இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

சங்க காலக் கற்பித்தல் இயக்கங்கள் - ஒரு மதிப்பீடு

முனைவர் மு.பழனியப்பன்


சங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்றுமொழியாக, இலக்கிய மொழியாக விளங்கியிருந்திருக்கிறது. தமிழகம் அப்போது பெற்றிருந்த அரசியல் சுதந்திரத்தினால் தமிழ்நாடெங்கும் தமிழே ஆட்சிமொழியாகவும், கல்வி மொழியாகவும் மற்றும் சமயம் வாணிகம் போன்ற எல்லாத்துறைகளிலும் பொது மொழியாகவும் விளங்கி வந்தது (மா. ராச மாணிக்கனார், சங்ககால தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம், வரலாறு இதழ், 1996) என்று சங்ககாலத்தில் தமிழே எல்லாத் துறைகளிலும் பயன்பாட்டில் இருந்தது என்ற மா. இராச மாணிக்கனார் கருத்து தமிழ்ச் சங்ககாலத்தில் பெற்றிருந்த பொதுமொழித் தன்மையை எடுத்துரைப்பதாக உள்ளது. சங்ககாலக் கல்விமுறையிலும் தமிழுக்கு உயர்வர்ன இடம் இருந்துள்ளது. தமிழைக் கற்பிக்க, சமயங்களைக் கற்பிக்க, அறங்களைக் கற்பிக்க இவற்றை வழிநடத்த அமைப்புகள் பல இருந்துள்ளன.

சங்கம் என்ற அமைப்பே பலர் கூடி விவாதிக்கும் பாங்குடையது. இதுதவிர மன்றம், சான்றோர் அவை, அறம் கூர் அவையம், சமணப்பள்ளி, பௌத்தப்பள்ளி, அந்தணர் பள்ளி போன்ற பல்வேறு அமைப்புகள் சங்ககாலத்தில் கற்பித்தல் பணியைச் செய்து வந்துள்ளன. இவற்றின் பணிகளை மதிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

சங்கம் என்ற அமைப்பு

சங்கம் என்ற அமைப்பு இருந்தது என்றும் இல்லை என்றும் இருவேறு கருத்துகள் அறிஞர்களிடத்தில் இக்காலத்தும் நிலவி வருகின்றது. சங்கம் என்ற அமைப்பு இருந்தமைக்கான பல சான்றுகள் கிடைத்துள்ளன சொல்லாராய்ச்சியும், இலக்கிய ஆராய்ச்சிகளும் சங்கம் என்ற அமைப்பில் நிகழ்த்தப்பெற்றுள்ளன என்பதற்குப் பல சான்றுகள் சங்க இலக்கியங்களிலே உள்ளன.

“தொல்லாணை நல்லாசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன் போல
வியப்பும் சால்பும் செம்மை சான்றோர்
பலர் வாய்ப்புகர் அறு சிறப்பின் தோன்றி
அரிய தந்து குடி அகற்றி
பெரிய கற்று இசை விளக்கி ” (மதுரைக் காஞ்சி, 761-767)

என்ற இலக்கிய அடிகள் நல்லாசிரியரைச் சார்ந்து கற்கும் நடைமுறையை விளக்குவதாக உள்ளது.

மாங்குடி மருதனார் பாடிய நெடும்பாடல் மதுரைக்காஞ்சியாகும். இம்மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத்தலைவனாக விளங்குபவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆவான். இவனை அறம் செய்யத் தூண்டும் வகையில் மதுரைக்காஞ்சி பாடப்படுகின்றது. அவனுக்கு அவன் முன்னோனான பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போல அறம் செய்ய ஆசிரியர்களை நாடச் சொல்கின்றது இப்பகுதி.



நல்ஆசிரியர்கள் விவாதிக்கும் மன்றம் இருந்ததையும், அதற்கு உரிய கொடி அம்மன்றத்தின் வெளியில் கட்டப்பெற்றிருந்ததையும் பட்டினப் பாலை பின்வருமடியில் பதிவு செய்கின்றது.

“பல் கேள்வித் துறைபோகிய
தொல் ஆணை நல்லாசிரியர்
உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடியும்” (பட்டினப்பாலை, 169-171)

என்ற இந்தப் பகுதியல் உறழ் என்பதற்கு வாது என்று பொருள் கொண்டு வாதினை வெளிப்படுத்தும் கொடி பூம்புகார் நகரில் கட்டப்பெற்றிருந்தது என்பதை உணரமுடிகின்றது.

