கலித்தொகையில் மகளிர்கள்
முனைவர் துரை. மணிகண்டன்
முன்னுரை
உலக இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்கள் இறைவனாக இருக்கும், இல்லை அரசனாக இருக்கும், அல்லது மக்கள், இயற்கை பொருள்கள், விலங்குகள், பறவைகள் போன்றவையும் இடம் பெற்று இருக்கும். அந்த வகையில் இலக்கியங்கள் என்றால் ஆண்கள் மற்றும் மகளிர் பற்றிய செய்திகள் இல்லாமல் இலக்கியம் இடம் பெறுவது அரிது. கலித்தொகையில் மகளிர்களின் செயல்களாக தோழியின் மூலமாகவும் தலைவியின் மூலமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. காதலின் திறம் அதை தலைவனிடத்தில் தலைவி தோழி எடுத்துரைக்கும் திறம், காதலை தலைவியின் இல்லத்தில் எடுத்துக் கூறும் முறை, தலைவனிடத்தில் விரைவாக வந்து தலைவியைத் திருமணம் செய்து வைக்கும் ஆற்றல் போன்ற செய்திகள் மகளிர் நிலைகளாக அமைந்துள்ளன.
தோழியின் செயல்பாடுகள்
தோழி என்பவள் தலைவியின் துணையாக இருப்பவள். தலைவியின் அனைத்து நிகழ்வுகளிலும் உடன் இருப்பவள். செவிலியின் மகள் என்று தொல்காப்பியம் “தோழிதானே செவிலியது மகளே” என்ற நூற்பாவின் மூலம் எடுத்துக் கூறுகிறது. கலித்தொகையில் 60 பாடல்கள் தோழிக் கூற்றாக இடம் பெற்றுள்ளன.
சீற்றத்தைத் தவிர்க்கும் தோழி
தலைவியைப் பெண் கேட்டு வந்த தலைவனின் இல்லத்தாரிடம் பெண் கொடுக்க மறுத்து அனுப்பி வைக்கின்றனர் பெண்வீட்டார். இந்த செய்தி தோழியின் செவிக்குச் செல்கிறது. நேராகத் தோழி தன் தாய் செவிலியிடம் சென்று தன் பெற்றோர் செய்தது தவறு என்று கடிந்துரைக்கின்றாள். அதைக் கேட்ட தோழி, “மலைநாட்டு மக்களுக்கு நன்றி கொன்றனர் நம் சிறுகுடியினர். சிறுகுடி மக்களே இனி நமது நாட்டில் விளைவு குறையும், வள்ளிக்கிழங்கு விழையாது; மலையிலே தேனிக்கள் கூடு கட்ட மாட்டாது; தேன் கிடைக்காது; கொல்லையிலே தினைப்பயிர் ஓங்கி வளராது கதிர் செழித்து விளையாது... மலை நாட்டு மக்கள் நல்ல வழியில் நடக்கவில்லை என்று, தலைவியை ஆபத்தில் காத்தவனான தலைவன் இல்லத்தார் பெண்கேட்டு வந்தவர்களை இவ்வாறு பெண் கொடுக்க மனம் ஒப்பவில்லை என்று அனுப்பி வைக்கலாமா? இது மிகவும் நன்றி கெட்ட செயல், தீச்செயல்” என்கிறாள். இதனை,
“சிறுகுடியீரே சிறுகுடியீரே
வள்ளி கீழ் விழா வரை மிசைத்தேன் தொடா
கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர்
அல்லல் புரிந்து ஒழுகலான்…” (கலி-3)
என்று தோழி தலைவியின் பெருமைகளையும், அவளை விரும்பிய தலைவனின் நாடு மற்றும் மலைச் சிறப்பையும் எடுத்துக் கூறிகிறாள். மேலும் ஒருவருக்குத் தீமை செய்தால் அந்த நாடே வருந்த வேண்டும் என்ற உயரிய தமிழர் கோட்பாட்டையும் சேர்த்து முன் வைக்கின்றாள் தோழி.
