Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

மதுரைக் காஞ்சி அமைப்பு

முனைவர் சி. சேதுராமன்


நம் தமிழ் மொழியுள் அமைந்த சங்க இலக்கிய நூல்கள் பாட்டும் தொகையுமாகும். அவற்றுள் பாட்டென்பது பத்துப்பாட்டுகளின் தொகுப்பாகும். அவை, அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்களாக அமைந்துள்ளன. பத்துப்பாட்டில் இடம் பெறும் மதுரைக்காஞ்சியின் அமைப்பு குறித்து விளக்குவதாக இவ்வியல் அமைந்துள்ளது.

பத்துப்பாட்டு அமைப்பு முறை

பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்னும் அமைப்புமுறை உரைகாரர்களின் காலத்திற்கு முன்பாகவே ஏற்பட்டு விட்டமை தெளிவாம். பத்துப்பாட்டு எட்டுத்தொகை அமைப்பு முறையானது எவ்வளவு காலம் முந்தையது என்பதில் ஆராய்ச்சியாளர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு என்பர். கி.பி.3-ஆம் நூற்றாண்டையொட்டி மதுரையில் நிலவிய கடைச் சங்கத்துச் சான்றோர் குழுவினரால் பாட்டு, தொகைகள் அடைவுபடுத்தப் பெற்றன எனப் பெரும்பாலும் கருதுகின்றனர். ஆனால், இதுவும் பாடல் தோன்றிய காலமன்று. பாடல்கள் தொகைப்படுத்தப் பெறுவதற்கு முன் நீண்டகாலம் தொட்டு அவை வழக்கிலிருந்து வந்திருக்க வேண்டும். சங்கப் பாடல்களில் பல கிறிஸ்து ஆண்டு தோன்றுவதற்கு முற்பட்டனவாகவும் இருத்தல் கூடும். மதுரையிலே பாண்டிய மன்னரின் ஆதரவால் தமிழ்ப்புலவர் குழு ஒன்று இருந்து இந்நூல்களைத் தொகுத்திருக்க வேண்டும். ‘‘வலம்புரி சங்கம் வறிதெழுந் தார்ப்ப, புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்க’’ என்ற வரியும், ‘‘மகாபாரதந் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’’, எனவரும் சின்னமனூர் கல்வெட்டுச் செய்தியும் மதுரைச்சங்கம் பற்றி உரைக்கின்றன. அச்சங்கத்துக் கிடைத்த பத்துப்பாட்டுகளாவன; திருமுருகாற்றுப்படை முதலா மலைபடுகடாம் ஈறாக உள்ள பாடல்கள் ஆகும். இவற்றின் அடைவு முறையைச் சுவடிகளில் கண்ட தனிப்பாடல் ஒன்று பின்வருமாறு சுட்டுகிறது.‘‘ முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து’’

இப்பாடலில் குறித்த முறைப்படியே பல பிரதிகளிலும் பாடல்கள் அமைந்துள்ளன. இளம்பூரணரும் பிற உரையாசிரியர்களும் பத்துப்பாட்டுப் பாடல்களை மேற்கோள் காட்டுமிடத்து அவற்றின் தனிப் பெயர்களாலேயே குறித்துள்ளார்கள். ஆனால், பேராசிரியரோ, தமது தொல்காப்பிய உரையில் ‘ பாட்டு ’ என்றே வழங்கியுள்ளார். ‘‘எட்டுத்தொகை நூல்களிற் போல் இத்தொகுதியைத் தொகுத்தார், தொகுப்பித்தார் பற்றிய குறிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை. பிற்காலத்திலே எழுந்த பன்னிரு பாட்டியலில் ‘பத்துப்பாட்டு’ என்னும் நூலின் இயல்பு குறித்து இரண்டு சூத்திரங்கள் உள்ளன என்றும், சங்ககாலத்தே பத்துப்பாட்டைப் பற்றிய செய்தி எதுவும் காணப்படவில்லை’’ என்றும் கூறுவர் மு. சண்முகம் பிள்ளை. ( மு. சண்முகம்பிள்ளை, சங்கத்தமிழர் வாழ்வியல், ப., 8)

‘‘நூறு அடிச்சிறுமை நூற்றுப்பத்து அளவே
ஏறிய அடியின்ஈர் - ஐம்பாட்டுத்
தொகுப்பது பத்துப்பாட்டு எனப்படுமே ’’ ( நூற்பா - 384 )

‘‘அதுவே அகவலின் வரும்என அறைகுவர் புலவர் ’’ ( நூற்பா - 385 )

இப்பன்னிருபாட்டியல் நூற்பாக்கள் பத்துப்பாட்டு என்னும் வழக்குப் பெருகிய காலத்தில் வகுக்கப்பெற்றிருத்தல் வேண்டும்.பத்துப்பாட்டு வகைப்பாடு

பத்துப்பாட்டு நூல் பத்துப்பாடல்களைக் கொண்ட ஒரு கோவையாகினும் குறுந்தொகை, புறநானூறு போன்ற நூற்கோவை அன்று, இவை ஒன்றிற்கு ஒன்று தொடர்பின்றி, வெவ்வேறு சூழ்நிலையில், வெவ்வேறு காலத்தில் எழுந்த பாட்டுகள் ஆகும். இவற்றுள், திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் என்பன ஆற்றுப்படை நூல்களாகும். திருமுருகாற்றுப்படையை புலவராற்றுப்படை என்றும், மலைபடுகடாம் கூத்தராற்றுப்படை என்றும் வழங்கப்படுகிறது.

முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை என்னும் மூன்றும் அகத்திணையொழுக்கம் பற்றியன. குறிஞ்சிப்பாட்டை பெருங்குறிஞ்சி என்ற பெயராலும் உரையாசிரியர்கள் வழங்கியுள்ளனர். நெடுநல்வாடை அகப்பொருட்செய்தி பொதிந்ததாயினும் பாண்டியனது அடையாளப் பூவைக் கூறினமையால் இதனைப் புறத்திணைப் படுத்துவர். வாகைத் திணையுள் கூறிய கூதிர்ப்பாசறை என்னும் துறையுள் இதனை நச்சினார்க்கினியர் அடக்குவர். மதுரைக்காஞ்சி, ‘காஞ்சித்திணை’ எனும் புறப்பொருட்பகுதியைச் சார்ந்தது. பத்துப்பாட்டுள் சிறியது முல்லைப்பாட்டு. இதில் 103 அடிகள் உள்ளன. மிகப்பெரிய பாடல் மதுரைக்காஞ்சி. இதில் உள்ள அடிகளின் எண்ணிக்கை 782 ஆகும்.

மதுரைக் காஞ்சி

பத்துப்பாட்டு நூல்களுள் ஆறாவது பாட்டு மதுரைக் காஞ்சியாகும். இது பாடல் அடியளவில் நீண்ட அளவினையுடையது. வஞ்சி விரவிய ஆசிரியப்பாவால் பாடல் யாக்கப்பட்டுள்ளது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனுக்கு நிலையாமைப் பொருளுணர்த்த எழுந்த நூல் இஃதெனில் மிகையில்லை. இந்நூல் கொண்டு, பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, மதுரை நகர்த் திருவிழாக்கள், மன்னனின் செங்கோலாட்சிச் சிறப்பு, வேளாண்மை, போர் அறம் போல்வன அறிய வரலாற்றுச்சான்றாக உதவுகின்றது.மதுரைக்காஞ்சி - நூலாசிரியர்

மதுரைக்காஞ்சி பாடலின் நூலாசிரியர் மாங்குடி மருதனார். மிகச் சிறப்புடைய பாடலியற்றும் ஆற்றலால் பாண்டிய நெடுஞ்செழியன் இவரை அவைக்களப் புலவராய் அனைவருக்கும் தலைமையுடைய புலவராய்க் கொண்டான். பாண்டிய நெடுஞ்செழியனாலே பாராட்டும் சிறப்பிற்குரியவராய்த் திகழ்ந்தவர் என்பது,

‘‘ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்’’ (புறம்., ப.எ., 72, பா.வரி; 13-15)

என்ற புறப்பாடற் பகுதியால் நன்கு விளங்கும். ‘‘இவர் செய்த பிற நூல்களாவன: அகநானூற்றிலே ஒரு பாட்டு, குறுந்தொகையில் மூன்று பாடல்கள், நற்றிணையில் இரண்டு பாடல்கள், புறநானூற்றிலே ஆறு பாடல்கள், திருவள்ளுவமாலையில் ஒன்று இவர் பெயரால் உள்ளன’’. மதுரைக்காஞ்சி ஒன்றே இவருடைய புலமைத் திறத்தை விளக்கப் போதுமானதாகும்.

பாட்டுடைத் தலைவன்

பாண்டிய நெடுஞ்செழியன் மதுரைக் காஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவனாவான். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், பாண்டிய நெடுஞ்செழியன், நெடுஞ்செழியன் என்ற பெயர்களால் இவன் குறிக்கப்படுகிறான். இப்பாண்டியன், யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை என்ற சேரமன்னனுடன் தலையாலங்கானம் என்ற இடத்திலே போர் செய்தான்; அவனை வென்று சிறைப்படுத்தியுமுள்ளான். இதனால் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற பெயர் பெற்றான். சிலப்பதிகாரப் பாண்டிய நெடுஞ்செழியனும் இவனும் ஒருவனே என சிலர் கருதுவாராயினர். ஆனால், சிலப்பதிகாரத்து மதுரைக்காஞ்சி பற்றியும் மதுரைக்காஞ்சியில் சிலப்பதிகாரம் பற்றியும் பேசப்படாமையின் அக்கருத்து ஆராயத்தக்கது.‘‘மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் ஓர் அரசன் மட்டுமல்லன் புலவனும் ஆவான். புறநானூற்றில் உள்ள 72-ஆம் பாடல் இவன் பெயரில் உள்ளது. இப்பாண்டியனைப் பற்றி மாங்குடி மருதனார், குடபுலவியனார், கல்லாடனார், மாங்குடிக் கிழார், இடைக்குன்றூர்க்கிழார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர்’’

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று ஒருவனும் குறிக்கப்படுகின்றான். அவனும் இவனும் ஒருவன்தான் என்பதும் ஆய்விற்குரியது.