மாங்குடி மருதனார் தமிழ்ச்சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார் என்பதைப் புறநானூற்றின் பாடல் ஒன்று பதிவு செய்கின்றது.

“ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என் நிலவரை” ( புறநானூறு, 72)

என்ற இப்பாடலில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தன் வஞ்சினத்தைக் கூறுகின்றான். மதுரைக்காஞ்சியை இவன் மீது மாங்குடி மருதனார் பாட, மாங்குடி மருதானர் பற்றி இவ்வரசன் புறநானூற்றில் பாடியிருப்பது இங்கு எண்ணிப் பார்க்கத்தக்கது. இருவர் கூற்றிலும் கல்வி நடைமுறை செயல்பட்டுள்ளது என்பது தெளிவு.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் கேள்வி வல்ல அறிஞர்களிடத்தில் பாடம் கேட்கச் சொல்லுகிறார். மாங்குடி மருதன் முதலானாவர்கள் நான் வெற்றி பெறாவிட்டால் என்னைப் பாடவேண்டாம் என்று இவன் பாடுகிறான். இத்தொடர்பு காரணமாக சங்ககாலத்தில் தமிழ் சார்ந்த கூட்டமைப்பு ஒன்று மதுரையில் இருந்தது என்பது தெரியவருகிறது.

சங்கத்தில் சொல் புதிது படைக்கும் ஆற்றல் ஆராயப்பெற்றது என்பதையும் சில சங்கப்பாடல்கள் பதிவு செய்துள்ளன.

“நிலனாவிற்றி இதரிதரூஉம் நீண்மாடக் கூடலார்
புலனாவிற் பிறந்த சொற்புதிது உண்ணும் பொழுதன்றோ” (கலித்தொகை 35:17-19)

என்ற பகுதியில் சங்கத்தில் நடைபெற்றச் செயல்பாடுகள் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன. இதே தொகுப்பில் மற்றொரு பாடலில்

“பொதுமொழி பிறர்க்கின்றி முழுதாளுஞ் செல்வர்க்கு
மதிமொழி இடன்மாலை விளைவர்போல் வல்லவர்
செதுமொழி சீத்த செவி செறுவாக
முதுமொழி நீராப் புலன் நா உழவர்
புது மொழி கூட்டுண்ணும் புரிசை கூழ் புனல் ஊர!” (கலித்தொகை:68:1-5)

என்ற குறிப்பு காணப்படுகிறது. முதல் பாடலில் உள்ள சொற்புதிது உண்ணும் என்ற தொடரும், அடுத்த பாடலில் உள்ள புதுமொழி கூட்டுண்ணும் என்ற தொடரும் ஏறக்குறைய ஒரே சாயல் வாய்ந்தன. புதிய பாடல்கள் அரங்கேறும் இடமாகச் சங்கம் இருந்துள்ளது. அந்நகர் சார்ந்தவன் தலைவன் என்பதாகக் கலித்தொகை குறிக்கின்றது.



இப்பாடல்களில் வழியாகச் சங்கத்தின் செயல்பாடுகள் அறிந்து கொள்ளத்தக்கனவாக உள்ளன.

இவை தவிர மதுரைக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பினை

“தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மருங்கின் மதுரை” (சிறுபாணாற்றுப்படை, 66-67), “இமிழ் குரல் முரசம் மூன்றுடன் நாளும் தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே” (புறநானூறு 58) என்ற பாடலடிகள் சுட்டி நிற்கின்றன.

இக்கருத்துகள் வழியாக பாண்டி நாட்டில் மதுரையில் தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும் இத்தமிழ்ச்சங்கத்தில் புதுச்சொல் புணர்க்கும் தன்மையில் செயல்பாடுகள் இருந்துள்ளன என்பதும் உறுதியாகின்றது. சங்கம் என்ற அமைப்பு தமிழ்ப்புலவர்கள் ஒன்றாய் இருந்து தமிழ் ஆய்ந்த இடம் என்பதன் காரணமாக அதுவே முதலில் தோன்றிய தமிழமைப்பு, தமிழ்க் கற்றல் அமைப்பு என்பது கருதத்தக்கது.

முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற முச்சங்கங்கள் இருந்தன என்று இறையனார் களவியல் உரை சுட்டுகின்றது. அவை பற்றிய சிற்சில குறிப்புகள் பின்வருமாறு.

