கம்பர் கண்ட காவிய மாந்தர்
முகில் தினகரன்
இவ்வுலக அரங்கில் விவிலியத்திற்கு அடுத்த நிலையில் புகழிலும்… பரவலிலும்… பூசனைக்குரியதாகவும் வெகுவாய் விரிந்து நிற்பது பகவத்கீதையும், இராமாயணமும்தான். இதில் மறுப்பேதும் கூறும் மாந்தர் எவரும் இங்கிலர். உற்று நோக்கின் அவ்விவிலியமானது கிறித்துவத் தேவாலயங்களில் மட்டுமே சிறப்பொடு கூடிய செல்வாக்கினைப் பெற்றுள்ளது. அதே போல்தான் கீதையானது கற்றறிந்த மாந்தரிடத்தும், அறிஞர் மற்றும் அறிவுடைச் சான்றோர் மத்தியிலும் மட்டுமே போற்றப்பட்டு வருகின்றது.
ஆக, எஞ்சியிருக்கும் இராம காதை மடடுமே கற்றோரிடத்தும், மற்றோரிடத்தும்… படித்தோரிடத்தும், பாமரரிடத்தும்…, உயர்குல மனிதரிடத்தும், ஏழ்நிலைக்காரரிடத்தும், சமயங் கடந்தும், சாத்திரச் சம்பிரதாயச் சடங்குகள் கடந்தும், குல முறை, வரை முறையெனும் எல்லைகளைத் தாண்டியும், செல்வாக்கு மற்றும் தெய்வீகப் பூரணத்துவம் பெற்று நிலைத்து நிற்கின்றது.
அதற்கான காரணம் இன்னதென்று ஆய்ந்துய்த்துப் பார்க்கையில்தான் அறிவினில் நிலைப்பாடாகின்றது இராமாயணத்தின் கதை வடிவமும், கலை வடிவமும், கவி வடிவமும், காலத்தோடியங்கும் கலாச்சாரப் பாங்கும். உண்மையில் இப்பாரத நாட்டில் அனைத்து மொழிகளிலும் பல் வேறு வடிவங்களில்… அதாவது காவியமாக, நாடகமாக, தெருக் கூத்தாக, நடன நாடகமாக, தோல் பாவைக் கூத்தாக, பொம்மலாட்டமாக, கரகாட்டமாக… இன்று நேற்றல்லாது பல நூற்றாண்டுகளாகப் பாடப்பட்டு… போற்றப்பட்டு வந்துள்ளது. ஓவியங்களும், சிற்பங்களும்,ஒப்பனைகளும் கூட இதற்கு விதிவிலக்கல்ல.
காப்பிய வடிவில் முதன் முதலில் உதித்தது வான்மீகியின் இராமாயணமே.அக்காரணத்தினாலேயே அதனை “ஆதி காவியம்” என இலக்கிய உலகம் இன்று வரை போற்றுகின்றது.
ஒரு மொழிக்குச் சிறப்பு என்பது அதன் வசம் அமைந்திட்ட நன்னூல்களே. நம் தாய்த் தமிழ் மொழியானது நூல் வளம் மிகுந்தது என்பது மாற்றுக் கருத்தில்லா உண்மை. அத்தமிழ் அகிலம் போற்றும் உயர் தனிச் செம்மொழிகளில் ஒன்றாகக் கருதப்படும் உயர்நிலைக்கான அடிப்படைக் காரணமே இந்நூல் வளம்தான். அவ்வாறு செந்தமிழ் மொழியின் புகழுக்குரிய புண்ணிய நூல்களில் முதன்மையானது “கம்ப இராமாயணம்” ஆகும். இவ்வருமைக்குரிய நூலை ஆக்கியுதவிய பெருமைக்குரியவர் “கம்பர்”.
கவிதைப் பண்பு அவருக்கு கருவிலேயே வாய்த்த திரு இயல்பாய் வந்திட்ட பண்பு. பிறவியிலேயே பெற்றிட்ட பேறு. ஆம்!...கருவிலே கவிதைப் பண்பு வாய்க்கப் பெற்றுக் கவிஞராகி,கடவுள் குணம் கூறும்… உலகம் புகழும் புண்ணியக் கதையாகிய இராம காதையை யாவரும் போற்றும் வண்ணம்… வணங்கும் விதத்தில்… ரசிக்கும் வகையில் ஒரு பெருங்காவியமாய்த் தீட்டியுதவிய கம்பர் “கவிச் சக்கரவர்த்தி” எனப் போற்றப்பட்டதோடு “கடவுள் மாக் கவிஞர்” எனவும் பாராட்டப் பெற்றார்.