மதுரைக்காஞ்சியின் அமைப்பு

மதுரைக் காஞ்சி 782 வரிகளைக் கொண்ட நெடிய பாடல். இது ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டுள்ளது. இதன் அமைப்பை,

01 முதல் 205- வரிகள் முடிய - பாண்டியனின் குலப்பெருமையும்; வெற்றிச் சிறப்பும் கூறுதலும்,

206 முதல் 237- வரிகள் முடிய - பாண்டிய நெடுஞ்செழியனுக்கு நிலையாமை அறிவுறுத்தலும்,

238 முதல் 326 - வரிகள் முடிய - ஐவகை நிலவருணனையும்,

327 முதல் 724 - வரிகள் முடிய - மதுரை நகரின் அமைப்பு; அரண்மனை அமைப்பு; நால்வகைப்படை; பகலிரவுக் கடைகள்; திருவிழாக்கள்; மக்கள் பழக்க வழக்கங்கள்; பரத்தையர் வாழ்க்கை; மதுரையின் சிறப்பு இவை போல்வனவும்,

725 முதல் 752 - வரிகள் முடிய - வீரர;கள் மன்னனை வாழ்த்துதலும்; கொடைச் சிறப்பும்,

753 முதல் 782 - வரிகள் முடிய - புலவர; மன்னனை வாழ்த்துதலும்; உலகப் பற்று விடுத்து வீட்டு நெறியைக் காட்டுதலும் எனப் பகுத்துக் காணலாம்.
பாண்டியன் நெடுஞ்செழியன், தமிழ்நாடு முழுவதையும் தனித்தாண்டவன்; ஈடு இணையற்ற வீரன்; போர் செய்வதையே பொழுது போக்காகக் கொண்டிருந்தவன். நால்வகைப் படைகளையும் நல்ல முறையிலே பெருக்கி வைத்திருந்தான். செல்வச் செருக்கால் உலகப் பொருள்களும், உலக இன்பமும் அழிந்து விடக்கூடியவை என்பதை மறந்திருந்தான். இவனுடைய உற்ற நண்பர் மற்றும் அவைக்களத் தலைமைப் புலவருமானவர் மாங்குடி மருதனார். உலகத்து நிலையாமையைத் தம் மன்னனுக்கு உணர்த்த எண்ணினார். அவனைப் பார்த்து முதலில் அவன் முன்னோர்களின் அரசியல் நேர்மையை எடுத்துக் காட்டினார். அதன்பின், முன்னோர் முறையிலே தவறாமல் அவன் புரிந்துவரும் அரசியல் சிறப்பையும் பாராட்டினார். அவனுடைய அஞ்சாமை, வீரம், அருஞ்செயல்கள் ஆகியவற்றைப் போற்றினார். இறுதியில் அவனுடைய சிறந்த குணங்களை அவன் சிந்தை மகிழும்படி எடுத்துச் சொன்னார். பாண்டியனின் சிறப்புக் கூறி பின், உன்னைப் போலவே இந்த உலகில் எண்ணற்ற மன்னர்கள் வீரர்களாக - செல்வர்களாக - கொடை மறவர்களாக - சிறந்து வாழ்ந்தனர்.

அவர்கள் தம் எண்ணிக்கை கடலின் குறு மணலினும் பலராவர். புகழ்பட வாழ்ந்த அவர்கள் இறுதியில் மாண்டு போயினர் என்று நிலையாமையை எடுத்துக் காட்டினார்.

ஐவகை நிலவளங்களும் அழகுறக் காட்டப்பட்டுள்ளன. அதன் பிறகு, வைகை ஆறும் அதன் தென்பாலுள்ள மதுரைநகரில் நடைபெறும் திருவிழாக்கள், வாணிகம், தொழில்கள் எல்லாவற்றையும் எடுத்துக் காட்டிப் புகழ்ந்துள்ளார். மதுரை மக்களின் வாழ்க்கை பற்றியும் கூறத் தவறினாரில்லை. இறுதியில், ‘‘உன் காதல் மகளிருடன் கலந்து உண்டு மகிழ்ந்து வாழ்க’’ என்று நெடுஞ்செழியனை வாழ்த்தியுள்ளார். ‘‘மதுரைக் காஞ்சியைப் பொருளறிந்து படிப்போர் இதன் சொற்சுவை, பொருட்சுவை, மதுரை நகர அமைப்பு, மக்கள் வாழ்க்கை முறைகளை நுகர்ந்து இன்புறுவர். பழந்தமிழ் மதுரையில் சுற்றித் திரிவது போலவே மெய்யுணர்வு பெறுவர்’’ (சி. பாலசுப்பிரமணியன், பாட்டும் தொகையும் - ஓர் அறிமுகம், ப., 38)தமிழ் மன்னர்கள்