தலைச்சங்கம்

தென்மதுரையில் தலைச்சங்கம் தோற்றுவிக்கப்பெற்றுள்ளது. இது நான்காயிரத்து நானூற்று நாற்பது ஆண்டுகள் நிலவியது என்று குறிக்கப் பெறுகின்றது. அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுள், முருகவேள், முரஞ்சியூர் முடிநாகனார் போன்ற ஐநூற்று நாற்பத்தொன்பது பேர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இச்சங்கத்தைக் காய்சினவழுதி முதல் கடுங்கோன் வரை என்பத்தொன்பது பாண்டிய மன்னர்களால் இச்சங்கம் பாதுகாக்கப்பெற்றது. முதுநாரை, முதுகுருகு, அகத்தியம் ஆகியன இச்சங்கத்தில் இயற்றப்பெற்ற நூல்களில் சிலவாகும். இச்சங்கம் கடல்கோள் காரணமாக அழிந்தது.

இடைச்சங்கம்

தலைச்சங்கம் அழிவுற்ற நிலையில் அக்காலத்தில் அழிவுறாத பகுதியா விளங்கிய கபடாபுரத்தில் இரண்டாம் சங்கம் தோற்றுவிக்கப்பெற்றது. அகத்தியர், தொல்காப்பியர், திரையன் மாறன், கீரந்தை போன்ற பலர் இதனுள் உறுப்பினர்களாக இருந்தனர். மூவாயிரத்து எழுநூறு புலவர்கள் இதனுள் இருந்தாகவும் குறிக்கப்பெறுகிறது. இசை நுணுக்கம், தொல்காப்பியம், பூதபுராணம் ஆகியன இச்சங்கத்தில் இருந்து வெளிப்போந்த நூல்களாகும். இதனை வெண்டேர் செழியன் முதல் முடந்திருமாறன் வரை ஐம்பத்தொன்பது அரசர்கள் பாதுகாத்துள்ளனர். இச்சங்கத்தையும் கடல் கொண்டது.



கடைச்சங்கம்

தற்போதைய மதுரையான உத்தர மதுரையில் இரு சங்கங்கள் அழிவுற்ற நிலையில் மூன்றாம் தமிழ்ச்சங்கம் நிறுவப்பெற்றது. சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதனிள நாகனார், நக்கீரன் போன்ற பலர் இதனுள் அமைந்திருந்தனர். இவர்கள் படைத்த எட்டுத்தொகை, பத்துப்பாட்டுகள் இன்றைய சங்க இலக்கியத் தொகுப்புகளாக விளங்குகின்றன.

இச்செய்திகள் இறையனார் களவியல் உரையால் அறிந்து கொள்ளப்பெற்றனவாகும். இவற்றின் வழியாகத் தமிழ் ஆய்ந்த நிறுவன அமைப்பாகச் சங்கங்கள் விளங்கியமை தெரியவருகிறது.

குறுந்தொகையின் முதல் பாடல் இறையனார் பெயரால் அமைந்துள்ளது. இப்பாடலில் பயின்று வந்துள்ள “அஞ்சிறைத் தும்பி, காமம் செப்பது கண்டது மொழிமோ” (குறுந்தொகை-1) என்ற பகுதி ஆராய்ச்சியானது கண்டு ஆராய்ந்து பெற்ற முடிவுகள் என்பதையும் அதனுள்ள தன் விருப்பம் சார்ந்த முடிவுகள் இருக்கக் கூடாது என்பதையும் காட்டுவதாக உள்ளது.

பள்ளி என்ற அமைப்பு

பள்ளி என்ற நிலையில் தமிழ் வளர்த்த அமைப்புகள் சில செயல்பட்டுள்ளன. பள்ளி என்பது சமண சமயத்தவர்கள் உண்டு உறையும் இடங்கள் ஆகும். இவ்விடங்கள் பகல் பொழுதுகளில் கற்பிக்கும் மையங்களாக விளங்கியுள்ளன. உண்டு உறைந்துக் கற்கும் வழக்கமும் இங்கு இருந்துள்ளன.

மதுரைக்காஞ்சியில் பள்ளிகள் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. பௌத்தப் பள்ளி, அந்தணர் பள்ளி, அமண் (சமணர்) பள்ளி ஆகிய பள்ளிகள் இருந்தனவாகக் குறிக்கப்படுகின்றன. அவை பற்றிய விளக்கங்களையும் மதுரைக்காஞ்சியில் காணமுடிகின்றது.

