மெய்ப்பாடுகளை வெளிப்படுத்தும் “ஆகாயத்துக்கு அடுத்த வீடு”
மு.முத்துமாறன்
மனிதனின் மனதில் உருவாகின்ற நிகழ்வினை உளவியல் அடிப்படையில் சங்க காலத்திலேயே தொல்காப்பியர் அறிந்து வைத்திருக்கிறார். ஆகையால் தான் மனதில் உருவாகின்ற அனைத்தையும் உடல் வழியாக வெளிப்படுத்துகின்ற மெய்ப்பாடுகளாகக் குறிப்பிடுகிறார். மெய்ப்பாடுகள் கவிதைக்கு பெருமளவு முக்கியத்துவம் உரியதாய் அமைகிறது. தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகையான மெய்ப்பாடும் கவிதையின் ஆணிவேராக இருக்கிறது. அவ்வாறாக உருவாகின்ற மெய்ப்பாடுகள் உணர்ச்சிகளாக வெளிப்படுகிறது. தொல்காப்பியர் குறிப்பிடும் போது,
”நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப ” (தொல்: 247)
நகை முதலாக உவகை முடிவாகச் சொல்லப்படும் மெய்ப்பாடுகள் அனைத்தும் “இரசம், சுவை போன்ற பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. மு.மேத்தா இயற்றிய “ஆகாயத்துக்கு அடுத்த வீடு” கவிதைத் தொகுப்பில் உணர்ச்சி வெளிப்பாடு எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
நகை
நகை என்பது சிரிப்பு, மகிழ்ச்சி, மலர்ச்சி, இளிப்பு போன்ற பல பொருளை உணர்த்தும். பெரும்பாலும் நகைச்சுவையான உணர்வை உணர்த்துவதாகவே இச்சொல் அமையும். இப்படிப்பட்ட நகை உணர்வை கவிஞர் மு. மேத்தா தம் கவிதைத் தொகுப்பில் கூறும் போது;
“கவிஞர்களே வெறும்
கட்டியங்காரர்களாய்
சுட்டெரிக்க
வேண்டிய
அவர்களின் சொற்கள்
சுருட்டுப்
பற்ற
வைத்துக்கொண்டு” (இந்தியா என் காதலி - பக். 6)
என்று பாடுகிறார். அதாவது தன்மானத்துடன் வாழக்கூடிய கவிஞர்கள் நாடகத்தில் வருகின்ற கட்டியங்காரர்களைப்போல தம்மை மாற்றிக் கொள்வதைப் பார்க்கும் போது நகைக்கத் தோன்றுகிறது என்பதை வெளிப்படையாக கூறி எள்ளி நகையாடுகிறார்.
அழுகை
அழுகை என்பது அழுதல் என்கிற பொருளில் வரும். அதுமட்டுமின்றி அவலச்சுவையைக் குறிப்பதாகவும் வருகிறது. அப்படிப்பட்ட அவலச்சுவை தானே அவலங்கொள்ளுதலும், பிறர் அவலங்கண்டு அவலங்கொள்ளுதலும் என இரு வகைப்படும். மு.மேத்தா தம் கவிதையில் பிறர் அவலங்கண்டு துன்பப்படுவதைக் கூறும் போது,
“ஊருக்கெல்லாம்
சோறுபோட்டவனுக்கு
இப்போது
ஊர்கூடிச்
சோறுபோடுகிறதாம்” (தஞ்சை- ஜன- 2003 - பக். 34)
தஞ்சை மழை பொய்த்தபோது ஊருக்கே உணவளித்த உழவன் பஞ்சத்தில் வாழ்வதை நினைத்து தாம் அழுது புலம்புவதாக அவலச்சுவையில் எடுத்துரைக்கிறார்.
இளிவரல்
இளிவரல் என்பது இளிவு, இளிப்புச்சுவையை உணர்த்துகின்ற பொருளில் வரும்.
“சிம்மாசனத்திற்காகச்
சிரசாசனம் செய்கின்றன
செல்லரித்துப்போன
செருப்புகள்” ( புன்னகைக்கும் புயல் - பக்.60)
தலைமைப் பொறுப்பில் ஒருவரின் இடத்திற்கு வருவதற்காகவே சில மனிதர்கள் மானத்தை எண்ணாது தலைவணங்கி வாழ்வதை நினைத்துப் பார்த்தால் இழிவாக இருப்பதாகக் கூறுகின்றார்.
மருட்கை
மருட்கை என்பது வியப்பு, மயக்கம், திகைப்பு எனும் பொருளி குறிப்பதாய் வரும். மற்றொன்று வியப்பும் அற்புதமும் சேர்ந்த கலவையென்றும் கூறப்படும்.
“பக்கங்கள் தோறும்
படபடத்து
பாராக்களை உடைத்து
வாக்கியங்களைத்
தாக்கித் தகர்த்து
புத்தகத்திலிருந்து வெளியே
வந்த சொற்கள்
எழுதியவனைத் தேடி
இழுத்து வந்தன……
படித்துககொண்டிருந்தவன்
பதுங்கத் தொடங்கினான். ( பாடம் - பக். 24)
வெளித்தோற்றத்தில் நல்லவன் போலவும், உள்ளே தீய எண்ணங்களையும் உடையவராகவும் சிலர் இருப்பதைக் கூறுகையில் மிக விரைவில் அவனது குணம் வெளியாகும் என்பதைச் சிலரின் வழியாகக் காணும்போது அதைக்கண்டு அதிர்ச்சியில் வியந்து நிற்பதாய்க் கவிஞர் கூறுகின்றார்.