பண்டைத் தமிழ் மன்னர்கள் தனியதிகாரம் படைத்தவர்களாய், பகைவர் மனங் கலங்க அவர்கள் வாழும் இடத்திலேயே தங்கும் வலிமையுடையவர்களாய் - போர் மறவர்களாய் வாழ்ந்துள்ளனர். ஆயினும், அவர்கள் குடிகளின் குறையற்ற வாழ்வே தங்களுடைய நல்வாழ்வென நம்பினர். இதனையே வள்ளுவர்,

‘‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்’’. (திருக்குறள்., அதி; 39, கு.எ : 388)

என்றார். மன்னன் குடிகளைக் காத்தற்கு, வேண்டிய பொழுதில் பால்நினைந்தூட்டும் தாய்போல வேண்டிய காலத்து மழைபெய்தல் அரசனின் செங்கோலால் வாய்க்கும் என்ற செய்தி,

‘‘குழவியைப் பார்த்துறூஉம் தாய்போல உலகத்து
மழைசுரந்து அளித்தோம்பு நல்லூழி யாவர்க்கும்
பிழையாது வருதல்நின் செம்மையில் தரவாய்ந்த
இழையணி கொடித்திண்தேர் இனமணி யனையாய்’’ (கலி., பா.எ:99, பா.வரி : 4-7)

எனும் கலித்தொகைப் பாடல்வரியால் அறிய முடிகின்றது. நாட்டிலே செல்வம் செழிக்க - உணவுப் பொருள்கள் ஏராளமாக உற்பத்தியாக - குடிமக்களுடன் ஒத்துழைப்பதையே பெருமையாகக் கருதினர். பாண்டியனின் ஆட்சிப் பெருமை கூறும் இந்நூலாசிரியர் பாண்டியநாடு சிறந்திருந்ததை,

‘‘மழைதொழில் உதவ, மாதிரம் கொழுக்கத்
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனும் மரனும் பயன்எதிர்ப்பு நந்த,
நோயிகந்து நோக்கு விளங்க’’ (மதுரைக்காஞ்சி : 10-13)

என்ற அடிகளில் சுட்டியுள்ளார். தமிழ் மன்னர்கள் தங்கள் எதிரிகளுடன்தான் போர் செய்வார்கள். தங்கள் எதிரிகள் நாட்டுக் குடிமக்களுக்கு எவ்வித இன்னலும் இழைக்க மாட்டார்கள். தங்கள் ஆட்சிக்குள்ளான எதிரிகள் நாட்டையும், தங்கள் நாட்டைப் போலவே சீர்திருந்திப் பாதுகாப்பார்கள். இதனை,

‘‘ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வரைப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென’’ (புறம்., பா.எ: 9, பா.வரி : 9-10)

என்ற புறநானூற்றுப் பாடலால் தெள்ளிதின் புலப்படுத்தியுள்ளனர். பாண்டிய நெடுஞ்செழியனின் போர்ச்சிறப்பை விளக்கப்புகுந்த மாங்குடி மருதனார், ‘‘பகைவர்களின் உள்நாடுகளிலே புகுந்து அவர்களுக்குப் பாதுகாப்பாக உள்ளனவைகளை எல்லாம் பிடித்துக் கொண்டு அவ்விடத்தே பல்லாண்டுகள் தங்கியிருப்பாய். அந்நாடுகள் மேன்மையடைய பல்சீர்திருத்தங்கள் செய்வாய்’’ என பின்வரும் பாடல் வரியால் எடுத்துக் கூறியுள்ளார்.

‘‘அகநாடு புக்குஅவர் அருப்பம் வௌவி,
யாண்டுபல கழிய வேண்டுபுலத் திறுத்து
மேம்பட மரீஇய வெல்போர்க் குருசில்’’ (மதுரைக்காஞ்சி : 149-151)

இப்பகுதி மேலேகூறிய கருத்தினை விளக்கி நிற்கும். தமிழ் மன்னர்கள் அழிவை மட்டும் செய்பவர்கள் அல்லர் ஆக்க வேலைகளைச் செய்வதிலும் ஊக்கம் தளர்ந்தவர்களில்லை என்பது வெளிப்படை.வாணிகம் - ஏற்றுமதி, இறக்குமதி

மதுரைக்காஞ்சி தோன்றுவதற்கு முன்பிருந்தே தமிழ்நாட்டுப் பொருள்கள், பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அகநானூற்றில்,

‘‘யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்’’ (அகம்., பா.எ: 149, பா.வரி : 9-10)

இப்பாடல் வரிகள், வெளிநாட்டுடன் தமிழ்நாட்டு மக்கள் கொண்டிருந்த வாணிகத் தொடர்பை விளக்கி நிற்கின்றன. சிறப்பாக, முத்து, சங்கு, வளையல்கள், பலவகையான தானியங்கள், இனிய புளி, வெண்மையான உப்பு, காய்ந்த மீன்கள் ஆகியவை கப்பல்களின் மூலம் அனுப்பப்பட்ட செய்தியை மதுரைக்காஞ்சி வழி நாம் அறிய முடிகிறது. இந்நாட்டிலே அந்நிய நாட்டுக் குதிரைகள் வாணிபத்திற்காக வந்தும் இறங்கின.

