சறுக்கு மரத்தில் மனித நேயம்
முனைவர் இரா. விஜயராணி
எந்த ஒரு மொழியிலும் பன்முக ஆற்றல் கொண்ட படைப்பாளிகள் மிக அரிதாகவே இருப்பர். தமிழும் இதற்கு விதிவிலக்கன்று. வேறுபட்ட ஆளுமைப் பண்புகள் கொண்ட இலக்கியவாதிகள் தமிழில் மிகக் குறைவு. இந்தப் பின்புலத்தில் தமிழுக்குக் கிடைத்த அரிய படைப்பாளியாக இறையன்பு காட்சியளிக்கிறார். ஆன்மிக நூல் முதல் ஆங்கில நூல் வரை இவருடைய எழுத்தின் இயங்குதளங்கள் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. இறையன்பு எனும் கவிஞர் ‘சறுக்கு மரம்’ எனும் கவிதைத் தொகுதிவழி வெளிப்படுத்தும் மனிதநேயச் சிந்தனைகளை எடையிட்டுப் பார்ப்பதே இவ்வாய்வுக் கட்டுரையின் முதன்மையான நோக்கமாகும்.
பகிர்ந்துண்ணும் நேயம்
அடுத்தவர் பசியைக் கண்டு கலங்கி அவர் பசியைப் போக்க அக்கறையோடு முனைவதைவிட உயர்ந்த மனிதநேயச் செயல் இந்த உலகில் இல்லை. பகிர்ந்துண்ணும் பழக்கத்தை அனைவரும் ஏற்படுத்திக்கொண்டால் பசியின்கொடுமையை இங்கு பாதியாய்க் குறைக்கலாம். தன்னலம் என்பது தகரும்போதுதான் இத்தகைய பொதுநலப் பார்வை தோன்றமுடியும். உணவு என்பது நாம் நுகர்வதற்கன்று; அடுத்தவருடன் பகிர்வதற்கு என்னும் ஈரமான இதயம் கொண்டவர் இறையன்பு. ஏழைகளின் எளிய உணவாக இருந்தாலும் செல்வந்தர்களின் ஆடம்பர உணவாக இருந்தாலும் அது அடுத்தவருக்கு அளிக்கும்போதே சுவையாக மாறும். உணவுப் பகிர்தல் என்பதை உணவை இனிப்பாக்கும் நடவடிக்கையாகவே இறையன்பு கொள்கிறார்.
“பகிர்ந்து உண்டால் கூழும் இனிக்கும்
தனியே உண்டால் விருந்தும் கசக்கும்” (ப.44)
சாகா மருந்தாக இருந்தாலும் விருந்தினரை விடுத்து உண்ணுதல் மறுக்கும் வள்ளுவத்தின் வழி நின்று இறையன்பு இங்கு பேசுவதைக் காணலாம். எந்த உணவுக்கும் சுவை என்பது உணவில் இல்லை; உணவைத் தருவதில்தான் இருக்கிறது. உண்ணுதல் என்பது தனித்த செயலாக இல்லாமல் கூட்டுச் செயற்பாடாக நிகழ வேண்டும் என்பதே கவிஞரின் விருப்பம்.
சின்னஞ்சிறு வயதிலேயே இந்தப் பகிர்தல் பழக்கத்திற்குப் பயிற்சிதர வேண்டும் என்பதில் இறையன்பு ஆர்வங் காட்டுகிறார். “அடுத்தவர் கொடுத்தால் உண்ணதே” என்று பெரியவர்கள் குழந்தைகளுக்குத் தரும் அறிவுரை கூட மீறப்பட வேண்டும். பெற்றோர்கள் நோய் பரவும் எனும் எச்சரிக்கை உணர்வோடு இத்தகைய கட்டுப்பாட்டை விதித்தாலும் இது குழந்தைகளின் பகிர்தல் உணர்வைப் பாதித்து விடும் என்பதையும் எண்ணிப் பார்த்துப் பின்வரும் முடிவுக்கு வருகிறார்.
“அன்பினால் கொடுத்தால்
எச்சிலும் அமிர்தம்
உண்மையால் அளித்தால்
நஞ்சும் ஔடதம்” (ப. 8)
இதன் மூலம் இளம் பருத்திலேயே மற்றவர் பசி போக்கும் பக்குவம் பெற வேண்டும் என வலியுறுத்துகிறார்.
சுமையற்ற கல்வி
இந்திய நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது எனப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் வகுப்பறைகள் இன்றும் மயான பூமியின் அமைதியோடு காணப்படுகின்றன. வகுப்பறைக் கரும்பலகையில் அமைக்கப்பட்டிருக்கும் உலகம் வேறாகவும் சன்னலுக்கு வெளியே உள்ள உலகம் வேறாகவும் உள்ளது. இன்றைய கல்விமுறை பாடப்பபுத்தகத்தை மட்டுமே வேதப்புத்தகமாய் மாற்றுகிறது. மதிப்பெண் மட்டுமே இங்கே அறிவின் அளவுகோலாய் ஆக்கப் பட்டுவிட்டது. மனப்பாடத்தையே அட்சயப்பாத்திரமாய் நினைக்கும் அவலம் நிலவுகிறது. இது குழந்தைகளின் அறிவாற்றலுக்கு எதிரானது. மேற்கத்திய கல்வியால் விளைந்த தீமையே இதற்கு அடிப்படை.