கவிஞர் திறம்
நூல்கள் பல வகை. கதை… வரலாறு… காப்பியம் என வெவ்வேறு வடிவங்களில் அவை இயற்றப்படுவதோடு வெவ்வேறு இலக்கண வரம்புகளையும் தாமாகவே பெற்றுள்ளன. இவற்றுள் கதை என்பது இல்லாது படைத்தல். கற்பனையில் நிகழ்வுகளை அமைத்து… கற்பனை மாந்தர்களைப் பாத்திரங்களாக்கி…, படைப்பாளியின் திறத்திற்கேற்றவாறு வசனங்களைத் தீட்டுவது. அடுத்து வரும் வரலாற்றில் அதன் ஆசிரியர்கள் தாங்கள் படைக்கும் வரலாற்று நூலில் இடம் பெறுவோரை உள்ளபடியே காட்டி, நிகழ்வுகளை நிகழ்ந்தபடியே தீட்டும் வரையறைக்குட்பட்டவர்கள்.
ஆனால், காப்பியம் புனையும் கவிஞர் மேற்கூறிய இரண்டு நிலைகளிலிருந்து வித்தியாசப்பட்டு, காப்பியத்தின் குறிக்கோள்கள், தனிக் கொள்கைகள், நம்பிக்கைகள், சூழ்நிலைகள், மக்களின் பழக்க வழக்கங்கள், கற்பனைகள், மனவியல் ஆகியவற்றிற்கேற்ப தான் வடிக்கும் காப்பியத்தின் ஊடே உலவும் கதை மாந்தர்களின் குற்றம் களைந்து, குறை நீக்கி, நிறைவாய்க் கூறி, நல் ஒப்பனைகள் செய்து காட்ட வேண்டியவராகின்றார்.
இராம காதையை முதன் முதலில் நூலாக இயற்றிய வான்மீகி, அக்கதை நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் என்பர். ஆகவே, அவர் தான் கண்ட…,கேட்ட…, நிகழ்ச்சிகளைத் தன் மனதிருத்தி, அதனொடு தொடர்புடைய கிளைக் கதைகளைத் திரட்டி, இராம காதையை ஒரு இதிகாசமாக்கிக் காட்டியுள்ளார்.
ஆனால், வான்மீகியார் தம் நூலில் காட்டிய பாத்திரங்களைக் கவிஞராகிய கம்பர் தாம் புனையும் காப்பிய அமைப்பிற்கேற்ப, கற்பனைத் தறியிலிட்டு நெய்து, கவிதை அச்சில் வார்த்தெடுத்து, உளவியல் காணையில் தீட்டி, ஓவியமாய் மெருகேற்றி, உயிரும் உணர்வும் ஊட்டி உலாவ விட்டுள்ளார். அத்தோடல்லாது வான்மீகி கூறியுள்ள சில கதைப் பகுதிகளை விடுத்தும், அவர் கூறாத சில கதைப் பகுதிகளைக் கொண்டு தொடுத்தும், சில கதை நிகழ்ச்சிகளை மாற்றி அமைத்தும், சில கற்பனைச் செய்திகளை சிறப்புறச் செருகியும், சிலவற்றிற்கு வண்ணம் தீட்டி ஒளியூட்டியும், தம் காவியத்தைப் புதுமை பொலியப் புனைந்து முடித்துள்ளார்.
அங்ஙனம் அவர் படைத்திட்ட சில காவிய மாந்தர்களை, அவர் காட்டிய முறையிலேயே…,அவர் காட்டிய நடையிலேயே… அவர் காட்டிய விதத்திலேயே இங்கு காட்டிடுவோம்.
எத்துனையோ பாத்திரங்களை அவர் தம் காவியத்தில் தீட்டியிருந்தாலும், சில பாத்திரப் படைப்புக்கள் பற்றிய அவர் நடையும்… கருத்தாழமும்… கவி நயமும்..., தெளிவும் நம்மை மெய் மறக்கச் செய்கின்றன, பிரமிப்பில் ஆழ்த்தி பக்திச்சுவை கூட்டுகின்றன.