அடுத்துப் பாலைக் கலியில் புதிதாகத் திருமணம் புரிந்த இருவர். தலைவன் பொருள் தேட வெளியில் செல்ல இருக்கின்றான். தலைவி எவ்வளவு கூறியும் கேட்கவில்லை. செய்தி தோழி அறிகிறாள். அவள் நேரே தலைவனிடம் செல்கிறாள், “தலைவா இது நியாமா? தாங்கள் தற்போது பொருள்தேட செல்வது நியாயமா? பொருள் தேவைதான். அதைப் பிறகு சென்று தேடலாமே? இப்பொழுதுதானே எமது தலைவிக்கும் உங்களுக்கும் திருமணம் நடைபெற்றது. அதற்குள் பிரிவா? எம் தலைவி தாங்க மாட்டாள். எனவே பொருள்தேடச் செல்வதை கொஞ்சம் காலம் தள்ளி வையுங்கள்” என்கிறாள். அவனோ நான் சென்றாக வேண்டும் என்கிறான். அதற்குத் தோழி, “பெரிய திருவிழா நடக்கிறது. கண்கொள்ளாக் காட்சி. எங்கும் ஒரே இன்பம். ஒரே ஆனந்தம்; ஆரவாரம்; கண் கவரும் அழகு. திருவிழா முடிந்த பிறகு அந்த இடம் வெறிச்சோடி இருக்கும் அல்லவா? பொழிவு இழந்து காணப்படும் இல்லையா? அதுபோலதான் நீங்கள் தலைவியை விட்டுப் பிரிந்தாலும் இருக்கும். எனவே நீங்கள் தலைவியை விட்டுத் தற்போது பிரிய வேண்டாம் என்கிறாள். இதனை,
“கல்லெனக் கவின் பெற்று விழவு ஆற்றுப்படுத்த பின்
புல்லென்ற களம் போலப் போலப் புலம்பு கொண்டு, அமைவாளோ
ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடு போல்
பாழ்பட்ட முகத்தோடு மைதல் கொண்டு அமைவளோ?
ஓர் இரா வைகலுள் தாமரைப் பொய்கையுள்
நீர் நீத்த மலர்போல நீ நீப்பின் வாழ்வாளோ? (கலி-33)
என்று தலைவியின் உள்ளத்துணர்வை தலைவனிடம் எடுத்துக் கூறுகின்றாள்.
காளையும் காதலியும்
முல்லைக்கலியில் தோழி தலைவியிடத்தே நாம் குரவைக் கூத்து ஆடுவோம் என்று அழைக்கின்றாள். ஏனெனில் தலைவன் வீர விளையாட்டான காளையினை அடக்க வருகின்றான். ஒவ்வொரு காளையாக நின்று பார்த்து ஏறினான். இதனைக் கண்ட தலைவிக்கு ஒரே மகிழ்ச்சி. நம் காதலன் காளையை அடக்கி வெற்றி கொள்கிறானே என்று. நம் மனதில் உள்ளதைத் தெரிவிக்க வேண்டும். எப்படி? தோழி குறவைக் கூத்தாடத் தலைவியை அழைக்கின்றாள்.
தலைவி தோழியைப் பார்த்து முதலில் பாடலை நீ பாடு என்கிறாள். எதைப்பற்றி பாடுவது என்று கேட்கிறாள் தோழி.
பாண்டியனைப் பற்றி பாடுவோம், வாழ்த்துவோம். அடுத்துக் காளையின் கொம்பு கண்டு பயப்படுகின்ற எவனோ அவனை ஆயர் மகளிர் காதலிக்க மாட்டாள் என்று பாடுவோம். எவனொருவர் அஞ்சாமல் காளையினை விரட்டி ஏறுதழுவுவானோ அவள் தழுவுவாள் என்போம். அதனைக் கேட்ட தலைவன் நாம் கூறிய கருத்தை அறிந்து கொள்வான். மீண்டும் ஏறு தழுவத் துணிவான் என்கிறாள். இதனை,
“கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய் மகள்
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை
நெஞ்சிலார் தோய்ந்த அரிய உயிர் துறந்து நைவாரா ஆய மகள் தோள்” (கலி-67)
என்று தோழியின் உதவியோடு தலைவி தலைவனுக்குச் செய்தியை அறிவிக்கும் முறை சிறப்பானது.
