இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

சங்க கால சோழநாட்டு ஊர்கள்

ப. செந்தில்குமாரி


சங்க காலத்தமிழகம் அரசியலால் சேர, சோழ, பாண்டிய என மூவேந்தர்களின் பெருநாடுகளாகவும், சிறு குறுநிலங்களாகவும், பிளவுண்டு கிடந்தது. ஆனால் மொழியாலும், பண்பாட்டாலும் தமிழர்கள் ஒன்றுபட்டிருந்தனர். இந்த மூன்று பெருநாடுகளிலும் வாழ்ந்த புலவர்கள், மூவேந்தர்களையும் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்ததைச் சங்க இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன.

சங்க இலக்கியம் பாடியவர்களில் பெயர் தெரிந்த புலவர்களாக 473 பேர் காணப்படுகின்றனர். இவர்களுடன் சேர, சோழ, பாண்டிய, தொண்டை நாட்டைச் சேர்ந்த புலவர்களும், புலவர்களுக்கு உரிய நாடு மற்றும் பெயர் தெரியாத புலவர்களும் அடங்குவர். சேரநாட்டுப் புலவர்கள் 24பேர்; சோழநாட்டுப் புலவர்கள் 57பேர்; பாண்டியநாட்டுப் புலவர்கள் 90 பேர்; தொண்டைநாட்டுப் புலவர்கள் 9 பேர்; எனக் காணக்கிடக்கின்றனர். இப்புலவர்களின் பெயர்களை ஆராயும் பொழுது அப்பெயர்கள் இயற்பெயர், ஊர்ப்பெயர், குடிப்பெயர், தொழில் பெயர், உறுப்பால் பெற்ற பெயர், சிறப்புப் பெயர் எனப் பலவாறாக பெயர் பெற்றுள்ளமையை அறிய முடிகிறது. இவ்வகையில் சங்க கால சோழநாட்டுப் புலவர்களின் பெயரால் அறியப்படும் சோழநாட்டு ஊர்களான அரிசிலூர், ஆடுதுறை, ஆர்க்காடு, ஆலங்குடி, ஆவூர், உறையூர், ஐயூர், கடலூர், காவிரிபூம்பட்டினம், கிடங்கில், குடவாயில், கோவூர், செல்லூர், முகையலூர், துறையூர், நல்லாவூர், மாங்குடி, வெள்ளைக்குடி ஆகிய ஊர்கள் பற்றிய வரலாறுகளை ஆய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். .

அரிசில்

அரிசில் என்னும் இவ்வூரைச் சேர்ந்த அரிசில் கிழார் என்ற புலவர் சங்க காலத்தில் வாழ்ந்துள்ளார். தமிழகத்து ஊர்கள் ஒவ்வொன்றும் பெரும்பாலும் ஏதோ ஒரு காரணம் பற்றியே பெயர் பெற்றிருக்கும். பொதுவாகத் தம்மைச் சார்ந்துள்ள மலை, காடு, ஆறு என்று இவற்றின் பெயர் அமைந்திருப்பது பெரு வழக்கமாகும். ஆற்றின் பெயரைத் தன்பெயராகக் கொண்டு ஊர்கள் பல நம் தமிழகத்தில் காணப்படுகின்றன. இவ்வாறு ஆற்றின் பெயரைப் பெயரெனக் கொண்ட ஊர்களுள் அரிசிலூரும் ஒன்றாகும். காவிரியில் பிரிந்து பாயும் ஆறுகளுள் அரிசிலாறும் இடம் பெறுகின்றது. அரிசிலாற்றங்கரையில் அரிசில் என்று பெயர் பெற்ற ஊர் இருந்ததாக பழந்தமிழ்ப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. அரிசிலாற்றைப் பற்றிய குறிப்பு சோழநாட்டுப்புலவர் பாடிய பாடலில் காணப்படுகின்றது என்பதை,

"ஏந்து கோட்டு யானை இசை வெங்கிள்ளி
வம்பு அணி உயர்கொடி அம்பர் சூழ்ந்த
அரிசில்" 1

என்ற பாடலின் வழி அறியலாம். இப்பொழுது அம்பர் என்ற ஊர் திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டத்திற்குக் கிழக்கே அரிசிலாற்றின் கரையில் அமைந்துள்ளது. சங்க காலத்தில் அம்பர் நகரம் கிள்ளி வளவனுக்குரியதாக இருந்துள்ளது. இவ்வூரைச் சூழ்ந்தே அரிசிலாறு அமைந்துள்ளது. பிற்காலத்தில் சுந்தரரால் தேவராம் பாடப்பெற்ற சைவத்தலங்களில் இந்த அரிசிலூர் 'அரிசிற்கரைப்புத்தூர்' என்று பாடப்பட்டுள்ளது. அது இப்பொழுது 'அழகாபுத்தூர்' என்றழைக்கப்படுகிறது. 'அரிசிலாறு' என்பது 'அரசலாறு' என்று இப்பொழுது வழங்கப்பட்டு வருவதனைக் காணலாம்.



