பெண்மையைப் பாடாத புலவர்கள் இல்லை. பெண்ணின் அழகையோ, அவளின் பண்பையோ பேசாத இலக்கியங்களும் இல்லை. பண்டு தொட்டு இன்றுவரை பெண்மையின் சிறப்பினை இலக்கியம் படைப்போர் எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றனர். பொதுமறையாம் திருக்குறள் பெண்ணின் பெருமையை மிகுதியாக எடுத்துரைக்கின்றது. மனிதனின் வாழ்க்கை பெண்மையால் மட்டுமே முழுமை அடைகின்றது. உலகத்தை ஆற்றலாக இருந்து பெண்ணே இயக்கிக் கொண்டிருக்கின்றாள்.
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில்இல்லத்தையும் இல்லறத்தையும் பேணிப் பாதுக்காக்கும் பாங்குடையவர்களாகப் பெண்கள் விளங்கினர். அச்சமூகச் சூழலில் அறம் உரைக்கப் பாடிய திருக்குறளில் அக்காலப் பெண்களின் வாழ்வியல் நிலையும் பெண்களின் பெருமைகளும் பதிவு செய்யப்பட்டிருப்பது நோக்கத்தக்கது. திருக்குறள் குறிப்பிடும் பெண்கள் குறித்த கருத்துக்களை இன்றைய பெண்ணியக் கண்கொண்டு பார்ப்பது சற்றிலும் பொருந்தாத ஒன்றாகும். திருவள்ளுவர் வாழ்ந்த காலச் சூழல் வேறு; இன்று நாம் வாழ்கின்ற காலச் சூழல் வேறு. இரண்டையும் பலர் இணைத்து திருக்குறளில் பெண்ணை இழிவுபடுத்தும் ஆணாதிக்கச் சிந்தனைகள் உள்ளன என்று குறிப்பிடுகின்றனர். இது முற்றிலும் முரண்பாடான கருத்தாகும். வள்ளுவர் பெண்ணின் பெருமையை மிகச்சிறப்பாக திருக்குறளில் எடுத்துரைத்துள்ளார்.
கற்பு என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது. கற்பு என்பதற்கு கற்றறிந்தார் ஏத்தும் கலியானது, “கற்பெனப்படுவது சொற்றிரம்பாமை” என்று குறிப்பிடுகின்றது. அத்தகைய கற்புடைய பெண்ணை மனைவியாக வாய்க்கப் பெற்றவனுக்கு அதனைவிட வேறு செல்வம் கிடையாது. இதனை,
“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்” (குறள் 54)
என்று திருக்குறள் குறிப்பிடுகின்றது. இத்திருக்குறளை சிலர் இது ஆணாதிக்கச் சிந்தனையோடு எழுதப்பட்ட குறள். கற்பு என்று கூறி பெண்களை அடிமைப்படுத்தும் கருத்து உள்ளது என்பர். இக்குறள் பெண்ணிற்கு மட்டும் கூறப்பட்டதாக நாம் கொள்ளுதல் கூடாது. வந்தது கொண்டு வராதது முடித்தல் என்று தொல்காப்பியத்தில் ஒரு உத்தி குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பார்த்தால், பெண்ணுக்குக் குறிப்பிட்டுள்ள இவ்வறம் ஆண்களுக்கும் பொருந்தும் என்றே கொள்ளுதல் வேண்டும். அதைவிடுத்து இது நிலவுடைமைச் சமுதாயச் சூழலில் ஆணாதிக்கச் சிந்தனையோடு வள்ளுவரால் எழுதப்பட்டுள்ளது என்று பெண்ணியக் கருத்தை வலிந்து ஏற்றிக் கூறுவது பொருந்தாது.
ஆண்களும் பெண்களும் பயிலுகின்ற கல்விநிலையத்தில் ஆசிரியர் மாணவர்களே நீங்கள் நன்கு படிக்க வேண்டும் என்று கூறினால் அது ஆண் மாணவர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையாகக் கொள்ளாது ஆண்பெண் இருபாலருக்கும் பொதுவாகக் கூறப்பட்ட அறிவுரையாகவே நாம் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். அதுபோன்றே வள்ளுவரும் கற்புடைமை பற்றி பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் சேர்த்தே குறிப்பிட்டுள்ளார். பெண் கற்புள்ளவளாக இருப்பின் ஆணுக்குச் செல்வம்; ஆண் கற்பொழுக்கம் உள்ளவனாக இருப்பின் பெண்ணிற்கும் குடும்பத்திற்கும் அது செல்வம் என்றே இத்திருக்குறளுக்கு நாம் பொருள் கொள்ளுதல் வேண்டும்.