அச்சம்
அச்சம் என்பது பயம், கரடி, தகடு, பெண்களின் நான்கு குணங்களில் ஒன்று என்கிற பொருளில அமையும். வாழ்க்கை என்பது இறைவன் கொடுத்த யாசகம் என சிலர் கூறுவர். அப்படிப்பட்ட வாழ்க்கை எக்கணம் முடியுமோ என்கிற பயத்திலேயே ஒவ்வொரு மனிதனும் பயணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை
“பெட்டிப் படுக்கைகளைச்
சுமந்தபடி
ஒரு பயணம்
எப்போது சுமைகளை
இறக்கி வைக்கிறோமோ
சுற்றி இருப்பவர் நம்மை
சுமக்கத் தொடங்குகிறார்கள்; ( வாழ்க்கை என்பது… - பக்.14)
வாழ்க்கைப் பயணம் மிகுந்த பயம் நிறைந்த வழியிலேயே போய்க்கொண்டிருப்பதை விளக்குகிறார்.
பெருமிதம்
பெருமிதம் என்பது செருக்கு(வீரம்), மேம்பாடு, களிப்பு எனும் பொருளில் வரும். மனிதனின் உள்ளத்தில் வெளியாகும் உணர்வுப்பூர்வமான பண்பு எதுவெனில் வீரம் எனும் சுவையே ஆகும். வீரத்தின் நிலையைப் பற்றிக் கவிஞர் குறிப்பிடுகையில், கார்கில் போரில் உயிர் நீத்த மாவீரர்களைக் கண்டு பெருமிதம் கொள்ளும் வகையில்,
“கார்கிலில் உயிர் நீத்த
மாவீரர்களே!
இந்தியா என்னும் மொழியில்
மொத்தம் நூறுகோடி எழுத்துக்கள்
அதில்
நாங்களெல்லாம்
‘மெய்’யெழுத்துக்கள்
நீங்கள் தான் உயிரெழுத்துக்கள் ( தாய்மண்ணே வணக்கம் - பக்.62)
நாங்களெல்லாம் உடல் மட்டும் தான், எங்களின் உயிர் நீங்கள் தானென்று வீரபுத்திரர்களின் வீரத்தைச் சிறப்பித்துக் கூறுகின்றார்.
வெகுளி
வெகுளி என்பது சினம், வெறுப்பு, உருத்திரம் என்கிற பொருளைக் குறிப்பதாய் அமையும். மேத்தா குறிப்பிடும் போது எவ்வளவுதான் நன்மை செய்தாலும் பின்னிருந்து முதுகில் குத்துபவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள், ஆகவே கோப்பெருஞ்சோழா உன்னைப்போல எத்தனை முறை வடக்கிருத்தல் வேண்டும் என்பதை,
“கோபித்துக் கொள்ளாதே
கோப்பெருஞ்சோழனே……….
புறப்புண் நாணி
வடக்கிருப்பதென்றால்
ஒவ்வொரு நாளும்
எத்தனைமுறை
வடக்கிருப்பது
மொத்தமாய் எல்லோரும்
முதுகில் குத்தும்
ஊரில்” ( புறமே அகம்- பக். 29)
இவ்வுலகில் நல்லவர் சிலரே அவர்களையும் சில வேளைகளில் நம்பமுடியாமல் போய்விடுமோ என்பதைக் கோபத்துடன் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
உவகை
உவகை என்பதற்கு மகிழச்சி, அன்பு, காமம், காதல் என்கிற பல்வேறு பொருளில் அமையும். பெரும்பாலும் மகிழ்ச்சி என்னும் பொருளில் எல்லோரும் குறிப்பிடுவர். உவகைப் பற்றி கவிஞர் குறிப்பிடுகையில்,
“அது ஒரு காலம்
எனது உதடுகள்
அவளது பெயரை
அதைத் தலையால் நடந்து
அவள்
தம்பட்டம் அடித்தகாலம்
முகத்திற்கு உரைஎழுத
என்
கவிதையின் வாசலில்
அவள்
காத்து நின்ற காலம்” (கன்னிமாடம் பக்.71)
தன் காதலி தனக்காக காத்திருப்பதையும், தாம் புகழவேண்டும் அதைக் காண்பதற்காகவே காத்திருக்கிறாள். அதற்காகவே தாம் எழுதுவதாக தம்முள் உண்டான மகிழ்ச்சியை வெளிப்படையாக உணர்த்துகிறார்.
முடிவாக, மெய்ப்பாடுகள் வழி கவிஞர் தம்முடைய ஒவ்வொரு கவிதையிலும் மனிதனின் உணர்வுகளைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளதை கவிஞருடைய கவிதையின் வழியாகப் அறிய முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு மனிதனின் உணர்ச்சி வெளிப்பாட்டையும் புரிந்து கொள்ள முடிகிறது.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.