பொதுவாகவே, எந்தவொரு காப்பியத்திலும் நற்குணம் கொண்ட நல் மாந்தர் பாத்திரங்களும், அத்தகையோர்க்கு தீங்கு விளைவிக்கும் துர்க்குணம் கொண்ட சில பொல்லாத மாந்தர்களும், ஆரம்பத்தில் துன்பப்படும் அந்த நல் மாந்தர் இறுதியில் இறையருளால், தங்களது நற்குணப் பயனாய் அந்தத் தீயோரை அழித்து உய்த்தலுமே ஒரு நியதியாக இருந்து வந்தது. வான்மீகியார் படைத்த இராம காப்பியத்திலும் இந்த நியதியானது தெளிவாய் பின்பற்றப்பட்டுள்ளது. ஆனால், அதையே கம்பர் எடுத்துக் கம்ப இராமாயணமாகத் தீட்டும் போது, அந்த தீக்குணம் கொண்ட பாத்திரங்களையும்… இழி நிலையில், கடை நிலையில் உள்ள பாத்திரங்களையும் கூட தன் கவிநயத்தால், கற்பனைத் திறத்தால், செம்மைப்படுத்தி, வரும் காலத்தில் வாசிப்போர்க்கும் அத்தீய மாந்தர் பாத்திரத்தின் மீதொரு வெறுப்போ… காழ்ப்புணர்ச்சியோ… தோன்றா வண்ணம் தீட்டியதன் மூலம் கம்பர் தான் ஒரு நடுநிலைக் கவிஞரென்பதை நன்கு நிரூபித்துள்ளார்.
மந்தரை என்னும் மாண்புறு மகள்
கூன், குருடு, செவிடு, ஊமை, முடம் என்பன மக்களிடம் காணப்படும் உடலூனமாகும். இத்தகையோர் உழைக்குந் திறனற்று அரண்மனை மற்றும் அந்தப்புரம் போன்ற இடங்களில் ஊழியம் மற்றும் குற்றேவல் புரிந்து ஊண் வளர்த்து வந்தனர். ஊனமுற்றோர் ஆடவரெனின் அவர் ஆலோசனை மண்டபத்திலும், மகளிரெனில் அவர் அந்தப்புரத்திலும் ஏவல் புரிவர். அரச வம்சத்தோரும் அத்தகையோரிடம் அன்பும் நேசமுங் காட்டி, ஆதரவும் கருணையும் கொண்டு பாதுகாத்து வந்தனர். அத்தகைய மகளிரில் ஒருத்திதான் மந்தரை என்னும் கூனி. கேகய நாட்டின் மன்னனால் தன் அருமை மகள் கைகேயிக்குத் துணையாக பணி செய்ய அமர்த்தப்பட்டவள்தான் கூனி.
ஒரு மாலைப் பொழுதினில், இராமன் தன் துணைவர்களோடு நகர்ப்புறத்தில் உண்டையும் வில்லும் வைத்து விளையாடிக் கொண்டிருக்கையில், அவ்வழியே சென்ற மந்தரையின் முதுகில் வளர்ந்திருந்த கூனைக் கண்ட இராமன் குறும்புத்தனமாய் அதனைக் குறி வைத்து ஒரு உண்டையை அதன் மீது செலுத்தி, கை கொட்டிச் சிரித்து மகிழ்கிறான். மாமன்னனின் திருமகனான இராமனை அவ்வூனமுற்ற பேதைப் பெண்ணால் அப்போதைக்கு ஏதும் செய்யவோ… சினந்து கூறவோ இயலாது போக, பகைமையை உள்ளுக்குள் அவள் பரவலாய் வளர்த்துக் கொள்கிறாள்.