உப்பும் ஊடலும்
தலைவனுக்கும் தலைவிக்கும் ஊடல் ஏற்பட்டுவிட்டது. காதல் இன்பத்திற்கு ஊடல் தேவைதான். ஆனால் அது நீண்டுவிடலாகது. உணவிற்கு உப்பு எப்படியோ? அதுபோலதான் ஊடலும் இருக்க வேண்டும். ஊடல் அதிகமாகுதல் கூடாது என்று தலைவியிடம் தோழி கூறுகிறாள். அதனை ஏற்றுத் தலைவி ஊடலை விட்டு தலைவனிடம் பேசுகிறாள். இதனை,
“மான் நூக்கி நீ அழ நீத்தவன் ஆனாது
நாணிலன் ஆயின் நலிந்து அவன் வயின்
ஊடுதல் என்னே அனி
இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும்
தகையது காண்டைப்பாய் நெஞ்சே பனி ஆனாப்
பாடு இல் கண் பாயல் கொள” (கலி-103)
என்று தலைவனுக்கும் தலைவிக்கும் இருக்கும் ஊடலைத் தீர்த்து வைக்கும் அன்புப் பாலமாகத் தோழி செய்ல்பட்டு வந்ததைக் காண முடிகின்றது. இஃது தோழியின் பண்புகளில் உயர்ந்த நிலையாகும்.
இரவு இன்னலும்
நெய்தற் கலியில் தலைவனைச் சந்தித்த தோழி, தலைவியின் இயல்பு வாழ்வு உன்னால் கெட்டுவிட்டது. இனியேனும் காலம் தாழ்த்தாமல் விரைவாக வந்து தலைவியைத் திருமணம் செய்துகொள் என்று அன்பாகத் தலைவனிடம் கூறுகிறாள். இதனை,
“பல நினைந்து இனையும் பைதல் நெஞ்சின்
அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி
மதி மருள் வாள் முகம் விளங்க
புது நலம் ஏர்தர பூண்க நின் தேரே” (கலி-125)
என்று தலைவனைத் தலைவியிடம் ஆற்றுப்படுத்தும் தோழியின் செயல் வியத்தக்கதாக அமைந்துள்ளது.
மனிதனின் ஒன்பது பண்புகள்
தலைவியை விட்டுச் சென்ற தலைவனைக் காண தோழி செல்கிறாள். அவ்வாறு சென்றவள் தலைவனைப் பார்த்து மனிதன் எவன்? அவனுக்கு எத்தனைப் பண்புகள் உள்ளன? என்று கேட்டாள். தலைவன் திடுக்கிட்டான். நான் சொல்கிறேன் கேள் என்றாள். மனிதன் என்றால் ஒன்பது விதமான குணங்கள் இருக்க வேண்டும் என்றாள். அவை; ஆற்றுதல், போற்றுதல், பண்பு, அன்பு, அறிவு, செறிவு, நிறை, முறை, பொறை என்பதாகும்.
1. ஆற்றுதல் என்றால் மனம் உடைந்து, மனது துன்பத்துடனும் வருகிறவனிடம் இன்பமாக பேசுவது. அவனது மனப் புண் போக்கி, ஆறுதலான மொழிகளைக் கூறி விரும்பியதை கொடுப்பது.
2. போற்றுதல் எனபது உன்னிடம் வந்து சேர்ந்துவரை பிரியாது இருந்து அவரைப் போற்றுவது. அடைக்கலாமன எந்தப் பொருளையும் விட்டுவிடாது காப்பது.
3. பண்பு என்பது உலகத்தின் கோட்பாடுகளை அறிந்து ஒழுகுதல். உன்னிடம் வருபவனின் உள்ளக் கோட்பாட்டை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்ளுதல்.
4. அன்பு எனப்படுவது தன்னைச் சேர்ந்தவர்களைக் கெடுக்காது இருத்தல்.
5. அறிவு என்பது அறியாமையால் ஏதாவது கூறினால் அதை பொறுமையுடன் கேட்டுக்கொள்ள வேண்டும். அதன்படி நடக்கவேண்டியது இல்லை.
6. செறிவு எனப்படுவது ஒருவனுக்குக் கொடுத்த வாக்குறுதியை மறவாதே. சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது.