ஆடுதுறை

ஆடுதுறை என்ற பெயருடைய ஊர்கள் பல தமிழகத்தில் உள்ளன. அவை, தென்குரங்காடுதுறை, வடகுரங்காடுதுறை, ஆவடுதுறை என்பனவாகும். ஆவடுதுறை என்ற பெயரே ஆடுதுறை என மாறி வந்துள்ளது. 'திருவாவடுதுறைக்குச் சாத்தனூர் என்னும் பழம் பெயர் இருந்ததாக கல்வெட்டுகளும், திருத்தொண்டர் புராணமும் கூறுகின்றன. சாத்தனூர் என்பது ஊர்ப்பெயர் ஆவடுதுறை என்பது அவ்வூர்க் கோயிலுக்குப் பெயர். நாளடைவில் சாத்தனூர் என்பது மறைந்து போகவே கோயில் பெயரே ஊருக்கும் பெயராகிவிட்டது என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இவ்வாடுதுறையைச் சார்ந்தவராக ஆடுதுறை மாசாத்தனார் என்னும் புலவர் காணப்படுகிறார். இப்பொழுதுள்ள ஆடுதுறைக்கு அருகே, சாத்தனூர், திருவாவடுதுறை ஆகிய இரு ஊர்களும் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாம்.

ஆர்க்காடு

சோழ மன்னனுக்குரிய ஆத்தியைக் குறிக்கும் 'ஆர்' என்ற மரத்தால் பெயர் பெற்ற ஊர் ஆர்க்காடு ஆகும். ஆர்க்காடு என்ற ஊர்ப்பெயரே இன்று மாவட்டத்திற்கும் பெயராக வழங்கி வருகிறது. சங்க இலக்கியம் குறிக்கும் ஆர்க்காடு 'அழிசில்' என்ற குறுநில மன்னனுக்கு உரியதாய் இருந்துள்ளது. இப்பொழுது வடவார்க்காடு மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் இவ்வூர் காணப்படுகிறது.

"படுமணி யானைப் பசும்பூட் சோழர்
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்" 2

என்னும் அடிகள் ஆர்க்காடு சோழர்களின் நகரமாக இருந்தததைக் குறிப்பிடுகிறது. இவ்வூரைச் சேர்ந்தவராக 'ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்' என்னும் புலவர் காணப்படுகின்றார்.



ஆலங்குடி

ஆலங்குடி என்னும் பெயர் தாங்கிய ஊர்கள் பல நம் தமிழகத்தில் உள்ளன. இவ்வூரைச் சேர்ந்தவராக ஆலங்குடி வங்கனார் என்னும் புலவர் காணப்படுகிறார். இவர் பாடிய அகத்திணைப் பாடல்கள் யாவும் மருதத்திணையில் அமைந்த பாடல்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தொன்மைச் சிறப்புடைய ஆலங்குடி சோழநாட்டில் இரண்டு இருந்துள்ளன. அவை தஞ்சை மாவட்டத்து மேலைப்பெரும் -பள்ளத்துக் கல்வெட்டில் காணப்படும் ஆலங்குடியும், புதுக்கோட்டை ஆலங்குடியும் ஆகும். மேலைப்பெரும்பள்ளத்து ஆலங்குடி திருஞானசம்பந்தர் காலத்தில் 'திரிவிரும்பூளை' என்று வழங்கி வந்திருக்கின்றது. அவர்க்குப்பின் தோன்றிய சோழர்காலத்தில் அது சுத்தமல்லி வளநாட்டு முடிச்சோணாட்டு ஆலங்குடியான சனநாதச் சதுர்வேதமங்கலம் என வழங்கப்பட்டுள்ளது. பிறிதொரு கல்வெட்டில் இந்த ஆலங்குடியே சோழ வளநாட்டு வேளாநாட்டு ஆலங்குடி என்று கூறப்படுகிறது. மற்றதொரு ஆலங்குடி இராசராச வளநாட்டுப்புன்றிற் கூற்றத்து ஆலங்குடி என கல்வெட்டுகள் குறிக்கின்றன.