இந்நிலையில் பரதன் கேகய நாட்டிற்கு சென்றிருந்த தருணத்தில் தசரதச் சக்கரவர்த்தியானவர் அமைச்சர்கள் மற்றும் வசிட்டர் போன்ற முனிவர்களோடு ஆலோசித்து இராமனுக்கு முடி சூட்ட முடிவு செய்ய, மந்தரைக்கு அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த தருணம் வாய்க்க செயல்படுகிறாள். இதைக் கம்பர்,
“இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல்
துன்னரும் கொடுமனக் கூனி தோன்றினள்”
என்று பாடுகின்றார். கூனியின் தோற்றம் முதல்தான் இராமனின் அவதாரக் காரணம் செயல்படத் துவங்குவதாய்ப் பாடி, இராமனின் அவதாரக் காரணம் இராவணன் போன்ற அரக்கர்களை அழிப்பதே என்றும், அத்தகைய செயல்பாட்டின் முகத்துவாரமாய் அமைந்தவள்தான் கூனி என்றும் செப்புகிறார். எனவேதான் கூனியை “இராவணன் இழைத்த தீமை போல் தோன்றினள்” என்கிறார்.
கூனியானவள் எதையும் தன் கற்பனையாலேயே கண்டுணரும் திறன் உடையவள். அவள் கைகேயியின் மனத்தைக் கலைக்கச் செய்யும் சூழ்ச்சித்திறம் அதற்குச் சான்று. யாரையும் ஆலோசிக்காது தானே தன் கற்பனைத் திறத்தாலேயே நகரணியின் காரணத்தைக் கண்டறிந்ததாகச் சொல்லுகிறார் கம்பர்.
ஆரம்பத்தில் கூனியின் கசப்புரை கைகேயியின் மனத்தில் கோபத்தீயை மூட்டி விட,
“எனக்கு நல்லையும் அல்லைநீ; என்மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லை; அத் தருமமே நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லை; அவ்வூல்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை!”
என வசவினைப் பொழிந்து விட்டு,
“போதி, என் எதிர்நின்று; நின்புன் பொறி நாவைச்
சேதியாது இது பொறுத்தனன்; புறம் சிலர் அறிவின்
நீதிஅல்லவும், நெறிமுறை அல்லவும், நினைந்தாய்
ஆதி; ஆதலின் அறிவிலி; அடங்குதி!”
எனக் கடிந்துரைத்தாள்.
ஆனால் கூனி தன் சூழ்ச்சித் திறமையையும், சொல் வன்மையையும் திறம்பட வெளிப்படுத்தி, கைகேயியின் மனத்தில் ஒரு பெரும் மாற்றத்தையே ஏற்படுத்துகிறாள். இக்கட்டத்தில் கம்பர் கைகேயியின் அம் மனமாற்றத்திற்கு கூனியை முதல் காரணமாய் நிறுத்தாமல், “கூனி இவ்வாறு கூறி முடித்ததும் கைகேயியின் மன மாறுதலும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன…அவ்வளவே!” என்று கூறுகிறார். அதாவது, கைகேயியின் மன மாற்றத்திற்குக் கூனியைத் துணைக் காரணமாக மாத்திரமே கொண்டு, முதல் காரணம் வேறு… என்று கற்பிக்கின்றார்.
“தீய மந்தரை இவ்வுரை செப்பலும், தேவி
தூய சிந்தையும் திரிந்தது சூழ்ச்சியின் இமையோர்
மாயையும், அவர் பெற்ற நல்வரம் உண்மையாலும்
ஆய அந்தணர் இயற்றிய அருந்தவத்தாலும்!”
ஆக, கைகேயியின் மனம் மாறியதற்கான உண்மைக் காரணத்தைக் குறிப்பிட வேண்டி, தேவர், மாயை, வரம், அந்தணர் தவம், அரக்கர் பாவம், பிறர் அறம்… என வரிசையாக அடுக்குகின்றார்.