7. நிறை எனப்படுவது உனது ரகசியங்களை பிறர் அறியாதுவாறு நடந்துகொள்ளுதல். ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டியவற்றை அம்பலமாக்காது இருப்பது.
8. முறை எனபது தவறு செய்பவர் யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும் அதுவே முறை
9. பொறை எனப்படுவது காலம் வரும்வரை பொறுமையாக காத்திருப்பது . (கலி-132)
இவ்வாறு மனிதனின் தலையாய பண்புகளாகத் தோழி உரைக்கும் கருத்து தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் இல்லை, உலகில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் பொருந்துவதாக இருப்பது இங்கு கருதத்தக்கது.
இவ்வாறான பல பண்புகளை ஒருங்கே பெற்றவள்தான் நமது சங்க இலக்கியக் கலித்தொகைத் தோழி.
தலைவியின் பண்புகள்
சங்க இலக்கியத்தில் தோழிக்கு அடுத்தபடியாக பாடல்கள் பாடிய கூற்று தலைவி பாடல் ஆகும். தலைவி என்பவள் நற்றாய் மகளாவர். கலித்தொகையில் தலைவிக் கூற்றுப் பாடல்களாக 60 இடம் பெற்றுள்ளன. தலைவி ஒருவனைக் காதலிக்கிறாள். திடீரென்று வீட்டில் திருமணப் பேச்சு தொடங்குகிறது. தலைவிக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ நடக்கிறது என்பதை உணர்ந்த தலைவி தன் தலைவனிடம் பேச நினைக்கின்றாள். யாருக்கோ என்னைத் திருமணம் செய்துவிக்க வீட்டில் மணம் பேசுகின்றனர். இந்தச் செய்தியைத் தலைவனுக்குச் சொல்ல வேண்டும், யாரிடம் சொல்லி அனுப்புவது? பார்த்தாள் தலைவி. தலைவிக்கு ஒரே வழி தோழி. தோழியிடமும் நேரடியாக கூறக்கூடாது. அதனை நயம்பட கூற வேண்டும். தோழியிடம் சொன்னால் தலைவனிடம் சொல்லி விடுவாள். தோழி செவிலித்தாயின் மூலம் இல்லத்திலும் சரியான நேரத்தில் சொல்லிவிடுவாள் என்பதை உணர்ந்து குறிஞ்சிக் கலியில் கூறுகிறாள்.
தோழி ஒரு முறை காட்டில் நான் தனியாக இருந்த பொழுது ஒருவன் வந்தான். நான் ஆபத்தில் இருக்கும் போது என்னைக் காத்தவன். அவனை நான் கைவிடலாமா தோழி? எனது துன்பத்தைப் போக்கியவனை மறக்கலாமா? கூடாதல்லவா? எனவே இதனை என் பெற்றோரிடத்தில் உடனே சொல்லிவிடு என்கிறாள். இதனை,
“அல்லல் களைந்தனன் தோழி நம் நகர்
அருங்கடி நீவாமை கூறின் நன்று என
நின்னோடு சூழ்வல் தோழி நயம் புரிந்து
இன்னது செய்தாள் இவள் என
மன்ன உலகத்து மன்னுவது புரைமே” (கலி-17)
என்று தலைவனுடன் நிகழ்ந்த சந்திப்பு பற்றியும், அதனால் ஏற்பட்ட நெருக்கம் பற்றியும் நயம்பட தோழிக்கு எடுத்துரைக்கும் பாங்கு பெற்றவளாகத் தலைவி இருக்கிறாள்.
பாலை கலியில் தலைவன் பொருள் தேட வெளியூர் செல்கிறான். தலைவியை விட்டுப் பிரிய நேரும் என்று உணர்ந்த தலைவன் தலைவியிடம் நீ வருந்தாதே, நான் சென்று விரைவாக மீண்டும் வந்து விடுகின்றேன் என்றான். தலைவி நான் வருந்தவில்லை என்றாள். என்ன என்று தலைவன் திடுக்கிட்டான். நான் உன்னைவிட்டுப் பிரிந்தால்தானே நான் வருந்துவதற்கு... நான்தான் உன்னுடன் வர இருக்கின்றேனே என்றாள். தலைவன் ஏதும் சொல்லாமல் இருக்கின்றான். இதனை,
“அன்பு அறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு
துன்பம் துணையாக நாடின் அது அல்லது
இன்பமும் உண்டோ எமக்கு?” (கலி-34)
என்று இன்பத்தில் எனக்குப் பங்கு இருப்பது போல உனது துன்பத்திலும் எமக்குப் பங்கு உள்ளது என்றாள் தலைவி. இதுதான் அன்றைய காலக்கட்ட குடும்பத் தலைவியின் இல்லற மாண்பு ஆகும்.