இந்த இரண்டு ஆலங்குடியுள்ளும், புன்றிற் கூற்றத்து ஆலங்குடியே 'ஆலங்குடி' என்ற பெயரளவில் தொன்மையுடையதாகத் தெரிதலால் இதுவே வங்கனார் புலவர் வாழ்ந்த ஊராகும் என்று கொள்வதற்கு இடமிருக்கிறது. வலங்கைமானுக்கு அருகில் அமைந்த ஆலங்குடி தேவராப்பாடல் பெற்றதும் சோழர் கால கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் இடம் பெற்ற பழமைச்சிறப்புடையதாகும்.

ஆவூர்

ஆவூர் எனப் பெயருடைய ஊர்கள் தொண்டைநாட்டிலும் சோழநாட்டிலும் உண்டு. பிற்காலச்சோழர், பாண்டியர் காலம் வரையில் சோழநாட்டு ஆவூர், 'ஆவூர்க்கூற்றத்து ஆவூர்' என்று விளங்கியிருந்தது. அது பிற்காலத்தே பசுபதி கோயில் என்ற பெயரை மேற்கொண்டமையால் ஆவூர் என்ற பழம் பெயர் மறைந்தொழிந்தது. ரா.பி. சேதுப்பிள்ளை இந்த ஆவூர் பற்றிய கருத்தைக் கூறுகிறார். பசுபதீச்சுரம் தான் ஆவூர் என்பது அவருடைய முடிவு. 'அங்கிணர்க்கிடமாகிய ஆவூர்' என்று சேக்கிழாரால் சிறப்பிக்கப் பெற்ற ஊரில் அமைந்துள்ளது பசுபதி என்று கூறுவதோடு 'பத்திமைப்பாடல் ஆறாத ஆவூர்ப் பசுபதிஈச்சுரம் பாடு நாவே' என்று அத்திருக்கோயிலைத் திருஞானசம்பந்தரும் பாடியருளியதை எடுத்துக்காட்டுகிறார். இவ்வூரைச் சேர்ந்தவர்களாக, ஆவூர் மூலங்கிழார், ஆவூர்கிழார் மகனார் கண்ணனார், ஆவூர்க்காவிதிகள் சாதேவனார் ஆகிய நால்வரும் காணப்படுவதை அறிய முடிகிறது.



உறையூர்

சோழர்களின் தலைநகரமாக இவ்வூர் விளங்கியுள்ளது. இவ்வூருக்குக் கோழியூர் என்ற பெயருமுண்டு. கோப்பெருஞ்சோழனைப் புறப்பாடல் குறிப்பிடும் பொழுது 'கோழியோனே கோப்பெருஞ்சோழன்' என்று சுட்டுகிறது. உறையூரானது காவிரி நதிக்கரையில் அமைந்த செய்தியை,

"காவிரிப்படப்பை உறந்தை அன்ன" 3

என்ற அகப்பாடலானது குறித்துள்து. உறையூரின் கிழக்கே திருச்சிராப்பள்ளியும், பிடவூரும் அமைந்துள்ளது. இவ்வூறையூரைச் சோழமன்னர்களுக்கே உரியதாக 'மறம் கெழு சோழர் உறந்தை', 'வளம்கெழு சோழர் உறந்தை', ‘சோழர் அறம் கெழு நல் அவை உறந்தை’ என்று சங்க இலக்கியங்கள் பாடுகின்றன. உறையூரைச் சார்நதவர்களாக ஒன்பது புலவர்கள் காணப்படுகின்றனர்.

ஐயூர்

ஐ என்றால் அழகு. எனவே அழகிய ஊர் என்ற பொருளில் அமைந்து ஐயூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம். தலைவன் என்ற பொருளும் இருப்பதால் தலைவனின் ஊர் என்று பொருளிலும் அமைந்திருக்கலாம். ஐயூர் என்பது சோழநாட்டில் உள்ள ஊர் என்று குறிப்பிடுகிறார் ஆளவந்தார். இவ்வூரினை ஔவை சு.துரைசாமிப்பிள்ளை, பாண்டி நாட்டில் உள்ள ஊர் என்று சுட்டுகிறார். இவ்வூரைச் சேர்ந்தவர்களாக ஐயூர் முடவனார், ஐயூர் மூலங்கிழார் என இரு புலவர்கள் காணப்படுகிறார்கள்.