பெண் அளப்பறிய ஆற்றல் கொண்டவள். தன்னையும் தன் கணவனையும் காக்கும் திறம் வாய்ந்தவள். விரைந்து செயல்படும் சோர்வில்லாதவள் என்ற பெண்ணின் பெருமையை,
“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்” (குறள் 56)
என்ற திருக்குறள் தெளிவுறுத்துகின்றது.
தன்னையும் தன் கணவனையும் அவனைச் சார்ந்தவர்களையும் காக்கக் கூடிய சோர்வில்லாத பெண்மை வலிமையுள்ளதாகவே இருந்திருக்க முடியும். இத்திருக்குறள் பெண்ணின் மாண்பினை எடுத்துரைக்கின்றது.
இல்லறம் நல்லறமாவதற்கு கணவன் - மனைவி உறவு இனிமையுடையதாக இருக்க வேண்டும். யாராவது ஒருவர் முரண்பாடான நடத்தை உடையவர்களாக இருந்துவிட்டால் இல்லறம் சிறவாது. இல்லம் சிறப்பதற்கு கணவன், மனைவி இருவருமே காரணமாக அமைகின்றார்கள். கணவன் மனைவி உறவினையும், அவர்கள் இல்லறம் நடத்தும் தன்மையினையும் கூறவந்த வள்ளுவர்,
“பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு”
(குறள் 58)
என்று குறிப்பிடுகின்றார்.
இத்திருக்குறளில் பெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செய்வாரானால் பெருஞ் சிறப்புடைய மேல் உலக வாழ்வைப் பெறுவர் எனக் கூறப்பட்டுள்ளது. இது பெண்ணிற்கு மட்டும் கூறப்பட்ட ஒன்றாக நாம் கருதுதல் கூடாது. இத்திருக்குறளில் பெண்டிர் என்று வந்துள்ளதை வைத்து அம்முடிவுக்கு ஆய்வாளர்கள் வருகின்றனர். இல்லறம் என்பது கணவன் மனைவி இருவரையும் கொண்டதாக இருக்கும்போது இக்கருத்து ஆணையும் உள்ளடக்கியதாகவே அமைதல் வேண்டும். அதனைவிடுத்து இத்திருக்குறளில் ஆணாதிக்கச் சொல்லாடல் உள்ளதால் இது பெண்ணிற்கு மட்டுமே உரிய அறிவுரையாகக் கொள்ளுதல் வேண்டும் என்பார். இத்தகைய கருத்தினை விட்டுவிடுதல் நலம். ஏனெனில் இக்குறட்பாவானது வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. வாழ்க்கைத் துணை என்பது இருபாலரையும் குறிக்கும் சொல்லாகக் கொள்ளவேண்டுமே தவிர பெண்பாலருக்கு மட்டும் கூறப்பட்டதாகக் கருதுவது கூடாது. அவ்வாறு கருதினால் வள்ளுவர் கருத்து ஒருசார்புடைத்ததாகவே அமையும்.மேலும்,
“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
(குறள் 55)
என்ற திருக்குறள் பெண்ணை அடிமைப்படுத்திய ஆணாதிக்க சமுதாயத்தின் குரலாக அமைந்துள்ளது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.
உயர்ந்த நிலையில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வாழ்வியல் நெறிகளைப் புகட்ட வந்த வள்ளுவர் இதுபோன்ற கருத்துக்களைக் கூறியிருப்பாரா? என்று சிந்தித்தல் வேண்டும். இத்திருக்குறளுக்குப் பாவேந்தர் அவர்கள் அழகான பொருத்தமான விளக்கத்தினைக் கூறியிருக்கின்றார். பயிர்கள் நன்றாக விளையக்கூடிய நிலையில் உள்ளன. சிறிதளவு மழையிருந்தால் முழுமையான நல்ல விளைச்சல் கிடைத்துவிடும். மழைபெய்யவில்லை எனில் கைக்குக் கிட்டியது வாய்க்குக் கிட்டாது போய்விடும். இந்நிலையில் மழை பெய்யாதா? என்று ஏங்கி வருத்தத்துடன் விவசாயி வயலின் வரப்பில் அமர்ந்திருக்கிறான். அப்போது யாரும் எதிர்பாராதபோது மழை பெய்கின்றது. விவசாயி பெருமகிழ்ச்சியடைகிறான். அப்போது பெய்த மழை மற்ற நாள்களில் பெய்த மழையைவிட மிகச் சிறப்பானது. அந்த மழையைப் போன்றவள் பெண் என்று குறிப்பிடுகின்றார். இத்தகைய விளக்கமே பெண்ணின் பெருமையை உணர்த்தக் கூடியதாக அமையும். மாறாக வேறுபட்ட கருத்தினைக் கொண்டால் அது வள்ளுவரின் கூற்றாக அமையாது.
“மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்”
(குறள் 52)
என்ற திருக்குறளைக் காட்டி வீட்டில் கணவன், பிள்ளை, விருந்தினர் இவர்களிடம் பரிவுடனும், பணிவுடனும் பெண்கள் நடந்து கொள்ள வேண்டும் என நீதி போதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுவர். மேலும், இல்லறத்திற்குத் தேவையான நற்பண்பு பெண்ணிடம் இல்லாவிட்டால் அவள் எவ்வளவு சிறப்புடையவளாக இருந்தாலும் பயனில்லை என்று இக்குறளுக்கு விளக்கம் கூறுவர். இப்பண்புகள் இல்லறத்தில் இருக்கும் கணவனுக்கும் பொருந்தும். கணவனிடமும் மனைவியிடமும் இத்தகைய பண்புகள் இருந்தால்தான் இல்லறம் சிறக்கும். இவ்வறத்தை கணவன் மனைவி இருவருக்குமே வள்ளுவர் கூறியிருக்கின்றார். அதனைவிடுத்துப் பெண்களுக்கு மட்டுமே கூறப்பட்ட அறம் என்று இதனைக் கொள்ளல் கூடாது.
“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை”
(குறள் 53)
மனைவி நற்குணம் பொருந்தியிருந்தால் வளமான வாழ்வு அமையும். மாறுபட்ட குணம் பொருந்திய மனைவி அமைந்தால் வாழ்க்கை பயனற்றதாகும்.
நற்குணம் என்பது பெண்ணிற்கு மட்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று நாம் ஏன் பொருள் கொள்ள வேண்டும்? இக்கருத்து இருவருக்கும் கூறப்பட்டதாகவே நாம் கருதுதல் வேண்டும். ஆணாதிக்க மனப்போக்குடன் இக்குறட்பாவிற்கு உரைகூறுதல் கூடாது. நற்குணம் பொருந்தியவனாகக் கணவன் இல்லாவிட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும். இல்லறம் நல்லறமாக விளங்க வேண்டும் எனில் கணவன் மனைவி இருவரும் நற்குணமிக்கவர்களாக இருத்தல் வேண்டும். கணவன் மனைவி இருவருக்கும் உரிய பொதுவான அத்தையே இக்குறள் தெளிவுறுத்துகின்றது.
பெண்கள் இல்லத்தில் அடைபட்டுக் கிடப்பதால் அவர்களுக்கு வெளியுலக அனுபவம் இருப்பது இல்லை என்றும், ஆதலால் அவர்களிடம் சிந்தனைத் திறன் குறைவாக இருக்கும் என்றும், அவர்களின் பேச்சையோ கருத்தையோ கேட்டு நடப்பது கேடு விளையும் என ஆணாதிக்கச் சமூகத்தினர் கருதியுள்ளனர். அக்கருத்தினை,
“மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது”
(குறள் 901)
என்ற திருக்குறள் உணர்த்துவதாகக் குறிப்பிடுவர். இங்கு மனைவி என்ற பொருளில் மனை என்ற சொல்லைக் கையாளுகின்றனர். “மனைக்கு விளக்கம் மடவார் மடவார்” என்ற பழம் பாடல் ஒன்று தமிழில் உண்டு. இப்பாடலில் மனை என்பது வீட்டையே குறித்து வருகின்றது.மனை என்ற சொல்லிற்கு வீடு என்று பொருள் கொள்ள வேண்டுமே தவிர மனைவி என்று பொருள் கொள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யாது வீட்டிலேயே ஒருவர் அடைந்து கிடந்தால் எந்தச் சிறப்பையும் அடைய முடியாது. அவர் கடமையைத் தவறிவிடுவார். வீட்டிலேயே அடைந்து சோம்பராக ஆகிவிடாமல் உழைத்துப் பொருளீட்டி வாழ்வில் உயர்தல் வேண்டும் என்றே இக்குறட்பாவிற்குப் பொருள் கொள்ளுதல் வேண்டும். அதனைவிடுத்து வேறுவகையாகப் பொருள் கொண்டு பெண்ணிய நோக்கு என்று பிழைபட இத்திருக்குறளை எண்ணுதல் கூடாது.
உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் திருக்குறளாக அமைந்துள்ளது நோக்கத்தக்கது. வள்ளுவர், “பெண்ணின் பெருந்தக்க யாவுள” என்று பெண்ணின் பெருமையைப் பேசிப் பெண்மையை உயர்வு செய்கிறாரேயன்றி பெண்மையை எவ்விடத்தும் அவர் இழிவுபடுத்தவில்லை. அவ்வாறு பெண்மையை இழிபடுத்துவதாக இருப்பின் திருக்குறள் எங்ஙனம் பொதுமறை என்ற பெயரைப் பெறும்? திருக்குறள் காட்டும் பெண்மை உயர்ந்தது; உன்னதமானது; தன்னையும் உயர்த்திக் கொண்டு, தன்னைச் சார்ந்தவர்களையும், உலகையும் உயர்த்தக் கூடியதாக விளங்குகின்றது.