உடலின் உதவியோடு தன் தேவையை நிறைவு செய்து கொள்ள வல்லது. தன் முனைப்பு என்பது இச்சை உணர்ச்சிக்கு அப்பாற்பட்டது. இது இச்சை உணர்ச்சியின் உண்மை இயல்பை மாற்றவல்லது. மூன்றாவது பண்பாட்டு உணர்ச்சியாகும். இது பண்பாட்டில் நிலை பெற்றுள்ள காமம் முதலியவை பற்றிய சமுதாயச் சட்டம் மற்றும் ஏனைய ஒழுங்கு முறை தொடர்பான விதிமுறைகளாகும். இச்சை உணர்ச்சி எதையும் பொருட்படுத்தாது. உடலின் உதவியோடு தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ள விரும்பும். பண்பாட்டு உணர்ச்சி இச்சை உணர்ச்சிக்கு எதிரானது. இது சமூகத்தின் சட்ட திட்டங்களை எடுத்துக் காட்டி இச்சை உணர்ச்சியை எழ விடாமல் தடுக்கும். இவ்விரண்டு உணர்ச்சிகளுக்கும் இடையில் சமப்படுத்தும் வேலையைச் செய்வது தன்முனைப்பு உணர்ச்சியாகும். இச்சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் இச்சை உணர்ச்சி மாற்று வடிவில் தன் தேவையைத் தீர்த்துக் கொள்ள தன் முனைப்பு உணர்ச்சி உதவுகின்றது. இலக்கியப் படைப்புகள் பெரும்பான்மையும் சிக்மண்ட் ஃப்ராய்டின் மன அமைப்பின் கோட்பாட்டின்படியே ஆய்வு செய்யப்படுகின்றது.
ஒரு மனிதன் தன் இச்சை உணர்ச்சியை நிறைவேற்றிக் கொள்ளச் சமூகத்தின் கட்டுப்பாடுகள் தடையாக இருக்கும் போது சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் தனது இச்சையை மனம் நிறைவேற்றிக் கொள்ளும். இத்தகைய இச்சை உணர்ச்சிக்கும் புற உலகிற்கும் இடையே தொழிற்படும் மனத்தின் சமரச உணர்வு தன்முனைப்பு எனப்படுகின்றது. ‘வேல்ஸ் இளவரசருக்கு பரத கண்டத்தாய் நல்வரவு கூறுதல்’ என்னும் தலைப்பிலான கவிதை இவன் ஆய்விற்குக் கொள்ளப்படுகின்றது. இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் காங்கிரசில் தீவிரவாதம், மிதவாதம் என இரு கட்சியினர் இருந்தமை வெளிப்படையாகும்.
கோகலே போன்ற தலைவர்கள் மிதவாதக் கருத்தைக் கொண்டிருந்தனர். லாலா லஜபதி ராய், திலகர், விபின சந்திர பாலர் போன்றவர்கள் தீவிரவாதக் கொள்கையுடையவர்களாய்க் காணப்பட்டனர். அக்டோபர் 16, 1905 அன்று லார்டு கர்சனால் வங்கப் பிரிவினை கொண்டு வரப்பட்டது. இச்சமயத்தில் காசிக் காங்கிரஸ் கூட்டப்பட்டது. காசிக் காங்கிரசின் போது மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கருத்து வேற்றுமை முற்றத் தொடங்கியது. லார்டு கர்சானின் வங்கப் பிரிவினையை எதிர்த்து வங்க நாடு குமுறிக் கொண்டிருந்த வேளையில் ஜனவரி 1906-ல் இந்தியாவிற்கு வரவிருந்த வேல்ஸ் இளவரசரை வரவேற்றுத் தீர்மானம் கொண்டு வரத் திட்டமிட்டனர். இதனைப் பற்றி பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி ‘இந்தியா விடுதலைக்காகப் போராடுகின்றது’ என்னும் நூலில் ‘ராஜ தம்பதிகளை வரவேற்கும் தீர்மானம் சபையின் முன்னால் கொண்டு வரப்பட்ட போது, பிடிவாதக்காரர்களான ‘தீவிரவாதக் கட்சியைச் சேர்ந்தவர்கள்’ வெளிநடப்பு செய்தனர் என்று குறிப்பிடுகின்றார்.