“மேற்கத்தியக் கல்வி மேம்போக்கானது
உலகியல் வாதத்தை உந்தித் தள்ளுவது
கிழக்கும் அதையே தரித்தபோது
தத்துவமிங்கு தரித்திரமானது” (ப.16)
என்று சரியாகக் கணித்து கவிதை நெய்கிறார் இறையன்பு. புத்தகத்தைக் கடைசிப் பக்கம் வரை படித்து முடித்துவிடுவதல்ல கல்வி. மூட்டையைச் சுமப்பது போல் ஒவ்வொரு மாணவனும் பாடநூல்களைச் சுமந்துபோவது கண்டு மனம் வதங்குகிறார் இறையன்பு. புத்தகத்தின் பருமனல்ல கல்வியின் தரம் என்பதைத் தெளிவுபடுத்துகிறார். பிஞ்சு வயதிலேயே பிரபஞ்ச அறிவு அனைத்தையும் குழந்தைகள் பெற்றுவிட வேண்டும் என்று அவசரப்படும் பெற்றோரைக் கண்டிக்கிறார்.
“விரல்களை வெட்டி நகத்தை அழகாக்கும்
அவசரமல்ல படிப்பு - அது
விருப்பத்தை விதைத்து மெதுவாய்க் கிளைத்து
கனிகளைத் தாங்கும் துடிப்பு” (ப.21)
எனக் குழந்தையிடம் கல்வியைக் கொண்டு செல்ல வேண்டிய அணுகுமுறையைப் பதிவு செய்கிறார். அனைவருக்குள்ளும் அமிழ்ந்து கிடக்கும் மனிதத்தை உணர்ந்திட கல்வி தந்தால் உலகமும் உள்ளமும் செழிக்கும். இறையன்பு போல இதயத்தில் இடம் தந்து குழந்தைகளை நேசிப்பதன் மூலம் நாளை மனிதநேயமிக்க மனிர்களை உருவாக்க முடியும்.
பிஞ்சுப் பருவ உழைப்பு
மனித நேயத்திற்கு ஆட்பட்டவன் மனித சமுதாயத்திற்கோ சமுதாயத்தின் பெருவாரியான மக்களுக்கோ நன்மை பயக்கும் நிலையில் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளுவான். அத்தகைய ஒருவராகத்தான் இறையன்பு காட்சியளிக்கிறார். இவருடைய மனிதநேயச் சிந்தனைகள் அனைத்தும் குழந்தைகளையே மையமிட்டு நிற்கின்றன. குழந்தைகளைக் கையாளும் கலையில் நாம் இன்னும் பின்தங்கி இருக்கிறோம் என வருத்தப்படுகிறார். ஆள்கிற பொருளாய் கைக் குழந்தையைக் கையாள்பவரைக் கண்டனம் செய்கிறார். வளரும் இளஞ்செடியின் கிளைகளை முறிப்பது போல இங்கே இளைய குழந்தைகள் கல்விக் கூடங்களுக்கு அனுப்பப்படாமல் தொழிலாளர்களாக ஆக்கப்படும் கொடுமை நினைத்துக் கண்ணீர் சிந்துகிறார்.
மல்லிகை போன்ற மெல்லிய விரல்கள்
சல்லியும் மணலும் அள்ளிட நேரும்
சந்தனம் மணக்கும் செந்தளிர்க் கைகள்
கந்தகம் உருட்டிடும் கண்களும் இருள
பட்டுத் தறியின் இழைகள் பட்டு
கட்டுக் குலைந்து ஈரல்கள் சுருங்கும் (ப.73)
என்று குழந்தைத் தொழிலாளர்களுக்காக நெஞ்சம் உருகுகிறார். இது இறையன்புவின் மனித நேய உணர்வுக்கு உரிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
பாத்திரங்களை அடகு வைப்பது போல குழந்தையைப் பணத்திற்கு அடகுவைக்கும் அவலங்களையும் இவருடைய கவிதைகள் பேசுகின்றன. குழந்தைத்தனத்தைத் திருடிக் கொண்டு இலந்தைப் பழத்தைத் தருவது போல சொற்ப் பணத்தைக் கூலியாகக் கொடுக்கும் இதயமற்றவர்களையும் இவர் அடையாளங் காட்டுகிறார். இத்தகைய இன்னல்களிலிருந்து குழந்தைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும். நம்மை வாழ்வில் தாண்டிப் போகும் ஒளியின் வேகம் குழந்தைகளுக்குண்டு. வானின் வெளியை விரலால் தீண்டும் வல்லமை அவர்களுக்குச் சொந்தமானது. எனவே இளமையில் கற்று அறிவுவளத்தால் அதிகம் சாதிக்க குழந்தையுலகம் தயராக வேண்டும் என்பதே இறையன்புவின் விருப்பமாக உள்ளது.