முல்லைக் கலியில் தலைவியின் செயல்பாடுகளால் ஒரு பாடல். தலைவி ஒரு நாள் தலைவனைச் சந்தித்தாள். அவனும் இவளிடம் ஏதோ பேசினான். அவ்வளவுதான். பிறகு அவனையேத் திருமணம் செய்துகொள்ள நினைத்த தலைவிக்கு ஏமாற்றம். வீட்டில் யாரும் ஒத்து வரவில்லை. ஊர்க்காரர்களும் சரியாக வரவில்லை. ஒருவழியாகத் தலைவன் ஏறுதழுவி வெற்றி கொள்கிறான். உடனே தலைவியின் வீட்டிலும் ஊர்க்காரார்களும் சம்மதம் தெரிவிக்கின்றனர். இந்தச் செய்தி தலைவிக்குத் தெரியவருகிறது. தலைவி, தோழியிடம் அவரைக் கணட அன்றே என் நெஞ்சை பறி கொடுத்து விட்டேன் நான். திருமணம் செய்தால் இந்த தலைவனைத்தான் திருமணம் செய்வேன் என்று. இவர்கள் இப்போதுதான் புதிதாகச் சேதி சொல்கிறார்கள் என்கிறாள் தலைவி. இதனை,
“அவன் மிக்குத் தன்மேல் சென்ற செங்காரிக் கோட்டிடைப்
புக்கக்கால் புக்கது என் நெஞ்சே என…” (கலி-69)
என்று நான் முதன்முதல் பார்த்தேனோ... அன்றே அவனை என் கணவனாக என் மனது ஏற்றுக் கொண்டது என்று கூறும் தலைவியின் மன நிலையை நாம் எண்ணி வியக்க வேண்டும்.
அன்பு என்ற இல்லறம்
இல்லறம் நல்லவையாக நடக்க வேண்டும் என்றால் இருவரும் சரியான பாதையில் பயணிக்க வேண்டும். தலைவன் ஒருவழி, தலைவி ஒருவழி என்றால் குடும்பம் சரியான இலக்கை நோக்கிச் செல்லாது. இங்கே மருதக்கலியில் தலைவியின் பண்பைப் பாருங்கள், மிக உயர்ந்தது. தலைவன் பரத்தையர் இல்லம் சென்றுவிட்டான். வீட்டில் இருக்கும் தலைவியிடம் ஒரு சில பரத்தையர்கள் வந்து உனது கணவன் எங்கே என்று கேட்கின்றனர்? பாணன் இங்கே வந்து கேட்கின்றான். தேர்ப்பாகன் வந்து கேட்கின்றான். அனைவருக்கும் பதில் சொல்லி அனுப்பினாலும் ஊராரின் பேச்சு எனக்குக் கேட்கப் பிடிக்கவில்லை. அவர்கள் உன்னைப் பழிக்கின்றார்கள். எனவே தயவுசெய்து இனி பரத்தையர் இல்லம் செல்லாமல் இருப்பீர்களா? என்று அன்புடன் தன் கணவனிடம் கேட்கிறாள். கணவன் திருந்துகிறான். இதனை,
“சேரியால் சென்று நீ சேர்ந்த இல் வினையினன்
தேரொடு திரிதரும் பாகனைப் பழிப்போமோ
ஒலிகொண்ட சும்மையான மண மனை குறித்த எம் இல்…” (கலி-84)
என்று உளநூல் ஆராய்ச்சி வல்லவர் சொல்கின்ற சிறந்த வைத்தியம் அன்பு. பரத்தையர் பின்னே திரிவது ஒருவித நோய், மனநோய், அந்த நோய் தீர்க்கும் மருந்து எது என்றால்? இனிய பேச்சு, இனிய வரவேற்பு, இன்முகம் இதைதான் சங்க இலக்கியத் தலைவிகள் கையாண்டனர். அதனால்தான் குடும்பத் தேர் இன்று போல ஓடாமல் அன்று சரியான முறையில் ஓடியுள்ளது.