பௌத்தப்பள்ளி “திண்கதிர் மதாணி ஒண்குறு மாக்களை
ஓம்பினர்த் தழீஇத் தாம் புணர்ந்து முயங்கித்
தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்
தாமும் அவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம் பெண்டீர்
பூவினர் புகையினர் தொடுவனர் பழிச்சி
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும்” (மதுரைக்காஞ்சி, 461-467)

என்ற பகுதியில் பௌத்தப்பள்ளி பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. பேரிளம் பெண்கள் தன் குழந்தைகளைத் தவறவிட்டுவிடாதபடி பௌத்தப்பள்ளிக்குள் நுழைந்து, பூவும் புகையும் இட்டுச்சென்றனர் என்ற செய்தி இப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ளது. இப்பௌத்தப்பள்ளியில் கல்விச் செயல்பாடுகளும் நிகழந்துள்ளன. வழிபாடு இயற்றப் பெண்கள் சென்றனர் என்றபோது, அவ்வழிபாடுகளை நிகழ்த்த உரியவர்கள் இருப்பர், அவர்களுக்குப் பௌத்தக்கல்வி போதிக்கப் பெற்றிருக்கும் என்பது உள்ளுணர்ந்து பெற வேண்டிய செய்தியாகும்.

அந்தணர் பள்ளி

சங்க காலத்தில் இருந்த அந்தணர் பள்ளியில் வேதம் விளங்கப்பாடப் பெற்றுள்ளது. அறவழி பிறழாது, அன்புடை நெஞ்சத்துடன் குன்றிலிருந்துக் குடையப்பெற்ற இடத்தில் இருந்துகொண்டு வீட்டுலகை எண்ணித் தம் செயல்களைச் செய்து கொண்டு அங்கு அந்தணர்கள் இருந்தனர் என்று மதுரைக்காஞ்சி குறிக்கின்றது.

“சிறந்த வேதம் விளங்கப்பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலமமர் வையத்து ஒருதாம் ஆகி
உயர்நிலை உலகம் இவணின்று எய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்றுகுயின் றன்ன அந்தணர்ப் பள்ளியும்” (மதுரைக்காஞ்சி, 268-274)

என்ற இப்பகுதி அந்தணப்பள்ளியின் அமைப்பினைக் காட்டுகின்றது.

அமண் பள்ளி

“வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்து
பூவம் புகையும் சாவகர் பழிச்சக்
சென்ற காலமும் வரூஉம் அமயமும்
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமும் நிலனும் தாம் முழுதுஉணரும்
சான்ற கொள்கைச் சாயா யாக்கை
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல்பொளிந்தன்ன இட்டுவாய்க் கரண்டைப்
பல்புரிச் சிமிலி நாற்று நல்குவரக்
கயம்கண்டன்ன வயங்குடை நகரத்துச்
செம்பு இயன்றன்ன செஞ்சுவர் புனைந்து
நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந்து ஓங்கி
இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையும்
குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற” (மதுரைக்காஞ்சி, 475-488)

என்ற இப்பாடலடிகளில் மதுரைக்காஞ்சியின் காலத்தில் இருந்து சமணப் பள்ளிப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.


அமண் பள்ளியில் சாகவர் மலர், புகை கொண்டு வழிபட்டனர். இப்பள்ளியில் முக்காலமும் உணர்ந்தோர் இருந்தனர். இவர்கள் விரதங்கள் இருந்த வானுலகடைய முயல்பவர்கள். கற்று அறிந்த அறிஞர்கள் பலர் அங்கு இருந்தனர். பல குண்டிகைகள் கயிறுகளில் தொங்கவிடப்பெற்றிருந்தன. செம்பு போன்ற சுவரில் பல ஓவியங்கள் பதிய வைக்கப்பெற்றிருந்தன. இப்பள்ளிகள் குன்றுகள் பல தொடர்ந்து இருந்தது போல இருந்தன.

இக்குறிப்புகள் வழியாக சமண சமயப் பள்ளிகள் அக்காலத்தில் ஆளுமை பெற்றிருந்தன என்பது தெரியவருகின்றது. மற்றையன ஒன்று என்ற அளவில் இருக்க இவை பல்கிப் பெருகி இருந்துள்ளன. இங்குச் சமயக் கல்வி நடைபெற்று வந்துள்ளது. புறநானூற்றில் பள்ளி பற்றி ஒரு குறிப்பு காணப்படுகிறது.