பாறையையும் பசுஞ்சோலையாக்கும் பாவன்மை படைத்த கம்பர் பணிப் பெண்ணும்…பார்த்தோர் வெறுக்கும் புறத் தோற்றமும்… கொடிய குடி கெடுக்கும் மனமுடையவளுமான கூனியை அரச மாதேவியின் உறுதியான உள்ளத்தையும் தான் கருதிவாறே திரியச் செய்யக் கூடிய அளவிற்கு அறிவாற்றலும், துணிவும்… திட்டமிட்டுச் செயலாற்றும் தின்மையும்… திறமையும் குறைவழன்றிப் பெற்றிட்ட குணம் நிறைப் பாத்திரமாகப் படைத்து நம்மையும்... நாட்டோரையும் நனிக் களிப்பு கொள்ளச் செய்துள்ளார். கொடிய நோக்கமும்… கசப்பான கருத்தும், கடுஞ்சொற்களும்… நய வஞ்சகத் திட்டமும், சுயநலப் போக்கும் கொண்ட ஓர் பாத்திரத்தைக் கற்போர் வெறுத்தொதுக்கா வண்ணம் கவிச்சுவையால் அதை மறைத்து, விரும்பிப் பயின்று இன்புறும் விதமாய் அமைத்திட்ட கம்பர் எத்திறத்தாரையும் களிப்புக் கடலில் திளைக்கச் செய்தார் எனில் அது மிகையாகாது.
குகன் என்னும் குணவான்
கம்பன் தன்னுடைய காப்பியத்தில் ஏழையாய்ப் பிறந்து விட்ட ஒரு ஏதிலனை, கீழினத்தில் பிறந்து காட்டில் வேட்டையாடியும், கங்கையில் நாவாய் ஓட்டியும், காலத்தைக் கழிக்கும் ஒரு வேட்டுவத் தலைவனான குகனைத் தன் சித்தரிப்புத் திறத்தால் அன்பும், பண்பும், அறிவாற்றலும் அகத் தூய்மையும் உடைய ஒரு நாகரீக நன் மகனாக்கி, ஆன்மீக அவதார புருடர்களாகிய இராமனுக்கும், பரதனுக்கும் மத்தியில் ஒரு நல்லதொரு நடு நாயகனாக இருத்தி, இராமன் கங்கையைக் கடக்க உதவும் ஒரு சிறு பணியைச் செய்ய வந்த குறும் பாத்திரத்தை காப்பியத்தோடு கலந்து கடைசி வரை தொடர்ந்து காட்சி தரச் செய்துள்ள விதம் கற்போரைக் கழிபேருவகை கொள்ளச் செய்கின்றது.
இதே பாத்திரத்தை வான்மீகியார் அந்நிலையிலேயே நிறுத்தி, அவ்வளவிலேயே பயன்படுத்தி தன் காப்பியத்தை அமைக்க, கம்பரோ… சாதி, குலம், பிறப்பு, அறிவு, செல்வம் ஆகியவற்றைக் கருதாது அன்பு என்கின்ற ஒன்றை மட்டும் மையப்படுத்தி அப்பாத்திரத்தைச் சிறப்பாக்குகின்றார்.
அத்தோடல்லாது, தன் பிறப்பால் அமைந்த இழி தோற்றத்துடன் நின்ற குகனை,
“காழம் இட்ட குறங்கினன்; கங்கையின்
ஆழம் இட்ட நெடுமையினான்; அரை
தூழ இட்ட செந்தோலன்; தயங்குறச்
சூழ இட்ட தொடுபுலி வாவினன்”
“பல் தொடுத்தன்ன பல்சூழ் கவடியான்
கல் தொடுத்தன்ன போலும் கழலினான்
அல் தொடுத்தன்ன குஞ்சியன்; ஆய்கதிர்
நெல் தொடுத்து நெரிந்த புருவந்தான்!”
பனைச் செறும்பைப் போன்ற வலிய மயிர் வளர்ந்துள்ள முன் கை, மலை போல் விரிந்து பரந்த மார்பு, எண்ணெய் ஊற்றப்பட்ட இருளைப் போன்ற உடல் தோற்றம், இடைக்கச்சோடு இறுகக் கட்டிய இரத்தக் கறை தோய்ந்த வாள், நச்சரவைப் போன்ற அச்சுறுத்தும் பார்வை, இவ்வாறு தான் கண்ட அவன் புறத் தோற்றத்தை மறைத்து அவன் அகப் பொலிவை அடையாளமாக்கியுள்ளார்.