‘‘முழங்கு கடல்தந்த விளங்கு கதிர்முத்தம்
அரம்போழ்ந்து அறுத்த கண்ணேர் இலங்குவளைப்
பரதர் தந்த பல்வேறு கூலம்,
இரும்கழிச் செறுவில் தீம்புளி, வெள்ளுப்புப்
பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழுமீன் குறைஇய் துடிக்கண் துணியல்
விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும்
வைகல் தோறும் வழிவழி சிறப்ப’’ (மதுரைக்காஞ்சி : 315 - 328)

எனும் இப்பாடல் வரிகள் மூலம் பாண்டிய நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கடற்கரை வாணிகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளப் பெருந்துணை புரிகின்றது.

வைகை நதி

அக்காலத்து வையை நதி இக்காலத்து வையை நதியைப் போன்று வருநீரின்றி வறண்டு காணப்படவில்லை. வற்றாத நீர்ப்பெருக்குடன் காட்சியளித்தது. அதன் கரைகளில் உள்ள கோங்கு முதலிய மரங்களின் மலர்கள் வையை வெள்ளத்திலே உதிர்ந்து மாலைபோல மிதந்து செல்லுகின்றன. வையைத் துறைகளிலே பல பூந்தோட்டங்கள் உண்டு. அவைகளிலே பாணர்கள் குடியிருந்து வருகின்றனர். இவ்வாறு வையைப் பற்றிக் கூறுகின்றது. இதனை,

‘‘தாதுசூழ் கோங்கின் பூமலர் தாஅய்க்
கோதையி னொழுகும் விரிநீர் நல்வரல்
அவிரறல் வையைத் துறைதுறை தோறும்
பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி
அழுந்துபட் டிருந்த பெரும்பாண் இருக்கையும்’’ (மதுரைக்காஞ்சி : 338 - 342)

என்ற இவ்வடிகள் வைகையின் நீர்வளத்தைக் காட்டுகின்றன. சிலப்பதிகாரத்தில்,

‘‘விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கருங்கயல் நெடுங்கண்
விரைமலர் நீங்கா அவிர்அறல் கூந்தல்
உலகுபுரந்து ஊட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப்
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி
தையற்கு உறுவது தான்அறிந் தனள்போல்
புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்
கண்நிறை நெடுநீர் சுரந்தனள், அடக்கிப் - ’’ ( சிலம்பு., புறஞ்சேரி இறுத்த காதை, பா.வரி : 166-173)

இவ்வாறு வையையாற்றின் வற்றாத நீர்ப் பெருக்கையும் வருமுன் மக்களுக்குணர்த்தும் ஈரமனப்பாங்கையும் இளங்கோவடிகள் கூறியுள்ளது மதுரைக் காஞ்சியுடன் ஒப்புநோக்கற்குரியது.

மதுரை மாநகர்

மதுரை நகரைச் சுற்றிலும் ஆழமான அகழியிருந்தது. அது கீழே மண்ணுள்ள வரையிலும் தோண்டப்பட்டு, நீர் நிறைந்திருந்தது. வானத்தைத் தொடும்படி உயர்ந்த மேல் நகரப் பாதுகாவலுக்காக பல படைகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கோட்டை மதிலின் வாயிலில் யாராலும் அசைக்க முடியாத வலிமையான கதவுகள் பொருத்தப்பட்டிருந்தன. வாசற்காலிலே காவல் தெய்வம் குடிகொண்டிருந்தது. கோட்டை வாசலுக்கு மேலே உயர்ந்த மாடி இருந்தது. வானத்திற் செல்லும் மேகங்கள் வந்து படியும்படியான உயரமிக்க மாடி அது. வையை ஆற்றிலே எப்பொழுதும் நீர் ஓடிக் கொண்டிருப்பது போல் அக்கோட்டை வாயிலின் வழியே மக்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தனர். அதனுள் பல்வகை ஊர்திகளும் வந்து கொண்டிருந்தன. மதுரையின் வெளிப்புறத் தோற்றம் இத்தகு நிலையைக் கொண்டிருந்தது.நகருக்குள் பல பெரிய வீடுகள் இருந்தன. ஒவ்வொரு வீடுகளிலும் கூடம், தாழ்வாரம், சமையற்கட்டு, விருந்தினர் அறை, படுக்கையறை போன்ற பல பகுதிகள் இருந்தன. அந்த வீடுகள் ஆகாயத்தை அளாவியிருந்தன. நல்ல காற்று வீசும்படியான பல சாளரங்களும் அந்த வீடுகளிலே அமைக்கப்பட்டிருந்தன. அந்நகரின் வீதிகள் அகலமானவை; நீளமானவை. அவைகளின் தோற்றம் உயர்ந்த இரு கரைகளுக்கும் இடையிலே வெள்ளம் பெருகியோடும் ஆறுகளைப் போல் காணப்பட்டன. இவ்வாறு மதுரைநகரின் வெளிப்புறத் தோற்றத்தையும் உட்புறத் தோற்றத்தையும் மாங்குடி மருதனார் தனது இலக்கியத்தில் படம் பிடித்துக் காட்டுகிறார். இதனை,