“அலங்குகதிர் சுமந்த கலங்கற் சூழி
நிலை தளர்வு தொலைந்த ஒலுகுநிலைப் பல்காற்
பொது-யில் ஒரு சிறை பள்ளி ஆக” (புறநானூறு, 375: 1-3)

என்ற குறிப்பு இங்குக் கவனிக்கத்தக்கது. பள்ளி என்பது மன்றத்தின் ஒரு பகுதியாக சங்ககாலத்தில் இருந்துள்ளது. மன்றம் என்பது பொதுஇடம். அங்கு பொதுநிகழ்வுகள் நடைபெறும். இதனை ஒட்டியே பள்ளி அமைந்திருக்கின்றது. இப்பள்ளியில் பாணர்கள் பலர் ஒன்று கூடுவது நடைபெறுவதுண்டு.

“முழாஅரைப் போந்தை அரவாய் மாமடல்
நாளும் போழும் கிணையொடு சுருக்கி
ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ
ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப்
புரவு எதிரந்து கொள்ளும் சான்றோர் யார்? (புறநானூறு. 375: 4-9)

என்ற தொடர்ச்சி பாணரின் வாழ்வியல்பை விளக்குவதாக உள்ளது. பனைநார், பனங்குறுத்து இவற்றைக் கிணையொடு சேர்த்துக்கட்டி, ஏர் ஓட்டி வாழும் உழவர் இடத்தில் புகுந்து இரந்துண்ணும் வாழ்க்கையை உடையவர் பாணர் என்று இப்பாடல் காட்டுகின்றது. அவர்கள் தங்க இடம் இல்லாது பள்ளியில் தங்கியுள்ளனர்.

இவ்வகையில் பள்ளி என்ற அமைப்பும் கல்வி வளர்க்கும் அமைப்பாக விளங்கியுள்ளது.

மன்றம்

பள்ளி போன்ற அமைப்புகளில் கற்ற பாடங்களை ஒருநாள் மன்றத்தில் ஏற்றி அக்காலத்தில் உயர்வு கண்டுள்ளனர் தமிழர். மன்றத்தில் கல்விச்சிறப்பு, போர்ப்படைப் பயிற்சி, நாடகம் போன்றன அரங்கேறியுள்ளன. இவ்வாறு கல கலைகள் அரங்கேறும் இடமாக மன்றம் இருந்துள்ளது. குறுந்தொகையில் ஒருபாடல் இம்மன்றத்தைப் பற்றிக் குறிக்கின்றது.

“அன்னாய் இவன் ஓர் இளம் மாணாக்கன்
தன் ஊர் மன்றத்து என்னன் கொல்லோ?
இரந்தூண் நிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெருஞ் செம்மலனே”(குறுந்தொகை, 32: )

இப்பாடலில் உள்ள இளம் மாணக்கன் என்ற சங்க காலம் முதல் பொருள் மாறாமல் படிக்கும் பிள்ளைகளுக்கு உரியனவாகவே விளங்கி வந்துள்ளது.இப்பாடல் இளம் வயது பாணன் ஒருவனைப் பற்றிச் சொன்ன பாடல் ஆகும். வாயிலாக வந்த இளம் பாணனை முன்வைத்து வாயில் நேர்வதாக இப்பாடல் பாடப்பெற்றுள்ளது.

தற்காலத்தில் இளம் தோற்றத்துடன் விளங்கும் இப்பாணன் தற்காலத்தில் இரந்து உண்டு, கல்வி கற்கும் நிலையில் உள்ளான். இவனே எதிர்காலத்தில் வயது கல்வி ஆகிய வளர்ந்து எதிர்காலத்தி;ல் செம்மலாக வரக் கூடும். யானை, குதிரை, தேர், பொன்னணி ஆகியவற்றைப் பெறப்போகின்றவனாக இவன் அமையலாம். எனவே இவனைப் புறந்தள்ள வேண்டாம் என்பது பாடலின் பொருள். கற்கும்போது இரந்து உண்டாலும் பரவாயில்லை. கற்கவேண்டும் என்ற சிந்தனை இப்பாடலில் அமைந்துள்ளது.