குகன் என்பவன் இராமனைக் கண்டதில்லை… ஆனால் இவர் குணங்களைக் கேட்டறிந்து, அதில் மெய் சிலிர்த்து…, அக்குணங்களால் ஆட்கொள்ளப்பட்டு, இராமபிரானுக்கு அடிமையாகவே மாறி விடுகிறான். காடாளும் அக்குகனுக்கு நாடாளும் திருமகனைக் காண வாய்ப்பே அமையாது போய் விட “என்று வருமோ அந்த நாள்” என ஏங்குகிறான். இந்நிலையில் இராமன் கங்கைக் கரையில் வந்து தங்கியிருக்கும் செய்தியறிந்து தனியனாய்ப் புறப்பட்டு வருகின்றான்.
குணக்குன்றாம் இராமனை நேரில் காண ஏங்கியிருந்த குகன் அவரை நேரில் காணும் காட்சியினைத் தன் கவித்திறத்தால் கவியோவியமாய் வடித்திருக்கின்றார் கம்பர். இராமபிரானை நேரில் கண்ட களிப்பில் அவர்தம் கால்களில் வீழ்ந்து அன்பின் மிகுதியால் தான் கொணர்ந்திருந்த தேனையும், மீனையும் இராமன் முன் படைத்து,
“தேனும் மீனும் அமுதினுக்கு
அமைவதாகத் திருத்தினன்
கொணர்ந்தேன்; என் கொல் திருவுளம்?”
என வேண்டி வணங்கி நின்றான்.
அங்கு நின்றிருந்த முனிவர் பெருமக்களோ அவன் கொணர்ந்திருந்த பொருட்களுக்காய் அருவருப்புப்பட்டு முகஞ்சுளிக்க,
“அரியதாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த அன்றே?
பிரிவினில் தழீஇய எண்ணில் பவித்திரம்; எம்மனோர்க்கும்
உரியன; இனிதின் நாமும் உண்டெனம் அன்றோ?”
என்று குகனின் உவப்பை… அன்பை… காதலை… பரிவை… அவற்றால் அவன் கொணர்ந்த தேனும், மீனும், அடைந்த பவித்திரத்தை… சிறப்பைப் பாராட்டி, குகன் உளம் நிறைவுறவும், அதே வேளை முகஞ்சுளித்த முனிவர் உளம் தெளிவுறவும் இராமன் உரைப்பதாய் கம்பர் பாடியுள்ளது, குகனை உயர்த்தும் விதமே அன்றி வேறேது?
கள்ளமற்ற குகனின் பிள்ளை உள்ளத்தைக் காட்சிப்படுத்தும் விதமாய் இராமனைப் பிரிய மறுத்த குகனின் பரிவுள்ளம் உரைப்பதாய்க் கம்பர் பாடுகின்றார்.
“தேன்உள; தினை உண்டால்; தேவரும் நுகர்தற்கு ஆம்
ஊன்உள; துணைநாயேம் உயிர்உள; விளையாடக்
கான்உள; புனலாடக் கங்கையும் உளது அன்றே!
தோல்உள துகிப்போலும்; சுவைஉள; தொடர் மஞ்சம்
போல்உள பரண்; வைகப் புரைஉள; கடிது ஓடும்
கால்உள; சிலை பூணும் கைஉள; கலிவானின்
மேல்உள பொருளேனும் வரைவோடு கொணர்வோமால்”
மேலும், கானகத்தில் ஓடியாடித் திரிந்து பழகிய அவன், தான் இராமனுடன் செல்லும் போது அது அவர்களுக்குச் சிறந்த வழிகாட்டுதல் பணியாய் இருக்குமென்பதை உரைக்கின்றான்.
அவ்வுரையால் அவன் அன்பின் ஆழத்தையும்…ஆர்வத்தையும் கண்டு மனம் நெகிழ்ந்த இராமன்,
”இதுவரை தசரதச் சக்கரவர்த்தியின் புதல்வர்களாக நால்வரே உளராயிருந்தோம்… இப்போது உன்னால் ஐவர் உளராயினோம்!...இனி என் சுற்றம் உன் சுற்றம்!...உன் சுற்றம் என் சுற்றம்!”
காட்டில் வேட்டையாடித் திரியும் வேட்டுவனை முழு முதல் மூர்த்தியான இராமனின் இன்னுயிர் துணைவனாகவும், தசரதச் சக்கரவர்த்தியின் புதல்வர்களுள் இராமனுக்கு அடுத்தவனாகவும் ஏற்றமுற இருத்தி, வாசிப்போரை வணங்கச் செய்து விடுகின்றார் கம்பர் தன் கவித் திறத்தால்.