காசிக் காங்கிரசுக்கு சென்ற தலைவர்களில் சுதேசமித்திரன் பத்திரிகை ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய அய்யரும் ஒருவர். இவருடன் அப்போது சுதேசமித்திரனில் துணையாசிரியராகப் பணியாற்றிய பாரதியாரும் சென்றிருந்தார். பாரதியார் தீவிரவாதக் கொள்கையுடையவர் என்பது ‘வாழ்க திலகர் நாமம்’, ‘திலகர் முனிவர் கோன்’, ‘வ.உ.சிக்கு வாழ்த்து’ உள்ளிட்ட கவிதைகளில் தீவிரவாதக் கொள்கையுடைய தலைவர்களைப் புகழ்ந்து பாடல் எழுதியிருப்பதன் மூலம் விளங்கும்.
பாரதி - காலமும் கருத்தும் என்ற நூலில் ரகுபதி அவர்கள் ‘காசிக் காங்கிரசுக்குப் பாரதி செல்லும் காலத்தில் பாரதிக்கு வயது 23 முடிந்த வாலிபப் பருவம். எனவே தீவிரவாதக் கருத்து அவனை ஆட்கொண்டதில் வியப்பேதுமில்லை’ என்று குறிப்பிடுகின்றார். நாட்டு விடுதலைக் குறித்து தீவிரவாதக் கொள்கையுடன் இருந்த பாரதியார் காசிக் காங்கிரசுக்குச் சென்று திரும்பிய பின், 1906, ஜனவரி 26 ஆம் தேதியன்று சி. சுப்பிரமணிய பாரதியார் எழுதியது என்னும் குறிப்புடன் சுதேசமித்திரனில் கவிதை ஒன்று வெளியாகியது.
தீவிரவாதியான பாரதியார் வேல்ஸ் இளவரசரை வரவேற்றுக் கவிதை எழுதியிருப்பது பெரும் புதிர். இப்பாடலைத் தேடியெடுத்து வெளியிட்டுள்ள பெ. தூரன் அவர்கள், ‘பாரதியார் முழு மனதுடன் இயற்றினார் என்பது சந்தேகம்தான்..........’ என்று குறிப்பிட்டுள்ளார். பாரதியாரின் ஆழ் மனக் கருத்தினை - ஐயப்பாட்டினை உளவியல் தீர்த்து வைக்கின்றது. இளவரசரை வரவேற்று எழுதப்பட்ட கவிதையில் பாரதி அடிக்குறிப்பொன்று எழுதியுள்ளார். ‘அது பாரத மாது தானே பணித்தன்று’ என்பதாகும். பாரத மாது என்னை எழுதுமாறு பணிக்கவில்லை என்பது இக்குறிப்பின் பொருளாகும். அப்படியென்றால்,
பாரத மாது என்பவள் யார்? கட்டளையிட்டது யார்?
மேம்போக்கான இக்கவிதைக்குள் ஒளிந்து கிடக்கும் கவிஞனின் உள்மன வேட்கை என்ன? -என்ற கேள்விகள் எழுகின்றன.