‘‘மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்,
விண்ணுற ஓங்கிய பல்படைப் புரிசை,
தொல்வழி நிலைஇய அணங்குடை நெடுநிலை,
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடு மலையின் நிவந்த மாடமொடு
வையை யன்ன வழக்குடை வாயில்’’ (மதுரைக்காஞ்சி : 351-356)

எனும் அடிகள் மதுரை புறநகர் தோற்றமாகக் காட்டுகின்றன. மதுரையின் அகநகர் தோற்றத்தை,

‘‘வகைபெற எழுந்து வானம் மூழ்கிச்
சில்காற்று இசைக்கும் பல்புழை நல்இல்,
யாறு கிடந்தன்ன அகல்நெடுந் தெருவில்’’ (மதுரைக்காஞ்சி: 357 - 359)

என அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றது. மதுரைநகர் பற்றி சிலப்பதிகாரத்தில்,

‘‘ஆயிரம் கண்ணோன் அருங்கலச் செப்பு
வாய்திறந் தன்ன மதிலக வரைப்பில்’’ (ஊர்காண் காதை, பா.வரி : 68-69)

என்ற வரியும்,

‘‘குடகாற்று எறிந்து கொடிநுடங்கு மறுகின்
கடைகழி மகளிர் காதல்அம் செல்வரொடு
வருபுனல் வையை மருதோங்கு முன்துறை’’ (ஊர்காண் காதை, பா.வரி : 70-72)

என்ற வரியும்,

‘‘பதிஎழு அறியாப் பண்பு மேம்பட்ட
மதுரை மூதூர் மாநகர் கண்டு ஆங்கு
அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய’’ (அடைக்கலக் காதை., பா.வரி :5-7)

என்ற வரியும்,

‘‘தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும்’’ (அடைக்கலக் காதை., பா.வரி :9)

என்ற வரியும் மதுரைக் காஞ்சியின் மதுரை நகர்ச் செய்திகளுடன் ஒப்புநோக்கற்குரியன.

கொடிகள்

பண்டைக் காலத்தில் கொடிகளையே விளம்பரக் கருவிகளாகக் கொண்டிருந்தனர். இதனை,

‘‘மைஅறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய
மலர்அணி வாயில் பலர்தொழு கொடியும்;
..........................
..........................
பல்வேறு உருவின் பதாகை நீழல்
செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பின்’’ (பட்டினம்., பா.வரி : 159-183)

எனப் பட்டினப்பாலை 159 முதல் 183 முடிய உள்ள வரிகள் பல்வேறு கொடிகள் மதுரைத் தெருக்களில் பறந்தமை கூறப்பட்டுள்ளன. மதுரைக் காஞ்சியில், விழாக் கொடி, வெற்றிக் கொடி, வியாபார விளம்பரக் கொடி எனப் பலவகையான கொடிகள் மதுரை நகரிலே பறந்து கொண்டிருந்தன என்றும், கோயில் திருவிழாக் காலங்களில் கட்டிய பல வகையான கொடிகள் பறக்கின்றன என்றும் 360-ஆம் வரி முதல் 374-ஆம் வரி முடிய உள்ள பகுதிகளில் கொடிகள் பற்றி மட்டுமே சொல்லப்பட்டுள்ளன.

அரசனுடைய தளபதிகள் அவன் ஆணை பெற்றுச் சென்று அடங்காதவர்களுடன் போர் செய்கின்றனர் அவர்களுடைய கோட்டையைப் பிடிக்கின்றனர். அவ்வாறு பிடிக்குந் தோறும் அவ்வெற்றிகளைக் காட்டுவதற்காகப் பல்கொடிகள் பறக்க விடப்படுகின்றன. உயர்ந்த மதுபானம் கிடைக்கும் இடத்தை அறிவிக்கும் கொடியும் பறந்து கொண்டிருக்கின்றது. இவை போன்று இன்னும் பல கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. இக்கொடிகள் பறந்து கொண்டிருக்கும் தோற்றம் பெரிய மலையிலிருந்து விழும் அருவிநீரைப் போலக் காணப்படுகின்றன. இதனை,‘‘சாறு அயர்ந்து எடுத்த உருவப்பல்கொடி
வேறுபல் பெயர்ஆர் எயில்கொளக் கொள
நாள்தோ றெடுத்த நலம்பெறு புனைகொடி;
...........................
...........................
பல்வேறு குழுஉக் கொடிப் பதாகை நிலைஇப்
பெருவரை மருங்கின் அருவியின் நுடங்க’’ (மதுரைக்காஞ்சி : 366- 374)

என்ற வரிகளால் மதுரையிலே பறக்கின்ற கொடிகளை நம் கண்முன்னே பட்டியலிட்டுக் காட்டுகின்றார் மாங்குடி மருதனார்.

