காதா சப்த சதியில் வாழ்வியல்கள்
கா. குமார்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நூலே காதா சப்த சதி. இதனைத் தொகுத்தவன் சாலவாஹனன் எனும் மன்னன். இவன் ஆந்திர நாட்டை ஆண்டவன். தன் மனைவியின் கேளிப் பேச்சுகளால் சமசுகிருதத்தை அறிந்து கொண்டவன். இவனுடைய பாடல்களும் சில உள்ளன. இது காதா எனும் யாப்பினால் எழுதப்பட்ட எழுநூறு பாடல்களின் தொகுப்பு. தமிழில் ஐந்நூறு பாடல்கள் மட்டும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதனை மொழி பெயர்த்தவர் மு.கு.ஜகந்நாத ராஜா என்பவர். இவரின் மொழிபெயர்ப்பை வைத்து, அந்த நூலில் காணப்படும் வாழ்வியல்களை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
இக்காதா சப்த சதி பாடல்கள் அனைத்தும் ஒவ்வொரு வாழ்வியல் செய்திகளைத் தருவனவாகும். அவற்றுள்,
1. வளர்ப்புப்பிராணி மைனாவின் செயல்பாடு
2. மங்கையின் அழகு
3. ஊர்த் தலைவனின் மகள் அழகு
4. முத்த இன்பம்
ஆகிய நான்கை மட்டும் இங்கு விளக்கப்படுகின்றன.
1. வளர்ப்புப் பிராணி மைனாவின் செயல்பாடு
வளர்ப்புப் பிராணிகள் நிறைய இருக்கின்றன. அவற்றுள் மைனாவும் ஒன்று. இது கிராமப் புறங்களில் சிறுவர்களால் வளர்க்கப்பட்டு வந்தன, வருகின்றன. மைனா ஒன்றை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு குடும்பத்தில் வளர்த்தனர். அம்மைனா இரவில் கணவன், மனைவி பேசும் காதல் இன்ப பேச்சுக்களைப் பகலில் பெரியோர்கள் இருக்கும் போது உழறத் தொடங்கி விட்டதாம். அதனால் நாணம் அடைந்த அக்கணவனும் மனைவியும் நாணத்தால் மறையும் இடம் இல்லாமல் நின்றனர். அதனை,
இரவில் நிகழ்ந்த தெல்லாம் எமது
பெரியோர் முன்னர் பேசிடும் பூவை
மொழிகள் கேட்டு முகத்தை மறைக்க
ஒளிவ தெங்கென உணரா திருந்தோம் (காதா.449)
எனவரும் பாடல் விளக்கி நிற்கின்றது. இது தோழித் தலைவியிடம் கூறியதாக அமைந்தது.
2. மங்கை அழகு
வயதுக்கு வரும் நிலையில் உள்ள பெண்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆண்களுக்கு அழகைத் தருவனவாம். அவ்வழகு எப்படி இருக்கும் என்றால்,
முல்லைக் கொடியில் புதுமலர்கள் இது விரிந்து தேன் ஒழுகு முன்பே தனிச் சிறப்புடைய அழகு இருத்தல் கண்டு மலராத மொட்டுகளிடம் வண்டுகள் மொய்த்து, கண்களாலேயே மதுவுண்ட களிப்பெய்தி இசை பாடுகின்றன (மு.கு. ஜகந்நாதராஜா, 1981).
என்பதாக இருக்குமாம். அதனை,
முல்லைக் கொடியில் மூசும் வண்டு
ஏதோ தனிச்சிறப் பிருக்கக் கண்டு
கண்களாலே களித்துப் பருகி
இன்ப மெய்தி இசைத்திருக் கிறதே (காதா.450)
எனும் பாடல் குறிப்பிட்டு நிற்கின்றது.
3. ஊர்த்தலைவன் மகள் அழகு
ஊர்த் தலைவன் பெற்ற தனிச் சீர்மிகும் உருவெழில் கொண்ட அந்நங்கையைக் கண்டவர் கண் இமையா நாட்டத்து இறைவார்களாக இந்த நங்கையின் எழில் கண்டவர்கள் ஆய்விட்டனர் என்று தொழி தலைவியின் எழிலைத் தலைவனுக்கு விதந்தோதினான் (மு.கு. ஜகந்தராஜா, 1981, ப. 367)
எனவரும் கருத்து ஊர்த்தலைவன் மகளின் அழகை அழகுற எடுத்துக் காட்டுகின்றது. அதனை,
ஊர்த்தலை வன்தனிச் சீருடன் பெற்ற
உருவெழில் மிக்க ஒண்டொடி தன்னெழில்
கண்மலர் திறந்து கண்ட பின்னர்
ஊரவர் இமைப்பிலா தும்ப ராயினார் (காதா.451)
எனும் பாடலில் காணலாம்.
4. முத்த இன்பம்
காதலின் மையப் பொருளே முத்தம் என்பதுதான். அவ்வளவுக்கு அன்று முதல் இன்று வரை முத்தத்துக்காக ஏங்குகின்ற தலைவனைக் காணலாம். இங்கு,
காதலி மெல்லிதழ்க் கனிவா யூறல்
வானவர் துய்த்திடும் வாய்ப்பிலை போலும்!
கடல்கடைந் தேனோ கடுந்துயர்ப் பட்டே
அமுதந் தேடி அலைந்தனர் வீணே (காதா.452)
எனும் பாடல் வானவர் கடையும் அமுதை விட காதலின் இதழில் ஊறும் எச்சிலே இனிமையுடையது என்பதைக் காணலாம்.
துணைநூற்பட்டியல்
1. மதிவாணன் இரா. (மொ.ஆ.), 1978, ஆந்திர நாட்டு அகநானூறு, தாய்நாடு பதிப்பகம், சென்னை.
2. ஜகந்நாதராஜா மு.கு. (மொ.ஆ.) 1981, காதா சப்த சதி, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.