காவிரிப்பூம்பட்டினம்

சங்க கால சோழர்களின் தலைநகரமாகவும், துறைமுகமாகவும் இவ்வூர் இருந்துள்ளது. உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னியின் தலைநகரமாகக் காவிரிப்பூம்பட்டினம் விளங்கியதை,

"பூவிரி நெடுஞ்சுழி நாப்பண், பெரும் பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன
செழுநகர்" 4

என்ற அகப்பாடலில் நக்கீரர் சுட்டியுள்ளார். கரிகால் பெருவளத்தான் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் சிறந்த துறைமுகமாக விளங்கியதைப் பட்டினப்பாலையும், பொருநராற்றுப்படையும் எடுத்துரைக்கின்றன. காவிரிப்பூம்பட்டினம், 'காவிரி படப்பைப் பட்டினம்' எனச் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகிறது. இவ்வூரைச் சேர்ந்தவர்களாக ஐந்து புலவர்கள் காணப்படுகின்றனர்.

கிடங்கில்

ஒய்மா நாட்டு நல்லியக்கோடன் ஆட்சி செய்த இவ்வூர் தென்னார்க்காடு மாவட்டம் திண்டிவனம் நகரத்தில் பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. அங்கே சிவன்கோவில் ஒன்று அமைந்துள்ளது. அதைச்சுற்றிலும் இடிந்த மதிற்சுவர்கள் காணப்படுகின்றன. அக்கோவிலில் கி.பி.11 முதல் 15ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சோழர், சம்புவராயர், விசயநகர வேந்தர் கால கல்வெட்டுகள் காணக்கிடைத்துள்ளன. அக்கல்வெட்டுகளில் 'ஒய்மானாட்டு கிடங்கை நாட்டுக்கிடங்கில்' எனும் ஊரில் அக்கோயில் இருப்பதாக கூறுகின்றன. இவ்வூருக்கு ஒரு கிலோ மீட்டர் வடக்கில் அமைந்த திண்டிவனத்தில் ஒரு சிவன் கோயிலுள்ளது. அக்கோயிலில் உள்ள சோழர்காலக் கல்வெட்டுகள் கி.பி.1300ம் காலத்தவையாம். அக்கல்வெட்டுகளும் 'ஒய்மானாட்டு கிடக்கை நாட்டுக் கிடங்கிலான இராஜேந்திர சோழ நல்லூர்த் திண்டீசுரம்' என்று குறித்துள்ளன. இச்சான்றுகளின் படி இன்றைய திண்டிவனம் நகரத்தின் பெரும்பகுதி கிடங்கிலே ஆகும். இக்கிடங்கில் நகரைச் சேர்ந்தவர்களாக மூன்று சங்கப்புலவர்கள் காணப்படுகின்றனர்.

குடவாயில்

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் குடந்தை, குடவாயில் ஆகிய யாவும் இன்றைய குடவாசலே என்று உ.வே.சா, பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், பெருமழைப்புலவர்சோமசுந்தரனார் ஆகியோர் குறிக்கின்றனர். இக்குடவாயிலைப்பற்றி,

“தண் குடவாயில் அன்னோள்””“ (அகம் - 44)

“தேர் வண் சோழர் குடந்தை வாயில்“ (நற்றிணை - 379)

“கொற்றச்சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதி””“ (அகம் - 60)

என்று சங்க இலக்கிய அடிகள் குடவாயிலின் பெருமையினை பேசுகின்றன.



கூடலூர்

தென்னார்க்காடு மாவட்டத்தில் கடலோரத் தாலுக்காவாக இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரில் தென்பெண்ணை, கெடிலம், வெள்ளாறு என மூன்று ஆறுகள் ஓடுகின்றன. இவை கூடுமிடத்தால் கூடலூர் எனப் பெயர்பெற்று. பின் அப்பெயரே மருவி கடலூர் என அமைந்திருக்க வேண்டும். சங்க காலப் பல்கண்ணனார் என்னும் புலவர் இவ்வூரினராகக் கருதப்படுகிறார்.