விளையாட்டும் விபரீதமும்
மனித வாழ்வில் விளையாட்டுக்கு மிக முக்கியமான இடமுண்டு. விளையாட்டு என்பது அயர்வை அகற்றும் வியர்வைத் திருவிழா; உடலும் மனமும் ஆன்மாவும் ஒரே புள்ளியில் சந்திக்கும் அதிசயம் விளையாட்டில் நிகழ்கிறது. விளையாட்டு உடலுக்கு ஒற்றடம் கொடுப்பதாகவும் உள்ளத்துக்குள் மத்தளம் இசைப்பதாகவும் இருக்கிறது என்கிறார் இறையன்பு. பள்ளிப்பருத்தில் உதைக்கும் பந்தே உலகமாகும் என்றும் கூடைப்பந்தே அப்போது பூமிப்பந்து என்றும் விளையாட்டின் சிறப்பைச் சித்தரித்துக் காட்டுகிறார்.
விளையாட்டின் தொடக்கக் கால வரலாறு மனித நேயத்திற்கு எதிராக இருந்ததை இறையன்பு எடுத்துக் காட்டுகிறார். வனத்தில் திரிந்த விலங்குகளை வேட்டையாடும் வேட்கை காலப்போக்கில் குரூரம் கலந்த நிகழ்வாகிவிட்டது. ரோமாபுரியில் ஒரே கூண்டில் விலங்குகளையும் அடிமைகளையும் அடைத்துவைத்து சகமனிதர் சாவதை இரசித்தனர். கரடியைத் கம்பத்தில் கட்டி வேட்டை நாய்களை அவிழ்த்துவிட்டுக் கடித்துக் குதறுவதைக் கண்டு களித்தனர். இந்த மனிதாபிமானம் சிறிதும் இல்லாத பழைய வரலாறுகளை வெறுத்து ஒதுக்கி, காலம் விளையாட்டை வீரத்தின் அடையாளமாய் நாகரிகப்படுத்தியதை எடுத்துக்காட்டுகிறார்.
“விளையாட் டென்பது வீழ்த்துதற் கல்ல
வெற்றிப்பொட்டை நெற்றியில் வைக்கும்
வித்தை மட்டும் விளையாட்டல்ல
அத்தனை பேரும் ஒருங்கேயிணைந்து
ஒற்றை மனமாய் ஆவதே ஆட்டம்” (ப.33)
ஒற்றுமையின் சின்னமாய் விளையாட்டு இருக்க வேண்டும்; திறந்த மனதோடு திறமைகளை மெச்சும் பழக்கம் பரவவேண்டும் என்றெல்லாம் விளையாட்டின் நோக்கங்களை உணர்த்துகிறார் இறையன்பு.
உச்சகட்ட மனித நேயம்
இயற்கையை நேசிக்கும் இறையன்பு பறவைகள் மீதும் விலங்குகள் மீதும் மிகுந்த காதல் கொண்டவராய் இருப்பதை இவர்தம் கவிதைகள் காட்டி நிற்கின்றன. சின்ன வயதில் மலர்களைப் பார்த்துக் கொண்டு மணிக்கணக்கில் இருந்ததையும் வீட்டின் முன் சாமந்தி விதைகளைப் பாத்தியில் தெளித்து மகிழ்ந்ததையும் தம் படைப்புகளில் பதிவு செய்துள்ளார்.
“பள்ளியில் தாவரவியல் வகுப்புகளில்
பூக்களை அறுத்து பாகங்கள் பார்க்கும்
வகுப்புகள் தோறும் வருத்தப் படுவேன்
செம்பருத்திச் செடியை இப்போது
பார்க்க நேர்ந்தாலும்
மன்னித்து விடு என மனதால் அழுவேன்"(ப.25)
என்ற கவிதையில் இவர் இரக்கத்தின் கொடுமுடியைத் தொட்டுவிடுகிறார். செம்பருத்திச் செடியிடம் மன்னிப்பு கேட்கும் மனோநிலை இவருடைய மனித நேயத்திற்கு மகத்தான சான்றாகத் திகழ்கிறது.
இவ்வாறு சறுக்குமரம் கவிதைகளில் இறையன்பு மனிதநேயச் சிந்தனைகளை விதைத்து வெற்றி கண்டுள்ளார்.
துணை நூல்கள்
1. வெ. இறையன்பு, சறுக்குமரம், விஜயா பதிப்பகம், சென்னை, 2010
2. வசீலி சுகம்லீன்ஸ்கி கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி புக்ஸ்ஃபார் சில்ரன், சென்னை, 2007.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.