பாரத மாது. இக்குறிப்பினை ஆழ்ந்து நோக்குங்கால் பாரத மாதா என்று குறிப்பிடாமல் ‘பாரத மாது’ என்று குறிப்பிட்டுள்ளது விளங்கும். பாரத மாதா எனின் பாரதத் தாய் என்று பொருள்படும். மாது எனின் ‘பெண்’ என்று பொருள். 1905 –ன் இறுதியில் நிவேதிதா தேவியைச் சந்தித்து அவரிடம், ‘ஸ்வதேச பக்தி உபதேசம் பெற்றவர்’. மகாகவியின் முதல் கவிதைத் தொகுதியான ‘ஸ்வதேச கீதங்கள்’ 1908 ஜனவரி மாதம் வெளிவந்தது. தனது முதல் நூலின் சமர்ப்பணத்தில் பாரதியார் தனக்கு சுதேச உபதேசம் புரிந்தருளிய குரு ஒருவர் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். ஆனால், குருவின் பெயரைக் குறிப்பிடவில்லை. 1909 ஆம் ஆண்டில் வெளிவந்த இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘ஜென்ம பூமி’ என்னும் நூலின் சமர்ப்பணத்தில் தன் குரு நிவேதிதா தேவியே என்ற உண்மையை வெளியிடுகின்றார். 1910 ஆம் ஆண்டு நவம்பரில் வெளிவந்த பாரதியின் மூன்றாவது கவிதை நூலான, ‘ஸ்வ சரிதை’ என்னும் நூலின் சமர்ப்பணத்தில் தாய் நிவேதிதையைத் தொழுவதாகக் குறிப்பிடுகின்றார். பாரதி தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய குரு என்று வேறு யாரையும் பிரகடனப்படுத்தவில்லை. ஆகவே பாரத மாது என்று குறிப்பிடுவது நிவேதிதா தேவியையே என்பது புலனாகின்றது.
தன்னுடைய விருப்பமின்றி தனக்கு ஏற்பட்ட கட்டாயச் சூழலினால் இக்கவிதையை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டதையும் அதற்காக ஆத்மார்த்தமாகத் தன் குருவிடம் மன்னிப்பு கேட்பது போன்றும் இவ்வடிக்குறிப்பு அமைந்துள்ளது.
சுதேசமித்திரன் பத்திரிகையின் ஆசிரியரும் பத்திராதிபருமான ஜி.சுப்பிரமணிய ஐயர் மிதவாதக் கட்சியைச் சார்ந்தவர். காசிக் காங்கிரசில் மிதவாதத் தலைவரான கோகலேயைத் தலைமை பீடத்துக்கு முன்மொழிந்த போது, அதனை வழிமொழிந்து ஆதரித்துப் பேசியவர் ஜி. சுப்பிரமணிய ஐயர் ஆவார். அவருடைய பத்திரிகையின் உதவியாசிரியரான பாரதியாரும் வேல்ஸ் இளவரசரை வரவேற்கும் கவிதை இயற்ற வேண்டிய சூழலுக்கு உள்ளாகின்றார்.
பாரதியாரின் விருப்பத்திற்கு மாறாக, கவிதை எழுத வேண்டிய சூழலில்; இப்பண்பாட்டுணர்ச்சிக்கும் இச்சை உணர்ச்சிக்குமான மோதலில் பாரதியாரின் தன்முனைப்பு உணர்ச்சி அடிக்குறிப்பு ஒன்றினை தனக்கு வடிகாலாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. வேல்ஸ் இளவரசரைப் வரவேற்றுப் புகழ்ந்து எழுதப்பட வேண்டிய பாடலிலும் கூட,
-என்று குறிப்பிடுகின்றார். வேல்ஸ் இளவரசரின் வருகை பாரதியாருக்கு ஏற்புடையது அல்ல. ஆனால் வரவேற்றே ஆக வேண்டிய கட்டாயச் சூழலில் அவருடைய தன்முனைப்பு உணர்ச்சி மேற்சுட்டிய அடிகளில் வெளிப்படுகின்றது. தனக்கும் விருப்பமின்றி தன்னுடைய குருவும் பணிக்காது சூழ்நிலைக் (ஜி.சுப்பிரமணிய ஐயர்) கட்டாயத்தால் கவிதை இயற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதன் வெளிப்பாடே ‘வேல்ஸ் இளவரசருக்கு பரத கண்டத்தாய் நல்வரவு கூறுதல்’ என்னும் தலைப்பில் கவிதையாய் சுதேசமித்திரனில் வெளிவந்துள்ளது.
ஒரு படைப்பின் உருவாக்கம், படைப்பாளனின் உள்ளார்ந்த மன எண்ணம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் உரைகல் உளவியல் எனில் அது மிகையாகாது.