கோவூர்

கோவூர் கிழாரின் பெயரால் அறியப்படும் இவ்வூர் சோழ நாட்டு ஊர்களுள் ஒன்று. நாகைக்கு அருகில் 'கோகூர்' என்று அறியப்படும் ஊரே சங்க காலத்தைச் சேர்ந்த கோவூராக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

செல்லூர்

செல்லிக்கோமான் என்றழைக்கப்பட்ட ஆதன் எழினி என்னும் குறுநில மன்னனால் செல்லூர் ஆட்சி செய்யப்பட்டது. சோழநாட்டின் கீழைக்கடலோரம் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரின் கிழக்கே நியமம் என்ற ஊர் உள்ளது. இவ்வூரில் இளங்கோசர்கள் வாழ்ந்துள்ளமையை,

"அருந்திறற் கடவுட் செல்லூர்க் குணா அது
பெருங்கடல் முழக்கிற்று ஆகி யாணர்,
இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர்
கருங்கட் கோசர் நியமம் ஆயினும்".5

என்னும் அடிகள் உணர்த்துகின்றன. இன்றும் காரைக்கால் அருகெ செல்லூர் என்ற ஊர் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

துறையூர்

தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறித் தாலுக்காவில் இவ்வூர் காணப்படுகிறது. இவ்வூரைச் சேர்ந்தவராக 'ஓடைகிழார்' என்னும் புலவர் காணப்படுகிறார். இப்புலவர் வேள் ஆய் அண்டிரனைப்பாடும் பொழுது

"தண்புனல் வாயிற் றுறையூர் முன்றுரை" 6

என்று சிறப்பித்துப் பாடுகிறார்.



நல்லாவூர்

நல்லாவூர் சோழநாட்டைச் சேர்ந்த ஊராகும். இவ்வூரில் நல்லாவூர் கிழார் என்னும் புலவர் வாழ்ந்துள்ளார். இவ்வூரைப் பற்றி வேறொன்றும் அறிய இயலவில்லை. காரைக்கால் செல்லும் வழியில் எஸ்.புதூர் என்னும் ஊருக்கு அருகே நல்லாவூர் என்னும் ஒரு சிற்றூர் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாம்.

மாங்குடி

மாங்குடி என்ற பெயரில் தமிழகத்தில் பல ஊர்கள் உள்ளன. திருத்துறைப்பூண்டிக்கு அருகே மாங்குடி, மருதவனம் என இரண்டு ஊர்கள் உள்ளன. இவ்வூர்களைச் சேர்ந்தவராக மாங்குடி மருதனார் அறியலாகிறார்.

முகையலூர்

முகையலூர் என்பது சோழநாட்டைச் சார்ந்த ஓர் ஊராக இருந்துள்ளது. ஔவை.சு.துரைசாமிப்பிள்ளை முகையலூர் இடைக்காலத்தில் 'முகலாறு' என வழங்கி இப்பொழுது 'மொகலாரென' வழங்குகிறது என்கிறார். இவ்வூரைச் சேர்ந்தவராக சோணாட்டு முகையலூர் சிறுகருந்தும்பியார் என்னும் புலவர் காணப்படுகிறார்.

வெள்ளைக்குடி

வேங்கைமரம் எனப்பொருளுடைய சொல் 'வெள்ளை' என்பதாம். வேங்கை மரங்கள் அடர்ந்த குடியிருப்புகள் அமைந்த ஊர் வெள்ளைக்குடி எனப்பெயர் பெற்றிருக்கலாம் என்கிறார் ஆளவந்தார். இவ்வூரும் சோழ நாட்டைச் சேர்ந்த ஊராகும். நாகனார் என்னும் புலவர் இவ்வூரினார் ஆவார்.

இதுகாறும் சோழநாட்டு ஊர்களை ஆயுமிடத்து, அவை வரலாற்றுத்தொன்மை மிக்க சிறப்பு உடையதாகத் திகழ்ந்தமையை அறிய முடிகிறது. மேலும் ஊரின் அமைப்பும், அவ்வூரில் வாழ்ந்த புலவர்களும், அப்புலவர்களின் வழி அவ்வூரின் பெருமையினையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

பயன்பட்ட ஆதாரங்கள்:

1.நற்றிணை, பா. 141 : 9-11
2.அகம், பா. 227 : 5-6
3.மேலது பா.385 : 4.
4.மேலது பா.205 : 11-13
5.மேலது பா.90 : 9-12
6.புறம், பா.136 : 25.
7.டாக்டர். வேனிலா ஸ்டாலின், உரைவேந்தர் புலமையில் நற்றிணை
8.ஆர். ஆளவந்தார் இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள், தொகுதி– I
9.ஔவை சு. துரைசாமிப்பிள்ளை (உ.ஆ.), புறநானூறு மூலமும் உரையும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p50.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License