சூர்ப்பனகை என்னும் சூத்திரதாரி
அறிவுள்ள அரக்கியாக, சூழ்ச்சிக்கென உதித்த சூனியக்காரியாக, நல்லோர் குடி கெடுக்க வந்த நயவஞ்சகியாக, காமுகியாக, எல்லோராலும் தூற்றப்படும் விதமான ஒரு பாத்திரமாக சூர்ப்பனகையின் பாத்திரம் இராம காதையில் இடம் பெற்றிருந்த போதும் வாசிப்போர் அப்படியொரு எதிர்மறை எண்ணம் எள்ளளவும் ஏற்படாதிருக்கும் வண்ணம் சூர்ப்பனகையைத் திட்டமிட்டுச் செயலாற்றும் வினைத்திட்பமுடையாளாய், சுவை கனிய உரையாடும் நயப்பாடும், வாதப் போர் வன்மையும், சொல் திறமும், நடிப்பு நலமும், நினைத்ததை நினைத்த வண்ணம் முடிக்கும் மனத்தின்மையும் வாய்ந்தவளாக உருவாக்கி, செம்மையுறச் செறிவாக்கி, இராம காதையில் மாபெரும் இரண்டாம் திருப்பத்தைச் செயலாக்கியிருக்கும் கம்பர் கவிநயம் எல்லோர் உள்ளங்களுக்கும் ஏகமாய் உவப்பளிக்குமொன்றாகும்.
நம் இதிகாசங்கள் இரண்டுமே மகளிரைக் காரணமாய்… காரண கர்த்தாக்களாய்க் கொண்டே தோன்றியுள்ளன. இராம சரிதம் என்னும் காவியக் கதையிலும் மாபெரும் இரு திருப்பங்கள் இரு மகளிராலேயே ஏற்படுபவையாக உள்ளன.
முதல் திருப்பம், மந்தரை என்னும் கூனியாலும், இரண்டாம் திருப்பம் சூர்ப்பனகை என்னும் அரக்கியாலும் ஏற்படுகின்றன.
சூர்ப்பனகை ஒரு அரக்கி. ஆனால் பிரமன் மரபில் தோன்றியவள். இராவணன் மற்றும் கும்பகர்ணனுக்குப் பின்னும் விபீடணனுக்கு முன்னும் பிறந்தவள். இராவணன் அவளை காலகேயருள் ஒருவனுக்கு மணம் செய்து கொடுத்திருந்தான். பின்னாளில் இராவணன் காலகேயேரைப் போரிட்டு அழிக்கையில் அவள் கணவனும் மாண்டுவிட, இராவணன் தண்டகாரண்யத்தில் ஒரு தனி இராஜ்ஜியத்தை அவளுக்கென அமைத்து அவள் விரும்பிய வண்ணம் வாழ வைக்கிறான்.
அங்கங்கள் அறுப்புற, உறுப்புக்கள் சிதைவுற, குருதியருவி கொட்ட இராவணனைத் தேடி வந்து கதறிய சூர்ப்பனகையின் நிலை கண்டு சினமுற்ற இராவணன், “உன்னை இது செய்தார் யாவர்,” என்று வினவினான்.
“புவியாளும் அரச மரபினர், விண்ணிலும் மண்ணிலும் உள்ளவர்கள் எவருக்குமே ஒப்பாகாதவர்களாகிய மனிதர்கள்… காட்டில் வந்து வாளை உருவி என் உறுப்புக்களை அறுத்து விட்டார்கள்”
இராவணனோ அதை நம்ப மறுக்கிறான், “மானிடர் வலிமையற்றோர் … ஆகவே உன் கூற்று நம்பத் தகாதது”
இக்காட்சியில் கம்பர், இராம… இலக்குமணரின் புற அழகை… அக ஒழுக்கத்தை… மதி நுட்பத்தை… புகழின் உச்சத்தை… சூர்ப்பனகையின் வாயுரையாக்கி அப்பாத்திரத்தினை வானுயர உயர்த்துகின்றார்.