சான்றோர் அவை

சான்றோர் பலர் ஊர்தோறும் இருந்துள்ளனர். அவர்களிடத்தில் தன் பிள்ளைகளை அனுப்பிக் கற்கச் செய்யும் மேன்மை சங்க காலத்தில் இருந்துள்ளது. சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே (பொன்முடியார், புறநானூறு, 312) என்ற பாடல் இதனை விளக்கும். “ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே” (பிசிராந்தையார், புறநானூறு, 191) என்ற பாடலிலும் சான்றோர் அவை ஊர்தோறும் இருந்தமை தெரியவருகிறது. சான்றோர்களை அழைத்து “நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” (நரிவெரூஉத் தலையார், புறநானூறு 195) என்று குறிப்பிடுகின்றது.

அறங்கூர் அவையம், காவிதி மாக்கள், நாற்பெருங்குழு போன்ற குழுக்கள் அறங்களை அரசனுக்குக் கற்பித்தன என்ற செய்தி மதுரைக்காஞ்சியில் உள்ளது.

“அச்சமும் அவலமும் ஆர்வமும் நீங்கி
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி
சிறந்த கொள்கை அறம் கூறு அவையம்” (மதுரைக்காஞ்சி 489-493)

என்ற பகுதியில் அறம் கூர் அவையத்தாரின் சிறப்புகள் காட்டப்பெறுகின்றன. அச்சம், அவலம், ஆர்வம், செற்றம், உவகை ஆகியவற்றிற்கு இடமளிக்காமல், யமன் கோல் போல் அறம் உரைப்பவர்கள் அடங்கிய சபை அறங்கூறு அவையம் எனப்பட்டுள்ளது.

“நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்து
பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்கள்” (மதுரைக்காஞ்சி, 496-499)

என்று மன்னர்க்கு அறிவுரை வழங்கும் நிலையில் காவிதி மாக்கள் இருந்துள்ளனர்.

நாற்பெருங்குழு என்ற ஒன்றும் இருந்துள்ளது.

“மழை ஒழுக்கு அறாஅப் பிழையா விளையுள்
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றியன்ன
தாம் மேஎந் தோன்றிய நாற்பெருங்குழுவும்” (மதுரைக்காஞ்சி,507-510)

என்ற பகுதி நாற்பெருங்குழுவின் நேர்மையைக் காட்டுகின்றது. இவர்கள் நூலறிவு பெற்றவர்கள் என்பதும் மன்னருக்குத் தக்க நேரத்தில் அறிவு வளப்படுத்துவர்கள் என்பதும் குறிக்கத்தக்கது.

தனிமனித கற்பித்தல்

தனிமனிதர்கள் சிலரும் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கியுள்ளனர். புறநானூற்றில் நாலை கிழவன் நாகன் என்ற ஒருவரைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

“ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை
மலர்ப்போர் யார் என வினவலின் மலைந்தோர்
விசிபிணி முரசமொடு மண்பல தந்த
திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்
படைவேண்டுவழி வாள் உதவியும்
வினைவேண்டுவழி அறிவு உதவியும்
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
அசைநுகம் படாத ஆண்தகை உள்ளத்து
தோலா நல் இசை நாலைகிழவன்
பருந்து பசி தீர்க்கும் நற்போர்த்
திருந்துவேல் நாகற் கூறினர் பலரே” (புறநானூறு 179)

என்ற இப்பாடல் நாலைகிழவன் நாகன் என்பவனின் சிறப்பினை எடுத்துரைப்பதாகும். இவன் மன்னர்க்குப் படைவேண்டும் படைதருபவனாகவும், வினை முடிக்க அறிவு உதவி செய்பவனாகவும் இருந்துள்ளான். இதன் காரணமாகத் துறைசார் அறிஞர்கள் அக்காலத்தும் இருந்தனர் என்பது தெரியவருகின்றது.

கபிலர் ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவிக்கப் பாடியது குறிஞ்சிப்பாட்டு என்ற குறிப்பால் அரசர் ஒருவருக்கு புலவர் ஒருவர் தமிழ் அறிவித்துள்ளார் என்பது தெரியவருகின்றது. இதன் காரணமாகத் தனி ஆளுமை மிக்க அறிஞர்களிடத்தில் துறைசார் அறிவினைப் பெறுவது என்ற முறையில் சங்க காலத்தில் கல்வி இயக்கம் நடைபெற்றுள்ளது என்று அறிய முடிகின்றது.