கோவில்கள்

மதுரைநகரிலே இப்பொழுதும் சிறப்பாக விளங்குவது சொக்கநாதர் கோவில். இப்பொழுதிருப்பது போலவே இந்நூலாசிரியர் காலத்திலும் சிவன்கோவில் சிறந்து விளங்கிற்று. மற்றும் பல தெய்வங்களுக்கும் கோயில்கள் இருந்துள்ளன. பஞ்ச பூதங்களால் இவ்வுலகைப் படைத்த மழுப்படையையுடைய பரமசிவனைத் தலைவனாகக் கொண்டவர்கள்; குற்றமற்ற ஒளியையுடையவர்கள் வாடாத மலர்மாலையையும், இமையாத கண்களையும் உடையவர்கள் மணம்வீசும் மது மாமிசங்களைப் பழியாகக் கொள்ளும் அஞ்சத்தக்க பெரிய தெய்வங்கள் அவர்களுக்குத் தவறாமல் உயிர்ப்பலி கொடுப்பதற்காக அந்திக்கால விழாவுக்குரிய வாத்தியங்கள் முழங்கின.

‘‘நீரும் நிலனும் தீயும் வளியும்
ஆக விசும்போடு ஐந்துடன் இயற்றிய
மழுவாள் நெடியோன் தலைவ னாக,
மாசற விளங்கிய சூழ்சுடர்,
வாடாப் பூவின் இமையா நாட்டத்து,
நாற்ற உணவின், உருகெழு பெரியோர்க்கு
மாற்றரு மரபின் உயிர்ப்பலி கொடுமார்
அந்தி விழாவில் தூரியம் கறங்க’’ (மதுரைக்காஞ்சி: 453 - 466)

எனும் மதுரைக் காஞ்சியின் வரிகள் மதுரையிலே பல தெய்வங்களுக்குக் கோயில்கள் இருந்ததையும் அவைகளுக்கு மாலைக்காலத்திலே தவறாமல் பூசைகள் நடைபெற்று வந்தன எனத் தெளிவுறுத்துகின்றன.

பள்ளிகள்

பண்டைக் காலத்தில் இச்சொல் சமண முனிவர்கள், புத்தத் துறவிகள் வாழும் இடங்களையே குறித்தது. அவர்கள் தாங்கள் வாழும் இடங்களிலிருந்து கொண்டு, தங்களைக் காணவருவோருக்கு அறவுரைகளைப் போதித்து வந்தனர். இவ்வாறு போதனை நடைபெற்ற இடத்தைப் பள்ளிகள் என்று வழங்கியதனால் பிற்காலத்தில் கல்வி போதிக்கும் பாடசாலைகளையும் பள்ளிகள், பள்ளிக் கூடங்கள் என்ற பெயரால் வழங்கினர். மதுரையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பௌத்தப் பள்ளிகள் இருந்தன. சமணர் பள்ளிகள் இருந்தன. அவைகளிலே பௌத்தத் துறவிகளும், சமணத் துறவிகளும் வாழ்ந்தனர். அவர்கள் தங்கள் மத தர்மங்களைப் போதித்து வந்தனர். அக்காலத்திலே, மதுரையிலே பௌத்த சமணப் பள்ளிகளைப் போல அந்தணர் பள்ளி இருந்ததாகவும் இவ்வாசிரியர் கூறுகிறார். இது, ஒரு புதிய செய்தியாகும்; ஆய்தற்குரிய ஒன்றுமாகும். சமணத் துறவிகளைப் போல, பௌத்தத் துறவிகளைப் போல, தமிழ்நாட்டு அந்தணர்களிலும் துறவிகள் இருந்தார்கள் அவர்கள் வேத வேதாந்தங்களைப் போதித்து வந்தார்கள் என்ற உண்மை புலனாகிறது.அந்தணர்கள், சிறந்த வேதங்களைப் பொருள் விளங்கும்படி பாடுவார்கள்; மற்றவர்கள் பின்பற்றும்படி சிறந்த ஒழுக்கத்துடன் வாழ்வார்கள். அறிவிலும், ஒழுக்கத்திலும் அவர்களுக்கு இணையாக இவ்வுலகில் வேறு யாரையும் சொல்ல முடியாது. அவர்களுக்கு இணை அவர்களேதாம் என சான்று தருகின்றார் மாங்குடி மருதனார். இதனையே வள்ளுவர்,

‘‘அந்தணர் என்போர் அறவோர்’’ (திருக்குறள்., அதி:3, கு.எ:30)