“அவர் வடிவழகினால் மன்மதனைப் போன்றவர். தோள் வலிமையால் மேரு மலையின் வன்மையை அழிக்கக் கூடியவர். தங்கள் வில் ஆற்றலால் ஓர் இமைப் பொழுதில் ஏழு உலகங்களில் உள்ளவர்களின் வலிமையையும் அழிக்கத் தக்கவர். முனிவர்களிடம் வணக்கமுடையவர். சந்திரனைப் போன்ற முகமுடையவர். மணம் பொருந்திய தாமரை மலர் போன்ற கண்களையும், பாதங்களையும், கைகளையும் உடையவர். நீண்ட வீரக் கழல் அணிந்தவர். மார்பில் அணிந்த முப்புரி நூலினர். வில் வித்தையில் வல்லவர். வேதம் தங்கிய நாவினர். தளிர் போன்ற மேனியினர். உனக்குச் சிறிதும் அஞ்சாதவர். உன்னை ஒரு துகளுக்கு ஒப்பாகவும் மதியாதவர். சொற்களின் வடிவமாக உள்ள கலைகளைப் போல் அழியாத அம்பறாத் தூணிகளைச் சுமந்திருப்பவர்.”
“அடங்கிய புலன்களையும் உயர் ஒழுக்கத்தையும் உடைய முனிவர்கள் சென்று “அரக்கருக்கு அஞ்சுகின்றோம்” என்று முறையிட “எல்லா உலகங்களையும் வென்று விடுவோம்” என்று கூறிக் கொள்ளும் உங்கள் குலம் முழுவதையும் அடியோடு அழியும்படி உங்களைக் கொல்வோம் என்று முன்பு செய்து கொண்ட ஒரு சபதத்தை உடையவர்.”
“ஓர் உலகில் வாழும் இரு மன்மதர்கள் உளரோ? வில் வித்தையில் அவர்களினும் வல்லவரானவர் எவரேனும் உளரோ? அவருக்கு ஒப்பாவார் ஒருவரும் இலர். அவ்விருவருள் ஒவ்வொருவருமே மும்மூர்த்திகளுக்கு ஒப்பாவார்.”
“புவி முழுவதும் தன் ஆணைச் சக்கரத்தைச் செலுத்தி ஆட்சி புரிந்தவனான தசரதன் என்னும் அரசனுடைய மைந்தர். பழி இல்லாதவர். தந்தை சொல்லை ஏற்றுக் காட்டில் வந்து வசிக்கின்றனர். இராமன் என்றும் இலக்குவன் என்றும் பெயர் கூறப்படுவர்” என்று கூறி முடித்தாள்.
இவ்வாறு தன் காப்பியத்தில் எதிர்மறைப் பாத்திரங்களையெல்லாம் தன் கவித்திறத்தால்… கற்பனை நயத்தால்…, உரைச் செறிவால்… உயர்த்திக் காட்டியிருக்கும் கம்பர்,
“உம்பர் இன்னமு தெய்திட வுதவிய வொருவன்
கும்ப மாமுனிக் கருளிய கொழுந்தமிழ் இனிமை
இம்பர் யாவரும் நுகர்த்த எழிற்கவி புனைந்தான்
கம்பன் என்றுல கேத்திடும் கடவுள் மாக் கவிஞன்!”
கவியின் பயன் களிப்பு. களிப்பாவது குறைவற்ற உள்ள நிறைவு. ஆரவாரமற்ற மன அமைதி. உணர்ச்சி வெள்ளத்தைப் பெருக்கி, ஆரவாரப் புயலை எழுப்பி அமைதியைக் குலைக்கும் ஏனையோர் கவிகளைப் போலல்லாது, மாபெருங் கவிஞராகிய கம்பர் கவி கற்போர்க்கு அந்நிறையை… அமைதியை… ஆயுள் முழுதுக்குமாய்த் தரவல்லது. இவ்வுண்மையை,
“இம்பர் நாட்டிற் செல்வமெல்லாம் எய்தி அரசாண் டிருந்தாலும்
உம்பர் நாட்டிற் கற்பகக்கா வோங்கு நீழ லிருந்தாலும்
செம்பொன்மேரு வனையபுறத் திறல்சேர் இராமன் திருக்கதையில்
கம்ப நாடன் கவிதையிற் போல் கற்றோர்க்கு இதயம் களியாதே!”
என்னும் பழம்பாடலால் நாம் உணரலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.