கல்வியால் வரும் சிறப்பு

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்பு ஒர் அன்ன உடன் வயிற்று உள்ளும்
சிறப்பில் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்து நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே” (புறநானூறு, 183)

என்ற ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடிய பாடல் கல்வியின் சிறப்பினை கற்றல் சிறப்பினையும், கற்பித்தல் சிறப்பினையும் எடுத்து மொழிகின்றது.

தாயாக இருந்தாலும் அறிவுள்ள பிள்ளைக்கே முன்னுரிமை தருவாள். அறிவுடையவன் வழி அரசும் நடைபெறும். பிறப்பால் கீழ்மை பெற்றிருந்தாலும் கல்வி முன்னேற்றும் என்ற கருத்துகள் சங்ககாலத்தில் அனைத்துப் பிரிவினரும் கற்கும் நிலை பெற்றிரந்தனர் என்பது தெரியவருகிறது. ஆண், பெண், நால் பால் வருணத்தார் அனைவரும் கல்வி கற்றுள்ளனர். கற்றவர்கள் வழியில் அரசு நடைபெற்றுள்ளது. குடும்பத்திலும் கற்றவர்களே முன்நிறுத்தப்படுவார்கள்.

இவ்வாறு தமிழ் கல்வி மொழியாக விளங்கி அது அரசு மொழியாகவும் விளங்கிச் சிறந்துள்ளது என்பது சங்ககாலப் பாக்களின் வழியாக அறிந்து கொள்ளமுடிகின்றது.


நிறைவுரை

சங்க காலத்தில் பயிற்று மொழியாகத் தமிழே இருந்துள்ளது. படிப்புகள் அறிவு சார்ந்த படிப்புகள், வினைக்கல்வி என்ற முறையில் போர்க்கல்வி ஆகியன வழங்கப்பெற்றுள்ளன.

சங்கம், பள்ளி, மன்றம், தனிஅறிஞர் பயிற்சி ஆகியனச் சங்ககால கற்பித்தல் களங்களாக இருந்துள்ளன.

சங்கம் என்பது புதியதாகச் செய்யப்படும் தமிழ்ப்பனுவல்களை ஆராய்ந்து ஏற்கும் அமைப்பாகச் செயல்பட்டுள்ளது. இது முச்சங்கங்களாக விளங்கியுள்ளது.

மாங்குடி மருதனார் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றிப் பாடிய மதுரைக்காஞ்சிப் பாடலும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் புறநானூற்றில் காட்டிய வஞ்சினமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. இப்பாடல்களின் வழி ஆசிரிய மாணவ மாணவ ஆசிரிய நடைமுறையை அறிந்து கொள்ளமுடிகின்றது.

பள்ளி என்பது தங்கும் இடம் என்றாலும் அவ்விடத்தில் கலைகள், கல்வி சொல்லித்தரப்பெற்றுள்ளது. சமணப்பள்ளிகள் அதிக அளவில் சங்க காலத்தில் இருந்துள்ளன. அந்தணப் பள்ளி, பௌத்த பள்ளி ஆகியவை குறுகிய அளவில் இருந்துள்ளன.

மன்றம் என்பது கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடமாக இருந்துள்ளது. கற்பவர்களை மாணாக்கன் என்றழைக்கும் நடைமுறை குறுந்தொகையிலேயே காணப்படுகிறது.

சான்றோர் அவை என்பது செயல்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் அவையாக இருந்துள்ளது. மன்னனுக்கு நாற்பெருங்குழு, காவிதிப் பட்டம் பெற்றோர், அறங்கூர் அவையம் ஆகியன அறக்கல்வியைப் போதித்துள்ளன.

தனிமனிதர்கள் அறிஞர்களாகத் திகழுகையில் அவர்களைச் சமுதாயம் அவ்வப்போது பயன்படுத்திக்கொண்டுள்ளது. நாலைக்கிழவன் என்பவனும், கபிலரும் இதற்குச் சான்றுகள்.

படிப்போர் பிற்றை நிலை முனியாது இரந்து கற்றாலும் அது ஏற்புடையதே ஆகும். கல்வியே ஏற்ற இறக்ககளை விடுத்து ஏற்றத்தை நோக்கிப் பயணிப்பது.

மொத்தத்தில் ஆண்,பெண், அனைத்துச் சாதியினரும் படிப்பறிவைப் பெறுகின்ற சமுதாயமாகச் சங்கச் சமுதாயம் இருந்துள்ளது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p79.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License