என்ற வரிகளால் சுட்டியுள்ளார் போலும். உயர்ந்த உலகத்தை இங்கிருந்தபடியே பெறக்கூடிய சிறந்த அறநெறியைத் தவறாமல் மேற்கொண்டவரகள். எல்லோர்பாலும் இரக்கங்காட்டும் இளகிய நெஞ்சம் படைத்தவர்கள். மலையை மாளிகையாகச் செய்தது போன்ற பள்ளியிலே இவர்கள் வாழ்கின்றனர். அந்தணர் பள்ளியின் உயர்வைப் பற்றி,
‘‘சிறந்த வேதம் விளங்கப் பாடி,
விழுசீர் எய்திய ஒழக்கமொடு புணர்ந்து,
நிலம்அமர் வையத்து ஒருதாம் ஆகி,
உயர்நிலை உலகம் இவணின்று எய்தும்,
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும்’’ (மதுரைக்காஞ்சி: 468 - 474)

எனும் மதுரைக்காஞ்சியின் வரிகள் தெளிவுறுத்துகின்றன. மேலும், சமணர்களும் பௌத்தர்களும் துறவு பூண்டு பொதுப்பணி புரிந்தது போலவே தமிழ்நாட்டு அந்தணர்களும் துறவுபூண்டு பொதுப்பணி புரிந்து வந்தனர் என்பதை இவ்வடிகள் விளக்கி நிற்கின்றன.

சைவர், வைணவர், சமணர், பௌத்தர் போன்ற பல மதத்தினர் அக்காலத்தில் மதுரையில் வாழ்ந்தனர். ஆயினும் அவர்கள் ஒன்றுபட்டிருந்தனர். மதவெறுப்பும், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னே தோன்றவில்லை என்பதை இந்நூல் உணர்த்துகிறது.

அறங்கூறவையம்

நீதிமன்றத்திற்கு அறங்கூறவையம் என்பது பழந்தமிழ்ப் பெயர். பண்டைத் தமிழர், நீதியிலே நேர்மை காட்டினர். பண்டைக் காலத்தில் நீதி வழங்கிய முறைக்கும் இக்காலத்தில் நீதி வழங்கும் முறைக்கும் வேற்றுமையுண்டு.

‘‘பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப’’ (தொல்., பொருள்., கற்பு., நூற்பா., 143)

என்ற நூற்பாவழி தொல்காப்பிய காலத்திற்கு முன் நீதிமன்ற அமைப்பு முறை ஒரோவழி இருந்திருத்தல் கூடும். பொய்யாவது - செய்ததனை மறைத்தல். வழுவாவது - செய்ததன்கண் முடியநில்லாது தப்பி ஒழுகுதல். கரணத்தொடு முடிந்த காலையின் அவையிரண்டும் நிகழாவாமாதலாற் கரணம் வேண்டுவதாயிற்று என்பர் இளம்பூரணர். அந்தக் காலத்தில் உண்மை கண்டறிந்து தீர்ப்புக் கூறினர். நீதிபதிகள் பற்றி மதுரைக் காஞ்சி கூறியிருப்பதைக் கொண்டு இதனை நாம் அறியலாம்.

‘‘அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்
செற்றமும் உவகையும் செய்யாது காத்து,
நெமன்கோல் அன்ன செம்மைத் தாகிச்
சிறந்த கொள்கை அறங்கூ றவையமும்’’ (மதுரைக்காஞ்சி : 489 - 492)

என்று நீதிபதிகளின் நேர்மையை நூலாசிரியர் சுட்டியுள்ளார். அறங்கூறவையம் - அறம் நீதிமன்றங்கள் போலதாகும். மன்னர்கள் மக்களைத் தம் உயிர் போன்று பாதுகாத்துள்ளனர். மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நீதிவழங்க அறமன்றங்கள் அமைந்திருந்தன. அவற்றுள் நீதி நிலைபெற்றிருந்தது. இதனை,

‘‘அரசியல் பிழையாது அறநெறி காட்டி’’ (மதுரைக்காஞ்சி : 192)

என்ற அடியால் நாம் அறியலாம். மேலும்,

‘‘அறந்துஞ் சுறந்தைப் பொருநனை யிவனே’’ (புறம்., பா.எ : 58, பா.வ. : 9)

என்ற வரியும்,

‘‘அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்’’ ( பொருநர்., பா.வ : 230)

என்ற வரியும் நீதி தவறாது முறை செய்த மன்னர்களைப் போற்றிக் கூறுவதைக் காணமுடிகிறது. பண்டை நாளில் பாண்டிய மன்னரின் ஆட்சிக்கீழ்த் தமிழ் மக்கள் அமைந்து வாழ்ந்த சிறப்பினை இன்றை நாள் நாம் அறிதற்கு மாங்குடிமருதனார் பெருந்துணை புரிந்துள்ளார் எனில் மிகையன்று. மதுரைக் காஞ்சியில் முதலில் வரும் 205 அடிகள் பாண்டிய மன்னர்களுடைய வீரத்தையும், ஈகையையும் பாராட்டிக் கூறுகின்றன. இப்பகுதி மதுரை மன்னர்கள் பற்றி அறிய உதவும் வரலாற்றுச் சான்றாகத் திகழ்கிறது எனில் தகும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p40.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License