நெய்தல் கலியில் தலைவி
நெய்தல் கலியில் தலைவியின் காதல் நோய் அதிகமாகப் பேசப்பட்டுள்ளது. இதினால் தலைவியின் மன நிகழ்வுகளைக் காணமுடிகின்றது. மாலை நேரம் வந்துவிட்டது. அந்த மாலை நேரம் காதலுருடன் கூடியிருக்கும் மங்கைக்கு மகிழ்ச்சியைத் தறுகிறது. என்னைப் போன்ற மகளிருக்கு வருத்தத்தைத் தருகிறது. எனவே மாலை நேரமே இனி தலைவன் இல்லாத போது வராதே என்று தலைவி பிதற்றுகிறாள். ஒரு தலைவி தாமரை மலரைப் பார்த்து ஏங்குகிறாள். இவ்வாறு புலம்பிக் கொண்டிருக்கும் தலைவிக்கு மகிழ்ச்சி காத்திருக்கிறது. காதலன் வந்து விட்டான். இதனை,
“இடன் இன்று அலைத்தரும் இன்னாசெய்மாலை
துனிகொள் துயர் தீரக் காதலர் துனைதர
மெல்லியான் பருவத்து மேல் நின்றுகடும் பகை
ஒல்லென நீக்கி ஒருவாது காத்து ஆற்றும்
நல் இறை தோன்ற கெட்டாங்கு
இல்லாகின்றால் இருளகத்து ஒளித்தே” (கலி-119.)
என்று காதலன் வரவால் மகிழ்ச்சியுடன் இருந்தாள்.
செவிலிக் கூற்று
சங்க இலக்கியங்களில் அறத்தோடு நிற்றல் (காதல்) என்ற துறைக்கு ஏணியாக இருக்கும் மூவரில் செவிலி மிக முக்கியப் பங்கினை வகிக்கின்றாள். தலைவி தோழிக்குக் கூறுவதும், தோழி செவிலிக்குக் கூறுவதும்; செவிலி நற்றாய்க்கு உரைப்பதும்; நற்றாய் இல்லத் தலைவனுக்கு உரைப்பதும் நம் தமிழ் மரபு.
கலித்தொகையில் ஒரு பாடல் செவிலிக் கூற்றாக இடம் பெற்றுள்ளது. இதில் உடன் போக்கில் சென்ற தலைவனையும் தலைவியையும் தேடி பாலை நிலத்தில் செல்கிறாள் செவிலி. எதிர்வரும் முனிவர்களிடம் இவ்வழியே இருவர் சென்றார்களா என்று வினவா? அவர்கள் பதில் உரைப்பது போல அமைந்திருக்கிறது. அவர்கள் கூறிய பதிலைக் கேட்ட செவிலி அவர்களைத் தேடிச்செல்லாமல் வீடுவந்து சேர்கிறாள். இதில் தலைவி வீட்டார்களுக்கு மிகவும் நம்பிக்கை உரியவராக இந்த செவிலித்தாய் இருந்து வந்துள்ளாள் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
முடிவுரை
சின்னஞ்சிறு கவிதைகளில்தான் செம்மையும் சிறப்பும் அடங்கிக் கிடக்கின்றன என்பார் கி.மு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கேலிமேச்சஸ் (305-240 B.C) எனும் கிரேக்கக் கவிஞர். அதுபோல இந்தக் கலித்தொகையும் சின்னசிறிய பாடல்களில் எவ்வளவு கருத்துகள்? அதிலும் மகளிர்கள் என்ற தலைப்பில் தோழியின் நடுவுநிலையும் மாறாத மனமும், தலைவியின் உறுதியான மனத்திட்பமும் காணமுடிகின்றது. மேலும் இருவரின் பண்பு நலன்களும் சரியான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளதையும் காண முடிகின்றது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.